Sunday, September 30, 2012

தேசம் என்றால் வெறும் மண்ணல்ல, மனிதம் - 3

குருஜாடாவின் ஒரு சிறுகதை - அப்படியே மொழிமாற்றம் உங்களுக்காக



மாதில்தா

மதராஸ்பட்டினத்தில் தாவர இயல் உயர்படிப்புக்காகக் குடியேறியபோது இது நடந்தது. மதராஸ் என்றால் நான் பொதுவாக நான் மயிலாப்பூரில் உள்ள ஒரு மான்சனில்தான் தங்குவது வழக்கம். அங்கு எங்கள் ஊரைச் சேர்ந்த பத்து பன்னிரெண்டு மாணவர்களும் இருந்ததனால் சொந்த ஊர் வாசத்தின் வாசனையும் மணக்கும், பொழுது போவதும் தெரியாது என்பதும் ஒரு காரணம்.

வந்த மூன்றாம் நாள்தான் நண்பன் ராமாராவ் காதில் கிசுகிசுத்தான். “அடேய்.. மாதில்தாவைப் பார்த்தாயா? அதோ எதிர் வீட்டில்தான்..”

பார்த்தேன்.. பார்த்துக்கொண்டே இருந்தேன்.. “அடேய்  சாதாரணமாகப் பார்ப்பது போல பாரடா. சரி, சரி.. உற்றுப்பார்க்காதே!  போதும் போதும்.. வா”

என்னை இழுத்தது கூட அவ்வளவாக நான் அறியவில்லைதான். எப்படி சடக்கென இப்படிப்பட்ட அழகியைப் பார்த்துவிட்டு உடனடியாக அங்கிருந்து அகலமுடியும்? கடவுள் கொடுத்த கண்ணுக்கான விருந்தை யாராவது ரசிக்காமல் நகரமுடியுமா..கடவுள் அத்தனை அழகையும் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்து ஒருங்கே வைத்துக்கொண்டு அந்த அத்தனையையும் இந்தப் பெண்ணுக்கே கொடுத்துவிட்டார்.. ஆனாலும் மனதில் வக்கிரம் இல்லாதபோது அழகான பெண்ணை ரசிப்பதில் என்ன தவறு?

”அடேய்.. நீ புதுசுன்னுதான் ஒரேயொரு முறை உன்னைப் பாக்கச் சொன்னேன்.. சரி சரி,, இனியொரு முறை அவளைப் பார்க்கும் பிரயத்தனம் கூட செய்யாதே.. நீ இனிமே அந்தப் பக்கம் பார்ப்பதோ இல்லே அவள் வீட்டுக்கு போகணும்னு நினைப்பதோ கூட உனக்கு நல்லது இல்லை” எச்சரிக்கை செய்தான் ராமாராவ்.

“ஏன் இப்படியெல்லாம் பேசறே.. ஒருவேளை அவள் நல்லவள் இல்லையோ”

“அவ நல்லவளானாலும் கெட்டவளானாலும் உனக்கோ எனக்கோ என்ன ஆகப் போகுது.. நீ அவளை இன்னொருதடவை பாக்காதேன்னு சொல்றேன்.. என்னையும் மீறினேன்னா நம்ம சிநேகிதம் பங்கப்பட்டா மாதிரிதான்” ராமாராவி மறுபடியும் எச்சரித்துவிட்டு அகன்றுவிட்டான்.

அவன் போனால் போகட்டும், ஆனால் அவள் நினைவு மட்டும் அகலமாட்டேனென்ன்று பிடிவாதம் பிடித்தது. ராமாராவ் போனபின்னும் எதிர்வீட்டு மேல் முற்றத்தில் நின்று கொண்டிருந்த அந்த தேவதையை மறுபடியும் ஒரு முறை பார்த்தேன்.. குறுகிய தெரு என்பதால் கிட்டத்தில் தெரிந்தாள். அவள் துணி உலர்த்திக் கொண்ட கோலத்தையே ஒரு கவிதையாக வடிக்கலாம். அப்போதுதான் குளித்திருந்ததால் உடல் முழுதும் மஞ்சள் பூசியிருந்ததால் ஏற்பட்டிருந்த மெருகும் அந்தக் காலை சூரிய ஒளியில் பளிச்சிட்டதும் எப்படி வர்ணிக்கமுடியும்.. சட்டென கீழே இறங்கிப் போனாள். அங்கே கீழே இருந்த கிணற்றில் தண்ணீர் எடுக்கும்போதுதான் அவள் பார்வை என் மீதும் பட்டிருக்கவேண்டும், ஆனால் அவள் ஒன்றும் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதை அவள் சாதாரணமாக தண்ணீரை இறைத்துக் குடத்தில் நிரப்பி நிதானமாக எடுத்துச் சென்றதிலேயே தெரிந்தது. அப்படிப் போகும்போது திரும்பி வேண்டுமென்றே என்னை பார்த்தாளே ஒரு பார்வை..

ஆகா.. பெண்ணின் பார்வைக்கு இவ்வளவு சக்தியா.. அந்தக் கண்களில் ஒருவேளை மாயப்பொடி கலந்து செய்த மையைப் பூசிக் கொள்வார்களோ.. என்னால் மறக்கமுடியாது இனிமேல்.. ராமாராவ் கிடக்கிறான்.. பொறாமை பிடித்தவன் மாதிரி பேசுகிறானோ என்னவோ

ஆனாலும் ராமாராவ் இல்லாத சமயங்களில்தான் இந்த பத்து நாட்களாக அவளைப் பார்த்து மகிழ்கிறேன் என்பதையும் சொல்லி விடுகிறேன். கையில் சும்மாவானும் ஏதாவது புத்தகத்தைக் கையில் வைத்துக் கொள்வது, அதை படிப்பது போலே பாவனை செய்வது, அவள் மாடியிலோ தோட்டத்திலோ வரும்போதெல்லாம் ரசித்துக் கவனிப்பதே என் வேலையாகிவிட்டது இப்போதெல்லாம். சில சமயம் அடிக்கடி வருவாள். சிலசமயம் வரவே மாட்டாள். ஆனாலும் நான் விடுவதாயில்லை.

கல்லூரி செல்லும்போது மாடிப்படிகளில் மான்சன் இறங்கும்போதெல்லாம் வேண்டுமென்றே அவள் வீட்டருகே ஏதோ புத்தகத்தைப் புரட்டி தேடுவது போலே பாசாங்கு செய்து எதிர்வீட்டில் அவள் தென்படுகிறாளா என்றெல்லாம் நாடகம் போல செய்து கொண்டிருப்பேன். பல சமயங்கள் அதிர்ஷ்டம் அடிக்கும்.. தேவதை கண்ணில் படும், கண்களால் பார்க்கும், நான் நாள் முழுதும் கற்பனையில் மிதக்கும் உணர்ச்சியைக் கொடுக்கும்.

அவளைப் பற்றி விவரங்கள் யாருக்கும் தெரியாமல் சேகரிக்க ஆரம்பித்தேன்.. முதல் அதிர்ச்சி அவள் கல்யாணமானவள் என்பதும் இரண்டாவது அதிர்ச்சி அவள் கணவனுக்கு ஐம்பத்து ஐந்து வயது என்பதும் மூன்றாவது அதிர்ச்சி அவன் முரடன், மூடன், பெண்டாட்டியை எப்போதும் சந்தேகக் கண்ணோடுப் பார்த்து அவ்வபோது அடித்துத் தொல்லையும் செய்வான் என்பதும் தெரிந்தது. வீட்டுக்குள் உறவுக்காரர் முதற்கொண்டு யாரையும் நெருங்கவிடுவதில்லை என்றும், எல்லோரும் இவனுக்குப் பயந்து இந்த வீட்டுப் பக்கம் தலை வைத்துக் கூடப் படுப்பதில்லை என்றும் சில ஹேஷ்யங்கள் அவன் காதுக்கு எட்டின. அவள் துன்பப்படுவதைப் பார்த்து ரசிக்கும் இந்தக் கணவன் கூட பார்ப்பதற்கு நல்ல ஆண் பிள்ளையாகக் கூட இல்லை.. நரைத்த மீசையும், அவன் மனசைப் போலக் குறுகிய கண்களும்.. மேலும் எங்கள் மான்சன் பையன்கள் யாருமே அவன் வம்புக்கே போவதில்லை என்பதும், இவர்கள் மத்தியில் அவன் ரத்தத்தையும் சதையையும் குடிக்கும் புலியாக தெரிகிறான் என்றும் தெரிந்தது. இப்படிப்பட்டவனுக்கு இப்படி ஒரு அழகான தேவதை மனையாளாக வாய்ப்பதா.. ஒருவேளை கடவுளுக்குக் கண்ணில்லையோ, விதி செய்யும் மாய விளையாட்டோ, இல்லை, ஆகாயத் தேவதையாக இருந்து ஏதோ செய்த தவறினால் பூலோகம் வந்து இவனிடம் தண்டனை பெற்று சாபத்தைக் கழிக்கிறாளோ.. 

நிச்சயம் அப்படித்தான் இருக்கவேண்டும்.. மாதில்தா தேவதைதான்.. அவளுக்கு சாபம் கொடுக்கப்பட்டிருக்கிறது.. இப்போது சாபத்தை அனுபவிக்கிறாள்.. பாவம்.. எப்போது இவளுக்கு இந்தக் கொடுமையிலிருந்தும் இந்த வேட்டைப் புலியிடமிருந்தும் விடிவுகாலமோ..

எனக்கு அவள் வெளியே வரும்போதெல்லாம் அந்த அழகு முகத்தில் உள்ள சோகக் கீற்று அப்படியே அப்பட்டமாகத் தெரிந்தது. நான் என்ன செய்தால் அவள் துன்பத்தைப் போக்கமுடியும், எனக்குப் புரியவில்லை.. ஆனால் மனதுக்குள் ஏதோ ஒன்று அவள் துன்பத்தை என்னால்தான் பரிபூர்ணமாக தீர்க்கமுடியும் என்று சொல்லிக்கொண்டே இருந்தது.

ஒருநாள் குளித்து முடித்து தலையை அழகாக சீவிக்கொண்டு முகத்துக்கும் ரெமி பவுடர் போட்டுக் கொண்டு கொஞ்சம் தடபுடலாக வெளியே வந்தேன். கல்லூரிக்குச் செல்லும் அவசரம்தான் என்றாலும் மாதில்தா’வை ஒருமுறையாவது பார்க்காமல் சென்றால் அந்த நாளும் நல்ல நாளோ.. அவள் வீட்டை தைரியமாகப் பார்த்து அவளுக்காகத் தேடினேன். ஆனால் அவள் வரவில்லை. உள்ளேயிருந்து அவன் வந்தான்.. என்னைப் பார்த்துக் கையை சொடுக்கி அருகில் வருமாறு கூப்பிட்டான்.

என் உடம்பில் திடீரென ஒரு திகில் புகுந்து முதலில் சூட்டைக் கிளப்பி, ஆவியாகிக் குளிர்ந்து போய் அதனால் ஒரு நடுக்கத்தையும் கொடுத்தது. ஓடிவிடலாமா எங்காவது.. இல்லை.. இவன் அவன் வீட்டுக்குள்ளேதான் கூப்பிடுகிறான்.. என்ன நடக்கிறதுதான் பார்ப்போமே.. ஒருவேளை நம் உள்மனது சொல்வதுபோல நம்மால் ஏதாவது ஒரு விடிவுகாலம் அவளுக்குப் பிறக்கலாம். அத்தோடு அவளை அருகில் பார்க்க ஒரு அரிய சந்தர்ப்பம்.. அந்தச் சந்தர்ப்பத்துக்காக இவன் கொடுமையான சொல் ஏதேனும் சொன்னால் கூட நாம் தாங்கித்தான் ஆகவேண்டும்.. நான் மெதுவாக வீதியைக் கடந்து அவன் இல்லம் சென்றேன். உள்ளேயும் சென்று வராண்டா அருகில் நின்றேன்.

குகைக்குள்ளே இருந்து வெளியே வந்த அந்த வன்புலி என்னை அந்தக் குகைக்குள்ளேயே நுழையும்படி கத்தியது.

“வா உள்ளே..”

போனேன்..

“ஏய்.. நீ என் மனைவியை அடிக்கடி நோட்டம் விடுகிறாய்தானே”

உள்ளே நுழைந்தவுடன் அவன் இப்படி கேட்பான் என எதிர்ப்பார்க்கவில்லை. இருந்தாலும் சமாளித்துக் கொண்டேன்.

“அதாவது எங்கள் மாடியிலிருந்து உங்கள் ஜன்னல் வழியே தெரியும் புத்தகங்கள் மீது கொஞ்சம் ஆசை.. அலமாரி நிறைய புத்தகங்கள் வைத்துள்ளீர்களே.. நீங்கள் எப்படிப்பட்டவர்களோ என்று யோசிப்பதால் அடிக்கடி பார்ப்பதுண்டு”

“அப்போ நீ என் மனைவியை பார்ப்பதில்லை.. இல்லையா?”

“உங்கள் மனைவியையும் பார்ப்பதுண்டு.. அந்த ஜன்னல் அருகே என் பார்வை செல்லும்போதெல்லாம் எப்போதாவது தென்படுவது சகஜம்தானே.. அவ்வளவுதான்”

“ஓ.. அவ்வளவுதானா.. வேறு ஒன்றும் இல்லையா” என்று உள்ளே பார்த்துக் கத்தினான். அவள் பக்கத்து அறையில் நின்றிருக்கவேண்டும்.. ஆனால் நாங்கள் இருக்கும் அறைக்கு வரவில்லைதான்.

“ஏய்.. நாடகக்காரி, வெளியே வருகிறாயா.. அங்கேயே நின்று என்ன வேடிக்கை.. இங்கே உன்னைப் பற்றிதானே பேச்சு” என்று மறுபடியும் அவளைப் பார்த்துக் கத்த, அந்த தேவதை துடிதுடித்துப் போய் தலையைக் கவிழ்த்துக் கொண்டு எங்களருகே வந்தது. எனக்கோ கண்ணில் நீர் எட்டிப் பார்க்க விரும்பியது போல கலங்கியது. உள்ளமும் அதிர்ந்தது. இருந்தாலும் அவளைப் பார்க்காமல் அந்த வேட்டைக்கார புலியைத்தான் பார்த்தேன்.

“பாரடா பரதேசி.. இந்த அழகான முகத்தைத்தான் பார்க்கவேண்டும் என்று தினம் தினம் தவிக்கிறாய்.. நன்றாகப் பாரடா.. என்னை ஏன் பார்க்கிறாய்.. அவளை விட என் முகம் அழகாக இப்போது உனக்குப் படுகிறதோ..”

இனியும் நின்றால் எனக்கு அழுகை பீறிட்டு வந்துவிடும் எனத் தோன்றியது. மெல்லத் திரும்பி வெளியே போக எத்தனித்தேன்.

‘நில்லு’ என்றான் அந்தக் கொடுங்கோலன். வேறு வழியில்லாமல் நின்றேன்.. அவன் குரலில் ஏதோ உறுதி தெரிந்தது போல பட்டது.

”ஏய் சின்னப்பயலே! எப்போதாவது யாராவது உனக்கு உண்மையே பேசவேண்டும் என்று போதித்திருக்கிறார்களா?

எனக்கு என் பெற்றோர் நினைவு ஏனோ அப்போது வந்தது. “எனக்கு பிறப்பிலிருந்தே சத்தியம் மட்டுமே பேசவேண்டுமென்றுதான் தெரியும்.. அப்படித்தான் வளர்ந்தேன்..”

“ஓஹோ.. உன் சத்தியம் எத்தனை நேர்மையானது என்றுதான் பார்ப்போமே.. இப்போது சொல்லேன் பார்ப்போம். என் மனைவி அழகானவள்தானா?”

“அவர்கள் அழகானவர் என்றுதான் நான் நினைக்கிறேன்”

“அவள் அழகில் உனக்கு ஏதேனும் சந்தேகமா?”

“நிச்சயமாக இல்லை”

“அப்படியானால் அந்த அழகை ரசிப்பதற்கு மட்டும்தானே தினம் இங்கே வேடிக்கை பார்க்கிறாய்? அதுவும் ஒருமுறையேனும் அவளைக் காணவேண்டுமெனத் துடிக்கிறாய்?”

“நான் உண்மையையே பேசவேண்டும் என நானும் நீங்களும் விரும்புவதால் சொல்கிறேன்..ஆமாம்.. உங்கள் மனைவியின் அழகு தெய்வீகமானதுதான்.. ஆனால் என் மனதில் வேறெந்த தீய எண்ணங்களும் இல்லை என்பதை அந்தத் தெய்வம்தான் அறியும்!!”

“அந்த தீய எண்ணத்தைப் பற்றி விடு.. நான் கேட்பதற்கு உண்டு அல்லது இல்லை என நேரடியாகச் சொல்லு! நீ என் மனைவியைப் பார்க்கும்போதெல்லாம் உன் மனதில் உனக்கு மகிழ்ச்சி உண்டாகிறது.. உண்மையா? சொல்!!

“உண்மைதான்”

“சரி, அப்படியானால் ஒன்று செய்.. இவளை உன்னுடன் அழைத்துக் கொண்டு செல்.. நான் இந்த பாவியை உனக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விடுகிறேன்.. என்னுடைய துரதிருஷ்டமும் என்னை விட்டு விலகும்!”

நான் ஒன்றும் பேசவில்லை.. எனக்குள் அழுகை வந்தது. அவர்களுக்கு அதைக் காண்பிக்காமல் வெளியே சத்தம் போடாமல் வந்தேன். அக்கம்பக்கம் யாரும் பார்க்கவில்லைதான்.. அடச்சே என்ன வாழ்க்கையடா இது.. யாருக்குமே இந்த நிலை வரக்கூடாதுதான்..

வேண்டாம்.. இனியொரு முறை என்னால் இவளுக்கு எந்தவொரு கஷ்டமும் வேண்டாம்.. இவன் வார்த்தைகளுக்கெல்லாம் எப்படியெல்லாம் தலைகுனிந்து கேட்டுக் கொண்டிருந்தாள். எத்தனை அவமானப்பட்டிருப்பாளோ.. இனி இவள் கண்ணில் நாம் படவேண்டாம்.. இந்த வீட்டை விட்டு, வேண்டாம், இந்தப் பகுதியை விட்டே வேறு எங்காவது போய்விடவேண்டும்!!

அவள் குனிந்த தலையும், பூமியில் அப்படியே தாரை போல வழிந்த கண்ணீரும் என் நினைவை அலைக்கழித்தன. எனக்கு நிச்சயம் ஒன்று புரிந்தது.. இத்தகைய நிலையில் உள்ள அந்த அழகு தேவதையின் கதையை எந்தக் கவிஞனாவது உணர்ந்தால் அவனிடமிருந்து உணர்ச்சிக் காவியமே பிறந்திருக்கும். இவள் துன்பத்தை யாரால் துடைக்கமுடியும்.. ஒரு உயர்ந்த பெண்மணிக்கு இப்படிப்பட்ட துன்பமா..

அவள் வீட்டை விட்டு வெளியே வந்திருப்பேன். அவன் வீட்டு வேலைக்காரி ஒரு நாயைக் கூப்பிடுவது போல என்னைக் கூப்பிட்டு ஒரு காகிதத்தை என் கையில் திணித்து விட்டு ஓடிப் போய்விட்டாள். கசங்கிய காகிதமாக இருந்தது.

:”நான் உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் என்ன துரோகம் செய்தேன்? என்னை நிம்மதியாக இந்த மனிதருடன் வாழ விடமாட்டீர்களா.. இதுதான் என் தலைவிதியென்றால் நான் அனுபவித்துவிட்டுப் போகிறேன் - மாதில்தா”

அந்தக் கடிதத்தைப் பார்த்ததும் என்னுள் ஏதோ ஒளி பிறந்திருக்கவேண்டும்.. நான் இந்த இடத்தை விட்டுப் போகத்தான் இருந்தேன்.. ஆனால் இல்லை.. போகக்கூடாது.. ஒரு உயரிய பெண்ணுக்கு ஒரு பெருந்துன்பம் இழைக்கப்பட்டு வருகிறது. அவள் துன்பத்தைத் தாங்கிக் கொள்ளமுடியாமல் தவிக்கிறாள். நானும் இங்கிருந்து போய்விட்டால் அந்தப் பெண்ணின் துயரக் கடலில் ஒரு சிறு அங்கமாகத்தான் இருப்பேனே தவிர வேறு என்ன செய்து அவளை கரையேற்றப்போகிறேன்? இல்லை.. எனக்கு மட்டும் ஒரு ராஜ்ஜியம் இருந்தால் இவளுக்கே பட்டம் கட்டி மகாராணியாக்கி ஒரு ஓரத்தில் நின்றுகொண்டு மகிழ்ந்திருப்பேன் என்றெலலாம் நான் நினைத்தது வெறும் கனவா.. ஆனால் நான் என்ன செய்தால் இவள் துன்பத்தைப் போக்க முடியும்?

ராமாராவ் நல்ல அனுபவசாலி.. அவன் அப்போதே எச்சரித்தான்.. அவனுக்கு எல்லாம் தெரியும் என்பதை மறந்துவிட்டு இப்போது இவள் கவலையில் நாமும் பங்கு பெற்று விட்டோம்.. இருக்கட்டும், என்னை முதன்முதலில் ’அவளைப் பாரடா’ எனப் பார்க்க வைத்தவன் ராமாராவ்.. அவனே இந்தத் தொல்லை தீரப் பதில் சொல்லவேண்டும்.. பார்ப்போம்..

ராமாராவின் அறைக்குப் போனேன்.. என் நல்ல காலம் அவன் தனியாகத்தான் இருந்தான். அவனிடம் அப்படியே அனைத்தையும் கொட்டிவிட்டேன்.. அவள் காப்பாற்றப்படவேண்டும் என்பதில் உள்ள என் ஆர்வத்தை அவனிடம் தெரிவித்தேன்.

“மடையா! அப்படியெல்லாம் இவள் காப்பாற்றப்படவேண்டும் என்ற வழி தெரிந்தால் நானே எப்போதே அதைச் செய்திருப்பேனே.. எல்லா நண்பர்களும் அவளைப் பார்த்திருக்கிறார்கள். அவள் கணவனைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறார்கள். எல்லோருமே எச்சரிக்கையாக இருக்கிறோம்.. ஆனால் நீ புதியவன்.. உனக்கும் இவள் கதை தெரிந்திருந்தால் இவர்கள் வழிக்கு நீ போகமாட்டாய் என்றுதான் அவளை ஒரு பார்வை பார்த்துகொள், அதற்கு மேல் அவள் விஷயத்தில் தலையிடாதே என்று எச்சரிக்கை செய்தேன்.. அதையும் மீறினாய்.. பார் இப்போது தேவையில்லாமல் அவளுக்கு எத்தனை துன்பம் உன்னால்?”

“சரிதான்.. நீ சொல்வது உண்மைதான்.. ஆனால் அந்தப் பெண்ணின் துயரமான முகத்தைப் பார்த்தும் என்னால் தாங்க முடியவில்லையே!”

”அடேய்! நம் பெரியவர்கள் ஒன்றும் முட்டாளில்லை.. அதனால்தான் அடிக்கடி சொல்வார்கள். பிறன் வீட்டு மனை விஷயத்தில் தலையிடாதே என்பார்கள். கணவன்-மனைவி சண்டை, சச்சரவு எல்லாவற்றையும் அவர்களே தீர்த்துக் கொள்ளவேண்டும்.. நம்மால் அந்தச் சண்டை சச்சரவுக்கு தீர்வே காண முடியாது. ஒன்று நன்றாக நினைத்துப் பார்.. நாம்தான் நமக்குள் இவன் புலி, வேட்டைப் புலி என்றெல்லாம் முடிவு செய்து இவன் அவளை அடித்து உதைக்கிறான் என்று ஏதோ நாம் நேரில் பார்த்தது போலப் பேசிக்கொள்கிறோமே தவிர என்றாவது ஒருநாளாவது நாம் அதைக் கண்ணாரக் கண்டோமா? இரண்டாவது, ஒரு கல்யாணமான பெண்ணுக்கு எத்தனைதான் ஆனாலும், பாதுகாப்பும், இருக்க இடமும், கவனிப்பதற்கு ஒரு ஆண் துணையும் கட்டாயம் வேண்டும். இது அவளுக்கு இத்தனை நாள் வரை கிடைத்திருக்கிறது - நீ பார்க்க ஆரம்பிக்கும் வரை சொல்கிறேன்.
அடுத்த மூன்றாவது விஷயம் நன்றாகக் கேட்டுக்கொள்! உன்னுடைய மனது என்னவோ அவள் துயரப்படுகிறாள் என்று நினைத்து நினைத்து அவள் வசம் போய்விட்டது என்பது உண்மைதானே..ஆண் பெண் உறவு அதுவும் மணவாழ்க்கையில் உள்ள பெண்ணின் உறவு என்பது கூரான கத்தியின் மேல் நடப்பது போன்றது..
நீ என்னைக் கேட்கலாம்.. என் மனதில் கள்ளம் கபடம் போன்ற தீய எண்ணங்கள் ஏதுமில்லையே என்று’ ஆனால், ஒன்றை நன்றாக சிந்தித்துக் கொள்! தீய எண்ணமானது மனிதரான நம் மனதில் ஏதோ ஓர் மூலையில் எப்போதுமே ஒளிந்து கொண்டே இருக்கும். அது சந்தர்ப்பத்தை நோக்கிக் காத்திருக்கும்.. ஒரு சின்ன ஊசிமுனை அளவு இடைவெளி கிடைத்தாலும் போதும் அது உடனே நம் மனதை ஆக்கிரமித்து விடும்.. ஒரு விஷயம் தெரியுமா, நாமே இம்மாதிரி சந்தர்ப்பங்களை விரும்பி தீய எண்ணங்களின் வரவுக்கு வழி வகுப்போம்.. சந்தர்ப்பத்தையும் நாமே ஏற்படுத்தித் தருவோம்.. நல்ல சிந்தனையும் புத்தியுமுள்ள மனிதன் எந்த சமயத்திலேயும் இத்தகைய சந்தர்ப்பத்துக்கு வழி வகுக்க சந்தர்ப்பமே கொடுக்கமாட்டான்..”

என் மனதில் ராமாராவின் வார்த்தைகள் நன்றாகவே பதிந்தன.. ஆமாம்.. கள்ளம் என்பது இப்போது இல்லைதான்.. அவள் மீது அன்பும், பாசமும், அவள் நன்றாக இருக்கவேண்டுமே என்ற எண்ணமும் இருக்கின்றனதாம்.. ராமாராவ் சொல்படி நான் ஏன் புத்திசாலித்தனமான மனிதனாக இருக்கக்கூடாது!! என் மனது சற்று எளிதாகிப் போனது போல உணர்ந்தேன்..

அடுத்த நாள் காலை நான் படுக்கையில் படுத்துக் கொண்டிருந்தேன்.. மனம் நிம்மதியாக இருந்ததால் கீழே அடாவடியாகப் போகவேண்டும், மாதில்தா பார்வையில் விழவேண்டும் என்றெல்லாம் ஆசைகள் இப்போது இல்லை.. மெதுவாகச் செல்லலாம்.. கல்லூரியில் நிறைய வேலை இருக்கிறது.. அதைப் பார்ப்போம்.. கொஞ்சம் சோம்பல் முறித்துக் கொண்டேன்.. எனக்கே என் சோம்பல் ஆச்சரியமாக இருந்தது. காலை எழுந்தவுடன் மாதில்தா நினைவிலேயே சுறுசுறுப்பாகவே இருந்திருக்கிறேன்.. கொஞ்சம் தெளிவு கிடைத்ததும் இந்த சோம்பலும் துணைக்கு வந்துவிட்டது.. பெண்ணின் சக்தி பெரியதுதான்.. படபடவென கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. மான்சனின் வேலைக்காரப் பையன்..

“அண்ணா! எதிர்வீட்டுப் புலி உங்களை கல்லூரிக்குச் செல்லும்போது ஒருமுறை வீட்டுக்கு வந்து விட்டுப் போகச் சொன்னது.. என்னவோ பெரிய பலி காத்திருக்கப்போகிறது, ஜாக்கிரதை!”

அய்யோ.. என நினைத்துக் கொண்டு, சாதாரணமாக முகம் கழுவிக்கொண்டு சட்டையைப் போட்டுக் கொண்டு எதிர் வீட்டுக்கு ஓடினேன்.. மனதில் பல நினைவுகள்.. நான் இன்னும் இடத்தை விட்டுப் போகவில்லையென அவள் ஏதேனும் விஷத்தை முழுங்கிவிட்டாளோ.. இருக்காதே.. கல்லூரி செல்லும்போதுதானே புலி நம்மை வரச்சொன்னது..

“வா தம்பி.. இப்படி உட்கார்..” என்றது புலி.. அட என்ன இது, புலி பூனையாயிற்றோ.. உள்ளே குரல் கொடுத்தது.

“மாதில்.. தம்பி வந்திருக்கு.. கொஞ்சம் காபி கொண்டு வருகிறாயா” என்று மிக மிருதுவான குரலில் கேட்டது. பசுத்தோல் போர்த்திய புலியோ.. எதற்கும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

“தம்பி! நீங்களெல்லாம் நினைப்பது போல நானும் என் மனைவியும் எலியும் பூனையும் இல்லை. நாங்கள் அன்னியோன்ய தம்பதிகள். நான் அவளுக்கு தினமும் ஒரு நூலை வாசித்துக் காண்பிப்பதும் அதைப் பற்றி விவாதிப்பதுமாக எங்கள் காலம் கழியும். ஆனால் இந்த ஒருவாரகாலமாக ஒரு சின்ன மாற்றம். நீ அங்கே நிற்பதும் எங்கள் வீட்டையே பார்ப்பதும் கவனித்துக் கொண்டேதான் இருந்தோம். ‘அவன் உன்னைத்தான் கவனிக்கிறான் என்று அவளைக் குற்றம் சொன்னதுக்கு, அவள் ‘அப்படிப் பார்த்தால் பார்க்கட்டுமே’ என்று இளக்கரமாகப் பதில் சொல்வது போல பட்டது. இவளுக்குத் தன் அழகின் மேல் கர்வம் என அவளைத் திட்டி தீர்த்தேன். ஒரு வாரகாலமாக நான் தவித்த தவிப்பும் என்னிடம் என் மனைவி பட்ட பாடும் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்றுதான் உன்னை இங்கே நேற்று தருவித்தேன். அது நல்லதாகப் போய்விட்டது. நீ உண்மையைச் சொன்னதும் அந்த சத்தியத்தை நான் அலட்சியப்படுத்தியதும் எனக்குப் புரிந்தது.. மாதில்தாவை அழைத்துப் போ என்றதும் கண்களில் நீர் தளும்ப நீ திரும்பிப் போனதையும் கவனித்தேன்.. மாதில்தாவும் அழுதாள். நான் அவளிடம் மெய்யாகவே சொன்னேன்.. எனக்கு ஒரு ஆட்சேபணையும் இல்லை.. நீ அவனுடன் போவதால் இருந்து போய்விடு, என்றேன். அவள் அழுதாள். இபபடிப் பேச எப்படி மனசு வந்தது என்று என்னைத் திரும்பக் கேட்டாள். அழகாய் இருப்பது ஒரு குற்றமா என்று திருப்பிக் கேட்டாள். அழுதுகொண்டே ஒன்றைச் சொன்னாள் தம்பி!

’அழகு அழகு என்கிறீர்களே, இந்த உடல் சௌந்தரியம் வயதாக வயதாகத் தேய்ந்து கொண்டே போகும். உள்ளம் எப்போதும் அழகாக இருக்கவேண்டும்.. உள்ளத்தில் அழகு இருந்தால் போதாதா.. பாருங்கள் அந்தத் தம்பி உண்மையையே பேசியது.. அது உள்ளத்தின் அழகு.. தப்பான எண்ணமுள்ளவராக இருந்தால் நீங்கள் சொன்னவுடன் என்னை இழுத்துக் கொண்டு ஓடி  விடாதா.. அழகெல்லாம் போனவுடன் என்னையும் இக்கட்டில் எங்காவது மாட்டிவிட்டு ஓடிவிடாதா.. இனி ஒரு முறை என்னைப் பற்றித் தவறாகப் பேசினீர்கள் என்றால் என் பிணம்தான் இங்கு கிடக்கும். அவ்வளவுதான்’.. 

ஆகா.. அந்தத் தேவதை நேற்றுதான் என அகக் கண்களைத் திறந்து விட்டாள். தம்பி! இனி நீ அடிக்கடி வா.. என் புத்தக அலமாரியில் உனக்குத் தேவையான புத்தகங்களை எடுத்து இங்கேயே படி.. முடிந்தால் நாங்களும் உனக்கு உதவி புரிகிறோம்.. .என் மனைவிக்கு இங்குள்ள அத்தனைப் புத்தகங்களும் அத்துப்படி! என்ன மாதில்..” 

அப்போதுதான் அங்கு காபிக் கிண்ணத்துடன் வந்த மாதில்தா தன்னைப் பற்றிப் பெருமையாகப் பேசிய கணவனைப் பார்த்துக் கொண்டே தலையசைத்துச் சிரித்தாள்.

நான் வியந்து போனேன்.. நேற்று ராமாராவ் கூட என் அகக் கண்களைத் திறந்தானோ.. 

------------------------------------------------------------------------------------------------------------------- -------------------------------------------

ந்தக் கதையில் மாற்றான் மனைவி விஷயத்தை எந்தவித விகல்பமும் எவர் மனதிலும் தோன்றாதவாறு எழுதிய குருஜாடா அப்பாராவை எத்தனை பாராட்டினாலும் தகும்.. அதுவும் கதை எழுதிய காலத்தையும் நாம் நோக்கவேண்டும். 1910 ஆம் ஆண்டில் ‘ஆந்திர பாரதி’ எனும் இதழுக்காக எழுதிய சிறுகதை இது. 

2 comments:

  1. Replies
    1. Friends,
      Commenting is not moderated as some of friends said through mails. But Google has some routine exercise.

      Thanks Dr. Thi.Vaa for your comments

      Delete