Follow by Email

Monday, December 27, 2010

அடுத்தவீடும், தேவாரமும்


தேவலோகத்தில் சொர்க்கவாசல் அருகே மிக நீண்டதொரு வரிசையில் ஒவ்வொருவராக உள்ளே நுழைந்து கொண்டிருக்கிறார்கள். எல்லோருமே மாபெரும் புண்ணியம் செய்து இங்கு வந்தவர்கள். கர்ம பூமியில் அவர்கள் செய்த தான தருமங்கள், நல்ல செயல்கள், தீர்த்தயாத்திரைகள், உத்தமர்களுக்கு செய்த சேவைகள் என தங்கள் புண்ணியக் கணக்கை ஏராளமாகப் பெருக்கிக்கொண்டவர்கள். அன்று பார்த்து இந்திரனே வாசலுக்கு வந்து யாருக்காகவோ காத்திருப்பது போல இருந்ததால், அங்குள்ள வாசல் காக்கும் தேவதைகள் கூட மிகவும் சுறுசுறுப்பாக வரிசையில் நிற்கும் புண்ணியாத்மாக்களின் புண்ணிய செய்லகளை சற்று கத்தியே வாசித்து, மிக மிக மரியாதையுடன் அப்படிப்பட்டவர்களை ஒவ்வொருவராக அழைத்துச் சென்றனர். அப்படி உள்ளே சென்றவர்கள் கூட சற்றுப் பெருமிதமான பார்வையுடன் பின்னால் வரிசையில் நின்றவர்களைப் பார்த்துக்கொண்டே சென்றனர்.

திடீரென ஒரு பரபரப்பு. ஒருவர் மட்டும் வரிசையில் வராமல் ஏதோ இந்த தேவர் உலகுக்கே தாம்தான் தலைவன் என்பதைப் போல, வரிசைகளில் நிறுத்தப்படாமல் இரு தேவதைகள் புடைசூழ சொர்க்கத்தை நோக்கி வந்துகொண்டிந்தார். வாசலில் இதுவரைக் காத்திருந்த தேவேந்திரன் கூட தம் இரு கரங்களைக் கூப்பி அங்கு புதிதாக வந்தவரை தாமே தலை குனிய வரவேற்று உள்ளே அழைத்துச் செல்ல அதுவரை வரிசையில் காத்திருந்த புண்ணியாத்மாக்கள் ஆச்சரியப்பட்டனர். யார் இவரோ, தாங்கள் செய்ததை விட மிகப் பெரிய அளவில் என்ன புண்ணியம் இவர் செய்திருக்கப்போகிறார், அப்படிப்பட்ட புண்ணியம் என்பது ஏதேனும் உண்டோ என்பதாக அவர்கள் பார்வை இருந்தது. ஒரு புண்ணியாத்மா ஆற்றமுடியாமல் அந்த வாசல் தேவதையைப் பார்த்து தன் சந்தேகத்தைக் கேட்டே விட்டது.

“ஓ.. அதுவா.. இப்போது சென்றவர் நீங்கள் செய்த புண்ணியத்தை எல்லாம் தூக்கிச் சாப்பிடும்படியான புண்ணியம் செய்தவர். அதனால்தான் இத்தனை வரவேற்பு” என்றாள் அந்தத் தேவதை... “அப்படி என்ன புண்ணியம் அது” என்று அவர்கள் திருப்பி சற்று சத்தமாகக் கேட்கவே அந்தத் தேவதை அழகாக சிரித்து (தேவதை அல்லவா.. சிரிப்பு கூட அழகாகத்தான் இருக்கவேண்டும்!) விட்டு அவர்களைப் பார்த்துக் கூறியது.

“இவர் பூலோகத்தில் ஒரு அரை மணிநேரம் தேவாரப் பாடல்கள் யாரோ பாட, அப் பாடலில் தம்மை மறந்து, லயித்து, பரவசமாகி, மனமுருகக் கேட்டவர்.. அப்படிக் கேட்டதால் இப்படிப்பட்ட புண்ணியத்தைப் பெற்றிருக்கிறார்” என்று சொல்லிவிட்டு தன் வேலையில் கவனம் செலுத்தினாள் அந்த அழகுத் தேவதை.

இந்தக் கதை நிஜமோ, கற்பனையோ, கதை எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் தேவாரப்பாடல்கள் என வரும்போது அத்துடன் அவைகள் மூலத்துடன் பெற்ற பண்ணோடு இசைந்து பாடும்போது, அந்தப் பாடல்களை மெய்ம்மறந்து கேட்டுக் கொண்டிருக்கும் சுகமே சுகம்.. இதற்கு ஈடு இணை ஏதுமுண்டோ...

இப்படித்தான் கேட்கவைத்தது சிவத்திரு சண்முக சுந்தர தேசிகர் நேற்றைய ஞாயிறன்று விசாகையில் பாடிய தேவாரப் பாடல்கள்.

அவ்வப்போது விசாகைக்கும் இப்படிப்பட்ட அதிருஷ்டங்கள் அடிப்பதுண்டு என்றுதான் நினைத்து மகிழ்ந்தோம். பழனி தண்டாயுதபாணித் தெய்வத் திருக்கொயிலில் ஓதுவாராக இருந்த சண்முக சுந்தர தேசிகரின் கணீர் எனும் குரலில் தேவாரம் ஓதப்பட்டு அதன் மந்திர ஒலிக் கற்றைகள் கேட்டுக் கொண்டிருந்தோர் அனைவரின் இதயங்களையும் ‘பசக்’ என பற்றிக் கொண்டு மனங்களை விட்டு இனியும் அகலமாட்டோம் என அங்கேயே நின்றுவிட்டன.

தேவாரப் பாடல்கள் மட்டுமே தமிழில், தமிழ் என்றல்ல, எந்த மொழியை எடுத்துக் கொண்டாலும் சரி, பண்டைய பாடல்களில் பண்ணோடு நமக்குக் கிடைத்தவை. எத்தனையோ தேவாரப் பாடல்கள் மனிதகுலத்துக்கு மருந்தாக வந்தவை. மாண்டுபோன உயிர்களை மீட்டுக் கொண்டு வந்தவை. சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவருமே இப்படி மானவ தர்மத்தைக் காக்க கூட்டை விட்டுப் பறந்துபோன உயிர்களைத் திரும்பப் பிடித்து கூட்டுக்குள் அடைத்து அற்புதம் செய்தவர்கள். ஒவ்வொரு பாடலுமே ஒரு மந்திரம். செல்வத்தை அளிப்பவை. நோயைத் தீர்க்கும் அருமருந்தாக செயல்பட்டவை. மக்கள் மத்தியிலே எடுத்துச் செல்லப்பட்டு பாடப்பட்டவை. பாடும் மக்கள் ஒவ்வொரிடமும் மனித மேம்பாட்டை வரவழைப்பவை. எந்த எதிர்பார்ப்பும் வேண்டாம்.. தேவாரத்தைப் பாடுங்கள். மனம் கனியப் பாடுங்கள் உங்கள் உள்ளத்தே எழும் மாற்றத்தைக் காணலாம் எனத் தெளிய வைக்கும் உன்னதப் பாடல்கள்.

இப்படிப்பட்ட தேவாரத்தைத் தெலுங்கு மண்ணுக்கு எடுத்து வரவேண்டும் என்று ஆசைப்பட்டவன்.. ஆனால் எனக்கு முன்னமே தேவாரத்தை, தெலுங்குக்கு மட்டுமல்லாமல்,உலகில் பேசும் மொழி அத்தனையிலும் கொண்டுவரவேண்டுமென ஆசைப்பட்டு அதை மிக வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் ஒரு ‘சிவகணம்’ ஒன்று சென்னையில் உள்ளது. அந்த சிவகணத்தின் பெயர் மறவன்புலவு சச்சிதானந்தம். ஈழத்தைச் சேர்ந்த இந்த பெரியாரின் செயல் மிக மௌனமாக ஆனால் கச்சிதமாகவும், சுயநலமற்ற சேவையாகவும் கடந்த இருபது வருடங்களாக தொடர்ந்து நடந்து வருவதை நினைத்துப் பார்க்கும்போது, ஈசன் சச்சிதானந்தனாரின் சேவையை ‘நேரம்’ பார்த்துதான் தொடங்கியுள்ளான் என்று தெரிகிறது, அவர் மேற்பார்வையில் துவக்கப்பட்ட தளம்தான் தேவாரம்.ஆர்க் (www.thevaaram.org) ஒவ்வொரு நாளும் உலகின் ஒவ்வொரு மூலையிலும் ஆயிரக்கணக்கில் இந்தத் தளத்தின் கதவுகள் தட்டப்படுகின்றன. தேவாரம் செவிக்கு இசை மழையாகவும், கண்களுக்கு எழுத்தாக, பொழிப்புரையாக, விளக்கவுரையாகவும் பொழிந்து பக்தர்கள் இதயத்தை ந்னைத்துக் கொண்டே இருக்கிறது, இன்றைய கணக்கெடுப்பின்படி ஒரு நாளில் இருபதினாயிரத்துக்கும் மேற்பட்ட ஹிட்ஸ் கொண்ட தளமாக இந்த தேவாரத் தளம் இருப்பதில் மிகப் பெருமிதம்தான்.
. (சமீபத்தில் டில்லியில் சத்திதானந்தரை கௌரவிக்கிறார் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலம்)

தேவாரம் தெலுங்கில் கொண்டுவரப்படவேண்டும் என்பதில் நாங்கள் இருவரும் இரண்டு வருடங்களாகவே தீவிரமாக உள்ளோம். அதற்கான மொழிபெயர்ப்பு பணிகளையும் எப்போதோ ஆரம்பித்துவிட்டாலும் நிதி விஷயத்தில் திருமலா திருப்பதி தேவஸ்தானத்தினருக்கு விண்ணப்பம் செய்திருந்தோம். முன்னாள் தலைவர் ஆதிகேசவுலு நாயுடு பரிபூரணமாக சம்மதித்து எங்களை இந்து தர்ம பிரசார சபையிடம் பரிந்துரைத்தார். அவர்களுடன் சேர்ந்து திருப்பதியில் கூடும்போது சபைத் தலைவரிடம் ஏறத்தாழ 20 திருமுறைப் புத்தகங்களை கண்காட்சி போல வைத்துக் காண்பித்தார் மறவன்புலவார். இத்தனையும் தெலுங்கிலா என்று ஆச்சரியத்துடன் கேட்டார்கள்.. தமிழில் தேவாரத்துக்கு உள்ள பெருமையை எடுத்துச் சொன்னோம். நமசிவாய என ஓதினால் போதாதா.. இத்தனை பாடல்கள் அவசியமா என்று ஒருவர் கேட்டார். ’காதலாகி கசிந்து’ பாடலை அங்கு பாடினோம்.. அதைத் தெலுங்கு மொழியில் எடுத்துச் சொன்னோம். இத்தனை விதமாகப் பாடி நமசிவாய என இறைவனை அழைக்கும்போது இறைவன் மட்டுமல்ல, பாடும் பக்தரும் உருகுவாரே’ என்றோம். அவர்களுக்குப் புரிந்தது.

சமீபத்தில் திருவேங்கடத்தானும் தன் கருணைமழையைப் பொழிந்துள்ளான். ஆமாம். தேவாரம் தெலுங்கில் மொழி பெயர்க்க எல்லா நிதி உதவிகளையும் திருமலா திருப்பதி தேவஸ்தானம் செய்வதாக ஒப்புக் கொண்டு கட்டளையும் கொடுத்துவிட்டதால் தற்சமயம் பணிகள் மிக மும்முரமாக நடைபெறுகின்றன. சில முக்கிய சான்றோர்கள் தற்சமயம் மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முதல் திருமுறைக்கான 1469 பாடல்களின் மொழிபெயர்ப்பும் முடிவடைந்த நிலையில் உள்ளன. மார்ச் மாதத்துக்குள் நான்காம் திருமுறை, ஏழாம் திருமுறை, எட்டாம் திருமுறை, பத்தாம் திருமுறையின் ஒரு பகுதி முடிவடையும் என எதிர்பார்க்கின்றோம். இரண்டு வருட காலத்தில் மொத்தம் உள்ள 12 திருமுறைகளில் பாடப்பட்ட அரிய மந்திரப் பாடல்களான 18266 பாடல்களும் தெலுங்கில் முற்றுப் பெற வேண்டும். எதற்காக இதைப் பணித்தானோ, அவனே இதை முடித்து வைப்பான் என்று தெரியும்.

ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எனக்கும் இந்த மாபெரும் புனிதப் பணியில் பங்கு கிடைக்கச் செய்த ஈசனை என்ன சொல்லிப் போற்றுவது எனத் தெரியவில்லை. நம்மாழ்வார் பெருமாளைப் போற்றுவார்.. ’எத்தனையோ பரமகவிகள் இருக்க என்னைத் தேர்ந்தெடுத்து உன்னைப் பாடுவித்தாயே’ என்று ஆச்சரியப்படுவார். அப்படித்தான் அடியேனும் ஈசனை நினைத்துப் பார்க்கின்றேன்.. இந்தச் செய்ல் இந்தப் பிறவியில் எனக்குக் கிடைத்தப் பெரும் பேறு.. அதை நிறைவேற்ற அவன் அருள் பெற, அவன் அருளாலே அவன் தாள் வணங்கி...

காதலாகி
கசிந்து
கண்ணீர்மல்கி
ஓதுவார்தமை
நன்னெறிக்குய்ப்பது
வேதம் நான்கிலும்
மெய்ப்பொருளாவது
நாதன்நாமம்
நமசிவாயமே..