Thursday, April 29, 2010

கடவுளும், தெலுங்கு எழுத்தாளர்களும்

என்ன காரணம் என்று தெரியவில்லை., இந்த மாதம் முதல் தேதியிலிருந்தே தினம் ’அன்புத்தொல்லை’க் கொடுத்துக் கொண்டிருந்த திருவாளர் பிரும்மாஜி கடந்த இரண்டு மூன்று நாளாக தொலைபேசியிலும் சரி, நேரிலும் சரி, வரவில்லைதான். கொஞ்சம் மனதுக்குள் வருத்தமாக இருந்தது. மனுஷன் பேசினா கேள்வியும், ஆதங்கமும்தான்.. இத்தனை ஆதங்கங்கள், மனதில் தாங்கிக் கொண்டு அதை வெளிப்படுத்த முடியாத எழுத்தாளராக அதுவும் இந்த 60 வயது வாழ்க்கை அனுபவத்தில் இப்படி இவரால் எப்படி இருக்க முடிகிறது என நான் வியப்பதுண்டு. ஆனாலும் இவர் கேள்விகளுக்கும், கவலைகளுக்கும் என்னிடம் தீர்வு கிடையாது.

’திருமலைத் திருடன்’ நாவல் பற்றி தெலுங்கில் பேச வேண்டுமென இங்குள்ள ’சஹ்ருதய சாஹிதி’ எனும் தெலுங்கு இலக்கிய அமைப்பு கேட்டதினால், அதுவும் தெலுங்கில் பேசவேண்டும் என்ற கோரிக்கையினால், நானே சற்று உள்ளுக்குள் உதறலோடுதான் அந்தச் சபையில் ஆஜரானேன். ஏதோ பேசினோமா, முடித்தோமா, போனோமா என்ற நிலையில் நான் அங்கிருந்து வெளியே வந்தபோதுதான் நம் பிரும்மாஜி என்னுடனே கூடவே வந்தார்.

’என் பெயர் பிரும்மாஜி!. உங்க நாவல் கதை முழுவதும் சொன்னீங்க.. கேட்பதற்கு ரொம்ப நல்லா இருந்திச்சு.. (இதுவரைக்கும் எனக்கும் நல்லாவே இருந்துச்சு).. ஆனா சார்.. உங்க நாவல் ல ஆண்டவன் இருக்கானா அல்லது இல்லையான்னு தெளிவா முடிவுல சொல்லி இருக்கீங்களா?’

”சார்.. ஆண்டவன் இருக்கிறதுனாலதான் இந்தக் கதையே இப்படி நடந்ததுன்னு கடைசில விளக்கம் கொடுத்தேனே சார்..”

”ஆங்! கொடுத்தீங்க சார்.. ஆனா. உண்மையிலே ஆண்டவன் இருக்கானா சார்.. உங்க சொந்த அபிப்பிராயம் என்ன.. அதைச் சொல்லுங்க..”

“அவன் இருக்கறதுனாலேதானே சார் உங்களை மாதிரி அன்பர்களையெல்லாம் சந்திச்சுப் பேசிண்டிருக்கேன்.. ஏன்.. உங்களுக்கு நம்பிக்கை இல்லையா..”

’இது பத்தி உங்கள்ட்ட பேசணும் சார்.. உங்க விலாசம் கொடுங்க.. நான் வரதுக்கு முன்னாடியே போன் பண்ணிட்டு, நீங்க வரச் சொன்னா மட்டுமே வருவேன்.. அநாவசிய டிஸ்டர்பன்ஸ் பண்ணமாட்டேன் சார்..’

’என்ன சார் இது.. கட்டாயம் வாங்க..’

அங்கிருந்து அவரிடம் அப்படி சொல்லித் தப்பித்து விட்டதாகத் தான் அன்றிரவு நினைத்தேன். ஆனால் நாம் ஒன்று நினைத்தால் இறைவன் இன்னொன்று நினைப்பான் அல்லவா.. அடுத்த நாள் காலையே போன் செய்து, மாலை என் அலுவலகம் வரலாமா என்று பர்மிஷன் கேட்டு, நானும் முழு மனதோடு (?) கொடுக்க, அன்று மாலையே மறுபடி பிரும்மாஜி என்னெதிரே ஆஜர்.

”சார்.. தப்பா எடுத்துக்காதீங்க.. இங்கே இருக்கற எழுத்தாளர்கள்னு சொல்லிக்கிறவங்கள்ளே – என்னையும் சேர்த்து - முக்கால்வாசிப்பேருக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது.!”’ என்று ஆரம்பித்த பிரும்மாஜி, கவிஞர்கள், கதை எழுத்தாளர்கள் பலர் பெயர்களையும், அவர்கள் புத்தக விவரங்களையும் எடுத்துச் சொன்னார். முக்கால்வாசி புத்தகங்கள் இன்னமும் புரட்சிகளை முன் வைத்தே எழுதப்படுகின்றன என்பதையும், சுரண்டல் பேர்வழிகள், முதலாளிகள் இவர்கள் ஒழிக்கப்படவேண்டும் என்ற கருத்தை முன்வைத்தே எழுதப்படுகின்றன என்பதையும் தெரிவித்தார். தெய்வபக்தி போன்றவை பெண்களுக்கு மட்டுமே சொந்தம் என்ற பாவனையில் பலர் இருப்பதாகவும், கோயில் குளம் என்று செல்லும் எழுத்தாளர் பலர் கூட வீட்டுப் பெண்டிர் வற்புறுத்தலால் மட்டுமே அதிகம் செல்கிறார்கள் என்றும் சொன்னார்.

‘சார்.. என்ன இப்படிச் சொல்லிட்டிங்க.. நித்யானந்தா மாதிரி எந்த குருசாமி எந்த ஊர்லேருந்து வந்தாலும் முதல்ல ஆதரவு கொடுக்கறது நீங்கதானே சார்..’

மறுபடியும் எனக்கு தெளிவு படுத்தினார் பிரும்மாஜி. ஆந்திரர்கள் இன்னமும் முழுமையாகப் படிப்பறிவு பெறவில்லை எனவும், பாதிக்கும் மேற்பட்டோர் மூடநம்பிக்கையில் கிடந்து மோசம் போகிறார்கள், இவர்களைக் காப்பாற்ற எங்களைப் போன்ற எழுத்தாளர்கள் எத்தனையோ முயற்சி செய்தும் இவர்கள் திருந்த முன்வரவே இல்லை..’ என ஆதங்கத்துடன் பேசினார்.

’தெலுங்கு எழுத்தாளர்களின் முன்னோடி ஸ்ரீ ஸ்ரீ அவர்கள் தான் சார். இவரும் புரட்சிகரமான கம்யூனிச எழுத்தாளர். சாகித்ய அகதமி விருது பெற்ற எழுத்தாளர்களில் பாதிப்பேர் புரட்சி சிந்தனை எழுத்தாளர்கள்தான்’ என்று சொல்லிய பிரும்மாஜி, சில விருது பெற்ற எழுத்தாளர்களின் பெயரைக் குறிப்பிட்டார்.

தெலுங்கு மக்கள் என்னவோ இத்தகையவர்களை ஆதரிக்கவில்லை, இவர்கள் புத்தகங்களையும் வாங்குவதில்லை என்று பிரும்மாஜி வருத்தப்பட்டாலும், தெலுங்கு வாசிப்பு என்பதே மக்களிடையே சுவாதி, ஜோதி (நம் குமுதம், விகடன் போல) என்ற வர்த்தகப் பத்திரிகைகள்தான் என்றும் சொன்னபோது, ’அட, இது எங்கள் ஊரிலும் இப்படித்தான்.. நாடெங்கும் தேசமெங்கும் இருக்கும் நிலைதானே சார்!,’ என்று அவரிடம் சொன்னேன்.

அவர் ஒப்புக் கொள்ளவில்லை. ’என்ன இருந்தாலும் தமிழர்களின் படிப்பறிவே தனி சார். அவர்கள் புத்தகங்களை மதிக்கத் தெரிந்தவர்கள். இங்கு புத்தகப்பதிப்பகங்கள் அவ்வளவாகக் கிடையாது. அப்படியே பதிப்பகங்கள் ஒவ்வொன்று கிடைத்தாலும் எழுத்தாளர் செலவு செய்தே பிரசுரிக்கவேண்டும். எழுத்தாளர் என்றால் அரசாங்கத்திடமோ, அல்லது பொது மக்களிடமோ எந்தவித மரியாதையும் கிடையாது. அதுவும் தெலுங்குப் புத்தக வாசிப்பு என்பதே கௌரவக் குறைச்சல் என்ற அளவுக்குப் போய்விட்டது சார்’ என் வருத்தப்பட்டார் பிரும்மாஜி.

‘உங்கள் நூலகங்கள் என்ன செய்கின்றன பிரும்மாஜி?’

’வெட்கக்கேடு, இந்த நூலகங்கள் பராமரிக்க இங்கே அரசாங்கம் ஒன்றும் செய்வதில்லை. அப்படியே ஒரு 200 நூலகங்கள் நாடெங்கும் இருந்தாலும் அவைகளில் புதிய தெலுங்குப் புத்தகங்கள் சேர்ப்பதுமில்லை. லைப்ரரி என்ற சொல்லே வேறு ஒரு புதிய அர்த்தத்துக்கு இப்போது வழி வகுத்துள்ளது’

‘என்ன சார் அது?’

’நாளிதழ், வார இதழ்கள் படிப்பதற்கும், விஞ்ஞானம் பற்றிய பழைய செய்திகள் பார்ப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன சார். ஆங்கில நூல்கள் அதுவும் பழைய நூல்கள் ஏராளமாகப் பார்க்கப்படுகின்றன.. தெலுங்கு மொழியை இதில் கூட சீண்டுவார் இல்லை. ஏனெனில் தெலுங்கு மொழியில் யார் என்ன பெரிதாக எழுதி இருக்கப்போகிறார்கள் என்ற மனப்போக்கு மக்களிடையே அதிகம்..’

உண்மையாகவே மனம் வேதனைப்படுகின்றது. பிரும்மாஜி கடந்த இரண்டு ஆண்டுகளாக தெலுங்கு மொழி சீரடைவது ஏன் என்ற ஆராய்ச்சி செய்து வருகிறாராம். இவர் இப்படியெல்லாம் ஒரு மொழியின் அழிவைப் பற்றிப் பேசும்போது அது கேட்க மிகவும் கஷ்டமாகத்தான் இருக்கின்றது.

’ஆனால் தெலுங்குக்கு உண்மை நிலை இன்று இதுதான் சார். நானே 20 புத்தகங்கள் எழுதி என் செலவில் அச்சடித்து வெளியுட்டுள்ளேன். ஆதரிப்பார் யாரும் இல்லை. இலவசமாக விநியோகித்து வருகிறேன் சார்” என்று பிரும்மாஜி வருத்தத்தோடு சொன்னார்.

’என்ன செய்தால் இந்த நிலை மாறலாம்’ என்ற ஆலோசனைகள் உங்களைப் போன்றோர் தரவேண்டும். நான் இப்படிப் பலரையும் சந்தித்துப் பேசி அவர்கள் ஆலோசனைகளைப் பதித்து வருகின்றேன்.. பிறகு இந்த ஆலோசனைகளை எடுத்துக்கொண்டு ஐதராபாத் வரை நான் செல்லத் தயார். ராஜதானியில் பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து ஏதாவது நம் மொழி வளர்ச்சிக்குச் செய்யவேண்டும் சார்.. நான் என் ஆராய்ச்சியின் முடிவுரையைத் தயார் நிலையில் வைத்திருக்கிறேன். அதே போல உங்கள் யோசனைகளையும் சொல்லுங்கள் சார்.. தமிழ் எழுத்தாளர்கள் நியாயமாகச் சொல்வார்கள் எனும் நம்பிக்கை எனக்கு உண்டு. என்னுடைய ஆய்வு முடிவுக் கட்டுரைக்கும் ரொம்பவும் உதவியாக இருக்கும், என்று பிரும்மாஜி கேட்டுக் கொண்டு போனவர், இரண்டு நாட்களாக வரவில்லை.

முதன் முதலில் தெலுங்கு மொழியில் நன்னய்யா எனும் பெருங்கவிஞர் மகாபாரதத்தை கவிதை நடையில் எழுதினார். நன்னய்யாவை தெலுங்கின் ஆதிகவி என்று சொல்வார்கள். அவருடைய பாரதத்தில் முதல் மூன்று வரிகளே மும்மூர்த்திகளை வணக்கம் சொல்லி பாடப்பட்ட முத்தான சமுஸ்க்ருத வரிகள். ஸ்ரீ, வாணி, கிரிஜா ஆகியோரை தங்களிடத்தே கொண்ட மும்மூர்த்திகளே, ஆதி தெய்வங்களே! இந்த உலகத்தை, ஆக்கி, காத்து, அழித்து, மறுபடியும் அருளும் பரப்பிரம்மத்தின் சொருபங்களே! எங்களை வாழ்த்துங்கள் என்று சொல்லி ஆரம்பிப்பார். பிறகு பாடப்பட்ட அனைத்துப் பாடல்களுமே தெலுங்கில்தான். (இவரால் மகாபாரதத்தை முழுமையாக எழுத முடியவில்லை. பின்னர் வந்த திக்கனா, எர்ரனா இருவரும் இந்த நூலை முடித்து வைத்தனர்)

நன்னய்யாவின் பாரதம் மிகவும் புகழ்பெற்ற நூல். இவர் எழுதிய காலம் சுமார் 1050 ஆம் ஆண்டாக இருக்கலாம் என்பது என் கணிப்பு. ஏனெனில் இவரின் இரண்டாவது பாடல், சோழப் பேரரசனான ராஜ ராஜ சோழனின் மருமகனான விமலாதித்தன் எனும் வேங்கி அரசனின் மகனான ராஜ ராஜ நரேந்திரன் (கி.பி.1022-1060) எனும் பெயருடைய அரசன் மீது பாடப்பட்டதாகும். (இவ்விவரங்களை நன்னய்யாவே தனது இரண்டாவது பாடலில் மிக மிகத் தெளிவாக எழுதியிருக்கிறார்) இதைக் கொண்டு பார்க்கும்போது ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பாடப்பட்ட தெலுங்கு நூல் இன்னமும் புகழ்பெற்று விளங்குகிறது ஏன் என்று இன்றைய தெலுங்கு எழுத்தாளர்கள் சிந்திக்கவாவது முயலவேண்டும்.

அடுத்து 15ஆம் நூற்றாண்டில் தெலுங்கு மொழியில் பாடப்பட்ட அன்னமய்யாவின் பாடல்கள், திருவேங்கடத்தான் மீது பாடப்பட்ட அற்புதமான நாவுக்கினிய கீதங்கள், பாமரனுக்கும் புரியக்கூடிய எளிய வரிகள், ஐந்நூறு வருடத்துக்கு முன் இயற்றப்பட்ட இவை இன்று பட்டி தொட்டியெங்கும் பரவத்தொடங்கி உள்ளதையும் இந்தக் கால எழுத்தாளர்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். ஸ்ரீகிருஷ்ணதேவராயரின் ‘ஆமுக்தமால்யதா’, அதே போலவே ராமதாசரின் கீதங்கள் கூட மக்களிடையே பிரபலம்தான்.

இன்றைய காலகட்டத்தில் அதுவும் இந்த ஒரு நூற்றாண்டில் எத்தனை தெலுங்கு நூல்கள் எழுதப்பட்டு சிறந்து விளங்கின என்று சில தெலுங்கு எழுத்தாளர்களிடம் கேட்டேன். எல்லோருமே ஸ்ரீரங்கம் ஸ்ரீனிவாசலு எனும் ஸ்ரீ ஸ்ரீ கவிதைகளைப் பற்றியே சொல்கிறார்களே தவிர, ஏனைய எழுத்தாளர்களைப் பற்றி தெரிந்துகொள்ள முயல்வதில்லை என்றே படுகிறது. எனக்குத் தெரிந்து ஜகன்னாத ராஜு எனும் நம் ராஜபாளையத்துக் காரர் பல தமிழ் நூல்களை தெலுங்கில் மொழி பெயர்த்துள்ளார். ஆனால் இன்றைய தெலுங்கு எழுத்தாளர்கள் அவைகளை சீண்டுவதில்லை என்பது வாஸ்தவமே. மக்களுக்கு எடுத்துச் சொல்லவும் யாருமில்லை என்பது கூட உண்மைதான். எண்டமூரி வீரேந்திரநாத் கதைகள் தெலுங்கில் ஒரு காலத்தில் மிக மிகப் பரவலாகப் பேசப்பட்டவை (தமிழில் சுஜாதா போல) ஆனால் இப்போது இவர் கூட ஒரு சபையில் பேசும்போது தன்னுடைய கதைகள் அவ்வளவாக விற்பதில்லை, ஆனால் பணம் சம்பாதிப்பது எப்படி என்று எழுதிய தன்னுடைய சிறிய நூல் ஒன்று லட்சம் பிரதிகள் விற்கிறது என்று ‘வருத்தத்துடன்’ குறிப்பிட்டார். ஆக இவரும் எழுத்தாளராக மிகவும் புகழ் பெற்றாலும், தெலுங்கில் புத்தகங்கள் வாங்குவதில்லை என்ற குறையை பகிரங்கமாகவே சொல்லி வருகிறார். தெலுங்கு இலக்கிய உலகம் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்பதை ஒரு அமைச்சரே சமீபத்தில் அரசாங்க நிகழ்ச்சியில் பேசியதை நானே கேட்டுள்ளேன். இப்படி எல்லோருமே கவலைப்படுவது போல முகத்தை சோகமாக்கிக் கொண்டு பேசி வருகிறார்களே தவிர உண்மையில் இவர்களுக்குத் தங்கள் மொழி வளர்க்கப்படவேண்டும் என்ற எண்ணம் உள்ளதா என்பதே சந்தேகமாகத்தான் இருக்கிறது.

நல்ல தரமான எழுத்துகளுக்கு, அது எந்த மொழியாக இருந்தாலும் சரி, நிச்சயம் தெய்வம் துணை நிற்கும். அரசாங்கம் உண்மையிலே கவலைப்பட்டால், அது முதலில் செய்யவேண்டிய வேலை ஊரெங்கும் நூலகங்கள் ஏற்படுத்தி தெலுங்கு நூல்களை ‘டப்பு’ செலவழித்து வாங்கவேண்டும். எல்லா தெலுங்கு நூல்களும் ஒவ்வொரு நூலகமும் கட்டாயம் வாங்கியே தீரவேண்டும் என்ற சட்டம் இயற்றப்படவேண்டும். இப்படி சட்டம் இயற்றப்படுவதால் ஒரு சில தீமைகளும் எழலாம். புற்றீசல் போல நெறியற்ற எழுத்துகள் நாடெங்கும் எழுதப்பட்டு, நூலகங்களுக்கு விற்கப்படும் வாய்ப்புகள் ஏற்படலாம். ஆனால் காலாகட்டத்தில் இவை தேய்ந்துதான் போகும்.

ஆனால் உயர்ந்த சிந்தனைகள், லட்சியங்கள், இலக்கிய ஆதாரங்கள், மண்ணின் வளம், பாரதத்தின் பண்டைய மேம்பாடு, என எழுத்துகள் வர ஆரம்பிக்கும்போது மொழி செழிப்பாக வளர நிச்சயம் வாய்ப்புண்டு. மேலே குறிப்பிட்ட விஷயங்கள் தங்கள் எழுத்தில் இன்றைய எழுத்தாளர்கள் கொண்டு வர வேண்டுமென்றால் இந்த விஷயங்களின் அடிப்படை உணர்ச்சியே தெய்வ நம்பிக்கை என்பதையும் இவர்கள் தெளியவேண்டும்.

விஜயநகரப் பேரரசு தென்னகமெங்கும் பரந்து விரிந்து கோலோச்சும் வேளையில் அதாவது சுமார் 200 வருடங்களுக்கு தெலுங்கு மொழியும் அரசவை மொழியாக கோலோச்சியது.தமிழகத்திலேயே தஞ்சை, மதுரை, காஞ்சியில் அப்போதெல்லாம் தெலுங்கு மொழிக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. தெலுங்கு மொழி பாடல் வகைகளுக்கேற்ற இனிய மொழி. நல்ல திரைப்படப் பாடல்கள் கூட இன்னமும் இனிய கீதமாக வேற்றுமொழிக்காரர்களால் கூட பாடமுடியும் அளவுக்கு இனிமை நிறைந்த மொழி. ஆனால் இம்மொழி மெல்ல மெல்ல மறைந்து வருகிறது..

‘கன்ஞ்சு ம்ரோகினட்டு கனகம்பு ம்ரோகுனா’ (வெண்கலம் கணீர் என கேட்பதைப் போல, தங்கத்தால் அப்படி முடியாதுதான், ஆனால் தங்கத்தின், அதன் தரத்தின் முன்னே வெண்கலம் நிற்குமா) என்று ’வேமனா’ எனும் பெரும் புலவர் தெலுங்கில் கேட்பார். தாய்மொழி தங்கம் போன்றது என்பதை எப்படி மக்களிடையே எடுத்துச் சொல்வது?

பிரும்மாஜி போன்றோர் கவலைகள் கவனிக்கப்படவேண்டியவை. மிகவும் ‘சீரியஸ்’ ஆக கவனிக்கப்படவேண்டியவை. மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லாத நிலையில் ஒரு மொழியை தெலுங்கு எழுத்தாளர்களான இவர்கள் வைத்திருக்கக்கூடாது. சமீபத்தில் ‘யுனெஸ்கோ’ அறிக்கையில், வருங்காலத்தில் மறைந்து போகும் உலக மொழிகளில் தெலுங்கும் ஒன்று என்று வந்துள்ளதாக சொல்கிறார்கள். இது உண்மையென்றால் நிச்சயம் நிலைமை கவலைக்கிடம்தான். தெலுங்கு மொழியைக் கடவுள்தான் காப்பாற்றவேண்டும்..

இப்படி (கடவுள்தான் காப்பாற்றவேண்டும்) நான் பிரும்மாஜியிடம் சொன்னால் அவர் ஏற்றுக் கொள்வாரோ என்னவோ தெரியாது.. இருந்தாலும் சொல்லிவிடவேண்டியதுதான்.. ஏற்கனவே சொன்னேன், பிரும்மாஜி இரண்டு நாட்களாகக் காணவில்லை என்று.. வரட்டும்.. சொல்லிவிடலாம்..