Follow by Email

Tuesday, June 29, 2010

சமீபத்தில் நடந்த தமிழ் செம்மொழி மாநாட்டில் நான் வாசித்த கட்டுரை:
தமிழும் இந்திய தமிழ்ச்சங்கங்களும்:
திவாகர்

முச்சங்கம் கண்டு வளர்ந்த செம்மொழியாம் தமிழுக்கும் தமிழர்தம் பெருவாழ்வுக்கும் தொண்டு செய்யும் வகையில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தமிழர்கள் எங்கெல்லாம் குறிப்பிட்ட அளவில் வசிக்கிறார்களோ அங்கெல்லாம் சங்கங்கள் அமைக்கப்பட்டு அமைப்பு ரீதியாக செயல்பட்டு வருகின்றன.

தமிழ் வளர்க்க உதவுவதாக இங்கே குறிப்பிடும்போது, தமிழோடு தமிழர்தம் கலைகள், தமிழர்தம் பண்டைய விருந்தோம்பல் பண்புகள், தமிழர்தம் பிற்காலச் சந்ததியினர் அமிழ்தமாம் தமிழ்மொழியினை மறந்துபோகாமல் இருப்பதற்கான செயல்பாட்டு வழிமுறைகள், இவற்றையும் கருத்தில் கொண்டுதான் இந்தியாவில் உள்ள ஏனைய மாநில தமிழ்ச்சங்கங்கள் செயல்படுகின்றன. தமிழர் பெருவாழ்வுக்கு தொண்டு என வரும்போது, அவர்களுக்குத் தேவையான உதவிகளை ஏற்பாடு செய்தல், தமிழர்தம் உடைமைகளை பாதுகாத்தல் போன்ற செயல்பாடுகளும் கருத்தில் கொள்ளப்பட்டு செயல்படுகின்றன.
தமிழ் செம்மொழியாயினும் நடைமுறை வாழ்க்கையில் தமிழ்மொழியினை தமிழர் வாயால் பேச வைப்பதிலேயே பல சிக்கல்கள் உள்ளன. தமிழ்நாட்டுத் தமிழர்களை விட மற்ற மாநிலங்களில் வாழும் தமிழருக்கு தங்கள் நடைமுறை வாழ்க்கையில் தமிழுக்கு அதிக இடம் இல்லை என்றே கூறலாம். முதலில் ஆங்கிலம், பிறகு அவர்கள் பகுதியில் பேசப்படும் மொழி, இவைகளுக்குப் பிறகுதான் தமிழ் மொழி அவர்களின் நடைமுறை வாழ்க்கையில் இடம் பெறுகிறது.

ஏறத்தாழ மூன்றாம் இடத்தில் தள்ளப்பட்டுள்ள நம் இனிய தமிழ்மொழியை இல்லத்தில் மட்டுமே பேசவேண்டிய அளவுக்கு தள்ளப்பட்ட தீந்தமிழை, இன்றைய கல்விமுறையின் கட்டாயத்தால், இல்லத்தில் கூட ஆங்கிலம் ஆக்கிரமிக்க, இடை இடையே இனிய தமிழ் என்ற அவலநிலையில், இந்த இனிய தமிழை நம் தமிழர் நாளாவட்டத்தில் இல்லத்தில் பேசுவதற்கு கூட மறந்துவிடும் நிலை வருமோ என்ற அச்சத்தில், கவலையில் இருக்கவேண்டிய நிலை ஏற்படுகின்றது.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாநிலத்தில் நிலையாக குடியேறிய குடும்பங்களில் தமிழ் இல்லத்தில் பேசப்படுகின்றதா என்ற ஒரு கேள்வி எழுமானால் அதற்கான பதில் தமிழ் உணர்வு கொண்டோருக்குக் கவலையே அளிக்கும். எத்தனையோ தமிழ்க்குடும்பங்கள் இன்று தங்கள் உயிருக்கும் உயிரான தமிழ்மொழிப் பேச்சிழந்து எத்தனையோ மாநிலங்களில் வசித்துவருகிறார்கள் என்பது இன்றைய கசப்பான உண்மை. உதாரணமாக சுமார் தொளாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சோழமன்னன் குலோத்துங்கன் காலத்தில் ஆந்திராவில் ஆயிரக்கணக்கில் கூட்டம் கூட்டமாக குடியேறிய தமிழர் குடும்பங்கள் இன்று தங்கள் சொந்த மொழி இழந்து குடும்பப்பெயரான ‘திராவிட’ என்பதை மட்டும் கொண்டு வாழ்ந்துவருகிறார்கள். தங்கள் மூதாதையர் தமிழர் என்பது மட்டுமே தெரிந்து அதன் மூலம் பெருமை கொள்ளும் இவர்களுக்கு தமிழ் மொழி மேல் தற்சமயம் உறவில்லை என்பது உண்மை. இவர்கள் அதற்காக வருத்தப்பட்டாலும் இன்னொரு மண்ணில் இன்னொரு மொழியிடையே ஊன்றும்போது இவர்களால் ஏதும் செய்யமுடியவில்லை. இது ஒரு உதாரணத்துக்கு மட்டுமே.

இங்குதான் தமிழ்ச்சங்கத்தின் தலையாயச் சேவை தேவைப்படுகின்றது, தமிழ்க் குடும்பங்களுக்கு தமிழ்ச்சேவை செய்யவேண்டியது தலையாயக் கடமையாகக் கொண்டு செயல்படவேண்டிய நிலையில் தம்மை தகுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.

வெளிமாநிலத்தில் வாழும்போது அங்குள்ள அன்றாட அத்தியாவசியத் தேவைகளுக்கே தமிழர்கள் முதலிடம் கொடுப்பது இயல்பு என்றாலும் அவர்களிடையே தங்கள் மொழியை வளர்த்துக் கொள்ளவேண்டிய அவசியத்தை தமிழ்ச்சங்கங்கள் உணர்த்தவேண்டும். மேலே குறிப்பிட்ட ‘திராவிட’ குடும்பங்கள் ஏன் தமிழ் பேசுவதில்லை எனக் கேட்டால் அவர்கள் தரும் பதில் அவர்தம் மூதாதையரைக் குற்றம் சொல்வதாக இருக்கும். இதே போல பிற்காலச் சந்ததியினர் இன்றைய தமிழ்ச் சமுதாயத்தினரைக் குறை சொல்லும் நிலைக்குத் தள்ளப்படாமல், தமிழ்ச்சங்கங்கள் பொறுப்பேற்றுக்கொண்டு, இன்றைய தலைமுறைக்குத் தேவையான விதத்தில் தமிழ் மொழியை அவர்களிடையே பரப்பவேண்டும்.

தமிழ்மொழியை பரவலாக்கப்படும்போது அது கலை மற்றும் கலாச்சார அளவில் தமிழர்தம் வாழ்வில் புகுத்தப்படும்போது தமிழ் மட்டும் வளரவில்லை, தமிழர்தம் பெருவாழ்வும் சேர்ந்து வளர்கிறது என்பதே தமிழ்ச்சங்கங்கள் தமிழருக்கு செய்கின்ற மிகப்பெரிய தமிழ்ச்சேவை.

இன்று இந்தியாவில் உள்ள தமிழ்நாடு தவிர ஏனைய மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் நிலையை சற்று பார்ப்போம்.

தமிழ்நாட்டின் ஜனத்தொகை 2001 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புப்படி புதுவை மாநிலத்தையும் சேர்த்து 6.31 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் கடந்த இருபது ஆண்டுகளாக கணிசமான அளவில் குறைந்துவருவதாக மக்கள் தொகை கணக்கெடுப்புத் துறை மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. அதன் படி 1980-90 ஆம் ஆண்டுகளில் இருந்த 23% வளர்ச்சி விகிதம் அடுத்த பத்தாண்டுகளில் 20.5% ஆக குறைந்தது. இது மேலும் நடப்பு பத்தாண்டுகளில் இந்த வளர்ச்சி விகிதம் 17% ஆகவும் குறைய வாய்ப்புகள் உள்ளன என்பதை கணக்கீட்டுக் குறிப்புகள் ஏற்கனவே கணித்துள்ளன. அந்த வகையில் பார்க்கும்போது 2010 ஆம் ஆண்டான தற்சமயத்தில் தமிழ்நாட்டின் மக்கள் தொகை புதுவையையும் சேர்த்து 7.6 கோடியாக இருக்கும். இப்போது தமிழ்நாடு தவிர ஏனைய மாநிலங்களின் தற்போதைய நிலவரப்படி தமிழ் மக்கள் தொகையை சற்று பார்ப்போம்.

கேரளா : 20 லட்சம்
கர்நாடகா: 40 லட்சம்
ஆந்திரப்பிரதேசம்: 25 லட்சம்
மகாராட்டிரம், மும்பை உட்பட: 45 லட்சம்
குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப்: 5 லட்சம்
ஹிமாசல், காஷ்மீர், உத்தரப்பிரதேசம்,பீஹார், உத்தராஞ்சல்: 5 லட்சம்
மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள்: 10 லட்சம்
மத்தியப்பிரதேசம், ஒரிஸ்ஸா, சட்டிஸ்கர்: 3 லட்சம்
தில்லி மாநகரம்: 15 லட்சம்
அந்தமான் உட்பட்ட இதர இடங்கள்: 7 லட்சம்

ஆக மொத்தம் 1.75 கோடி தமிழர்கள் இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் வசிக்கிறார்கள். இந்தக் கணக்கு அங்குள்ள தமிழ்ச்சங்கங்கள் மூலமும், மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் அந்தந்த மாநில அளவில் 2001 இல் எடுக்கப்பட்டிருந்த மொழிவாரி மக்கள் விகிதாசார விவரங்கள் மூலமாக எடுத்து அத்துடன் கடந்த பத்தாண்டு வளர்ச்சி விகிதத்தையும் கணக்கில் சேர்த்துக் கொண்டு இங்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஆக ஏறத்தாழ ஐந்தில் ஒரு தமிழர் இந்தியாவில் தமிழ்நாடு தவிர ஏனைய மாநிலங்களில் வசிக்கிறார் என்பதை நாம் இங்கு நினைவில் இருத்திக் கொள்ளவேண்டும்.

இந்த ஒன்றே முக்கால் கோடி தமிழரில் எத்தனை சதவீதம் தமிழறிவு பெற்றுக்கொண்டிருப்பர் என ஒரு கணக்கெடுப்பு நடத்தினால் அது நம்மை வியப்பிலும், அதிர்ச்சியிலும்தான் ஆழ்த்தும் என்பது நிச்சயம். கர்நாடகத்தில் 40 லட்சம் தமிழர் இருந்தும் அந்த மாநிலத்தில் 40 தமிழ்ப்பள்ளிகள் கூட இல்லை. அதே போல மகாராட்டிரத்தில் ஒரு மும்பையில் மட்டுமே 48 மாநகராட்சிப் பள்ளிகளில் தமிழ் கற்றுத்தரப்பட்டும், மாநிலம் முழுவதுமாக 12 தனியார் பள்ளிகளில் தமிழ் கற்றுத் தரப்பட்டும் தமிழ் மொழியைக் காப்பாற்றி வந்தாலும் 45 லட்சம் தமிழருக்கு 60 பள்ளிகள் எந்த மூலை என்பதையும் நினைத்துப் பார்க்கவேண்டும். மேலும் மும்பையில் தமிழ் படிப்பு என்பது பொருளாதாரத்தில் கீழ்நிலையோர் படிக்கும் படிப்பாகவும், பொருளாதாரம் சிறிது நன்றாக இருக்கும் குடும்பங்கள் கூட ஆங்கிலப் பாடங்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆந்திர மாநிலத்து விஜயவாடாவில் திருவள்ளுவர் பெயரில் ராமசாமி நாடார் அவர்களால் சுமார் 1000 மாணவர்களுடன் 52 ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட தமிழ்ப்பாடசாலையில் இன்று 154 மாணவர்கள் மட்டுமே தமிழ் பயிலுகிறார்கள் என்பது வேதனைக்குரிய விஷயம். அதே சமயத்தில் விஜயவாடாவில் ஏறக்குறைய ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் இப்போது வசித்து வருகிறார்கள் என்பதும் இங்கு ஒப்பு நோக்கவேண்டிய செய்தி.

பெங்களூரு நகரத்தில் மட்டுமே 25 லட்சம் தமிழர்கள் வசித்து வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான். ஆனால் அங்கே 20 தமிழ்ப் பள்ளிகள்தான் செயல்பட்டு வருகின்றன என்பது வேதனைக்குரிய விஷயம். 20 வருடங்களுக்கு முன்பு 50 தமிழ்ப்பள்ளிகள் இருந்த பெங்களூரு நகரத்தில் இன்று 20 பள்ளிகளே என்ற அளவுக்கு வந்து அந்த இருபது பள்ளிகளில் கூட ஆசிரியர் பற்றாக்குறை வந்து தேக்கமடையும் சூழ்நிலையில் இருக்கின்றது என்பது மேலும் நம்மை வருத்தப்பட வைக்கும். இந்த நிலை அனைத்து மாநிலத்து தமிழ்ப்பள்ளிகளுக்கும் பொருந்தும் என்று கூட சொல்லலாம்.

ஆசிரியர் நியமனம் என்பது, அரசு நிதியில் இயங்கும் அரசாங்க உத்தியோகம் என்பதால் அந்தந்த மாநில அரசுகள் ஏனைய மொழி ஆசிரியர் தேர்வுகளில் அதிகக் கவனம் செலுத்தவில்லை என்பது கூட உண்மையான நிலைதான். இருக்கும் கொஞ்ச நஞ்ச தமிழ்ப்பள்ளிகளில் உள்ள காலி இடங்களை நிரப்ப கர்நாடக, மகாராட்டிர அரசுகள் மெத்தனப் போக்கைக் கடைபிடிக்கின்றன. ஆனால் அரசுக்கு ஏற்படும் அதீதச் செலவுகள் மட்டுப்படுத்த வேண்டிய சூழ்நிலை வரும்போது, அதாவது சிக்கனம் என்று வரும்போது மட்டும் கல்வி விஷயத்தில், இந்தக் கட்டுப்பாடையும் மட்டுப்பாடையும் கையிலே கத்திரிக்கோல் கொண்டு கறாராகக் கடைபிடிக்கிறார்கள் என்று கூட சொல்லலாம். சமீபத்தில் மும்பையில் 48 நகராட்சி தமிழ்ப் பள்ளிகளில் இந்த ஆசிரியப் பற்றாக்குறையினால் 8ஆம் வகுப்பிலிருந்து 10 ஆம் வகுப்பு வரை ஒட்டு மொத்தமாக எல்லா இடங்களிலும் தூக்கப்பட்டு அந்த வகுப்புகள் மூடப்பட்டன. இந்த விஷயங்கள் ஊடகங்கள் மூலம் விரிவாகவே அலசப்பட்டாலும் மாநகராட்சிக் கல்வி அதிகாரி மட்டும் அசைந்துகொடுக்காமல் அந்தத் தமிழ் மாணவர்களை வேறு பள்ளிகளுக்கும் வேறு மொழிக்கும் மாற்றிக் கொள்வதுதான் மிகச் சிறந்த வழி என்று இலவச ஆலோசனை வழங்கிவிட்டார். இந்தச் செய்தி கூட பத்திரிகைகளில் வெளியிடப்பட்டு கண்டனத்துக்கு உட்பட்டாலும் அரசு கலங்கவில்லை என்பதுதான் வருத்தமான விஷயம். ஏனெனில் அரசு இங்கு மிக முறையாக சிக்கனத்தைக் கடைபிடித்து அரசு சிறுபான்மை மொழி ஆசிரியராக நியமிக்காததன் மூலம் ஏதோ சில ஆயிரங்களை சேமித்து தங்கள் திறமைக்கு அச்சாரமாக எடுத்துக் கொண்டு அதை வெளியேயும் பிரகடனப்படுத்தப்பட்டதால் மேலும் ஏதும் செய்யமுடியாத நிலையில் தமிழ் மக்கள் தள்ளப்பட்டுவிட்டார்கள் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

ஒரு பக்கம் மற்ற மாநிலங்களில் உள்ள அரசுகள் இப்படி தமிழுக்கு ஏதும் உதவி செய்வதில்லை என்ற குற்றச் சாட்டு பலமாக உள்ளது என்றால் இன்னொரு பக்கம் ஏற்கனவே கூறியது போல குழந்தைகளைப் பெற்ற பெற்றோர்களும் தமிழை அலட்சியப்படுத்துகிறார்களோ என்கிற அச்சத்தை உண்டுபண்ணுகிறார்கள். தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்கும் ஆர்வம் பெற்றோர்களுக்கு மிக மிகக் குறைந்துகொண்டே வருகிறது என்பது இன்றியமையாத உண்மை. இதற்கு இன்றைய கல்வி முறையையும் ஒரு காரணம். பயிர்களிலே பணப்பயிர்வகை போல கல்வியில் கூட பணம் எளிதில் கிடைக்க வகை செய்யும் கல்வி பரவலாக்கப்பட்ட நிலையில் தமிழ் எனும் மொழி இந்தப் பணப்பயிர்க் கல்வியில் இன்னமும் நுழைக்கப்படாத நிலையில் பெற்றோர்கள் இயற்கையாகவே இந்தப் பணப்பயிரைதான் தங்கள் குழந்தைகள் மீது திணிக்கிறார்கள் என்றே சொல்லலாம். அதுவும் வெளி மாநிலங்களில் உள்ள சூழ்நிலை சாதாரணமாகவே இந்த நிலைக்கு ஆதரவாகத்தான் இருக்கிறது. எது லாபகரமாக அவர்கள் கண்களுக்குத் தோன்றுகிறதோ, அந்தக் கல்வியில் மாணவச் செல்வங்களைத் திணிக்கும் இந்த விநோத சூழ்நிலையில் உள்ள மக்களின் மனோநிலையும் ஒரு காரணம் என்றாலும் இன்று நாம் பேசும் நமது மண்ணின் மொழியை தங்கள் பிள்ளைகள் மறந்துவிட்டால் நல்லதா என்று இவர்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும். ஆங்கில வழிக் கல்வி இன்றைய சூழ்நிலையில் அவசியமானது என்பதற்காக பெற்ற தாய்க்கும் கொண்ட தாரத்துக்கும் ஒப்பான தமிழை ஒதுக்கி வைக்கலாகுமோ என்று எண்ணிப் பார்க்க வேண்டும்..

இங்கேதான் தமிழ்ச்சங்கங்களின் பணி தேவைப்படுகிறது.

தமிழ் வளர்ப்பினை இரண்டாகப் பிரிப்போம்.

ஒன்று பேச்சு மொழி, இன்னொன்று எழுத்து மொழி.

பேச்சு இயற்கையாகவே தமிழனின் மூச்சு. அது அவன் உதிரத்தில் கலந்து விட்ட ஒரு ஆச்சரியமான உணர்ச்சி. ஆனால் அவன் எந்த மொழியில் பேச்சுத் திறமை பெறுகிறான் என்பதில் தமிழ்ச் சங்கங்களின் பங்களிப்பு அதிகம் உள்ளது. பெரியவர்கள் நமக்குத் தந்த ஆருயிர்த் தமிழாக அந்தப் பேசும் மொழி ஆவதில் அவனைத் திசை திருப்பவேண்டும்.
இன்று இந்திய மாநிலங்களின் அனைத்து முக்கிய நகரங்களிலும் தமிழ்ச்சங்கங்கள் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. தமிழ்ச்சங்கங்களின் தலையாயப்பணி நிச்சயமாக தமிழைப் பேணிப்பாதுகாப்பதில்தான் இருக்கவேண்டும். இதனை இங்கே தயங்காது ஏன் கூறுகிறேன் என்றால் பல தமிழ்ச்சங்கங்களின் தற்போதைய நிலையை நன்கு அறிந்தவன் நான். அந்த தமிழ்ச்சங்கங்கள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டுமானால் திரைப்படம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளோ, பிரபலங்களின் பாடல் கச்சேரிகளோ அல்லது கூத்தாட்டங்களும், குதியாட்டங்களும் நிறைந்த பொழுது போக்கு நிகழ்ச்சிகளோ நடத்தப்படவேண்டிய காலகட்டத்தில் உள்ளனர் சங்க நிர்வாகிகள். தமிழ் மக்களுக்கு எழுச்சி ஊட்டும் நிகழ்ச்சிகள் கேளிக்கை நிகழ்ச்சிகள் மட்டுமே என்ற சூழ்நிலை உள்ள காலகட்டமிது. அதனால் இந்தக் கேளிக்கை நிகழ்ச்சிகள் அனைத்தும் அதிக அளவில் நடத்தப்படுகிறது. இந்தக் கேளிக்கை நிகழ்ச்சிகளை ஒரேயடியாகக் குறைக்காமல் மெல்ல மெல்ல நம் மக்களுக்குத் தமிழில் ஆர்வம் காட்டும் விஷயங்களாக நிகழ்ச்சிகளை அவர்கள் முன் எடுத்துச் செல்லவேண்டும். தமிழில் பட்டி மன்றம் என்பது ஒரு சுவையான நிகழ்ச்சி. அல்லது நிகழ்காலக் கட்டத்தில் காரசாரமாக எல்லா பொதுமக்களிடையேயும் சாதாரணமாக பேசப்படும் தலைப்பில் தமிழ்மக்களைப் பேச வைத்துக் கேட்கவேண்டும். விவாத மேடைகளை அவ்வப்போது உருவாக்கி தமிழில் பயிற்சி கொடுத்துப் பேச வைக்கவேண்டும். பேச்சுப் போட்டிகள் நடத்த வேண்டும். இந்த விஷயங்களை மிகச் சரியாகப் பயன்படுத்தும்போது, அந்த பலன் மக்களை பரிபூரணமாகச் சேரும்போது, தமிழ் முதலில் பேச்சு மொழியாக மக்கள் மனதிலே நிலையாக நின்றுவிடும். இது காலம் காலமாகக் கடைபிடிக்கப்படும் சூழ்நிலையையும் சங்கங்கள் உருவாக்கவேண்டும். சங்கங்கள் வெறும் பொழுது போக்குக்காக உருவாக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையை மாற்றி, பொழுதுபோக்குடன், இத்தகைய பேச்சுத் தமிழ் வளர்க்கும் நிகழ்ச்சிகளையும் தயங்காமல் அளிக்கவேண்டும். முதலில் கூட்டம் வரத் தயங்கும்தான். ஏனெனில் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கேப் பழக்கப்பட்ட நம் மக்களின் ஆதரவு முதலில் கிடைக்காதுதான். ‘கடை விரித்தால் கொள்வார் யாரும் இல்லையென்பதால்’ சங்க நிர்வாகிகளுக்கே முதலில் சற்றுக் கடினம்தான். சிறு ஏச்சுப்பேச்சுகள் இதன்மூலம் சங்கநிர்வாகிகள் பெறவேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். ஆனால் கொண்ட நோக்கம் நிறைவேற நம் தமிழ் ஓசை தெருவெங்கும் கேட்கவைக்க முயலத்தான் வேண்டும். தரமான பேச்சுப்போட்டிகள், தரமான பட்டிமன்றங்கள், தரமான விவாத அரங்கங்கள் என்று வரும்போது, மக்கள் தாமாகவே முன்வருவர். வெளியூர் அறிஞர்களை வைத்து நிகழ்ச்சிகள் நடத்துவதை விட உள்ளூர்த் தமிழர்களை வைத்து நடத்தவேண்டும். அப்போதுதான் நாம் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். முதலில் பலர் பேசத் தயங்குவர். ஆனால் போகப்போக அவர்கள் தமிழின் இனிமையை அவர்கள் நாக்கு உணரும்போதுதான் மக்களுக்கு தாம் எத்தகைய இனிமையான மொழியை எவ்வளவு அழகாகப் பேசிக் கொண்டிருக்கிறோம் என்று உணரத் தொடங்குவர். செந்தமிழும் நாப்பழக்கம் என்று சும்மாவா சொன்னார்கள் நம் பெரியவர்கள் என்ற எண்ணம் நிச்சயமாக அவர்கள் மனதில் தோன்றும்..

அடுத்து எழுத்துத் தமிழ். இங்கு சங்கங்களின் உழைப்பு சற்றுக் கூடுதலாக வேண்டியிருக்கிறது. இன்று இணைய உலகில் மிக உல்லாசமாகவும் உற்சாகமாகவும், எழுச்சியோடும், சுதந்திரமாகவும், கட்டுப்பாடற்ற நிலையில் தமிழ் உலாவி வருகிறது. இந்த கட்டுப்பாடற்ற சுதந்திர இணையத்தில் எழுத்துத் தமிழ் பழகுவது என்பது மிக மிக எளிதானதாக இன்றைய காலகட்டத்தில் கணினி வகை செய்துள்ளது. இதை சங்கங்கள் மனதில் கொள்ளவேண்டும். நல்ல விஷயங்களை நம் தாய் மொழியில் எழுதுவது போல எந்த மொழியில் எழுதினாலும் அது இனிக்காது என்பதை நம் மக்கள் உணரச் செய்யவேண்டும். தமிழ்ப்பாடங்கள் மிக எளிய முறையில் ஆத்திச் சூடியிலிருந்து அடுக்குமொழிப் பயிற்சி வரை கற்றுக் கொள்ள குறுந்தகடுகள் வந்துவிட்டன. சங்கங்கள் இந்தக் குறுந்தகடுகளை மக்களுக்கு இலவசமாக அளிக்கவேண்டும்.

தாய்க்குலங்கள் மூலமாக தமிழ் மொழி எழுதப் பழக விடுமுறை நாட்களில் பயிற்சி எடுக்க உதவவேண்டும். நல்ல தமிழ் எழுதும்போது, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகள் கொடுத்து உதவவேண்டும். நான் வேண்டும் வேண்டும் என்று இங்கு சொல்வதெல்லாம், நம் இந்தியாவில் உள்ள அனைத்துத் தமிழ்ச்சங்கங்களும் ஏற்கனவே முனைப்பாக செயல்படுத்தி வருவதுதான். இருந்தாலும் இந்த செயல்பாடுகள் முன்னுரிமையாக்கப்பட்டு மிக வேகமாகவும், தீவிரமாகவும் செயல்படும்போது, தமிழன்னையின் நெஞ்சம் குளிர்ந்துகொண்டே இருக்கிறது என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்.

இன்று இந்தியாவில் அனனத்துத் தமிழ்ச்சங்கங்களும் ஒரு விஷயத்தில் மிக ஒற்றுமையாக இருக்கின்றன என்றால் அது கவிஞன் பாரதிக்கு விழா எடுப்பதில்தான். ஆனால் அதை விட பாரதியை மனம் மகிழ வைப்பது என்னவென்றால் ‘சேமமுற வேண்டுமெனில் தெருவெங்கும் தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்’ என்றானே பாரதி. அவன் தந்த அந்த தெய்வீக வார்த்தைக்கு உண்மையான செயல் வடிவம் கொடுப்பதுதான் நம் சங்கங்களின் தலையாய பணியாக இருக்கவேண்டும்.

தமிழ்ச்சங்கங்கள் இன்று பல ஊர்களில் நல்ல நிலைமையில் இருக்கின்றன. வேறு சில ஊர்களில் நலிவடைந்த நிலையில் உள்ளன. தமிழர்களை ஒன்றுபடுத்தும் நோக்கத்தை நாம் உண்மையாகவே கடைப்பிடித்தால் நலிவு நம்மை நாடாது என்பதை மனதில் கொண்டு செயல்படவேண்டும். நாம் தமிழர் என்று ஒருவருக்கொருவர் உண்மையாக உணர்ந்து கொள்வதே மொழியால் பேசும்போதுதான். தமிழ்மொழி மட்டுமே நம் உணர்வுகளை சிலிர்க்கச் செய்து ஊர் பேர் தெரியாத போதும் அன்பால் ஒருவரை ஒருவர் நேசிக்கச் செய்கிறது. இதைக் கண்கூடாக உணர்ந்தவர்கள் தமிழ்ச்சங்கத்தவர்கள் என்று சொல்வதில் எனக்கும் ஒரு பெருமை உண்டு. 1903 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தமக்கென ஒரு சங்கம் அமைத்துக் கொண்டு இன்று வரை தொய்வில்லாமல் தமிழ்ப்பணியைத் தலையான பணியாக செய்து வரும் விசாகப்பட்டினத்து தமிழ்ச்சங்கத்திலிருந்து வருபவன் நான் என்பதே எனக்குப் பெருமைதானே..

தமிழர்களுக்கும், தமிழுக்கும் தற்போதைய நிலையில் இந்திய தமிழ்ச்சங்கங்களின் சேவையை குறைத்து மதிப்பிடமுடியாது. ஆனால் தமிழ்ச்சங்கங்களின் சேவையை சரியாகப் பயன்படுத்திக் கொள்வதும் நம் தமிழரின் கையில்தான் இருக்கிறது என்பதையும் நாம் இங்கே மறக்கக்கூடாது. உதாரணத்திற்கு ஒன்று சொல்லலாம். மைசூர் தமிழ்ச்சங்கமும், விஜயவாடா தமிழ்ச் சமுதாயமும் தமிழ் பயிலும் மாணவர்களுக்காக, அவர்கள் பள்ளி சென்று வருவதற்காக இலவச பேருந்துகள் நடத்துகின்றன. ஆனால் இந்த சமுதாயச் சலுகைகளைத் தமிழர்கள் மிகச்சரியாகப் பயன்படுத்தவேண்டும், வெளிமாநிலத் தமிழர்கள் அனைவரையும் தத்தம் சங்கத்தினரை உற்சாகப்படுத்தி ஊக்கமூட்டினாலே போதும், நம் தாய்மொழி தரணியெங்கும் ஒலிக்கும்..

அதே சமயத்தில் இன்னொரு முக்கியமான விஷயத்தை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். தமிழன் எங்கே இருந்தாலும், அவன் உழைப்பு மற்றவர்க்குக் கிடைத்தாலும், அவனால் மற்றவர்கள் வாழ்ந்தாலும் அவன் நினைவும் உணர்வும் மட்டும் இந்த தமிழ் மண்ணின் மீதுதான். அவனுக்குள் இருக்கும் அந்தத் தமிழுணர்வை சங்கங்கள் தூண்டுகோலாக தாம் இருந்துகொண்டு தூண்டிக் கொண்டே இருக்கிறது. இந்தத் தமிழ்ச்சங்கங்களுக்குத் தாயக தமிழகத்தில் அரசு தகுந்த அங்கீகாரம் அளிக்கவேண்டும். தாயகத் தமிழகத்தில் தமிழ்ச்சங்க ஆணையம் ஒன்று நிறுவப்படவேண்டும். இந்த ஆணையத்தின் கீழ் ஆங்காங்கே பதிவுசெய்யப்பட்ட தமிழ்ச்சங்கங்கள் அங்கத்தினராகி தமிழக அரசின் உதவியோடு செயல்படும்போது, அதுவும் தமிழுக்காக செயல்படும்போது நம் தமிழன்னை நம்மை எப்போதும் வாழ்த்திக் கொண்டே இருப்பாள்.

வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர்,
வாழிய பாரத மணித் திருநாடு!!

• நன்றிகள்
• கர்நாடக தமிழ்ச்சங்கக் கூட்டமைப்பு
• விஜயவாடா திருவள்ளுவர் தமிழ்பாடசாலை
• தில்லித் தமிழ்ச்சங்கம்
• மும்பைத் தமிழமைப்புகள்
• புனா தமிழ்ச்சங்கம்
• கொல்கத்தா தமிழமைப்புகள்
• பங்களூரு தமிழ்ச்சங்கம்
• கேரளத் தமிழமைப்புகள்
• மற்றும் பல மாநிலங்களில் உள்ள தமிழன்பர்கள்
• விசாகப்பட்டினம் தமிழ்க் கலை மன்றம்