Friday, December 21, 2012

ஸ்கந்தா, குமரா, கார்த்திகேயா, சுப்பிரமணியா - 4

முருகனும் ஆந்திரமும் - 4
                    பிக்கவோலு சுப்பிரமணியர்

”ஏட்டின் விதிப்படியே கொ(ண்)டு  மா புர வீட்டில் அடைத்து
இசைவே கசை மூணு அதில் ஏற்றி அடித்திடவே 
கடல் ஓடம் அது என ஏகி ஏற்கும் எனப் பொருள் ஆசை 
பெ(ண்)ணாசை கொளாது என திரியா பரியா 
தவம் ஏற்றி இருப்பிடமே அறியாமலும் உடல் பேணி
பூட்டு சரப்பளியே மதனாம் என 
ஆட்டி அசைத்தி இயலே திரி நாளையில்
பூத்த மலக் குகையோ பொதி சோறோ என 
கழு காகம் போற்றி நமக்கு இரையாம் எனவே கொள 
நாட்டில் ஒடுக்கு எனவே விழு போதினில் 
பூட்டு பணி பத மா மயிலா அருள் புரிவாயே” - (திருப்புகழ்)

(சுருக்கமான விளக்கம்) விதிப்படியே பிறந்து சுகதுக்க வாழ்க்கைப் படகில் பயணித்து, நல்லது கெட்டது தெரியாமல், அழகிய மன்மதனாக பாவித்து பெண்மீதும் பொன் மீதும் ஆசை வைத்து கஷ்டப்பட்டாலும், நல்ல நெறிக்கான தவத்தை செய்யாமல் கடைசிகாலம் வரை இஷ்டம் போல இந்த ஈனவாழ்க்கை வாழ்ந்து உயிர் பிரிய உடல் அழுகும் காலத்திலே எனைக் கரையேற்ற காப்பாற்ற வருவாயே.. கால்களில் பாம்பை அழுத்தமாகக் கட்டியுள்ள அழகிய மயிலின் மீது அமர்வோனே, நீ அருள் புரிவாயாக. பனி (phani) என்றால் நாகம் எனப் பொருள்.

அருணகிரியாரின் இந்த அழகிய திருப்புகழ் பாடலை ஒருமுறை என் சித்தியும், திருப்புகழின் பெருமையைப் பரப்பி வருபவருமான திருமதி ராதா முத்துசாமி சென்னையை அடுத்த பள்ளிக்கரணை எனும் ஊரில் ஒரு முருகபக்தர் வீட்டில் பாடிக்கொண்டிருக்கும்போது நிஜமாகவே ஒரு நாகப்பாம்பு வீட்டின் தாழ்வாரம் வரை வந்திருந்து நின்று தலையெடுத்து பாடல் முடிந்தபின்னர் மெதுவாக சென்றுவிட்டதையும் இன்றைக்கும் சொல்லுவார். சாட்சாத் முருகன் அவனே பாம்பு வடிவில் வந்து இந்தப் பாடலைக் கேட்டுவிட்டுப் போனான் என்பார்.

இந்துமதத் தெய்வங்கள் அனைவருமே நாகத்தோடு சம்பந்தப்பட்டவர்தாம். சிவன் உடலெங்கும் நாகாபரணமாக அணிந்தவர். அவர் பெயரே நாகபூஷணன. திருமாலுக்கு ஆதிசேஷன் படுத்தால் படுக்கை, உட்கார்ந்தால் இருக்கை, நின்றால் குடை. விநாயகரின் புரிநூலே பாம்புதான். அன்னை பார்வதியின் கையில் கங்கணமாக நாகம் இருக்கும். மயிலேறும் வெற்றி வேலனுக்கோ காலடியில் பாம்பு என்றும் உண்டு.

நாகப்பாம்பை தமிழ்நாட்டில் அம்மன் உருவாக வணங்குவோர் அதிகம். தமிழகத்தில் எல்லா அம்மன் கோயில்களிலும் நாகப்புத்து நிச்சயமாக இருக்கும். ஆனால் முருகன் கோயில்களில் இந்த வழிபாடு கிடையாது. நாகம்தான் முருகன் என்பதில் இன்றைக்கு தமிழர்களுக்கு இருக்கும் நம்பிக்கையை விட ஆந்திரர்களுக்கு நம்பிக்கை  அதிகமாக இருப்பதைப் பரவலாகவே பார்த்துள்ளேன். நாகதோஷம் உள்ளவர்கள் ஆறு வாரம் முருகனுக்கு செவ்வாயன்று அபிஷேகம் செய்து வந்தால் அந்த தோஷம் நிவாரணம் ஆகும் என்பது ஆந்திரா-கர்நாடகா பிராந்தியத்தில் இப்போதும் பிரபலம். நாகபஞ்சமி கர்நாடகத்தில் விசேஷம் என்றால் ஆந்திரத்தில் நாகசதுர்த்தி மிகவும் விசேஷம். தீபாவளி அமாவாசையை அடுத்து நான்கு நாட்களில் வரும் ‘நாகுலு சவிதி’ இங்குள்ளோருக்கு பண்டிகை தினம். அரசாங்க விடுமுறை தினம் கூட. இன்றும் கூட ஆந்திரத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாயன்று முருகனுக்கு (எங்கெல்லாம் முருகன் சன்னிதி உள்ளதோ அங்கெல்லாம்) காலை வேளையிலிருந்து மதியம் வரை அபிஷேகம் நடந்து கொண்டிருப்பதை சகஜமாகக் காணலாம். வாரத்தின் மற்ற நாட்களில் முருகனுக்கு இந்த விசேஷ பூஜையை இவர்கள் செய்வதில்லை என்றும் சொல்லலாம். கிருத்திகை நட்சத்திரத்தில் அத்தனை பரபரப்பு காட்டுவதில்லை. ஆனால் சஷ்டி திதி தோறும் முருகனுக்கு சிறப்பு வழிபாடு உண்டு.
                   மோபிதேவி சுப்பிரமணியர் ஆலயம்

கிருஷ்ணா மாவட்டத்தில் அமைந்துள்ள முருகத்தலமான மோபிதேவி கோயில் வழிபாடு எப்போது ஸ்தாபிதம் ஆனது என்பதற்கான ஆதி வரலாறு இல்லை. இங்கே அர்ச்சகராக இருக்கும் பனிபூஷணம் (இவரும் நாகத்தின் பெயர் கொண்டவர்தான் - Phanibhushanam) தம் முன்னோர்கள் காலம் காலமாக வழிபட்டு வருவதாகவும் தற்போதுள்ள கோபுரமும் பிரகாரங்களும் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகக் கூறினார். ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளாக இங்கே சுப்பிரமணியர் நாகவடிவில் வழிபடப்படுவதாகவும் இங்கே தவம் செய்த அகஸ்தியமுனியால் இந்த நாகசுப்பிரமணிய வழிபாடு இந்த இடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது என்று தல வரலாறு கூட சொல்கிறது (தெலுங்கு மொழியில் ஒரு புத்தகமாக எழுதி வெளிட்டு இருக்கிறார்கள்). கோயிலின் உட்புறத்தில் ஏராளமான புற்றுகள் இன்றும் உள்ளன. புற்றுகளை தாண்டி சென்றால் பெரிய புற்று இருக்கிறது. புற்றுக்கு லிங்காதரணம் செய்துள்ளனர். இருபக்கங்களிலும் வள்ளிக்கும் தெய்வானைக்கும் சன்னிதிகள் உண்டு. இங்கு எல்லாமே முருகன்தான்.. எங்கும் முருகன். நான் சென்ற தினத்தில் ஏகப்பட்ட மக்கள் கூட்டம். திருவிழா போல இந்த முருகன் கோயிலைக் கண்டதில் அடியேனுக்கும் ஏகப்பட்ட மகிழ்ச்சி.. தமிழக ஆலயங்களில் முருகனை ஆண்டியாகப் பார்த்துள்ளோம், தனி ஒருவனாக கையில் வேலேந்திப் பார்த்துள்ளோம், வள்ளிக் கணவனாக சிரித்தமுகத்தோடு பார்த்துள்ளோம், வள்ளி தேவானையோடு அருள்புரிவதையும் பார்த்துள்ளோம், சிவனுக்கே குருவாக சிவகுருநாதனாகப் பார்த்துள்ளோம், ஆறுமுகத்தையும் பார்த்துள்ளோம், மயில் வாகனனாக பார்த்துள்ளோம்.. ஆனால் மோபிதேவியில் புற்று வடிவத்தில் உள்ளே இருந்துகொண்டு லிங்காரூபனாக அருவுருவாகக் காட்சியளிக்கும் சுப்பிரமணியத் தேவனை நினைத்துப் பார்க்கையில் அருணகிரியாரின் கந்தர் அனுபூதி பாடல் நினைவுக்கு வந்தது. ‘முருகன் தனி வேல் முனிநம் குருவென்என்று தொடங்கும் அந்தப் பாடலில் முருகன் அவன் ரூபம் எதுவாக இருக்கும் என்ற ஆராய்ச்சியை நமக்குள் ஏற்படுத்தி விட்டு ஒரு அசாதாரண அனுபூதியையும் மனதுக்குள் உண்டாக்கிவிடுவார் அருணகிரிநாதர்.
                              குக்கே சுப்பிரமணியர் கோயில்

தென்னிந்தியாவின் கிருஷ்ணாநதி கீழைக்கடலில் கலக்கும் பகுதியில், அதாவது இன்றைய குண்டூர், பிரகாசம், கர்நூல் மாவட்டப் பகுதியிலிருந்து மேற்கே அரபிக்கடலோரம் இருக்கும் மங்களூர், உடுப்பி, கொங்கணி தேசம் வரை குறுக்காக இருப்பது போல விட்டு விட்டு மலைவரிசை இருப்பதை சரித்திர ஆய்வாளர்களும் பூஇயல் ஆய்வாளர்களும் நன்றாகவே அறிவார்கள். இந்த குறுக்கு வரிசையின் நடுவே தட்சிணபீடபூமியும் இணையும்.. நல்லகொண்டா என்று தெலுங்கில் அழைக்கப்படும் இந்த ஆந்திரமலைப்பகுதிகளில் இருந்து ஆரம்பித்துப் பார்த்தோமேயானால், ஸ்ரீசைலம், அஹோபிலம், (இன்னமும் இவைகளில் புகழ்பெற்ற திருமலையையும் சேர்த்துக்கொள்ளலாம்),சித்திரதுர்கா, சந்திரகிரி, இந்திரகிரி, சிக்மகளூர், பத்ராவதி போன்ற மலைவளங்கள் மேற்கே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைத்தோடரில் விட்டு விட்டு இணைவதையும் பார்க்கலாம். கிருஷ்ணை நதி மஹாராஷ்டிர மாநிலத்தில் ஆரம்பித்து கர்நாடகத்தைக் கடந்து ஆந்திராவில்தான் தான் அள்ளிக்கொண்டு வந்த வளங்களையெல்லாம் வழங்குகிறது. இந்த கிருஷ்ணா நதி ஆந்திர-கர்நாடக எல்லை வரை ஏறத்தாழ மலைகளையே ஒரு பக்க எல்லையாக வைத்துக் கொண்டுள்ளது என்றால் அது மிகையல்ல. ஏழாம் நூற்றாண்டில் சாளுக்கியர்கள் ஆட்சியின் போதெல்லாம் இந்தப் பகுதிகள் அனைத்தும் ஒரே அரசின் கீழ்தான் இருந்தன. பின்னால் மேலை, கீழை என அந்த ராஜவம்சம் பிரிந்தாலும் மக்களிடையே உள்ள ஒருங்கிணைப்பு நன்றாகத்தான் இருந்திருக்கவேண்டும் என்று சொல்லவேண்டும்.
               ( நாகவடிவில் சுப்பிரமணியர், பஞ்சதாரா)

இங்கு இன்னோர் விசித்திர மக்கள் வழக்கமும் உண்டு. இன்றும் கூட ஸ்ரீசைலத்தில் உள்ள மல்லிகார்ஜுன தலத்துக்கு கர்நாடகத்தில் உள்ள மலைப்பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருவது பல நூறாண்டுகளாக நிகழ்ந்து வருவது.. மஹாசிவராத்திரியன்று இவர்கள் கூட்டம் மிக அதிகமாக இருக்கும். இந்தப் பழக்க வழக்கங்களின் நீட்சியாகத்தான் முருக வழிபாடும் அமைந்திருக்கும் என்று எண்ணவும் தோண்டுகிறது. குக்கே எனும் மேற்குக் கரையோர சுப்பிரமணியத் தலம் மிகவும் விசேஷமாக பெயர் பெற்றிருக்கும் ஊராகும். இங்குள்ள சுப்பிரமணியர் பாம்பு வடிவில் தரிசனம் தருகிறார். இங்கு மட்டுமல்ல. புகழ்பெற்ற உடுப்பி கிருஷ்ணன் கோயிலிலும் கூட முருகனுக்கு ஒரு சன்னிதி உண்டு.. அங்கேயும் முருகன் நாகரூபத்தில்தான் கோயில் கொண்டுள்ளார். இன்னும் ஆந்திரப்பகுதியிலேயே சற்று வடக்காக சென்றால் சில பழைய தலங்களிலே பாறையிலே வரையப்பட்ட நாக சிற்பங்களை இன்னமும் சுப்பிரமணியமாகவே வணங்குகிறார்கள்.
                   (ஹைதராபாதில் புதிதாக எழுந்த கோயிலில்)

வாசுகியான நாகம் மேற்கு மலைத் தொடரின் பகுதியிலே குக்கே எனும் ஊரிலே ஒரு குகையிலே பல்லாண்டுகள் தவமிருந்து சுப்பிரமணியத்திடம் வேண்டியதாம். முருகன் வாசுகியின் தவத்துக்கு மதிப்பளித்து நாகரூபம் எடுத்ததாகச் சொல்கிறார்கள். கருடபக்‌ஷிக்கு பயந்து இங்கு ஒதுங்கியபோது முருகன் வாசுகியைக் காத்து ரட்சித்ததாகவும், முருகனை என்றும் தன்னுடனே இருக்கக் கோரியதாகவும் தன் பக்தனின் கோரிக்கையை ஏற்று வாசுகியின் ரூபத்தில் இருப்பதாகவும் இன்னொரு புராணக்கதை உண்டு. குக்கே கோயிலில் கருடன் தூண் உண்டு. வாசுகியின் சுடுமூச்சைக் கட்டுப்படுத்தவே அந்தத் தூண் அங்கு உள்ளதாகச் சொல்வர். இங்கு நாகபஞ்சமியன்று கூட்டம் அலைமோதும்.
                                 (பீமாவரம் சுப்பிரமணியர் )

ஆனால் ஆந்திரமக்கள் முருகனின் மேல் தணியாத ஆசைகொண்டு அவனை ஆராதிப்பவர்கள். ஆதிகாலத்தில் நாகரூபமாக வழிபட்டமுறையை அப்படியே இன்னமும் பின்பற்றினாலும் தமிழர் முருகனை வழிபடும் முறையையும் பின்னாளில் ஏற்றுக்கொண்டவர்கள். ஒன்பதாம் நூற்றாண்டில் முதன் முதலாக ஆகமவிதிக்குட்பட்டு இங்கு சிலை வடிவ வழிபாடு மூலம் முருகன் வணங்கப்பட்டதாக இங்குள்ள சில கோயில் தல வரலாறுகள் தெரிவிக்கின்றன. கோதாவரி நதியின் வடகரைப் பிரதேசமான பிக்கவோலு எனும் தலத்தில் மிகப் பழைய முருகர் கோயில் கட்டப்பட்டது. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் இந்தப் பகுதிகளில் ஆகமவிதிகளுக்குட்பட்டு சிவன் கோயில்கள் கட்டப்பட்டன. அவற்றில் சாமல்கோட்டா (குமாரராமம்), திராக்‌ஷாராமம், பீமாராமம் சிவன் கோயில்களில் பிரத்யேகமாக முருகன் சன்னிதி கட்டப்பட்டு முருகன் சிலாரூபத்தில் ஆராதிக்கப்படுகிறான்.
                               ( குமாரராமம் - சாமல்கோட் முருகன்.)

இன்னும் சற்றும் வடக்கே சென்றால் விசாகப்பட்டினமும் ஸ்ரீகாகுளமும் வருகிறது. விசாகப்பட்டினத்தில் விசாகேசுவரன் என்ற பெயரில் முருகன் கோயில் இருந்ததற்கான செவி வழி வரலாறும், காலப்போக்கில் இங்கு ஏற்பட்ட கடல் சீற்றத்தில் அழிந்து போனதாகவும், கடற்கரையில் இந்த விசாகேஸ்வரன் கோயில் இருந்த காரணத்தினால் இந்த இடத்துக்கு விசாகப்பட்டினம் என்றும் பெயர் வந்ததாக இங்குள்ள ஆந்திரப் பல்கலைக்கழக சரித்திர ஆய்வுக் கட்டுரைகள், குறிப்பாக பேராசிரியர் திரு கே. சுந்தரம் போன்ற சான்றோர்கள் எழுதியது சொல்கின்றன. கலிங்கத்துப் பரணியில் பாடப்பட்ட நாயகன் கருணாகரத் தொண்டைமான் இங்கு தங்கியிருப்பதற்கான ஆதாரங்கள் சோழர் கால தமிழ் கல்வெட்டொன்று தெரிவிக்கிறது. கலிங்கத்தை வென்றதனால், இந்த நகருக்கு தங்கள் அரசன் நினைவாக குலோத்துங்க சோழபட்டினம் என்று பெயர் மாற்றியதாகவும் தகவல்கள் உள்ளன. விசாகேஸ்வரர் லிங்க வடிவில் அருவுருவாக இருந்தார் என்று சொல்வோரும் உண்டு.

ஸ்ரீகாகுளம் ஜில்லாவில் ஓடும் வம்சதாரா நதியின் வடகரையில் உள்ள சிவத்தலம் முகலிங்கேசுவரர் (ஸ்ரீமுகலிங்கம்) கோயில். இக்கோயில் ஒன்பதாம் நூற்றாண்டில் ஒரியக் கலைவடிவத்தில் கட்டப்பட்டதாகும். பதினோராம் நூற்றாண்டில் நடந்த சோழ கலிங்க முதலாம் யுத்தத்தில் (கிபி.1090) கலிங்கர்களை வீழ்த்தியபின் சோழ இளவரசனான விக்கிரமன் இங்கு முருகன் சிலையை எடுப்பித்திருப்பதை திராட்சாராமக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் சொல்கின்றன. இந்த சன்னிதியும் முருகனும் (கையில் கழியுடன் இருப்பான்) இன்றும் கூட பொலிவோடு இருப்பதை இங்கு காணலாம்.

பிற்காலத்தில் அதாவது கடந்த நூறு ஆண்டுகளில் எத்தனையோ இடங்களில் ஆந்திராவில் பல புதிய முருகன் கோயில்கள் எழுப்பப்பட்டுள்ளன. பெரிய கோயில்கள் எனச் சொல்கையில் விஜயவாடாவில் இந்திரகிலாத்திரி மலைமேலே முருகன் வள்ளி தேவசேனா சமேதருடன் கோயில் கொண்டுள்ளான். ஆந்திரத் தலைநகரமான ஹைதராபாதில் ஸ்கந்தகிரியில் முருகனுக்கு சிறப்பான முறையில் கோயில் எழுப்பப்பட்டு வணங்கப்படுகிறான்.

மிகப்பழங்காலந்தொட்டு முழுமுதற்கடவுளாகத் தமிழர்களால் போற்றி வணங்கப்பெற்று வரும் திருமுருகக் கடவுள் ஆந்திரர்களால் ஸ்கந்தனாகவும், குமாரசுவாமியாகவும், கார்த்திகேயனாகவும், சுப்பிரமணியனாகவும் அதே பழங்காலந்தொட்டு வணங்கப்பட்டு வருகிறான். இங்குள்ள பழங்கால கோயில்களில் முருகனைத் தரிசனம் செய்யும்போதெல்லாம் இந்த விவரங்களையெல்லாம் எழுதி எல்லோருக்கும் தெரியப்படுத்தவேண்டும் என்றும் ஒவ்வொரு பொழுதும் தோன்றும்தான்.. ஆனால் அதற்கும் அவனருள் வேண்டுமே..

முருகனைப் பற்றி சொல்ல சொல்ல நா இனிக்கும்தான்.எழுத எழுத எழுத்தும் கூடும். அதனால் எழுதிக்கொண்டே போகலாம். முருகனின் ஆந்திர விலாஸத்தைப் பற்றி ஏற்கனவே இந்த வலைப்பூவில் ஒரு பதிவு செய்திருக்கிறேன். இருந்தாலும் இப்போது பதிவு செய்துள்ள இந்தக் கட்டுரையால் என் மனம் நிறைகிறது. அப்படிப்பட்ட மனநிறைவைத் தந்த எந்தை முருகனை எந்நாளும் என் மனத்தில் வந்து இப்படியே ஆக்கிரமிக்கவேண்டும் என்ற நினைப்போடு, பொறுமையாக படித்த வாசக அன்பர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றி! அதே போல அவ்வப்போது பல விஷயங்கள் விஷயதானம் செய்த பெரியவர்களுக்கும், நண்பர்களுக்கும் என் நன்றி உரித்தாகுக!!

எந்தாயுமெனக் கருள்தந்தையுநீ
சிந்தா குலமா னவைதீர்த் தெனையாள்
கந்தா கதிர்வே லவனே யுமையாள்
மைந்தா குமரா மறைநா யகனே.
(அருணகிரியாரின் ‘கந்தர் அனுபூதியிலிருந்து)

(படங்கள்: பிக்காவோலு, பீமாவரம் முருகர் - நன்றி, நண்பர் திரு கே.எஸ். சங்கரநாராயணன்.)

Tuesday, December 18, 2012

ஸ்கந்த, குமாரா, கார்த்திகேயா, சுப்பிரமணியா!! - 3


முருகனும் ஆந்திரமும் - 3





சிவனும் சகதியுமாக இணைந்ததே சிவஸ்வரூபம் என்பார்கள். சிவஸ்பரூபத்தின் நெற்றிக்கண்ணிலிருந்து வெளிப்பட்ட ஐந்து பொறிகளும், சிவஸ்வரூபமே ஆறாவது பொறியுமாக மாற, அந்த ஆறு பொறிகளையும் வாயு எடுத்துக்கொண்டு வந்தாலும் அந்த அக்கினிக்குஞ்சுகளின் அதிதீவிரத்தனமையைத் தணிக்க ஆகாய கங்கையே பெற்றுக்கொண்டு ஆறு கார்த்திகைப் பெண்களிடம் விடுத்ததாகவும்,  ஆறு பொறிகள் ஆறு முகங்களாக கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்து அன்னை பார்வதியின் அருளால் ஒரே ரூபமாக மாறி ஸ்கந்தன் எனும் பெயர் பெறுகிறான்.

ஆனந்தோ பிரஹ்மேதி வஜநாத் தைத்ரிய உபநிஷத்தில் (III,6) சொல்லும்போது அதன் பொருளாக சிவா என்பது சத்ஆகவும், உமையம்மை ‘சித்ஆகவும், ஸ்கந்தன் ‘ஆனந்தமாகவும் முழுமைத்தன்மை உடையவனாகவும் குறிப்பிடப்படுகிறான். அவனுக்கென உருவான சரவணபவ எனும் ஆறெழுத்து மந்திரத்தில் ஐந்தெழுத்து சிவனாகவும் ஆறாம் எழுத்து சக்தியாகவும் கருதப்படுகிறது. பரப்பிரம்ம ஸ்வரூபத்தை யாராலும் வர்ணிக்க இயலாது. யாராலும் அறிய முடியாது. யாராலும் அறிவிக்கவும் முடியாது. இந்து தர்மத்தின் பவித்ரமான சொத்தான வேதங்களாலும் கூட இந்த பரப்பிரும்மமானது இப்படித்தான் இருக்கும் என்று கற்பனை செய்யக்கூட முடியாது. இப்படி யாராலும் கற்பனையால் கூட அடையமுடியாதவன் அவனே விரும்பினால் மட்டுமே அவனால் ஏனையவருக்குக் காட்சியருள முடியும். ஏறத்தாழ முருகன் அவதாரத்தை இப்படி எடுத்துக்கொள்ளலாமோ என்னவோ..

அதனால்தானோ என்னவோ அவனை வழிபடுபவர்களும், அவன் அருளைப் பெறுபவர்களும், அவனைக் கண்ணாரக் கண்டு துதிப்பவர்களும் கூட ஒவ்வொருவிதமாக அவனை வர்ணிக்கிறார்கள். அவர்கள் வழிபடும் உருவமும் வெவேறு விதமாக மாறுபடுகின்றது. கந்தனின் தோன்றுதல் என்பது தாரகாசுரனை சம்ஹாரம் செய்வதற்காக என்று காரண காரியம் செய்தாலும் அவன் இந்த உலகத்தவரின் நன்மைக்காகத்தான் வந்தான் என்பதை எத்தனையோ காவியங்கள் வரலாறுகள், ரிஷிகள், யோகிகள், சான்றோர்கள் நமக்குச் சொல்லிச் சென்றார்கள்..

முருகன் வழிபாடு என்பது அவன் எப்படியெல்லாம் வழிபடவேண்டும் என நினைக்கிறானோ அப்படியெல்லாம் அந்தத்த பிராந்தியங்களில் நடைபெறுகிறது என்றே சொல்லவேண்டும். அவன் தீப்பொறிகளாகத் தோன்றியவன், செக்கச் செவேலெனும் செம்மை நிறத்து ஜோதியாக பழங்குடிகள் (சேயோன்) வணங்கினார்கள். ஜோதிஸ்வரூபமானவன் தெய்வம் என்பது எல்லா இந்துமதப் பிரிவுகளும் ஒப்புக்கொண்டவைதான். 'திருமுறுகாற்றுப்படை'  பாடலில் 'முருகனை' ஜொலித்தபடி இருக்கும் 'சூரியனுடன்' ஒப்பிட்டு, கடலில் இருந்து வெளிச் சிதறியபடிக் காட்சி தரும் 'சூரிய' ஒளி போல 'முருகனின்' உடலும் ஜொலித்தது என்று கந்தனைக் குறித்துப் பாடப்படுகின்றது.

கந்தன் இயற்கையோடு இயைந்தவன். கங்கைதேவியிலிருந்து கார்த்திகைப் பெண்கள் வரை அன்னை சக்தியோடு முருகனின் தாய் ஸ்தானத்துக்கு போட்டி போடுவார்கள். அதுவும் இயற்கைதான். தமிழ்நாட்டின் காடுகளில் அவ்வை பிராட்டியின் பேரனாகவும் பரிமளித்தவன் அல்லவா அவன். இயற்கை என்று வர்ணிக்கப்பட்டதால் இயற்கையின் அத்தனை ஸ்வரூபத்திலும் நீககமற நிறைந்தவன். பிரபஞ்சத்திலிருக்கும் அத்தனை வகைப் பிறவிகளுக்கும் சொந்தமானவன். குறிஞ்சித்தெய்வம் என்பார்கள் சிலர். மலைவாழ் மக்களின் செலவக்குமரன் என்பார்கள். குறிஞ்சி என்றல்ல தமிழில் ஐந்திணை என்று சொல்லப்படும் ஐந்து வகை நிலங்களிலும் அவன் பேசப்படுவதை சங்க இலக்கியங்கள் வர்ணிக்கின்றன. மானிடப் பிறவி என்றில்லை. எந்த வகைப் பிறவிக்கும் அவன் பாந்தமானவன், இதை ஆந்திர அரசர்கள் உணர்ந்தவர்களாதலால் பழைய கால நாணயத்தில் முருகனை ஆறுமுகமாகவும், நாகம், மான், மரம் போன்ற பிறவிகளையும் சேர்த்து கல்லில் செதுக்கி வழ்பட்டார்கள்.

(Scholars have discussed about the “Karttikeya type” of coins in the Journal of the Numismatics Society of India and other works. The depiction of Vishaka, Kumara and Mahasena prominently on the Yaudheya, Kushana, Kumara and Kuninda coins during the second centuries of before current / common era and after is very interesting in numismatic studies. (திரு கே.வி.,ராமக்ரிஷ்ணாராவ் அவர்களின் கட்டுரையிலிருந்து)
                                                           
இங்கு ஏற்கனவே கூறியதைப் போல மஹாசேனனுக்குக் கோயில் எழுப்பியது போலவே இக்குவாகு அரசர்கள் தங்கள் நாணயங்களைக் கூட ஆறுமுக உருவத்தோடு பொறித்து வெளியிட்டிருக்கிறார்கள். இன்றைய நாகார்ஜுன கொண்டா பகுதியில் நாகார்ஜுன சாகர் எனும் மிகப் பெரிய அணை கட்டப்பட்டுள்ளது. (அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அடிக்கல் நாட்டியது) 1926 ஆம் ஆண்டில்தான் அங்கே பல இடங்கள் தோண்டப்பட்டன. பௌத்தர்களின் புதையுண்ட புராதன சின்னங்கள் பல கிடைத்தன. 1953ஆம் ஆண்டில் தோண்டப்பட்டபோது மேலும் பல குறிப்புகள் கிடைத்தன. அப்போதுதான் முருகப்பெருமானான மஹாசேனனின் ஆலயக் குறிப்பும் சரித்திர ஆய்வாளர்களுக்கு விரிவாகக் கிடைத்தது பழங்கால நாணய சேகரிப்புகளிலிருந்து கிடைக்கப்பெற்ற சில காசுகளில் கார்த்திகேயனின் ஆறுமுக உருவமும் அருகே மான், வேல் போன்றவை தெரியவந்தது. நாணயத்தின் பின்பக்கமும் தேவசேனா தெய்வத்துக்கும் ஆறுமுகம் கொடுத்ததாகவும் பண்டைய காலத்தர்கள் ஷண்முகி அல்லது சஷ்டி என அழைத்ததாகவும் தன் கட்டுரையில் கே.வி. ராமகிருஷ்ணராவ் குறிப்பிடுகிறார். தேவசேனாவையும் கார்த்திகேயனையும் தெய்வமாகப் போற்றி வழிபடும் முறையையும் தோற்றுவித்தார்கள்.

இன்றைக்குக் காண்பது போல ஆகம சாத்திரப்படி கோவில்கள் கட்டுவது என்பது அந்தக் கால கட்டத்தில் பாரதம் எங்குமே அரிதாக இருந்தது. தமிழகத்தில் கூட ஆகமவிதிகளுக்குட்பட்டு கோயில்கள் சங்க காலத்துக்குப் பின்னர்தான் கட்டினார்கள் என்று சரித்திர ஆய்வாளர்கள் ஒப்புக் கொள்வர். ஆனால் திரு உருவச் சிலைகளை எடுப்பித்து வணங்குவது என்பது கி.மு. காலத்திலேயே இருந்தது. ஸ்தூபமும் உருவச் சிலைகளையும் எடுப்பிப்பதை புத்தமதத்தைப் பின்பற்றியோர் ஏராளமாக செய்துள்ளார்கள் என்பதை நாம் அறிவோம். அதே போல நம் கலியுகத் தெய்வமான திருவேங்கடத்தான் வானமே கூரையாக சூரிய சந்திரர்கள் இருவரும் இரண்டு பக்கங்களில் ஒளிவீச, வேங்கட மலை மீது நெடியோனாக நின்றதை இளங்கோ அடிகள் குறிப்பிட்டிருப்பதைப் பார்த்தால் திருவேங்க்டத்தவனுக்கு கோயில் என்பது பிற்காலத்தில்தான் எழுப்பப்பட்டிருக்கவேண்டும் என்று தெரிய வரும். அது போல ஸ்ரீசைலம் அமராவதி போன்ற இடங்களிலும் கோயில் என்பது ஒரு சிறிய வளாகமாகவோ, அல்லது சிலைகளுக்கான இருப்பிடமாகவோத்தான் இருந்திருக்கவேண்டும். இக்கோயில்கள் யாவும் இவை தோன்றிய சமயத்தில் ஆகம சாத்திரங்களுக்கு உட்படவில்லை என்பதைக் கூட நாம் இங்கே உணரவேண்டும். (இன்றைய ஸ்ரீசைலம் கோயில் பல அரசர்களால் பல்வேறு கால கட்டத்தில் கட்டப்பட்டது. மராத்திய சிவாஜி கூட அங்கே மேலைக் கோபுரம் கட்டியுள்ளார்).

கிருஷ்ணை அல்ல்து கோதாவரி நதி தீரத்து மக்கள் நிலவரத்தைப் பொதுவாகப் பார்க்கும்போது மலைவாழ்மக்களே அதிகம் இருக்கிறார்கள். மலைவாழ்மக்கள் எனும்போது அவர்கள் வழிபாடுமுறையில் தொன்மத்தை அப்படியே பாதுகாத்து வருவார்கள். இன்றளவும் தொன்மத்தைப் பாதுகாத்து வரும் ஆதி குடியினர்கள் கூட இவர்கள்தான். இவர்களில் பல பிரிவினர் இருந்தாலும் பொதுவாகவே தங்கள் பூர்வீகர் நாகர் என்று சொல்லிக்கொள்வர். இவர்களின் தெய்வமும் நாகம்தான் (சர்ப்பம்). முதல் நூற்றாண்டுகளில் இந்த மலைவாழ் வீரர்களின் உதவியால் இக்குவாகு வம்சத்தினர் ஆட்சிக்கு வந்த போது வேதமதத்தினருக்கு மிகப் பாதுகாப்பாகவும் பிராம்மணர்களுக்கு எல்லா வகைகளிலும் உதவி செய்து வாழ்ந்ததையும் திரு பி.எஸ்.எல்.ஹனுமந்தராவ் எழுதி இருக்கிறார் (The Age of Satavahanas’ by B.S.L. Hanumantharao). இந்த நாகவம்சத்தின் பிரிவினர் இந்தப் பகுதியில் ‘போயர்கள்’ (boya’s) எனத் தங்களைக் கூறிக்கொண்டனர். ஆனால் இவர்கள் எந்தக் காரணத்தினாலும் நாக வழிபாட்டைக் கைவிடவில்லை. இவர்களுக்கு முருகன் நாக வடிவத்தில் காணப்பட்டதாகவும், ஸுப்ரமணியம் என்ற சொல்லின் பொருளே இவர்கள் நாகப்பாம்பு என எடுத்துக் கொண்டதாகவும் திரு ஹனுமந்தராவ் எழுதி இருக்கிறார். அதே சமயத்தில் எந்தத் தெய்வத்தையும் நாகரூபத்தில் ஆராதனை செய்யும் பழக்கத்தை ஆதியிலே கொண்டிருந்ததால் இவர்கள் சுப்பிரமணிய ஆராதனை என வரும்போதும் நாக (சர்ப்ப) வடிவில் பூஜித்தார்கள் என்றே கொள்ளவேண்டும் என்ற பொதுக் கருத்தையும் நாம் மதிக்க வேண்டும். சுப்ரமணியம் என்றால் நல்ல பிரும்மம் என்பது ஏற்கனவே எழுதிய பிறகு அதே சொல் நாகத்துக்கு எந்த வடிவத்தில் பொருந்தும் என்பதை விவரிக்க இயலாது எனினும் இந்த மலைப் பிராந்தியங்களுள் சுப்பிரமணியம் எனும் சொல்லுக்கு நாகம் என்றே பெயர் நாகம் என்றே பொருள் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

ஆதி சங்கரர்  திருச்செந்தூரில் புஜங்கமாலை தோத்திரத்தில் முருகனைப் பாடி சருமவியாதி நீங்கப்பெற்றதாகக் கூறுவர். பாடல்வகைகளில் புஜங்கவகைப் பாடல் என்பது வடமொழியில்  ஒரு கவிதை அளவைக் குறிக்கும் (Bhujanga Meter) என்பர். புஜங்கம் என்றால் சர்ப்பம் அல்லது பாம்பு என்று பொருள். மருத்துவத்துக்காக சுப்பிரமணிய புஜங்கம்’ என்ற தலைப்பில் முருகனைப் பாடும் முப்பத்து மூன்று தோத்திரப் பாடல்களில் 27 ஆம் பாடல் ஒன்று முக்கிய செய்தியைக் குறிக்கும்.
                                                                           
முனீனா முதாஹோ ந்ருணாம் பக்தி பாஜா
மபீஷ்டப்ரதா ஸந்தி ஸர்வத்ர தேவா
ந்ருணாமந்த்ய ஜாநாமபி ஸ்வார்த்ததானே
குஹாத்தைவமன்யம் நஜானே நஜானே (27)

இதன் சுருக்கமான பொருள் என்னவென்றால் பக்திமார்க்கத்தில் செல்லும் பக்தர்களுக்கு உதவ முனிவர்களும் தேவர்களும் இன்னும் ஏனைய தெய்வங்களும் இருக்கிறார்கள். ஆனால் எப்படிப்பட்டவராக இருந்தாலும், குகனே! ஒரு முறை மனதில் நினைத்தாலே அவர் எத்தனை சாதாரணகுலமாக இருந்தாலும் ஓடி வந்து காப்பாற்றும் உன்னைப் போல ஒரு தெய்வமுண்டோ.. இல்லவே இல்லை.

இங்கே முக்கியமான மறைபொருள் ஒன்றைக் கவனிக்கவேண்டும். பாரதத்திலே சமயபேதம் நிறைந்த அந்தக் காலகட்டத்தையும், வேத, பௌத்த சமண மதங்கள் ஒன்றோடொன்று சாதாரண மக்களைக் கவர வேண்டிய அவசியத்தில் தள்ளப்பட்டிருந்தது. வேதமதம் யாகங்களை முன்னிறுத்தும் அந்த காலகட்டத்தில் எவ்விதமான கட்டுப்பாடும் இல்லாமல்  பொதுவாகவே இந்தியாவின் ஆதி குடிமக்கள் தங்கள் குலதேவதையும், நாகங்களையுமே பூஜித்து வரும் வேளையில் முருகன் அவர்களுக்கும் தெய்வமாகவே பட்டதால், பரவலாகவே மலைவாழ்மக்களிடையே முருக வழிபாடு நாகவடிவத்தில் இருந்திருக்கவேண்டும். பின்னாளில் இதே ஆந்திரத்து போயர்கள் வேதங்களில் தேர்ச்சி பெற்றதையும், உதாரணத்துக்கு மடிபோயா என்பவர் மடிசர்மா என மாற்றிக்கொண்டதையும் போன்ற எத்தனையோ குறிப்புகள் கிடைத்தாலும் போயர்கள் போன்ற மலைவாழ் மக்களின் குல தெய்வமாக சுப்பிரமணியனே ஆதியிலிருந்து வழிபடப்படுகிறான் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. முதலில் நாகம் வாழும் புற்றுகளை வழிபட ஆரம்பித்தவர்கள் பிறகு படிப்படியாக பாறைகளில் பாம்பு ஓவியத்தினை செதுக்கி சுப்பிரமணியத்தை வழிபட்டார்கள். வேதம் கற்றவுடன் இவர்கள் காலத்தின் போக்குக்கேற்ப சிவபூசையையும், ஆகம சம்பிரதாயக் கோவில்களையும் வழிபட ஆரம்பித்தனர். ஆனாலும் சுப்பிரமணிய பூசை மட்டும் நாக வடிவத்தில்தான் இன்னமும் இருக்கிறது. வேதாமக விதிகள் இவர்கள் வழிபாட்டை மேலும் பண்படுத்தின. மங்கள வாரத்தில் (செவ்வாயன்று) சிறப்பு வழிபாடும், சஷ்டித் திதியில் விரதநியதிகளும் மெல்ல மெல்ல பழக்கங்களில் வந்தன. சுப்பிரமணிய பூஜை விஷயத்தில் மட்டும் இந்த மலைவாழ் மக்களின் பழக்க வழக்கங்களை எல்லா இனங்களையும் பின்பற்ற ஆரம்பித்தனர். முருகனின் அருள் எந்த ரூபத்திலும் வருமென்ற சாதாரண விஷ்யமும் எல்லோருக்கும் புரிபட ஆரம்பித்தது என்றே சொல்லவேண்டும்.

அந்தக் கால கட்டத்திலேயே நாகசுப்பிரமணியர்கள் பல்வேறு இடங்களில் கல்லில் செதுக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வருவது இந்த பிராந்தியங்களில்  அதிகம். இப்போதும் அப்படிப்பட்ட கற்சிலைகள் ஒவ்வொரு கோவிலிலும் உண்டு. 
         
ஆனால் ஆதிகாலத்தில் எப்படி பாம்புப் புற்று ஒன்றையே சுப்பிரமணியராகப் பாவித்து வழிபட்டனரோ அதே போன்ற வழிபாட்டை இன்றளவும் பின்பற்றப்பட்டு வரும் ஒரு சுப்பிரமணிய புற்றுதான் இன்று சற்று பெரிய கோவிலாக கட்டப்பட்டு நாளும் நூற்றுக்க்கணக்கில் பக்தர்களைக் கவரும் மோபிதேவி சுப்பிரமணியத் தலம்.

இந்தத் தலத்தைப் பற்றியும் நாக வடிவிலான முருகன் வரலாற்றையும் மேலும் பார்ப்போம்.
    
இன்னும் வரும்
ப்டங்களுக்கு நன்றி: கூகிளார்.                              

Saturday, December 15, 2012

ஸ்கந்த, குமாரா, கார்த்திகேயா, சுப்பிரமணியா!! (2)

ஆந்திரமும் முருகனும் - 2



நம்பனார்க் கொருபது நார ணற்குநான்(கு)
க(அ)ம்புயத் தவற்கிரண் டலரி யங்கியாம்
உம்பர்வான் சுடர்களுக் கோரொன் றென்பரால்
இம்பரி லிசைக்கும்அப் புராணத் தெல்லையே.

.வியாசமுனிவர் வகுத்த இந்த பதினெண்புராணங்களில் ஸ்ரீஸ்கந்தபுராணம்தான் மிகச் சிறந்த புராணமென்று கச்சியப்ப முனிவர் தன் தமிழ் கந்த புராணத்தில் கூறுகிறார். கந்தன் பிறந்த தொன்மை வரலாற்றை நம் தமிழகத்து  கச்சியப்பமுனிவர் 11 அல்லது 12 ஆம் நூற்றாண்டில் காஞ்சி அருகே உள்ள குமரக்கோட்டத்தில் ஸ்கந்தபுராணத்தின் தமிழாக்கத்தை எழுதினார். தமிழில் பாடிய கந்தபுராணத்தில் பல சந்தேகங்கள் உண்டானபடியால் (கல்விக்கு பெயர் போன இடம் காஞ்சி, அதுவும் கல்வியாளர்கள் எப்போதும் எல்லாவற்றையும் எதிர்வாதம் செய்து, சந்தேகங்கள் தெளிந்து அதன் பிறகே எந்தக் காவியத்தையும் ஒப்புக்கொள்வார்கள்.) கச்சியப்பமுனிவருக்கு உதவி புரிய சாட்சாத முருகப்பெருமானே ஒரு புலவர் வடிவில் நேரில் வந்து இவை சரியாகப் பாடப்பட்டதுதான் என்று எல்லோரும் ஏற்கத்தக்கும் அளவில் விளக்கம் கொடுத்து மறைந்தார் என்றும் குமரக்கோட்டத் தலபுராணம் சொல்கிறது.

சூரபன்மன் எனத் தமிழிலும் தாரகாசுரன் என வடமொழியிலும் தரப்பட்டாலும் அசுரன் தன்னைக் கொல்லாமை வரம் பெற்றதும் அப்படிக் கொல்லும் பட்சத்தில் சிவசக்தியின் மைந்தனாகவும், அதுவும் ஏழு நாட்கள் வயதே ஆன மகவாலும் தான் கொல்லப்படவேண்டும்  என்று வரம் கேட்டதாக புராணக்கதை நமக்குத் தெரிவிக்கிறது. அதே போல இங்குள்ள அமராவதி கோயில் தலபுராணம் ஆறுமுகனாகப் பிறந்தவன் ஓருருவம் தாங்கியது ஏழாம் நாள் என்றும் அந்த ஏழாம் நாளிலேயே தேவர்களின் சேனாதிபதியாகப் பொறுப்பேற்று மகாசேனன் என்று பெயரோடு அசுரனுடன் துவந்த யுத்தத்தில் மோதி, அசுரனை அழித்து, தேவர்களையும் இந்திரனையும் சிறைமீட்டு தேவர்களின் நகரமான அமராவதியையும் மீட்டதாகக் கூறுகிறது. அசுரனை அழித்த இடம் பற்றி யாரும் எதுவும் பேசுவதில்லை. செந்தூரில் சக்தியிடம் வேலாயுதத்தைப் பரிசாகப் பெற்றவன், அங்கேயிருந்த கடலுள்ளே இருந்த சூரபன்மனை வதைத்தாக நம் தமிழ்க்கதைகள் பல உள்ளன. ஆனால் இந்த ஆந்திரக் கதையில் வரும்போது இந்த அசுரன் நீள அகலம் அளக்கமுடியாதவன் என வர்ணிக்கப்படுகிறான்.

ஸ்ரீசைலபுராணத்தில் சக்தியும் சிவனும் கார்த்திகேயனைப் பெற்றுத் தந்ததாகத் தரும் தகவல்கள் இந்த அமராவதிக் கோயில் கதையுடன் ஏராளமாக ஒத்துப்போகிறது. முருகன் அசுரனை வதைத்த இடம் எந்த இடமாக இருந்தாலும், மஹாசேனாதிபதியாகவும் தேவர்கள் தலைவனாகவும், இந்திரன் தன் மகளைக் கொடுத்து மாப்பிள்ளை சுவாமியாக அருள் தந்ததாக ஆந்திர மக்களுக்கு அவன் அறியப்பட்டிருக்க வேண்டும்.

இங்கே விஜயபுரியில் (நாகார்ஜுனகொண்டா) இக்குவாகு மன்னரான சாந்தமூலன் மஹாசேனனுக்கும் தங்கள் குல காவல் தெய்வமாக ஆராதித்து முருகனுக்கும் தேவயானைக்கும் கோயில் எடுத்ததாக (E.I, XX. NKD Inscriptions) வும், இந்தக் கோயில் நாளடைவில் பாழடைந்து இடிபாடுகளுக்கு பலியானதாகவும், திரு எம். ராமாராவ், தன் ‘தி இக்‌ஷவாகு ஆஃப் விஜயபுரிஎனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். கிபி.இரண்டாம் நூற்றாண்டில் அரசாண்டபோதே முருகனுக்குக் கோயில் எடுப்பித்ததோடு முருகன் நாமத்தையும் பலரும் முக்கியமாக பிராம்மணர்கள் வைத்துக் கொண்டதையும் ‘கொண்டமுடி தகடுகள்விவரமாக சொல்கிறது. மஹாராஜா ஸ்ரீஜயவர்மர் காலத்தில் (ஏறத்தாழ இரண்டாம் நூற்றாண்டு) இருந்துதான் கிருஷ்ணை நதிக்கரையில் இந்த அரச ஆணைகள் தாமிரத் தகடுகளில் பட்டயங்களாக பதிக்கப்பட்டு அவர்களால் பிராம்மணர்களுக்கு அளிக்கப்படுகின்றன. இவைகளை பிரம்மாதேய்ங்கள் என்றும் சொல்வர். இப்படிப் பட்டயம் பெற்று பலனடைந்தவர்களில் ஒருவர் கௌசிக கோத்திரத்தைச் சேர்ந்த ஸ்கந்த ருத்ரஜா எனும் அந்தணரும் ஒருவர். (பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது).
                                                                                                        
பேராசிரியர் பி.எஸ்.என். ராவ் தனது சமூகங்களின் பிடியில் ஆந்திரம் எனும் ஆங்கில நூலில் குறிப்பிடுகையில் சத்திரியர்களான இக்‌ஷவாகு அரசர்கள்தான் சனாதன தர்மத்துக்கும் வேதங்களின் புனர் வாழ்வுக்கும் காரணமாக இருந்தவர்கள் என்று குறிப்பிடுவதோடு புத்தமதத்தைச் சேர்ந்த சக்தி வாய்ந்த பெருமக்களை ‘சுவர்ண கர்ப்பமஹாதானாஎனும் யாகத்தின் மூலம் மறுபடியும் வேதமதத்தில் சேர்த்தவர்கள் இவர்கள். ஏறத்தாழ இந்தக் கால மதமாற்றம் போல நடந்ததாக்க் கொள்ளலாமோ என்னவோ. விஷ்ணுகுந்தின் மாதவர்மா எனும் அரசனின் தந்தை தன் மகன் வேதமதத்துக்கு திரும்ப சம்மதிக்காததால் தேவர்களின் அனுமதிக்காக மேற்கண்ட யாகத்தைச் செய்ததாக ஒரு குறிப்பு (EI-IV, PP-193-198) சொல்கிறது. அத்துடன் கோயில்கள் நிறுவப்பட்டு இக்‌ஷவாகு வம்சத்தினர் கோயில் வழிபாடைக் கட்டாயமாக்கினர் என்கிறார் திரு ராவ். அதன் ஒரு பகுதியாகவே விஜயபுரியில் முருகன் கோயில் மஹாசேனன் என்ற பெயரில் கட்டப்பட்டதாகும்.

இக்குவாகு அரசர்களுக்குப் பின் வந்த அரசர்கள் சாலங்காயனவர்கள். இவர்கள் வம்சம் முழுவதும் பிராம்மணர்களாக இருந்தார்கள். இவர்கள் முதலில் கோதாவரி மாவட்டங்களில் அரசை ஸ்தாபித்து பின் படிப்படியாக முன்னேறி இக்‌குவாகு அரசர்களை வென்று அவர்கள் ராஜ்ஜியத்தையும் தம் ஆளுகைக்குள் உட்படுத்தினர். இப்போது இதே குண்டூர், கிருஷ்ணா, பிரகாசம் மாவட்டங்கள் கர்மராஷ்ட்ரம் எனப் பெயர் கொடுத்தனர். அதே போல தங்களையும் தேவர்களின் தூதர்கள் என்று சொல்லிக்கொண்டதும், சத்-பிராம்மணர்கள் எனப் பொருள் கொடுக்கும் ஸுப்பிரமணியத்தின் பெயரையும் வைத்துக் கொண்டார்கள். முருகனைத் தெய்வமாக வழிபட்டதோடு கூடவே அவன் கொடியான சேவலையும் தங்கள் கொடியாகக் கொண்டனர்.
                                                                                          
இவர்களுக்குப் பின்னால் கர்மராஷ்டிரம் பிராந்தியம் முழுவதுமே பல்லவர்கள் (முற்காலப் பல்லவர்கள் என தமிழில் சொல்லலாம்) அளுகைக்கு உட்பட்டது. அதாவது மூன்றாம்-நான்காம் நூற்றாண்டுகளில் மிக அதிகமான அளவில் முருகன் வழிபாடு இருந்ததாற்கான ஆதாரங்கள் இங்கே உண்டு. பிராம்மணர்களான சாலங்காயன அரசர்கள் தங்கள் ஆதி இருப்பிடமான கோதாவரி தீரத்தில் அதன் வடக்கே பீடாபுரத்தில் சிவனுக்கும் முருகனுக்கும் கோயில் எழுப்பியதும் அந்தக் கோயிலுக்குப் பெயர் கொக்கடேஸ்வரர் கோயில் என்றே சொல்லப்படுவதுண்டு. கொக்கடேஸ்வரர் (சற்று மருவி குக்குடேஸ்வரர் என இப்போது வழங்கப்படுகிறது) என்பது சேவல் (கோழி) வடிவத்தான் என்பதாகும். இங்கு கோயில் மூலவர் லிங்க வடிவத்தில் இருப்பதால் மூலவரை சிவனாகவும் வழிபடப்படுவதுண்டு.  கொக்க அல்லது குக்கு எனும் சொல் சேவல் அல்லது கோழி ’கொக்கரக்கோ’ என்று கூவுவதா வந்திருக்கலாம் என்றுதான் இங்கு பொருள் சொல்கிறார்கள். இதற்கான கதை (இந்த சொல் எப்படி வந்தது என்பது) வித்தியாஸமானதாக இருந்தாலும் நம் கட்டுரைக்கு சம்பந்தமில்லாததால் அதை இங்கே வெளியிடவில்லை. இந்த வார்த்தையை சற்று எச்சரிக்கையாக பலுக்கவேண்டும்.  ஏனெனில் குக்க என்றால் நாய் என்று தெலுங்கில் பொருள் உண்டு.  பல்லவர்களின் மூலம் தெலுங்குதான். இக்குவாகு-சாலங்காயனர் வசங்களில் கிளை வழி வந்தவர்கள். பல்லவர்கள் தம்மை முதலில் ஜாதியின் பெயர்கொண்டுதான் (பிரும்மசத்திரியர்) அழைத்துக் கொண்டார்கள்.. பரத்வாஜ கோத்திரக்காரர்கள் என்பதற்கெல்லாம் சரித்திர ஆதாரங்கள் நிறைய உண்டு. துரோணரின் மகனான அஸ்வத்தாமனுக்கும் கிருஷ்ணை நதி தீரத்திலே இருந்த நாககன்னிகைக்கும் தங்கள் முன்னோர் பிறந்ததாகச் சொல்லிக்கொள்வர். அத்துடன் ஸ்ரீஸ்கந்தவர்மன் என்னும் பல்லவ மன்னன் மிகவும் புகழ்பெற்ற முதற்கட்ட பல்லவமன்னர்களுல் ஒருவன். இந்த பிரும்மசத்திரயர் என்று பல்லவர் சொல்லிக்கொளவதற்கும் முருகனுக்கும் உள்ள ஒற்றுமையைப் பற்றி சென்னையில் உள்ள கல்வெட்டறிஞரான திரு ராமச்சந்திரன் அவர்களது குறிப்பொன்று காணக்கிடைத்தது. அதை அப்படியே தருகிறேன்.

(பிரம்மக்ஷத்ரியத் தன்மை என்பது பிராமண-க்ஷத்ரியத் தன்மைகள் இணைந்த சுப்ரம்மண்யனின் தன்மையே என்பது தொடக்க காலப் பல்லவ மன்னர்களின் பெயர்களிலும் வெளிப்படுகிறது. ஸ்கந்த சிக்ஷ்யன், சிவஸ்கந்த வர்மன் என்ற பெயர்கள் இதற்குச் சான்றாகும். பிராமணர்களின் வழிபாட்டில் முதன்மையான இடத்தை வகித்த அக்நியின் தன்மையும், காற்றும் நெருப்பும் கலந்த யாகத் தீ வடிவமாகிய வைதிக ருத்ரசிவனின் தன்மையும், முருகனின் சின்னமாகிய கந்து அல்லது கந்தழி வடிவமும் இணைந்த ஒரு வழிபாட்டு மரபினைப் பல்லவர்கள் முதன்மைப்படுத்தினர்.இது தவிரத் திருமால் வழிபாட்டுக்குச் சமமாக தேவசேனாபதி பதவியை, அதாவது தேவர் படைத் தலைமைப் பொறுப்பை ஏற்ற சுப்ரம்மண்யன் (நல்ல பிராமணன்) வழிபாட்டுக்கும் பல்லவர்கள் முதன்மையளித்தனர்.)

இந்த சுப்பிரமணியன் எனும் பெயரே தெற்கு ஆந்திரத்திலிருந்துதான் தமிழகத்துக்கு இறக்குமதியானது என்று கூட சொல்லலாம். ஆதிகாலங்களில் சாதாரண ஜனங்களிடையே பரவி இருந்த இந்தப் பெயரானது நாளடைவில் சற்றுக் குருகி சுப்பா என ஆகிவிட்டது. சுப்பாராவ், சுப்பாரெட்டி, சுப்பா நாயுடு என வெகுஜன அளவில் இன்றளவும் இந்தப் பெயருக்கு புகழ் அப்படியே இருந்துகொண்டுதான் இருக்கிறது. அதே சமயத்தில் சுப்பிரமணியம் எனும் நீண்ட பெயரும் அப்படியே தொடர்ந்துகொண்டுதான் வருகிறது.

காளிதாசன் குப்தர்கள் காலத்தவன் (மூன்றாம்/நான்காம் நூற்றாண்டு) என்றுதான் பலரும் சொல்கிறார்கள். மகாகவி எழுதிய குமாரசம்பவம் ஸ்கந்தபுராணத்தின் ஒரு பகுதிதான். முருகன் அவதாரம் எப்படி நிகழ்ந்தது என்பதைப் பற்றிய காவியம்தான். இந்தக் காவியம் வடநாட்டில் மிகவும் புகழ்பெற்றது. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த குமாரகுப்தன், ஸ்கந்தகுப்தன் என்போர் குபதவம்சத்து கடைவரிசை ராஜாக்கள் முருகன் பெயரை விரும்பி வைத்துக்கொண்டவர்கள். ஆனால் வடநாட்டில் புழங்கும் முன்பாகவே ஆந்திரத்தில் ஸ்கந்தன் பெய்ரும் புகழும் பரந்து விரிந்து படர்ந்தது என்றுதான் சொல்லவேண்டும். 

அதேபோல சங்ககாலக் கோயில் எனப் பார்க்கையில் தமிழகத்தில் கூட சென்னையை அடுத்த சாலுவான்குப்பம் (மாமல்லபுரத்துக்கருகே) முருகனுக்குக் கட்டப்பட்ட கோயிலின் முழுத்தடயங்களை தொல்லியல் அறிஞர் திரு தியாக சத்தியமூர்த்தியின் தலைமையில் சமீபகாலத்தில் கண்டெடுத்தார்கள் என்ற செய்தியும் இங்கே பகிர்கின்றேன். அந்தக் கோயிலின் காலம் நான்காம் நூற்றாண்டு என்ற போதிலும் சங்க காலம் என வரும்போது நான்காம் நூற்றாண்டுக்கு முன்பு என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கோயிலைப் பற்றியும் திரு ராமச்சந்திரன் அவர்களின் குறிப்பைப் பகிர்கிறேன்.                
(அகழ்வாய்வின் மூலம் கண்டறியப்பட்ட தமிழ்நாட்டுக் கோயில்களுள் பழமையானது மாமல்லபுரத்தை அடுத்த சாளுவன் குப்பத்தை ஒட்டியுள்ள திருவிழிச்சில் என்ற ஊரின் கடற்கரையில் இருந்து புதையுண்டு போன கி.பி. 4ஆம் நூற்றாண்டைய சுப்ரம்மண்யர் (முருகன்) கோயிலே கி.பி. 7,8,9 ஆகிய நூற்றாண்டுகளில் பல்லவர் சிற்பக் கலை மரபில் முருகனின் பிரம்மசாஸ்தா கருத்தோட்டம் முதன்மைப்படுத்தப்பட்டது என்பதும் கவனத்தை ஈர்க்கும் விஷயமாகும் - கல்வெட்டறிஞர் திரு ராமச்சந்திரன்)


குண்டூர் மாவட்டத்தில் கிருஷ்ணை நதிக்கரையில் அமைந்துள்ள அமராவதி கோயில்தான் மிகப் பழமையானது. இது பஞ்ச ஆராம சிவத்தலங்களில் (ஏனைய நான்கும் குமாரராமம், பீமாராமம் (2), திராட்சாராமம், கோதாவரி மாவட்டத்தில் பிற்காலத்தில் கட்டப்பட்டது) முதன்மையானது. இந்த அம்ராவதிக்கு ஒரு சிறப்பு உண்டு.

புத்தபிரான் தான் ஞானம் பெற்றபின்னர் சீடர்களுடன் பல தேசங்கள் சென்று வந்தபோது அமராவதிக்கும் வந்தாராம் (அவர் வந்தபோது அமராவதி எனும் பெயர் கிடையாது). அவருடன் 96 தேச ராஜாக்கள் வந்தனர் என்றும், அங்குதான் அந்தச் சமயத்தில் காலச் சக்கரம் எனும் யோகமார்க்கத்தால் எதிர்கால பாரத நிலையைக் கண்டறிந்து சுட்டிக் காட்டி, புத்த பிரான் தன் சகாக்களை நோக்கி இனி வரும் காலங்களில் நீசமான ஸ்திதிக்கு பாரதம் செல்லும் காலமாக மாறி வருமாகையால் மக்களுக்கு முடிந்தவரை அன்பையும் அஹிம்சையும் மட்டுமே போதிக்கவேண்டும் என அருளியதாக வரலாறு சொல்கிறது. (ஆனால் எந்த மக்கள் அறிவுரைகள் சொல்படி நடக்கிறார்கள்? அதற்கு மாறாகத்தான் யுத்தங்கள் மிகக்கொடிய முறையில் நடந்து வருவதை நாம் அறிவோமே) சென்ற 2006 ஆம் ஆண்டில் அமராவதியில் இந்த காலச்சக்கரா விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு புத்தமதத்தலைவரான தலாய்லாமா வந்திருந்து சிறப்பித்ததும் சமீபத்தில் நடந்ததுதான். புத்தர் வாழ்ந்த இருநூறு ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த  சாதவாகனர் பௌத்தமதத்தினைச் சார்ந்தவராதலால் புத்தர் வந்தமர்ந்த இடத்தைச் சுற்றி ஒரு நகரம் எழுப்பியதோடு, அதற்கு ஸ்ரீதான்யகடகம் என்றும் பெயர் கொடுத்தார்கள். இங்கு புத்தர் எழுந்தருளியதன் நினைவாக சாதவாகனர்களால் ஒரு ஸ்தூபம் அமைக்கப்பட்டுள்ளது. (இந்த ஸ்தூபம் இன்றும் உள்ளது). சாதவாகனர்களின் காலம் முடிந்தபோது புத்தமத வளர்ச்சியும் நின்று போனது.. வேதமதம் வெகுவாக சீர் பெற்றது. இக்குவாகு அரசர்கள் செய்த முதல் வேலை  ஸ்ரீதான்யகடகம் எனும் பெயரை மாற்றியதுதான். முருகன் அசுரனை வென்றதோடு இல்லாமல் அங்கு சிறைப்பட்டுக் கிடந்த இந்திராதி தேவர்களை விடுவித்து தேவர் தலைவன் இந்திரனை மறுபடியும் அமராவதியில் முடிசூட்டினான என்பதால், அதே போல சாதவாகன பௌத்தர்களிடமிருந்து மீட்கப்பட்ட இந்த நகருக்கும் இக்குவாகு அரசர்கள் ’அமராவதி’ என்றே மாறுபெயர் சூட்டினார்கள்.. இங்கே அவர்களே சிவனுக்கு ஒரு கோயிலும் எழுப்பினார்கள். முருகனுக்கும் கோயில் உண்டு. சக்தி பீடமுமாக இருந்ததால் அமராவதி கோயில் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. அமராவதியில் விஜயபுரியின் அரசர்கள் முடிசூட்டிக்கொண்டதாகவும் இந்திரனின் மருமகனான கந்த பெருமானை காவல்தெய்வமாக ஏற்றுக் கொண்டதாகவும் இங்குள்ள வரலாறு சொல்கிறது. இவற்றைக் குறிப்பிடும் ‘இக்‌ஷவாகுஸ் ஆஃப் விஜயபுரி’ புத்தகத்தின் ஆசிரியர் எம்.ராமாராவ் இன்னொரு இடத்தில் காவல்தெய்வங்கள் அமராவதியிலிருந்து விஜயபுரிக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் எழுதுகிறர்ர். 

ஆந்திரத்தில் திருப்பதி மலையில் கோயில் கொண்டுள்ள திருவேங்கடத்தான் கோயிலும், கிருஷ்ணை நதி தீரத்து அமராவதி மற்றும் மலை உச்சியிலுள்ள ஸ்ரீசைலம் கோயிலும் மட்டுமே அந்த முதல் நூற்றாண்டுகளில் பேசப்பட்டன என்றும் சொல்லலாம். திருப்பதியைப் பற்றி தெலுங்கு மண்ணில் அந்தக் கால கட்டத்தில் எந்த ஆதாரமும் இல்லையென்றாலும் அப்போது பாடப்பட்ட தமிழ் சிலப்பதிகாரம் சுட்டிக் காட்டியது ஒன்றே அந்தக் கோயில் (அல்லது வேங்கடத்தான் நின்ற கோலத்தில் உள்ள சிலை) பழைய காலத்திலேயே இருந்ததற்கான சான்றாக எடுத்துக் கொள்ளலாம். 

அமராவதியில் மகிழமரம் சிவனுக்காகவும் முருகனுக்காகவுமான மரமாகப் போற்றப்படுகின்றது. பிள்ளை இல்லாதோர் இங்கே தொட்டில் கட்டினால் முருகனைப் போலவே மகன் பிறப்பான் என்ற நம்பிக்கை உண்டு. இதே மகிழ மரம் சென்னையருகே திருப்போரூர் கந்தஸ்வாமி கோயிலில் கூட தலவிருட்சமாக வணங்கப்படுகிறது என்பதையும் இங்கே பொருத்திப் பார்க்கிறேன். அதே சமயத்தில் அமராவதியில் உள்ள மகிழ மரத்தை ஜைன தீர்த்தங்கரர் ஒருவர் செடியாகக் கொண்டு வந்து வளர்த்தார் என்றும் ஒரு தகவல் உண்டு.

அமராவதிக்கு கிழக்கே, கிருஷ்ணை கடலில் பாயும் பகுதியில் கிருஷ்ணையின் வடகரையில் மோபிதேவி எனும் ஊர் உள்ளது. விஜயவாடாவிலிருந்து ஏறத்தாழ 60 கி.மீ தொலைவு. அமராவதியைப் போல இந்தக் கோயில் பிரபலமான இல்லைதான். இந்தத் தலம் இன்னமும் அதிகமாக அறியப்படவில்லை என்றாலும் நானும் என் நண்பர்களும் சில மாதங்களுக்கு முன்பு அந்தக் கோயிலுக்கு சென்ற போது கிடைத்த விவரங்கள் எங்களை ஆச்சரியத்துக்குள்ளாக்கின.. மோபி தேவியில் பிரதான தெய்வமாக ஸ்ரீஸ்கந்தபெருமான் வள்ளி தெய்வானை சமேதராக எத்தனையோ நூற்றாண்டுகளாக கோயில் கொண்டுள்ளார். இந்தக் கோயில் பற்றிய விவரமும், இந்தக் கோயில் வழிபாட்டு முறை எப்படியெல்லாம் ஆந்திர-கர்நாடக மலைப் பிரதேசத்தில் பிரதிபலித்தது என்பதும் கந்தனின் அருளை இந்தப் பிராந்தியத்தில்  எப்படியெல்லாம் பரப்பியது என்பதையும் அடுத்துப் பார்ப்போம்.

அடுத்து வரும்.

மேலே உள்ள படங்களில் ‘பட்டியல்’ படத்தைத் தவிர ஏனைய மூன்று படங்களுக்கும் நன்றி-கூகிளார்.


Wednesday, December 12, 2012

ஸ்கந்த, குமரா, கார்த்திகேயா, சுப்பிரமணியா!!


ஸ்கந்த, குமாரா, கார்த்திகேயா, சுப்பிரமணியா!!
(ஆந்திரமும் முருக வழிபாடும் - 1)


இந்தக் கட்டுரையைப் படிப்பதற்கு முன் ஒரு சில விஷயங்களை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

1) கடந்த 60 வருடங்களுக்கு முன்பு வரை ஆந்திரக் கடற்கரையோரப் பகுதிகள் (தற்போதைய கோஸ்டல் ஆந்திராவும் தென்கோடி ஒடிஷா கடற்கரை பிரதேசங்களும்) நம் தமிழகத்துடன் இணைந்து இருந்தது
2) இப்போது வித்தியாஸமாக நோக்கப்படும் அளவில் முந்தைய கால கட்டத்தில் மொழிபேதம் பார்க்கப்படவில்லை
3) தமிழகத்தில் பக்தி மார்க்கத்தால் ஆயிரக்கணக்கான கோயில்கள் எழுப்பப்பட்ட அளவுக்கு அதே காலக் கட்டத்தில் ஆந்திரப் பகுதியில் ஏற்படாதது.
4) பொதுவான கலாசார விஷயங்களில் தமிழகப்பகுதிகளும் ஆந்திரப்பகுதிகளும் கூடுமானவரை ஒன்றாகவே மக்களால் பின்பற்றப்பட்டது.

ஆஹா,, இதெல்லாம் எதற்கு, சொல்லவந்ததை சொல்லி விட்டுப் போயேன் என்கிறீர்களா? எல்லாம் ஒரு முன் எச்சரிக்கையின் விளைவுதான்.. இல்லையேல் எங்கள் தமிழனின் தனிக்கடவுளான எந்தை முருகனை ஆந்திரத்துக்கும் சொந்தமாக்குகிறாயே என பின்னால் ஒரு பேச்சு எழக்கூடாது பாருங்கள், அதற்காக மட்டும்தான்.. சரி, விஷயத்துக்கு வருவோம்.

ஆந்திரமும் முருகனும் எனும் இக்கட்டுரை பலநாள் முயற்சியின் பலனாகத்தான் எழுதப்பட்டதாய் நான்  கருதுகிறேன். பல தகவல்கள் வேண்டி சேகரிக்கவேண்டியதால் கட்டுரையும் நாள் தள்ளிக்கொண்டே போகிறது. முடிந்தவரை நமக்குத் தெரிந்ததை அந்த முருகன் அருளால் பகிர்ந்து கொள்ளலாமே என்றுதான் இக்கட்டுரையைத் தொடங்குகிறேன்.

தமிழன் என்றாலே கூடவே முருகனுக்கும் ஒரு தனி இடம் உண்டு.. தான் எங்கு சென்றாலும் தன் மனதில் முருகக்கடவுளைக் கூட்டிச் செல்வான். எங்காவது வெகு காலம் தங்க நேரிட்டு விட்டால் அவன் மனது முருகனுக்கு ஒரு கோயிலைக் கட்டி விடு என்று சொல்லிக்கொண்டே இருக்கும் போல. குன்றிருக்குமிடமெல்லாம் குமரன் இருக்கும் இடமென திரைப்பட வசனம் பேசுவது போல தமிழன் நிரந்தரமாக நின்றிருக்கும் இடமெல்லாம் முருகனுக்கும் ஒரு கோயில் கட்டி வைத்து விடுவான். இது தமிழன் கதை.. ஆனால் இங்கு நாம் தமிழன் கதை பேசப்போவதில்லை. தமிழன் தன்க்கே உரிய கடவுள் என மதித்த முருகனின் அண்டை மாநிலப் பிரவேசங்களை மட்டும் பேசுவோம்.

வடவேங்கடமானாலும் திருவேங்கடமானாலும் ஆதி காலத்திலிருந்தே வேங்கடம்தான் தமிழகத்தின் எல்லையாக இருந்தது. இன்னமும் சொல்லப் போனால் காஞ்சியைத் தாண்டிய தமிழகத்தின் வட எல்லை முழுவதும் காடு மலை பாலையாக இருந்ததை சரித்திர ஆதாரங்களும் சங்கத்தமிழ்ப் பாடல்களும் நமக்கு விலாவரியாக விவரிக்கின்றன.முருகன் தமிழ்ச்சங்க காலத்திலிருந்தே தெய்வமாக போற்றப்பட்டவன். திருமுருகாற்றுப்படை ஒன்றே போதும், முருகன் தமிழனுக்கு எத்தனை பழமையானவன் என்று சொல்வதற்கு..

கந்தபுராணம் முருகன் தோன்றிய வரலாறு பற்றிய மிகப் பெரிய புராணவரலாற்றைச் சொல்லும். ஆண்டவன் என வரும்போது அவன் எல்லோருக்குமே தலைவன். அவனுக்கு படைப்பில் பேதம் எதுவும் கிடையாது. ஆனால் பூமியில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் மிகப் பெரிய பொறுப்பு தேவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்தத் தொழிலை அவர்கள் ஒழுங்காக செய்து கொண்டு வரவேண்டும் என்பதற்காகத்தான் பாற்கடல் கடையப்பட்டு அமுதம் வரவழைக்கப்பட்டு அது கட்மையை செவ்வனே செய்யும் தேவர்களுக்கு வழங்கப்பட்டது.  அவர்களது ஆதிக்கத்தால் இந்த பூமியே ஆளப்படும்போது, அசுரர்கள் அவர்களை எதிர்த்து அவர்கள் ஆதிக்கத்தைக் கைப்பற்றுவது என்பது தேவாசுர விளையாட்டுகளின் ஒன்றாக இருக்குமோ என்னவோ.. பேதமில்லாத ஆண்டவனின் வரங்களைப் பெற்ற அசுரர்கள் தனக்குக் கிடைத்த வரங்களை வைத்து தேவர்களை முதலில் சிறைப்படுத்தவே விரும்புகிறார்கள். ஒவ்வொரு சமயம் பூமியில் நடக்கும் யுத்தங்கள், நாடு பிடித்து ஆளவது இவைகள் யாவுக்கும் முன்னோடியே இந்த தேவர்களும் அசுரர்களும்தான் என்று நினைக்கத் தோன்றும். அசுர வர்க்கத்தில் தெய்வ வரம் பெற்று இப்படி எழுந்தவன் தான் மிகப் பெரிய அசுரனான தாரகாசுரன். இவனால் அடக்கி ஆளப்பட்ட தேவர்கள் தங்கள் கடமையைச் செய்யத் தவறும் நிலைக்கு வந்ததால் தாரகாசுரனை வதைப்பதற்கான ஒரே மார்க்கமான (அசுரனின் நிபந்தனையின்படி) குமரக் கடவுளைத் தோற்றுவிக்க, அதற்காக சிவனும் பார்வதியும் இணைய மன்மதனை அனுப்புகிறார்கள்,, மன்மதன் தன் காமக் கணையைக் குறி தவறாமல் வீச தவத்தில் இருந்த சிவபெருமானின் மூன்றாவது கண்ணினால் தன் தவத்தைக் கலைக்க முயன்ற மன்மதனை எரிக்கிறார். இங்கே சிவபெருமானின் தவத்தைக் கலைக்க முயன்ற என்று எழுதியதற்குக் காரணம் உண்டு. அனைத்தும் அறிந்தவன் அவன். அவன் தவம் செய்வதால் பிரபஞ்சம் இயங்குகிறது. இருந்தும் இறைவனின் தவத்தைக் கலைக்க யாருக்குமே அதிகாரம் கிடையாது என்பதால் தேவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டுமே என்ற நோக்கில் மட்டுமே மன்மதன் எரிப்பது பார்க்கப்படவேண்டும்.

.மன்மதன் எரிந்தபிறகு காமத்துக்கு அங்கே வேலை இல்லை. காமம் அழிந்த பிறகு விருப்பத்துக்கே வேலை இல்லாத பட்சத்தில் எந்தப் பிறப்புமே இனி நடக்க சாத்தியமில்லை. தேவர்களின் வேண்டுதலான முருகன் அவதரிக்கவேண்டுமென காரணத்துக்காகத்தானே மன்மதன் அங்கு அனுப்பப்பட்டான். இங்கே மன்மதனே பலியானபின் குமரன் அவதாரம் ஏது.. இனி பிரபஞ்சம் எங்கும் பிறப்பேது.. இருந்தாலும் பராசக்தியின் கருணைக்கடாட்சத்தினால் மன்மதனுக்கு உயிர் மட்டும் கிடைக்க அவன் தன் வேலையைத் தொடங்குவதற்கும் சாத்தியமாகிறது.

சக்தியும் சிவனும் முருகனை அவதரிக்கச்செய்ய அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொண்ட இடமே ஆந்திரத்தில் உள்ள ஸ்ரீசைலம் மலைதான் என்கிறது இங்குள்ள கோயில்களின் கிருஷ்ணா நதிக்கரை கோயிலான அமராவதியும், அருகேயே அமைந்துள்ள நல்லகொண்டா மலைத்தொடரில் சிகரத்தில் அமைந்துள்ள ஸ்ரீசைலம் சிவத்தலங்களின் புராணகதைகள் இவ்வாறுதான் சொல்கின்றன. அமராவதி கோயிலில் குமாரசுவாமி இங்குதான் அவதரிக்கிறார் என்று நேரடியாக தலப்புராணமாக எழுதியுள்ளார்கள்., அமராவதியைப் பற்றி சொல்லும்போது நாம் அங்கேயுள்ள பழைய நடப்புகளைப் பற்றியும் விவரிக்கவேண்டிதாக உள்ளது.

கி.பி. ஒன்றாம் இரண்டாம் நூற்றாண்டுகளில் இங்கே அரசாட்சி செய்த இக்குவாகு வம்சத்தவர்கள் தனக்கு முன்பே ஆண்ட சாதவாகனர்களின் பௌத்தமதக் கொள்கைகளை கைவிட்டு சனாதன தர்மத்தைக் கைக்கொண்டனர். சனாதன தர்மத்தில் ரிஷி கோத்திரங்கள் மிக முக்கியமானவை. இந்த ரிஷி மூலம் வந்த தம் முன்னோர்கள் வழியாக தாம் வந்தவர்கள் என்று சொல்லிக்கொள்வதே கோத்திரங்களின் அவசியம். பௌத்த சமண சமயம் சார்ந்த அரசர்கள் ஆட்சியின் போது இந்த கோத்திரங்களை அவர்கள் வெறுத்தார்கள். தாங்களை சிறப்பானவர்கள் என்று சொல்லிக்கொள்வதிலும், பாட்டன், முப்பாட்டன் பெயரை மட்டும் சொல்லிக்கொள்வதிலும் ஆர்வம் காட்டினார்களே ஒழிய தான் இந்த கோத்திரம் என்று சொல்லிக்கொள்வதில்லை. சனாதன் தர்மத்தில் அக்னி வழிபாடு (யாகங்கள்) என்பது தலையானது. துறவறம் என்பது சனாதன தர்மத்தில் அவ்வளவாக இல்லை என்றே சொல்லலாம். எல்லா ரிஷிகளுமே இல்லறத்தைப் பேணி வளர்த்தார்கள். ஆனால் பௌத்தத்தில் யாக வழிபாட்டை அறவே ஒழித்தனர். துறவறம் சிறப்பாகப் பேசப்பட்டது. துறவிகள் தங்க ஆங்காங்கே விஹாரங்கள் எழுப்பப்பட்டன். இளையவயதில் பெண்களும் ஆண்களும் துறவறத்தை மேற்கொள்ளும் சாத்திரங்கள் வகுக்கப்பட்டன. ஆனால் அதே சமயத்தில் வர்ணங்களுக்கு அதாவது நால்வகை வர்ணங்களுக்கும் ஒரு முக்கிய அந்தஸ்து கொடுத்தும் வந்தாலும் சத்திரியப் பிரிவை முன்னிலைப் படுத்தினர். அதன் மூலம் முதல் பிரிவான பிராம்மணர்களை ஒதுக்கி வைத்தார்கள். அதனால் ஒதுக்கப்பட்ட பிராம்மணர்களின் நிலை தாழ்ந்து போனதால், தங்கள் நிலையைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டு அவர்களில் பலரும் பௌத்த சமயத்துக்கு மாறினர். பொதுவாக ஆதி காலத்திலிருந்தே பிராம்மணர்கள் ஆச்சார்ய ஸ்தானத்திலேயே இருந்து வந்ததால் பௌத்தத்துக்கு வந்த பிறகும் அவர்கள் அந்த நிலையில் இருந்தார்கள். சாத்திரம் மாறியது, கோத்திரம் போனது, ஆனாலும் தங்கள் தலைமைப் பீடத்தை பௌத்தத்திலும் தக்க வைத்துக் கொண்டனர். அப்படி முதன்மைஸ்தானத்துக்கு பிராம்மண்ராக இருந்து வந்தவர்தாம் நாகார்ஜுனாச்சார்யா எனும் பௌத்த மதத் தலைவர். சாதவாகனர்கள் காலத்தில் (கிருஸ்துவுக்கு முந்தைய முதல் முன்னூறு ஆண்டுகள்) நாகார்ஜுன ஆச்சாரியாரின் கொள்கைகளும், அவர் வகுத்துத் தந்த சாத்திரங்களுமே முதன்மைப் படுத்தப் பட்டன. (இன்றைக்கும் நாகார்ஜுனா ஆச்சாரியரின் பெயரில் கிருஷ்ணை நதிப் பிராந்தியத்தில் ஒரு பல்கலைக்கழகம் (குண்டூர்-விஜயவாடா மார்க்கம்) இருக்கிறது. அவர் பெயரில் ஒரு பெரிய அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. அங்குள்ள நீர்த்தேக்கத்துக்கு நாகார்ஜுன சாகர் என்றே பெயர் சூட்டப்பட்டு அழைக்கப்படுகிறது. சாதவாகனர் கால ஆட்சி வரை இருந்த இந்த பூரண பௌத்த ஆதிக்கம் இக்குவாகு வம்சத்தினர் ஆட்சி வந்ததும் பழைய நிலைக்கு வந்தது.

இக்குவாகு வம்சத்தினரின் ராஜாக்கள் (இவர்களுக்கும் ஸ்ரீராமனின் வம்சமான இக்‌ஷவாகுக்கும் எவ்வித முகாந்திரமும் இல்லை, வேண்டுமெனில் ஆந்திர இக்‌ஷவாகு என்று அழைக்கலாம்) சனாதனதர்மத்தில் உள்ள கோத்திர வழியைப் பின்பற்றினர். ஒரு அரசன் பெயரே வசிஷ்டபுத்திர் சாந்தமுலன் என அழைக்கப்பட்டதாக இங்கு கிடைக்கும் சான்றுகள் தெரிவிக்கின்றன. இவன் ஆட்சியின் போதுதான் சனாதன தர்மத்தின் ஆணிவேரான யாக வழிபாடு (அக்னி வழிபாடு) முன்னிலைப்படுத்தப்பட்டது. அஸ்வமேதயாகம், வாஜ்பேய யாகம் போன்றவைகளை நடத்தியதற்கான ஆதாரங்கள் இங்கு கிடைத்துள்ளன. இவர்கள் ஆண்ட பகுதி என்பது இன்றைய குண்டூர், கர்நூல் மாவட்டங்கள்தாம். இந்த மாவட்டங்களின் வட எல்லை போல கிருஷ்ணா நதி பாய்ந்து கொண்டிருப்பதைக் காணமுடியும். கர்நூல் மலைவளத்தை அதிகம் கொண்டது. இன்றைய குண்டூர் அமராவதியில் இருந்து மேற்காகச் சென்றால் இன்றைய நாகார்ஜுன கொண்டா எனும் ஊரை அடையலாம். இந்த ஊருக்கு அப்போதைய பெயர் விஜயபுரி. இந்த விஜயபுரியே சாதவாகன, இக்குவாகு வமசத்தவர்க்கும் பின்னால் வந்த அரசர்களுக்கும் தலைநகரமாக விளங்கியது.

சரி, முருகனுக்கும், மேற்கண்ட வரலாற்றுக்கும் என்ன தொடர்பு? அதையும் பார்ப்போமே!!

படங்களுக்கு நன்றி கூகிளார். (நடுவில் உள்ளது அன்றைய நாகார்ஜுனகொண்டாவில் உள்ள புத்த விஹாரச் சிதைவுகள். அடுத்து வருவது இன்றைய நாகார்ஜுன அணைக்கட்டு)
(தொடரும்)