Saturday, May 18, 2019


சாஸோ எனும் ஆந்திர ஜெயகாந்தன்.




பழைய புதிய ஆந்திராவின் கலைத் தலைநகரமாக இருப்பது எப்போதுமே விஜயவாடாதான் என்று பலவருடங்களாய் எனக்குள் ஒரு நினைப்பு இருந்துகொண்டே இருக்கிறது. காரணம் விஜயவாடாவில் நான் இருந்த ஆரம்ப வருட கால கட்டங்களில் ஏராளமான கலைநிகழ்ச்சிகள் கண்டு களித்தவன் என்கிற முறையிலும் என்னுடைய நாடகங்களுக்கு வெற்றிகரமான அடிக்கல் கொடுத்ததும் விஜயவாடாதான் என்பதாலும் இந்த நினைப்பு ஒருவேளை இருந்திருக்கும். சாவித்திரியிலிருந்து சில்க் ஸ்மிதா வரை தென்னகத் திரை உலகுக்குக் கொடையாகக் கொடுத்த ஊரும் விஜயவாடாதான். தெலுங்குத் திரையுலகின் மிகப் பிரசித்தமான என்.டி.ஆரும், ஏ.என்.ஆரும் இந்தப் பகுதியின் பக்கத்தில்தான் பிறந்தனர். தெலுங்கு சினிமாவில் இன்றளவும் போற்றிப் பாடப்படுகின்ற பின்னணிப்பாடகர் கண்டசாலா கூட இந்த பிராந்தியம்தான். திரைப்படங்களும் நாடகங்களும் மூச்சுக்காற்று போல விட்டு எடுத்துக்கொண்டுத் திரியும் மக்கள் நிறைந்த நகரம் விஜயவாடா.. நாங்கள் (நானும் நண்பன் தேவாவும்) நாடகம் போடும் சமயத்தில் நாடகப் பாத்திரங்களுக்காக அதுவும் பெண் கதாபாத்திரங்களுக்காகத் தேடி அலைந்த நாட்கள் விஜயவாடாவில் உண்டுதான்.

ஆனால் கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால் எத்தனைதான் விஜயவாடா கலைத் துறையில் புகழ்பெற்று விளங்கினாலும், தெலுங்கு இலக்கியத் துறையில்  அறிஞர்களின் நகரமாக ஆந்திராவில் வேறு ஒன்று இருப்பதைப் போகப் போகத்தான் புரிந்துகொண்டேன். அது ஆந்திராவின் வடகோடியில் இருக்கும் விஜயநகரம்தான். உண்மையில் ஆந்திர அறிஞர்களுக்கிடையே ஒரு போட்டி வைத்தால் விஜயநகரத்துக்காரர்கள் வெகு எளிதாக திறமையினை முன்னின்று காட்டி வென்று விடுவார்கள்தான்.

ஊர் என்னவோ மிகச் சிறிய ஊர்தான். ஆனால் ஊரிலுள்ள அத்தனை மக்களும் ஏதாவது ஒரு வகையில் தெலுங்கு மொழிக்கும் நாட்டின் பண்பாட்டுக்கும் மிகவும் உறுதுணையாக இருந்தார்களோ என்ற எண்ணம் கூட வரும். குருஜாடா அப்பாராவ் உட்பட எத்தனையோ சிறந்த இலக்கியகர்த்தாக்களை தெலுங்கு இலக்கிய உலகுக்கு அள்ளித்தந்த ஊர் விஜயநகரம்தான்.. புரட்சிகரமான கருத்துகள் முன்வைத்து அதி முக்கியமாக முதலாளிவர்க்கத்துக்கு எதிராக பேனாமுனைப் போர் நடத்தியவர்கள் விஜயநகரத்தார்தான். குருஜாடா அப்பாராவ், சாகண்டி ஸோமாயஜுலு, போன்றவர்கள் அந்த காலகட்டத்திலிருந்த சாதாரணமான ஏழைகளுக்காகவும் அந்தச் சமுதாயம் முன்னேறவும் எழுதிக்கொண்டே இருந்தார்கள்.

தமிழில் எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு இணையாக தெலுங்கு இலக்கிய உலகில் பேசக்கூடிய, எழுதக்கூடிய எழுத்தாளர்தான் சாகண்டி ஸோமாயுஜுலு (Chaganti Somayajulu) என்கிற சாஸோ (ChaSo) அவர்கள். . அடித்தட்டு வர்க்கத்தோடு, மத்தியதர வர்க்கமும் பாகுபாடின்றி முன்னேறவேண்டுமென தன் எழுத்தை முழுவீச்சாகப் பயன்படுத்தியவர் சாஸோ. சமீபத்தில் இவருடைய நூறாண்டு கடந்த பிறந்தநாள் விழாவுக்கு என்னையும் அழைத்து சிறப்பித்தனர் சாஸோவின் குடும்பத்தார்.

சாஸோவின் குமாரத்தி சாகண்டி துளசியும் தற்காலத்து தெலுங்கு எழுத்தாளர்களில் முதன்மையானவர். என்னுடைய வம்சதாரா புதினம் சமீபத்தில் தெலுங்கு மொழிமாற்றம் செய்யப்பட்டு பெரிதும் வரவேற்கப்பட்டதைக் கேள்விப்பட்ட துளசி அம்மையார் ஒருநாள் திடீரென தொலைபேசி மூலம் சாஸோவின் ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக வந்திருந்து கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தார். அத்துடன் இல்லாமல் ‘‘உங்களுக்கு அப்பாவின் புத்தகம் ஒன்றினை அனுப்புகிறேன்.. அது இப்போதுதான் சாகித்ய அகடமியால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. சாஸோவின் எழுத்துக்கள் பற்றியும் அவரைப் பற்றியும் அறிந்துகொள்ள இந்தப் புத்தகம் உதவும். நீங்கள் விழாவில் பேசுகிறீர்கள்’ என்ற அன்புக் கட்டளையிட்டதால் விஜயநகரம் வருவதாக ஒப்புக்கொண்டேன். 
விஜயநகரம் செல்வதற்கு இன்னொரு காரணம் அங்கே எனக்குப் பிடித்த பைடதல்லி அம்மனின் தரிசன வாய்ப்பு கிடைக்குமே என்பதாலும் கூட.. இங்கு தசராவுக்குப் பின்னர் வரும் ‘சிரிமானு’ உற்சவம் மிக மிகப் பிரசித்தமானது. (வம்சதாரா புதினத்தில் குறிப்பிட்டுள்ளேன்).

’சாஸோவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்’ என்ற தலைப்பில் தமிழில் ‘கௌரி கிருபானந்தன்’ மொழி பெயர்த்து சாகித்ய அகடமியால் புதிதாக வெளியிடப்பட்ட புத்தகத்தை அனுப்பி வைத்தார். இந்தப் புத்தகத்தை வெளியிடும் பாக்கியத்தையும் விழா மேடையில் வழங்கினார் துளசி அம்மையார்.

மனித உறவுகள் பொருளாதார ரீதியில் வேறுபட்டவை என்பதையும் சமுதாய ஏற்றதாழ்வுகள் அந்தக் காலத்தில் மலிந்து கிடந்ததையும் தனிமனிதரின் எண்ணங்கள் சீரடைந்தால் ஒழிய சமுதாய மாற்றத்தைக் கொண்டுவருவது கடினம் என்பதும் இந்தச் சிறுகதைகளைப் படித்ததில் ஏற்படும் தாக்கத்தில் யாருமே உணர்ந்துகொள்ளமுடியும்.

சாஸோவின் எழுத்துகளும் ஜெயகாந்தனின் எழுத்துகளும் மிக அழகாக ஒத்துப் போவது எனக்கு ஆச்சரியம்தான். ஒருவரைப் போல மற்றொருவர் எழுதமுடியாது என்று எனக்குத் தெரியும். ஆனாலும் இருவர் எழுத்துக்களைப் படித்ததன் மூலம் இந்த ஆச்சரியத்தை உணர்ந்தேன்.ஜெயகாந்தன் எழுதிய  ’சில நேரங்களில் சில மனிதர்கள்’ ’ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் சாஸோவின் சிறுகதைகளில் நிறைய இடங்களில் வரும். அதே வலுவான எழுத்து. ஒரே சீரான நடை. சமுதாயச் சீர்கேடுகளை மிகவும் வலுவாக வெளிக்கொணர்ந்து அதன் தராதரத்தினை ஆராய்ந்து பார்க்கும் எழுத்துகள்.
சாஸோ மிக தைரியமான எழுத்தாளராக இருந்திருக்கிறார். மேல்தட்டு வர்க்கத்தை அந்தக் காலத்தில் கேள்வி கேட்பதோ அவர்கள் ஏழைகளை சுரண்டி வாழ்வதையும் உல்லாச உற்சாக நடவடிக்கைகளை கேலி செய்தும் எழுதுவது என்பது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில் இவர்கள் எழுத்துகள் படிக்கப்படுவதே மேல்தட்டு வர்க்கத்தாலும், மத்தியதர வர்க்கத்தாலும்தான். ஆனால் சாஸோ தைரியமாக அவர்களிடமிருந்துகொண்டே அவர்கள் அவலங்கள் பற்றி எழுதியிருக்கிறார். சாஸோவின் எழுத்துகள் மிகவும் எளிமையானது. எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் தெலுங்கு நாட்டில் படிப்பவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவான சதவிகிதம்தான் என்பதையும் நாம் நினைத்துப் பார்க்கவேண்டும்.

ஜெயகாந்தன் போலவே மத்தியதரவர்க்கத்தைப் பற்றிய நிறை குறைகள், அவர்களின் தனிப்பட்ட உணர்ச்சிகளின் சீரும் சிறப்பும், சீர்கேடும் அப்பட்டமானவகையில் சொல்லப்படுவது ஏராளமாகவே சாஸோவின் எழுத்தில் மலிந்து கிடக்கின்றன, சாஸோ சிறுகதை மன்னர் என்பதை அவரின் ஒவ்வொரு கதையும் தெளிவுபடுத்தும். பொண்டு மல்லலு, ஏலூரு வெள்ளாலி, பதிலி (கடிதக் கதை), லேடி கருணாகரம் போன்ற கதைகள் அக்கால சமுதாயத்தை நம் கண் முன்னே அப்படியே நிறுத்துகின்றன.

விஜயநகரத்தில் பெரிய நூலகம் குருஜாடா அப்பாராவ் பெயரில் அரசாங்கம் நிர்மாணித்துள்ளது. அந்த நூலகத்தின் மாடியிலேயே சாஸோ’வின் நினைவாக ஒரு அரங்கத்தையே நிர்மாணித்திருக்கிறார்கள் சாஸோவின் வாரிசுகள். இலக்கியவாதிகள் அடிக்கடி கூடும் இடமாக இந்த அரங்கம் அமைந்துள்ளது இன்னமும் விசேஷம்தான். கடந்த 2015 ஆம் ஆண்டில்தான் சாஸோவின் நூற்றாண்டு விழாவை மிகப் பிரமாண்டமாகக் கொண்டாடினார்களாம். சாஸோவின் பெயரில் ஒரு நினைவு விருதை நிறுவி ஆண்டுதோறும் தெலுங்கில் சிறந்த படைப்பாளி ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவருக்கு பரிசும் நிதித் தொகையும் வழங்கிவருகிறார்கள். இந்த விழாவின் போது கூட இந்த நற்செயல் தொடர்ந்தது. விஜயநகரத்திலிருந்து தொலைதூரத்திலுள்ள கடப்பாவிலிருந்து வேம்பள்ளி ஷெரீஃப் எனும் இளைஞரை வரவழைத்து அவர் எழுதிய ‘ஜும்மா’ எனும் நூலுக்காக விருது வழங்கினார்கள். ஷெரிஃப் ஏற்கனவே யுவஸாகித்ய விருதினைப் பெற்றவர் என்றாலும் சாஸோவின் பெயரால் ஏற்படுத்தப்பட்ட இந்த நினைவு விருது என்பது அவருக்கு மிகவும் மேன்மையாகப் பட்டது. இதிலிருந்தே சாஸோ எழுத்துகளின் மேன்மை கூட நமக்கு வெளிப்படுகின்றது.

சாகண்டி துளசி அம்மையாரின் அன்பும் ஆளுமையும் எனக்குப் பிடித்திருந்தது. அங்கு உள்ளோர் அனைவருமே துளசி அம்மையாரை தங்களின் சொந்த உறவாகப் பாவித்து மரியாதை செய்வதைப் பார்த்து மனம் மகிழ்ச்சியுற்றது, அதற்குக் காரணம் சாஸோவா, அவரின் மேன்மையான எழுத்துகளா,  அல்லது தந்தையின் எண்ண ஆளுமைகளை அப்படியே தன்னுள் பாவித்துக் கொண்டு தனக்கென ஒரு பாணி வைத்துக் கொண்டு எழுதிவரும் துளசியின் திறமையா என்பதையெல்லாம் சட்டென முடிவெடுத்துச் சொல்லமுடியாது.

ஆந்திர ஜெயகாந்தனின் அன்பு வாரிசுக்கு என்றென்றும் வாழ்த்துகள் என்று மட்டும் சொல்லமுடிந்தது.





Top Image no.1 - The symbolic fort tower of Vizianagaram
2. Writer Chaganti Somayujulu
3. Pydathalli Ammavaru Temple
4. Dr. Chaganti Tulasi
5 and 6. Function photos.
first image to 4th one - Thanks to Google
5 and 6 - Self.

Monday, February 25, 2019

அடுத்த வீட்டில் வம்சதாரா

அடுத்த வீட்டில் வம்சதாரா


உண்மையாக சொல்லப்போனால் என்னுடைய வம்சதாரா புதினமே அடுத்த வீட்டுச் சொந்தம்தான். வட ஆந்திரப் பகுதிகளை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட தமிழ் மொழிப் புதினம் தமிழில் வெளிவந்து பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் தெலுங்கில் மொழி பெயர்க்கப்பட்டு சொந்த வீட்டுப் பெண்ணாக சமீபத்தில் தெலுங்கு மொழி மூலம் தன் பிறந்த இடமான விசாகப்பட்டினத்தில் வம்சதாரா அறிமுகம் செய்யப்பட்டாள். எழுத்தாளர் பெரியவர் சுஜாதா இன்றிருந்தால் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார். ஆனந்தவிகடனில் 2004 ஆம் ஆண்டு வம்சதாரா பற்றி எழுதும்போது திவாகர் இதை தெலுங்கிலும் மொழிபெயர்க்கவேண்டும் என்று முத்தாய்ப்பு வைத்தவராயிற்றே!!

என் மனைவி சஷிகலா ’வம்சதாரா’ மொழிப் பெயர்ப்பினை நான்கு ஆண்டுகளுக்கு முன்னமேயே சாதாரணமாக முடித்திருந்தாலும் திருத்தங்கள் திருத்தப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டிருந்தது. காரணம் தெலுங்கு வாசகர்கள் ஒரு சரித்திர புதினத்தை எந்த வகையில் எடுத்துக் கொள்வார்களோ என்கிற தயக்கம் ஏராளமாக இருந்தது. இதுநாள் வரை தெலுங்கு இலக்கிய உலகில் தெலுங்கு மண்ணில் நடந்த சரித்திரக் கதை என்ற ஒன்று புதின வடிவில் வெளிவராமல் இருந்தது. ஒரு சில தெலுங்கு புலமையாளர்களிடம் வம்சதாரா கதையினை அப்படியே கொடுத்துப் படிக்க செய்தோம். படித்தார்களா என்பதே தெரியவில்லை. மிகக் கனமான அந்த ஃபைலை நீண்டநாட்கள் தன் வசம் வைத்திருந்து திருப்பிக் கொடுக்கும்போது ‘ஆஹா.. நன்றாக இருக்கிறது’ என்கிற சான்றிதழாகப் ஏதோ நல்ல வார்த்தை பேசிக் கொடுத்தார்கள். பதிப்பாளர்கள் கிடைப்பார்களா எனத் தெரியாமல் இருந்தது.  இது என்னுடைய அவநம்பிக்கையை இன்னும் பெரிதாக்கியது என்பதுதான் உண்மை.

இந்த நிலையில்தான் விசாகப்பட்டினம் ’ஸஹ்ருதய ஸாஹிதி’ என்கிற இலக்கிய ஆர்வலர்கள் குழுமம் என்னை என் தமிழ் புத்தகங்கள் குறித்து பேச அழைத்திருந்தார்கள். அந்த இடத்தில்தால் திருவாளர் டாக்டர் வேணு அவர்களைச் சந்தித்தேன். திரு வேணு மிக உன்னத நாடக் எழுத்தாளர்,  கவிஞர். சிறுகதை எழுத்தாளர். ஆந்திர பல்கலைக்கழக கல்லூரியை நிர்வகித்து சமீபத்தில் ஓய்வுபெற்றவர். அவரிடம் எதேச்சையாக வம்சதாரா குறித்துப் பேசும்போது அந்தப் புதினம் மொழிபெயர்க்கப்பட்டு திருத்தப்படாத நிலையில் அப்படியே இருக்கிறது என்றும் சொன்னோம். ‘நான் ஒரு முறை படிக்கத் தரமுடியுமா’ எனக் கேட்டார். மிகப் பெரிய ஃபைல் வடிவத்தில் இருந்த வம்சதாராவை என் வீட்டுக்கே வந்து எடுத்துச் சென்றார். டில்லி செல்வதாகவும் இருபது நாட்களில் படித்துவிட்டு தன் கருத்தைச் சொல்வதாகவும் எடுத்துச் செல்லும்போது சாதாரணமாகத்தான் நினைத்தோம். சரிதான் என்று தலையசைத்து  வழியனுப்பிவைத்தோம் கூட.

ஆனால் திரும்பி வந்தவர் சும்மா விடவில்லை. இந்தக் கதையை உடனடியாக ஸஹ்ருதய ஸாஹிதி அமைப்பின் அடுத்த கூட்டத்தில் பேச இருப்பதாகவும் நீங்கள் இருவரும் அங்கு வரவேண்டும் என்றும் தன்னுடைய கருத்தை அங்கே தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்தார். நாங்களும் சென்றோம்.


ஆச்சரியம்தான். இப்படி ஒரு அழகான ஆழமான சரித்திரக் கதையை தான் இதுவரை படிக்கவில்லையென்றும் தெலுங்கு இலக்கிய உலகில் இந்தப் புத்தகம் பதிக்கப்பட்டு வாசகர்வசம் கொண்டுவரப்பட்டால் மிகப் பெரிய வரவேற்பைப் பெறும் என்றும் சொல்லிவிட்டு கதையை, அதுவும் முழுக் கதையை சபைக்கு விவரித்தார். சுமார் ஒன்றரை மணிநேரம் பேசினார். வம்சதாராவை, வினயனியை, மணிவாணனை மறக்க முடியாத நிலை ஏற்பட்டதை விவரித்தார் வட ஆந்திரத்தின் தொளாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு மிகப் பெரிய நிகழ்வை மிகப் பெருமையாக எழுதப்பட்டதை விவரித்தார். அவர் புகழுரையில் மதி மயங்கிப் போனோம்தான்.

ஆனால் இந்தப் புகழுரை எல்லாம் மாயையாகத்தான் தோன்றியது. அவர் பாராட்டுதலுக்கு நன்றிதான். ஆனால் இந்தப் புத்தகம் வெளியாக வேண்டுமானால் அங்குள்ள தெலுங்கு புத்தகப் பதிப்பாளர்கள்தான் முன்வரவேண்டும். ஏறத்தாழ 560 பக்கங்கள் கொண்ட வம்சதாராவை பதிப்பிக்க தெலுங்கு பத்திரிகை உலகில் முக்கியமானவர்களை ஏற்கனவே தொடர்பு கொண்ட போதே அவர்கள் தயக்கத்தைப் புரிந்துகொண்டோம். பணம் முதலீடு நான் செய்யும் பட்சத்தில் அவர்கள் பதிப்பித்துத் தருவதாகச் சொன்னார்கள். அப்படித்தான் எல்லா எழுத்தாளர்களும் செய்கிறார்கள். அத்துடன் விநியோகத்தையும் விற்பனையும் நாம்தான் செய்து கொள்ளவேண்டும்.

எழுதுவதே எவ்வளவோ கஷ்டப்பட்டுதான் செய்தோம். தமிழிலே எனக்கு இந்தப் புத்தகம் முடிப்பதற்கு ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் பிடித்தன. ஆராய்ச்சிக்காக நான் சென்ற இடங்கள் எத்தனையோ.. விவரங்கள் கிடைக்கும் பட்சத்தில் பேருந்திலும் டிரெயினிலும் திடீர் திடீரென ஓடியிருக்கிறேன். வடக்கே ஸ்ரீகாகுளம் பகுதியில் வம்சதாரா நதியோரம் சென்றுவந்தால் தெற்கே கோதாவரி நதிக்கரையோரம் சைக்கிளில் கூட சென்றிருக்கிறேன். எத்தனையோ கல்வெட்டுகள், புத்தகங்கள் விவரங்கள் எத்தனையோ சான்றோர்களுடன் கலந்துரையாடல்கள் எல்லாவற்றிற்கும் மேலாக ஆண்டவனின் திருவருள் கிடைத்ததால் வம்சதாரா வெளிப்பட்டாள். தமிழ்நாட்டில் நர்மதா பதிப்பகம் என்னை ஆதரித்தது. தமிழ் வாசகர்கள் மத்தியில் இந்தப் புத்தகத்தை நேர்த்தியாக எடுத்துச் சென்றார்கள். ஆனால் தெலுங்கில் நிலைமையே வேறு, புத்தகத்தை நாமே நம் செலவில் பதிப்பித்து அதை வாசகர்களிடம் கொண்டு சென்று விற்கவேண்டிய கட்டாய நிலை உருவானது.

ஆனால் இறைவன் அருளால் வம்சதாராவுக்கு நல்ல காலம் வந்தது. சென்னை பழனியப்பா பிரதர்ஸ் திரு செல்லப்பன் அவர்கள் வம்சதாரா தெலுங்குப் புத்தகத்தைப் பதிப்பிக்க முன்வந்தார். ஆனால் இந்தப் புத்தகம் தெலுங்கு மொழி என்பதால் அனைத்துப் பொறுப்புகளையும் என்னிடமே விட்டுவிட்டார். புத்தக உருவாக்கத்தின் பிரதியைக் கொடுத்தால் அப்படியே ஒன்றும் மாற்றாமல் பதிப்பித்துத் தருவதாகச் சொன்னார். தவறு ஏதேனும் வந்தால் என் பொறுப்பு என்றும் சொல்லியதால் இந்தப் பெரிய பொறுப்பை ஏற்றுக் கொண்டேன்.பிழை திருத்தல் முடிந்ததும்  ஏறத்தாழ நான்கு மாதங்கள், இந்த உருவாக்கத்தில் கழிந்தன. பிறகுதான் புத்தகம் வெளிவந்தது.

பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்துக்கு வம்சதாரா முதல் தெலுங்குப் புத்தகம் என்கிற பெருமை ஏற்படுகின்ற அதே சமயத்தில், தெலுங்கு இலக்கிய உலகில் முதன் முதலாக தங்களது சொந்தப் பிரதேசத்தில், அதுவும் வட ஆந்திரப் பகுதியில் நிகழ்ந்த பழங்கால நிகழ்வின் அடிப்படையில் எழுதப்பட்டதால், தெலுங்கு மொழியில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட சரித்திர நாவல் என்கிற பெருமையும் பெறுகிறது.

மறுபடியும் ஸஹ்ருதய ஸாஹிதி இந்த முறை பெரிய அளவில் வம்சதாராவை அறிமுகப்படுத்த முன்வந்தார்கள். விழாவையும் முன்னின்று நடத்தினார்கள். டாக்டர் வேணு புத்தகத்தை இந்த முறையும் சிறப்பித்துப் பேசினார். தெலுங்கு சான்றோர்கள் பலர் வந்திருந்து வாழ்த்தினார்கள். தங்கள் பகுதியின் பழங்காலம் சிறப்பிக்கப்பட்டு எழுதியிருப்பதில் அவர்களுக்கு ஏற்பட்ட அளவில்லா மகிழ்ச்சி அவர்கள் வருகை மூலமாக வெளிப்பட்டது.

அருமை நண்பர் திரு பாலாஜி (ஸ்ரீராம் ப்ராபர்டீஸ், விசாகப்பட்டினம்), பெரிய அளவில் வம்சதாராவை பலரும் படிக்க ஏதுவாக உதவி செய்ய முன்வந்தது மறக்க முடியாதது.

ஆக வம்சதாரா மிகப் பலமாக தன் காலை ஊன்றி சொந்த ஊர் சென்றது மனதுக்கு மிகவும் மகிழ்வாக இருந்தது. அடுத்து விஜயவாடாவிலிருந்து அழைப்பு வந்துள்ளது. கலைகளையும் இலக்கியங்களையும் ஆதிகாலம் தொட்டு ஆதரித்து வரும் ஆந்திரத் தலைநகரில் கூடிய விரைவில் வம்சதாரா அடியெடுத்து வைக்க இருக்கிறாள்.


இந்தச் சமயத்தில் என்னுடைய நன்றிகளை ஸஹ்ருதய ஸாஹிதி தலைவர் திருவாளர் சேகரமந்த்ரி பிரபாகர், திரு வேணு, திரு எல்.ஆர் சுவாமி, திரு பாலமோகன் தாஸ் ஆகியோருக்குத் தெரியப்படுத்திக் கொள்கிறேன். டாக்டர் வேணு இந்தப் புத்தகம் எப்படியும் வெளியிடப்படவேண்டும் என்று உறுதியாக நின்றிருந்தால்தான் வம்சதாராவுக்கு வழி பிறந்தது. அதே சமயத்தில் திரு பிரபாகரின் உதவி மிகப் பெரியது. அன்பின் வலிமையை அவர் மூலம் தெரிந்து கொண்டேன். கனகமகாலக்ஷ்மியின் கருணைதான் என்று சொல்லவேண்டும்.

தெலுங்கு இலக்கிய உலகின் முதல் சரித்திரக் கதையாக வலம் வரும் வம்சதாரா தெலுங்கு பேசும் அனைவர் இல்லத்திலும் கால் பதிய வேண்டும் என்பது என் அவா.

                        *****************

* மேலே படத்தில் - டாக்டர் வேணு, பேராசிரியர் பாலமோகன் தாஸ் (மேனாள் துணைவேந்தர், நாகார்ஜுனா பல்கலைக்கழகம், திரு ராஜேந்திரன் (தலைவர்,வம்சதாரா பேப்பர் ஆலை, ஸ்ரீகாகுளம், பேராசிரியர் வேதுல ஸுப்ரமணியம் மேநாள் தெலுங்குப் பிரிவு தலைவர், ஆந்திர பல்கலைக்கழகம், திரு சேகரமந்த்ரி பிரபாகரம் தலைவர், ஸஹ்ருதய ஸாஹிதி, பேராசிரியர் ராகவேந்திரன், பீமிலி ஆஸ்ரமம். (மேடையை அலங்கரித்த சான்றோர்கள்)