Follow by Email

Wednesday, May 22, 2013

வைகாசி சுவாதியை வாழ்த்தும் வைகாசி விசாகம்


ஆந்திரத்தில் நரசிம்மரின் சிம்ம கர்ஜனை:
வைகாசி மாதத்தில் வரும் சுவாதி நட்சத்திரத்தில் இங்கு ஆந்திரர்கள் நரசிம்ம ஜெயந்தியைக் கொண்டாடுவார்கள். ஸ்ரீமகாவிஷ்ணுவின் அவதாரங்களில் மிகவும் உயர்ந்த தத்துவத்தைக் கொண்டதுதான் நரசிம்ம (அல்லது ந்ருஸிம்ஹ) அவதாரம். எப்படி தமிழகத்தின் மலைகள் தோறும் முருகன் கோயில் கொண்டுள்ளானோ, அப்படியே ஆந்திரத்தின் மலைகள் தோறும் நரசிம்மர் கோயிலை நாம் காணலாம். விசாகப்பட்டினத்தின் அருகே அமைந்துள்ள சிம்ஹாத்ரி மலையிலிருந்து வான் வழியே தென்மேற்கே போகப் போக மலை உச்சிகளிலெல்லாம் நரசிம்மர் காட்சியளிப்பது போலத்தான் தோன்றும் என்ற எண்ணம் உண்டு எனக்கு.

காடுகளும் மலைகளும் சூழ்ந்த அஹோபிலத்தில் மட்டுமே ஒன்பது நரசிம்ம க்ஷேத்திரங்கள் அமைந்துள்ளன. ஆந்திரத்தில் ஓடிவரும் கிருஷ்ணை நதிக்கும் ஹிரண்யகசிபுவை வென்ற நரசிம்மருக்கும் அப்படி என்ன விருப்பமான பொருத்தமோ, கிருஷ்ணைக் கரையை அடுத்தமட்டில்  பஞ்சநரசிம்ம க்ஷேத்திரங்களாக மட்டப்பள்ளி (நல்கொண்டா மாவட்டம்),  வடபள்ளி, வேதாத்ரி (மேலே படத்தில் உள்ளது), கேட்டவரம் (கிருஷ்ணா மாவட்டம்), மங்களகிரி (குண்டூர் மாவட்டம்) என நரசிம்மர் சிம்ம கர்ஜனை புரிந்து கொண்டு ஆள்கின்ற பிராந்தியம் இது. 
மட்டப்பள்ளி நரசிம்மர் கோயில்  (படத்தில்)குகைக் கோயில்தான். பாறையில் நரசிம்ம வடிவத்தில் சுயமபுவாக தன்னைக் காட்சிப்படுத்தியதாக தல வரலாறுகள் சொல்கின்றன. ஏறத்தாழ ஓரடி உயரத்தில் சங்கு சக்கரதாரியாகக் நரசிம்ம பெருமாள் காட்சியளிக்கிறார். பொதுவாக குடைவரை கோயில்கள் ஆந்திரத்தில் பல்லவர் காலத்திலேயே அதிகம் கிருஷ்ணை நதிக் கரையில் எழுப்பப்பட்டன என்பதற்கு வரலாற்று சாட்சியங்கள் ஏராளமாக உள்ளன. அதே சமயத்தில் நரசிம்மர் எப்போதும் காடு மலைகள் நிறைந்த சூழ்நிலையில் இந்தப் பிராந்தியங்களில் காணப்படுவது கூட ஒரு ஆச்சரியமான விஷயமே. ஏனெனில் தமிழகத்தில் பெருமாளின் அவதாரமாக ஏராளமான கோயில்கள் திவ்யத் தலங்களாக நரசிம்மமூர்த்திக்குதான் உண்டு என்பதும் அந்தக் கோயில்கள் பூமியின் சமதரைப்பகுதியில் கட்டப்பட்டுள்ளது என்பதையும் ஒரு ஒப்பீட்டுக்காக இங்கு குறிப்பிடுகின்றேன். 
அதே போல கிருஷ்ணையின் தென் கரையில் மங்களகிரி எனுமிடத்தில் மலை மீது குடைவரையாக எழுப்பப்பட்ட தலத்தில் பானக நரசிம்மர் மிகவும் விசேஷமாக பூசிக்கப்படுகின்றார். இங்கு குடிகொண்ட குடைவரை பானக நரசிம்மரின் வாயில் எந்த அளவு கொண்ட பாத்திரத்தில் பானக்ம் ஊற்றினாலும் பாதிதான் செல்கிறது. இப்போது நேராக கோயிலுக்கே மலைப்பாதை அமைத்துவிட்டார்கள். மலையடிவாரத்திலும் நரசிம்மருக்கு ஒரு அழகான கோயிலும் நீண்டு உயர்ந்த கோபுரமும் உண்டு. (படம் மேலே) பதினோரு அடுக்குகள் கொண்ட இந்த 153 அடி உயர கோபுரத்தை வாசிரெட்டி வெங்கடாத்ரி நாயுடு (பக்கத்தில் உள்ள அமராவதி நகரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்ட சிறு மன்னர்) என்பவர் கட்டினார்.

கிருஷ்ணா நதியை பிரிய மனமில்லாமல் பிரிந்து சற்று வடக்கே வந்தோமேயானால் ராஜமுந்த்ரி அருகே கொருகொண்டா மலையில் 650 படிகளுடன் கட்டப்பட்ட கோயிலில் குடிகொண்ட சாத்வீக நரசிம்மரை தரிசனம் செய்துவிட்டு இன்னும் சற்று வடக்கே விசாகப்பட்டினம் சிம்ஹாத்ரி மலையில் வராகருடன் இணைந்த நரசிம்ம பெருமான் காட்சி தருகிறார். 
வராகநரசிம்மரை அவர் முழு உருவைக் காண் வேண்டுமென்றால் ஒவ்வொரு வருடமும் இதே வைகாசியில் வரும் அட்சயத்திருதியைத் திருநாள் வரும் வரைக் காத்திருக்கவேண்டும். அன்றுதான்  சந்தனம் கொண்டு உள்ளே ஒளித்து வைக்கப்பட்டிருந்த அழகான வராகநரசிம்மரை முழுதாக தரிசனம் செய்யமுடியும். அன்று அவரைப் பார்த்துவிட்டால் இந்த ஒருநாளுக்காக வருடம் முழுவதும் தவம் இருக்கலாம் என்றுதான் தோன்றும், . இந்த தலமும் ஒரு நூற்றாண்டுக்கு முன்வரை காடுகளும் மலைகளும் சூழ்ந்த வனாந்தரப் பகுதிதான். 

விசாகப்பட்டினத்திலிருந்து பதினைந்து கிலோ மீட்டர் தூரத்தில் மலைப்பகுதியான சிம்மாசலத்தில் அமைந்துள்ள இந்தக் கோயில் சோழர்களின் கலைக் கண்காட்சியாக கண்ணுக்குத் தெரியும் என்பதும், அதைவிட ஆச்சரியமாக அந்த பதினோராம் நூற்றாண்டுக் கால கட்டத்தில் ஒரு நடுக் காட்டுக்குள் சோழர்கள் எப்படி இவ்வளவு அருமையான கோயிலைக் கட்டினார்கள் என்பதும் விந்தையான செய்திதானே..

ஆந்திரத்தில் தெலுங்கானா பகுதியிலும் நரசிம்ம க்ஷேத்திரங்கள் மிக அதிகம். தர்மபுரியிலும், யாதகிரிகட்டா எனும் சிறுகுன்றில் எழுப்பப்பட்ட யோக நரசிம்மரைப் பற்றிச் சிறிதாவது சொல்லவேண்டும்.

கோதாவரிக் கரையில் கரீம்நகர் மாவட்டத்தில் தர்மபுரி க்ஷேத்திரத்தில் நரசிம்மர் கோயில் மிகவும் புகழ் பெற்றது. இந்தப்பகுதியை ஆண்ட தர்மசேனா மிகவும் கடினமாக தவம் செய்து நரசிம்மரின் தரிசனம் பெற்றதாகச் சொல்வர். ஸ்ரீராமர் பூஜித்தத்தாக சொல்லப்படும் சிவன் கோயிலைக் கொண்ட இந்த க்ஷேத்திரத்தில் தர்மசேனாவின் முயற்சியால் தனக்குத் தரிசனம் தந்த யோகநரசிம்மருக்கு அவனே ஒரு பெரிய கோயில் எழுப்பியதாக தல வரலாறு சொல்கிறது.

அதே யோக நரசிம்மர் ஹைதராபாத் அருகே உள்ள யாதகிரிகட்டாவிலும் காட்சி தருகிறார். காசிபேட் இலிருந்து ஹைதராபாத் செல்லும் இருப்புப் பாதை வழியாகப் பார்த்தால் ரயிலில் செல்லும்போது இந்த குன்று தெரியும். இங்கே ஜ்வாலாநரசிம்மமூர்த்தி குடைவரைக் கோயிலில் குடிகொண்டுள்ளார். கருவரைக் கோபுரத்தில் ஒரு தங்க சுதர்ஸன சக்கரம் 3 அடி சுற்றளவில் பொருத்தப்பட்டுள்ளது. ஏறத்தாழ ஆறு கிலோ மீட்டார் சுற்றளவுக்கு இந்த சக்கரம் தெரிகின்றது.

ஆந்திரத்தில் 108 நரசிம்ம க்ஷேத்திரங்கள் உள்ளதாகவும் அவைகளில் 32 தலங்கள் புகழ்பெற்றதாகவும் சொல்வதுண்டு. நதிக்கரைக்கருகில் காடுகளிலும், வனம் சூழ்ந்த மலைகளிலும் காணப்படும் நரசிம்மர் ஒரு மாறுதலுக்காக கடற்கரைப் பகுதியிலும் நமக்காக தரிசனம் தருகிறார். 

மேற்கு கோதாவரி மாவட்டத்தில் நரசாப்பூர் அருகே அந்தர்வேதி எனும் சிற்றூர் கடலுக்கு சற்று அருகே உள்ளது. இங்கே கோதாவரியில் கிளை நதியான வசிஷ்டநதி கடலில் கலக்கிறது. இந்த தலம் கோதாவரி பாயும் தலங்களிலேயே மிகவும் புனிதமான இடம் என்று போற்றப்படுகின்றது. கடலிலிருந்து மேற்கே பார்த்தவிதமாக இங்கே நரசிம்மர் அருள் புரிகின்றார்.

நரசிம்மர் தத்துவம் என்பதை உயர்ந்ததாகச் சொல்லி மேலே இந்தக் கட்டுரையை ஆரம்பித்தேன் அல்லவா.. இதோ அந்தத் தத்துவத்தைப் பற்றி அடியேன் அறிந்த வரையிலும், அதற்கேற்ற நம்மாழ்வார் பாடலும் தந்திருக்கிறேன்.

பெருமாளின் அவதாரங்களில் எது சிறந்தது, எது நிறைந்தது என்றெல்லாம் சொல்லமுடியாது. ஒவ்வொரு அவதாரமும் ஒவ்வொரு வகையில் சிறந்தது. ஆனால் நரசிம்ம அவதாரம் இருக்கிறதே.. அந்த அவதாரம் வந்த காலகட்டத்தை நாம் சற்று கூர்ந்து ஆராய்ந்தால் சில தகவல்கள் வியப்பூட்டும்.

ஹிரண்யகசிபு, ஒரு சிறந்த அரசனாகத்தான் பொதுவாகப் போற்றப்பட்டிருக்க வேண்டும், அவன் ஆட்சியைப் பொறுத்தமட்டில் மக்கள் அப்படித்தான் நினைத்திருக்க வேண்டும். பாருங்கள், பூமியில் வாழும் மானிடருக்கு பொதுவாக வாழ்க்கையில் என்ன தேவை?

நிம்மதியான வாழ்க்கை,
சுகமான வாழ்க்கை,
கேளிக்கை நிறைந்த வாழ்க்கை,
கவலையற்ற வாழ்க்கை,
பருவ காலத்தில் சரியாகப் பெய்யும் மழை, பயிர் விளைச்சலில் நல்ல மகசூல், பொருட்செல்வம், மக்கட்செல்வம், பிரச்சினைகள் அறவே இல்லாத போக்கு, பொதுவாக மக்களுக்கு இது போதாதா..

இவை அனைத்தையும் ஹிரண்யகசிபு கொடுத்திருக்கவேண்டும். மூவுலகையும் ஒரு சேர ஆண்ட அவனுக்கு மழையையும் செல்வத்தையும் தருவிப்பது அத்தனை கடினமா.. ஆனால் அதற்கு அவன் கொடுத்த விலை, அசுரத் தவம் பெற்று கேட்டுக்கொண்ட வரங்கள். அந்த வரங்கள் மூலம் தேவர் முதலாக அனைவரும் அவன் அடிமைகள். போகவாழ்க்கை அனைவருக்குமே.. ஒரே ஒரு நிபந்தனை.. எல்லோருக்குமே இவன் ஒருவனே கடவுள்.. இவன் பெயரை உச்சரித்தால் போதும்.. எல்லாம், எல்லாமுமே கிடைக்கும்.

இப்படிப்பட்ட வாழ்க்கை இப்போது இருந்தால், அதுவும் மாபெரும் உலகாயுதமான வாழ்க்கையில் இந்த ஹிரண்யாயநம எனும் வார்த்தையை யார்தான் சொல்ல மாட்டார்கள்.

ஆனால் இன்னும் நன்றாக யோசித்துப்பார்த்தால், இதுவும் ஒரு வாழ்க்கையா என்று தோன்றும், இந்தக் காலத்தில் நடிகை வீட்டு நாய்க்குட்டிகளும், பூனைக் குட்டிகளும் கூட ராஜ போகத்தில் வாழுகின்றன. வேளா வேளைக்கு நல்ல புரதச் சத்தும், வைட்டமின் களும் கலந்த உணவாக, இன்றைய மாட்டுப்பண்ணைகளில் உள்ள மாடுகளுக்குக் கொடுக்கப்படுகிறது. வலிதெரியாமல் பாலைக் கூட முழுவதுமாகக் கறந்து விடலாம். இதைப் போல மேலைநாடுகளில் உள்ள ஆட்டுப் பண்ணைகள். சிறந்த உணவும், பரந்த, பச்சைப் பசேலெனும் திறந்த வெளியில் உல்லாசமுமாக ஆடி ஓடும் ஆடுகளையும், மாலையானால் அவரவர் இருப்பிடங்களுக்குப் போய் பூச்சி, பொட்டு, கொசு  தொந்தரவு கூட இல்லாமல் தூங்கும் பண்ணைகள் உண்டு. இவைகளுக்குதான் என்ன குறை? அவற்றைப் பொருத்தவரை அது சொர்க்கபோகம் அல்லவா..

இவைகளைப் போலவே இல்லாமல் சற்றுக் கூடுதலாக இன்பமாக நினைந்து உணர மனித ஜன்மம் கொடுத்து, அவர்களையும் செல்வத்தில் தழைக்க வைத்து, கேளிக்கை விருந்தோடு, ஆட்டமும் பாட்டமும் பாடிக்கொண்டு இந்தப் பண்ணை போன்ற இடங்களில்  அல்லது ஊரில் விட்டு விட்டால் (அவ்வப்போது ஹிரண்யாயநம என்ற வார்த்தையும் சொல்லிக் கொண்டு) ஆஹா.. இன்பமேதான்.. இதுவே சொர்க்கம்தான்.

இது உண்மையிலேயே நிலையான இன்பமா.. இல்லை துன்பமா..

மனிதப் பிறப்பு ஒரு விசித்திரம் மட்டுமல்ல,
தெய்வத்தின் அருள் கூட..
மனிதப்பிறப்பே அடுத்த பிறவிக்கும்,
பிறவியில்லாமைக்கும் திறவுகோல்..
மனிதன் சுதந்திரமான சிந்தனைக்கு உரியவன்.
இந்த சிந்தனை எனும் அரிய மருந்து
அவன் அந்த பிறப்பை எப்படி அந்த சிந்தனையின் மூலம் தெய்வபக்தியில் செலுத்தி சரியாகப் பயன்படுத்தி,
இந்த பிறப்பின் மூலம் மேம்பாடு அடைவதற்காக அருளப்பட்டது. மனிதன் சிந்தனை எப்போதுமே சுதந்திரத்தின் மீதே இருக்கும்.. இருக்கவேண்டும்.. அந்த சுதந்திரம் ஒன்று இருந்தால் மட்டுமே மனிதனாகப் பிறந்த காரிய சித்தி அடையமுடியும்.

ஆனால் எத்தனைதான் இன்பங்கள், எத்தனைதான் கவலையற்ற, பிரச்சினைகளற்ற வாழ்க்கை கிடைத்தாலும் சுதந்திர சிந்தனை இல்லாமல் வாழ்வது என்பதும் வசதியான மாட்டுப்பண்ணையில் வாழ்வது ஒன்றுதான். இல்லையா பின்னே! பகவானை வணங்காமல் வாழும் ஒரு வாழ்க்கையும் வாழ்க்கையா..

இப்படிப்பட்ட மாட்டுப்பண்ணைகளையும, ஆட்டுப்பண்ணைகளையும்தான் ஹிரண்யகசிபு ஆண்டுகொண்டிருந்தான்.

இதை உணர்ந்த பெரியோர்கள், அவர்கள் முனிவர்களாக இருந்தாலும், யோகிகளாக இருந்தாலும், தேவ தேவர்களாக இருந்தாலும் ஏதும் செய்யாத நிலை.. இந்த நிலையில் இருந்து மனிதகுலத்தைக் கரையேற்றுவதற்காகவே பூமியில் பிறந்தவன் பிரகலாதன். ஹிரண்யகசிபுவின் சொந்த உதிரத்தில் உதித்த மகன். ஆனால் தந்தை பேரை நாமமாகச் சொல்ல மறுத்து நம் எல்லோருக்கும் பொது நாமம் நாராயணனே என்று சின்னஞ்சிறு குழந்தையாக இருந்து ஆனானப்பட்ட, சகல ஜீவிகளுக்கும் தலையாக இருந்த தந்தைக்கே சவால் விட்டவன். இதுவரை யாருமே கேட்காத, கேட்டாலும் வராத தெய்வம் இந்த சிறுவனுக்காக கூப்பிட்டால் வருமோ.. எங்கே வரவழை உன் நாராயணனை இங்கே, என்னுடைய வெற்றிக்கற்களால் கட்டப்பட்ட தூணில்..’ என்றான் ஹிரண்யகசிபு.

பிரகலாதனுக்காக, அவன் ஒருவனுக்காகவா நரசிம்மர் அவதாரம் எடுத்தார்?.. அந்த ஒருவன் கேட்டதால் நரசிங்கம் வந்தது என்னவோ வாஸ்தவம்தான்.. ஆனால் பிரகலாதன் ஒரு கருவி, மனிதகுல மேம்பாடே இங்கு முக்கியம்.. நரசிங்கம் ஹிரண்யகசிபுவை நகத்தால் கிழித்தது. அழித்தது. ஒரு மாய உலகை சிருஷ்டித்து மனிதகுல சூத்திரத்தைக் குலைத்தவன் ஹிரண்யகசிபு. பிரகலாதன் நம்பிக்கையாக கேட்டான். உடனே ஓடி வந்தது நரசிங்கம்.. உலகத்தையும் ரட்சித்தது.

இந்த அரக்கன் போனதால் மனிதகுல தர்மம் பிழைத்தது.. மனிதனுக்கு உண்மையான சுதந்திரத்தை, அந்த சுதந்திரத்தின் மூலமாக மனிதன் சிந்திக்க மறுபடி கற்றுக் கொண்டான். தனது பிறப்பின் பெருமையை உணரத் தலைப்பட்டான். இப்படி மனித குலத்துக்காகவும், மனிதப் பிறவியை மேம்பாடு செய்துகொள்ளவும் மாபெரும் சந்தர்ப்பத்தை மனிதர்களுக்குக் கொடுத்தருளிய நரசிங்கத்தை நம்மாழ்வார் பாடும்போது தன்னையே மறந்து விடுகிறார். ஏனெனில் நம்மாழ்வாரே மனிதரை மேம்படுத்த வந்தவர். ஆனால் அவருக்கும் முன்னேயே எத்தகைய ஒரு மாபெரும் பணியை மனிதகுல மேம்பாட்டுக்காக தம் தலைவர் நரசிம்மபெருமான் செய்திருக்கிறாரே என்று நினைத்ததும் மேலும் உருகுகிறார்.

ஆடியாடி யகம்கரைந்து, இசை
பாடிப்பாடிக் கண்ணீர்மல்கி, எங்கும்
நாடிநாடி நரசிங்காவென்று,
வாடிவாடும் இவ் வாணுதலே

(அசைந்து ஆடி ஆடி, மனம் நீராய் உருகி, இன்னிசையாக பாடிப் பாடி, கண்கலில் கண்ணீர் நிரம்பி, எல்லா இடத்திலும்பல முறையும் தேடித் தேடி, நரசிம்மா என்று கூவி விட்டு உடனே வாடுகிறாள் இவ்வனிதையே - தாய் தன் பெண் ஆற்றாமையைக் கண்டு வருந்துவதாக இப்பாடல் அமைகிறது)

(படங்களுக்கு நன்றி கூகிளார்.)