Tuesday, March 4, 2014

இருபது வருடமும் இரவல் நிலமும்


ஆயிற்று!

இருபது வருஷம் போன விதமே தெரியவில்லை.. ஓடியே போய்விட்டது. ஆனால் இந்த இருபது வருஷங்களுக்குள்தான் எத்தனை மாற்றங்கள்..

1994 ஆம் ஆண்டில் மார்ச் மாதத்தில் ஒருநாள் திரு ராஜகோபாலன், (முன்னாள் வால்டேர் இணை டிவிஷனல் ரயில்வே நிர்வாகி) அவர்கள் இல்லத்தில் சென்று நானும் திரு சம்பத்தும் ரூ 400 – இதுதான் இன்று மன்றத்தின் இன்றைய சொத்து – என்ற வார்த்தைகளுடன் அந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டதும், அதன்பிறகு எனக்குத் தெரிந்த இருபதே இருபது தமிழ் நண்பர்களை அழைத்து ‘பிரஸ் கிளப்பில் வைத்துக் கூட்டம் கூட்டி, அவர்கள் அனைவரையும் நிர்வாகிகள் குழுவில் போட்டு தமிழ்க் கலைமன்றத்துக்கு புனர் ஜென்மம் கொடுத்ததையும் எப்படி மறக்கமுடியும்.

இன்றைக்கு 111 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஒரு சிறிய கடற்கரை டவுனான வைசாகப்பட்டினம் அன்றைய மதறாஸ் மாநிலத்தில் ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த காரணத்தால் தமிழக வணிகர்கள் சில குடும்பங்களாக இந்த டவுனில் வசித்து வந்ததோடு மட்டுமல்லாமல் தமிழர்தம் ஒட்டுறவு விடுபடாமல் இருக்க ஒரு சில நல்லிதயங்களால் ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த தமிழ்ச்சங்கம். ஆனால் இடையில்தான் எத்தனை எத்தனை இடைஞ்சல்கள்.. சென்ற நூற்றாண்டில் நடந்த சுதந்திரப் போராட்டம், நடுவில் நள்ளிரவில் கிடைத்த சுதந்திரம், கூண்டோடு வெளியேறிய வெள்ளையர் கூட்டம், சுதந்திரத்துக்குப் பின் பிரிந்த மொழிவாரி மாநிலங்கள், சுதந்திரம் அடைந்த உடனே அப்போது இருந்த வறுமை நிலையிலிருந்து மீள வேண்டிய கட்டம், தொழில்மயமாக்கம், விவசாய தன்னிறைவுப் போராட்டம், கட்சிகள், அரசியல் என அனைத்திலும் விசாகப்பட்டினமும் அத்துடன் தமிழ்ச்சங்கமும் சேர்ந்து திண்டாடியதுதான். விசாகப்பட்டின வளர்ச்சி என்பது காலத்தால் நிதானமாகக் கிடைத்த வளர்ச்சிதான். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் பங்கேற்றுக் கொண்டு வளர்க்கப்பட்டதுதான் இந்த நகரம். சென்ற நூற்றாண்டில் இங்கு ஆந்திர பல்கலைக்கழகத்தில் தமிழர் தலைமையில் கல்வி மிகச் சிறப்பாக வளர்ச்சியடைந்ததை யார் ஒதுக்கிவிடமுடியும். சென்ற நூற்றாண்டில் தமிழர் தலைமையில் நல்ல நிர்வாகமே கொடுக்கபட்டு நகர வளர்ச்சியில் பங்கு பெற்றதை யார் மறக்கமுடியும்.. துறைமுகமாக இருந்தாலும் சரி, கப்பல் கட்டும் தொழிற்சாலையாக இருந்தாலும் சரி, உக்குத் தொழிற்சாலையாக இருந்தாலும் சரி, அல்லது தமிழர்களின் பங்கு இந்த நகரத்துக்கு ஏராளமாகக் கிடைத்து வளர்ச்சி விகிதம் பெருக்கப்பட்டது என்பதையும் யாரால் மறுக்கமுடியும்.. இன்றும் கூட சுற்றுலா என்ற பெயரில் ஏராளமான மக்களை ஈர்க்கும் நீர்மூழ்கி கப்பல் அருங்காட்சியகம் (மியூசியம்) ஒரு தமிழரால் நிர்மாணிக்கப்பட்டது என்பது எத்தனை பேருக்குத் தெரியுமோ, எத்தனையோ தமிழ் வணிகர்கள் எத்தனையோ தமிழ் தொழிலாளிகள், எத்தனையோ தமிழ் மீனவர்கள், எத்தனையோ தமிழ் அதிகாரிகள் யாரையென விடமுடியும். பிராந்தியத்திலேயே முதன் முதலாக விநாயகர் கோயில் கூட ஒரு தமிழரால்தான் இந்த நகரத்தில் கட்டப்பட்டது என்பதும் இன்றைக்கு நகரின் நடுமையத்தில் நடுநாயகமாக நகருக்கே கம்பீரமாக சம்பத் விநாயகர் தன் கோயில் வாசலிலே தமிழ்ப்பெயரைப் பொறித்துக் கொண்டு தமிழரால் பூசை செய்யப்பட்டுத் தானும் மகிழ்ந்து தன்னை நாடி வருபவரையும் மகிழ்விப்பதை எப்படி வர்ணிக்க முடியும்.. இன்றைக்கும் இங்கே உள்ள தெலுங்குப்பெரிசுகள் தங்கள் இளமைக்கால மதறாஸ் படிப்பு அனுபவங்களை  பகிரும்போதெல்லாம் அவர்கள் கண்களில் பளிச்சென மின்னல் ஒன்று அடிக்குமே.. அந்த ஒளியைப் பார்த்தால், அந்த அனுபவத்தைக் கேட்டால் அல்லவா நமக்குத் தெளிவாகப் புரியும்..

அவ்வளவு ஏன். 12ஆம் நூற்றாண்டு தமிழ்க்கல்வெட்டுகள் இரண்டுதானே இந்த பிராந்தியத்தின், குறிப்பாக விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சிம்மாசலத்தின், அதன் கோயிலின் பழமையை வெளியுலகுக்குப் பறைசாற்ற உதவின.. இதையெல்லாம் ஏன் சொல்கிறேனென்றால் தமிழருக்கும் இந்த நகருக்கும் ஏற்கனவே இருந்த பிணைப்பு அப்படிப்பட்டது என்பதைச் சுட்டிக் காட்டத்தான்.

இப்படிப்பட்ட பிணைப்பில் இருக்கும் இந்த நகரில் தமிழருக்கென ஒரு சங்கம் என எப்போதோ ஏற்பட்டு அது இருந்தும் இல்லாமல் இருந்த நிலையில்தான் சரியாக இருபது வருடத்துக்கு முன் இருந்தபோது அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டோம். நான் விஜயவாடாவில் இருக்கும்போதே திரு சம்பத் எனதருமை நண்பர், என் நலம் விரும்பி. இருவருமே விஜயவாடாவிலிருந்து இடம்பெயர்ந்து விசாகப்பட்டினம் குடியேறினாலும் எப்போதாவது நகரத்தில் சந்திக்கும்போதும் எங்கள் விஜயவாடா நினைவுகள் அந்த அனுபவத்தைத் தவிர எங்களை வேறு பேச்சு பேசவைக்காது. இந்த நிலையில்தான் 1994 ஆம் ஆண்டு ஆரம்பகாலத்தில் ஒரு சுபதினத்தில் சாலை ஓரம் தேனீர் அருந்தும் சுபவேளையில் அந்த சூடான தேநீரின் சூட்டோடு சூடாக இங்குள்ள தமிழ்ச்சங்கத்தை நாம் ஏன் எடுத்து நடத்தக்கூடாது.., மறுபடியும் ஆரம்பத்திலிருந்து துவக்குவோமே என்று கேட்டு உடனே அதற்கான பதிலாக ‘செய்வோம்என கோரஸாகச் சொல்லிவிட்டு செயலில் இறங்கிவிட்டோம். நாங்கள் ‘செய்வோம்என்றபோது வானத்தில் அஸ்வின் தேவர்கள் ஆசீர்வதித்தார்கள் போலும். அந்தச் சமயம் பார்த்து ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி ராஜகோபாலன் அவர் தலைமையில் அன்றைய நிலையில் தமிழ்ச்சங்கத்தின் ஷீணதிசைப் போக்கைச் சொல்லவும், இனி தாங்காது என்றும் தயங்காமல் சொல்லிவிட்டு எங்களிடம் பொறுப்பை ஒப்படைத்ததும் கூட தெய்வசங்கல்பம் போலும்..

தமிழ்ச்சங்கம் என்பது தமிழர்களுக்கான ஒரு சேவையாகக் கருதிச் செய்யும்போதும், நல்ல உழைப்பை நல்கும்போதும், பணிவுடனும் பாங்குடனும் செயல்படும்போதும், அந்தச் செயல்களில் ஏதும் சுயநலம் கலக்காத போதும், அனைவரையும் அரவணைத்துச் செல்லும்போதும், அந்தச் சங்கம் நிச்சயம் வளர்ந்து கொண்டே போகும் என்பதுதான் இத்தனைகால அனுபவத்தில் நாங்கள் அங்கே கற்றபாடம்.

இந்தப் பாடம்தான் ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற உயர்ந்த தமிழ்ச் சொல்லின் பொருளை அழகாக விளக்கி அந்த உயர்சொல்லையே எங்கள் கொள்கையாக்கியது.. இந்தப் பாடம்தான் விலாஸமில்லாத தமிழ்மன்றத்துக்கு எப்படியும் ஒரு தனிப்பட்ட சொந்தமான விலாஸத்தைப் பெற்றுத் தரவேண்டுமென்ற உந்துதலை ஏற்படுத்தியது. திரு சம்பத் தொடர்ந்து பதின்மூன்று ஆண்டுகளாக தலைவர், அடியேன் தொடர்ந்து பதினாறு ஆண்டுகளாக  செயலாளர் என எங்கள் ஓட்டத்துக்கு ஊக்கச் சக்தி கொடுத்ததும் அந்த உயரிய சொல்தான். அதுவே ஆந்திர அரசாங்கத்தை நாடி தமிழருக்கென ஒரு இரவல் நிலமாவது வேண்டும் என்று கேட்டுப் பெறப்பட்டதும், இரவல் நிலமே ஆனாலும் நிரந்தர விலாஸம் பெறவேண்டும் என்ற சங்கல்பத்தையும் பெற்றுத்தந்தது. சங்கத்துக்கு புனர்ஜென்ம்ம் கொடுக்கப்பட்ட பத்தே ஆண்டுகளில் தமிழருக்கென ஒரு சொந்தக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டதும், தமிழர் நாடுகடந்து வசிக்கும் வேறு ஒரு மாநிலத்தில் தங்கள் சங்கத்தின் நூறாண்டு நிறைவு விழாவினை ஆயிரக்கணக்கில் தமிழ்மக்கள் கூட ஒன்று சேர்ந்து கொண்டாடியதும் எதிர்காலம் அறிந்துகொள்ள வேண்டும்தான். இந்த உயர்வுக்குக் காரணம் நானும் திரு சம்பத் மட்டுமா.. எத்தனை சேவை உள்ளங்கள்.. எத்தனை நல்லிதயம் கொண்டோர், எத்தனை துடிப்பான செயல்வீரர்கள் இவர்கள் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி சங்கத்தில் பதித்திருக்கிறோம்.. ஏனெனில் எதிர்காலத் தமிழ் உலகம் விசாகப்பட்டினத் தமிழரின் உழைப்பை நிச்சயம் அறிய வேண்டுமல்லவா..

இந்த இருபது வருடங்களில்தான் எனக்கு எத்தனை உயரிய பண்பான நண்பர்கள் இந்த சங்கத்தின் மூலமாகக் கிடைத்தார்கள் என்பதையும் எண்ணிப்பார்க்கிறேன். இவர்கள் அனைவருமே எனக்கு இந்த விசாகை மாநகரம் தந்த பரிசுதான். நான் மகிழும்போது இவர்கள் மகிழ்வதற்கும், துயரப்படும்போது துயரத்தில் பங்குகொள்வதும் நான் பெருமைப்படும்போதெல்லாம் அந்தப் பெருமையைக் கொண்டாடுவதும் இப்படி என்னை ஒரு பாக்கியசாலியாக்கிவிட்டவர்களை எப்படிப் போற்றுவது என்றுதான் தெரியவில்லை.

ஆனாலும் இந்தத் தமிழ்ச்சங்கம் மேலும் மேலும் புகழடையப் போகிறது என்றுதான் என் உள்ளத்துப் பல்லி சொல்கின்றது. இரவல் நிலத்தில் இல்லம் கட்டினால் போதாது.. இரவல் நிலத்தை இனி வரும் இளையவர்கள் நிரந்தர நிலமாக மாற்றிக் காட்டுவார்கள் என்று உறுதியும் சொல்கிறது. என் உள்ளத்து பல்லி சொன்னது இதுவரை பொய்த்ததில்லை

இன்னும் எத்தனையோ ஆவல்.. தமிழர் இல்லத்தில் தமிழ் மிக நன்றாக ஒலிக்கவேண்டும், தமிழர்தம் பிள்ளைகள் தம் மொழியைப் படிக்கும் திறன் பேணவேண்டும், இத்தரணியின் தமிழ்மகளிர்தம் சேவை பாரறிய வேண்டும்.. தமிழுக்குக் கதியான பாரதியின் சிலை ஒன்று விசாகை பதியில் நிறுவ வேண்டும், ஆவலோ அல்லது ஆசையோ, ஆனால் இவையெல்லாம் இனி வருவோர் நிச்சயம் செய்வார்கள், விரைவில் நிறைவேற்றுவர் என்ற நம்பிக்கை மட்டும் நாள்தோறும் கூடுகிறது என்ற உண்மையை மட்டும் சொல்லிவிடத்தான் வேண்டும்.

’செய்வார்கள்’ என்று சொல்வதை வானத்தில் அஸ்வின் தேவர்களும் ஆமோதிக்கிறார் என்றுதானே சொல்லவேண்டும்!! 


படங்கள் மேலிருந்து கீழ் வரிசையில் 1. சம்பத் விநாயகர் கோயில்
2. நீர்மூழ்கி கப்பல் மியூசியம் 3. சிம்மாசல கோயில் 4. .விசாகை தமிழ்ச்சங்கத்துக்கு வருகை புரிந்து இதே போன்று புவனேஸ்வரத்திலும் சங்கத்துக்கென கட்டடம் கட்டி முடித்த புவனேஸ்வர் தமிழ்ச்சங்கத் தலைவரும், பொருளாளரும் 5. அடியேனும் திரு சம்பத் அவர்களும் - படம் உதவி - உதயன்.