Follow by Email

Wednesday, December 23, 2009

மார்கழியில் ஆந்திரம் மாறும் விந்தை

மார்கழி மாதம் மிதமான பனியோடு சில்லென்று ஆரம்பித்து விட்டது. மார்கழியோடு மனம் குளிர திருப்பாவையும் கேட்க ஆரம்பித்துவிட்டோம். தமிழகத்தில் எப்படியோ. ஆனால் ஆந்திரத் திருநாட்டில் எங்கு பார்த்தாலும் திருப்பாவை தமிழில் ஒலிக்கிறது. பாரதி ஒருவேளை இங்கு வந்தால் 'அடடே! தெருவெங்கும் தமிழ்முழக்கம் செழிக்கக் செய்வீர்’ என ஆணையிட்டோமே, தமிழர்கள் செய்து காட்டிவிட்டார்களே..- பலே!!.. என்று மீசையை முறுக்கிக்கொள்வான். (பிறகு அவனுக்கு நாம் நினைவுபடுத்த வேண்டும்.. 'இது தந்தைநாடான தமிழ்நாடல்ல தலைவா..சுந்தரத்தெலுங்கு என்று சொன்னாயே.. அந்தத் தெலுங்கு நாடு' என.)

ஹைதராபாத், செகந்திராபாத், விஜயவாடா, ராஜமுந்திரி, குண்டூர், கர்நூல், காளஹஸ்தி, காக்கிநாடா, விசாகப்பட்டினம் (திருப்பதி கேட்கவே வேண்டாம்-திருமலையிலோ முப்பது நாளும் சுப்ரபாதத்துக்குப் பதிலாக ஆண்டாளின் தமிழோசைதான்) இன்னும் எத்தனையோ நகரங்களில் சாயங்கால வேளையில் பனியில் நனைந்துகொண்டே ஆங்காங்கே கூட்டங்கள் அமர்ந்திருக்க, ஒரு பெரியவர் அல்லது பெண்மணியார் தமிழில் திருப்பாவைப் பாடி அதற்கு தெலுங்கில் விரிவுரையும் விளக்கவுரையும் கதையாகச் சொல்கின்றார்கள். தெலுங்குக்காரர்கள் தமிழ் பேசும்போது 'ழ' ‘ற’ 'ள' நாக்கில் சரியாகப் பிறளாது (நம்மூரில் மட்டும் என்ன வாழ்கிறதாம்? - என யாரும் கேட்கவேண்டாம்) ஆனாலும் அவர்களின் மழலையின்பத் தமிழ்ப் பேச்சு காதில் இன்பத் தேனாய் விழுகிறது. சொல்பவரும் கேட்பவர்களும் அத்தனைபேரும் தெலுங்கர்களே. நம்மை விட பக்தியாய் மிகவும் ஊன்றிப்போய் கேட்கிறார்கள்.

இந்த பக்தி இயக்கம் (அப்படித்தான் சொல்லவேண்டும்) கடந்த முப்பது வருடங்களாகவே ஆந்திராவில் பெருகி வருகிறது. இதற்கெல்லாம் காரணம் ஒரு வைணவப்பெரியவர். பெயர் – ஸ்ரீபாஷ்யம் அப்பளாசார்யுலு. பரமபதம் அடைந்து சில வருடங்களாகிறது. பழுத்த வைணவப்பழம். தெலுங்கு மற்றும் வடமொழியில் மன்னர். காசி பல்கலைக்கழகம் அவர்களாகவே இவரிடத்தில் வந்து 'மஹோபாத்தியாய' பட்டத்தைக் கொடுத்து விழா எடுத்தார்கள். இவர்தான் ஆந்திரத்தில் திருப்பாவை - முப்பது பாடல்களையும் முப்பது நாட்கள் உபன்யாஸமாக தெலுங்கு மக்களிடையே பரப்பிய மகான். இவரால் கற்பிக்கப்பட்ட எத்தனையோ பண்டிதர்கள் இன்று ஊரெங்கும் திருப்பாவை தமிழ்பரப்பி வருகிறார்கள். இவருடைய சிஷ்ய பரம்பரை ஆந்திராவெங்கும் பரவி இருக்கிறார்கள். ஆந்திராவில் வைணவப் பெரியவர்களான சின்ன ஜீயரும், ஸ்ரீமன் ராமானுஜ ஜீயரும் அப்பாளாச்சார்யுலுவிடம் பயின்றவர்கள்தான். சின்ன ஜீயர் வெகு அழகாக தமிழ் பேசுவார் என்பது ஒருபக்கம் இருந்தாலும், திருப்பாவையால் தமிழ் ஆந்திராவெங்கும் பரவுகிறது என்று கேட்கவே எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது பாருங்கள்.

உடையவர் ஸ்ரீராமானுஜர் செய்த மிகப் பெரிய சமுதாயப் புரட்சி என்பது சாதிகளை ஒன்று சேர்த்ததுதான். அவர் செய்த அந்த மாபெரும் சேவை சொந்த வீடான தமிழகத்தில் தற்சமயம் எப்படி இருக்கின்றதோ அறியேன்.. ஆனால் அடுத்த வீடான ஆந்திரத்தில் மட்டும் மிகப் பெரிய வெற்றியாக ஆண்டாண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. பார்ப்பனர், ஷத்திரியர், வைசியர் மூவரும் கலந்த ஒரு ஜாதி இங்கே ஆந்திரத்தில் ஸ்ரீவைணவ சேவை செய்து வருகிறது. இந்த மூன்று ஜாதிகளும் கலந்ததால் அவர்கள் த்ரைவர்ணிகா என்றே அழைக்கப்படுகிறார்கள். எல்லோருமே நல்ல செல்வந்தர்களோ என்றுதான் நினைக்கத் தோன்றும் ஏனெனில் இந்தக் குழுமத்தார் நகைக்கடைகளை ஆந்திராவெங்கும் நிறுவி வணிகம் செய்து வருகின்றனர். இந்த த்ரைவர்ணிகர்களுக்கு ஒவ்வொரு ஊரிலும் (ஆந்திர மாநிலத்தில்) அவர்களுக்கென தனிப்பட்ட விதத்தில் வழிபாட்டு மண்டபம் அமைத்துக் கொள்வர். அத்தனை மண்டபங்களும் ராமானுஜரின் பெயரில்தான் அழைக்கப்படும். இங்கு இவர்கள் வழிபடும் தெய்வங்கள் ராமானுஜர், நம்மாழ்வார், ஆண்டாள், மேலும் வழிபாட்டு மொழி தமிழ். அதாவது திவ்யப்பிரபந்தமும் ஆண்டாள் பாசுரங்கள் மட்டுமே. வேறு வகையில் இவர்களுக்கு தமிழ் மொழி சுத்தமாக வராது. தமிழில் சென்று சாதாரணமாக இவர்களிடம் பேசினாலும் புரியாது. ஆனால் ‘சிற்றஞ்சிறுகாலே’ என்று தமிழில் ஆரம்பித்தாலே போதும், உடனே ‘வந்துன்னை சேவித்து உன் பொத்தாமரை’ என்று மற்ற வரிகளைப் பாடத் தொடங்கி விடுகின்றனர். இவர்களுக்கு (ற்றா. ழ, போன்ற வார்த்தைகள் வராது)
இவர்களுக்கெல்லாம் பரமாச்சாரியராக விளங்கியவர் ஸ்ரீபாஷ்யம் அப்பளாச்சார்யலு,

அவர் பரமபதம் சேர்ந்தபின்பு ஜீயர் பெருமக்களையே தங்கள் குலகுருவாக ஆக்கிக் கொண்டார்கள். ஸ்ரீபாஷ்யம் அப்பளாசார்யுலுவின் திருமகளான திருவேங்கலம்மா அவர்களும் தமிழில் அதுவும் வைணவத் தமிழ்ப் பாடல்களில் நல்ல பாண்டித்யம் உள்ளவர்தான். இவரைப் போலவே நூற்றுக்கணக்கான ஆச்சாரியர்கள் ஆந்திராவெங்கும் இந்த மார்கழி மாதத்தில் கோதைத்தமிழின் பெருமையைப் பேசச் தொடங்கி விடுவார்கள். இவர்கள் பேசும் மார்கழிக் கூட்டங்கள் பெரும்பாலும் மாலை நேரத்தில்தான் தொடங்கும். பொதுமக்கள் ஏராளமாக வந்து இவர்கள் தமிழ்ப் பாடல் பாடுவதையும் அதன் விளக்கங்களையும் சுவையாக கேட்பார்கள். இந்த ஆண்டாள் என்ன மாயம் செய்தாளோ இத்தனை அழகாக பாடியிருக்கிறாள் என்று ஆன்மீக உள்ளங்கள் ஆழ்ந்து வியக்கும் வகையில் இந்த ஆச்சாரியார்கள் விளக்கங்களை கதை போல சொல்வார்கள். கேட்டு வியக்க இரு செவிகள் என்ன, ஓராயிரம் செவி கூட போதாதோ என்று ஓரொரு சமயம் தோன்றும்.அவர்கள் தெலுங்கு விளக்கம் - உங்களுக்காக நம் அழகிய தமிழிலே:
அவள் காத்திருக்கிறாள்..தோட்டத்திலே.. அதுவும் குளக்கரைப் படித்துறையிலே - குளத்தில் மலர்ந்த அல்லி மலர்கள் விரிந்து அவள் கண்களோடு தன்னை ஒப்புநோக்கிப் பெருமை அடையும் அந்த இரவு நேரத்தில் அவள் காத்திருக்கிறாள்

எப்படியும் கண்ணன் வருவான்,- அவன் சொல்லிவிட்டான், இரவு ஆரம்பிக்கும்போது வந்துவிடுவேன் என்று..- அவன் சொன்ன சொல்லை எப்படியும் காப்பாற்றுபவன்தான்.. - இன்று வரை அப்படி காப்பாற்றிக் கொண்டிருப்பவன்தான்.. அவனை நம்பு மனமே.. பொறுமை வேண்டும்.. காதலுக்குப் பொறுமைதான் தோழன்.. ஆகவே சற்றுப் பொறுத்திரு.. இரவு வந்துவிட்டதே என்று ஏன் பரபரக்கிறாய்?.. அவன் வருவேன் என்று வாக்குக் கொடுக்கும்போது நீ நம்பித்தான் ஆகவேண்டும் மனமே.. பொறுத்திருக்கத்தான் வேண்டும்.. ஆனால் எத்தனை நேரம்தான் காத்திருப்பது.. என்ன பெரிய நேரம்.. அப்படி தாமதம் ஆனால் ஆகட்டுமே.. நேரம் கடந்து போனால் என்ன.. போகட்டுமே.. வருவேன் என்று சொன்னவன் வராமல் போய்விடுவானா..

வருவான்.. எனக்காக வருவான்.. வந்துதான் ஆக வேண்டும்.. என்னை ஏமாற்றமாட்டான் அந்த செந்தாமரைக் கண் கொண்ட என் கண்ணன்.. இந்த இரவு இப்படி வீணாகப் போகின்றதே என்று ஏன் மனமே கிடந்து அல்லாடுகிறாய்.. தவிக்காதே.. வந்துவிடுவான்.. காலை வருவதற்குள் வந்துவிடுவான்.. அட.. அதோ பார் .. பின்னால் அவன் காலடி ஓசை கேட்கிறதே.. என் கண்ணன் வந்துவிட்டான்.. என் மன்னன் தான் .. அவனே தான்.. அவனை அணு அணுவாய் ரசிப்பவளாயிற்றே.. அவன் காலடி ஓசையை கண்டுகொள்ளமுடியாதா.. கள்ளன்.. எத்தனை மெல்லமாக வருகிறான்.. வரட்டும்.. அவனே வந்து தன் கள்ள முகத்தைக் காண்பிக்கட்டுமே.. நான் ஒன்றும் அவனுக்காகவே காத்திருக்கவில்லை என்பதை எப்படி உணர்த்துவதாம்.. அவனாகவே தெரிந்து கொள்ளட்டுமே.. நாமாக அவனை ஏன் திரும்பிப் பார்க்கவேண்டும்?... இரவெல்லாம் முடிந்து உதய காலத்தில் அல்லவா வந்துள்ளான்..

கண்ணன் வந்தான்.. மங்கை தனக்காக தன்னந்தனியே தலையைக் குனிந்து காலுக்கு முட்டுக்கொடுத்து காத்துக்கொண்டிருக்கிறாள்.. தான் வந்ததை அறியவில்லையோ.. மெல்ல அடியெடுத்து மங்கை பின்னே சத்தமில்லாமல் அமர்ந்து தன் கைகளை முன்னே நீட்டி அவள் கண்களை மூடினான்.

தன் கைகளால் பொய்க்கோபத்தோடு அவன் கைகளை விலக்கினாள். குனிந்திருந்த தலையை மெல்ல நிமிர்த்தி தலைக்கு மேல் தெரிந்த தலைவன் கண்களைப் பார்த்தாள். அந்தக் கண்கள் என்னதான் மாயம் செய்ததோ.. அங்கே கோபம் அகல மங்கை மயங்கி வெட்கம் சேர தன் அகல விரிந்த கண்களை மெல்ல மூடினாள். அவனும் மதி மயங்கிப் போய் அந்த அழகு முகத்தைப் பார்க்கப் பார்க்க அவன் கண்கள் அகல விரிந்தன. மங்கையின் அல்லிமலருக்கொத்த கண்கள் மெல்ல மூட, கண்ணனின் செந்தாமரைக் கண்கள் மிகப் பெரிதாகி அவளை அணு அணுவாக ரசிக்கத் தொடங்கிவிட்டது.

"உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பினகாண்"

(ஆண்டாளின் 14ஆவது பாவைப்பாடலின் முதல் இரண்டு வரிகளுக்கு திருவேங்கல அம்மையார் தெலுங்கினில் சொன்னது, செங்கழுநீர் - செந்தாமரை மலர் உதய காலத்தில் விரியும், ஆம்பல் மலர் இரவு நேரத்தில் விரிந்து காலையில் விரிவு சிறிது சிறிதாகக் குறையும்)

Wednesday, December 9, 2009

ஆ. உஷ்.. காரம்.. ரொம்ப ஜாஸ்தி..

ஆவக்காயையும் ஆந்திராவையும் யாராலும் பிரிக்கமுடியாது. மலரும் மணமும் போல என்று கூட சொல்லலாம். ஆவக்காய் ஊறுகாயும் கோங்குரா பச்சடியும் சுவையும், காரமும் கூடியதுதான். சுவையில் மயங்கி முதலில் அதை உண்ணும் தமிழர்கள் அதன் காரத்தில் பிறகு கண்ணீர் விடுவதை பலமுறை கண்டவன் நான். ஆனாலும் விடாப்பிடியாக அந்த ஊறுகாயை உண்டு சுவைத்தே சாப்பாடை முடிப்பார்கள். ‘படு டேஸ்ட் ஊறுகாய், ஆனால் காரம்தான் அதிகம்,’ என்று தங்களுக்கே உரிய பாணியில் ஒரு குறையையும் சொல்லி வைக்கும் நம் தமிழ் நண்பர்களையும் பார்த்திருக்கிறேன்.


நான் முதன் முதலில் விஜயவாடா நகரில் குடியேறிய சமயம், என் நலம் விரும்பிகள் இந்தக் காரவகையறாவைப் பற்றி எச்சரித்துத்தான் அனுப்பினார்கள். ஆனால் அதிர்ஷ்ட வசமாக (அல்லது துரதிருஷ்டவசமாக) இந்த இந்த ஊறுகாயும் பச்சடியும் என்னை ஈர்க்கவில்லை என்றே சொல்லலாம். ஏன் என்றும் எனக்கே தெரியவில்லைதான். அதுவும் ஆரம்பகாலங்களில் சாப்பாடு ஓட்டல்களில் பக்கத்திலே இருப்பவர்கள் மிகுந்த நிதானமாக முதலில் வெற்று அன்னத்தில் ஊறுகாய் விழுது கலந்து நெய்யுடன் சேர்த்து சாப்பிடும அவர்களைப் பார்க்கும்போதே கண்ணில் நீர் வர ஆரம்பிப்பது போல ஒரு உணர்ச்சி தோன்றும். ஆனால் இவை காலாவட்டத்தில் பழக்கமாகிவிட்டது.

தினமும் மாமிசம் உண்ணும் பழக்கம் உள்ளவர்களுக்கு, மாமிசத் துண்டு இல்லாத சாப்பாடு என்பது முடியவே முடியாத செயல் போல நினைப்பர். குறைந்த பட்சம் ஒரே ஒரு துண்டு கறியாவது இருந்தால் போதும். சாப்பாடு கடகடவென இறங்கிவிடும். அதைப் போல ஒரு ஆவக்காய் ஊறுகாய் இருந்தால் முழுச் சாப்பாட்டையும் உண்ணமுடியும் என ஆந்திரமக்களில் பலர் எண்ணுவதுண்டு. அதுவும் உண்மைதான். இந்த ஆவக்காய் ஊறுகாய், இங்கிங்கெனாதபடி எங்கும் எல்லா உணவுவகைகளுக்குமே தொட்டுக் கொள்ள உபயோகிப்பதும் இங்கு உண்டு. ஆவக்காய் இல்லாத வீடும் ஒரு வீடா என்று நினைக்கும் அளவுக்கு ஆந்திராவில் இந்த ஆவக்காய் மக்கள் மணதில், இல்லையில்லை, நாவில் ஊறியிருக்கிறது. அதிகமான காரம் அந்த மணம், ஊறின சுவையோடு கூடிய இந்த ஊறுகாய் எப்படி வழக்கத்தில் இங்கு வந்தது என்பதே ஒரு புதிர்தான். ஆவக்காய் என்றால் கடுகு எண்ணையில் ஊறின காய் என்று பொருள். மாங்காய், கடுகுப் பொடி, பச்சைக் காரம் மற்றும் தேவைக்கு அதிகமாகவே கடுகு எண்ணெய்.. அல்லது நல்லெண்ணெய், சில நாட்களில் சுவையான ஆவக்காய் தயாராகிவிடும்.
(http://food.sulekha.com/avakkai-pickle-id665-14234-recipe.htm)

பொதுவாக ஆந்திராவில் உணவிலிலேயே காரம் அதிகம் உண்டு. அதற்கேற்றாற்போல பூமியும் கந்தக பூமி. சூடு அதிகம். வெய்யிலும் சூடும் காரமும் எப்படி அதிகமோ மழையும் பனியும் சற்றுக் கூடுதல்தான். உணவில் காரச் சுவை அதிகம்தான் என்றாலும் விஜயவாடாவுக்கே உரித்தான பந்தர் லட்டும், காகிநாடா காஜா என்று சொல்லப்படும் இனிப்பும் கூட மிகவும் சுவையானதுதான். காகிநாடா காஜா என்ற பெயர் ஏன் வந்தது என்று பலரை விசாரித்து விட்டேன். ஆட்காட்டி விரல் அளவிலிருந்து அரை அடி வரை நீளமாக உள்ள இனிப்பு இது. அந்த இனிப்பை விரும்பி சாப்பிடுகிறார்களே தவிர யாருக்குமே சரியான வகையில் பெயர்க் காரணம் சொல்லத் தெரியவில்லை. ஆனால் ‘பொனுகோமதி கோட்டையா’ எனும் பிராம்மணர்தான் 1900 ஆம் ஆண்டு வாக்கில் இந்த இனிப்பு வகையை முதன்முதலில் அறிமுகப்படுத்தியதாகவும், இவர் தெனாலியைச் சேர்ந்தவர் என்றும் பிறகு சிறிய அளவில் காகிநாடாவில் முதல் போட்டு இந்த வகை இனிப்பைப் பெரிய அளவில் வியாபாரம் செய்தார் என்றும் அந்தக் கடைக்காரர்கள் காகிநாடாவில் இன்றும் சொல்லிக் கொள்கிறார்கள். மறைந்த முதல்வரும் நடிகருமான என்.டி.ஆருக்கு இந்த காகிநாடா காஜா என்றால் பிராணன் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள். (அவர் பிராணன் போய் பல்லாண்டுகள் ஆகியும் காகிநாடா காஜாவின் ஆயுள் நன்றாகவே நீடிக்கிறது) எது எப்படியோ இந்த சர்க்கரைப் பாகு நீர் போல உள்ளே ஊற வைத்து செதுக்கப்பட்ட மைதா வகை இனிப்புகள் ரொம்பவுமே பிரபலம்தான்.

ஆந்திராவில் நிறைய நகரங்கள் எதிரும் புதிருமாக, பழைமையும் புதுமையாகக் காணக்கிடைக்கும். உதாரணமாக விஜயவாடா நகரத்தைப் பார்த்தோமானால் சில விஷயங்கள் தெரியும். (இதைப் பற்றி ஏற்கனவே ஒரு கட்டுரை கூட எழுதியுள்ளேன்)
விஜயவாடா என்றல்ல, மாநிலத்தின் பல நகரங்களில் இப்படி ஒரு காட்சியைக் காணலாம். ஒரு உதாரணத்துக்குத்தான் விஜயவாடா.

இப்படி எதிரும் புதிருமாகக் காணப்படும் இந்த ஆந்திர நகரங்களில் ஆத்திகமும் நாத்திகமும் கூட சரிசமமான அளவில் உண்டு என்பதைப் போல ஒரு தோற்றம் வரும். சபரிமலையில் வரும் பக்தர்களின் கணக்கு ஒன்று எடுத்தால் மொத்த பக்தர்களில் பாதிப்பேர் ஆந்திராவிலிருந்துதான் ஒவ்வொரு வருஷமும் வருவார்கள். தமிழ்நாட்டு சாமியாராக இருந்தாலும் சரி, எந்த நாட்டு சாமியாராக இருந்தாலும், அவர்களுக்கு சிஷ்யகோடிகள் அதிக அளவில் தேவை என்றால், இதோ யாம் உள்ளோம் என்ற அளவில் ஆந்திரத்து பக்தர்கள் முன்னிற்பர். ஏன், விஜயவாடாவில் இன்றைய கனகதுர்கா ஆலயத்துக்கு சபரிமலை விரதம் போல விரதம் இருந்து செவ்வாடை பூண்டு பவானி என்று பெயர் வைத்துக்கொண்டு லட்சக்கணக்கில் பக்தர் கூட்டம் வருகிறது. (தற்சமயம் ஐந்து நாட்கள் பவானி விரத முடிப்பு திருவிழாவுக்கு பத்து லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று ஆலய அதிகாரி டி.வி பேட்டி கொடுத்தார்) ஒரு காலத்தில் கம்யூனிசத்தின் கோட்டையாக திகழ்ந்த நகரம் இது. இன்றும் ஆந்திராவில் கம்யூனிஸ்டுகளுக்கு மக்களிடையே ஆதரவு அதிகம். கம்யூனிஸ்ட்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. அதே போல, எவ்வித மத, கடவுள் நம்பிக்கையுமில்லாத நக்சலைட்டுகள் என சொல்லப்படும் மாவோயிஸ்டுகளுக்கும் கூட ஆந்திராவில் மக்கள் செல்வாக்கு உண்டு. ராயலசீமா நல்லமலைப் பகுதியும் (ராஜசேகர ரெட்டி விபத்துக்குள்ளான இடம்), தெலுங்கானா பத்ராசலம் அருகே உள்ள காடுகள் மற்றும் விசாகப்பட்டினம் மேற்கே உள்ள வனாந்திரங்கள் எல்லாமே மறைமுகமாக நக்ஸலைட்டுகளின் ஆதிக்கத்தில் இருப்பதாக இன்றும் சொல்வர். ஆனால் இவர்களால் பொதுமக்களுக்கு பிரச்னை அவ்வளவாக இல்லை என்றே சொல்லலாம்.

ஆவக்காய் ஆந்திரா காரம்தான். ஆனால் உள்ளே புகுந்தால் எத்தனை விஷயங்கள் தெரியவருகிறது.. கண்களில் அப்படியே கண்ணீர் வந்தாலும் அது கூட ஒரு சுகானுபத்தில் வருவதுதானே..

Friday, November 6, 2009

தண்ணீர் தண்ணீர்
இந்தியாவில் பொதுவாகவே நதிநீர்ச் செல்வம் என்பது மிக அதிகமாக ‘வெள்ளம்’ போல நிறைந்து காணப்படுவதுதான் பெரிய விசேஷம். ஆனால் இருக்கும் செல்வத்தை எப்படி உபயோகிப்பது என்பது மட்டும் நன்றாகவே நமக்குத் தெரிந்தாலும் நாம் செய்யமாட்டோம். உலகில் நாம்தான் தனி மனித வகை ஆயிற்றே!

பொதுவாகவே ஆந்திரம் மற்றும் தமிழ்நாடு இவை இரண்டுமே வண்டல் மண் நிறைந்த வளநாடாகவே பழங்காலந்தொட்டு இருந்துவருகிறது. தஞ்சையை தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று நாம் அழைத்துக் கொள்கிறோம். ஆனால் தஞ்சை மண்டலத்தை விட மிகச் செழிப்பாக உள்ள இடங்கள் ஆந்திராவெங்கும் மண்டிக் கிடக்கின்றன என்றே சொல்லவேண்டும். தெற்கே நெல்லூரிலிருந்து வடக்கே ஸ்ரீகாகுளம் வரைக்கும் இந்த வண்டல் மண் பிரதேசங்கள் உள்ள அளவுக்கு வேறு எந்த மாநிலத்திலாவது இருக்குமா என்ற சந்தேகம் கூட வரலாம். அந்த அளவுக்கு, நதிகள் மேற்கிலிருந்து மலைப் பிரதேசங்களில் உள்ள கனிமச் சாறு செல்வங்களையெல்லாம் அப்படியே அள்ளிக் கொட்டுகின்றன.

சர்க்கார் எக்ஸ்பிரஸ் என்ற ஒரு ரயில், சென்னையிலிருந்து தினம் காகிநாடாவுக்குக் கிளம்பித் திரும்பி வரும். அப்படி திரும்பி வரும் சமயத்தில் யாராவது அந்த வண்டியில் பயணம் செய்தால் பிற்பகல் பொழுது முழுவதும் பொழுது போவதே தெரியாது. அந்த வண்டி மெதுவாகச் சென்றாலும், வேகமாக சென்றாலும் அதைப் பற்றிக் கவலை கொள்ளாமல் சன்னல் வழியே சுற்றுப் புறத்தைச் சுற்றிப் பாருங்கள். நீங்கள் பார்க்கவில்லையென்றாலும் பார்க்க வைத்து விடும். அப்படி எங்கே பார்த்தாலும் பச்சை பசேலென செழுத்து வளரும் நெல்லையும் கரும்புகளையும் சீசனே இல்லாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வரலாம். கண்ணுக்கும் மனதுக்கும் இனிமையான இயற்கை சூழ்நிலை. அதுவும் கோதாவரி இரண்டாகப் பிரிந்து சற்றே விரிவான பிரதேசத்தில் பாய்வதால் பச்சைப் பசேலுக்கு எங்குமே குறைவிருக்காது.

ஆந்திராவில் இரண்டு பெரிய நதிகளான கோதாவரியும் கிருஷ்ணையையும் தவிர துங்கபத்திரா, வடபெண்ணை, வம்சதாரா போன்ற அகல நதிகளும் உண்டு. அகல நதிகள் என்று குறிப்பிடுவதற்குக் காரணம், அவை பெரிய நதிகள் என்று சொல்ல முடியாவிட்டாலும், அவற்றின் அகலத் தன்மையும் பாயும் அதிக அளவு நீரும் ஆந்திராவுக்கு மிகப் பெரிய பயனைத் தருகின்றன என்றே சொல்லலாம்.
ஆந்திராவை ஏறத்தாழ பாதியாகப் பிரித்துக் கொண்டு கிருஷ்ணை நதி (படத்தில் உள்ள மஞ்சள் கோடு) செல்லுவதைக் காணும்போது, ஆகா, இப்படி ஒரு நதியா என்ற ஆச்சரியம் தோன்றும். நம் காவிரியும் தமிழகத்தைப் பாதியாகப் பிரித்துக் காட்டும் நதிதான் என்றாலும் ஒரு சில இடங்களைத் தவிர மற்ற இடங்களில் நம் காவிரி சற்றுக் குறுகல்தான். மேலும் காவிரியில் ஓடி வரும் தண்ணீரும், கிருஷ்ணையில் ஓடி வரும் தண்ணீரின் அளவையும் ஒப்பிட முடியாது, ஏனெனில், காவிரி குளம் என்றால் கிருஷ்ணை கடல். சீஸன் காலங்களிம் கிருஷ்ணை எங்கும் பொங்கி வழியும் காட்சியை இன்னமும் காணலாம். காவிரியை அப்படியெல்லாம் பார்த்து எத்தனையோ வருடங்கள் ஆயிற்று. சரி, பாதியாகப் பிரித்துச் செல்லும் கிருஷ்ணையில் ஆந்திரர்கள் மிகப் பெரிய இரண்டு அணைகள் கட்டித் தடுத்துள்ளார்கள் (ஸ்ரீசைலம், நாகார்ஜுனசாகர்) என்பது ஒரு சின்ன விஷயம் என்றாலும் இந்த அணைகளை எல்லாம் சாப்பிட்டு கீழே உள்ள பகுதிகளையெல்லாம் ஜலமயம் செய்து வீணாகக் கடலில் கலக்கும் தண்ணீரின் அளவு ஒப்பீட்டு நோக்கில் பார்த்தால் மிக மிக அதிகம். இது போல காவிரியில் தண்ணீர் வீணாகக் கடலில் கலக்க அவ்வளவாக வாய்ப்பில்லை.

கிருஷ்ணை இப்படியென்றால் அந்த நதிக்கு வடக்கே சற்றுத் தொலைவில் ஆந்திராவில் வடக்கு எல்லைக் கோடாக வியாபித்து ஒரு கடலளவு நீரை கையோடு கொண்டுவரும் கோதாவரியைப் பற்றி சொல்லவேண்டிய அவசியமே இல்லை. கிருஷ்ணையின் பயன்பாடு ஆந்திராவின் தெற்கே என்றால் கோதாவரி மற்ற பகுதிகளையெல்லாம் பார்த்துக் கொள்கிறது. இப்படி ஆந்திரா முழுமைக்கும் செல்வம் கொடுக்கும் நதிகள் இவை இரண்டும்.

ஆனால் இப்படிப் பயன் தரும் நதிகள் எத்தனைதான் அழகாகவும் அகலமாகவும் ஆர்ப்பரித்து ஓடி வந்து அற்புதமான வண்டல்மண்ணை வாரி இறைத்தாலும் அவ்வப்போது இந்த நதிகள் மூலம் ஏற்படும் அழிவையும் சொல்லி மாளாதுதான். இந்த நதிகள் மூலம் ஏற்படும் இழப்புக்கு இயற்கையின் மீது பழியைப் போட்டுத் தப்பிக்கவே விரும்புகிறார்கள் நம் ஆட்சியாளர்கள். ஆனால் ஒவ்வொரு வருடமும் நடக்கும் இந்த அழிவை எப்படித் தடுக்கலாம் என்று யோசிக்கவே மாட்டார்கள். ஒவ்வொரு முறையும் கோதாவரி ஜூலை மாதத்தில் பொங்கி வழிந்து கீழை மாவட்டங்கள் நஷ்டமடைவதும், கிருஷ்ணையோ சற்று தாமதமாகப் பொங்கிக் கொண்டு வந்து ஆந்திராவைப் பயமுறுத்திப் போவதை ஓவ்வொரு வருடமும் நீலிக் கண்ணிரோடு பார்த்துக் கொண்டே இருப்பார்கள். அது அழித்து விட்டுப் போனபிறகு வரும் நஷ்டத்துக்கு ஒரு கணக்குப் போட்டு அதையும் ஸ்வாஹா செய்து விடுவதே வழக்கமாகிக் கொண்டிருப்பவரிடம் நஷ்டப்படும் பொது ஜனம் என்னதான் எதிர்பார்க்கமுடியும். ஒரு சின்னக் கணக்கு விவரம் பார்த்தோமானால் கிருஷ்ணாவில் இந்த அக்டோபர் முதல் வாரம் மட்டுமே கடலுக்குள் போன தண்ணீரின் அளவு சுமார் 400 டி.எம்.சி கொள்ளளவு. கோதாவரியிலிருந்து வருடத்துக்கு ஏறத்தாழ 600 டி.எம்.சி கொள்ளளவு என்றால் நதிநீர் எத்தகைய பெரிய அளவில் வீணடிக்கப்படுகிறது என்று பாருங்கள்.

இப்படித்தான் அக்டோபர் முதல்வாரத்தில் கிருஷ்ணா நதியில் வந்த வெள்ளமும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட அழிவுகளும். ஒவ்வொரு வருடமும் ஏற்படும் நஷ்டத்தை விட இந்த முறை சற்று அதிகமாகவே ஏற்பட்டுவிட்டது. இதற்குக் காரணம் இரண்டு. ஒன்று அணைகளின் கட்டுப்பாட்டைச் சரியான முறைகளில் கண்காணிக்காத அதிகாரவர்க்கம், இரண்டு, எதையும் அலட்சியப்படுத்தும் அரசாங்கம்.

அணைகளில், அதுவும் குறிப்பாக நீர்மின்சார உலைகளைக் கொண்ட அணைகள் எப்போதும் ஒரு குறிப்பிட்ட அளவு நீர் கையிருப்பு வைத்திருக்கவேண்டும். அப்படி வைத்திருந்தால்தான் மின்சாரம் தயாரிக்கமுடியும். அப்படி தயாரிக்கும்போது வெளியே விடப்படும் நீர் அவ்வளவு அதிகமாக இருக்காது. இதனால் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இந்த இஞ்சினீயர்கள் இருக்கவேண்டும். ஆனால் தேசம் முழுவதும் இந்த முறை மழைப் பொய்த்துவிட்டது, இனிமேல் மழையெல்லாம் வர வாய்ப்பில்லை எனக் கருதினார்களோ என்னவோ, அளவுக்கு அதிகமாகவே அணைகளில் நீரைச் சேமித்து வைத்திருந்தனர். சரி, நல்ல முன்யோசனைதான். ஆனால் மேலே, மேற்கே மலைச் சரிவுகளில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழையாமே.. அந்த மழைநீர்தானே வெள்ளமாய் திரண்டு சில நாட்களில் நம் அணை மீதும் பாயும்.. அதுவரை ஏன் காத்திருக்கவேண்டும் என்று அணையில் மிதமிஞ்சிய அளவில் உள்ள நீரை முன்கூட்டியே, அதாவது நான்கு நாட்கள் முன்னதாகவே கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றி இருந்தால், அந்த இஞ்சினீயர்கள் சிறந்த முறையில் யோசித்து செயல்படுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் அந்த மலைப் பிரதேச மழையெல்லாம், சும்மா, ஜூஜூபி.. அப்படியே அதிகநீர் வந்தாலும் கர்நாடகத்திலே இருக்கும் இரண்டு பெரிய ராட்சத அணைகளில் வாங்கிக் கொள்வார்கள். அந்த ராட்ச்சர்கள் சாப்பிட்டு ஏப்பம் விட்டு மீந்ததைத்தான் கீழே நமக்கு அனுப்புவார்கள். அப்படி ஏதாவது கொஞ்சம் வந்தால் அப்போது திறந்துவிட்டால் போயிற்று, என்று அலட்சியமாக இருந்ததனால், ஏற்பட்ட நஷ்டம் ஏறத்தாழ 12 ஆயிரம் கோடி ரூபாயாக கணக்கிடப்பட்டுள்ளது. இது பயிர் நஷ்டம், சாலை நஷ்டம், வீடு வாசல் நஷ்டமாக இருந்தால் கூட பரவாயில்லை. நூற்றுக்கணக்கான மக்கள், ஆயிரக்கணக்கில் கால்நடைகள் வேறு உயிரை இழந்திருக்கிறார்கள். எங்கே கொண்டு இவர்களைப் பற்றிய குறைகளை சொல்லி அழுவது.. இங்கேயும் ஒரு சின்ன கணக்கு. ஸ்ரீசைலம் அணையின் மொத்த தண்ணீர் உயரம் சுமார் 895 அடிகள் என்றால் இந்த வெள்ளம் வருவதற்கு முன்னமேயே சுமார் 876 அடி வரை தண்ணீரை சேமித்து வைத்திருந்தார்கள். அதற்கும் கீழே உள்ள நாகார்ஜுன சாகர் அணையின் உயரம் சுமார் 580 அடி உயரம். அங்கும் தேவைப்பட்டதற்கு அதிகமாகவே சேமித்து வைத்திருந்தார்கள்.

கடைசியில் நிஜமாகவே புலி வந்தபோது முழித்துக் கொண்டாலும் என்ன பலன்.. அணைகளால் ஓடிவரும் தண்ணீரை வாங்கமுடியவில்லை.. பின்னோக்கி நீர் தள்ளப்பட்டதால் அங்கே கிடந்த கர்நூல் நகரம் முதற்கொண்டு வெள்ளக்காடு. அடடே, அணைகளைத் திறந்துவிடுங்கள் என்று அரசாங்கம் கட்டளையிட்டவுடன், ஒரேயடியாக லட்சக் கணக்கு க்யூசெக்ட்டில் (10 லட்சத்துக்கும் மேல்) திறந்து கீழே வரும்போது கிருஷ்ணையால் பயன்பட்ட அத்தனை கீழை மாவட்டங்களும் பலியாகிப் போகிறது. இத்தனைக்கும் மேலே அணைகளில் திறந்துவிடப்பட்ட வெள்ளநீர் கீழே விஜயவாடா தாண்ட எடுத்துக் கொள்ளும் கால அவகாசத்திலாவது சில முன்னேற்பாடுகள் செய்திருக்கலாம். ஏதோ பேருக்கு ஒரு வேனில் எல்லோரும் காலிசெய்யுங்கள் என்ற கூப்பாடு ஒன்று போட்டார்கள். அவ்வளவுதான். அப்படி காலிசெய்தவர்கள் எங்கு போவார்கள். அப்படிப் போனால் அவர்களுக்கு என்ன வசதி.. ஊம்ஹூம்..

இத்தனை மத்தியிலும் இந்த டி.வி. மீடியாக்கள் பயமுறுத்தும் கூத்து இன்னொரு வேதனை.. இதோ வெள்ளம், இந்த நகரம் தண்ணீரில் மூழ்கியாகிவிட்டது.. என்பதைப் போல பயமுறுத்தல் மணிக்கொருதரம் வந்துகொண்டே இருக்கும். கிரிக்கெட் ஸ்கோர் கேட்பது போல வெள்ளம் வராத ஊர்களில் உள்ள மக்கள் எந்த ஊர் வெள்ளத்தில் எப்போது மாட்டிக் கொண்டது என்பதாகக் கேட்கும் நிலையைக் கூட உருவாக்கிவிட்டார்கள் இவர்கள்.

அதுவும் இந்த வெள்ளம் வந்தவுடன் அரசாங்க யந்திரம் என்ற ஒன்று செயல்படும் விதம் பார்க்கவேண்டுமே.. வெட்கக் கேடாக முழித்துக் கொண்டு வேடிக்கைப் பார்க்கத் தெரியும் இல்லாவிட்டால் சட்டத்தின் எழுத்துக்களைக் காட்டி மற்றவர் கொடுக்கும் உதவிகளை தடை செய்யத் தெரியும். வெள்ள காலம் மட்டுமல்ல, இயற்கையின் சீற்றங்களுக்கு மக்கள் பலி ஆகும் காலமெல்லாம் உதவி என்று சொன்னால், ராமகிருஷ்ணா மடம், ரெட் கிராஸ் போன்ற பொது அமைப்புகள்தாம் முன்வந்து உதவி செய்கின்றனவே தவிர அரசாங்கம் என்பது இருக்கிறதா என்ன என்பதைப் போலவே இந்த அதிகாரிகள் நடந்துகொள்வர்.

நதிநீர்ச் செல்வம் எத்தனை இன்றியமையாததோ அத்தனை செல்வத்தையும் ஒழுங்காகப் பாதுகாத்துப் பராமரித்துப் பயன்படுத்திக் கொள்வதும் மிக மிக முக்கியம். ஒரு பெரிய மாநிலமே செல்வச் செழிப்பாக இருக்கவேண்டிய அளவுக்கு ஆந்திரம் இத்தனை நாட்களில் வளம் பெற்றிருக்கவேண்டும். எல்லா நதிகளையும் இணைத்து குறுக்காகக் கால்வாய்கள் ஏற்படுத்துவோம் (கட்டுமானப் பணிகள் எல்லாமே பலவீனமானவை என்று நிபுணர்கள் சொல்வதையும் சேர்த்து) என்று அரைகுறையாகவே இதுநாள் வரைச் செய்தார்களே தவிர உருப்படியாக என்ன செய்தார்கள் என்று கேட்கத் தோன்றுகிறது. அப்படி உருப்படியாக செய்திருந்தால், சென்னைக்குப் போடப் பட்டிருந்த தெலுங்குக் கங்கைக் கால்வாய் மிக அகலமாக விரிவு படுத்தப்பட்டு இந்த வெள்ள காலத்தில் சென்னை மட்டுமல்ல வட தமிழ்நாட்டுக்கே அல்லவா பயன் பட்டிருக்கும். தண்ணீருக்கு இப்போதும் தவிக்கும் தென்புலத்தாருக்கு தண்ணீர் ஊற்றிய பெருமை வந்துவிடுமே.. இத்தனைக்கும் ஒரு 15 டி..எம்.சி. தண்ணீர் மட்டுமே சென்னைக்குத் தருவதாக ஒப்பந்தம் வேறு ஒன்று உண்டு. இதையும் ஒழுங்காகத் தருவதில்லை. காரணம் ஆந்திரப் பகுதியில் சரியாக அமைக்கப்படாத வாய்க்கால் கட்டுமானப் பணிகள். (சத்ய சாய்பாபா டிரஸ்ட் உதவியால் ஆந்திர எல்லை-சென்னைக் கால்வாய் உருவாக்கப்பட்டது என்பது உபரி விஷயம்)

கோதாவரியை வடக்கேயும், மத்தியில் கிருஷ்ணையையும், தெற்கே துங்கபத்திரை, வடபெண்ணை.. ஹைய்யோ.. இத்தனை நதிநீரை வைத்துக் கொண்டிருப்பதால் ஆந்திரா இந்தியாவுக்கே அத்தனை செல்வத்தையும் பகிர்ந்து அளிக்கலாமே என்று யாரும் கேட்டுவிடவேண்டாம். நான் தான் முதலிலேயே சொல்லிவிட்டேனே, நமக்கு எல்லாம் தெரியும், ஆனால் செய்யமாட்டோம்..--------------------------------------------------------------------------------

Tuesday, October 6, 2009

தமிழை வாழ்த்தும் தெலுங்கு

தமிழுக்கோர் பூமாலை ஆமுக்தமால்யதாநான் முன்பு கங்கர்களைப் போரில் வெல்வதற்காக அவர்கள் மீது படையெடுத்துச் சென்ற காலத்தில் விஜயவாடா அருகில் சிலவாரங்கள் பாசறை அமைத்தேன். அங்கே உள்ள பெருமாள் கோவிலில் (திவி சீமாவில் உள்ள ஸ்ரீகாகுளம்) ஏகாதசி விரதம் இருந்து அன்றிரவு அங்கேயே உறங்கினேன். அடுத்தநாள் அதிகாலை துவாதசி வரும்போது திடீரென எனக்கு ஒரு அரிய காட்சி கிடைத்தது. ஆஹா.. எப்படி வர்ணிப்பேன் அந்த அதிசய காட்சியை..

நிறமோ, மழையை மடிமீது சுமந்துவரும் மேகங்களை நினைவூட்டுகிறது.. அந்தக் கண்கள்.. ஆகா.. உயர்ந்தவகைத் தாமரை மலர்கள் விரிந்த போது மேலும் செம்மையாகுமே.. அந்தப் பூக்களையும் விட அழகான சிவந்த கண்கள்.. கருடனின் தங்கநிறமான சிறகை விட ஒளி எங்கும் பரவ, மார்பில் கௌஸ்தூப மணி காலைச் சூரியனைப் போல சுடர் விட, பெருமாள் காட்சி அளித்தார். அருகேயே அகலாமல் உள்ள மகாலக்குமி தன் ஒரு கையில் விரிந்த கமலத்தைக் காட்ட, மறு கையால் ஆசியளிக்க, அந்த அற்புதக் காட்சியை எப்படி விவரிப்பேன்.. ஆஹா! இதோ பெருமாளே பேசுகிறாரே..

‘நான் ஆந்திர விஷ்ணு.. நீ வடமொழியில் பல நூல்கள் புனைந்துள்ளாய்.. எனக்காக நீ தெலுங்கு மொழியில் ஒரு நூல் எழுதவேண்டும்.. தேச பாஷைகளில் தெலுங்கு உயரிய பாஷை.. எனக்கு ஒருசமயம் மதுராவில் (வடமதுரை) அளிக்கப்பட்ட மாலையில் அவ்வளவாக மகிழ்ச்சி இல்லை. ஆனால் வில்லிபுத்தூரில் கோதை தன் மாலையை அணிவித்தாளே, அவள் மாலையுடன் ரங்கநாதனைக் கலந்ததைப் பற்றி எழுதி என்னை நீ மகிழ்விக்க வேண்டும். மேலும் அந்த மாலையை திருவேங்கடவன் முன்பு நீ சமர்ப்பிப்பாயாக”


ஸ்ரீகிருஷ்ணதேவராயரின் சொந்த வாக்கியங்கள்தான் மேலே கண்டவை. தெலுங்கு மொழியில் முதல் முதலாய் ஒரு முழு காவியமாக படைக்கப்பட்ட ‘ஆமுக்தமால்யதா’ எனும் காவியம்தான் பெருமாள் மேலே கேட்டுக் கொண்டதற்கிணங்க ஸ்ரீகிருஷ்ண தேவ ராயரால் எழுதப்பட்டதாகும். அந்தக் காவியத்திலேயே குறிக்கப்பட்ட வார்த்தைகள்தான் இவை.

ஆமுக்தமால்யதா, (அந்த சிறப்பான (ஆணிமுத்ய) மாலை) தமிழின் தெய்வீகத் தேவதையும், சூடிக் கொடுத்த சுடர்க்கொடியுமான கோதை நாச்சியாரைப் பற்றியும் அவள் தந்தை பெரியாழ்வாரின் பக்தியைப் பற்றியும் பொதுவாகப் பேசும் காவியம் என்றாலும், இதைக் காவியமாக வடித்த கிருஷ்ணதேவராயன், தம் காலத்தே உள்ள அரசாங்க நிலையையும், ஒரு அரசன் என்பவன் எப்படி தருமத்தின் துணைகொண்டு எப்படியெல்லாம் அரசாளவேண்டும் என்பதையும் எழுதியுள்ளான். காவியம் முழுவதும் ஆன்மீகத்தின் ஒளி பரவி உள்ள ஒரு அற்புத படைப்பு இது.

முதலில் ஒன்றைச் சொல்லிவிடவேண்டும். சரியாக ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு (கி.பி.1509) அரச பீடம் ஏறிய இந்த துளுவ கிருஷ்ணதேவராயன் ‘திராவிடன்’ எனும் சொல்லுக்கு முழு உரிமையும் கொண்டவன். இவன் ஒருவனே சரியான தென்னிந்தியன் என்று சற்று இந்தக் காலகட்டத்திற்கேற்றவாறு கூட சொல்லலாம். பாருங்கள். இவன் பிறப்பால் துளுவன்.. (மங்களூர் அருகே பிறந்ததாகச் சொல்வார்கள்). ஆட்சி செய்யும் இடமோ, அதாவது தலைநகரம் அமைந்த இடமோ கன்னடம் செழித்தோங்கும் விஜயநகரம். இவன் படைத்த காவியமோ தெலுங்கு மொழியில், காவியத்தின் நாயகியோ தமிழன்னையின் தவப்புதல்வியான ஆண்டாள். திராவிடத்தின் மொத்த உருவத்தையும் தன்னகத்தேக் கொண்ட ஒரு உன்னதத் தலைவன் ஸ்ரீகிருஷ்ண தேவராயன். வடமொழியில் வல்லவனான கிருஷ்ணதேவராயனுக்கு தென் மொழியான தமிழ் மிக நல்ல பரிச்சயம். அதுவும் வைணவத்தை ஆராதிப்பவனான அரசன் தமிழ்ப் பாமாலைகளான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தினைக் கரைத்துக் குடித்தவன் என்றே சொல்லலாம். இதற்கு உதாரணம் அவனே எழுதிய வரிகளைப் படியுங்கள்!

பன்னிரு சூரியர்கள் பிரபஞ்சம் முழுதும்
நடுவிலே நாராயணன் பரிபாலிக்க
ஏன் இந்த வெப்பம் என உணர்ந்தவன்
வெப்பம் தணியவே தனிவழி தேடி
பன்னிரு ஆழ்வாரின் நெஞ்சத்துக் குளிர்ச்சியிலே
தஞ்சம் புகுந்தானோ..அந்தக் குளிர்ச்சியிலே
உறைந்து மணத்திலே மனதைக் கொடுத்த
அந்த அமரர்களின் அதிபதிக்குத் தலை வணங்குவோம்


பன்னிரெண்டு சூரியர்களின் சூட்டைத் தாங்கமுடியாமல் தம்மிலேயே ஆழ்ந்திருக்கும் பன்னிரெண்டு ஆழ்வார்களின் நெஞ்சக்குளிர்ச்சியில் தன்னைப் புதைத்துக் கொண்டானாம்.. ஒரு சில வரிகளில் ஆழ்வார்களை ஸ்ரீகிருஷ்ணதேவராயன் எவ்வளவு பெருமைப் படுத்திவிட்டான்..

ஆண்டாள் அரசனை மிகவும் கவர்ந்தவள் என்றே சொல்லவேண்டும். இவன் காவியத்தில் ஆண்டாளைப் போற்றிப் பாடினாலும், நாச்சியார் திருமொழி வாக்கியங்களை மற்ற காவியப் பொருள்களிலும் தாராளமாக கையாள்கிறான் அரசன். அதுவும் திருவேங்கடவனின் சங்கினைப் போற்றும் பாடலில், ‘கற்பூரம் நாறுமோ, கமலப் பூ நாறுமோ, திருப்பவளச் செவ்வாய்தான் தித்திருக்குமோ’ என ஆண்டாள், கண்ணனின் வாய் எச்சிலின் மகிமையைப் பற்றி சங்கினைக் கேட்பாளே, அதே கேள்விகளை போற்றுதல்களாக மாற்றி ஸ்ரீகிருஷ்ணதேவராயன் தெலுங்கில் வடித்திருப்பது மிகவும் போற்றுதலுக்குரியதுதான். அதே சமயம் ஆண்டாளின் தமிழ் இவனை எப்படியெல்லாம் பாதித்திருக்கிறது என்பதையும் நாம் பார்க்கவேண்டும்.

இதோ நாரணன் சங்கை ஊதிவிட்டான்
ஆஹா.. கீதமா சங்கீதமா
நறுமணம் என்றால் இதுதானோ
நல்ல தேனினை உண்டு கொண்டிருந்த
தேனீக்களே.. ஏன் திடீரென அங்கு ஓடுகிறீர்கள்
ஓ, புரிந்து விட்டது.. இந்த நல்ல கமலங்களில்
கிடைக்கும் நறுமணத்தைவிட, இனிய தேனை விட
விட நறுமணம் வீசும் நாரணன் எச்சில்
அந்த சங்கூதலால் கிடைத்துவிட்டதா..


சங்காரைப் பற்றியே இப்படி முப்பது பாடல்கள் காவியத்தில் உள்ளன. இந்தப் பாமாலைகளைப் போலவே தன்னுடைய காவியம் முழுவதும் ஆண்டாளின் தமிழ்த் தாக்கம் அதிகமாகவே தெரியும்வகையில் படைத்திருக்கிறான் அரசன். பொதுவாகவே அரசர்கள் என்போர் கவி புனைவது என்பது ஒத்து வராத விஷயம். அரசர்கள் சபையில் ஆன்றோர் பலர் இருப்ப, அந்த ஆன்றோர்களும் சான்றோர்களும் படைக்கும் காவியங்களை மிகவும் ரசித்து அந்தப் புலவர்களைக் கௌரவிப்பதே அரசன் கடமை என சரித்திரத்தில் நிறைய படித்திருக்கிறோம். மகேந்திரபல்லவன் நாடகங்கள் படைத்திருக்கிறான். அவனுக்குப் பிறகு ஒரு சில அரசர்கள் கவிதை உலகத்துக்கு பங்கு அளித்தார்கள்தான் என்றாலும், ஸ்ரீகிருஷ்ணதேவராயனின் இலக்கிய பங்கு என்பது வியப்புக்குரியதுதான்.

ஏனெனில் கிருஷ்ணதேவராயனின் அவையிலேயே அஷ்ட திக்கஜங்கள் என்று பெருமை பெற்ற எட்டு பேர் கொண்ட ஒரு பெரிய புலவர் படையே இருந்தது. அல்லசாணி பெத்தண்ணா என்ற புகழ்பெற்ற தெலுங்குப் புலவர் சபைக்குத் தலைவர் போல இருந்தவர். கன்னட மொழிப் புலவர்கள் பலர் இருந்தனர். ஆனால் தமிழுக்கு என்று பெயர் சொல்லக்கூடிய புலவர் ஒருவரும் அவனுடைய சபையில் அந்தக் கால கட்டத்தில் இல்லாததைக் குறிப்பிட்டுச் சொல்லத்தான் வேண்டும். ஆனால் தமிழ் அவன் சபையில் இல்லை என்பதை ஈடு செய்யவே கிருஷ்ணதேவராயனே முன்வந்து தமிழ்ப் பாடல்களின் மகிமையை தெலுங்கு மொழியில் இயற்றினானோ என்னவோ.. ஒவ்வொரு சமயம் நினைத்துப் பார்க்கும்போது தமிழன்னை தன்னை உயர்த்திக் காட்ட இந்தக் காவியம் படைக்க இப்படி ஒரு வகை செய்தாளோ என்றுதான் தோன்றும்.

இல்லையேல், ஒரு ராஜா அதுவும் தமிழல்லாத ராஜா, சண்டை போட இருந்த ஒரு இடத்தில், யுத்த கால கட்டத்தில், நாராயணனே முன் தோன்றி, ‘எனக்கு கோதையின் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி மாலை தெலுங்கில் காவியமாக வேண்டும், அதையும் அரசனான நீயே செய்யவேண்டும் என்று கேட்பானா? இந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியைக் கூட ‘ஆமுக்தமால்யதா’ வில் அரசன் எழுதுகிறான்.. .

‘ஆஹா.. சாட்சாத் நாராயணனே இலக்குமி சகிதம் வந்து என்னிடம் ஆணை போட்டுவிட்டான்.. அமைச்சர்களே.. புலவர்களே.. இதன் நிமித்தம் சொல்லுங்களேன்..’

என ஆன்றோர்களைக் கேட்கவும் அந்த யுத்தபூமியிலும் சபை மளமளவெனக் கூடுகிறது. இலக்குமியின் ஒரு கையில் தெரிந்த கமலம், இந்த யுத்தத்தின் வெற்றியின் பரிசு என்பதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. பிறகு காவியம் எழுது என்று சொல்லிவிட்டானே ஆண்டவன்.. காவியத்துக்கே உரிய வகையறாக்கள் ஆராயப்படுகின்றன. கடவுள் வாழ்த்து கூட வைணவ மார்க்கத்தில் முதலில் திரு (இலக்குமி) யைப் போற்றி எழுதப்படவேண்டும் என்று நிர்ணயிக்கிறார்கள். அப்போது ஒரு சிறிய மாற்றம் அரசரால் சொல்லப்படுகிறது. ஆந்திர விஷ்ணு, திருமலையில் நின்றவடிவில் ஆருள் புரியும் திருவேங்கடவன் முன்பு இந்தப் பாமாலையினை சமர்ப்பிக்கும்படி ஆணையிட்டிருப்பதால் இலக்குமியை முன்வைத்து அந்தத் திருவேங்கடவனுக்கே முதல் பாடல் எழுதப் போகிறேன்.. என்று சொல்கிறான். அதுவும் எந்த இலக்குமி, திருவேங்டவன் திருமார்பில் வாசம் செய்வதாக நம்மாழ்வார் சொல்கிறாரே ‘அகலகில்லேன், இறையும் என அலர்மேல்மங்கையுரை மார்பா’ அந்த மகாலக்குமியைப் போற்றவேண்டும் என தேவர் முடிவு செய்கிறார்.

இலக்குமியின் திருமார்பில் ஒளிரும் ஆரத்தின் ஒளி நீயே
அவன் திருமார்பில் ஒளிரும் கௌஸ்தப மணியின் ஒளி அவளே
ஒருவருக்கொருவர் உள்ளேயே ஒளிந்திருந்தும் இந்த மணிகளின்
வழியே தெள்ளத் தெளிவாய் வெளியே தெரியும் விந்தையை
அளித்த திருவேங்கடவனே, உனக்கு முதல் வணக்கம்!


அவனும் அவளும் ஒன்றுதான்.. ஆனால் அவள் மூலம் அவனிடம் செல்வது என்பது மிக மிக எளிது.. இதுவே ஆண்டாளும், நம்மாழ்வாரும், திருமங்கைமன்னனும் ஏற்கனவே காண்பித்தது என்பது விஜயநகரத்து மன்னன் ஸ்ரீகிருஷ்ணதேவராயனுக்கு பரிபூரணமாகத் தெரிந்திருக்கிறது. அவன் வார்த்தைகளில் உள்ள சத்தியம் ஆணும் பெண்ணும் ஆண்டவனிலிருந்து அகிலம் முழுமைக்கும் ஒன்றுதான் என்ற கருத்து பலமாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்தனையும் தமிழின் கருத்து. அப்படியே அண்டை மொழி மூலம் ஆண்டவன் கட்டளையாக, அந்த ஆண்டவனுக்கே அழியாத மாலையாக அழகாகக் கோர்த்து மாலையிட்டவன் ஸ்ரீகிருஷ்ணதேவராயன்.

ஆமுக்தமால்யதா தெலுங்கில் பொருள் அறிந்து படிக்க படிக்க தெலுங்கு மொழியின் மகிமையை விட தமிழின் மகிமை மிக அதிகமாக தமிழராகிய நமக்கு விளங்கும். தமிழராகிய நாம் தலை நிமிர்ந்து நடக்க, ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ஒரு மகாகாவியம் இந்த ‘ஆமுக்தமால்யதா’ என்று பெருமை கொள்வோம்.

திவாகர்

(பி.கு. ஆமுக்தமால்யதாவின் தமிழ் வரிகள், டாக்டர் பிரேமா நந்தகுமார் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு மூலம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அவருக்கு நம் நன்றி)

மேலே உள்ள படம், திருமலை வேங்கடவன் கோயிலில், ஸ்ரீகிருஷ்ணதேவராயர், அவர் மனைவிகள் இருவரோடு சிலைகளாக செதுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள காட்சி.

மேற்கண்ட கட்டுரை 'யுகமாயினி' மாத இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Saturday, September 19, 2009


விசாகப்பட்டினமும் வம்சதாரா பிறந்த கதையும்


விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்ஹாத்ரி மலையில் வராகநரசிம்மர் கோயில் கொண்டுள்ளார். அருமையான இயற்கை காட்சிகளைக் கொண்டுள்ள இந்த வைணவத்தலம் நூற்றெட்டு திவ்விய தேசங்களின் வரிசையில் சேர்க்கப்படவில்லை என்றாலும் ராமானுஜர் (கி.பி.1017-1137) வருகையினால் புகழ்பெற்ற தலமாகும். அவர் வரும் காலத்தில் கோயில் மிகச் சிறப்பான புகழையும் பெற்றிருந்தது என்பதற்கு அவர் வருகையே ஒரு காரணம்.

சுமார் 1000 வருடங்களுக்கும் முந்தையதான இக்கோயிலைப் பற்றிய முதல் இரண்டு சரித்திர ஆதாரங்களுமே தமிழில் வடிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளாக கிடைக்கப்பெற்று இந்திய தொல்லியல் கழகத்தாரால் பதிவு செய்யப்பட்டவை என்பதே மிகப் பெரிய ஆச்சரியமான தகவல்கள்தான்.

இந்தத் தலம் மிக மிகப் பழைமையானது என்பதில் சந்தேகமே இல்லை என்றாலும் இத்தலத்தைப் பற்றிய பல விஷயங்களை நாம் மிக மிக தாமதமாகத்தான் தெரிந்துகொள்ள முடிந்தது. காரணம், இத்தலம் அமைந்த பகுதிதான். சுற்றிலும் காடுகளும் மலைவளமும் மிக்க பகுதியில் ஒரு சிறிய மலை மீது இக்கோயில் நம் பழைய சோழர்கால மரபில் கட்டப்பட்டதாகும். தமிழர்களின் வடஎல்லையான திருப்பதியில் இருந்து சுமார் ஐநூறு மைல் தொலைவில், ஒருகாலத்தின் தென் கலிங்கநாட்டின் நட்ட நடுப்பகுதியில் இந்தக் கோயில் இருந்தது என்று சொன்னால் அது மிகை ஆகாது. யார் இந்தக் கோயிலைக் கட்டியது என்ற விவரம் இன்று வரை கிடைக்கவில்லை.

இடமோ காடு, நாடோ தமிழர்களுக்கு மிக தொலைவிலுள்ள கலிங்கநாடு. காட்டாறுகளும் மலை ஓடைகளும், கொடிய விலங்கினங்களும் மிகுதியான உள்ள இந்தப் பகுதியில் ஒரு பெரிய அளவினான பெருமாள் கோயில், சோழர் சிற்பக்கலையுடன் கூடிய வகையிலும், கோபுரமும், சந்நிதிகளும் கட்டப்பட்ட இந்த அழகான கோயிலில் தமிழர்களால் செதுக்கப்பட்ட இரண்டு கல்வெட்டுகள் கிடைக்கின்றன. இந்தக் கல்வெட்டுகளின் செய்திகள் இரண்டுமே வித்தியாஸமானவை.

முதல் கல்வெட்டு கிருத்து பிறந்த 1100 ஆம் ஆண்டில் (இன்றைக்கு சுமார் 909 ஆண்டுகளுக்கு முன்பு) தமிழரான ஒரு வர்த்தகர் ஒரு நந்தவனத்தை இந்தக் கோயிலுக்காக எழுதிவைத்திருக்கிறார். இன்னொரு கல்வெட்டு அடுத்த இரண்டு வருடங்களில் இன்னொரு செய்தியைச் சொல்கிறது. அதாவது சோழதேசத்து ஆச்சாரியாரான படைத்தலைவர் சிம்மாசலநாதருக்கு காணிக்கையாக நகைகள் அளித்திருப்பதாக அந்தக் கல்வெட்டு தெரிவிக்கிறது.

முதல் கல்வெட்டைப் பார்ப்பதற்கு முன் இரண்டாவது கல்வெட்டைப் பற்றிய சில தகவல்கள் தெரியவேண்டும். இந்தச் செய்தி நம் கலிங்கத்துப் பரணியிலும், ஆந்திராவில் உள்ள கோதாவிரி மாவட்டத்தில் உள்ள திராட்சாராமம் கோயில் சுவரில் காணப்படும் எழுத்துக்களிலும் ஏற்கனவே காணப்பட்டதுதான். அதாவது கருணாகரத் தொண்டைமான் எனும் சோழநாட்டுத் தளபதி, வண்டை வள நாட்டின் அரசன், இவன் குலோத்துங்க சோழனுக்காக கலிங்க நாட்டின் மீது படையெடுத்து வென்றதில் கிடைத்த செல்வங்களில் சில செல்வங்களை சிம்மாசல நாதருக்கும், திராட்சாராமம் பீமேசுவரநாதருக்கும் காணிக்கையாக கொடுத்தது. அது மட்டுமல்லாமல் இன்றைய விசாகப்பட்டினத்துக்கு குலோத்துங்க சோழப்பட்டினம் என்ற தமிழ்ப் பெயரையும் கொடுத்தவனும் இந்த தளபதிதான் என்றும் இன்றைய விசாகப்பட்டின வரலாறு சொல்லுகிறது.

அதனால் இரண்டாம் கல்வெட்டின் செய்தி தெரிந்தாயிற்று.. சோழநாட்டு தளபதியான கருணாகரத் தொண்டைமான் கலிங்கப்போரில் கைப்பற்றிய சில செல்வங்களை சிம்மாசலத்திற்குக் கொடையாகக் கொடுத்தது என்பதும் புரிந்துகொண்டோம். அப்படியானால் முதல் கல்வெட்டு செய்தி என்ன சொல்கிறது, கோயிலுக்காக ஒரு பெரிய நந்தவனத்தையே ஒரு தமிழ்வணிகர் எழுதி வைத்திருக்கிறார். இங்குதான் நம் சிந்தனை விரிகிறது..

அளவு இவ்வளவு என்பது தெரியாவிட்டாலும் பெரிய அளவில் பூச்செடிகளும், மரங்களும் பயிரப்படும் நல்ல இடத்தை, ஒரு பெரிய பூங்காவனத்தை அதுவும் தமிழர் ஒருவர் எப்படி எழுதிவைத்திருக்கமுடியும். இவர் நிச்சயமாக வழிப்போக்கராக இருக்கமுடியாது இந்தக் கோயிலுக்கு எழுதி வைத்தது போக இன்னும் எத்தனை பெரிய அளவில் நிலச்சுவாந்தராக இவர் இருந்திருப்பார், அல்லது இவர் போல இன்னும் எத்தனையோ தமிழ்க் குடும்பங்கள் இங்கு இருந்தனவோ.. அவர்களும் பெரிய அளவில் இங்கு குடியேறி இருந்தனரோ..

தமிழகம் எங்கே, இந்தக் கலிங்கம் எங்கே.. இரண்டுக்கும் உள்ள இடைவெளி தூரம் மிக அதிகம் ஆயிற்றே.. அதுவும் இந்தக் கோயில் அமைந்த இடமோ மலைமேலுள்ள ஒரு சிறிய சமவெளிப்பகுதி. அப்படியானால் இந்தத் தமிழர்களானவர்கள் மலைக்குக் கீழே உள்ள அடிவாரப்பகுதியில்தான் குடியேறி இருந்திருக்கவேண்டும்.(இப்போதும் அதன் பெயர் அடிவாரம்தான், சற்று மருவி அடவிவரம் ஆனது) சரி, இவர்கள் ஏன் இங்கு குடியேறவேண்டும், எதற்கு இந்த காடு மலை சூழ்ந்த கோயிலையும் கரடு முரடான கடலைச் சார்ந்த பகுதியையும் தேர்ந்தெடுக்கவேண்டும்?

கலிங்கத்துப் பரணியில் கலிங்கப்படை தோற்று ஓடிய சமயத்தில் அவர்களைப் பிடிக்கச் சென்ற சோழ வீரர்களிடம் ‘ஐய்யயோ.. நான் கலிங்கன் இல்லை, தமிழன், தமிழன், என்னை விட்டு விடுங்கள்’ என்று சொல்வதாக வரும். ஆக அந்தக் கால கட்டத்தில் இந்த இடத்தில் தமிழர்கள் வசித்தமையால் மட்டுமே அந்த வார்த்தையை கலிங்கர்களால் சொல்லமுடிந்தது என்பதும் ஒரு செய்தி.

ஆந்திரப் பல்கலைக்கழக சரித்திரப் பேராசிரியர் திரு கே. சுந்தரம் தன்னுடைய கட்டுரை ஒன்றில் (இது 1963ஆம் ஆண்டு ஹிந்து நாளிதழில் பிரசுரிக்கப்பட்டது) எப்படியெல்லாம் தமிழர்கள் வணிகநிமித்தம் கூட்டம் கூட்டமாக இந்தப் பிராந்தியத்தில் வசித்துவந்தார்கள் என்பதை வெகு விளக்கமாக எழுதியுள்ளார். இந்த நாளைய வணிக மையம் போல, இந்த இடங்களிலெல்லாம் தங்கினர் என்பதையும், கரையோரத்தில் ஒதுங்கும் வெளிநாட்டில் இருந்து வரும் கப்பல்கள் மூலம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்து ஏற்கனவே உள்ள வியாபார மையங்களில் தேக்கி வைத்து, தகுந்த காலத்தில் தங்கள் ஊர்களுக்கு எடுத்துச் செல்வது என்பதை தமிழர்கள் நேர்த்தியாக செய்து வந்தார்கள் என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது. அப்படிப்பட்ட மையங்கள்தான் இன்றைய விசாகப்பட்டினத்தின் ஒருபகுதியாக விளங்கும் சிம்மாசலம், மற்றும் ஸ்ரீகாகுளம் என்பதும் இந்த இரண்டு இடங்களிலும் ஏறத்தாழ தமிழர் வசிக்கும் இடங்களாகவே மாறி இருந்தன என்றும் தெரிய வந்தது.

சரி!. முதல் கல்வெட்டு வணிகர் பெரிய அளவில் இருந்தமைக்கு அதாவது கி.பி,1100 ஆம் ஆண்டின் போது,, அதாவது அமைதியான நிலையில் ஒரு வணிகர் ஆண்டவனுக்கு சமர்ப்பித்த காணிக்கையைப் பற்றி சொன்னது. ஆனால் அடுத்த இரு ஆண்டுகளில் வெட்டப்பட்ட மறு கல்வெட்டே ஒரு மாபெரும் போர் நடந்த விஷயத்தைப் பற்றி பறை சாற்றுகிறதே.. அப்படியானால் கலிங்கத்துப் பரணி எனும் போர்க் காவியம் பாடும் இடங்கள் இதுதானோ.. இங்கெல்லாம் தமிழர் யானைப் படைகளோடும், குதிரைப்படைகளோடும், (ஒட்டகங்கள் கூட இந்தப் போரில் பயன்படுத்தப்பட்டன) பெருங்கூட்டமாக வந்திருந்து இந்த இடங்களில் போர் செய்தார்களா.. அதுவும் எப்படிப் பட்ட போர் அது..

‘எது கொல் இது! இது மாயை ஒன்று கொல்!
எரி கொல்! மறலி கொல்! ஊழியன் கடை
அதுகொல்! என அலறா இரிந்தனர்
அலகு குலதியோடு ஏழ்கலிங்கரே!’

‘என்ன போர் இது.. இது வெறும் மாயையோ.. அல்லது கொள்ளை கொண்டு போகும் நெருப்போ, அல்லது உயிரைக் குடிக்கும் எமனோ, அல்லது இதுதான் ஊழிக்காலமோ, அதனால்தான் இந்த யமன் இப்படி ஒரேயடியாக தாக்குகிறானோ’ என்று ஏழு மலைப் பகுதிகளைக் கொண்டு வாழும் கலிங்க மக்களே இந்த மாபெரும் போரை வியப்பதாக வரும்.

‘ஆயிரம் யானைகளையும் ஆயிரமாயிரம் வீரர்களும் விழுங்கிய கலிங்கக் களப் போர் உரைப்போருக்கு நா ஆயிரமும், நாள் ஆயிரமும் வேண்டுமாம்’, என்று ஜெயங்கொண்டார் பாடுகிறார் என்றால் எத்தனை கடுமையாக இந்தப் போர் நடைபெற்றிருக்கவேண்டும் என்பது புரியும். திராட்சாராமம் கோயில் கல்வெட்டு இந்தப் போரைப் பற்றிப் பேசும்போது ‘சகல கலிங்கத்தையும் சாம்பல்படுத்தி’ என்று ஆரம்பிக்கின்றது. குலோத்துங்க சோழனின் மெய்க்கீர்த்தி ‘வடதிசை வேங்கி மண்டலமும் கடந்து கலிங்கமும் தநலெரி பரப்ப’ என்று பாடப்படுகிறது. ஆலங்குடி செப்பேடுகளில் இந்த கடுமையான போரில் வென்றதற்காக சோழன் புகழ் பேசப்படுகிறது.

இந்த சோழப்படை வெகுதூரம் பயணித்து கலிங்கம் வந்ததை கலிங்கத்துப் பரணி விரிவாகவே சொல்லுகிறது. தற்போதைய ஒரிசாவுக்கும், காஞ்சிபுரத்துக்கும் இடையிலான அத்தனை நதிகளையும் பட்டியல் போட்டு சோழர் படை கடந்ததாக விவரிக்கிறது. தெற்கே பாலாறு முதல், கிருஷ்ணை, கோதாவிரி முதல் வம்சதாரா நதி வரை அனைத்தையும் சொல்கிறார் ஜெயங்கொண்டார்.

சரி.. இத்தனை கொடுமையான போருக்குக் காரணம் என்ன, காவியத்தில் சொன்னபடி சாதாரணமான விஷயமான ‘திரை செலுத்தவில்லை’ என்ற ஒரு காரணத்துக்காகவா இப்படிப் பட்ட போரை தமிழர்கள் இங்கு நடத்தினார்கள். ‘எரிகின்றது பதி, இடிகின்றன மதில்’ என காணும் இடத்தை எல்லாம் இங்கு ஏன் தமிழர்கள் இப்படி நாசப்படுத்தினர்.. பேய்களுக்கெல்லாம் அவை இருக்கும் காலம் வரை யானை மாமிச மலை கிடைக்கிறது இங்கே என்று இந்தப் போரை நேரில் கண்ட ஒரு கிழப்பேய் மற்ற பேய்களையெல்லாம் இங்கே அழைத்து வந்ததாக ‘கலிங்கத்துப் பரணி’ சொல்லும் இந்தப் பயங்கரப் போருக்குப் பின்னணி என்ன..

இப்படியெல்லாம் ஆராய்ந்ததில் வந்த வினைதான் என் முதல் நாவலான வம்சதாரா.

வம்சதாரா என்றால் இரண்டு மூன்று பொருள்கள் உண்டு. முதலில் ஒரு நதியின் பெயர். ஏறத்தாழ ஒரு பெரிய காட்டாறு போல மகேந்திர மலையில் உற்பத்தி ஆகி மழைக்காலங்களில் பெருவெள்ளமாய் வரும் வழியில் உள்ள அனைத்தையும் அழித்து தன்னுள் அடக்கி அப்படியே கீழைக்கடலில் கொண்டு போய் தானும் கலந்துவிடும் நதி வம்சதாரா. (இப்போதும் அப்படித்தான் இருக்கிறது). வம்சதாரா என்றால் வம்சத்தை வீழ்த்துவதற்கும் அப்படி ஒரு பொருள் உண்டு. தெலுங்கில் தாரா என்றால் வீழ்ச்சி, (இது தமிழ்ப்பெயர்தான், கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது என்பார்கள்).
இன்னொரு எதிர்மறை பொருளும் வம்சதாராவுக்கு உண்டு. அதாவது வம்சத்தின் நட்சத்திரம், வம்சத்தை வாழ்விக்கும் ஒளி என்றும் சொல்லப்படுவது உண்டு.

இத்தனைப் பொருள்களும் தன்னகத்தே கொண்ட ஒரு கதாநாயகியையும், மேலே குறிப்பிட்ட வணிகர்களையும் அருமையான சுற்றுச் சூழல் கொண்ட இந்த விசாகப்பட்டின மாவட்டத்தையும் ஒரு களமாகக் கொண்டுதான் வம்சதாரா எனும் நாவலை எழுதி முடித்தேன். நான்கு வருட உழைப்பான இந்த நாவலில் இந்த இடங்களைப் பற்றி பல செய்திகள் சொல்லப்பட்டிருக்கின்றன.

விசாகப்பட்டினம் மற்றுமல்லாமல் கோதாவரி மாவட்டத்தையும் பற்றியும், அங்குள்ள திராட்சாராமம் சிவன் கோயிலையும் பற்றியும் கதை பேசுகின்றது. அந்தக் காலத்தில் இந்த திராட்சாராமத்திற்கு ‘இடர்க்கரம்பை’ என்ற தமிழ்ப் பெயர் உண்டு. தமிழன் கால் வைத்த இடத்திலெல்லாம் குமரனுக்கும் கோயில் எடுப்பது வழக்கம்தானே.. இங்குள்ள சிவன் கோயில்களில் எல்லாம் குமரனுக்கு என தனிச் சன்னிதிகள் தமிழர்களால் உண்டாக்கப்பட்டன. திராட்சாராமம், சாமல்கோட், ஸ்ரீமுகலிங்கம் சிவன் கோயில்களில் இப்படி செய்திருக்கிறார்கள். இன்றைய ஸ்ரீகாகுளம் நகருக்கு, குளம் என்றே அந்தக் காலத்தில் பெயர் என்பதை ஒட்டக்கூத்தனார் நூலிலிருந்து தெரியவருகிறது. இங்குள்ள மலைவாழ் மக்களின் கலைரசனை, ஆட்டங்கள் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.. தோண்டித் தோண்டிப் பார்த்து துருவித் துருவித் தேடினால் இன்னும் எத்தனையோ கிடைக்கும்.. நானும் அதைப்போலவே தோண்டிக் கொண்டே இருக்கிறேன்...
----------------------------------------------------------------------------------------------------