Follow by Email

Tuesday, September 3, 2013

அடுத்த வீட்டில் ஒரு நனவுலக குட்டி நகரம்:
அன்புள்ள தூலிபாலா ராமச்சந்திர ராவ் அவர்களுக்கு!

தமிழர்தம் மேலாட்சியை ஆவலோடு ஏற்றுக்கொண்ட உங்களுக்கு அடியோடு தமிழ் வராது என்பது தெரியும் என்றாலும் நான் எழுதும் இக்கடிதத்தின் சாரத்தை ஏற்கனவே தங்களிடம் தெலுங்கில் சொல்லிவிட்டதால் கொஞ்சம் விஸ்தாரமாகவே உங்கள் அனுமதியுடன் ஆரம்பிக்கிறேன். நீங்கள் இதையெல்லாம் படிக்கப் போவதில்லை என்று தெரிந்தாலும் எழுதுவது ஏதோ கடமை போலத் தென்பட்டதால் வந்த விளைவுதான் இக்கடிதம்

ஏனாம் அல்லது யேனாம் என்ற குட்டி நகரத்தில் தற்போது வசித்து வரும் சுமார் 42000 மக்களில் நீங்கள்தான் வயதானவர் என்பதால் ஒரு கூடுதல் வணக்கம். 85 வயது இளைஞரான நீங்கள் நூறாண்டு காணவும் புதுவை மாநிலத்திலேயே மூத்தவர் எனும் பெயரையும் எடுக்கவும் எனக்கு ஆசை.

நம் சந்திப்பு விந்தைதான் என்றாலும், எதிர்பார்க்கப்படாததுதான் என்றாலும், இந்த தூலிபாலா என்றொரு பழைய தெலுங்கு சினிமா நடிகர் ஒருவரைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன். அதனால் உங்கள் பெயர் கேட்டதும் ஒரு இயற்கையான சின்ன கவர்ச்சி உண்டானது வாஸ்தவமே..

நீங்கள் 1954 ஆம் ஆண்டில் ஏனாம் மீது பிரயோகிக்கப்பட்ட அந்த பழைய கால போலீஸ் ஆக்‌ஷன் பற்றிப் பேசினீர்கள். எனக்குக் கொஞ்சம் ஆச்சரியம்தான். ஏதோ ஏனாமில் யாரோ எப்போதோ எதிர்த்தார்கள். இந்திய அரசாங்கம் மிரட்டியதும் பணிந்து விட்டார்கள் என்றுதான் மேலோட்டமாகக் கேள்விப்பட்டேன். ஆனால் ஏனாம் இந்தியாவோடு சேர்க்கப்பட்டதில் இத்தனை விஷயம் இருக்கும் என்று யோசிக்கவில்லைதான்.

பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்பு என் முதல் நாவலான வம்சதாராவுக்காக ஏனாம் அருகே இருக்கும் திராட்சாராமம் வந்துள்ளேன். அப்போது ஏனாம் ஊருக்குள்ளும் வந்தேன். நான் வந்ததன் காரணம் வேறு நதி வளமும், என் கதைக்கான போக்கும் ஏராளமாக கிடைத்ததால் எனக்குப் பிடித்துப் போன ஒரு இடமாக ஏனாம் அப்போதே மாறிவிட்டது. இன்னொரு விந்தையும் அப்போதே கண்டேன். ஏனாம் எனும் ஊர் ஆந்திர கிராமங்களைப் போல சிற்றூர் அல்ல. மாறி வரும் வளர்ந்த ஊராகப் பட்டது. ஆனால் சமீபத்தில் ஏனாம் வந்தபோது இந்த விந்தை மாறிப்போய் ‘ஆஹாஎனும் சந்தோஷத்தில் மிதந்து போனேன் என்ற உண்மையை நான் முழு மனதோடு ஒப்புக் கொள்ளவேண்டும்தான்.

நீர்வளத்தை நல்ல விதத்தில் மாற்றியுள்ளீர்கள். கௌதமி நதிக்கு மிக அழகானதொரு கரை கட்டி ஊர் நெடுகிலும் செல்லவைத்து ஏனாமுக்கு பூமாலை சூட்டி இருக்கிறீர்கள். அழகான பூங்காக்கள், மண்டபங்கள் சிறிய பேருந்து நிலையம் என்றாலும் கச்சிதமான அளவில் கட்டப்பட்டுள்ள திற்மை, தூய்மையான சுற்றுப் புற சூழல், நல்ல சாலைகள் அதுவும் குண்டும் குழியும் காணப்படாத அளவில் ஊர்த் தேவைக்கு சற்று அளவுக்கதிகமாகவே அகலமான சாலைகள்.. நல்ல விடுதிகள் என்று இந்த சிற்றூரை அயல்நாட்டு நகரங்களுக்கு நிகரான வசதிகளுடன் முன்னேற்றி இருப்பதைக் காண மனம் மகிழ்கிறது. அதுவும் விவசாயிகள் சங்கத்துக்காக என்று குளிர்சாதன் வசதிகள் கொண்ட விடுதிகள் கட்டி இருப்பது மேலும் மகிழ்ச்சியைக் கூட்டியதுதான்.


எனக்கு ஆந்திரமாநிலத்தைப் பற்றியும், கோனசீமா, திவிசீமா போன்ற செழுமையான பகுதிகள் பற்றியும் பெருமைகள் பல உண்டு என்றாலும் குறைகளும் அதிகம்தான். பச்சைப்பசேலென்ற வயல்கள் சூழ்ந்தாலும் செழிப்பு அங்குதான் காணப்படுமே தவிர அந்த வயல்களைச் சூழ்ந்த ஊர்களில் காணமுடியாது. சுத்தம் என்பது சற்றே குறைவான அளவில்தான் காணலாம் என்றுதான் சொல்வேன். புழுதியைக் கட்டுப்படுத்தாத, கட்டுப்படுத்த முடியாத ஊர்களும், சுகாதார விஷயத்தில் அடிமட்டமாகச் செயல்படும் ஊர்களையும்தான் பார்த்துப் பழக்கமானதால் இப்படி சொல்கிறேன். அரசியல் பகைகளிலே காலம் கழித்துக் கொண்டே இருக்கும் மக்கள் சமுதாய நன்மைக்கு அதிகம் பங்கு கொள்ளவில்லை என்ற ஏக்கம் உண்டு. இந்த நிலைமை இந்தியாவில் எந்த ஒரு கிராமத்துக்கும் உண்டுதான். ஆனால் ஏனாமில் இந்த நிலமை இல்லை. சுத்தம் பேணப்பட்டு சுகாதாரம் காக்கப்பட்டு மக்களுக்குத் தேவையான (தேவைக்கும் அதிகமான) சகல வசதிகளும் செவ்வனே செய்யப்பட்டு ஒரு சிற்றூர், இன்று சிறந்த குட்டி நகரமாக முன்னேறி உள்ளதை யாரால்தான் பாராட்டாமல் இருக்கமுடியும்.


அடடே.. ஆரம்பத்தில் உங்களைப் பற்றி ஆரம்பித்து உங்களைப் பற்றி எழுதாமல் ஊருக்குள் நுழைந்துவிட்டதற்கு மன்னிக்கவும். காரணம் அந்த ஊர் என்னை அப்படிக் கவர்ந்து விட்டதுதான். 1954 ஆம் ஆண்டு வரை பிரெஞ்சுக் காரார்கள் ஆதிக்கத்திலிருந்த ஏனாம் நகரை சுதந்திர இந்தியாவில் இணைக்கவேண்டும் என்று ஊரில் மூத்தவர்கள் தாதால ரமணய்யா, மாடிம்செட்டி சத்யானந்தம் போன்றோருடன்  இளைய வயதுக்காரரான தாங்கள் சாலையில் உட்கார்ந்து போராடியதையும், அப்போதைய கால கட்டத்தில் ஆட்சி செய்த பிரெஞ்சு தேசத்து நட்பாளரும் மேயருமான சமதம் கிருஷ்ணய்யா (இவர் தன் பெயரையே க்ரௌஸ்ச்ணய்யஎன்று பிரெஞ்சுக்காரர் விரும்பும் வகையில் பிரெஞ்ச் மொழியில் மாற்றிக்கொண்டவர்) இந்தியாவுடன் இணைய மறுத்ததையும், பிறகு இந்திய அரசாங்கம் ஒரு போலீஸ் படையை அனுப்பி சண்டை செய்து மேயரை வீழ்த்தியதையும் குறிப்பிட்டதும் அந்த சண்டையில் மேயர் கொல்லப்பட்டதும் தெரிந்து கொண்டேன். பின்னர் விஷயம் கேள்விப்பட்ட புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு அரசாங்கம் புதுச்சேரியிலிருந்து ஒரு சிறிய பிரெஞ்சு போர்க்கப்பலை அனுப்ப முன்வந்ததாகவும், இந்திய அரசாங்கத்தின் எச்சரிக்கைக்குப் பயந்து அங்கேயே பின்தங்கிவிட்டதையும் குறிப்பிட்டீர்கள். ஏறத்தாழ 140 ஆண்டுகள் தொடர்ச்சியான பிரெஞ்சுப் பிடியிலிருந்து 1954 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13 ஆம் தேதி ஏனாம் மட்டுமே (இப்போதுள்ள புதுவை மாநிலப்பகுதிகளில்) முதன் முதலாக இந்தியாவுடன் இணைக்கப்பட்டது என்பதும் அதற்கடுத்த நாட்களில்தான் மாஹி இந்தியாவுடன் சேர்க்கப்பட்டதும் அதன் பிறகு மெல்ல புதுச்சேரியும் காரைக்காலும் பெருங்கடலுடன் சங்கம்மான நதிபோல ஓடி வந்து பாரதத்துடன் கலந்துகொண்டதையும் இன்றைய காலத்து இளைய சமுதாயம் அறிந்திருக்குமா என்பது கேள்விக்குறிதான்.

1970 களில் ஏனாமைச் சேர்ந்த காமிச்செட்டி என்பவரைப் பற்றி தமிழகமே அறியும். புதுவையில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இவர் ஆதரவு தேவை என்பதாலும் அந்தக் காலக் கட்டத்தில் புதுவையில் ஆட்சி மாறுதல் சர்வ சகஜமானது என்பதும் ஆனால் எந்தக் கட்சியானாலும் காமிச்செட்டியின் ஆதரவு உண்டு என்பதால் ‘ஏனாம்ஊருக்கு எப்போதுமே புதுவை அரசாங்கத்தார் மத்தியில் ஒரு ‘அருட்கண்உண்டு என்பது கூட அன்றைய காலகட்டத்து அரசியல் ஆர்வலர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

அதே போலத்தான் இன்றைய ஏனாம் பிரதிநிதியும் கூட என்பதால் அவர்களால் இந்த ஏனாம் குட்டி நகருக்கு பல வசதிகள் கொண்டுவரப்பட்டதையும் அறிந்த போது அரசியல் சில சமயங்களில் வளர்ச்சி விஷயத்திலும் எவ்வாறெல்லாம் உதவுகிறது என்றுதான் எண்ணத் தோன்றியது.

எது எப்படி இருந்தாலும் ஏனாம் என்றொரு சிற்றூர் இன்று அதிசயத்தக்க விதத்தில் எல்லா வசதிகளுடன் கூடிய ஒரு குட்டி நகரமாக, மக்களுக்கு பலன் தரக்கூடிய விதத்தில் வளர்ந்து இருக்கிறது. குட்டி நகரம்தான் ஆனாலும் ஏனாம் எனும் ஊரிடமிருந்து ஏனைய சிற்றூர்கள் கற்றுக் கொள்ளவேண்டியது ஏராளம். ஏனாம் ஏன் இப்படி வளம் பெரும் ஊராக மாறியது.. ஏனாமைப் போல ஏனைய ஊர்களும் ஏன் இப்படி தம்மை வளப்படுத்திக் கொள்ளக்க்கூடாது? 

நான் அப்படி மாறும் வருங்கால இந்தியாவை கனவு காண்பது போல பார்க்கும்போது மிகப் பிரமிப்பு மிக்க நாடாக அந்தக் கனவில் பாரதநாடு எனக்குத் தெரிகிற்து என்ற விஷயத்தை இங்கே சொல்லிவிடுகிறேன்.

தூலிபாலா அவர்களே.. என்னைப் போன்று யாரேனும் உங்களைப் சந்திக்க நேர்ந்தால் அவர்களுக்கும் ஏனாம் என்கிற நனவுலகம் பற்றி எடுத்துச் சொல்லி ஏனாம் போல ஒரு அழகிய பட்டணத்தை உருவாக்கச் சொல்லுங்கள் என்பதே என் வேண்டுகோள். அவர்களும் என்னைப் போல கனவு காணலாம். கனவிலாவது பாரத சமுதாயத்தில் மறுமலர்ச்சியைக் கண்டு மகிழலாம்தானே!

வணக்கம், நன்றி!!

அன்புடன்
திவாகர்