Follow by Email

Friday, February 25, 2011

மனோகரமான லட்டு

திருமலையில் அருளப்படும் பிரசாதங்களின் வரலாறு

திருப்பதியில் கல்வெட்டுகள் சுமார் 650 இருக்கின்றன. இவைகளில் சிற்சில தவிர்த்து ஏனைய அனைத்தும் திருமலைக் கோயிலைப் பற்றியவையே. அதிலும் தமிழ் கல்வெட்டுகள் சுமார் 600 இருக்கின்றன. கல்வெட்டுகளின்படி பார்க்கும்போது இன்றைய திருப்பதியும் திருமலையும் பல்வேறு வகையான ஏற்ற தாழ்வுகளை சந்தித்து இன்று உலகின் இந்துக்கள் அனைவராலும் போற்றப்படும் கோயிலாக உருவாகியிருப்பதைப் புரிந்து கொள்ளலாம்.கல்வெட்டுகள்தான் என்ன நடந்தது என்பதை நமக்கு ஆதாரமாகக் காண்பிக்கும் தடயங்கள். ஒவ்வொரு கல்வெட்டும் பல நிகழ்வுகளை சொல்லிக் கொண்டே போகிறது. நமக்குத் தேவையான சில முக்கிய நிகழ்வுகளை மட்டும் இந்தக் கட்டுரையில் தர இருக்கிறேன்.

பிரசாதங்கள் என்பது கோயில்களில் மிக மிக முக்கியமான விஷயமாகக் கருதப்பட்ட காலம் அவைகள். பிரசாதம் மூலமாக திருமலை ஏறி வரும் அடியார் பசி தீர்க்கவே பல வேண்டுதல்கள் நிறைவேற்றப்பட்ட விஷயங்களுக்காக பலர் நிவந்தங்களை விட்டுச் சென்றுள்ளனர். பிறரும் தம்மைப் போல இப்படிச் செய்யவேண்டும் என்பதற்காகவே கல்லிலும் தாங்கள் செய்த செயலை செதுக்கிவிட்டுச் சென்றார்கள்.

அரசர் முதலியோர் விட்டுச்சென்றுள்ள கல்வெட்டுகளிலிருந்து அவர்கள் பிரசாதத்தைப் பெரிதாக மதிக்கவில்லை என்றே தோன்றினாலும் உள்ளர்த்தமாகப் பார்க்கையில்் இந்த உணவுப்பொருட்களுக்கும் சேர்த்தே நிவந்தம் அளித்துள்ளார்கள் என்பது தெரியவரும். சாளுவ நரசிங்கரும், ஸ்ரீகிருஷ்ணதேவராயரும் நிவந்தங்கள் இப்படித்தான் அளித்தனர். தாங்கள் பெரிதாக வழங்கிய நிலங்கள், நகைகள், பொற்காசுகள், ஆபரணங்கள், தங்கப் பேலா (ஸ்ரீகிருஷ்ணதேவராயரின் இரண்டு மனைவியரிடையே போட்டி போலும், ஒரு ராணி ஒரு தங்கப்பேலா கொடுத்தாள் என்பதற்காக அதைவிடப் பெரிய தங்கப்பேலாவை இன்னொரு ராணி ஓரிரு வருடங்கள் இடைவெளியில் கொடுத்துவிட்டு அந்த இருவரும் கன்னட பாஷையில் கல்லில் பதித்து விட்டுச் சென்றுள்ளனர்)இவைகளில் நிலங்களின் விளைச்சல் மூலம் கிடைக்கும் வருவாய் கோயிலின் எல்லா செலவுகளுக்கும் எடுத்துக் கொள்ளப்படவேண்டும். இதில் பிரசாதங்களும் மறைமுகமாக வரும். ஆனால் பொதுமக்களோ, வணிகர்களோ, பெரிய தனவந்தர்களோ அப்படி இல்லை. அவர்கள் வெட்டிய கல்வெட்டுகளின் படி பார்க்கும்போது குறிப்பாகவே பிரசாதங்களுக்காக ஏராளமாக காணிக்கையளித்துள்ளனர் என்பது புலப்படும். வயிற்றுப் பசியின் அருமை தெரிந்தவர்கள் போலும்.

9ஆம் நூற்றாண்டில் சாமவை எனும் பல்லவ இளவரசிதான் முதன்முதலில் தாம் செய்ததை கல்வெட்டில் ஏற்றிய உத்தமபுத்திரி. இவள் கைராசி அடுத்த 700 ஆண்டுகளில் ஏறத்தாழ அறுநூறு கல்வெட்டுகள் திருமலையில் செதுக்கப்பட்டன. அதிர்ஷ்ட வசமாக இவள் வடித்த இரண்டு தமிழ் கல்வெட்டுகளிலும் திருவேங்கடமுடையான் பெயரும், அவனுடைய உற்சவ மூர்த்தியாக வெள்ளியிலே வார்க்கப்பட்ட மணவாளப்பெருமான் பெயரும் சொல்லப்பட்டிருக்கிறது. ஏறத்தாழ இரண்டு முறை நான்காயிரம் குழிகள் தனித்தனியாக நிலங்கள் நிவந்தமாக அளித்து, அந்த நிலங்கள் மூலம் கிடைக்கும் தொகையில் முதன் முதலாக பத்து நாள் உற்சவம் ஏற்பாடு செய்யவும் அவள் கட்டளையாக கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. ஆக திருமலையில் முதல் பிரும்மோற்சவத்தை பல்லவ இளவரசி சாமவைதான் ஏற்பாடு செய்ததாக இதன் மூலம் உறுதியாகிறது. இவள் பெயரால் உற்சவம் ஏற்பாடு செய்யும் சபைக்குக் கூட சாமவை அல்லது சாம்பவை என அழைக்கப்பட்டது. இந்த உற்சவகாலம் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தில் சுக்ல பட்சத்தில் ஆரம்பித்து வைகுண்ட ஏகாதசியோடு பூர்த்தி ஆகுமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த நாளான துவாதசி நாளன்று சுதர்சனருக்கு நீராடல் செய்யப்பட்டு உற்சவம் முடியும். (இந்தக் கல்வெட்டு ஆதாரமாகத்தான் ‘திருமலைத் திருடன்’ நாவலில் கூட மார்கழி மகோற்சவம் சிறப்பாக எடுத்துக் கொள்ளப்பட்டு அந்த அடிப்படையில் கதையின் முக்கிய சாராம்சம் கூட சொல்லப்படும்.)

திருப்பதியில் உள்ள மலைமேல் குடிகொண்டிருக்கும் திருவேங்கடமுடையான் கோயிலின் பொற்காலம் என்றால் அது 1350 ஆம் ஆண்டு முதல் 1600 ஆம் ஆண்டு வரைதான் என்று சொல்லவேண்டும். முக்கியமாக விஜயநகர அரசர்கள் ஆண்ட காலம் இது. திருமலை புகழின் உச்சியில் இருந்தது. சதா சர்வ காலமும் விழாக் காலமாக 1440 இலிருந்து 1560 வரை இருந்ததை ஏராளமான கல்வெட்டுகள் நிரூபிக்கின்றன. ஆண்டொன்றுக்கு பதினோறு மாதங்கள் பிரம்மோத்சவம் நடைபெற்ற காலம் இவை. மார்கழி தவிர அனைத்து மாதங்களும் திருவேங்கடத்தானுக்கு உற்சாக உற்சவங்கள், மேளதாளங்களால் வீதி ஊர்வலங்கள், விழாக்கால வழக்கமான கொண்டாட்டங்கள் (வெடிச் சத்தம் கூட உண்டு) என மலையே அதிரும்படி கலகலவென இருந்த மலை, அடுத்த இருநூறு ஆண்டுகளில் யாருமே தங்கமுடியாத சூழ்நிலைக்குக் கூட சென்றது என்பது கல்வெட்டுகளின் மூலம் பரிபூர்ணமாகத் தெரியும்.

1800 ஆண்டுகளில் பிரிட்டனின் கிழக்கிந்தியக் கம்பெனியின் அதிகாரத்துக்கு வந்தபோது திருமலையில் மலேரிய பரப்பக்கூடிய கொசுக்கள் அதிகம் என மலை மேலே செல்வதற்கே தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலே இருந்த அர்ச்சகக்குடும்பங்கள் (சுமார் 50 பேர்) கூட திருப்பதி அடிவாரத்துக்கு வந்துவிடவேண்டுமென கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் 1600 ஆண்டுகளுக்குப் பிறகு, விஜயநகர சாம்ராஜ்ய வீழ்ச்சிக்குப் பிறகு சில நாயக்க ராஜாக்கள் திருமலையின் விழாக்கால நிலையை சிறிது காலமே போற்றி வந்தனர். மராத்தியர்கள் தமிழ்நாட்டை ஆண்டு வந்த காலத்தில் திருப்பதி பகுதி ஆற்காடு நவாபின் ஆளுகையிலும், மராத்தியர் ஆளுகையிலும் மாறி மாறி வந்ததால் திருமலைக் கோயில் அரசர்கள் ஆதரவின்றி அர்ச்சகர்கள், மடாதிபதிகள் மற்றும் போஷகர்கள் (பெரும்பாலோர் வைசியர்கள்) மட்டுமே கட்டிக் காக்க வேண்டிய நிலையில் தள்ளப்பட்டது. பிரிட்டிஷார் வந்தபோது இந்த நிலை இன்னமும் மோசமானதுதான்.

முதலில் திருப்பதி வேங்கடவன் என நினைத்தாலே நம் கண், நாசி, நாவையும் நிரப்புவது இந்த ஒரு சொல்தான்.. லட்டுதான்.

திருமலை வேங்கடவன் பிரசாதமாக வழங்கும் லட்டு என்றிலிருந்து ஆரம்பித்தது என்பது கல்வெட்டுகள் படி எங்கும் காணப்படவில்லை. பொதுவாக க்டந்த 200 வருடங்களாக கல்யாண உத்சவம் செய்யும்போது இனிப்பு வகையறாக்களோடு ஒன்றாக லட்டும் சேர்ப்பித்திருக்கலாம் என்று ஊகிக்கலாம்தான். விஜயநகர அரசர் காலங்களில்தான் உற்சவமூர்த்தியான ‘மலைகுனிய நின்ற பெருமாள்’ கல்யாண உற்சவம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த கல்யாண உற்சவத்தினைப் பற்றிய முதல் கல்வெட்டு கி.பி. 1546 ஆம் ஆண்டு தாலபாக்கம் திருமலை அய்யங்கார் என்பவரால் முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்டது என்ற விவரம் தெரிய வருகிறது. தாலபாக்கம் என்பது அன்னமய்யா பிறந்த ஊர். இவர் அவருக்கு என்ன உறவு எனக் கல்வெட்டில் சொல்லப்படவில்லை.

இந்தக் கல்யாணோத்சவத்தில் (பெள்ளித் திருநாள் என்று எனத் தெலுங்கிலும், கல்யாணோத்சவம் என தமிழிலும், வைவாகோத்சவம் என சமுஸ்கிருதத்திலும் வடிக்கப்பட்டது) பங்குனி மாதத்தில் ஐந்து நாட்கள் நடந்த இந்தத் திருநாள் உற்சவத்தையும் திருமாமணிமண்டபத்தில் உற்சவமூர்த்தியான மலைகுனிய நின்றபெருமாள் (பின்னால், மலைகுனிய நின்றான், பின் மேலும் மலையப்பனாக சுருக்கப்பட்டது) தம் இரு தேவியருடன், ஐந்து நாட்களும் விழாக்கோலம் எங்கும் காண, கல்யாணம் செய்து கொண்ட காட்சியையும் கொஞ்சம் விவரணையாகவே இந்தக் கல்வெட்டு சொல்கிறது. ஆனால் கல்யாணத்து இனிப்பு வகையறாக்களில் ‘லட்டு’ இல்லை. திருமணத்தில் பிரசாதங்களாக வடைப்பிடி (வடை), மனோகரம் (இது மிகவும் பழைய காலத்திலிருந்தே தொடர்ந்து வருவது) எனும் இனிப்பு, அவல், பொறி இவைகளைத் தந்ததாக இந்தக் கல்வெட்டு சொல்கிறது. மேலும் திருக்கல்யாணத்தில் ஊஞ்சல் உற்சவத்துக்காக ‘பஞ்சவண்ணப்பிடி’ என ஐந்து வர்ணங்களில் செய்யப்பட்ட அன்னமும் தயாரிக்கப்ட்டதாகவும், இந்த ஐந்து நாள் மொத்த செல்வுகளுக்காக திருமலை அய்யங்கார், ஐநூறு கட்டி வராகன் தொகை செலுத்தியதாகவும் கல்வெட்டு சொல்கிறது. அதாவது பொதுமக்களில் முதன் முதலாகக் கோயிலுக்குப் பணம் கட்டி பெருமாளுக்கு இவர்தாம் கல்யாணம் செய்வித்ததாகத் தெரிகிறது.

லட்டு என்பது திருவேங்கடவன் கோயிலில் 20ஆம் நூற்றாண்டில்தான் முறைப்படியாக பிரசாதமாக வந்ததாகவும், கல்யாணம் ஐய்யங்கார் என்பவர்தாம் இப்போதைய ருசிகரமான லட்டுவுக்கு காரணகர்த்தா எனவும் தகவல் உள்ளது. 1932 ஆம் ஆண்டில் சென்னை (மதராஸ்) அரசாங்கத்தாரால் தி.தி.தேவஸ்தானம் உருவாக்கப்பட்டு அவர்களின் நிர்வாகத்தின் கீழ் திருமலைக் கோயில் வந்தாலும் மடைப்பள்ளியும் பிரசாதங்கள் செய்யும் உரிமையை மிராசிகள் பெற்று வந்ததும் எல்லோரும் அறிந்ததுதான். இப்படி ஐந்து மிராசிகளின் பிரதிநிதியாக கல்யாணம் ஐயங்கார் உரிமை பெற்று சமையலறை நிர்வாகத்தினைப் பொறுப்பெடுத்துக் கொண்டதாக தகவல் கூட தி.தி.தே அலுவலத்தில் இன்றும் உள்ளது. ‘கொண்டந்தா லட்டு’ (மலையளவு லட்டு) எனும் ஒரு பிரார்த்தனையை ஒரு தெலுங்கர் செய்ய, அதற்கேற்றவாறு கல்யாணம் ஐயங்காரும் ஏராளமான அளவில் செய்து கொடுக்க, அந்த லட்டு பிறகு பிரசாதமாக ஏராளமானவர்கள் எடுத்துச் செல்ல, லட்டு புகழ் வையம் அறியச்செய்யும் விதமாக இந்த நிகழ்ச்சியும் இருந்ததாக சொல்வர். (ராஜாஜி அவர்களே கல்யாணம் ஐயங்கார் செய்த லட்டுவின் பெருமையைப் போற்றியதாகவும் சொல்வர்). ஆனால் லட்டு நிச்சயமாக ஆதியிலிருந்து திருப்பதியில் பிரசாதமாக இருக்கவில்லை.

லட்டுக்குப் பிறகு எல்லோருக்கும் பிரியமான பிரசாதம், அதுவும் பெருமாள் கோயிலென்றால் அது புளியோதரைதான். இந்தப் பதார்த்தம் எப்போதையிலிருந்து ஆரம்பித்தது என்று ஆராய்ந்துதான் பார்க்கவேண்டும். ஆனால் புளியோதரைக்கு அடிப்படை தேவையான புளி எனும் வார்த்தை திருமலை கல்வெட்டுகளில் இல்லை.

ஆனால் 1250ஆம் ஆண்டில் சுந்தரபாண்டியன் காலத்தில் எடுக்கப்பட்ட சில கல்வெட்டுகளில் பிரசாத விஷயங்கள் வருகின்றன. தயிர்சாதம், எலுமிச்சை சாதம் போன்றவை வருகின்றன. புளியோதரையை விட எலுமிச்சை சாதம் செய்வது மிக எளிது. (அப்படியே புளிப்பு ருசி சற்று குறைந்தாலும் பிழிந்த எலுமிச்சை மீது பழியைப் போட்டு மடைப்பள்ளிக்காரர்கள் தப்பித்துவிட சந்தர்ப்பம் உண்டுதான்)

அடுத்த பதின்மூன்று, பதிநான்காம் நூற்றாண்டுகளில் ஏகப்பட்ட கல்வெட்டுகளில் பொங்கல் வருகிறது. பொங்கல் எனும் பெயர் வரவில்லையென்றாலும், பாசிப்பருப்பும், அரிசியும், உப்பு, மிளகு, நெய் போன்றவை (இவை ஐந்தும் சேர்ந்து சமைக்கப்பட்டால் பொங்கல்தானே!) ஏராளமாக கொடையாக கொடுக்கப்பட்டதற்கான கல்வெட்டுகள் உள்ளன. அடுத்து அதிகம் கல்வெட்டுகளை ஆக்கிரமித்திருப்பது பானகம். மலையில் நடந்து செல்லும் பக்தருக்காக, கோயில் நிர்வாகமே (தனத்தார் செலவில் இருந்து) பானகம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு அரசர் முதற்கொண்டு சாதாரண பொதுமக்கள் வரை தனத்தாருக்கு (temple treasury) பணம் செலுத்தியதற்கு அந்தக் காலத்தில் கல்லிலே உளி கொண்டு எழுதி ரசீதாகக் கொடுத்திருப்பது ஒரு விசேஷம்தான்.

வருடம்: ஆங்கிலம் 1446:

கல் ரசீது பெறுபவர்: எர்ர கம்பய்யத் தேவரின் மகனான பெரியமல்லையத்தேவர்,

தொகை: 1000 பணம்

பானகத்துக்குத் தேவையான பொருள்கள் வாங்குவதற்காக மேற்படியாரால் தனத்தாரிடம் வழங்கப்பட்டது.


வருடம்:1451.

பெயர்: துவாரபதி மலையபெருமாள் மகனான பிள்ளைபொறுத்தார் தன் பிறந்தநாளான உத்திரநட்சத்திரத்து நாளில் திருமலை மலைகுனிய நின்றானுக்கு பானக ஆராதனைக்காக, பானகம் பொருள் வாங்க 5000 பணம் தனத்தாரிடம் செலுத்தப்பட்டது.

பானகம் தவிர அடுத்து அதிகமாகப் பேசப்பட்ட பிரசாதம் மனோகரம் எனும் தின்பண்டம்தான். இப்போதெல்லாம் மனோகரம் கோயில் பிரசாதங்களில் நடைமுறையில் இல்லையென்றாலும் இன்னமும் ஆந்திரக் குக்கிராமங்களில் மனோகரம் செய்வதும், விருந்து உபசாரத்தில் அதை வைப்பதும் உண்டுதான். மனோகரம் என்பது அரிசிமாவும், வெல்லப்பாகும் கலந்த உலர்ந்த கலவையை எண்ணெயில் போட்டு (முறுக்கு போல) வறுத்தெடுப்பதுதான். ஆனால் எண்ணெய் பணியாரமாகப் பார்ப்பதற்குத் தெரியாது. மனோகரம் என்றால் அழகானது என்ற பொருள். கோலம் என்றாலும் அழகு என்றுதான் சொல்வார்கள். கோலமாவில் கோலம் போடுவது போல அழகான நெளிவு சுளிவு கொண்டு, பார்ப்பதற்கு எழிலாக இருக்கும் இந்த தின்பண்டம் வெறும் அரிசி மாவும் வெல்லமும் கொண்டு தயாரிக்கப்படுவதால் இதற்குத் தேவையான பொருட்களாக, அரிசி, வெல்லம், கடலை (எண்ணெய்க்காக) போன்றவை நிவந்தனமாக ஏராளமான கல்வெட்டில் காணப்படுகிறது. மனோகரம் படையல் செய்வதற்காக எனும் பெயரோடும் சில கல்வெட்டுகள் உள்ளன. இந்தக் கால லட்டுவின் இடத்தை இந்த மனோகரம்’தான் ஒருகாலத்தில் திருமலையில் பிடித்திருந்ததாகக் கூட சொல்லலாம். கரகரவென பல்லால் கடித்து உண்ண சுவையான ஒரு தின்பண்டம்தான் இது.

தமிழகத்தில் திருமணங்களில் இந்த மனோகரத் தின்பண்டம், (கொஞ்சம் கரகரவென இல்லாமல், மெத்தனமாக இருக்கும், ஆனால் ருசி ஒன்றுதான்) கூம்பு போல செய்யப்பட்ட கூடுகளில் அடைத்து மணமகள் சார்பில் மணமகன் வீட்டாருக்கு சீர் செய்வது பழையகால வழக்கம். பிராம்மணர் இல்லத்துத் திருமணங்களில் ’பருப்புத் தேங்காய்’ எனும் பெயரிட்டு இன்னமும் முந்திரிப்பருப்பு தேங்காய், வேர்க்கடலைப் பருப்புத் தேங்காய், அல்லது இந்த மனோகர தின்பண்டத் தேங்காய்’ என சீர் செய்து எல்லோர் கண்களிலும் ’காண்பித்துக் கொண்டுதான்’ இருக்கிறார்கள்.

மனோகரமான இந்த குறிப்பிட்ட தின்பண்டம் ஆந்திர மக்களிடையே மிகப்பிரபலம்.

அடுத்து வருவது அப்பம். இதுவும் மேற்கண்ட பொருள்களினைக் கொண்டே செய்யப்படுவது. ஆனால் மனோகரத்துக்கு உலர்ந்த கலவை தேவைப்படும். அப்பம் அப்படி செய்யப்படுவதில்லை. மனோகரம் இன்று திருமலைக்கோயில் பிரசாதங்களில் இருந்து மறைந்தாலும் இந்த அப்பம் இன்னும் மறையவில்லை. இன்றும் திருவேங்கடத்தானுக்கு முக்கியப் பிரசாதங்களில் ஒன்றாக அப்பமும் இருந்து வருகிறது. அப்பமும், மனோகரமும் அதிக நாட்கள் இருக்கக்கூடியவை கூட.. மலையேறி திருவேங்கடவனைத் தரிசித்து செல்லும் பக்தர்களுக்கு அதிக நாள் நீடிக்கக்கூடிய பிரசாதமாக 12ஆம் நூற்றாண்டிலேயே இருந்ததை கல்வெட்டுகள் பேசுகின்றன

சரி, கீழ்க்கண்ட அளவில் ஒரு பட்டியல் ஒரு கல்வெட்டில் இருக்கிறது. இதனைச் சற்று பார்ப்போம். இந்த அளவையில் எப்படிப்பட்ட பிரசாதங்கள் செய்யமுடியும் என்பதினை எளிதாக உணர்ந்தாலும் எத்தனை பேருக்காக சமைக்கப்பட்டிருக்கிறதோ என்பதையும் கவனிக்கவேண்டும். ஏனெனில் இந்த அளவைகள் ஒரு குறிப்பிட்ட தினத்துக்காக மட்டுமே.

> 153 மரக்கால் அரிசி (8 படி = ஒரு மரக்கால்)
> 506 நாழி நெய் (ஒரு நாழி என்பது 1.3 லிட்டர்)
> 12660 பலம் வெல்லம்,
> 14 நாழி மிளகு,
> 24 மரக்கால் பச்சை பருப்பு
> 30 மரக்கால் கடலைப் பருப்பு
> 30 மரக்கால் கோதுமை
> 67 மரக்கால் நெல்
> 100 நாழி: பால்
> 5 நாழி: தேன்

> திருக்கை விளக்கம் (தட்சிணை அல்லது செய்கூலி) 896-1/4 பணம்

இவை அனைத்தும், அதிரசம், வெல்லப்பொங்கல், வெண்பொங்கல் செய்வதற்காக விஜய நகர சாம்ராஜ்யத்தை ஆண்ட அரசர் சாளுவ நரசிங்கராயாரால் 1473 ஆம் ஆண்டு நடந்த ஊஞ்சல் உற்சவத்தின் போது திருவேங்கடமுடையானுக்கு நிவேதனம் செய்ய நிவந்தமாக அருளப்பட்டது. கோதுமை எந்தப் பதார்த்தம் செய்வதற்காக என்பது குறிப்பிடப்படவில்லை.

சாளுவநரசிம்மரின் விருப்பப்படி பண்டிதர்களின் உதவியோடு திருவேங்கடத்தான் புராணமான ’திருவேங்கடமகாத்யம்’ 1491 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. இன்றைய திருவேங்கடத்தான் கோயில் புராணக் கதையான பத்மாவதி கல்யாணம், குபேரனுக்குக் கடன் பட்டது போன்றவையும் இந்த ‘திருவேங்கடமகாத்யத்தில்’ சொல்லப்பட்டதுதான். இந்தப் புராணக் கருத்துக்களையும் மக்களிடையே பரவலாக்க உத்தரவிட்டதற்கான ஒரு கல்வெட்டும் அதற்கு தேவைப்படும் சில நிவந்தங்களும் கீழ்திருப்பதி கோவிந்தராஜனின் கோயிலில் இருக்கிறது. இவருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த இரண்டாம் தேவராயர் (துளுவவம்சம், கிருஷ்ணதேவராயரின் தந்தை) சாளுவ நரசிம்மரின் இந்த ஏற்பாட்டை மிக விரிவாகச் செய்ததற்கும் கல்வெட்டுகள் மலைக் கோவிலிலேயே உள்ளன.

இந்தப் புராணக் கதை வெளியான பிறகுதான் வைகானஸ விதிப்படி முறையான ஆகமவிதிகளை திருமலைக் கோயிலில் பின்பற்ற ஆரம்பித்தார்கள் என்று கூட சொல்லலாம். ஆகம விதிகளின்படி முறையான வழிபாடுகளும் ஆரம்பித்தன. முதலில் ஸ்ரீனிவாஸ ஸகர்ஸநாமம் எழுதப்பட்டு ஓதப்பட்டு அர்ச்சனையை ஆரம்பித்ததும் 1491 ஆம் வருடம்தான் என்றொரு கல்வெட்டு சொல்கிறது. இந்த அர்ச்சனையைப் பற்றிய இன்னொரு கல்வெட்டு ஸ்ரீகிருஷ்ணதேவராயர் காலத்தில் அதாவது 1517 ஆம் ஆண்டும் ஒரு கல்வெட்டு சொல்கிறது.

ஆண்டு: 1517,

காலம்: ஸ்ரீகிருஷ்ணதேவராயரின் 8ஆம் ஆண்டு.

விஷயம்: ஒவ்வொரு நாளும் சகஸ்ரநாம அர்ச்சனைக்குப் பிறகு பிரசாதமாக நான்கு நாழி நெய், தேவைப்படும் அரிசி, பச்சைப் பருப்பு, உப்பு, மிளகு, தயிர் போன்றவை முறையே பயன்படுத்திக் கொள்ள 5000 குழி நிலங்கள் நிவந்தனமாக திருமலையானுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. இந்த விளைநிலங்களில் இருந்து கிடைக்கும் வருவாயை சூரி்யனும் சந்திரனும் உள்ளவரை ஒவ்வொரு நாளும் சகஸ்ரநாமம் பூஜைக்குப் பிறகு பிரசாத செலவுகளுக்காக பயன்படுத்தவேண்டும்.

இன்றும் கூட அதிகாலை தரிசனம் செய்து வருவோருக்கு பொங்கல், தயிர்சாதம் போன்றவை கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது. ஒரு நல்ல அரசனின் கோரிக்கை இத்தனை நாட்களாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. இனியும் நீடிக்கும்.

உலகையே காத்தருளும் திருவேங்கடமுடையானை தரிசிக்க எந்த பக்தருக்குத்தான் இஷ்டம் இருக்காது. ஆனால் அவனோ உயரத்தே மலை மீது கோயில் கொண்டவன். கஷ்டப்பட்டு மலை ஏறி வரும் அடியவர் கூட்டம் வயிறார சாப்பிடுவதற்கு எந்தக் குறையும் இருக்கக்கூடாது என்பதில் பழங்காலத்து அரசர்கள் மிகவும் சிரத்தையுடன் இருந்தார்கள். உற்சவகாலங்களில் அன்னதானம் என்பது மிகப் பெரிய புண்ணிய காரியமாக பழங்காலத்திலிருந்து நம்பப்பட்டு செயல்பட்டு வந்தாலும், இந்த அன்னதானமானது இன்னொரு வகையில் (பொதுவாக பசியால் வாடும் )ஏழைகளின் பசியை சில நாட்களாவது தீர்க்கும் எனப் பார்க்கும்போது அன்னதானத்தின் உயர்வை நம்மால் உணரமுடியும்.

(pictures courtesy: TTD.)

Saturday, February 5, 2011

Aduththa Veettil Oru Arputha Manithar

அடுத்தவீட்டில் ஒரு அற்புத மனிதர்:உன்னால் முடியும் தம்பி எனும் ஒரு படம், நல்ல படம், சமுதாய நோக்கோடு எடுக்கப்பட்ட சில படங்களில் ஒன்று. இதன் கதை சினிமாவுக்காக தயாரிக்கப்பட்ட கதை. ஒரு இளைஞன் மக்கள் சேவையே மகேசன் சேவை என்று சொல்ல, இளஞனின் தந்தை மறுக்க, சில பல உணர்ச்சி வசமான வசனங்கள், காட்சிகள், தியாகங்கள் என கதை இளைஞனுக்கு சாதகமாக சுபமாக முடியும். இது தெலுங்கில் முதல்முதலாக சிரஞ்சீவியை வைத்து எடுக்கப்பட்டு வெற்றியைக் கண்ட இயக்குநர் தமிழிலும் கமலஹாசனை வைத்து எடுத்தார். .

சரி, விஷயத்துக்கு வருவோம். இந்தக் கதையில் நடப்பதாகச் சொல்லப்பட்ட விஷயங்கள் யாவும் நடைமுறை வாழ்க்கையில் சாத்தியமானதா என்றால் உண்மையான பதில் இன்றைய சூழலில் இந்த நாட்டில் இப்படியெல்லாம் சாத்தியமில்லை என்றுதான் வரும். ஆனால் திரையில் வரும் இந்த உணர்ச்சிவசப்படும் சம்பவங்கள் மற்றும் வசனங்கள் இவை யாவும் தவிர்த்து உண்மையாகவே சமுதாயத்துக்கு நல்லதொரு சேவை செய்யவேண்டுமென களத்தில் குதித்து பல்வேறு சோதனைகளைக் கடந்து இன்னமும் தம் வாழ்க்கையையே இந்த சமுதாய முன்னேற்றத்துக்காக அர்ப்பணித்த மாமனிதர் ஒருவரை சமீபத்தில் சந்தித்த அனுபவம்தான் இந்தப் பதிவு.

எழுபது வயது நிரம்பிய இளைஞர் திரு பரமேஸ்வர ராவ். பாகவத சாரிட்டி டிரஸ்ட் எனும் பெயரில் மிகப் பெரிய விவசாயப் பண்ணையை உருவாக்கிக்கொடுத்த இவர் கதையையே சற்று சினிமாவுக்காக ஏற்றபடியாக மாற்றி திரைப்படம் எடுத்தார்கள் என்ற விஷயம் எல்லோருக்குமே (இந்த பிராந்தியத்தில்) தெரிந்த விஷயம்தான்.

விசாகப்பட்டினம்-சென்னை மார்க்கத்தில் விசாகப்பட்டினம் நகரத்திலிருந்து சுமார் 60 கி.மீ தூரத்தில் பஞ்சதாரா எனும் ஊரில் அழகான குடிரம் அமைத்துக் கொண்டு, ஒரு உயர்நிலைப்பள்ளியையும் அருகே கட்டிக்கொண்டு, நாளைய நல்ல இளைஞ்ர்களை இங்கே உருவாக்கிக் கொண்டு வரும் இந்த மகாமனிதரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் பள்ளி அருகேயே ஒரு பழைய கோவில் ஒன்று உள்ளது. சுமார் ஆயிரம் வருடகாலம் பழமையானது. சிவனுக்காக ஒரு சில யாதவகுல அரசர்களும், போயகுல வீரர்களும் நிர்மாணித்த கோவிலுக்கு 1967 ஆம் ஆண்டு வனபோஜனம் செய்வதற்காக நண்பர்கள், உறவினர்களோடு வந்தவர் பரமேஸ்வர ராவ். அப்போதே அவர் அமெரிக்கவாசி. வந்தவர் அங்குள்ள கோயிலின் பழமை பாதுகாக்கப்படாமல் பாழடைந்து வரும் நிலை அவருக்கு மிக வருத்தமளிக்க,அரசாங்கங்களின்(மத்திய-மாநில) அதிகாரவர்க்கம் பழைமையின் பவித்ரத்தில் ஒளிந்து கொண்டு யாரும் அந்தக் கோயிலை அண்டவிடாமல் செய்தது - அதாவது எவ்வித மாறுதலும் செய்யக்கூடாது எனும் தடையைப் போட்டது (இன்னமும் அப்படித்தான்). அதன் அருகேயே ஒரு கணப்தி கோயில் நிர்மாணித்தால் நன்மை பயக்கும் என சிலர் கூறிய யோசனையின் படி அந்தக் காலத்திலேயே ரூ 22 லட்சம் செலவில் திவிமுகவிநாயகர் கோவிலை நிர்மாணித்தார்.
(சமீபத்தில் கட்டப்பட்ட புதிய கோயிலும் அதன் பின்னே பழைய கோயிலும்)

அத்தோடு அங்கு சுற்றுச் சூழல் மலையும் வளமான நிலங்களும் உள்ள இடங்களை விளைநிலங்களாக மக்கள் சரியாகப் பயன் படுத்திக் கொள்ளாததும், கல்வி வசதி இல்லாமையும் பரமேஸ்வர ராவை யோசிக்க வைத்தன. இந்த நிலையைப் பார்த்து ஏதும் செய்யமுடியாமல் தமக்குள்ளே வருத்தப்படுவதைக் காட்டிலும் அவரால் முடிந்தவரை தாமாகவே களத்துள் இறங்கி களப் பணி செய்வதன் மூலம்தான் வெளி உலகத்துக்கு சேவையின் பயனை எடுத்துச் செல்லமுடியும் என்பதை உணர்ந்தார். தாம் அதிகம் சம்பாதித்துக் கொண்டிருந்த வெளிநாட்டு வேலையையும் வெளிநாட்டுக் குடிமகன் என்ற கௌரவத்தையும் உதறிவிட்டு தான் பிறந்த மண்ணுக்கு நிரந்தரமாகக் குடிவந்ததோடு மக்களோடு மக்களாக ஒன்றிப்போய் தம் செல்வத்தையும் பகிர்ந்து கொண்டு அவர்கள் முன்னேற்றத்துக்காக பாடுபட ஆரம்பித்தார்.’சுவித்யா’ எனும் பெயரில் தரமான கல்வியை சுற்றுப்புற ஜில்லாக்களில் வாழும் ஏழை மாணவர்களுக்காக கட்டினார். இங்கே இப்போது சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட ஏழை மாணவர்கள் இங்கேயே தங்கியிருந்து கல்வி கற்று வருகின்றனர். கல்வி என்றால் சாதாரணக் கல்வியல்ல. கலையோடு, நம் நாட்டின் தொன்மையையும் சிறப்பையும் பால பருவத்திலிருந்தே அவர்களுக்குப் போதித்து வரும் கல்வி. அந்தக் குழந்தைகளைப் பார்க்கும்போது அவர்கள் முகத்தில் சந்தோஷத்தையும், கவலையில்லா பருவத்தில் நேர்த்தியான கல்வியைப் பயின்று வரும் ஆர்வத்தையும் பார்க்கும்போது நமக்கும் அந்த மகிழ்ச்சி தொற்றிக் கொண்டுவிடுகிறது.பரவேஸ்வரராவ் பரந்த பார்வையும் ஜாதிமதபேதமில்லா சேவையும் எத்தனையோ நல்லவர்களை அவர் பக்கம் வரவழைத்தது. அவர்களின் சேவைகளின் பலன் யாவும் சாதாரண மக்களுக்கே சென்று சேர்கின்றது. இதையெல்லாம் காணும்போது அரசாங்கங்களின் மக்கள் முன்னேற்ற திட்டங்கள், பட்ஜெட்டில் பல்லாயிரம் கோடி ஒதுக்கீடுகள், கடைசியில் அந்த ஒதுக்கீட்டில் 90 சத்வீதம் அரசியல்வாதிகளின் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் ஜேபிகளுக்கே செல்லும் என்பதையும் பார்க்கும்போது அரசாங்கத்தை நம்பி வாழும் பொதுமக்கள் எத்தனையோ நாட்களாக ஏமாற்றிவருகிறார்களே என்ற கவலையும் சேர்ந்தே வருகிறதுதான். அரசாங்கத்தைக் குறைந்த அளவே நம்பி, மிகுந்த அளவில் தாமாகவே செயல்படும்போது, அதன் பலன்கள் நேரடியாக அதுவும் ஏராளமானவையாக சாதாரண மக்களுக்குச் செல்கின்றன என்பதை தாம் வாழுகின்ற வாழ்க்கை மூலம் நிரூபித்துக் கொண்டிருப்பவர் பரமேஸ்வரராவ்.
(இப்போது ஏதோ சுமாராகக் காணப்படும் பழைய கால சிவன் கோயில்)

பரமேஸ்வரராவின் பூர்வீகம் தமிழகம்தான் என்பதை அவரே நேரடியாக என்னிடம் தெரிவித்தபோது எனக்குள் ஏகப்பட்ட வியப்பு. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்திலிருந்து வேதம் சொல்லப்படுவதற்காக சோழராசனின் கட்டளையால் ஒரு ஐந்து குடும்பம் இங்கு (ஆந்திரத்தில்) வந்ததாம். அந்த குடும்பத்தின் வாரிசுதான் நாங்கள் என்றார். இதைப் பற்றி என்னுடைய வம்சதாரா சரித்திர நாவலில் குறிப்பிட்டுள்ளதையும் நான் அவருடன் பகிர்ந்து கொண்டேன். குலோத்துங்கன் காலத்தில் இன்னும் ஏராளமான அளவில் தமிழ் அந்தணர் குடும்பங்கள் ஆந்திரத்துக்கு குடிபெயர்ந்ததைப் பற்றிய சரித்திர குறிப்புகள் உள்ளதையும், திராவிடர் எனும் குடும்பப்பெயருடன் அழைக்கப்படுவதையும், காஞ்சி பரமாச்சாரியார் குறித்து வைத்த சான்றோடு நான் குறிப்பிட்டபோது அவர் முகத்தில் இன்னும் மகிழ்ச்சி நிறைந்து காணப்படுவது தெரிந்தது.

ஆனாலும் தமிழ் தெலுங்கு எனும் வேற்றுமை எல்லாம் இவரிடத்தில் இல்லை. மானிடர் சேவையே மகேசன் சேவை எனும் குறிக்கோளுடன் வாழும் இவர் எல்லாவகை இனத்துக்கும் பொதுவானவர் அன்றோ..

(அவர் வாழும் குடீரம், அவரே வடிவமைத்துக் கட்டியது)

காலம் இப்போதெல்லாம் மிக மாறிவிட்டது. தற்போதைய சூழ்நிலைகள் மனிதரை சுயநலமிக்கவராக மாற்றிவிட்டது. இப்படி சுயநல வாழ்வை சூழ்நிலையாக கொண்ட நாம் எந்தவித சுயநலமும் இல்லாமல் சக மனிதரின் தேவைகளை உணர்ந்து அவர்களுக்கு உதவி செய்து கொண்டே வாழும் யாராவது ஒரு மனிதரைப் பார்த்தாலும் ஆச்சரியப்படுகிறோம். பரமேஸ்வரராவ் எனும் மாமனிதரைப் பற்றிய ஆச்சரியம் என் மனதை விட்டு அகலவே அகலாது. நான் அவரை போட்டோ எடுக்கவேண்டும் என்று சொன்னவுடன் தம்மருகே இரண்டு மாணவர்களைக் கூட்டிக்கொண்டார். குழந்தைகளுடன் இந்தப் பெரிய குழந்தையும் சேர்த்து காணும்போது கள்ளமில்லா உள்ளங்களின் கருணை மழையில் நனைந்தோம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

மனிதனாய் பிறந்து சக மனிதருக்கு உதவி செய்து வாழ்வது என்பதே இறைவன் விதித்த விதி என்பதை சொல்லாமல் சொல்லும் பரமேஸ்வரராவ் அவர்கள் இன்னமும் ஏராளமான ஆண்டுகள் வாழ்ந்து சேவை செய்யவேண்டுமென இறைவனை வேண்டுகிறோம்.