Monday, April 18, 2011

அடுத்த வீட்டில் ஒரு ஆச்சரியம்!!

அன்போடு கருணையும் சேர்த்துக் கொண்டு சில்கூரில் அருள் பாலிக்கும் பாலாஜிக்கு

வணக்கம், நமஸ்காரம்.

உனக்கு எல்லா மொழிகளும் தெரியும். ஆனால் அதில் இந்த இந்த இரண்டு மொழிகளில்தான் என்னை இப்படி வணங்கச் சொல்லிப் பழக்கப் படுத்தியுள்ளாய் என்பதால் அப்படியே அதை உனக்குத் திருப்பித் தருகிறேன்.

ஹைதராபாத் வரும்போதெல்லாம் சில்கூர் வந்து உன்னைத் தரிசிக்கவேண்டும் எனப் பலமுறை (அதுவும் இந்த இரண்டு வருடங்களில்தான்) நினைப்பதுண்டு. ஆனால் வந்ததில்லை. காரணம் தெரியும். வந்தால் மனைவியுடன் வா என்று நீ சொல்லாமல் சொல்வதாகவும், மனைவிக்குதான் என்னை விட உன் மீது பக்தி அதிகம் என்பது வெளிப்படையாகத் தெரிந்த காரணமாகவும் நான் ஊகித்துக் கொள்கிறேன். ஆனாலும் என்னுடையை தனிப்பட்ட குறையை மன்னித்து எங்களை உன்னருகே உன்னைக் காண தருவித்துக் கொண்டது உன் கருணைக் குணம்தான். உன்னைக் கண்டதும் என்னுள் புகுந்த மகிழ்ச்சியையெல்லாம் இங்கே எழுத்தில் வடிக்க முடியுமா என்ன? அதை மனதுக்குள்ளேயே பூட்டி வைத்துக் கொண்டு மகிழ்வதுதான் சிறப்பு..

முதலில் பாலாஜி என்றதும் திருமலை வேங்கடவன் நினைப்பும் அந்த நெடிய நீள் மலைக்கேற்றபடி எட்டடி நீண்டு நின்ற நெடுமாலும்தான் எல்லோருக்கும் நினைவுக்கு வருவதை நீயே அறிவாய். ஆனால் ஹைதராபாத் சில்கூரில் அந்த அளவு உயரமில்லாமல் பக்தர்கள் கண்குளிர கண்டு ஆனந்திக்கும் வகையில் நின்ற நிலையில் காட்சியளிக்கும் உன்னை சற்று ஆச்சரியத்துடன் பார்த்தேன் என்பதையும் இங்கு சொல்லிவிடுகிறேன். (உன்னிடம் இல்லாத உரிமை எனக்கு யாரிடம் உண்டு?)

உன் கோவில் கதையை உன்னுடைய அன்புக்கும் கருணைக்கும் மிகவும் பாத்திரமான ஸ்ரீமான் சௌந்தரராஜனார் சொன்னதையும் ஆழ்ந்து கேட்டேன். சௌந்தரராஜனார் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக, பதிவாளராகப் பணிபுரிந்தவர். அன்று பார்த்து திருவிழா ஆரம்பித்துள்ள நிலையிலும் அந்தப் பெருந்தகை எங்களை தன்னருகே அமரவைத்துக் கொண்டு. மிகவும் எளிமையைக் காண்பித்துப் பேசியதும் உன்னைப் பார்த்த ஆச்சரியத்தைப் போலவே மேலுமொரு ஆச்சரியத்தைத் தந்ததுதான். அவருடைய தாத்தா ஆற்றிய சமதர்மக் கடமைகளைச் சொல்லியதுவும், அதில் முக்கியமாக ஹைதராபாதை இந்தியாவுடன் சேர்த்தபோது ஏற்பட்ட கலவரத்தில் எப்படி இரு தரப்பு மக்களையும் கோவிலுக்குள்ளும், கோவில் அருகேயும் கலவரங்களிலிருந்து காப்பாற்றினார் என்பதையும் விவரித்தபோது விந்தையுடன் உன்னைத்தான் பார்த்துக் கொண்டேன். மக்களைக் காப்பதற்காகவே வந்த கலியுகக் கடவுள் நீ, உன் பார்வையில் யாரும் யாரையுமே தாக்கமுடியாதே, என்பதும் நினைவுக்கு வந்தது.

இப்போதெல்லாம் உன் கோவிலோ மக்கள் அலைகளால் தழுவப்பட்டு வருகின்றது. வந்த பக்தர் அனைவருமே பதினோறு முறை உன் கோவிலை வலம் வந்து பிறகு வரிசையாக எந்த ஒரு ‘ஜரகண்டி’யும் இல்லாமல் உன்னை நேரடியாக தரிசித்து உன் அருட்பார்வையில் பட்டு பலன் பெறுகிறார்கள். இத்தனைக்கும் இந்தக் கோயிலில் ஒரு உண்டியல் இல்லை, அர்ச்சகர் தட்டில் பணமில்லை, அந்தக் கட்டணம் இந்தக் கட்டணம் என ஏராளமான சேவைக் கட்டணங்கள் வசூலிப்பார்களே, இப்படியெல்லாம் எந்தக் கட்டணமும் இல்லை. அந்த சீட்டு, இந்த சீட்டு என வசூலிக்கவே ஒரு தனி கௌண்டரையே எல்லாக் கோவில்களிலும் பார்த்துப் பழகிப் போனவன் கண்களுக்கு எந்தவிதமான வசூலும் இல்லையென்பதே ஒரு சின்ன ஆச்சரியம். பின் எப்படித்தான் உன் கோவில் திருப்பணிகள் காலநேரம் தவறாமல் நடைபெறுகின்றன.. பெரிய ஆச்சரியம்தான்.
அடியேன் கேட்ட இப்படிப்பட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லி சௌந்தரராஜனார் என் ஆச்சரியத்தை உடைத்தது வாஸ்தவம்தான். ஆனால் அதன் பலன் எனக்குள் ஏற்பட்ட இன்னொரு ஆச்சரியம்.. இப்படியும் சாத்தியமா.. இப்படி எல்லாம் சாத்தியம் என்றால் அதை ஏன் மற்ற கோவில்களுக்கும் பயன்படுத்தக் கூடாது..

தர்மரட்சகனின் புகழ் பரப்பும் ஒரு மாதப் பத்திரிகை ‘வாக்’ எனும் பெயரில், தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி என மும்மொழியில் ஒரே பத்திரிகையாக வெளியிடப்படுகிறது. தற்போது சுமார் 50000க்கும் மேற்பட்ட பிரதிகள் மாதந்தோறும் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் அடக்க செலவுகள் ரூபாய் நான்கு போக ஒரு பிரதிக்கு ஒரு ரூபாய் என மாதம் ஐமபதாயிரம் வருகிறது. உன்னை நேர்ந்து கொண்டு சுவாமிக்கு என தேங்காய் உடைக்க காய் கொண்டுவருவார்கள். அதை வெளியே உள்ள தனிப்பகுதியில் உடைத்து, பாதிப் பகுதியை பிரசாதமாக உள்ளே உனக்குக் காண்பித்து, மீதியை அங்கேயே விட்டுச் செல்வது ஒரு சம்பிரதாய வழக்கமாக மாறிவிட்டதால் அந்தத் தேங்காய் மூலம் கிடைக்கும் வருமானம் மட்டுமே மாதத்திற்கு சுமார் ஐம்பதாயிரம் ரூபாய். ஆக ஒரு லட்ச ரூபாய் மற்றும் பக்தர்கள் உன் கோவில் பெயரில் போடப்பட்டுள்ள சேமிப்புக் கணக்கு உள்ள வங்கிக்கு அனுப்பி வைக்கும் கொடை நிதியிலிருந்து கிடைக்கும் வட்டி, இவை போதுமே ஒரு கோவிலை மிக நல்ல முறையில் நிர்வகிக்க – என்றாரே சௌந்தரராஜனார்.

இப்படியெல்லாம் கோர்வையாக நடக்குமா.. எல்லாக் கோவிலுக்கும் நிதி வரத்தான் செய்கிறது. எல்லாக் கோவில்களிலும் தேங்காய் போன்ற நிவேதன பொருட்கள் ஆயிரக் கணக்கில் கொடுத்துக் கொண்டே இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அத்தகைய கோவிலுக்கும் உன்னுடைய இந்தக் கோவிலுக்கும் எத்தனை பெரிய அகன்ற இடைவெளியைக் காண்பித்துள்ளாய். இந்த ஆச்சரியத்திலும் ஒன்றே ஒன்று புரிந்தது. இதெல்லாம் உன் லீலை. ‘ஆட்டுவிப்பார் ஆட்டுவித்தால் ஆடாதாரோ கண்ணா’ என்பது போல சௌந்தரராஜனார் மூலம் நீ மற்ற கோவில்களுக்கு மிகப் பெரிய செய்தியைச் சொல்லி இருக்கிறாய். ஆனால் சௌந்தரராஜனார் போல மற்ற கோயில்களிலும் தன்னலமற்ற உள்ளங்கள் இருக்கவேண்டுமே. அதற்கும் ஏதாவது வழி செய்வாய் என்ற நம்பிக்கை உண்டு.

ஒரு சில வருடங்களுக்கு முன்னால் நம் சௌந்தரராஜனார் தனியொரு பக்தனாய் உன் கோவிலில் அரசாங்கம் புகுவதற்கு தடை செய்யும் போராட்டத்தைத் துவக்கியதையும், அச்சமயத்தில் முதல்வராக இருந்த ராஜசேகரரெட்டி வேறு வழியில்லாமல், ஆந்திர அரசாங்கம் கோவில் விஷயங்களில் தலையிடாது என அரசாங்க உத்தரவு பிறப்பித்ததும் ஆந்திரமக்கள் அனைவருமே அறிவர். இந்தக் கால கட்டத்தில் இது மிகப் பெரிய சாதனை. அந்தப் போராட்டம் பத்திரிகையுலகத்தால் வெகு பிரபலமாக எடுத்துச் செல்லப்பட்டதும் தெரிந்ததுதான். சுயநலமில்லாத சௌந்தரராஜனார் தம் கோவில் போலவே தென்னிந்தியமெங்கும் உள்ள அத்தனைக் கோவில்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டுமென விரும்புவதில் எனக்கு ஆச்சரியம் துளி கூட இல்லை. ஆனால் சில்கூரில் நடந்தது போல எல்லாக் கோயில்களும் அரசாங்கக் கட்டுப்பாடிலிருந்து விடுபட்டுவிட்டால்.. ஆஹா.. நினைத்துப் பார்க்கவே ஆச்சரியமாக இருக்கிறது.

ஒருவேளை உன் தயவால் அப்படி நடந்துவிட்டால் நாடு விடுதலை அடைந்தது போல கோவில்கள் விடுதலை அடைந்தது என்று மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்தலாம்தான். அவருடைய ‘கோவில் பாதுகாப்புக் குழு’ எல்லா வெற்றியையும் பெற உன் வாழ்த்துகள் ஏராளமாக வேண்டும். உனக்குத் தெரியும் கால நேரம் பார்த்துதான் எதையும் செய்வாய்..

இரணியக சிபு’ வைக் கூட எண்பது ஆண்டுகள் ஆளவிட்டு, அவன் மகன் பிரகலாதன் வந்து அவன் மூலம் ’எங்கே அந்த நாராயணன்’ என இரணியனைக் கூப்பிட வைத்து அழித்ததாக சொல்வார்கள். அரசாங்கம் எனும் இரணியன் கோவில்களைத் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது. நம் சௌந்தரராஜனையே பிரகலாதரூபமாக நினைத்துக் கூடிய சீக்கிரம் வந்து கோவில்களை சிறை மீட்கவும். அதற்காக நீண்ட நாட்கள் காக்க வைக்காதே கண்ணா!

அடடே, உன் புகழ் பாடும் நேரத்தில் நம்ம ரங்கனை மறந்துவிடுவேன் போல இருக்கிறது.. ரங்கராஜனாரும் தந்தைக்கேற்ற தனயன். இல்லாவிட்டால் ஒரு பயோடெக் பொறியாளர், லண்டனில் கிடைக்க இருந்த, உதவித் தொகையோடு கூடிய அதி சொகுசுக் கல்வியை அந்தக் காலகட்டத்திலேயே (1988 தானே) தந்தை சொல் கேட்டு உதறிவிட்டு உன் சேவையில் ஈடுபடுவாரோ.. ‘வாக்’ பத்திரிகையில் அவரது கைவண்ணமும் கண்டேன்.. ரங்கன் சேவையையும், இன்னும் ஆச்சாரியர் சிலர் பார்த்தேனே, அவர்களது சேவையையும் நம்மாழ்வார் பார்த்துக் கொண்டே ‘கண்டோம், கண்ணுக்கினிய கண்டோம், தொண்டீர் எல்லாரும் வாரீர், வைகுந்தன் பூதங்கள் இரியப் புகுந்தன’ எனப் பாடுவதும் நம் காதில் கேட்கிறது. ’வாக்’ பத்திரிகை தமிழகம் முழுவதும் பரவ வேண்டும். ரங்கனார் ’வாக்’ புத்தகத்தில் தமிழுக்கென சில பக்கங்கள் ஒதுக்கவேண்டும்.
போனவாரம்தான் ‘ஹிந்து’ பேப்பரில் பார்த்தேனே.. உன் புகழ் கேள்விப்பட்டு, தேர்தலில் போட்டியிடும் தமிழக அரசியல்வாதிகள் போட்டிப் போட்டுக்கொண்டு சில்கூர் வருவதாகவும், அவர்களிடம் அப்போதும் கூட சௌந்தரராஜனார் தமிழகக் கோவில்களில் பக்தர்களுக்கு எவ்விதக் கட்டணச் சேவையும் இல்லாமல் சௌகரியம் செய்துகொடுக்க வேண்டும் என்பதாகவும் செய்தி போட்டிருந்தார்களே.. நம் தமிழக அரசியல்வாதிகளே அப்படித்தான்.. விஷயம் இருந்தால்தான் வருவார்கள். கெட்டிக் காரர்கள். எப்படியோ வேவு பார்த்து, கண்டுபிடித்து உன்னிடம் தேடி வந்து கோரிக்கை வைக்கிறார்கள். ஆனால் நீதான் யார் கேட்டாலும் உடனே கொடுப்பவன் ஆயிற்றே.. யார் யாருக்கு என்னென்ன கொடுப்பது என்பதை சற்று எச்சரிக்கையுடன் செய்யவும் (ஏதோ ஒரு உரிமையில் சொல்லிவிட்டேன்.. கோபித்துக் கொள்ளாதே).

உன் கோவில் நம்மாழ்வார் பாடியபடி வைகுந்தன் பூதங்கள் சேவை செய்யும் கோவில் - ஏழைகளுக்கும் கோவில், பணக்காரர்களுக்கும் கோவில், அதிகாரிகளுக்கும், வணிகர்களுக்கும், மாணவர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் கோவில்தான் என்பதை அங்கு வந்து பார்த்த பிறகுதான் புரிந்தது, உன் கோவிலில் பேதமே கிடையாது. உன்னை விஸா பாலாஜி என்று செல்லமாக பிள்ளைகள் அழைக்கிறார்கள். அவர்கள் கேட்டவுடனே அந்த விஸாவை எளிய முறையில் நீ பெற்றுத் தருவதால்; பொதுவாக பெற்றவர்கள்தான் தம் பிள்ளைகளைக் கட்டாயப்படுத்திக் கூட்டிக் கொண்டு கோவிலுக்குச் செல்வார்கள். ஆனால் உன் கோவிலில்தான் குழந்தைகள் பெற்றவரைக் கூட்டிக் கொண்டு வரும் ஆச்சரியத்தையும் பார்த்தேன். உன்னைக் காண வரும் பக்தர்கள் உன்னைக் கண்டதுமே அவர்கள் கோரிக்கைகளை உன் காதில் போட்டுவிட்டு ’இனி உன் பாடு’, என கவலையற்றுச் செல்வதையும் அதே ஆச்சரியத்தோடு பார்த்தேனே..

எத்தனையெத்தனை ஆச்சரியங்கள்.. உன்னை இனி அடிக்கடிக் காணவருவேன்.. இந்த முறை கண்டது போலவே அப்போதும் வழி செய்வாய் என்று எனக்குத் தெரியும். கடைசியாக ஒரு சின்ன கோரிக்கை. நாங்கள் சௌந்தரராஜனாரிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே ஒரு அழகான இளம் தம்பதியினர் கேரளாவில் இருந்து வந்தனர். அவர்கள் சௌந்தரராஜனாரிடம் தம் மனக் குறையை தீர்க்க வழி கேட்டனர். வழியை அவர் காட்டினார். அந்தக் குறையையும் தீர்த்து வைப்பாயாக.. (இதுவும் ஒரு உரிமையில்தான்)..

எனக்கெனவும் ஏராளமான கோரிக்கைகள் உள்ளனதான். ஆனால் உன்னைப் பார்த்த மாத்திரத்தில் அவையெல்லாம் மறந்து போய்விடுகின்றன.. என் மனம் நீ அறிவாய்.. சமயம் பார்த்து அவையாவும் நீயே ஞாபகம் வைத்துக் கொண்டு நிறைவேற்றி அருளும்படிக் கேட்டுக் கொள்கிறேன்..

இப்படிக்கு
அடியேன் திவாகர்.

’வாக்’ பத்திரிகையைப் பற்றிய விவரங்களை www.vakchilkur.org எனும் வலைத்தளத்தில் காணலாம். வாக் பத்திரிகை வாங்குவதால் ஒரு சிறுதுளியை கோவில் காணிக்கையாகவும் நாம் அளிக்கிறோம்.