Saturday, December 7, 2013

உறவும் பிரிவும்

உறவும் பிரிவும்

இதோ, அதோ, வரும், வந்து விடும், வந்து கொண்டே இருக்கிறது என்று சொல்லப்பட்ட தெலுங்கானாவை இத்தனை நாளாகத் தள்ளிப் போட்டுவிட்டு இப்போது திடீரென எப்படியாகிலும் கொண்டே வந்துவிடவேண்டும் என்ற துடிப்பில் இருக்கக்காரணம் பொதுத்தேர்தல் நெருங்குவதுதான் என்பது எல்லோருக்குமே தெரியும்தானே.. மத்திய அரசாங்கம் தெலுங்கானாவை அங்கீகரித்து ஜனாதிபதிக்கு தேதி குறிக்க அறிக்கையை அனுப்பிவிட்டது. அவர் மாநில சட்டசபையைக் கூட்டி தீர்மானம் கேட்பார்.. மாநில சட்டசபை தீர்மானத்தை ஆதரித்தாலும் எதிர்த்தாலும், அதைப் பற்றிக் கவலை கொள்ளாமல் மக்களவையில் வாக்குக்கு விட்டு தெலுங்கானாவைத் தனியாகப் பிரித்து விடுவார்கள். அது எப்படி ஒரு மாநிலத்தின் சட்டசபை எதிர்க்கும் தீர்மானத்தை மத்திய அரசு ஏற்காமல் பாராளுமன்றத்தில் வாக்குக்கு விடலாமா’ என்று யாரும் கேட்கவேண்டாம். இதற்கு இந்திய ஆளுமை சட்டம் ஆர்டிகிள்-3 உதவுகிறதாம். எப்படியும் ஒரு மாநிலத்தை பிரிப்பது என்று ஒரு தரப்பாரால் மட்டுமே முடிவு செய்யப்பட்டு சுயலாபத்துக்காக இரண்டாகப் பிரித்துப் போட்டுவிட்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

மொழி வாரி மாநிலமாக ஆந்திரம் 1950 களில் பிரிந்தபோது அல்லது பிரித்தபோது நாட்டில் அத்தனை போராட்டங்களில்லைதான். எல்லையோரத்தில் ஒரு சில பகுதிகள் இணைக்கப்படவேண்டும், அல்லது இணைக்கப்படக்கூடாது என்பதாக சில போராட்டங்கள் அமைந்தன, அவைகளிலும் ஒரு சிலரின் பிடிவாதங்கள் கலந்திருந்ததால் அவை கசப்பான நிலையில் அன்று இருந்தன என்பதும் அந்தக் கசப்புக் கூட காலம் எனும் ரப்பரால் அழிக்கப்பட்டது என்பதையும் நாம் அறிவோம்தான். அந்த மொழிவாரி மாநிலங்கள் பிரிந்ததால் மக்கள் பாதிக்கப்படவில்லை. அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படவில்லை. அவர்கள் பொருளாதாரத்திலோ அல்லது ஒருவருடன் ஒருவர் பழகுவதிலோ மாற்றம் இதுவரை ஏற்படவே இல்லை. 

ஆனால் இந்த ஆந்திராக்காரர்களும் தெலுங்கானக்காரர்களும் ஒன்று சேர்ந்து ’தெலுங்கு மொழி பேசும் ஒரே குடும்பமாக’ 1956 இல் ஒன்றாக இணைக்கப்பட்டபோது இந்தக் குடும்பத்தில் சில கசமுசாக்கள் இருந்தன என்பது என்னவோ உண்மைதான். கசமுசாக்களின் காரணம் அன்றைய நிஜாம் ஆளுகைக்குட்பட்ட மாகாணங்களின் எல்லைப் பகுதிகள் வெவேறு மொழி பேசும் மாநிலங்களில் கலந்திருந்ததும், உருது, தெலுங்கு, கன்னடம், மராத்தியம் போன்ற மொழிகள் பேசப்பட்ட கலவையாக இருந்ததைக் கவனத்தில் கொண்டும், மாநில அளவில் மட்டுமலாது தேசிய அளவிலும் பலம் மிகுந்த ஆந்திரத் தலைவர்களின் மீதுள்ள இயற்கையான அச்சமும் இந்த பிராந்தியத்தில் இருந்ததையும் கண்டுகொண்ட அன்றைய நிதான புத்தியும் பொதுநலத்தில் அக்கறை கொண்ட ஆட்சியாளர்கள் சாமர்த்தியமாகப் பேசித்தான் இந்த நிஜாம் நாட்டிலிருந்த மொழிவாரி பகுதிகளை சீராகப் பங்கு போட்டு, தெலுங்கு பேசும் தெலுங்கானாப் பகுதிகளை ஆந்திரத்துடன் சேர்த்தனர். இதில் எல்லா தெலுங்குப் பகுதியினருக்கும் முதலில் சந்தோஷம்தான் என்றுதான் சொல்லவேண்டும்.


அக்காலக் கட்டத்தில் தெலுங்கானாவில் காங்கிரஸுக்கு ஒரே எதிரியாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு அதிக செல்வாக்குப் போகக்கூடாதே என்ற ஒரு அச்சத்தில் ஜவஹர்லால் நேரு கூட அந்தப் பகுதி மக்களுக்கு ஒரு தைரியமான வார்த்தையை தாரை வார்த்தார். “தெலுங்கானா பகுதியினரும் ஆந்திரப்பகுதியினரும் கணவன் மனைவி போன்றவர்கள். இன்று இணையும் இவர்கள் எதிர்காலத்தில் இவர்கள் மத்தியில் வெறுப்பு ஏற்பட்டால் ‘விவாகரத்து’ வாங்கிக் கொள்ளலாம்’, என்றவர்தான் நேரு.. இத்தனைக்கும் இந்தியாவில் விவாகரத்து என்பது ஒரு கூடாத விஷயமாக, பாரதகலாசாரத்தில் இல்லாத விஷயமாகக் கருதப்பட்ட காலங்கள் அவை என்பதையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். கல்யாணம் என்று சொல்லும்போதே வாழ்த்தவேண்டிய பெரியவரான நேரு இப்படியெல்லாமா பேசுவார் என்று கேட்பவர்களுக்கு ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும் பண்டித ஜவஹர்லால நேரு மேலைநாட்டுக் கலாசாரத்தில் அதிகம் பழகி வாழ்ந்தவர் என்பதுதான் அது.. மேலைநாடுகளில் கல்யாணம் பதிவு செய்யும்போதே அது பிற்காலத்தே விவாகரத்தானால் யார் யாருக்கு பணவிஷயங்களில் என்னென்ன பொறுப்பு என்பதை நிர்ணயம் செய்யும் வகையில் விவாக சட்டம் வகை செய்கிறது.

தெலுங்கர் என வரும்போது தெலுங்கு மொழி பேசும் யாவரும் ஒன்றே என்ற கொள்கை முதலில் பிடித்திருந்தது. நேரு குறிப்பிட்டது போல இந்த குடும்பத்தில் முதலில் புதுக் கல்யாணத்தம்பதி போல வாழ்க்கை இனித்தது. ஆனாலும் அவ்வப்போது ஏதாவது வம்பில் மாட்டிவிட்டு அதனால் ஏற்படும் தீயில் குளிர் காய்வர் சில அரசியல்வாதிகள். ஆனால் தீ பரவாமல் அணைக்கப்படும். தீ இருந்தவரை ஏற்பட்ட தீக்காயங்களுடன் தப்பித்து மறுபடியும் சேர்ந்து வாழத் தொடங்குவர். 1968/69 வரைக்கும்இதுதான் நிலை.

அந்தக் காலகட்டத்தில்தான். சென்னாரெட்டி திடீரென நினைவு வந்தது போல தெலுங்கானா மாநிலம் பெற்றே தீரவேண்டுமென மிகப் பெரிய போராட்டத்தைத் தூண்டினார். இதுதான் சந்தர்ப்பம் போல, ஆந்திரத்திலும் தனி ஆந்திரம் வேண்டும் எனக் கேட்டு பெரும் போராட்டம் வெடித்தது. மாணவர்கள் என்றுமே அப்பாவிகள். பாவம்.. ஒரு சில அப்பாவி மாணவர்களின் பலியோடு இந்தப் பெரும் தீயும் அணைக்கப்பட்டது. ஆனால் இதன் பலனாக சென்னாரெட்டிக்கு அவர் ஆசைப்பட்ட முதல்வர் பதவி வந்தது. ஆந்திரர்களுக்கு.. ஏமாற்றம்தான் மிச்சம். அவர்கள் அப்போதே தனி ஆந்திரம் கேட்டுப் போராடி வெற்றியும் பெற்று இருந்தால் இன்றைக்கு ஹைதராபாத் இவ்வளவு பெரிய நகரமாக வந்திருக்கமுடியாது என்கிற கசப்பான உண்மை இன்று ஆந்திரத்தில் யாரைக் கேட்டாலும் ஒப்புக் கொள்வர்.

ஆனால் 1972 இல் சாதாரணமான நகரமாக இருந்த ஹைதராபாத்தை மிகப் பெரிய ஆளுமை கொண்ட நகரமாக ஆக்கிக் காண்பித்தவர் நிச்சயம் சந்திரபாபு நாயுடுதான். சாதாரணமான பழைய நாகரீகக் களையுடன் அழகாக இருந்த ஒரு நகரம் 1996 இலிருந்து மிக அபரிதமான வளர்ச்சி காண ஆரம்பித்தது. ஆந்திர மக்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் பெற்றுத் தர ஆரம்பிக்கவே லட்சக்கணக்கான அளவில் ஆந்திரமக்கள் ஹைதராபாதை தஞ்சமடைந்தனர். ஏறத்தாழ ஆந்திர மாகாணங்களில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஏதோ ஒரு சொந்தம் ஹைதராபாதில் குடியிருந்து வரும் நிலைக்கு இன்று ஹைதராபாத் தள்ளப்பட்டது. அங்கு ஆந்திரர்களின் வாழ்வாதாரம் மிகுந்த செல்வாக்கைப் பெற்றது. இந்தியாவின் மிகப் பெரிய சட்டமன்றத் தொகுதி என்று குக்கட்பள்ளி தொகுதியைச் சொல்வார்கள். இந்தத் தொகுதியில் ஏறத்தாழ 80 சதவீதத்தினர் ஆந்திரர்கள்தான். ஆந்திரர்களின் பல வியாபாரங்கள் இன்றும் இங்கு செழித்துக் கொழிக்கின்றன. அதிக நிலங்களை ஆந்திரர்கள் வாங்கினார்கள்.ஒரு காலத்தில் விலை போகாத நிலங்களின் விலைகள் படிப்படியாக ஆனால் வேகமாகக் கூடின. . ஒரு உதாரணம் சொல்கிறேன்..  இது நானே தெலுங்குத் தொலைக்காட்சியில் பார்த்ததுதான்.

சில வருடங்களுக்கு முன்பு ஹைதராபாதில் மோகன்பாபு என்கிற பிரபல நடிகரின் தெலுங்குப்பட விழாவுக்கு நம்  ரஜினிகாந்த் வந்தார்.அவர் அந்த விழாவில் பேசும்போது ஒரு நிகழ்வினைக் குறிப்பிட்டார். 1978-80 களில் ரஜினி தெலுங்குப் படங்களில் நடித்தபோது ஒரு தயாரிப்பாளர் பணம் கொடுக்கமுடியாமல் அதற்குப் பதிலாக ஹைதராபாத் ஜூபிளி ஹில்ஸ் எனும் பகுதியில்  ஒரு நிலத்தைக் காண்பித்து அதைப் பெற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தினாராம். ஆனால் மோகன் பாபு தன் நண்பரான ரஜினிகாந்துக்கு அப்படியெல்லாம் செய்யாதே, அது பாறை நிலம்.. விலை போகாது’ என்று சொல்லித் தடுத்து விட்டாராம். இந்த நிகழ்ச்சியை அந்த விழாவில் குறிப்பிட்ட ரஜினிகாந்த, தன் நண்பரான மோகன் பாபுவை வேடிக்கைக்காக கண்டித்து, இவர் தடுத்திருக்காவிட்டால், இன்று நகரின் நடுவில் இருக்கும் பலகோடிகள் பெறுமான அந்த ஜூபிலி ஹில்ஸ் நிலத்தை அன்றே எடுத்துக் கொண்டிருப்பேன், என்று சொன்னாராம். ஒன்றுமே இல்லாத பாறை பூமிகள் கோடிக்கணக்கில் விற்பனையாயின என்றால் ஹைதராபாதின் தரம் எந்த அளவுக்கு உயர்ந்துள்ளன.. நகரம் எந்த அளவுக்கு விரிந்துள்ளன என்று புரியும்.

1972 இல் ஆந்திரா மட்டுமே வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்திய ஆந்திர அரசியல்வாதிகள் இன்று ஹைதராத்துடன் கூடிய ஆந்திரா வேண்டுமென்கிறார்கள் என்றால் அரசியல்வாதிகள், பொதுமக்கள் எல்லோருமே அந்த நகரின் வளர்ச்சியில், அந்த நகரின் செல்வத்தில் தம்மை ஏதாவது ஒருவகையில் இணைத்துக் கொண்டவர்கள்தான். சரி, தெலுங்கானாவுடன் ஹைதராபாத்தைக் கொடுத்தால் ஆந்திரர்கள் ஏன் சிரமப்படவேண்டும் எனக் கேட்கலாம். நாளை தெலுங்கானா மக்கள் அரசியல் அதிகாரம் கொண்டு ஆந்திரர்களைத் துரத்திவிடலாம் என்கிற அச்சம் பொதுவாகவே உண்டு. மேலும் இதைப் போன்ற நிகழ்வுகள் ஏற்கனவே பாட்னா, கௌஹாத்தி போன்ற நகரங்களில் நடந்தேறியதையும் அவர்கள் முன்மாதிரியாகக் கொள்கிறார்கள். (லாலு ஆட்சியில் மார்வாரிகள், குஜராத்திகள், மற்றும் வடமாநிலத்து செல்வந்தர்கள் பயமுறுத்தப்பட்டுத் துறத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் உண்டு).

தர்போதைய மத்திய மந்திரிகள் கூட்டமைப்பு ஹைதராபாத் நகரை பத்தாண்டுகள் கவர்னர் தலைமையில் ஆட்சி செய்ய சிபாரிசு செய்துள்ளது. அவர் ஹைதராபதில் உள்ள நிலம், நிலத்துவாழ் உயிர்களுக்குப் பத்தாண்டுகள் பாதுகாப்பளிக்கவேண்டும்.  இன்றைய அதிவேக் நவீன உலகில் பத்தாண்டுகளெல்லாம் கடகடவென ஓடிவிடும். பத்தாண்டுகளுக்குப் பிறகு துரத்தப்பட்டால்? இதற்கெல்லாம் பதில் இல்லை.

ஆனால் டெல்லிமாநகரில் இருக்கும் அரசாங்கத்துக்கோ அல்லது நடுவில் பங்குபோடும் தெலுங்கறியாத மத்திய அமைச்சர்களுக்கோ இவை பெரிய விஷயமேயில்லை. தெலுங்கானாவைப் பிரித்தால் காங்கிரஸுக்கும் பி.ஜே.பி’க்கும் சில சீட்டுகள் கிடைக்கும். தற்போதைய நிலையில் அப்படி பிரிக்கவில்லையென்றால் ஒன்று கூட கிடைக்காது.; இது ஒன்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மாநிலத்தை இரண்டாகப் பிரித்து விட்டார்கள். 

ஒரு ஹைதராபாத் என்றல்ல, நதிநீர் பங்கீடு, நிர்வாகத்துறை, மின்சாரம், வருவாய் என்கிற முக்கிய  துறைகளில் இன்று வரை ஒன்றாக இருந்து பகிர்ந்துகொண்டவர்கள் இனிமேல் இந்தத் துறைகளில் கடும் சோதனைகளை சந்திக்கவேண்டியிருக்கும். ஹைதராபாதிலிருந்து வரும் வருவாய் மிக மிக அதிகம். கோதாவரி நதி நீருடன் தெலுங்கானாவில் பாய்ந்தால் அது ஆந்திரா வரும்போது வலுவிழந்து தலைவனுக்காக ஏங்கி நிற்கும் பழைய சங்க காலத் தலைவி போல மெலிந்து அடங்கி ஒடுங்கி வருகிறது. தெலுங்கானா அமைந்துவிட்டால் கோதாவரி ஆந்திரா வரும்போது மென்மேலும் மெலிவடைவாள். அதே சமயத்தில் தெலுங்கானாவில் மின்சாரத் தட்டுப்பாடு அதிகம் ஏற்படும். மின்சார உற்பத்தி எல்லாமே ஆந்திரத்தில் அதிகம். தானிகி தீனிகி சரிப்போயிந்தி என்று சமாதானம் அடைவார்களா அல்லது சண்டை போடுவார்களா இன்று இனிமேல்தான் தெரியும். ஆந்திர எல்லைகளிலிருந்து ஏறத்தாழ 100 கி.மீ தொலைவில் உள்ளடங்கி இருக்கும் ஹைதராபாதை பொது தலைநகராக அமைக்கமுடியாத சூழ்நிலையில் அந்நகரம் இருக்கின்றது. அதற்காக ஆந்திரத்துக்கு ஒரு தலைநகரம் புதிதாக அமைக்கவேண்டும். அந்தப் புதிய தலைநகரம் எங்கே அமைப்பது.. இது மிகப் பெரிய சிக்கல்தான். பொதுவாக ஆந்திரர்களுக்கு ஏமாற்றம்தான் இந்த முறையும் மிச்சம் என்றுதான் படுகிறது.

யாரையும் எதையும் சேர்த்து வைப்பதுதான் கஷ்டம். பிரித்து வைப்பது என்பது எளிய கலைதான். பிரித்து வைப்பதால் ஏற்படும் கஷ்டங்களைத்தான்  எப்படி சமாளிப்பார்களோ.. தெலுங்கானாவின் பத்ராசலம் ராமரும், ஆந்திரத்து வெங்கடேஸ்வரரும்தான் சாதாரண மக்களைக் காக்கவேண்டும். இப்படி எழுதும்போதே பத்ராசலம் என்பது 1956க்கு முன்பேயே ஆந்திரமாநிலத்தோடு இருந்தது என்பதால் ஸ்ரீராமரின் திருநகரையும் ஆந்திரத்தோடு இணைக்கவேண்டும் என்ற குரல்களும் ஒலிக்காமல் இல்லை.

நாடு இரண்டாகப் பிரிந்தால் அரசியல் கட்சிகளுக்கு ஆதாயம் இருக்கிறதோ இல்லையோ, சாதாரண மக்கள் வேதனையில் வீழ்வார்களோ இல்லையோ, ஆனால் ஒரு பகுதியினருக்கு படு குஷியாக இருக்கும். அது டீ.வி மீடியாவைத்தான் சொல்கிறேன்.. ஸ்டொமக் ஃபுல் என்பதைப் போல வஞ்சனை இல்லாமல் செய்திகள் தாராளமாகக் கிடைக்கும்.

எல்லாம் சரி, மத்திய அரசாங்கம் இப்படி தன்னிச்சையாகச் செயல்பட்டு உறவுக்காரர்களை இப்படிப் பிரித்துப் போடுவது என்ன நியாயம் என்று கேட்கிற அதே சமயத்தில், இன்றைக்கு ஆந்திரத்து உறவுக்கு ஏற்பட்ட இந்த இழப்பு நாளை இந்தியாவில் யாருக்கும் ஏற்படலாம் என்பதும் ஆந்திர மாநிலப் பிரிவினையை ஒரு முன்மாதிரியாகக் கொண்டு எந்த மாநிலத்தையும் இஷ்டத்துக்குப் பிரித்து விளையாடலாம் என்பதும் ஒரு வேதனைக்குரிய உண்மையாகும்.
படங்களுக்கு நன்றி : கூகிள்
கடைசியில் பத்ராசலம் சீதாராமச்சந்திரமூர்த்தியும், திருமலை திருவேங்கடவரும்.

Tuesday, September 3, 2013

அடுத்த வீட்டில் ஒரு நனவுலக குட்டி நகரம்:




அன்புள்ள தூலிபாலா ராமச்சந்திர ராவ் அவர்களுக்கு!

தமிழர்தம் மேலாட்சியை ஆவலோடு ஏற்றுக்கொண்ட உங்களுக்கு அடியோடு தமிழ் வராது என்பது தெரியும் என்றாலும் நான் எழுதும் இக்கடிதத்தின் சாரத்தை ஏற்கனவே தங்களிடம் தெலுங்கில் சொல்லிவிட்டதால் கொஞ்சம் விஸ்தாரமாகவே உங்கள் அனுமதியுடன் ஆரம்பிக்கிறேன். நீங்கள் இதையெல்லாம் படிக்கப் போவதில்லை என்று தெரிந்தாலும் எழுதுவது ஏதோ கடமை போலத் தென்பட்டதால் வந்த விளைவுதான் இக்கடிதம்

ஏனாம் அல்லது யேனாம் என்ற குட்டி நகரத்தில் தற்போது வசித்து வரும் சுமார் 42000 மக்களில் நீங்கள்தான் வயதானவர் என்பதால் ஒரு கூடுதல் வணக்கம். 85 வயது இளைஞரான நீங்கள் நூறாண்டு காணவும் புதுவை மாநிலத்திலேயே மூத்தவர் எனும் பெயரையும் எடுக்கவும் எனக்கு ஆசை.

நம் சந்திப்பு விந்தைதான் என்றாலும், எதிர்பார்க்கப்படாததுதான் என்றாலும், இந்த தூலிபாலா என்றொரு பழைய தெலுங்கு சினிமா நடிகர் ஒருவரைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன். அதனால் உங்கள் பெயர் கேட்டதும் ஒரு இயற்கையான சின்ன கவர்ச்சி உண்டானது வாஸ்தவமே..

நீங்கள் 1954 ஆம் ஆண்டில் ஏனாம் மீது பிரயோகிக்கப்பட்ட அந்த பழைய கால போலீஸ் ஆக்‌ஷன் பற்றிப் பேசினீர்கள். எனக்குக் கொஞ்சம் ஆச்சரியம்தான். ஏதோ ஏனாமில் யாரோ எப்போதோ எதிர்த்தார்கள். இந்திய அரசாங்கம் மிரட்டியதும் பணிந்து விட்டார்கள் என்றுதான் மேலோட்டமாகக் கேள்விப்பட்டேன். ஆனால் ஏனாம் இந்தியாவோடு சேர்க்கப்பட்டதில் இத்தனை விஷயம் இருக்கும் என்று யோசிக்கவில்லைதான்.

பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்பு என் முதல் நாவலான வம்சதாராவுக்காக ஏனாம் அருகே இருக்கும் திராட்சாராமம் வந்துள்ளேன். அப்போது ஏனாம் ஊருக்குள்ளும் வந்தேன். நான் வந்ததன் காரணம் வேறு நதி வளமும், என் கதைக்கான போக்கும் ஏராளமாக கிடைத்ததால் எனக்குப் பிடித்துப் போன ஒரு இடமாக ஏனாம் அப்போதே மாறிவிட்டது. இன்னொரு விந்தையும் அப்போதே கண்டேன். ஏனாம் எனும் ஊர் ஆந்திர கிராமங்களைப் போல சிற்றூர் அல்ல. மாறி வரும் வளர்ந்த ஊராகப் பட்டது. ஆனால் சமீபத்தில் ஏனாம் வந்தபோது இந்த விந்தை மாறிப்போய் ‘ஆஹாஎனும் சந்தோஷத்தில் மிதந்து போனேன் என்ற உண்மையை நான் முழு மனதோடு ஒப்புக் கொள்ளவேண்டும்தான்.

நீர்வளத்தை நல்ல விதத்தில் மாற்றியுள்ளீர்கள். கௌதமி நதிக்கு மிக அழகானதொரு கரை கட்டி ஊர் நெடுகிலும் செல்லவைத்து ஏனாமுக்கு பூமாலை சூட்டி இருக்கிறீர்கள். அழகான பூங்காக்கள், மண்டபங்கள் சிறிய பேருந்து நிலையம் என்றாலும் கச்சிதமான அளவில் கட்டப்பட்டுள்ள திற்மை, தூய்மையான சுற்றுப் புற சூழல், நல்ல சாலைகள் அதுவும் குண்டும் குழியும் காணப்படாத அளவில் ஊர்த் தேவைக்கு சற்று அளவுக்கதிகமாகவே அகலமான சாலைகள்.. நல்ல விடுதிகள் என்று இந்த சிற்றூரை அயல்நாட்டு நகரங்களுக்கு நிகரான வசதிகளுடன் முன்னேற்றி இருப்பதைக் காண மனம் மகிழ்கிறது. அதுவும் விவசாயிகள் சங்கத்துக்காக என்று குளிர்சாதன் வசதிகள் கொண்ட விடுதிகள் கட்டி இருப்பது மேலும் மகிழ்ச்சியைக் கூட்டியதுதான்.


எனக்கு ஆந்திரமாநிலத்தைப் பற்றியும், கோனசீமா, திவிசீமா போன்ற செழுமையான பகுதிகள் பற்றியும் பெருமைகள் பல உண்டு என்றாலும் குறைகளும் அதிகம்தான். பச்சைப்பசேலென்ற வயல்கள் சூழ்ந்தாலும் செழிப்பு அங்குதான் காணப்படுமே தவிர அந்த வயல்களைச் சூழ்ந்த ஊர்களில் காணமுடியாது. சுத்தம் என்பது சற்றே குறைவான அளவில்தான் காணலாம் என்றுதான் சொல்வேன். புழுதியைக் கட்டுப்படுத்தாத, கட்டுப்படுத்த முடியாத ஊர்களும், சுகாதார விஷயத்தில் அடிமட்டமாகச் செயல்படும் ஊர்களையும்தான் பார்த்துப் பழக்கமானதால் இப்படி சொல்கிறேன். அரசியல் பகைகளிலே காலம் கழித்துக் கொண்டே இருக்கும் மக்கள் சமுதாய நன்மைக்கு அதிகம் பங்கு கொள்ளவில்லை என்ற ஏக்கம் உண்டு. இந்த நிலைமை இந்தியாவில் எந்த ஒரு கிராமத்துக்கும் உண்டுதான். ஆனால் ஏனாமில் இந்த நிலமை இல்லை. சுத்தம் பேணப்பட்டு சுகாதாரம் காக்கப்பட்டு மக்களுக்குத் தேவையான (தேவைக்கும் அதிகமான) சகல வசதிகளும் செவ்வனே செய்யப்பட்டு ஒரு சிற்றூர், இன்று சிறந்த குட்டி நகரமாக முன்னேறி உள்ளதை யாரால்தான் பாராட்டாமல் இருக்கமுடியும்.


அடடே.. ஆரம்பத்தில் உங்களைப் பற்றி ஆரம்பித்து உங்களைப் பற்றி எழுதாமல் ஊருக்குள் நுழைந்துவிட்டதற்கு மன்னிக்கவும். காரணம் அந்த ஊர் என்னை அப்படிக் கவர்ந்து விட்டதுதான். 1954 ஆம் ஆண்டு வரை பிரெஞ்சுக் காரார்கள் ஆதிக்கத்திலிருந்த ஏனாம் நகரை சுதந்திர இந்தியாவில் இணைக்கவேண்டும் என்று ஊரில் மூத்தவர்கள் தாதால ரமணய்யா, மாடிம்செட்டி சத்யானந்தம் போன்றோருடன்  இளைய வயதுக்காரரான தாங்கள் சாலையில் உட்கார்ந்து போராடியதையும், அப்போதைய கால கட்டத்தில் ஆட்சி செய்த பிரெஞ்சு தேசத்து நட்பாளரும் மேயருமான சமதம் கிருஷ்ணய்யா (இவர் தன் பெயரையே க்ரௌஸ்ச்ணய்யஎன்று பிரெஞ்சுக்காரர் விரும்பும் வகையில் பிரெஞ்ச் மொழியில் மாற்றிக்கொண்டவர்) இந்தியாவுடன் இணைய மறுத்ததையும், பிறகு இந்திய அரசாங்கம் ஒரு போலீஸ் படையை அனுப்பி சண்டை செய்து மேயரை வீழ்த்தியதையும் குறிப்பிட்டதும் அந்த சண்டையில் மேயர் கொல்லப்பட்டதும் தெரிந்து கொண்டேன். பின்னர் விஷயம் கேள்விப்பட்ட புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு அரசாங்கம் புதுச்சேரியிலிருந்து ஒரு சிறிய பிரெஞ்சு போர்க்கப்பலை அனுப்ப முன்வந்ததாகவும், இந்திய அரசாங்கத்தின் எச்சரிக்கைக்குப் பயந்து அங்கேயே பின்தங்கிவிட்டதையும் குறிப்பிட்டீர்கள். ஏறத்தாழ 140 ஆண்டுகள் தொடர்ச்சியான பிரெஞ்சுப் பிடியிலிருந்து 1954 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13 ஆம் தேதி ஏனாம் மட்டுமே (இப்போதுள்ள புதுவை மாநிலப்பகுதிகளில்) முதன் முதலாக இந்தியாவுடன் இணைக்கப்பட்டது என்பதும் அதற்கடுத்த நாட்களில்தான் மாஹி இந்தியாவுடன் சேர்க்கப்பட்டதும் அதன் பிறகு மெல்ல புதுச்சேரியும் காரைக்காலும் பெருங்கடலுடன் சங்கம்மான நதிபோல ஓடி வந்து பாரதத்துடன் கலந்துகொண்டதையும் இன்றைய காலத்து இளைய சமுதாயம் அறிந்திருக்குமா என்பது கேள்விக்குறிதான்.

1970 களில் ஏனாமைச் சேர்ந்த காமிச்செட்டி என்பவரைப் பற்றி தமிழகமே அறியும். புதுவையில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இவர் ஆதரவு தேவை என்பதாலும் அந்தக் காலக் கட்டத்தில் புதுவையில் ஆட்சி மாறுதல் சர்வ சகஜமானது என்பதும் ஆனால் எந்தக் கட்சியானாலும் காமிச்செட்டியின் ஆதரவு உண்டு என்பதால் ‘ஏனாம்ஊருக்கு எப்போதுமே புதுவை அரசாங்கத்தார் மத்தியில் ஒரு ‘அருட்கண்உண்டு என்பது கூட அன்றைய காலகட்டத்து அரசியல் ஆர்வலர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

அதே போலத்தான் இன்றைய ஏனாம் பிரதிநிதியும் கூட என்பதால் அவர்களால் இந்த ஏனாம் குட்டி நகருக்கு பல வசதிகள் கொண்டுவரப்பட்டதையும் அறிந்த போது அரசியல் சில சமயங்களில் வளர்ச்சி விஷயத்திலும் எவ்வாறெல்லாம் உதவுகிறது என்றுதான் எண்ணத் தோன்றியது.

எது எப்படி இருந்தாலும் ஏனாம் என்றொரு சிற்றூர் இன்று அதிசயத்தக்க விதத்தில் எல்லா வசதிகளுடன் கூடிய ஒரு குட்டி நகரமாக, மக்களுக்கு பலன் தரக்கூடிய விதத்தில் வளர்ந்து இருக்கிறது. குட்டி நகரம்தான் ஆனாலும் ஏனாம் எனும் ஊரிடமிருந்து ஏனைய சிற்றூர்கள் கற்றுக் கொள்ளவேண்டியது ஏராளம். ஏனாம் ஏன் இப்படி வளம் பெரும் ஊராக மாறியது.. ஏனாமைப் போல ஏனைய ஊர்களும் ஏன் இப்படி தம்மை வளப்படுத்திக் கொள்ளக்க்கூடாது? 

நான் அப்படி மாறும் வருங்கால இந்தியாவை கனவு காண்பது போல பார்க்கும்போது மிகப் பிரமிப்பு மிக்க நாடாக அந்தக் கனவில் பாரதநாடு எனக்குத் தெரிகிற்து என்ற விஷயத்தை இங்கே சொல்லிவிடுகிறேன்.

தூலிபாலா அவர்களே.. என்னைப் போன்று யாரேனும் உங்களைப் சந்திக்க நேர்ந்தால் அவர்களுக்கும் ஏனாம் என்கிற நனவுலகம் பற்றி எடுத்துச் சொல்லி ஏனாம் போல ஒரு அழகிய பட்டணத்தை உருவாக்கச் சொல்லுங்கள் என்பதே என் வேண்டுகோள். அவர்களும் என்னைப் போல கனவு காணலாம். கனவிலாவது பாரத சமுதாயத்தில் மறுமலர்ச்சியைக் கண்டு மகிழலாம்தானே!

வணக்கம், நன்றி!!

அன்புடன்
திவாகர்




Wednesday, May 22, 2013

வைகாசி சுவாதியை வாழ்த்தும் வைகாசி விசாகம்


ஆந்திரத்தில் நரசிம்மரின் சிம்ம கர்ஜனை:
வைகாசி மாதத்தில் வரும் சுவாதி நட்சத்திரத்தில் இங்கு ஆந்திரர்கள் நரசிம்ம ஜெயந்தியைக் கொண்டாடுவார்கள். ஸ்ரீமகாவிஷ்ணுவின் அவதாரங்களில் மிகவும் உயர்ந்த தத்துவத்தைக் கொண்டதுதான் நரசிம்ம (அல்லது ந்ருஸிம்ஹ) அவதாரம். எப்படி தமிழகத்தின் மலைகள் தோறும் முருகன் கோயில் கொண்டுள்ளானோ, அப்படியே ஆந்திரத்தின் மலைகள் தோறும் நரசிம்மர் கோயிலை நாம் காணலாம். விசாகப்பட்டினத்தின் அருகே அமைந்துள்ள சிம்ஹாத்ரி மலையிலிருந்து வான் வழியே தென்மேற்கே போகப் போக மலை உச்சிகளிலெல்லாம் நரசிம்மர் காட்சியளிப்பது போலத்தான் தோன்றும் என்ற எண்ணம் உண்டு எனக்கு.

காடுகளும் மலைகளும் சூழ்ந்த அஹோபிலத்தில் மட்டுமே ஒன்பது நரசிம்ம க்ஷேத்திரங்கள் அமைந்துள்ளன. ஆந்திரத்தில் ஓடிவரும் கிருஷ்ணை நதிக்கும் ஹிரண்யகசிபுவை வென்ற நரசிம்மருக்கும் அப்படி என்ன விருப்பமான பொருத்தமோ, கிருஷ்ணைக் கரையை அடுத்தமட்டில்  பஞ்சநரசிம்ம க்ஷேத்திரங்களாக மட்டப்பள்ளி (நல்கொண்டா மாவட்டம்),  வடபள்ளி, வேதாத்ரி (மேலே படத்தில் உள்ளது), கேட்டவரம் (கிருஷ்ணா மாவட்டம்), மங்களகிரி (குண்டூர் மாவட்டம்) என நரசிம்மர் சிம்ம கர்ஜனை புரிந்து கொண்டு ஆள்கின்ற பிராந்தியம் இது. 
மட்டப்பள்ளி நரசிம்மர் கோயில்  (படத்தில்)குகைக் கோயில்தான். பாறையில் நரசிம்ம வடிவத்தில் சுயமபுவாக தன்னைக் காட்சிப்படுத்தியதாக தல வரலாறுகள் சொல்கின்றன. ஏறத்தாழ ஓரடி உயரத்தில் சங்கு சக்கரதாரியாகக் நரசிம்ம பெருமாள் காட்சியளிக்கிறார். பொதுவாக குடைவரை கோயில்கள் ஆந்திரத்தில் பல்லவர் காலத்திலேயே அதிகம் கிருஷ்ணை நதிக் கரையில் எழுப்பப்பட்டன என்பதற்கு வரலாற்று சாட்சியங்கள் ஏராளமாக உள்ளன. அதே சமயத்தில் நரசிம்மர் எப்போதும் காடு மலைகள் நிறைந்த சூழ்நிலையில் இந்தப் பிராந்தியங்களில் காணப்படுவது கூட ஒரு ஆச்சரியமான விஷயமே. ஏனெனில் தமிழகத்தில் பெருமாளின் அவதாரமாக ஏராளமான கோயில்கள் திவ்யத் தலங்களாக நரசிம்மமூர்த்திக்குதான் உண்டு என்பதும் அந்தக் கோயில்கள் பூமியின் சமதரைப்பகுதியில் கட்டப்பட்டுள்ளது என்பதையும் ஒரு ஒப்பீட்டுக்காக இங்கு குறிப்பிடுகின்றேன். 
அதே போல கிருஷ்ணையின் தென் கரையில் மங்களகிரி எனுமிடத்தில் மலை மீது குடைவரையாக எழுப்பப்பட்ட தலத்தில் பானக நரசிம்மர் மிகவும் விசேஷமாக பூசிக்கப்படுகின்றார். இங்கு குடிகொண்ட குடைவரை பானக நரசிம்மரின் வாயில் எந்த அளவு கொண்ட பாத்திரத்தில் பானக்ம் ஊற்றினாலும் பாதிதான் செல்கிறது. இப்போது நேராக கோயிலுக்கே மலைப்பாதை அமைத்துவிட்டார்கள். மலையடிவாரத்திலும் நரசிம்மருக்கு ஒரு அழகான கோயிலும் நீண்டு உயர்ந்த கோபுரமும் உண்டு. (படம் மேலே) பதினோரு அடுக்குகள் கொண்ட இந்த 153 அடி உயர கோபுரத்தை வாசிரெட்டி வெங்கடாத்ரி நாயுடு (பக்கத்தில் உள்ள அமராவதி நகரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்ட சிறு மன்னர்) என்பவர் கட்டினார்.

கிருஷ்ணா நதியை பிரிய மனமில்லாமல் பிரிந்து சற்று வடக்கே வந்தோமேயானால் ராஜமுந்த்ரி அருகே கொருகொண்டா மலையில் 650 படிகளுடன் கட்டப்பட்ட கோயிலில் குடிகொண்ட சாத்வீக நரசிம்மரை தரிசனம் செய்துவிட்டு இன்னும் சற்று வடக்கே விசாகப்பட்டினம் சிம்ஹாத்ரி மலையில் வராகருடன் இணைந்த நரசிம்ம பெருமான் காட்சி தருகிறார். 
வராகநரசிம்மரை அவர் முழு உருவைக் காண் வேண்டுமென்றால் ஒவ்வொரு வருடமும் இதே வைகாசியில் வரும் அட்சயத்திருதியைத் திருநாள் வரும் வரைக் காத்திருக்கவேண்டும். அன்றுதான்  சந்தனம் கொண்டு உள்ளே ஒளித்து வைக்கப்பட்டிருந்த அழகான வராகநரசிம்மரை முழுதாக தரிசனம் செய்யமுடியும். அன்று அவரைப் பார்த்துவிட்டால் இந்த ஒருநாளுக்காக வருடம் முழுவதும் தவம் இருக்கலாம் என்றுதான் தோன்றும், . இந்த தலமும் ஒரு நூற்றாண்டுக்கு முன்வரை காடுகளும் மலைகளும் சூழ்ந்த வனாந்தரப் பகுதிதான். 

விசாகப்பட்டினத்திலிருந்து பதினைந்து கிலோ மீட்டர் தூரத்தில் மலைப்பகுதியான சிம்மாசலத்தில் அமைந்துள்ள இந்தக் கோயில் சோழர்களின் கலைக் கண்காட்சியாக கண்ணுக்குத் தெரியும் என்பதும், அதைவிட ஆச்சரியமாக அந்த பதினோராம் நூற்றாண்டுக் கால கட்டத்தில் ஒரு நடுக் காட்டுக்குள் சோழர்கள் எப்படி இவ்வளவு அருமையான கோயிலைக் கட்டினார்கள் என்பதும் விந்தையான செய்திதானே..

ஆந்திரத்தில் தெலுங்கானா பகுதியிலும் நரசிம்ம க்ஷேத்திரங்கள் மிக அதிகம். தர்மபுரியிலும், யாதகிரிகட்டா எனும் சிறுகுன்றில் எழுப்பப்பட்ட யோக நரசிம்மரைப் பற்றிச் சிறிதாவது சொல்லவேண்டும்.

கோதாவரிக் கரையில் கரீம்நகர் மாவட்டத்தில் தர்மபுரி க்ஷேத்திரத்தில் நரசிம்மர் கோயில் மிகவும் புகழ் பெற்றது. இந்தப்பகுதியை ஆண்ட தர்மசேனா மிகவும் கடினமாக தவம் செய்து நரசிம்மரின் தரிசனம் பெற்றதாகச் சொல்வர். ஸ்ரீராமர் பூஜித்தத்தாக சொல்லப்படும் சிவன் கோயிலைக் கொண்ட இந்த க்ஷேத்திரத்தில் தர்மசேனாவின் முயற்சியால் தனக்குத் தரிசனம் தந்த யோகநரசிம்மருக்கு அவனே ஒரு பெரிய கோயில் எழுப்பியதாக தல வரலாறு சொல்கிறது.

அதே யோக நரசிம்மர் ஹைதராபாத் அருகே உள்ள யாதகிரிகட்டாவிலும் காட்சி தருகிறார். காசிபேட் இலிருந்து ஹைதராபாத் செல்லும் இருப்புப் பாதை வழியாகப் பார்த்தால் ரயிலில் செல்லும்போது இந்த குன்று தெரியும். இங்கே ஜ்வாலாநரசிம்மமூர்த்தி குடைவரைக் கோயிலில் குடிகொண்டுள்ளார். கருவரைக் கோபுரத்தில் ஒரு தங்க சுதர்ஸன சக்கரம் 3 அடி சுற்றளவில் பொருத்தப்பட்டுள்ளது. ஏறத்தாழ ஆறு கிலோ மீட்டார் சுற்றளவுக்கு இந்த சக்கரம் தெரிகின்றது.

ஆந்திரத்தில் 108 நரசிம்ம க்ஷேத்திரங்கள் உள்ளதாகவும் அவைகளில் 32 தலங்கள் புகழ்பெற்றதாகவும் சொல்வதுண்டு. நதிக்கரைக்கருகில் காடுகளிலும், வனம் சூழ்ந்த மலைகளிலும் காணப்படும் நரசிம்மர் ஒரு மாறுதலுக்காக கடற்கரைப் பகுதியிலும் நமக்காக தரிசனம் தருகிறார். 

மேற்கு கோதாவரி மாவட்டத்தில் நரசாப்பூர் அருகே அந்தர்வேதி எனும் சிற்றூர் கடலுக்கு சற்று அருகே உள்ளது. இங்கே கோதாவரியில் கிளை நதியான வசிஷ்டநதி கடலில் கலக்கிறது. இந்த தலம் கோதாவரி பாயும் தலங்களிலேயே மிகவும் புனிதமான இடம் என்று போற்றப்படுகின்றது. கடலிலிருந்து மேற்கே பார்த்தவிதமாக இங்கே நரசிம்மர் அருள் புரிகின்றார்.

நரசிம்மர் தத்துவம் என்பதை உயர்ந்ததாகச் சொல்லி மேலே இந்தக் கட்டுரையை ஆரம்பித்தேன் அல்லவா.. இதோ அந்தத் தத்துவத்தைப் பற்றி அடியேன் அறிந்த வரையிலும், அதற்கேற்ற நம்மாழ்வார் பாடலும் தந்திருக்கிறேன்.

பெருமாளின் அவதாரங்களில் எது சிறந்தது, எது நிறைந்தது என்றெல்லாம் சொல்லமுடியாது. ஒவ்வொரு அவதாரமும் ஒவ்வொரு வகையில் சிறந்தது. ஆனால் நரசிம்ம அவதாரம் இருக்கிறதே.. அந்த அவதாரம் வந்த காலகட்டத்தை நாம் சற்று கூர்ந்து ஆராய்ந்தால் சில தகவல்கள் வியப்பூட்டும்.

ஹிரண்யகசிபு, ஒரு சிறந்த அரசனாகத்தான் பொதுவாகப் போற்றப்பட்டிருக்க வேண்டும், அவன் ஆட்சியைப் பொறுத்தமட்டில் மக்கள் அப்படித்தான் நினைத்திருக்க வேண்டும். பாருங்கள், பூமியில் வாழும் மானிடருக்கு பொதுவாக வாழ்க்கையில் என்ன தேவை?

நிம்மதியான வாழ்க்கை,
சுகமான வாழ்க்கை,
கேளிக்கை நிறைந்த வாழ்க்கை,
கவலையற்ற வாழ்க்கை,
பருவ காலத்தில் சரியாகப் பெய்யும் மழை, பயிர் விளைச்சலில் நல்ல மகசூல், பொருட்செல்வம், மக்கட்செல்வம், பிரச்சினைகள் அறவே இல்லாத போக்கு, பொதுவாக மக்களுக்கு இது போதாதா..

இவை அனைத்தையும் ஹிரண்யகசிபு கொடுத்திருக்கவேண்டும். மூவுலகையும் ஒரு சேர ஆண்ட அவனுக்கு மழையையும் செல்வத்தையும் தருவிப்பது அத்தனை கடினமா.. ஆனால் அதற்கு அவன் கொடுத்த விலை, அசுரத் தவம் பெற்று கேட்டுக்கொண்ட வரங்கள். அந்த வரங்கள் மூலம் தேவர் முதலாக அனைவரும் அவன் அடிமைகள். போகவாழ்க்கை அனைவருக்குமே.. ஒரே ஒரு நிபந்தனை.. எல்லோருக்குமே இவன் ஒருவனே கடவுள்.. இவன் பெயரை உச்சரித்தால் போதும்.. எல்லாம், எல்லாமுமே கிடைக்கும்.

இப்படிப்பட்ட வாழ்க்கை இப்போது இருந்தால், அதுவும் மாபெரும் உலகாயுதமான வாழ்க்கையில் இந்த ஹிரண்யாயநம எனும் வார்த்தையை யார்தான் சொல்ல மாட்டார்கள்.

ஆனால் இன்னும் நன்றாக யோசித்துப்பார்த்தால், இதுவும் ஒரு வாழ்க்கையா என்று தோன்றும், இந்தக் காலத்தில் நடிகை வீட்டு நாய்க்குட்டிகளும், பூனைக் குட்டிகளும் கூட ராஜ போகத்தில் வாழுகின்றன. வேளா வேளைக்கு நல்ல புரதச் சத்தும், வைட்டமின் களும் கலந்த உணவாக, இன்றைய மாட்டுப்பண்ணைகளில் உள்ள மாடுகளுக்குக் கொடுக்கப்படுகிறது. வலிதெரியாமல் பாலைக் கூட முழுவதுமாகக் கறந்து விடலாம். இதைப் போல மேலைநாடுகளில் உள்ள ஆட்டுப் பண்ணைகள். சிறந்த உணவும், பரந்த, பச்சைப் பசேலெனும் திறந்த வெளியில் உல்லாசமுமாக ஆடி ஓடும் ஆடுகளையும், மாலையானால் அவரவர் இருப்பிடங்களுக்குப் போய் பூச்சி, பொட்டு, கொசு  தொந்தரவு கூட இல்லாமல் தூங்கும் பண்ணைகள் உண்டு. இவைகளுக்குதான் என்ன குறை? அவற்றைப் பொருத்தவரை அது சொர்க்கபோகம் அல்லவா..

இவைகளைப் போலவே இல்லாமல் சற்றுக் கூடுதலாக இன்பமாக நினைந்து உணர மனித ஜன்மம் கொடுத்து, அவர்களையும் செல்வத்தில் தழைக்க வைத்து, கேளிக்கை விருந்தோடு, ஆட்டமும் பாட்டமும் பாடிக்கொண்டு இந்தப் பண்ணை போன்ற இடங்களில்  அல்லது ஊரில் விட்டு விட்டால் (அவ்வப்போது ஹிரண்யாயநம என்ற வார்த்தையும் சொல்லிக் கொண்டு) ஆஹா.. இன்பமேதான்.. இதுவே சொர்க்கம்தான்.

இது உண்மையிலேயே நிலையான இன்பமா.. இல்லை துன்பமா..

மனிதப் பிறப்பு ஒரு விசித்திரம் மட்டுமல்ல,
தெய்வத்தின் அருள் கூட..
மனிதப்பிறப்பே அடுத்த பிறவிக்கும்,
பிறவியில்லாமைக்கும் திறவுகோல்..
மனிதன் சுதந்திரமான சிந்தனைக்கு உரியவன்.
இந்த சிந்தனை எனும் அரிய மருந்து
அவன் அந்த பிறப்பை எப்படி அந்த சிந்தனையின் மூலம் தெய்வபக்தியில் செலுத்தி சரியாகப் பயன்படுத்தி,
இந்த பிறப்பின் மூலம் மேம்பாடு அடைவதற்காக அருளப்பட்டது. மனிதன் சிந்தனை எப்போதுமே சுதந்திரத்தின் மீதே இருக்கும்.. இருக்கவேண்டும்.. அந்த சுதந்திரம் ஒன்று இருந்தால் மட்டுமே மனிதனாகப் பிறந்த காரிய சித்தி அடையமுடியும்.

ஆனால் எத்தனைதான் இன்பங்கள், எத்தனைதான் கவலையற்ற, பிரச்சினைகளற்ற வாழ்க்கை கிடைத்தாலும் சுதந்திர சிந்தனை இல்லாமல் வாழ்வது என்பதும் வசதியான மாட்டுப்பண்ணையில் வாழ்வது ஒன்றுதான். இல்லையா பின்னே! பகவானை வணங்காமல் வாழும் ஒரு வாழ்க்கையும் வாழ்க்கையா..

இப்படிப்பட்ட மாட்டுப்பண்ணைகளையும, ஆட்டுப்பண்ணைகளையும்தான் ஹிரண்யகசிபு ஆண்டுகொண்டிருந்தான்.

இதை உணர்ந்த பெரியோர்கள், அவர்கள் முனிவர்களாக இருந்தாலும், யோகிகளாக இருந்தாலும், தேவ தேவர்களாக இருந்தாலும் ஏதும் செய்யாத நிலை.. இந்த நிலையில் இருந்து மனிதகுலத்தைக் கரையேற்றுவதற்காகவே பூமியில் பிறந்தவன் பிரகலாதன். ஹிரண்யகசிபுவின் சொந்த உதிரத்தில் உதித்த மகன். ஆனால் தந்தை பேரை நாமமாகச் சொல்ல மறுத்து நம் எல்லோருக்கும் பொது நாமம் நாராயணனே என்று சின்னஞ்சிறு குழந்தையாக இருந்து ஆனானப்பட்ட, சகல ஜீவிகளுக்கும் தலையாக இருந்த தந்தைக்கே சவால் விட்டவன். இதுவரை யாருமே கேட்காத, கேட்டாலும் வராத தெய்வம் இந்த சிறுவனுக்காக கூப்பிட்டால் வருமோ.. எங்கே வரவழை உன் நாராயணனை இங்கே, என்னுடைய வெற்றிக்கற்களால் கட்டப்பட்ட தூணில்..’ என்றான் ஹிரண்யகசிபு.

பிரகலாதனுக்காக, அவன் ஒருவனுக்காகவா நரசிம்மர் அவதாரம் எடுத்தார்?.. அந்த ஒருவன் கேட்டதால் நரசிங்கம் வந்தது என்னவோ வாஸ்தவம்தான்.. ஆனால் பிரகலாதன் ஒரு கருவி, மனிதகுல மேம்பாடே இங்கு முக்கியம்.. நரசிங்கம் ஹிரண்யகசிபுவை நகத்தால் கிழித்தது. அழித்தது. ஒரு மாய உலகை சிருஷ்டித்து மனிதகுல சூத்திரத்தைக் குலைத்தவன் ஹிரண்யகசிபு. பிரகலாதன் நம்பிக்கையாக கேட்டான். உடனே ஓடி வந்தது நரசிங்கம்.. உலகத்தையும் ரட்சித்தது.

இந்த அரக்கன் போனதால் மனிதகுல தர்மம் பிழைத்தது.. மனிதனுக்கு உண்மையான சுதந்திரத்தை, அந்த சுதந்திரத்தின் மூலமாக மனிதன் சிந்திக்க மறுபடி கற்றுக் கொண்டான். தனது பிறப்பின் பெருமையை உணரத் தலைப்பட்டான். இப்படி மனித குலத்துக்காகவும், மனிதப் பிறவியை மேம்பாடு செய்துகொள்ளவும் மாபெரும் சந்தர்ப்பத்தை மனிதர்களுக்குக் கொடுத்தருளிய நரசிங்கத்தை நம்மாழ்வார் பாடும்போது தன்னையே மறந்து விடுகிறார். ஏனெனில் நம்மாழ்வாரே மனிதரை மேம்படுத்த வந்தவர். ஆனால் அவருக்கும் முன்னேயே எத்தகைய ஒரு மாபெரும் பணியை மனிதகுல மேம்பாட்டுக்காக தம் தலைவர் நரசிம்மபெருமான் செய்திருக்கிறாரே என்று நினைத்ததும் மேலும் உருகுகிறார்.

ஆடியாடி யகம்கரைந்து, இசை
பாடிப்பாடிக் கண்ணீர்மல்கி, எங்கும்
நாடிநாடி நரசிங்காவென்று,
வாடிவாடும் இவ் வாணுதலே

(அசைந்து ஆடி ஆடி, மனம் நீராய் உருகி, இன்னிசையாக பாடிப் பாடி, கண்கலில் கண்ணீர் நிரம்பி, எல்லா இடத்திலும்பல முறையும் தேடித் தேடி, நரசிம்மா என்று கூவி விட்டு உடனே வாடுகிறாள் இவ்வனிதையே - தாய் தன் பெண் ஆற்றாமையைக் கண்டு வருந்துவதாக இப்பாடல் அமைகிறது)

(படங்களுக்கு நன்றி கூகிளார்.)

Friday, March 22, 2013

உப்புமாவும் விசாகையும்



வீட்டுக்கு திடீரென சொல்லாமல் கொள்ளாமல் விருந்தினர்கள் (பசியோடு) வந்துவிட்டார்கள். விருந்துபசாரம் என்ன செய்வது.. உட்காருங்கள் என்று சொல்லிவிட்டு மளமளவென அவசரத்துக்கு ஒரு உப்புமாவைச் செய்து அவர்களுக்கு விருந்தோம்பல் செய்வோம். பசியாற்றும் உணவு என்பதால் உப்புமா எப்படி இருந்தாலும் ருசிக்கத்தான் செய்யும்.. (வந்தவர்களுக்கும் வேறு வழியில்லை) அப்படிப்பட்ட சந்தர்ப்பம் ஒன்று அடியேனுக்கும்  வாய்த்தது.

நான்கு நாட்கள் முன்புதான் இந்த அழைப்பு வந்தது. அவசரம் அவசரமாக வந்து கூப்பிட்டதில் இருந்து அது புரிந்தது. உலக கவிதை தினம் - மார்ச் 21` அன்று இந்தியன் சொஸைடி ஃபார் கல்சுரல் கோ-ஆபரேஷன் அண்ட் ஃப்ரெண்ட்ஷிப் எனும் அமைப்பு விசாகப்பட்டினத்தில் இந்த கவிதை தினத்தைக் கொண்டாடுவதாகவும் நான் ஒரு தமிழ்க்கவிதை பாடவேண்டுமென்றும், அதற்கான தெலுங்கு விளக்கமும் தரவேண்டுமென அவர்களால் கோரப்பட்டு நான் பதில் கூறுமுன்னேயே என் ஒப்புதல் பெறப்பட்டதாகவே சொல்லிவிட்டுச் சென்றார்கள். என் தூக்கத்தையும் கெடுத்தார்கள்.

கதையாளனுக்கும் கவிதையாளனுக்கு ஏகப்பட்ட வித்தியாஸம் உண்டு. ஒருவேளை ஆலையில்லா ஊரில் இலுப்பைப்பூ சர்க்கரை என்பார்களே.. அது போல நினைத்துக் கூப்பிட்டார்களோ என்னவோ.. இருந்தாலும் இதையும் ஒரு பிடி பிடித்துவிடுவதுதான்.. தேடிவந்ததை ஏன் விடுவானேன் என மனதுக்குள் நினைத்துக் கொண்டு நான் இலக்கிய உலகில் வளர வழி வகுத்த இந்த விசாகையைப் பற்றி ஒரு கவிதை எழுதி வாசித்துவிடுவது என்று தீர்மானித்துக் கொண்டேன்.. இதோ கவிதையும் எழுதி நேற்று வாசித்தும் ஆயிற்று. அதற்கு தெலுங்கு விளக்கமும் கொடுத்து அதையும் வாசித்திருந்தேன். அதை அப்படியே அவர்கள் மைத்ரி மாத இதழில் பிரசுரிக்கப் போகிறார்களாம்.. ஒருவேளை அவர்களின் பசிக்கு என் கவிதை உப்புமா போல பட்டிருக்கலாமோ என்னவோ.. (அப்படித்தான் பட்டது எனக்கு)


எந்தைமுன் வினையால் என்முன்னே எனைக்காண
முந்தைய நாளொன்றில் ஒளிபடர தோன்றியவள்
அந்தமிலா அழகுடையாள் அதிதேவதை அவளாம்
சிந்தனைக்கு விருந்தாக சொல்லியதைத்தான் கேளீரே!

பிந்தைய நாளெல்லாம் பிழைகள் பெரிதாகும்
வெந்திடும் நரகமாய் வாழ்வை வைத்துவிடும்
தொந்தரைதான் மிஞ்சும் துன்பங்கள் பெருகும்
எந்திர வாழ்வு வரும் வேகம் பெரிதாகும் 
மந்திரதந்திரமும் மாயாஜாலமும் கொண்டதாய்
மந்தைக் கூட்டமாய் மானிடர் நடுவே
மந்தஹாசமாய் வாழ இடமொன்று வேண்டாமோ
தந்தைதாயை விட்டு தனியனாய் வந்தாலும்
அந்தரங்க அபிலாஷை ஆயிரம்தான் இருந்தாலும்
சிந்தையிலே தெய்வம்விட்ட வழியென்று சொல்வாய்
பிந்தி வரும்நாளைப் பற்றிப்பெரும் கவலைகொள்வாய்
எந்த ஊரொன்று மனிதத்தைப் போற்றுகின்றதோ
எந்த ஊரொன்று மானிடத்தைக் காக்கின்றதோ
எந்த ஊரொன்று கலையழகை மதிக்கின்றதோ
எந்த ஊரொன்று கல்விச்செல்வம் தருகின்றதோ
அந்த ஊருக்கு  வழிசொல்வேன் கேளாயோ

நல்லாறும் வற்றிப்போய் கலியாளும் காலமிது
வல்லூறு போல் மனிதர்மாறும் வேளையிலே
கல்லாகிப்போன மனம் கொண்டோர் ஆள்கையிலே 
புல்லைப்போல் புழுவைப்போல் மதிப்போர்தம் மத்தியிலே
சொல்லால் தீயாய் சுடுகின்ற கூட்டத்திலே
பொல்லாத பலபேர்கள் பலமாகும் போதினிலே
செல்லாக்காசாய் சென்றிடும் இப்புவியிலே அதிசயமாய்
கல்லாதான் பொல்லாதான் பொய்யனென வந்நெஞ்சர்
இல்லாதார் அதிகம் இருப்பார் இடமாக
பல்சுவையாய் பாங்குடனே சுந்தரத்தெலுங்கு பேசி
நல்லோர்பலர் நாவும் நலம்பாட நீ வாழ
சில்லென்ற காற்றும் சிறப்பான ம்லையழகும்
நில்லாமல்  கொள்ளாமல் அள்ளாமல் குறையாமல்

அலைகடலும் ஆர்ப்பரித்து ஆரவாரமாய் கரைவந்து
நிலைகொள்ளாமல் கரைதேடி  நிதம்வந்து  வணங்கும்
கலையழகாய் கருணையுடன் கனக மகாலட்சுமியாய் 
கோலமயிலாய் குடிகொண்டு அருள்தரும் சிறந்தநகராம்

விசாகையெனும் பெயராம் அங்கிருப்போர் யாவும்
விசால மனதுடையராம் இச்சைகொண்டு செல்வாயே
அச்சமின்றி வாழ அந்நியருமங்கு வருவாரே
இச்சகத்தே தீந்தெலுங்கும் செந்தமிழும் சேர்ந்தோங்க
பச்சைமனதோடு பத்திரமாய் பக்குவமாய் பலரோடு
சுயேச்சையாக இருப்பாயே பல்லாண்டு காலம்

தேவதேவியே எனையென்னாளும் கண்போல் காக்கும்
பவதாரிணியே கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் பர
தேவதையே என்னேயுன்பேச்சு உன்போக்கே என் போக்கு
காவலாய் கனகமகாலக்ஷ்மியாய் எக்கணமும் துணையிருக்க
ஆவலாய் செல்வேனே அழகான விசாகைக்கு
ஏவல்செய்வேனே.. தமிழார்வத்தால் கோலம் செய்வேனே
காவியம் செய்வேனே கர்த்தர்வியமெனக் கொண்டு
ஓவியக்காரியே ஓங்காரியே ஒப்பிலாதவளே வாழ்கவாழ்கவே!!