Follow by Email

Saturday, November 29, 2014

குலோத்துங்கனும் நானும்

 சென்ற ஞாயிறன்று மாலை விசாகையில் அடியேன் எழுதிய அம்ருதா நாவலை நண்பர்கள் முன்னின்று வெளியீடு செய்தார்கள். 'காலத்தால் செய்த உதவி சிறிதெனினும், ஞாலத்தின் மாணப் பெரிது’ என்பது திருவள்ளுவர் குறள் சொல்வது. . என் விசாகப்பட்டினம் நண்பர்கள் இக்குறளோடு இணைவது மட்டுமல்லாமல் அதற்கும் மேலே ஒரு படி ஏறிச் சென்று எனக்கு ஊக்கம் அளிப்பவர்கள். அதனால்தான் விழாவில் கூட இந்தக் குறளோடு என் ஏற்புரையை அங்கு ஆரம்பித்தேன்.

என்னுடைய எட்டாவது புத்தகமும், ஐந்தாவது சரித்திர நவீனமான ‘அம்ருதா’ என் கைக்குக் கிடைத்த  இரண்டாவது நாளே கடகடவென அதி வேகமாக அம்ருதாவின் விடுதலையையும் தீர்மானித்து நடத்தியும் காட்டி விட்டார்கள்.. இது ஒவ்வொரு முறை என்னுடைய புத்தகம் வெளிவரும்போதெல்லாம் நடைபெறும், செயல்தான். 2004 ஆம் ஆண்டில் வம்சதாரா வந்த புதிதில் நண்பர்களிடத்தே இருந்த அந்த வேகம் பத்து வருடம் கடந்தாலும் இன்னமும் குறையவில்லை என்பதை நினைத்துப் பார்க்கும்போதே என் மனதில் அவர்களது அன்பு கடந்த உணர்ச்சி என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. இது காலத்தால் செய்த உதவியையும் விட மேலானது அன்றோ..
விழாவில் அம்ருதா நவீனம் குலோத்துங்க சோழனைப் பற்றிய கதை என்றதும் என்னிடம் ஒரு நண்பர் கேட்டார்.. ‘நானும் பார்க்கிறேன்.. உங்கள் கதைகளில் எப்படியாவது குலோத்துங்கனைக் கொண்டு வந்துவிடுகிறீர்கள்.. குலோத்துங்கன் உங்களை மிகவும் பாதித்திருக்கிறான்'’ என்று ஆச்சரியமாகச் சொன்னார். ’இதில் ஒன்றும் ஆச்சரியமே இல்லை.. விசாகப்பட்டினத்துக்குப் பழைய காலப் பெயரே’ ‘குலோத்துங்க சோழப் பட்டினம்’ தான்.. அந்தப் பட்டினத்திலிருந்து கதை எழுதினால் குலோத்துங்கன் வரத்தான் செய்வான்’ என்று மேம்போக்காக பதில் கூறினாலும் அவரைக் கதையைப் படித்து விட்டு இந்தக் கேள்வியைக் கேட்கச் சொன்னேன். அம்ருதா நாவலை அறிமுகப்படுத்தியபோது சிறப்புத் தலைவர் திரு ராஜேந்திரன் (சுங்க ஆணையர், திருக்குறள் உலகம் முழுதும் பரவுவதற்கு வழிவகை செய்து வருபவர்) அடியேனைப் பற்றிப் பேசும்போது முந்தைய ஜென்மத்தில் குலோத்துங்கன் அவையில் இருந்திருப்பாரோ என்னவோ என்று சந்தேகம் கூட எழுப்பினார். குலோத்துங்கனுக்கு இரண்டு பெயர்கள் உண்டு. அவன் பிறக்கும்போதே அவனுக்கு ராஜேந்திரன் என்று பெயர் வைத்தனர். பின்னாளில் அரசாண்டபோது வணிகர்களுக்கு சாதகமாக சுங்கவரியைத் தவிர்த்து, ‘சுங்கம் தவிர்த்த சோழன்’ என்ற பெயரையும் பெற்றவன். ஆகையினால் இந்த சுங்கம் தவிர்த்த சோழனின் கதை சொல்லும் நூலை விடுதலை செய்ய சுங்கவரி ஆணையர் திரு ராஜேந்திரன் வந்திருந்தது கூட தற்செயலான செயலாக எனக்குத் தோன்றவில்லை.

ஆனால் இப்போது யோசித்துப் பார்க்கையில் ஏதோ ஒரு வகையில் இந்த சுங்கம் தவிர்த்த ராஜேந்திரனான குலோத்துங்க சோழன் என்ற மகாமன்னன் வரலாறு என்னைப் பாதித்திருக்கவேண்டும்தான்’ என்றே தோன்றுகிறது. நான்கு வருடங்கள் வம்சதாரா நாவலுக்கும், ஒரு வருடம் திருமலைத் திருடன் நாவலுக்கும், ஏறத்தாழ இன்னொரு நான்கு வருடங்கள் அம்ருதா நாவலுக்கும் நாட்களை செலவழித்தபோது, அந்த ஒன்பது வருடங்களில் எழுதப்பட்ட இந்த மூன்று கதைகளிலும் அடித்தளமாக விளங்கிய குலோத்துங்கனை எப்படி அவ்வளவு சுளுவாக என் மனம் தன் பளுவிலிருந்து தள்ளிவிடும் என்றுதான் தோன்றியது.

குலோத்துங்கனை தெலுங்கு ராஜாவாக அம்ருதாவில் ஒரு பேச்சுக்கு அறிமுகப்படுத்தியிருந்தாலும் அவன் முழுக்க முழுக்க தமிழுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவன். தமிழில் அவனை ஒரு பெரும்புலவனாக கலிங்கத்துப் பரணி எழுதிய ஜெயங்கொண்டார் வர்ணிக்கிறார். அவன் காலத்தின் சரித்திரக் கல்வெட்டுகளை மிகவும் கூர்ந்து நோக்கினால் எல்லாமே தமிழும் வடமொழியுமே தவிர ஒரு சில கல்வெட்டுகள் மட்டுமே தெலுங்கு மொழியில் அதுவும் அவன் சார்ந்த தெலுங்கு குட்டி ராஜாக்கள் தங்களோடு அவன் பெயரையும் சேர்த்துக்கொண்டு உயர்த்திக் கொண்ட செய்திகளை மட்டுமே சொல்வதாகும். அதுவும் அந்தக் கல்வெட்டுகள் தெலுங்கு மொழி பேசும் இடங்களில் மட்டுமே கிடைத்திருக்கின்றன. (அப்படிக் கிடைத்த சில தெலுங்கு கல்வெட்டுகள் கூட இக்கதைக்கு உதவி புரிந்தது இன்னொரு விஷயம்) ஆனால் அவன் தமிழில் எடுப்பித்த கல்வெட்டுகள் ஏராளம்.. ஏராளம்.
அம்ருதா கதையில் குலோத்துங்கன் ஆட்சிபீடம் ஏறியது பற்றிய விளக்கம் தந்திருக்கிறேன். இந்த விளக்கம் எப்படி ஒரு சரித்திர பூர்வ ஆதாரமாகும் என வாசகர்கள் கேட்கலாம்தான். நேரடியாக நாம் பார்த்திராத, நேரடியாக தெரிவித்திராத விஷயத்தினை ஒரு சரித்திரக் கதை மூலம் தெளிவாக்கி, அதை ருசுப்படுத்தி விடலாமா எனக் கேட்கலாம்தான். இதற்கு நாயகனான குலோத்துங்கன் காலத்தை நாம் கொஞ்சம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
நான் இந்த கதைஉக்கு ஆதாரமாக பல கல்வெட்டுகளை எடுத்துக் கொண்டாலும் கூட பொதுவாக கல்வெட்டுகள் மூலம் தரப்படும் செய்திகளை விட குலோத்துங்கனைப் பற்றிய கோர்வையான விவரங்களை நமக்கு அள்ளித் தருபவர் அந்த சோழராஜாவின் அரசவைப் புலவராக இருந்த கவிப்பேரரசர் ஜெயங்கொண்டார்தான். அவர் எழுதிய கலிங்கத்துப் பரணியை இன்னமும் கூட சில சரித்திர ஆய்வாளர்கள் ஒரு இலக்கிய நூலாக மட்டுமே மதிக்கிறார்களே தவிர, அந்தக் காவியத்தில் கிடைக்கும் இடைப்பட்ட தரமான செய்திகளை ருசுவாக அதிகமாக எடுத்துக் கொள்ளவில்லை.. எத்தனையோ செய்திகள் எல்லாமே சரித்திர காலத்து புள்ளி விவரங்கள் போல தெளிவானவை.. ஆனாலும் நான் படித்த சரித்திரப்புத்தகங்களிலே (நீலகண்ட சாஸ்திரியார், டி.என். சுப்பிரமணியம், வெங்கடராமையா தவிர்த்து) கலிங்கத்துப் பரணியில் விரவிக் கிடக்கும் செய்திகளை இவர்கள் சீண்டவில்லை..  ஏன் இந்த போக்கு இவர்களிடம் என்பதும் புரியவில்லை.. பழைய காலத்தில் ஒரு செய்தி நடந்தது என்றால் அது நிச்சயம் கல்வெட்டு மூலமாக மட்டுமே கிடைக்கும் என்று இவர்கள் மனதில் மாற்ற முடியாத எண்ணம் பதிந்திருக்கலாமோ என்னவோ.. எதேச்சதிகார மனப்பான்மை கொண்ட அரசர்களின் ஆட்சியில் கல்வெட்டுச் செய்திகள் முழுமையான ஆதாரங்கொண்ட செய்தியாக எப்படி இருக்கமுடியும் என்பதை இவர்கள் மறந்து விடுகிறார்களோ

கலிங்கத்துப் பரணியின் நாயகனே குலோத்துங்கன்தான். அவன் ஆட்சியைப் பிடித்த காலத்தைப் பற்றிய ஒரு தகவல் ஜெயங்கொண்டார் மூலமாக வருகின்றது.

மறையவர் வேள்வி குன்றி மனுநெறி யனைத்து மாறித்
துறைகளோ ராறு மாறிச் சுருதியு முழக்கம் ஓய்ந்தே.          27

சாதிக ளொன்றொ டொன்று தலைதடு மாறி யாரும்
ஓதிய நெறியின் நில்லா தொழுக்கமும் மறந்து போயே.     28

ஒருவரை யொருவர் கைம்மிக் கும்பர்தங் கோயில் சோம்பி
அரிவையர் கற்பின் மாறி யரண்களு மழிய வாங்கே.       29

கலியிருள் பரந்த காலைக் கலியிருள் கரக்கத் தோன்றும்
ஒலிகட லருக்க னென்ன உலகுய்ய வந்து தோன்றி.    30

காப்பெலா முடைய தானே படைப்பதுங் கடனாக் கொண்டு
கோப்பெலாங் குலைந்தோர் தம்மைக் குறியிலே நிறுத்தி வைத்தே.  31

வேதம் ஓதியோர் வேதமரபை மறந்தனர். நீதி குலைந்தது, நேர்மை அழிந்தது, ஒழுக்கம் மறைந்தது, எங்கெங்கு நோக்கினும் அடிதடி, கொலை, கொள்ளை, ஆட்சியாளர் தர்மம் மறந்தனர், ஆலயங்கள் சோம்பிக்கிடந்தன. தேவதைகள் வலுவிழந்து நின்றன. மங்கையரின் கற்பு சீர்கெட்டது. சாதிகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டு அழிவைப் பெரிதாக்கியது. எங்கும் காரிருளான வாழ்க்கை.

அந்தக் காரிருளான வாழ்க்கையில் ஒளிபுகுத்த வந்தவன் குலோத்துங்க சோழன்.. என்பதாக கலிங்கத்துப் பரணி குலோத்துங்கன் சோழ ஆட்சியைக் கைக்கொண்ட சமயத்தில் சோழ தேசத்தில் இருந்த நிலைமையைச் சொல்கிறது.

இப்படிப்பட்ட சீர்குலைந்த தேசத்தை நம் கற்பனையில் ஒரு கணம் கொண்டு வாருங்கள். கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். இந்த சீர்கெட்ட காலத்துக்கு சற்று முன்னர்தாம் ராஜராஜ சோழன் ஒரு மிகச் சிறந்த அரசாட்சியையும், அவன் மகன் ராஜேந்திரனோ தந்தையை விட சிறந்த அரசனாகவும் விளங்கினான் என்று சரித்திரத்தில் பரவலாக படித்திருக்கிறோம். தர்மத்தின் ஆட்சி மிகப் பரவலாக நடந்த காலம் அது. சமுதாயத்தில் பல சீர்கேடுகள் அழிக்கப்பட்டு அரசியலில் குடவோலை மூலம் ஊராட்சியை சாதாரண மக்களே செய்ய வழிவகை செய்யப்பட்ட காலங்கள் அது, மிகப் பெரிய கோயில்கள், மிகப் பெரிய ஏரிகள் கட்டப்பட்ட காலம் அது. எங்கும் வேதகோஷங்களோடு தெய்வத்திருமுறை தமிழொலியும் சேர தெய்வங்கெளெல்லாம் ஒரு சேர நின்று வாழ்த்திய காலகட்டம் கூட அதுதான். ராஜேந்திரனின் மகன்கள் கடைக் காலத்தில் மிகச் சிறந்த சோழ தேசம் ஏன் இப்படி சீர்கெட்டுப் போகவேண்டும்? வேதம் ஓதிய காலம் அத்தனை அதி சீக்கிரத்தில் சாத்தானின் கைக்குள் ஏன் சிக்கவேண்டும்? சாதிச்சண்டை என்பது நம் பாரததேசத்தில் சகஜமான ஒன்றுதான்.. ஆனால் நல்ல ஆட்சியாளர்கள் அந்த சாதிப் பிரிவினையை காணாமல் போகடித்தது வாஸ்தவமே.. அப்படி இருக்கும்போது ஏன் நல்ல ஆட்சியாளர்கள் திடீரென மாயமாக வேண்டும்?

இத்தகைய அவலங்களை நாம் ஏதோ கற்பனையில் காணவில்லை.. அழகான கவிதைப் பாடலாக கலிங்கத்துப் பரணியே சொல்கின்றது என்றால் அந்தக் குறிப்பிட்ட காலங்கள் எப்படியெல்லாம் சீரழிந்து கிடந்தனவோ.. அந்த காரிருள் படிந்த நாட்களில் கொள்ளையர் கும்பலாக மக்கள் மாறிக் கொண்டிருக்கும் வேளையில் இந்த குலோத்துங்கன் ஆட்சியைப் பிடித்து அரசனாகிறான், அடுத்த ஒரு ஐம்பது ஆண்டுகள் அவன் ஆட்சி நீடிக்கிறது. அமைதி எங்கும் நிரவி தர்மம் தலையெடுத்துத் தழைத்தோங்குகிறது, கோயில்கள் சிறக்கின்றன, சாதிப் பிரிவினைகள் மட்டுப்படுத்தப்பட்டு எதிரிகளைக் கட்டுப்படுத்தி ஒரு பேரரசனாக உருவாகுகிறான் என்றால் இந்த அரசன் எப்படிப்பட்டவனாக இருந்திருக்கவேண்டும்.. தேசத்தின் காரிருளைப் போக்கி ஒளியைப் புகுத்திய ஒரு மாபெரும் தலைவனாக வந்திருக்கிறான் என்றால் அவன் சக்தியும், குணமும் எத்தகையதாக இருந்திருக்கவேண்டும்.. அதர்மத்தை அழித்து தர்மம் காத்திருக்கிறான் என்றால் அவன் ஆளும் திறமையும், நேர்மையும் எந்த அளவில் இருந்திருக்கமுடியும்,..

இந்தக் கேள்விகள்தான் அம்ருதாவின் கதைக்கு ஆதாரம். இந்தக் கேள்விகள்தான் என்னுடைய மூன்று நாவல்களிலும் அடிப்படையாக நிரவிக்கிடந்து பதிலாக வருகின்றது. இந்த மூன்று நாவல்களில் குலோத்துங்கன் பற்றி அதிகம் பேசப்படுவது அம்ருதா’வில் மட்டுமே..

விசாகப்பட்டினத்துக்கும் குலோத்துங்கனுக்கும் தொடர்பு உண்டுதான். கலிங்கத்துப் போர் நடந்து முடிந்ததும், அவன் பெயரை இந்த ஊருக்கு வைத்துவிட்டுப் போன செய்தியை இங்கு அறிஞர்கள் சொல்லி வருகின்றார்கள். சோழர்கள் எங்கு சென்றாலும் ஊர்ப் பெயரை மாற்றி விடுவது பொதுவான வழக்கம்தான். இங்கு கோதாவரி வடகரை புண்ணிய தலமான திராட்சாராமம் என்னும் அழகிய ஊர், குலோத்துங்கன் காலத்தில் ’இடர்க்கரம்பை’ என்னும் அழகிய தமிழ்ப்பெயரில் வழங்கி வந்தது. விஜயவாடாவையே பெயர் மாற்றி ராஜேந்திரசோழபுரம் என்று அப்போது மாற்றி இருந்தனர்.  சட்டிஸ்கரில் உள்ள இன்றைய பஸ்தார் நகரம் சோழர்கள் காலத்திலே ‘சக்கரகோட்டம்’ என்ற தமிழ்பெயராக பேசப்பட்டது. ஆகையினால் குலோத்துங்க சோழபட்டினம் என்று இந்த இந்த கடற்கரை ஊருக்கு சோழர்கள் பெயர் வைத்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லைதான்.

ஆனால் எங்கேயோ சோழ தேசத்து ஆளுகையில் இருந்து கொண்டு இத்தனை தூரம் வந்து புகழ்பெறச் செய்த குலோத்துங்கன் எனும் அந்தப் பெயருக்கு ஏதோ ஒரு சக்தி இருக்கவேண்டும்தான். அந்த சக்திதான் என்னுள் வந்து இந்த அம்ருதா கதையை எழுதவைத்ததோ என்னவோ...
ஏறத்தாழ 950 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கதைதான் என்றாலும் குலோத்துங்கன் என்ற அரசன் பெயர் இத்தனை காலத்துக்குப் பிறகும் இன்றும் பேசப்படுகின்றது, இன்னமும் வரும் காலங்களிலும் பேசப்படும் என்பதில் குலோத்துங்கனுக்கு மட்டுமா பெருமை.. அந்த குலோத்துங்கன் நடந்து சென்ற தேசத்தில் பிறந்த அத்தனை பேருக்கும் பெருமைதானே..

எதற்கும் ஒருமுறை அம்ருதாவைப் படித்து விடுங்கள்.. நீங்களும் அவன் பெருமை பேசலாமே என்று கூட தோன்றலாம்.. 


( மேலே படத்தில் முதல் நூலைப் பெற்ற டாக்டர் சுகந்தி, சுங்கம் ஆணையர் திரு ராஜேந்திரன், மற்றும் தமிழ்க்கலைமன்ற செயலர் திரு பெருமாள்)

Friday, October 24, 2014

அடுத்த வீட்டில் ஏற்பட்ட அலங்கோலம்


சென்ற பதினொன்றாம் தேதி சனிக்கிழமையன்று மாலை சென்று போன மின்சாரம் சரியாக எட்டுநாள் கழித்து இதோ மீண்டும் எட்டிப்பார்த்து எங்களை அடையாளம் கண்டுகொண்டு சரியான இடத்தில்தான் வந்துசேர்ந்தோம் என்று வந்துவிட்டதைப் பற்றியும் அதற்கு மூலகாரணமான அதி பயங்கர ஹூட் ஹூட் புயலையும் பற்றி எழுத வேண்டுமென்றிருந்தேன். 

மூன்று நான்கு நாட்களாகவே ‘அட்வான்ஸ் இன்ஃபார்மேஷன்’ கொடுத்து வருவேன் வருவேன் என்று சாதாரணமாக பயமுறுத்திக்கொண்டே திடீரென பயங்கரமான உருவெடுத்து ஒரேயடியாக நகரத்தை அழித்திடுவேன் என்று தனக்குப்பிடித்த வரையில், தன்னால் முடிந்தவரை அழிக்க வந்து போன அந்த ஹுட்ஹூட் புயலைப் பற்றி எழுதாமல் எப்படி விட்டு விடமுடியும்.

வெப் துனியாவிலிருந்து நண்பர் அண்ணா கண்ணன் சனிக்கிழமை இரவு தொலைபேசியிருந்தார். புயலைப் பற்றி எழுதி வெப் துனியாவுக்கு போட்டோவுடன் அனுப்புங்கள் என்றார். நானும் மிக எளிதாகவே நினைத்துக்கொண்டு அதற்கென்ன, அப்படியே என்று சொன்னவன்தான்.

ஆனால் அடுத்த வந்த நாட்களில் எதை எழுதுவது, எப்படி எழுதுவது, என்று புரியாமல் இருந்தது வாஸ்தவம்தான்.

அந்த மறக்கமுடியாத ஞாயிற்றுக்கிழமையன்று வந்த இந்தப் புயல் இந்த நகரத்துக் கரையைக் கடந்து போனபோது தன்னுடன் கூட்டிக் கொண்டு போன அலைபேசி இணைப்புகளை விடாப்பிடியாகப் போராடி மீட்டுக் கொண்டு வந்து கொடுத்ததைச் சொல்லலாமா, இல்லை..
மனித உயிர்கள் பறிக்கப்படவில்லையே என்ற கோபத்துடன் கண்ணில் கண்ட மரங்களையும், மின்சாரக்கம்பங்களோடு, தொலைபேசிக் கமபங்களையும் வேரோடு சாய்த்துச் சென்றதைப் பற்றிச் சொல்லவா..
சக்தி (பவர்) இல்லையேல் இயக்கமில்லை என்பதைத் தெள்ளத் தெளிவாக சாதி மத பேதமில்லாமல் உணர்த்த வந்து இந்த அனுபவத்தை எப்படிச் சொல்வது.. மின்சாரம் இல்லாமையால் எதையுமே இயக்கமுடியாத நிலையில் வைத்திருக்கும் இந்த உலகத்தை இந்தவிதமாக இந்த சமயத்தில் ஏன் இப்படி வைத்திருக்கிறார்கள் என்று அடிக்கடி வந்து போன கோபத்தைச் சொல்வதா? 

இதுதான் வாழ்வில் கடைசி தருணமோ என்று நினைத்து வருத்தப்படும் மக்களின் கவலை தீர்ந்ததுதான் என்றாலும் அந்தக் கவலைக்குப் பின் வந்த தொடர் துன்பங்களைத் துயரப்படாமல் தாங்கிய தைரியத்தைச் சொல்வதா..

எது வந்தாலும் உங்களுக்கு அண்டமாக உங்களுக்கு அருகேயே உங்கள் குறை தீரும் வரை இருப்பேன் என்று மக்களிடையே மக்களில் ஒருவராய் ஒரு முதலமைச்சர் இருந்த அதிசயத்தைச் சொல்வதா

குறைகள் பல இருந்தாலும் முணுமுணுக்காமல் பணியாற்றிய இந்த அரசு சேவகர்களைப் பற்றி சொல்வதா

ஏறத்தாழ ஒருகோடியே ஐம்பது லட்சம் மக்கள் கஷ்டங்களில் வசிக்க ஆனாலும் அரசாங்கத்திடம் அதிகம் எதிர்பார்க்காமல் தங்கள் தேவைகளைத் தாங்களே பூர்த்தி செய்யும் இந்தப் பகுதி மக்களைப் பற்றிச் சொல்வதா..

எதைச் சொல்வது, எதை எழுதுவது என்பது புரியாமல் ஏதோ கண்ணில் கண்ட காட்சியை மட்டும் அவசரம் அவசரமாக விவரித்து, கிடைத்த ஒரு துளி இன்வெர்டர் மின்சாரத்தில் அண்ணா கண்ணனுக்கு அன்றே அனுப்பி விட்டு பின் நிதானமாகத்தான் பவர் வந்த பிறகுதான் அதன் சக்தி கொண்டு எழுத ஆரம்பித்தேன்.  

ஆனாலும் எப்பேர்ப்பட்ட ஒரு அனுபவம் என்பதை மட்டும் வாழ்க்கையில் இந்த மக்களுக்கும் ஆண்டவன் கொடுத்திருக்கிறான் என்பதை மட்டும் சொல்ல ஆசை எழுகிறது.. அந்த அனுபவத்தை நேரில் அனுபவிக்கும் பாக்கியத்தை அல்லது அபாக்கியத்தைப் பெற்றவன் என்கிற முறையில் உங்களோடு பகிர்ந்துகொள்ளத்தான் வேண்டும். சாதாரணமான ஞாயிற்றுக் கிழமையா அது.. ஞாயிறே தோன்றாமல் போய்விடுமோ என்று வானத்தை அப்படியே வருணபகவானும், வாய் பகவானும் கட்டிப்போட்ட விந்தையை எப்படி விவரிக்கமுடியும் என்று தெரியவில்லைதான்.
”திவாகர்.. உங்களுடன் நான் பேசும் கடைசிப் பேச்சாக இது இருக்குமோ என்று அஞ்சுகிறேன்.. என்னுடைய கைபேசியில் சார்ஜ் இல்லை.. மங்கி வருகிறது. எங்கள் ஃப்ளாட் மூன்றுமுறை ஆடிவிட்டது.. எல்லோரும் கீழேதான் இருக்கிறோம்.. பீச் ரோட்டில் பல கட்டடங்களில் மக்கள் இந்த நிலைதான்.. இறைவன் அருளால் நன்றாக இருந்தால் மறுபடி சந்திப்போம்.. பை சார்!!”

துறைமுகத்தில் பெரிய பதவியில் இருக்கும் ஒரு நண்பரின் இந்த பேச்சுதான் என்னுடைய ஏர்-டெல் இணைப்பு கைபேசியில் கடைசி பேச்சாகும்.. ஞாயிறன்று சுமார் பதினொன்று மணியளவில் இந்த பேச்சோடுஎன் இணைப்பும் மங்கிப்போய்விட்டதுதான். ஏர்டெல், ஐடியா, டாடா என இந்த மூன்று இணைப்புகளுமே செயலழிந்து போன நிலையில் பி எஸ் என் எல் மட்டும் உயிர் பிழைத்து எங்களை மற்ற மனிதர்களுடன் தொடர்பு கொள்ள வைத்திருந்ததைப் பாராட்டத்தானே வேண்டும்.

நாங்கள் இருந்த கட்டடம் ஆடியது என்பது அந்தச் சமயத்தில் ஏனோ அபாயமாகத் தோன்றவில்லை.. ஏனெனில் நகரத்தில் அத்தனை அடுக்கு மாடிக் கட்டங்களுமே அவ்வப்போது ஆட்டம் கண்டுகொண்டுதான் இருந்தன.. எங்கள் அடுக்கு மாடியும் அவைகளில் ஒன்று என்பதால் அத்தனை குடும்பங்களும் கீழே வந்து சற்று ஒதுங்கியும், எதிர்பார்த்தவிதத்தில் கட்டடம் நொறுங்கினால் உடனே வெளியேற சித்தமாகவும்தான் இருந்தோம். குழந்தைகளும் பெரியவர்களும் சற்று முன்னரே இருக்கவைத்தோம்.. காற்று மிக அதிக வேகத்தில் வீச வீச காற்றோடு அதிகபட்ச மழையும் தொடர எதையும் எதிர்பார்க்கும் விதத்தில்தான் அந்தக் கணத்தில் இருந்தோம்.

ஞாயிறன்று காலையிலிருந்தே அதிவேகப்புயல் மழையோடு தாக்கத் தொடங்கிவிட்டது. புயலும் மழையும் யாருக்குமே சகஜம் என்பதால் காலைக்கடன்கள் எல்லாமே சகஜமாகத்தான் இருந்தன. மின்சாரம் ஒன்று மட்டுமே இல்லையென்பதால் இதுவும் சகஜம்தானே என்றுதான் அன்று காலையில் எங்கள் மனநிலை இருந்தது. ஒன்பது மணி தாண்ட அந்த அதிவேகக் காற்று இன்னமும் வேகம் பிடித்தது.. நான் காற்றைப் படம் பிடிக்க மேல் தளத்துக்குச் சென்றுவிட்டேன்.. 

கீழே வந்ததும் மேலும் மேலும் தீவிரமடைந்தபோதுதான் கவனித்தோம்.. நாங்கள் இருந்த கட்டடம் ஒருமுறை அதிர்ந்தது. ஆனாலும் மழை தீவிரமாக இருந்து வராண்டா முழுவதும் தண்ணீர் நிலைக் கதவு வழியாக உள்ளேயும் வர ஆரம்பித்தது. . இத்தனைக்கும் நாங்கள் இருந்த நான்காவது மாடியில் ஏறத்தாழ எட்டடி இடைவெளியில் நிலைக்கதவு  உள்ளே தள்ளி இருந்ததுதான். அப்படியும் அந்தக் கதவை மிகப் பலமாக காற்றும் மழையும் தட்டி உடைக்க ஆரம்பிக்க, நாங்கள் உள்ளேஇருந்து அந்தக் கதவை அடைக்க உள் வராண்டாவில் இருந்த சோபா இருக்கைகளை அந்தக் கதவை நெருக்கி வைத்துப் பார்த்தோம். இந்தச் சமயத்தில்தான் இரண்டாவது முறையாக கட்டடம் அதிர்ந்தது. மேலும் அங்கு இருக்க விரும்பாமல் எங்கள் நான்காவது மாடியில் வந்து அனைவரையும் கீழே செல்லும்படி சொன்னவுடன், ஏற்கனவே பீதியில் இருந்தவர்கள் படிக்கட்டு வழியாக கீழே இறங்கினர். இத்தனை பீதியிலும் ஒரு குடும்பத்தினர் தங்கள் நகைகளையும், கேஷ் போன்றவைகளையும் ஒரு பெட்டியில் போட்டு எடுத்து வைத்திருந்து கீழே தன்னுடன் கொண்டு சென்றனர். (பெட்டியில் என்ன என்று கேட்டபோது செவியில் ரகசியமாகச் சொன்னார்). ஏறத்தாழ பதினைந்து குடும்பங்களுடன் வெளிப்பக்கம் குடிசைகளில் இருந்த நான்கு குடும்பங்கள் அந்தக் கீழ்ப்பகுதியில் மழையையும் புயலையும் பார்த்துக் கொண்டே காலம் நகர்த்தினோம்.
நான் கீழே எனது காரில் உட்கார்ந்து எஃப் எம் ரேடியோவில் செய்தி கேட்டுக் கொண்டே மற்றவர்களிடம் பகிர்ந்துகொண்டிருந்தேன்.. கரைக்கு 40 கி,மீ அருகே வந்துகொண்டிருப்பதாகவும் விசாகப்பட்டினத்தருகே எந்த நேரத்திலும் கரையைக் கடக்கலாம் என்று சொன்னபோதும் அந்த எஃப் எம் செய்தியாளர் சொன்னபோது அவர் குரலில் இருந்த பீதி எல்லோர் வயிற்றையும் கலக்கியதுதான்..

இந்த சமயத்தில்தான் மேற்கண்ட போன் வந்தது.. எல்லோருக்கும் தெரியப்படுத்தினேன்.. நாம் எல்லோருமே ஒரே நிலைமையில்தான் என்பதில் எல்லோருமே தெரிந்து வைத்திருந்தனர். அடுத்த அரை மணிநேரத்தில் மணிக்கு 200-220 கிமீ வேகத்தில் (பின்னர்தான் இந்தக் கணக்கு விவரம் தெரிந்தது) காற்று வீச காலை நன்றாக ஊனிக்கொண்டு நின்று கொண்டிருந்த எங்களை அப்படியே முன்னே தள்ள ஆரம்பித்தது. பெரியவர்கள் குழந்தைகள் சுவற்றின் பின்னால் கெட்டியாக சாய்ந்து கொண்டனர். குழந்தைகள் பீறிட்டுஅலற யாருக்கு என்ன செய்வது என்பது புரியாத நிலை.. கீழ்வீட்டுக் காரர் தன் கடைசிகாலம் என்று ஏதோ சொல்ல அது சரியாக காதில் செல்லாமல் காற்று அப்படியே அள்ளிக்கொண்டு போனதுதான்..எங்கேயோ பக்கத்தில்தான் கரையைக் கடக்கிறது என்று மட்டும் தெரிந்தது. கரையைக் கடந்த போது நாங்கள் இருந்த கட்டடம் இன்னொரு முறை ஆட்டம் கண்டதை அனைவருமே உணர்ந்தோம்.. 

சற்று நேரம் கழித்து காற்று ஒரேயடியாக நின்று போனது மழை மட்டும் நிதானமாக இருந்தது. அப்பாடி பிழைத்தோம் என்று ஒவ்வொருவரும் அவரவர் இல்லத்தில் சேரும்போது மறுபடியும் அந்தக் காற்று அதே வேகத்துடன் வீசத்தொடங்கியது. இப்போது ஒரு விஷயம் புரிந்தது. காற்றுக் கரையைக் கடந்த போது வீசுவது சற்று நேரம் நிற்கும் என்றும் பின்னர் கரையில் தன் வேகத்தைத் தொடரும் என்றும் ஏற்கனவே புயல் மையம் தெரிவித்திருந்தது. ஆனால் போகப்போக அது வலுவிழக்கும் என்பதாகவும் சொல்லி இருந்தார்களாதலால் சற்று நிம்மதியுடன் இருந்தோம்.. ஆனால் மழை மிக அதிகமான அளவில் காற்றின் வேகம் சிறிதளவும் குறையாமல் இருந்தது.. ஆனால் காற்றின் திசை மாறி இருந்தது. காலை வரை கிழக்குத் திசையிலிருந்து மேற்காக வீசிய காற்று இப்போது மேற்கிலிருந்து கீழைதிசை நோக்கி வீசியது. அத்துடன் மட்டுமல்லாமல் அடுத்தவீட்டு அடுக்கு மாடி வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் ஏதோ கல்வீச்செறிவது போல சர்வ சாதாரணமாக வந்து கொண்டிருந்தன. பால்கணியும் போக முடியாமல், வெளியேயும் வர முடியாமல்வேறு யாரோடும் பேச முடியாமல் இருக்கும் ஒரு நிலை.. ஏறத்தாழ மூன்று மணி நேரத்துக்குப் பிறகுதான் கொஞ்சம் வெளியே வரமுடிந்தது.. வெளியே மரங்கள் ஒன்று கூட இல்லாமல் அத்தனையும் கீழே கிடக்க, மின்சாரக் கம்பங்கள் ஒடிந்து அல்லதுபிடுங்கப்பட்டுக் கிடக்க ஆங்காங்கே ஜன்னல் கண்ணாடிகள் ஒடிந்துபோய் பளபளவென ஒளிற இப்படியுமா ஒரு அழிவு என்பதைக் கண்ணால் கண்டபோது கண்ணீர்தான் வந்தது.

வானிலை அறிவிப்பு அலுவலக நிர்வாகி சொன்னது, இந்த 220 கி.மீட்டர் வேகத்தில் வந்த புயலானது விசாகப்பட்டினத்தில் தாக்கியதில் நகரம் இந்த சிறிய அளவிலாவது தப்பிப் பிழைக்கப் பெரிய காரணம் நகரைச் சுற்றி உள்ள மலைகள்தான், என்றார். 220 கி.மீ வேகத்தை மலைகளும் தாங்கிக் கொண்டதால் அந்த அதிவேகத்தின் தாக்கம் நகரத்தின் மீது அவ்வளவாகப் படவில்லை என்றும் சொன்னார். கட்டங்கள் ஆடியதே என்று கேட்டதற்கு இதெல்லாம் 180 கி,மீட்டருக்கே ஆடும், ஆனால் 220 கி.மீட்டர் வேகத்தில் நாசங்கள்தான் அதிகமாக விளையும், உயர் அடுக்கு மாடிக் கட்டடங்கள் தாளாது அந்த வேகத்தை, என்றார். அதே சமயத்தில் நகரத்தில் உள்ள அதிக அளவிலான மரங்கள் மக்களுக்குப் பதில் தாம் விழுந்து மிகச் சிறந்த தியாகத்தைச் செய்துள்ளன என்று அவர்பாணியில் வர்ணித்தார். மரங்கள் விழுந்ததால் மனிதர்கள் மரத்தின் அடியில் பட்டு ஏறத்தாழ நாற்பது பேர் இறந்தனரென்பதையும் நூற்றுக்கு மேற்பட்டோர் காயமுற்றனர் என்பதையும் அவர் சொல்லவில்லை.. இரண்டு நாட்கள் கழித்து அரசாங்கம் சொல்லியது.
மனிதர்களின் கதியே இதுவென்றால் கால்நடைகளையும், பறவைகளையும் பற்றிச் சொல்ல இயலாது, கால்நடைக்காவது துணையாக மனிதன் இருக்கின்றான். ஆனால் இருப்பிடங்களான மரங்களை பரிபூரணமாக இழந்த பறவைகளின் கதி.. பரிதாபம்தான்..

இந்தப் பகுதி மக்களின் ஒற்றுமை எனக்குப் பிடித்திருந்தது. சிரமகாலத்தில் மட்டுமே ஒருவருக்கொருவரின் உதவி என்பது இன்றியமையாதது என்பதை நிரூபித்தனர்.. பல அடுக்கு மாடிக் கட்டடங்களில் இப்படிப்பட்ட சிரமங்கள் வந்தபோது துன்பங்களைப் பகிர்ந்துகொண்டு ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக்கொண்டார்கள். இங்கு ஒதுக்குப்புறமான நகரப் பகுதியில் முப்பது வீடுகள் கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்போர் மூன்று நாட்களுக்குக் கூட்டுச் சமையல் செய்து பகிர்ந்து உண்டனர் என்பதை ஹிண்டு நாளிதழ் ஒரு அதிசயச் செய்தி போல கட்டம் கட்டி வெளியிட்டிருந்தது.

எங்கள் குடியிருப்பிலும் இந்த ‘அதிசயம்’ நிகழ்ந்ததுதான். ஒருவருக்கொருவர் அதிகம் தொடர்பில்லாமல் பழகிப் போய்விட்டபடியால் முதலில் சற்று சங்கோஜப்பட்டாலும் பின்னர் சரியாகிவிட்டதுதான்.. அதைப் போல கீழ் மாடியில் வசிக்கும் ஒருமுஸ்லீம்குடும்பப் பெண்மணி ஞாயிறன்று பகல் வேளையில் ஏறத்தாழ முப்பது பேருக்கு (வெளியே இருந்து புகலிடம் கேட்டு வந்த நான்கு குடும்பங்களுக்கும் சேர்த்து) பிரியாணி செய்து பகிர்ந்து கொண்டார். நாங்களும் எங்களிடமிருந்த அனைத்து ரெடிமேட் உணவு வகைகளையும், பழங்களையும், கொடுத்து விட்டோம். ஞாயிறன்று காலை பலமாக சாப்பிட்ட எங்கள் காலை உணவு கைகொடுக்க, ஊரில் தக்காளி மட்டுமே தனியொரு காய்கறியாக ஆட்சி செய்ய, அடுத்த நான்கு நாட்களுக்கும் தக்காளியை வைத்தே தினம் தினம் வேளா வேளைக்கு விதம்விதமான வகையறா செய்து சாப்பிட்டோம்.
தொலைபேசி இணைப்பில் பி.எஸ்.என் எல் பங்கு மிகச் சிறப்பானது.அத்தனை தனியார் இணைப்புகளும் புயலில் தொலைந்து போக மிகத் தைரியமாக இந்த அதிவேகக் காற்றை எதிர்த்துப் போராடிய இந்த அரசாங்கக்கம்பெனியை எத்தனைப் பாராட்டினாலும் தகும். 
இந்த பி.எஸ்.என்.எல் உதவியால்தான் ஏதோ என்னால் கொஞ்சம் (என் மனைவியின் கைபேசி துணையுடன்) வெளியாருடன் உலாவவும் பேசவும் முடிந்தது. அவ்வப்போது முகநூலில், இருக்கும் கொஞ்ச நஞ்ச சார்ஜ் கொண்டு, தகவல்களையும் தர முடிந்தது.
எங்களுக்கு ஜெனரேட்டர் உதவி ஏற்கனவே இருந்தாலும் டீஸல் கிடைப்பது சிரமமாக இருந்ததால் இருக்கும் எண்ணெயைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டிய நிலையில் இருந்தோம். ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரம் மட்டுமே.. அதற்குள் போன் பேட்டரி ரீசார்ஜ் செய்து விடுவோம். ஜெனரேட்டர் இருந்ததால் மட்டுமே எங்களால் நிலத்தடி நீரைப் பயன்படுத்தமுடிந்தது.. அதே சமயத்தில் ஜெனரேட்டார் இல்லாத பல அடுக்கு மாடி வீடுகளின் நிலைமை படு மோசமாக இந்தத் தண்ணீர் விஷயத்தில் இருந்தது. ஹிண்டு’வில் ஒருசெய்தி வந்திருந்தது. அதாவது ஒரு இளம்பெண் தான் இரண்டுநாட்களாகக் குளிக்கமுடியவில்லை என்றும் அடுத்த நாள் தன் பிறந்ததினம் வருவதாகவும் யாராவது ஒரு வாளி தண்ணீர் பிறந்த நாள் பரிசாகத் தந்தால் மகிழ்ச்சியடைவேன், என்பதாகவும் செய்தி போட்டிருந்தனர். மின்சாரம் இல்லாததால் குடிதண்ணீரும் தரமுடியாத நிலையில் நகரம் இருந்தது. ஏதோ இரண்டு நாட்களாகத்தான் பெரிய ஜெனரேட்டர் கொண்டு வந்து குடிநீர் பம்பிங் செய்து அனுப்புகிறார்கள். மின்சாரம் இல்லாததால் ஊரில் மெழுகுவர்த்திதட்டுப்பாடு.. ஒரு சாண் ஒல்லி மெழுகுவர்த்தி ஐம்பது ரூபாய் வரைக்கும் சென்றது.

இரவானால் வீட்டில் மட்டுமல்ல, ஊரெங்கும் இருட்டுதான் என்பதால் வெளியே பயணம் செய்வோர் மிகக் குறைவு. அப்படியும் பயணம் செய்பவர்கள் சாலையில் கிடக்கும் மரக்கிளைகளைத் தாண்டிச் செல்வதென்பது இன்னமும் கடினம்தான். நகரம் பகலிலேயே கோரமாகக் காட்சியளித்ததுதான் என்றாலும் இருளில்கேட்கவா வேண்டும்?
சென்ற ஞாயிறு விடுமுறை தினமாகப் பார்த்து இந்த புயல் வந்தாலும் எங்கள் மேல் கரிசனம் கொண்டு அடுத்து வந்த ஏழு நாட்களுக்கும் விடுமுறையை எல்லோருக்கும் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டதுதான்.. யாரும் வேலைக்கோ, தனியார் கம்பெனி அலுவலகத்துக்கோ சென்ற வாரம் முழுதும் செல்லவில்லை.. அப்படியே வீட்டில் அடைந்து கிடந்தனர். இதனால் குடும்பங்களில் சண்டை சச்சரவுகள் அதிகமாக நடக்க வாய்ப்புண்டு என்றாலும் அந்நியோன்னியத்துக்குக் கூட அதிக வாய்ப்புண்டுதானே..

எர்லி டு பெட், எர்லி டு ரைஸ் என்பார்களே.. அது கிட்டதட்ட எல்லோருமே கடைபிடித்தார்கள். போன் இணைப்புத் துண்டிக்கப்பட்டதால் அடுத்தவருடன் பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதும் ஒரு காரணம் என்றாலும் மிகப் பெரிய காரணம் தொலைக்காட்சி வசதி துண்டிக்கப்பட்டதுதான்.. இன்றோடு பதினைந்து நாட்கள் ஆயிற்று தொலைக்காட்சியைப் பார்த்து.. (நல்லதுதானே என்று பலர் சொல்வார்கள்).. ஆனாலும் இந்தப் பிராந்தியத்தில் உள்ள ஒருகோடியே ஐம்பது லட்சம் பேர் தொலைக் காட்சியை இத்தனை நாட்களாகப் பார்ப்பதில்லை (பார்க்கமுடியவில்லை) என்பதையும் தெரிந்து கொண்டால், இந்தக் காலகட்டத்திலிது ஒரு பெரிய அதிசயமே.

இன்னொரு அதிசயம் இங்கு தீபாவளி இந்தமுறை பட்டாசு சப்தமில்லாமல், வெடிக்கப்படாமல் கொண்டாடியதைச் சொல்லவேண்டும். ஏற்கனவே வாயுதேவனும் வருணபகவானும் மாறி மாறி வறுத்தெடுக்கையில், மரங்களெல்லாம் பிடுங்கப்பட்டும் பறிக்கப்பட்டும் குப்பைக் கூளமாய்க் குவிந்திருக்கையில் ஒரு சிறு தீப்பொறி பட்டாலே போதும் ஒரு அக்கினிக் காடொன்று உருவாக. இந்த நிலைமையில் அரசாங்கம் கேட்டுக்கொண்டதற்கிணங்க மக்கள் யாருமே வெடி வெடிக்கவில்லை என்பதோடு அமைதியாக தீபாவளியைக் கொண்டாடினர் என்பது ஆச்சரியமான உண்மைதான்.

எதிர்காலத்தில் எதையுமே எதிர்கொள்ளமுடியும் என்ற நம்பிக்கையையும் ஹூட் ஹூட் கொடுத்துவிட்டுப் போயுள்ளது என்பதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். இயற்கையின் மாபெரும் சக்தியின் முன் மனிதர்கள் எம்மாத்திரம் என்ற வேதாந்தக் கருத்து எடுபட்டாலும், இயற்கையின் இன்னொரு பக்கத்தைச் சந்திக்கும் மனோதைரியம் இருந்தால் மனம் பக்குவப்படும் என்றும் புரிந்தது. இதுவும் ஒரு நன்மைதானே.

இயற்கையே நீ அழகு என்று
இனி ஒரு வார்த்தை சொல்லுமுன் கொஞ்சம்
உன் இன்னோரு பக்கத்தையும் நினைக்க வைக்கிறாய்..
நீ அழகுதான்.. ஆனால் அதிஆபத்தான அழகு!!
                           ************************ 

படங்கள் 1. விசாகப்பட்டினம் ஏர்போர்ட் மேல்கூரை எல்லாம் ஒடிந்து போய் விழுந்த அலங்கோலம்.
2. இடம் ஒன்றே, முதல் படம், புயலுக்கு முன்னே மரங்களுடன்
3. பக்கத்தில் புயலுக்குப் பின்னேமரங்களெல்லாம் அழிந்தவுடன் 
4. அரக்கு வேல்லி மலி ரயில்பாதை சிதைந்து போன காட்சி
5. மரங்கள் நிறைந்த துரைமுகப் பூங்காவன் மரங்களழிந்து மங்கலம் இழந்த அலங்கோலக் காட்சி
6. சிமெண்ட கலவையால் கட்டப்பட்ட மின்கம்பம் உடைந்த கோலம்..

Monday, June 2, 2014

ஆந்திரமும் திரிசங்கு நிலையும்


இன்று தெலுங்கானா என்ற மாநிலம் பிறந்த சுபதினம். மொழி ஒன்றாயினும் கருத்து வேறுபாடு அதிகம் கொண்ட மக்கள் தம்மை அந்த வேறுபாட்டிலிருந்து பிரித்துக் கொண்ட நல்ல நாள் என்றே சொல்லவேண்டும்.

தெலுங்கானா போராட்டம் பற்றி ‘அடுத்த வீட்டில்நிறைய எழுதியாகிவிட்ட்து. இது நன்மையா தீமையா என்ற ஆராய்ச்சிகள் எல்லாம் செய்தாகிவிட்ட்து. ஆனாலும் விளைவு என்ற ஒன்று உருவானபின், அந்த விளைவின் பயனை அவர்கள் அதாவது தெலுங்கானா மக்கள் அனுபவித்தே ஆக வேண்டும் இல்லையா.. நல்ல விளைவாக என்றும் அமைய ஆண்டவனை வேண்டுவோம்.

இதுவரை தெலுங்கானா வேண்டாம், அல்லது வேண்டும் என்றே விவாதங்கள், போராட்டங்கள் அமைந்தன. இனி, தெலுங்கானா நிரந்தரமாக பிரிக்கப்பட்டு விட்டதால் என்னென்ன நன்மைகளை விளைவிக்கலாம் என்றுதான் விவாதிக்கவேண்டும். பழைய விவாதங்கள் எல்லாமே இனி ஆறிய கஞ்சி, பழங்கஞ்சிதான்.. யார் யாரை அதிகமாக அந்தக் கால கட்டத்தில் திட்டினார்கள் என்பதெல்லாம் இனி ‘ரெபரன்ஸ் கைட்ஆக மட்டுமே பயன்படுத்தட்டும்.  ஆகவே இனி இரு மாநிலங்களும் முன்னேற்றப் பாதையை நோக்கி மட்டுமே செல்லவேண்டும்.. வேறு வழியே இல்லை.. இன்னமும் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டு காலம் கழித்தார்களேயானால் இவர்களை விட ஒரு நாட்டுக்கு துரோகம் செய்தோர் எவரும் இருக்கமாட்டார்கள் என்று கூட சொல்லிவிடலாம்.

உடைக்கப்படாத ஆந்திரமாநிலத்தில் ஹைதராபாத் மகாநகரம் தெலுங்கானா மாநிலத்தின் உட்பகுதியில் உள்ளதால் தெலுங்கானா மாநிலத்தின் தலைநகராக அமைவதற்கான நியாயம் அதிகம் உள்ளதுதான். ஆனால் அங்கு ஆந்திரர்கள் அதிகம் உள்ள ஒரே காரணத்தால் தெலுங்கானாவுக்கு அந்நகரைத் தரமாட்டோம் என்ற ஆந்திரர்களின் பிடிவாதமும் ஆந்திரத்தோடு சேர்த்து உடைக்கப்பட்டதுதான். அப்படி உடைக்கப்பட்டதால் கிடைத்த நஷ்ட ஈடு ஹைதராபாத் இருமாநிலங்களுக்கும் பொதுத் தலைநகராக ஒரு பத்து வருடம் இருக்க மத்திய அரசு சம்மதித்திருக்கிறது. ஆனால் எல்லைப் பகுதியே இல்லாத ஹைதராபாதில் ஆந்திரர்கள் எப்படி தலைநகராக நினைத்து ஆளமுடியும்.. இது முடியாதுதான்.. அதனால்தான் ஆந்திர முதல்வர் நாயுடு ஏற்கனவே குண்டூர் மாவட்டம் மங்களகிரி-நம்பூரில் (விஜயவாடா-குண்டூர்நகர மத்தியில்) தலைநகரம் அமைப்பதற்கு சித்தமானதோடு மட்டுமல்லாமல் வாரம் மூன்று நாட்கள் அங்கே அலுவலகமும் இப்போதே வைத்துவிட்டார். அரசாங்கத்துக்கான பட்டாபிஷேகம் கூட அங்கேதான். (படத்தில் சந்திரபாபு நாயுடுவின் தற்காலிக நம்பூர் நிவாசம்)

ஆந்திரர்கள் ஹைதராபாதைக் கைவிட்டுவிட மனதளவில் முயன்று வருகிறார்கள். இதனை ஆந்திரர்கள் நல்ல அறிகுறியாகத்தான் கருத வேண்டும்.முக்கியமாக இன்று ஆந்திரா அதாவது சீமாந்திரா அநாதையாகத்தான் நடுத்தெருவில் நிற்கின்றது என்பதை வெட்கமில்லாமல் சொல்லலாம். தலைநகர் இல்லை.. ஆந்திர அரசாங்கம் இருந்து செயல்படவேண்டிய இடம் திரிசங்கு சொர்க்கம் போல இந்த மூன்று வருடங்கள் (புதிய தலைநகரம் கட்டமைப்புகள் முடிவு பெரும் வரை) ஹைதராபாதில் பாதி குண்டூர் நம்பூரில் பாதி என அலையவேண்டும். இந்தக் கணம். நிதி ஆதாரமோ அதிகம் இல்லை. இப்போது மிகவும் குறைவான ஆதாரத்தோடு ஆரம்பிப்பதால், ஆதி அடிப்படையிலிருந்து ஆரம்பித்து செயல்படவேண்டிய நிலையில் உள்ள மாநிலம் இது. தலைநகரமான ஹைதராபாதிலிருந்து வரும்படி சரிவிகித்த்தில் பிரிக்கப்படும் என்றாலும் ஏறத்தாழ ஆந்திர அரசாங்கத்துக்கு கையேந்தும் நிலைதான் கண்ணின் முன் தெரிகிறது. மத்திய அரசு ஏற்கனவே வாக்களித்தபடி பல்லாயிரம் கோடி ரூபாய்கள் ஆந்திரத்துக்காக செலவழிக்குமா என்பதையும் பொறுத்திருந்து பார்க்கவேண்டும். ஆனால் முழுமையாக நல்ல கட்டமைப்போடு தலைநகரம் அமைப்பதற்கு எப்படியும் மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகள் ஏற்படலாம். எப்படியும் ஏராளமாகச் செலவிடவேண்டும். தலைநகரம் அமைவது என்பது சாதாரண விஷயம் இல்லை. ஆனால் ஆந்திரா பிரிந்தது நம் நன்மைக்கே என்று இங்கே பேச ஆரம்பித்து விட்டார்கள். 

திருப்பதி, விஜயவாடா, விசாகப்பட்டினம் போன்ற நகரங்கள் ஹைதராபாதுக்கு இணையாக கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு மகாநகரமாக மாற்றவேண்டிய அவசியத்தினை எல்லோருமே உணர்ந்திருக்கிறார்கள். மாநிலத்தில் மத்தியிலுள்ள விஜயவாடா நகரத்தருகேயே தலைநகர் அமைவதால் இயற்கையாகவே அந்த நகரம் பலப்படுத்தப்படும். வடக்கில் உள்ள விசாகப்பட்டினம் ஏற்கனவே உடையாத ஆந்திரப்பிரதேசத்தில் இரண்டாவது மகாநகரமாகும். ஹைதராபாதுக்கு சமானமாக அரசாங்கத்தார் இந்த நகரத்தில் ஒன்றையுமே செய்யாவிட்டாலும் நகரவளர்ச்சி மிகப் பெரிய அளவில் ஏற்கனவே ஏற்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான விஷயமாகும். கொச்சி, பூனா அளவுக்கு வசதியான விசாகப்பட்டினம் இந்த ஆந்திர உடைப்பினால் மிகப் பெரிய பலன் பெறப் போகிறது என்றுதான் ஆட்சியாளர் முதற்கொண்டு சொல்கிறார்கள். அதேபோல தெற்கே திருப்பதியும் மிகவும் விரிவுப்படுத்தப்படக் காத்திருக்கிறது.
நாயுடுகாரு ஹைதராபாத் வளர்ச்சிக்கு வெகுவாக வித்திட்டவர். அதே நாயுடுகாரு விஜயவாடாவும் விசாகப்பட்டினமும் திருப்பதியும் மிகப் பெரிய மாநகர் ஆகவேண்டுமென நினைத்து அந்த நினைப்புக்கு திருவேங்கடவனும் தலையசைத்தால் நிச்சயம் விரைவில் மிகப் பெரிய மூன்று நகரங்கள் சீமாந்திராவில் உருவாகும் என்பதில் சந்தேகம் இல்லைதான். மூன்று முத்தான நகரங்கள் வாய்த்தால் ஆந்திரத்துக்கே பெருமைதானே.

எல்லாம் நனமைக்கே.. அதே சமயம் ஹைதராபாதின் கதி இனி எப்படி இருக்கப்போகிறது. ஹைதராபாத் அடுத்த பத்தாண்டுகளுக்கு அங்குள்ள ஆளுநரால் ஆளப்படும் நகரமாக இருக்கும். ஆனால் தெலுங்கானாத் தலைவர்களுக்கு எதிரிகளாக அவர்கள் இதுவரை பார்ப்பது ஆந்திரக்காரர்களையும் ஆந்திர நிலமுதலாளிகளையும்தான். இந்தப் பகை நிலை பல்லாண்டுகாலமாக அவர்களிட்த்தே இருக்கும் உணர்ச்சி என்பதையும், அந்த உணர்ச்சியை மக்கள் மத்தியிலே கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக தூண்டிவிட்டுப் போராடியவர்கள் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். உணர்ச்சி வேகத்தில் முன்னூற்றுக்கு அதிகமானவர்கள் உயிர் கொடுத்து அந்த்த் தியாகத்தில் பெறப்பட்ட்துதான் தெலுங்கானா. மிகச் சரியான அளவில் அந்த உணர்ச்சித் தீயை அணையாமல் காத்தவர்கள் அந்த அரசியல்வாதிகள். ஆகையினால் எத்தனைதான் ஆளுநர் ஆட்சியில் பாதுகாப்பாக ஆந்திரமக்கள் ஹைதராபாதில் வசித்தாலும் ஒரு நிச்சயமற்ற தன்மையில்தான் அங்கு வசிக்க நேரிடும். இந்த நிச்சயமற்ற தன்மையை அவ்வளவு சீக்கிரத்தில் நம்பிக்கையாக மாற்றும் சாமர்த்தியம் நம் அரசியல் வாதிகளிடையே கிடையாது. வேண்டுமானால் குழந்தையைக் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டிப் பார்ப்பார்களோ என்னவோ.. ஆந்திரர்கள்  நிம்மதியாக வாழவேண்டுமானால் விசாகப்பட்டினம் போன்ற பெரு நகரங்கள் உருவாக்குவதுதான் ஒரே வழி. வேலைவாய்ப்பைத் தேடி அந்தக் காலத்தில் தலைநகரம் சென்றவர்கள். அதே வேலைவாய்ப்பை மாற்று நகரத்தில் அதுவும் சொந்த மாநிலத்தில் உருவாக்கினால் நிச்சயம் ஹைதராபாத் வாழும் ஆந்திரர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்தான். இதனால் ஹைதராபாத் தேய்ந்துபோகும் என்றும் சொல்லமுடியாது. ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறக்கும் என்பதாக அங்கு காலியான இடங்கள் வெகு விரைவில் நிரப்பப்படும்.

ஏற்கனவே தலைநகர்மாற்றம் தலைமைச் செயலகம் மாற்றம் எனப்படும்போது ஹைதராபாதில் தற்சமயம் உள்ள ஏறத்தாழ ஐந்து லட்சம் மக்கள் சீமாந்திராவில் குடியேறித்தான் ஆகவேண்டும். மிகவும் அதிகமான அளவில் ஹைதராபாதில் இருப்பது மென்பொருள் பொறியாளர்கள்தான் (ஏறத்தாழ ஆறு லட்சம் ஆந்திர மாநிலத்தவர் மென்பொருள் உத்தியோகத்தில் இருக்கிறார்கள். இவர்கள் குடும்பங்களோடு கணக்கிட்டால் ஏழு அல்லது எட்டு லட்சத்தைத் தாண்டும்)). உச்சகட்ட தெலுங்கானா போராட்ட காலத்தில் கூட இவர்கள் இருக்கும் இடங்களில் தெலுங்கானா வாதமோ கதவடைப்புகளோ போராட்டமோ என்றும் வெற்றி பெற்றதில்லை. ஆனால் ஆந்திர அரசாங்கம் இவர்களுக்கு ஆந்திரத்து நகரங்களில் இடவசதிகள் ஏற்பாடு செய்து, அந்த கம்பெனிகளுக்கு சில சலுகைகளை அளித்துக் கூப்பிட்டால் ‘லேப்-டாப்ப்போடு ஓடி வரத்தான் செய்வார்கள். மிக எளிமையான மாற்றம் இவர்களுடையது. அப்படி ஒருவேளை மென்பொறியாளர் இடமாற்றம் செய்யவேண்டி வந்தால் இதனால் மிகப் பெரிய அளவில் தெலுங்கானாவுக்கு ஏற்படும் நஷ்டம் நினைத்துப் பார்க்கமுடியாத ஒன்று. இதை எந்த அரசாங்கமும் விரும்பாது. தெலுங்கானா அரசாங்கம் இந்த நிர்ப்பந்த்த்தை எதிர்பார்த்து அவர்களை பாதுகாப்போடு இருக்கவைக்கப் பாடுபட நேரிடும். இவர்களால் இப்போதைக்கு அரசாங்கத்துக்கு வரும் ஆதாயம் நின்று போனால் அரசாங்கத்தை ஏனையோர் எள்ளி நகையாடுவார். தெலுங்கானாவை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்காக மீட்கப்பட்ட ஒரு பகுதி பின்னேற்றப் பாதையில் அழைத்துச்செல்வதென்றால் அங்கு ஏளனம் வரத்தானே செய்யும்.

ஆகையினால் மென்பொருள் தொழில் செய்வோரை மிகவும் பெரிதாக தெலுங்கானா அரசாங்கம் ஆதரித்தே ஆகவேண்டிய கட்டாய நிலையில் உள்ளது. இந்தக் கட்டாய நிலை நிச்சயம் மனதுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயம் கூட. ஏனெனில் இவர்களுக்காகவாவது தெலுங்கானா அரசாங்கம் அனைவரையும் அரவணைத்துச் செல்லவேண்டியதுதான். அடுத்து மருந்துமாத்திரைக் கம்பெனிகளில் வேலை செய்வோர். இங்கும் ஆந்திர்ர்கள் அதிகப்படியாக இருக்கிறார்கள். இந்தியாவின் மருந்து மாத்திரைத் தலைநகரம் என்றே அழைக்கப்படும் ஹைதராபாதில் இவர்கள் நிலை எப்படி இனி இருக்கும் என இனிமேல்தான் பார்க்கவேண்டும். ஏற்கனவே விசாகப்பட்டினத்தில் சிறிய அளவில் மருந்துமாத்திரை கம்பெனிகள் வரத்தொடங்கிவிட்டன. இவை ஏதேனும் பெரும் மாற்றத்துக்குக் கொண்டு செல்லுமா என்பதையும் பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ஆந்திர்ர்கள் ஒருகாலத்தில் ‘மதராஸ் மனதேஎன்று தாமிருக்கும் இடங்களை விட்டுவிட்டு தமிழர்கள் பூமிக்காக வேண்டிப் போராடியவர்கள். ஆனால் மாநிலம் பிரிந்தவுடன் தலைநகரமாக்க் கிடைத்த அழகான கர்நூல் நகரத்தைக் கைவிட்டு நிஜாம் ஆண்ட ஹைதராபாதுக்கு ஆசைப்பட்டவர்கள். ஆனால் ஹைதராபாதும் போகும் என்று கடந்த நாற்பதாண்டுகளாகவே கண்கூடாகத் தெரிந்தும், தமக்கே உரிதான விஜயவாடா, திருப்பதி, விசாகப்பட்டின நகரங்களை முன்னேற்றாமல் ஹைதராபாதை ;கன்னாபின்னாவென முன்னேற்றிவிட்டு இப்போது அவஸ்தைப்படுகிறார்கள். ஆனால் இனியும் காலம் கடக்கவில்லை.. கடந்துபோன வரலாற்றைக் கடந்துவிட்டாயிற்று. இனி புதிய வரலாறு சொந்த மண்ணிலேயே எழுத ஒரு மாபெரும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. வாய்ப்புகளை வீணாக்காமல் ஒரு புதிய வரலாறு படைக்கவேண்டும். இதற்கு திருவேங்கடவன் அருள் ஏராளமாகக் கிடைக்கவேண்டும்..
திருவேங்கடவனை ‘ஆந்திரத்து விஷ்ணுஎன்று திராவிடமன்னர் ஸ்ரீகிருஷ்ணதேவராயர் தன் ‘ஆமுக்தமாலையில் வர்ணிக்கிறார். அந்த ஆந்திரத்து விஷ்ணு அநாதைகளாக இன்று இருக்கும் இந்த ஆந்திரர்களை நல்வழிப்படுத்தி உலகுக்கே பாடம் சொல்லிக்கொடுக்கும் அளவுக்கு உயர்த்தவேண்டும்.
                             ************ 

படங்களுக்கு நன்றி கூகிளாண்டவர்

படம் மூன்று - விஜயவாடா கிருஷ்ணவேணி தீர்த்தகட்டம்

படம் நான்கு - விசாகப்பட்டினம் பீமிலி கடற்கரைச் சாலை

படம் ஐந்து: ஹைதராபாத் ஹூசைன் சாகரில் புத்தபிரான்

படம் ஆறு - திருவேங்கடவன் 

Tuesday, March 4, 2014

இருபது வருடமும் இரவல் நிலமும்


ஆயிற்று!

இருபது வருஷம் போன விதமே தெரியவில்லை.. ஓடியே போய்விட்டது. ஆனால் இந்த இருபது வருஷங்களுக்குள்தான் எத்தனை மாற்றங்கள்..

1994 ஆம் ஆண்டில் மார்ச் மாதத்தில் ஒருநாள் திரு ராஜகோபாலன், (முன்னாள் வால்டேர் இணை டிவிஷனல் ரயில்வே நிர்வாகி) அவர்கள் இல்லத்தில் சென்று நானும் திரு சம்பத்தும் ரூ 400 – இதுதான் இன்று மன்றத்தின் இன்றைய சொத்து – என்ற வார்த்தைகளுடன் அந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டதும், அதன்பிறகு எனக்குத் தெரிந்த இருபதே இருபது தமிழ் நண்பர்களை அழைத்து ‘பிரஸ் கிளப்பில் வைத்துக் கூட்டம் கூட்டி, அவர்கள் அனைவரையும் நிர்வாகிகள் குழுவில் போட்டு தமிழ்க் கலைமன்றத்துக்கு புனர் ஜென்மம் கொடுத்ததையும் எப்படி மறக்கமுடியும்.

இன்றைக்கு 111 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஒரு சிறிய கடற்கரை டவுனான வைசாகப்பட்டினம் அன்றைய மதறாஸ் மாநிலத்தில் ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த காரணத்தால் தமிழக வணிகர்கள் சில குடும்பங்களாக இந்த டவுனில் வசித்து வந்ததோடு மட்டுமல்லாமல் தமிழர்தம் ஒட்டுறவு விடுபடாமல் இருக்க ஒரு சில நல்லிதயங்களால் ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த தமிழ்ச்சங்கம். ஆனால் இடையில்தான் எத்தனை எத்தனை இடைஞ்சல்கள்.. சென்ற நூற்றாண்டில் நடந்த சுதந்திரப் போராட்டம், நடுவில் நள்ளிரவில் கிடைத்த சுதந்திரம், கூண்டோடு வெளியேறிய வெள்ளையர் கூட்டம், சுதந்திரத்துக்குப் பின் பிரிந்த மொழிவாரி மாநிலங்கள், சுதந்திரம் அடைந்த உடனே அப்போது இருந்த வறுமை நிலையிலிருந்து மீள வேண்டிய கட்டம், தொழில்மயமாக்கம், விவசாய தன்னிறைவுப் போராட்டம், கட்சிகள், அரசியல் என அனைத்திலும் விசாகப்பட்டினமும் அத்துடன் தமிழ்ச்சங்கமும் சேர்ந்து திண்டாடியதுதான். விசாகப்பட்டின வளர்ச்சி என்பது காலத்தால் நிதானமாகக் கிடைத்த வளர்ச்சிதான். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் பங்கேற்றுக் கொண்டு வளர்க்கப்பட்டதுதான் இந்த நகரம். சென்ற நூற்றாண்டில் இங்கு ஆந்திர பல்கலைக்கழகத்தில் தமிழர் தலைமையில் கல்வி மிகச் சிறப்பாக வளர்ச்சியடைந்ததை யார் ஒதுக்கிவிடமுடியும். சென்ற நூற்றாண்டில் தமிழர் தலைமையில் நல்ல நிர்வாகமே கொடுக்கபட்டு நகர வளர்ச்சியில் பங்கு பெற்றதை யார் மறக்கமுடியும்.. துறைமுகமாக இருந்தாலும் சரி, கப்பல் கட்டும் தொழிற்சாலையாக இருந்தாலும் சரி, உக்குத் தொழிற்சாலையாக இருந்தாலும் சரி, அல்லது தமிழர்களின் பங்கு இந்த நகரத்துக்கு ஏராளமாகக் கிடைத்து வளர்ச்சி விகிதம் பெருக்கப்பட்டது என்பதையும் யாரால் மறுக்கமுடியும்.. இன்றும் கூட சுற்றுலா என்ற பெயரில் ஏராளமான மக்களை ஈர்க்கும் நீர்மூழ்கி கப்பல் அருங்காட்சியகம் (மியூசியம்) ஒரு தமிழரால் நிர்மாணிக்கப்பட்டது என்பது எத்தனை பேருக்குத் தெரியுமோ, எத்தனையோ தமிழ் வணிகர்கள் எத்தனையோ தமிழ் தொழிலாளிகள், எத்தனையோ தமிழ் மீனவர்கள், எத்தனையோ தமிழ் அதிகாரிகள் யாரையென விடமுடியும். பிராந்தியத்திலேயே முதன் முதலாக விநாயகர் கோயில் கூட ஒரு தமிழரால்தான் இந்த நகரத்தில் கட்டப்பட்டது என்பதும் இன்றைக்கு நகரின் நடுமையத்தில் நடுநாயகமாக நகருக்கே கம்பீரமாக சம்பத் விநாயகர் தன் கோயில் வாசலிலே தமிழ்ப்பெயரைப் பொறித்துக் கொண்டு தமிழரால் பூசை செய்யப்பட்டுத் தானும் மகிழ்ந்து தன்னை நாடி வருபவரையும் மகிழ்விப்பதை எப்படி வர்ணிக்க முடியும்.. இன்றைக்கும் இங்கே உள்ள தெலுங்குப்பெரிசுகள் தங்கள் இளமைக்கால மதறாஸ் படிப்பு அனுபவங்களை  பகிரும்போதெல்லாம் அவர்கள் கண்களில் பளிச்சென மின்னல் ஒன்று அடிக்குமே.. அந்த ஒளியைப் பார்த்தால், அந்த அனுபவத்தைக் கேட்டால் அல்லவா நமக்குத் தெளிவாகப் புரியும்..

அவ்வளவு ஏன். 12ஆம் நூற்றாண்டு தமிழ்க்கல்வெட்டுகள் இரண்டுதானே இந்த பிராந்தியத்தின், குறிப்பாக விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சிம்மாசலத்தின், அதன் கோயிலின் பழமையை வெளியுலகுக்குப் பறைசாற்ற உதவின.. இதையெல்லாம் ஏன் சொல்கிறேனென்றால் தமிழருக்கும் இந்த நகருக்கும் ஏற்கனவே இருந்த பிணைப்பு அப்படிப்பட்டது என்பதைச் சுட்டிக் காட்டத்தான்.

இப்படிப்பட்ட பிணைப்பில் இருக்கும் இந்த நகரில் தமிழருக்கென ஒரு சங்கம் என எப்போதோ ஏற்பட்டு அது இருந்தும் இல்லாமல் இருந்த நிலையில்தான் சரியாக இருபது வருடத்துக்கு முன் இருந்தபோது அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டோம். நான் விஜயவாடாவில் இருக்கும்போதே திரு சம்பத் எனதருமை நண்பர், என் நலம் விரும்பி. இருவருமே விஜயவாடாவிலிருந்து இடம்பெயர்ந்து விசாகப்பட்டினம் குடியேறினாலும் எப்போதாவது நகரத்தில் சந்திக்கும்போதும் எங்கள் விஜயவாடா நினைவுகள் அந்த அனுபவத்தைத் தவிர எங்களை வேறு பேச்சு பேசவைக்காது. இந்த நிலையில்தான் 1994 ஆம் ஆண்டு ஆரம்பகாலத்தில் ஒரு சுபதினத்தில் சாலை ஓரம் தேனீர் அருந்தும் சுபவேளையில் அந்த சூடான தேநீரின் சூட்டோடு சூடாக இங்குள்ள தமிழ்ச்சங்கத்தை நாம் ஏன் எடுத்து நடத்தக்கூடாது.., மறுபடியும் ஆரம்பத்திலிருந்து துவக்குவோமே என்று கேட்டு உடனே அதற்கான பதிலாக ‘செய்வோம்என கோரஸாகச் சொல்லிவிட்டு செயலில் இறங்கிவிட்டோம். நாங்கள் ‘செய்வோம்என்றபோது வானத்தில் அஸ்வின் தேவர்கள் ஆசீர்வதித்தார்கள் போலும். அந்தச் சமயம் பார்த்து ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி ராஜகோபாலன் அவர் தலைமையில் அன்றைய நிலையில் தமிழ்ச்சங்கத்தின் ஷீணதிசைப் போக்கைச் சொல்லவும், இனி தாங்காது என்றும் தயங்காமல் சொல்லிவிட்டு எங்களிடம் பொறுப்பை ஒப்படைத்ததும் கூட தெய்வசங்கல்பம் போலும்..

தமிழ்ச்சங்கம் என்பது தமிழர்களுக்கான ஒரு சேவையாகக் கருதிச் செய்யும்போதும், நல்ல உழைப்பை நல்கும்போதும், பணிவுடனும் பாங்குடனும் செயல்படும்போதும், அந்தச் செயல்களில் ஏதும் சுயநலம் கலக்காத போதும், அனைவரையும் அரவணைத்துச் செல்லும்போதும், அந்தச் சங்கம் நிச்சயம் வளர்ந்து கொண்டே போகும் என்பதுதான் இத்தனைகால அனுபவத்தில் நாங்கள் அங்கே கற்றபாடம்.

இந்தப் பாடம்தான் ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற உயர்ந்த தமிழ்ச் சொல்லின் பொருளை அழகாக விளக்கி அந்த உயர்சொல்லையே எங்கள் கொள்கையாக்கியது.. இந்தப் பாடம்தான் விலாஸமில்லாத தமிழ்மன்றத்துக்கு எப்படியும் ஒரு தனிப்பட்ட சொந்தமான விலாஸத்தைப் பெற்றுத் தரவேண்டுமென்ற உந்துதலை ஏற்படுத்தியது. திரு சம்பத் தொடர்ந்து பதின்மூன்று ஆண்டுகளாக தலைவர், அடியேன் தொடர்ந்து பதினாறு ஆண்டுகளாக  செயலாளர் என எங்கள் ஓட்டத்துக்கு ஊக்கச் சக்தி கொடுத்ததும் அந்த உயரிய சொல்தான். அதுவே ஆந்திர அரசாங்கத்தை நாடி தமிழருக்கென ஒரு இரவல் நிலமாவது வேண்டும் என்று கேட்டுப் பெறப்பட்டதும், இரவல் நிலமே ஆனாலும் நிரந்தர விலாஸம் பெறவேண்டும் என்ற சங்கல்பத்தையும் பெற்றுத்தந்தது. சங்கத்துக்கு புனர்ஜென்ம்ம் கொடுக்கப்பட்ட பத்தே ஆண்டுகளில் தமிழருக்கென ஒரு சொந்தக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டதும், தமிழர் நாடுகடந்து வசிக்கும் வேறு ஒரு மாநிலத்தில் தங்கள் சங்கத்தின் நூறாண்டு நிறைவு விழாவினை ஆயிரக்கணக்கில் தமிழ்மக்கள் கூட ஒன்று சேர்ந்து கொண்டாடியதும் எதிர்காலம் அறிந்துகொள்ள வேண்டும்தான். இந்த உயர்வுக்குக் காரணம் நானும் திரு சம்பத் மட்டுமா.. எத்தனை சேவை உள்ளங்கள்.. எத்தனை நல்லிதயம் கொண்டோர், எத்தனை துடிப்பான செயல்வீரர்கள் இவர்கள் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி சங்கத்தில் பதித்திருக்கிறோம்.. ஏனெனில் எதிர்காலத் தமிழ் உலகம் விசாகப்பட்டினத் தமிழரின் உழைப்பை நிச்சயம் அறிய வேண்டுமல்லவா..

இந்த இருபது வருடங்களில்தான் எனக்கு எத்தனை உயரிய பண்பான நண்பர்கள் இந்த சங்கத்தின் மூலமாகக் கிடைத்தார்கள் என்பதையும் எண்ணிப்பார்க்கிறேன். இவர்கள் அனைவருமே எனக்கு இந்த விசாகை மாநகரம் தந்த பரிசுதான். நான் மகிழும்போது இவர்கள் மகிழ்வதற்கும், துயரப்படும்போது துயரத்தில் பங்குகொள்வதும் நான் பெருமைப்படும்போதெல்லாம் அந்தப் பெருமையைக் கொண்டாடுவதும் இப்படி என்னை ஒரு பாக்கியசாலியாக்கிவிட்டவர்களை எப்படிப் போற்றுவது என்றுதான் தெரியவில்லை.

ஆனாலும் இந்தத் தமிழ்ச்சங்கம் மேலும் மேலும் புகழடையப் போகிறது என்றுதான் என் உள்ளத்துப் பல்லி சொல்கின்றது. இரவல் நிலத்தில் இல்லம் கட்டினால் போதாது.. இரவல் நிலத்தை இனி வரும் இளையவர்கள் நிரந்தர நிலமாக மாற்றிக் காட்டுவார்கள் என்று உறுதியும் சொல்கிறது. என் உள்ளத்து பல்லி சொன்னது இதுவரை பொய்த்ததில்லை

இன்னும் எத்தனையோ ஆவல்.. தமிழர் இல்லத்தில் தமிழ் மிக நன்றாக ஒலிக்கவேண்டும், தமிழர்தம் பிள்ளைகள் தம் மொழியைப் படிக்கும் திறன் பேணவேண்டும், இத்தரணியின் தமிழ்மகளிர்தம் சேவை பாரறிய வேண்டும்.. தமிழுக்குக் கதியான பாரதியின் சிலை ஒன்று விசாகை பதியில் நிறுவ வேண்டும், ஆவலோ அல்லது ஆசையோ, ஆனால் இவையெல்லாம் இனி வருவோர் நிச்சயம் செய்வார்கள், விரைவில் நிறைவேற்றுவர் என்ற நம்பிக்கை மட்டும் நாள்தோறும் கூடுகிறது என்ற உண்மையை மட்டும் சொல்லிவிடத்தான் வேண்டும்.

’செய்வார்கள்’ என்று சொல்வதை வானத்தில் அஸ்வின் தேவர்களும் ஆமோதிக்கிறார் என்றுதானே சொல்லவேண்டும்!! 


படங்கள் மேலிருந்து கீழ் வரிசையில் 1. சம்பத் விநாயகர் கோயில்
2. நீர்மூழ்கி கப்பல் மியூசியம் 3. சிம்மாசல கோயில் 4. .விசாகை தமிழ்ச்சங்கத்துக்கு வருகை புரிந்து இதே போன்று புவனேஸ்வரத்திலும் சங்கத்துக்கென கட்டடம் கட்டி முடித்த புவனேஸ்வர் தமிழ்ச்சங்கத் தலைவரும், பொருளாளரும் 5. அடியேனும் திரு சம்பத் அவர்களும் - படம் உதவி - உதயன்.