Follow by Email

Saturday, October 15, 2011

அ’பாக்கியநகரம்’

அடுத்த வீட்டு ஆந்திராவை இப்போது ரணகளமாக்கும் முயற்சிகளை, தெலுங்கானா பிரச்னையை முன்வைத்து, இந்த அரசியல் தலைவர்கள் ஆரம்பித்து விட்டார்கள். ஆண்டவன் அருளால் இவர்கள் முயற்சி வெற்றியடையாமல் போக ஏகப்பட்ட வேண்டுதல்கள் வேண்டிக்கொள்ளும் நிலைக்கு எல்லோரையும் தள்ளிவிட்டார்கள்.

நானூறு ஆண்டுகளுக்கு முன் கோல்கொண்டா நிஜாம் குத்துப் ஷா தன் காதலி பாக்கியவதிக்காக மூசி நதிக்கரையில் இந்த நகரைக் கட்டுவித்தான். அதனால் இந்த நகருக்கு பாக்கிய நகரம் என்ற பெயர் உண்டு. ஆந்திரத் தொலைகாட்சிகளில் சில வேண்டுமென்றே ஹைதராபாதில் என்று சொல்லாமல் ’பாக்கிய நகரத்தில் இன்று’ என்றே கூவும் கூட. அப்படிப்பட்ட பாக்கிய நகரம் இன்று அபாக்கிய நகரமாக ஆகிவிட்ட, ஆக்கிவிட்ட, ஆக்கப்படவிட்ட வேதனையான கதைதான் இது.

கடந்த ஐந்து நாட்களாக இந்த ஹைதராபாத் மகாநகரத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று வர ஒரு சந்தர்ப்பம் கிடைத்தபோது இங்கு ஒரு ஆட்சியே நடக்கவில்லை என்ற உண்மை புரிந்தது. ’சகலஜனலு பந்த்’ என்ற பெயரில் கடந்த ஒரு மாதமாக ஹைதராபாத் நகரத்தின் இயல்பு வாழ்க்கையைப் பாழாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

பொதுமக்கள் ஒத்துழைப்பே இல்லாமல் அரசியல்வாதிகளால் எந்தக் காரியமும் செய்யமுடியாதுதான். அது போராட்டமானாலும் சரி, பொதுத்தொண்டானாலும் சரி. ஆனால் இங்கே அரை மனதுடன் வேண்டா வெறுப்பாக ஒத்துழைக்கும் பொதுமக்களைப் பார்க்கையில் நிச்சயம் பரிதாபமாகத்தான் இருக்கிறது..

ஆளும் மாநில அரசும், மத்திய அரசும் வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டிருப்பது இன்னமும் வேதனைதான். ஒருமாத காலமாக வேலை செய்யாமல் இருக்கும் அரசு அலுவலர்களை (முக்கியமாக தெலுங்கானாவைச் சேர்ந்தவர்கள்) கெஞ்சிக் கொண்டே இருக்கிறது. அவர்கள் இந்த அரசைச் சீண்டவே இல்லை என்பதை என்னவென்று சொல்ல?. தீபாவளிக்கு பணம் அட்வான்ஸ் தருகிறேன்.. வாருங்கள் என்கிறார்கள்.. ’ஊம்ஹூம்.. முதலில் ஏற்கனவே ஸ்ட்ரைக் செய்த நாட்களுக்கு எங்களுக்குப் பணத்தை எண்ணி மேலே வை.. பிறகு பேசலாம்’, என்கிறார்கள். அதாவது இவர்கள் வேண்டிய அளவு வேலையில்லாமல் ஸ்ட்ரைக் செய்தாலும் சம்பளம் மட்டும் சரியாக ஒன்றாம் தேதி வந்துவிடவேண்டும்.. சகல டிபார்மெண்ட்களும் ஸ்ட்ரைக். இதில் ஒரு வேடிக்கை. ஏதோ சில பேர் வேலை செய்கிறார்களே.. அவர்கள் எப்படி வேலை செய்யலாம் என்று தடுத்த சில தெலுங்கானா அரசு அலுவலர்களை கைது செய்து உள்ளே வைத்தார்கள். அவர்களை ஜாமீனில் வெளிவர அனுமதியும் அளித்தது போலீஸ். ஆனால் வெளிவரமுடியவில்லை. காரணம் ஜாமீன் கொடுக்கவேண்டிய முன்சீப் ஜட்ஜ்களும் ஸ்ட்ரைக்கில் இருப்பதால் உள்ளே போனவர்கள் அங்கேயே உட்காரவேண்டிய நிலை.

ஆட்டோ டிரைவர்களைக் கேட்டேன்.. ’அரே பாஸ்.. இவர்கள் (பஸ்கள்) ஸ்ட்ரைக் செய்யட்டும்.. அப்போதான் நமக்கு நாலு காசு எக்ஸ்ட்ரா வரும்’ என்கிறார்கள்.

அளவுக்கு அதிகமான பவர்-கட், ஓடாத பஸ்கள், அதிக குமபலுடன் உள்ள நிலையை காசாக்கும் ஷேர் ஆட்டோக்கள், ஆட்டோக்கள், காசு உள்ளவர்களால் மட்டுமே பயணம் செய்யவேண்டிய நிலையில் கார் கட்டணங்கள், அவ்வப்போது மூடித் திறக்கும் கடைகள், ஆங்காங்கே குவிந்து கிடக்கும் குப்பைகள், அரைகுறைப் பாலங்களால் ஆங்காங்கே அவதிப்படுகின்ற ட்ராஃபிக், தொழில்துறையும் சுற்றுலா துறையும் அதிக அளவில் பாதிக்கப்பட்டதால் அவதிப்படும் சின்ன வியாபாரிகள் என ஒரு அவலமே இந்த நகரத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது என்றே சொல்லலாம்.

மிகப் பணக்கார இடங்களான ஜூப்லி ஹில்ஸ், பஞ்ஜாரா ஹில்ஸ் பகுதிகளில் பல இடங்களில் அடுக்கு மாடிக் காம்ப்ளக்ஸ்’கள் அப்படியே பாதி வேலைகளோடு நின்று கிடக்கின்றன. மருந்துக் கம்பெனிகளின் தலைநகரம் என்ற புகழ்பெற்ற இந்த நகரத்தில் அந்த மருந்துத் தொழிற்சாலைகள் வேறெங்காவது இடம் பெயரலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு மாதாபூர், ஹைடெக் சிடி மட்டும் இன்னமும் பிஸியாகத் தெரிவது போலப் பட்டாலும் இது கூட எத்தனை நாளோ என்ற நிலைமையும் கண்கூடாகத் தெரிகிறது.

இந்தியாவின் அத்தனை நகரங்களும் இன்று மக்கள் தொகையால் திண்டாடிக்கொண்டும், நிலம், வீடு விலைகள் கிடு கிடு ஏற்றத்துடன் இருக்கும்போது, ஒரே ஒரு ஹைதராபாத் மட்டும் ஏற்றம் இல்லாமல் இறங்கிக் கொண்டே போய்க் கொண்டிருப்பது காலத்தின் கோலம்தான்.

ஒரு காலத்தில் அமெரிக்க அதிபரான பில் கிளிண்டன் அழைத்து வரப்பட்டதாலேயே வெகுவாகப் பேசப்பட்ட ஹைதராபாத் இன்று பொலிவிழந்து கிடக்கும் நிலையில் அரசியல்வாதிகள் வைத்துவிட்டார்கள்.

பண்டைய அரசர்கள் காலத்தில் புகழ் பெற்ற நகரங்களாகத் திகழ்ந்தவை காலத்தால் அழிந்தோ, அல்லது வெகு சிறிதான அளவில் தேய்ந்து போவதையோ சரித்திரம் நமக்கு நிறையச் சொல்லியிருக்கிறது. ஆனால் ஒரு நகரம் நம் கண் முன்னேயே அழிக்கப்படுவதைக் காணும்போது யாருக்குதான் கவலை வராது.

ஆனாலும் ஆந்திராவில் உள்ளோர் நினைத்தால் இந்த அழிவுக்கு ஒரு முடிவு உண்டு என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள். எப்படியும் நீளும் இந்தத் தகராறுகளுக்கு ஆந்திரக்காரர்கள் என்றோ ஒரு நாள் வளைந்து கொடுக்கத்தான் வேண்டும், என்கிறார்கள். அதை இப்போதே செய்தால் என்ன என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது. தலைநகரம் என்பதால் ஏகப்பட்ட இடங்களில் ஆந்திரர்களின் சொத்துக்க முடக்கத்தில் உள்ளன. இவைகளுக்கெல்லாம் ஒரு மாற்று வழி சொல்லப்பட்டால் தெலுங்கானாவிலும் நிலை மாறலாம்.. சொல்வார்களா என்பது புரியவில்லை.

ஆனாலும் நிலைமை உடனடியாக சீரடைந்தால் மட்டுமே ஹைதராபாத் இந்தியநாட்டின் பெரிய நகரங்களில் ஒன்று என்ற பெயர் நிலைக்கும். இல்லாவிட்டால் ஹைதராபாதும் ஒரு பெரிய நகராக ஒரு காலத்தில் இருந்தது என்ற பெயர்தான் கிடைக்கும்.

Saturday, June 18, 2011

தமிழ் ஆந்திரத்துக்குக் கொடுத்த ‘வைணவம் ஆயிரம்’

’மற்றவர் துயரத்தை உணர்ந்து வருந்துபவன், அந்தத் துயரத்தைப் போக எவன் உதவி புரிகிறானோ அவனே வைணவன்’ என உடையவர் பற்றிய வரலாற்றில் உடையவர் சொல்லியதாக வரும்.

ஒருமுறை ஆந்திரத்து ராமானுஜர் என்று அடியேன் அன்புடன் அழைக்கும் (தற்சமயம் வைகுண்டவாசி) ஸ்ரீபாஷ்யம் அப்பளாசார்யுலு அவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் சொன்ன ஒரு வார்த்தை இப்போதும் காதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது.

“நான் சின்ன வயதில் என்னை ஸ்ரீவைணவன் என்பதாகவே நினைத்துக் கொண்டிருந்தேனே தவிர ஒரு பிராம்மண குலத்தில் பிறந்தவனாக நினைத்துப் பார்க்கக் கூட இல்லை.”

ஆந்திரத்தைப் பொறுத்தவரை அந்த உத்தமர் சொன்னது மிகப் பொருத்தமானதுதான். ஸ்ரீவைஷ்ணவர்கள் ஜாதிப்பிரிவினைகளே அல்லாத தனிக் குழுமமாகத்தான் தங்களை சமூகத்துக்கு இங்கு அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். ஜாதி என்பதே ஒவ்வொருவர் செய்யும் தொழிலால வந்தது என்பது அனைவரும் அறிந்த விஷயம் என்றாலும், அது ஒரு பிரிவினையை சமூகத்தில் கொண்டுவந்ததும், அந்த ஜாதிப்பிரிவினை சமூகத்தையே நாசமாக்கிக் கொண்டிருப்பதையுமே காலம் காலமாகவே அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இன்னமும் சொல்லப்போனால் இப்படிப்பட்ட காலத்தில் ஆந்திரத்தில் புரட்சிகரமாக இங்கு ஒரு ஜாதிக்கலவையே ஸ்ரீவைஷ்ணவத்தில் ஒரு பகுதியில் நடந்து முடிந்திருக்கிறது. இந்த ஜாதிக்கலவையில் மூன்று முக்கிய சாதிகள், பிராம்மணர், வைசியர், சத்திரியர் இந்த மூவரும் கலந்து ஸ்ரீவைஷ்ணவராகி, தங்களை த்ரைவர்க்கம் என்றே அழைத்துக் கொண்டனர். இவர்கள் எல்லோருமே நம் தமிழகத்தில் சாதிகள் ஒழிய பாடுபட்ட ஸ்ரீ ராமானுஜர் அடி தொட்டி வழி படுபவர்கள், அவரது பெயரில் ராமானுஜ கூடம் நிறுவி அங்கு திராவிட வேதமான நம்மாழ்வார் பாடல்களையும், ஆண்டாளின் தீந்தமிழ்ப் பாடல்களையும் தினசரி பாராயணம் செய்து கொண்டிருப்பவர்கள். இவர்களுக்கு தாய்மொழி தெலுங்கானாலும், தெய்வமொழி என்னவோ தமிழ்தான்.

ஒருமுறை எனக்கும் பெரியவர் சம்பத்துக்கும் இங்குள்ள ராமானுஜகூடத்தில் வைகாசி விசாகத் திருநாளன்று நம்மாழ்வார் விழாவில் பங்கு கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்கள் அங்கு பூஜை செய்யும் அழகு, ஆழ்வார் பாடல்களை நிதானமாகப் பாடும் பாங்கு (இப்போதெல்லாம் தமிழகத்தில் பெருமாள் கோயில்களில் அவசரம் அவசரமாக ஆழ்வார் பாசுரங்கள் சொல்லப்படும் வேகம் பார்க்கவேண்டுமே!) இவைகளையெல்லாம் கேட்டபோதும், நம் கொஞ்சுதமிழ் அவர்கள் வாயால் பாடப்படும் போதும் எங்களை மிகவும் வியப்பில் ஆழ்த்தி விட்டனர். அவர்கள் வீட்டு பெண்’மணி’கள் ஆண்டாள் திருப்பாவை மிக அழகாக பாடுவார்கள். கோதையின் தீந்தமிழ்ப் பாடல்கள் அத்தனையும் அவர்களுக்கு மனப்பாடம். அதனால் ஒவ்வொரு மார்கழியன்றும் ஒருநாள் அவர்களைக் கூப்பிட்டு தமிழ்மன்றத்தில் தமிழ்பாட அழைப்பதும் உண்டு.

சரி, ஸ்ரீவைஷ்ணவம் ஆந்திரத்துக்கு எப்போது வந்திருக்கும்?. நிச்சயம் ராமானுஜருக்கும் முந்தையகாலத்தில்தான் தமிழகத்திலிருந்து இங்கு வந்தது என்றே சொல்லலாம். பத்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு ஏராளமான வைஷ்ணவக்குடும்பங்கள் இங்கு குடியேறியதாக திரு பி.சேஷகிரிராவ் தனது ‘ஆந்திரா சமூக சரித்திரம்’ புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக ஸ்ரீவிஷ்ணு பரப்பிரம்ம தத்துவத்தை முன்னிலைப்படுத்தி ஆழ்வார்களால் ஆறாம் நூற்றாண்டு முதல் தமிழகத்தில் பாசுரங்கள் பாடப்பட்டாலும், வைணவம் மதநெறியில் கொண்டுசெல்லப்பட்டது என்பது ஏறத்தாழ பத்தாம் நூற்றாண்டின் கடைசியிலும், பதினொன்றாம் நூற்றாண்டின் ஆரம்பித்திலும்தான் என்று சொல்லலாம். அந்தச் சமயத்தில் தோன்றிய நாதமுனிகள் வைணவமதத்தை மக்களிடையே கொண்டுசென்ற மிகப் பெரிய ஆச்சாரியார். அவரின் சீடர்கள்தான் திராவிடமெங்கும் குடும்பம் குடும்பமாக இடம் பெயர்ந்து வைஷ்ணவமதத்தை ஆங்காங்கே விதைத்தவர்கள். (இப்படிப் பட்ட வைஷ்ணவர்களைப் பற்றிய தகவல் இன்றைய பாபட்லாவில் (குண்டூர் அருகே) கிடைத்த கல்வெட்டின் மூலம் தெரிகின்றது – AR No.322 of 1899 and AR no.298C mentioning in sanscrit that four vaishnava Brahmins fetched water. The period is 1023 AD) இந்த விதைதான் அடுத்த ஐம்பது அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு உடையவர் ராமானுஜர் இந்த இடங்களில் வந்தபோதெல்லாம் வைஷ்ணவம் மரமாக வளர்க்கப்பட பெரிதும் உதவியது. முதலில் ஆங்காங்கே கட்டப்பட்ட பெருமாள் கோவில்களில் சேவைக்காக வந்தவர்கள் இவர்கள் என பொன்னூரில் (இதுவும் குண்டூர் அருகே உள்ள இடம்) உள்ள இன்னொரு கல்வெட்டு சொல்கின்றது. ஆக ஆந்திர வைஷ்ணவம் என்பதின் வேர் அதன் அடுத்த வீடான தமிழகம்தான். அதிலும் கிருஷ்ணை நதியின் தென்கரைப் பகுதி அரசர்கள் காலம் காலமாக எல்லா மதத்தவருக்கும் கால் பதிக்க இடம் கொடுத்தவர்கள் என்ற பெருமையைப் பெற்றவர்கள். காலத்துக்குத் தகுந்தவாறு பார்க்கையில் ஆதியில் புத்த பெருமான் தன் சீடர்களுடனும், தொண்ணூற்றாறு தேசத்து ராசாக்களுடனும் இங்குள்ள அமராவதி (தான்யகடகம்) நகருக்கு விஜயம் செய்து ’காலச்சக்கரம்’ எனும் பிற்கால நிகழ்வுகளை எடுத்துரைத்ததாக சொல்லப்படுகிறது. இதைப் பற்றிய ஸ்தூபி ஒன்று புத்தர் வந்து சென்ற இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு கி.மு 3 நூற்றாண்டு சமயத்தில் சாதவாகன அரசர்களால் நிறுவப்பட்டது (அது இன்னமும் உள்ளது) முதன் முதலாக தென்னகத்திலேயே பௌத்தமதம் மிக வேகமாகப் பரவிய இடம், அதன் பிறகு வேதமதம் மறுபடி காலூன்ற இடம் கொடுத்ததும் இந்த அரசர்கள்தான். வேதமதம் என்றதும் சைவ வைணவம் இரண்டும் கலந்தே இருந்தாலும் இதே பிராந்திய அரசர்கள் ஒவ்வொரு சமயத்தில் வைணவத்துக்கும் விஷ்ணு கோயில்களுக்கும் அதிக முக்கியத்துவத்தைக் கொடுத்திருந்தார்கள். வைஷ்ணவம் மிக அதிகமாக பரவிய இடங்கள் கூட குண்டூர் மாவட்டத்தில்தான். ஆந்திர வரலாற்றை மிக விவரங்களோடு எழுதிய என். வெங்கட்ராமய்யா, குண்டூர் மாவட்டத்தை வைணவர்களின் குடியிருப்புகள் ஆயிரம் ஆண்டுகளாக வளர்ந்து விரிந்த இடமாகவும் குறிப்பிடுகிறார். பாபட்லா, பொன்னூர் (நிடப்ரோலு), சாட்லூரு, வங்கிப்பற்று, கரம்பிச்செடு, புட்னூர், வீரவல்லி, குண்டூர் போன்ற இடங்களில் வைணவப் பிராமணர்கள் தமிழகத்திலிருந்து குடியேறியதாக மறைந்த தெலுங்கு பல்கலைக் கழகப் பேராசிரியர் பி.எஸ்.எல், ஹனுமந்தராவ் ’சோஷியல் மொபிலிடி இன் ஆந்திரப்பிரதேஷ்’ எனும் புத்தகத்தில் விரிவாக எழுதியுள்ளார். இந்த கிராமங்கள் அனைத்தும் குண்டூர் மாவட்டத்தில்தான் உள்ளன.

இந்த குண்டூர் மாவட்டத்தில்தான் கிருஷ்ணை நதி தென்கரையில் உண்டவல்லி குகைக் கோயில் உள்ளது. சிற்பச் சிறப்பு வாய்ந்த இந்த உண்டவல்லி குகைக் கோயில் மிகப்பழையதுதான் என்றாலும் காலம் காலமாக் அங்கு இருந்த ராஜாக்கள் புதிப்பித்துக் கொண்டோ அல்லது புதிதாக சேர்த்துக் கொண்டே இருந்திருக்க வேண்டும். நரசிம்ம சுவாமி கோயில்கள் நிறைந்த இடம் கூட இதுதான். விஷ்ணு மூர்த்தி ஆதிசேடன் மீது சயனகோலத்தில் வைகுண்டத்தில் இருந்த காட்சியை அப்படியே சிற்பிகள் அற்புதமான முறையில் செதுக்கி வைத்துள்ளனர். விஷ்ணுவின் இரண்டு வேறுபட்ட முக்கிய அவதாரங்களான வாமன, திருவிக்கிரம சிற்பங்கள் கண்ணைக் கவருகின்றன.(உண்டவல்லியில் செதுக்கப்பட்ட அற்புதமான சிற்பம் - மூன்றடி மண் கேட்டான், வாமனன் உலகிலே - மகாபலி அவன் பின்னே அவனைத் தடுக்கும் சுக்கிராச்சாரியார், வாமனன்) ஆஹா.. வாமனன் திரிவிக்கிரமனாகி மூன்றாவது அடிக்காக அப்படியே காலை உயரத் தூஊஊஊக்கி மாவலியின் தலையில் கால் வைப்பது - உண்டவல்லியின் இன்னொரு அற்புதச் சிற்பச் செல்வம்)

பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப்பிறகு ஆந்திர வைணவத்தில் சிறிது தொய்வு ஏற்பட்டாலும் பதினைந்தாம் நூற்றாண்டில் மிகபெரிய வளர்ச்சியை விஜயநகர ராஜாவான செல்லப்ப நரசிம்மன் மூலமாக கண்ட பிராந்தியம் கூட இதுதான். பிறகு வந்த ஸ்ரீகிருஷ்ணதேவராயர் தன்னை வைஷ்ணவராகவே உலகுக்கு அறிவித்துக் கொண்டு, வைஷ்ணவ வரலாறாக தெலுங்கில் ‘ஆ முக்த மால்யதா’ என்ற காவியம் படைத்தவர். ’ஆ முக்த மால்யதா’ தமிழிலிருந்து வந்த வைணவத்தின் சரித்திரம் சொல்லும் நூல்.

திருப்பதி அருகே சந்திரகிரி கோட்டையில் கந்தாடை அய்யங்கார் என்பவர் விஜயநகர ராஜாவுக்கு அந்தச் ச்மயத்தில் மந்திரியாகவும் ஆலோசகராகவும் இருந்ததாக சரித்திர ஆதாரங்கள் உள்ளன. பர்டன் ஸ்டெயின் எழுதிய ‘விஜயநகரம்’ புத்தகத்தில் இந்த விவரம் உள்ளது. ராஜ மரியாதை பெற்று வந்த வைணவர்களுக்கு அய்யங்கார் என்று அழைக்கும் விவரங்கள் ஏராளமாக விஜயநகர நாயக்கர் காலத்து எழுத்துகளில் காணப்படுகின்றன. எப்படி சோழர்கள் காலத்தில் ’பிரும்மராயர்’ எனும் பட்டம் அமைச்சுப் பணி செய்யும் பிராம்மணர்களுக்கு ஏற்பட்டதோ, அதே போல விஜயநகர அரசர்கள் காலத்தில் ராஜகாரியம் அல்லது குருஸ்தானத்தில் உள்ள வைஷ்ணவ பிராம்மணர்களுக்கு இந்த தெலுங்கு மரியாதைச் சொல் சேர்ந்திருக்கலாம். எல்லாப்பெயர்களும் காலப்போக்குக்கு ஏற்றவாறு கொண்டுள்ள மாற்றம்தான் வைஷ்ணவர்களுக்கு ஆந்திரம் மூலமாக வந்த மாற்றமாகவும் கொள்ளலாம்.

ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் 15, 16 ஆம் நூற்றாண்டில் தெலுங்குதான் தமிழகம் உள்ளிட்ட தென்னகத்தின் முக்கியப்பகுதிகளில் ஆட்சி மொழி.

அதே சமயத்தில் ஆந்திராவில் தமிழ்நாட்டு வைஷ்ணவம் பரவி ஆயிரம் ஆண்டுகளாக செழித்து வரும் நிலையை இந்தச் சமயத்தில் நம் கோதை நாச்சியார் இங்கு வந்து பார்த்தால் ‘வாரணம் ஆயிரம்’ பாடலோடு ‘வைணவம் ஆயிரம்’ என ஆரம்பித்து பாடுவாளோ என்னவோ..

Monday, April 18, 2011

அடுத்த வீட்டில் ஒரு ஆச்சரியம்!!

அன்போடு கருணையும் சேர்த்துக் கொண்டு சில்கூரில் அருள் பாலிக்கும் பாலாஜிக்கு

வணக்கம், நமஸ்காரம்.

உனக்கு எல்லா மொழிகளும் தெரியும். ஆனால் அதில் இந்த இந்த இரண்டு மொழிகளில்தான் என்னை இப்படி வணங்கச் சொல்லிப் பழக்கப் படுத்தியுள்ளாய் என்பதால் அப்படியே அதை உனக்குத் திருப்பித் தருகிறேன்.

ஹைதராபாத் வரும்போதெல்லாம் சில்கூர் வந்து உன்னைத் தரிசிக்கவேண்டும் எனப் பலமுறை (அதுவும் இந்த இரண்டு வருடங்களில்தான்) நினைப்பதுண்டு. ஆனால் வந்ததில்லை. காரணம் தெரியும். வந்தால் மனைவியுடன் வா என்று நீ சொல்லாமல் சொல்வதாகவும், மனைவிக்குதான் என்னை விட உன் மீது பக்தி அதிகம் என்பது வெளிப்படையாகத் தெரிந்த காரணமாகவும் நான் ஊகித்துக் கொள்கிறேன். ஆனாலும் என்னுடையை தனிப்பட்ட குறையை மன்னித்து எங்களை உன்னருகே உன்னைக் காண தருவித்துக் கொண்டது உன் கருணைக் குணம்தான். உன்னைக் கண்டதும் என்னுள் புகுந்த மகிழ்ச்சியையெல்லாம் இங்கே எழுத்தில் வடிக்க முடியுமா என்ன? அதை மனதுக்குள்ளேயே பூட்டி வைத்துக் கொண்டு மகிழ்வதுதான் சிறப்பு..

முதலில் பாலாஜி என்றதும் திருமலை வேங்கடவன் நினைப்பும் அந்த நெடிய நீள் மலைக்கேற்றபடி எட்டடி நீண்டு நின்ற நெடுமாலும்தான் எல்லோருக்கும் நினைவுக்கு வருவதை நீயே அறிவாய். ஆனால் ஹைதராபாத் சில்கூரில் அந்த அளவு உயரமில்லாமல் பக்தர்கள் கண்குளிர கண்டு ஆனந்திக்கும் வகையில் நின்ற நிலையில் காட்சியளிக்கும் உன்னை சற்று ஆச்சரியத்துடன் பார்த்தேன் என்பதையும் இங்கு சொல்லிவிடுகிறேன். (உன்னிடம் இல்லாத உரிமை எனக்கு யாரிடம் உண்டு?)

உன் கோவில் கதையை உன்னுடைய அன்புக்கும் கருணைக்கும் மிகவும் பாத்திரமான ஸ்ரீமான் சௌந்தரராஜனார் சொன்னதையும் ஆழ்ந்து கேட்டேன். சௌந்தரராஜனார் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக, பதிவாளராகப் பணிபுரிந்தவர். அன்று பார்த்து திருவிழா ஆரம்பித்துள்ள நிலையிலும் அந்தப் பெருந்தகை எங்களை தன்னருகே அமரவைத்துக் கொண்டு. மிகவும் எளிமையைக் காண்பித்துப் பேசியதும் உன்னைப் பார்த்த ஆச்சரியத்தைப் போலவே மேலுமொரு ஆச்சரியத்தைத் தந்ததுதான். அவருடைய தாத்தா ஆற்றிய சமதர்மக் கடமைகளைச் சொல்லியதுவும், அதில் முக்கியமாக ஹைதராபாதை இந்தியாவுடன் சேர்த்தபோது ஏற்பட்ட கலவரத்தில் எப்படி இரு தரப்பு மக்களையும் கோவிலுக்குள்ளும், கோவில் அருகேயும் கலவரங்களிலிருந்து காப்பாற்றினார் என்பதையும் விவரித்தபோது விந்தையுடன் உன்னைத்தான் பார்த்துக் கொண்டேன். மக்களைக் காப்பதற்காகவே வந்த கலியுகக் கடவுள் நீ, உன் பார்வையில் யாரும் யாரையுமே தாக்கமுடியாதே, என்பதும் நினைவுக்கு வந்தது.

இப்போதெல்லாம் உன் கோவிலோ மக்கள் அலைகளால் தழுவப்பட்டு வருகின்றது. வந்த பக்தர் அனைவருமே பதினோறு முறை உன் கோவிலை வலம் வந்து பிறகு வரிசையாக எந்த ஒரு ‘ஜரகண்டி’யும் இல்லாமல் உன்னை நேரடியாக தரிசித்து உன் அருட்பார்வையில் பட்டு பலன் பெறுகிறார்கள். இத்தனைக்கும் இந்தக் கோயிலில் ஒரு உண்டியல் இல்லை, அர்ச்சகர் தட்டில் பணமில்லை, அந்தக் கட்டணம் இந்தக் கட்டணம் என ஏராளமான சேவைக் கட்டணங்கள் வசூலிப்பார்களே, இப்படியெல்லாம் எந்தக் கட்டணமும் இல்லை. அந்த சீட்டு, இந்த சீட்டு என வசூலிக்கவே ஒரு தனி கௌண்டரையே எல்லாக் கோவில்களிலும் பார்த்துப் பழகிப் போனவன் கண்களுக்கு எந்தவிதமான வசூலும் இல்லையென்பதே ஒரு சின்ன ஆச்சரியம். பின் எப்படித்தான் உன் கோவில் திருப்பணிகள் காலநேரம் தவறாமல் நடைபெறுகின்றன.. பெரிய ஆச்சரியம்தான்.
அடியேன் கேட்ட இப்படிப்பட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லி சௌந்தரராஜனார் என் ஆச்சரியத்தை உடைத்தது வாஸ்தவம்தான். ஆனால் அதன் பலன் எனக்குள் ஏற்பட்ட இன்னொரு ஆச்சரியம்.. இப்படியும் சாத்தியமா.. இப்படி எல்லாம் சாத்தியம் என்றால் அதை ஏன் மற்ற கோவில்களுக்கும் பயன்படுத்தக் கூடாது..

தர்மரட்சகனின் புகழ் பரப்பும் ஒரு மாதப் பத்திரிகை ‘வாக்’ எனும் பெயரில், தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி என மும்மொழியில் ஒரே பத்திரிகையாக வெளியிடப்படுகிறது. தற்போது சுமார் 50000க்கும் மேற்பட்ட பிரதிகள் மாதந்தோறும் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் அடக்க செலவுகள் ரூபாய் நான்கு போக ஒரு பிரதிக்கு ஒரு ரூபாய் என மாதம் ஐமபதாயிரம் வருகிறது. உன்னை நேர்ந்து கொண்டு சுவாமிக்கு என தேங்காய் உடைக்க காய் கொண்டுவருவார்கள். அதை வெளியே உள்ள தனிப்பகுதியில் உடைத்து, பாதிப் பகுதியை பிரசாதமாக உள்ளே உனக்குக் காண்பித்து, மீதியை அங்கேயே விட்டுச் செல்வது ஒரு சம்பிரதாய வழக்கமாக மாறிவிட்டதால் அந்தத் தேங்காய் மூலம் கிடைக்கும் வருமானம் மட்டுமே மாதத்திற்கு சுமார் ஐம்பதாயிரம் ரூபாய். ஆக ஒரு லட்ச ரூபாய் மற்றும் பக்தர்கள் உன் கோவில் பெயரில் போடப்பட்டுள்ள சேமிப்புக் கணக்கு உள்ள வங்கிக்கு அனுப்பி வைக்கும் கொடை நிதியிலிருந்து கிடைக்கும் வட்டி, இவை போதுமே ஒரு கோவிலை மிக நல்ல முறையில் நிர்வகிக்க – என்றாரே சௌந்தரராஜனார்.

இப்படியெல்லாம் கோர்வையாக நடக்குமா.. எல்லாக் கோவிலுக்கும் நிதி வரத்தான் செய்கிறது. எல்லாக் கோவில்களிலும் தேங்காய் போன்ற நிவேதன பொருட்கள் ஆயிரக் கணக்கில் கொடுத்துக் கொண்டே இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அத்தகைய கோவிலுக்கும் உன்னுடைய இந்தக் கோவிலுக்கும் எத்தனை பெரிய அகன்ற இடைவெளியைக் காண்பித்துள்ளாய். இந்த ஆச்சரியத்திலும் ஒன்றே ஒன்று புரிந்தது. இதெல்லாம் உன் லீலை. ‘ஆட்டுவிப்பார் ஆட்டுவித்தால் ஆடாதாரோ கண்ணா’ என்பது போல சௌந்தரராஜனார் மூலம் நீ மற்ற கோவில்களுக்கு மிகப் பெரிய செய்தியைச் சொல்லி இருக்கிறாய். ஆனால் சௌந்தரராஜனார் போல மற்ற கோயில்களிலும் தன்னலமற்ற உள்ளங்கள் இருக்கவேண்டுமே. அதற்கும் ஏதாவது வழி செய்வாய் என்ற நம்பிக்கை உண்டு.

ஒரு சில வருடங்களுக்கு முன்னால் நம் சௌந்தரராஜனார் தனியொரு பக்தனாய் உன் கோவிலில் அரசாங்கம் புகுவதற்கு தடை செய்யும் போராட்டத்தைத் துவக்கியதையும், அச்சமயத்தில் முதல்வராக இருந்த ராஜசேகரரெட்டி வேறு வழியில்லாமல், ஆந்திர அரசாங்கம் கோவில் விஷயங்களில் தலையிடாது என அரசாங்க உத்தரவு பிறப்பித்ததும் ஆந்திரமக்கள் அனைவருமே அறிவர். இந்தக் கால கட்டத்தில் இது மிகப் பெரிய சாதனை. அந்தப் போராட்டம் பத்திரிகையுலகத்தால் வெகு பிரபலமாக எடுத்துச் செல்லப்பட்டதும் தெரிந்ததுதான். சுயநலமில்லாத சௌந்தரராஜனார் தம் கோவில் போலவே தென்னிந்தியமெங்கும் உள்ள அத்தனைக் கோவில்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டுமென விரும்புவதில் எனக்கு ஆச்சரியம் துளி கூட இல்லை. ஆனால் சில்கூரில் நடந்தது போல எல்லாக் கோயில்களும் அரசாங்கக் கட்டுப்பாடிலிருந்து விடுபட்டுவிட்டால்.. ஆஹா.. நினைத்துப் பார்க்கவே ஆச்சரியமாக இருக்கிறது.

ஒருவேளை உன் தயவால் அப்படி நடந்துவிட்டால் நாடு விடுதலை அடைந்தது போல கோவில்கள் விடுதலை அடைந்தது என்று மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்தலாம்தான். அவருடைய ‘கோவில் பாதுகாப்புக் குழு’ எல்லா வெற்றியையும் பெற உன் வாழ்த்துகள் ஏராளமாக வேண்டும். உனக்குத் தெரியும் கால நேரம் பார்த்துதான் எதையும் செய்வாய்..

இரணியக சிபு’ வைக் கூட எண்பது ஆண்டுகள் ஆளவிட்டு, அவன் மகன் பிரகலாதன் வந்து அவன் மூலம் ’எங்கே அந்த நாராயணன்’ என இரணியனைக் கூப்பிட வைத்து அழித்ததாக சொல்வார்கள். அரசாங்கம் எனும் இரணியன் கோவில்களைத் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது. நம் சௌந்தரராஜனையே பிரகலாதரூபமாக நினைத்துக் கூடிய சீக்கிரம் வந்து கோவில்களை சிறை மீட்கவும். அதற்காக நீண்ட நாட்கள் காக்க வைக்காதே கண்ணா!

அடடே, உன் புகழ் பாடும் நேரத்தில் நம்ம ரங்கனை மறந்துவிடுவேன் போல இருக்கிறது.. ரங்கராஜனாரும் தந்தைக்கேற்ற தனயன். இல்லாவிட்டால் ஒரு பயோடெக் பொறியாளர், லண்டனில் கிடைக்க இருந்த, உதவித் தொகையோடு கூடிய அதி சொகுசுக் கல்வியை அந்தக் காலகட்டத்திலேயே (1988 தானே) தந்தை சொல் கேட்டு உதறிவிட்டு உன் சேவையில் ஈடுபடுவாரோ.. ‘வாக்’ பத்திரிகையில் அவரது கைவண்ணமும் கண்டேன்.. ரங்கன் சேவையையும், இன்னும் ஆச்சாரியர் சிலர் பார்த்தேனே, அவர்களது சேவையையும் நம்மாழ்வார் பார்த்துக் கொண்டே ‘கண்டோம், கண்ணுக்கினிய கண்டோம், தொண்டீர் எல்லாரும் வாரீர், வைகுந்தன் பூதங்கள் இரியப் புகுந்தன’ எனப் பாடுவதும் நம் காதில் கேட்கிறது. ’வாக்’ பத்திரிகை தமிழகம் முழுவதும் பரவ வேண்டும். ரங்கனார் ’வாக்’ புத்தகத்தில் தமிழுக்கென சில பக்கங்கள் ஒதுக்கவேண்டும்.
போனவாரம்தான் ‘ஹிந்து’ பேப்பரில் பார்த்தேனே.. உன் புகழ் கேள்விப்பட்டு, தேர்தலில் போட்டியிடும் தமிழக அரசியல்வாதிகள் போட்டிப் போட்டுக்கொண்டு சில்கூர் வருவதாகவும், அவர்களிடம் அப்போதும் கூட சௌந்தரராஜனார் தமிழகக் கோவில்களில் பக்தர்களுக்கு எவ்விதக் கட்டணச் சேவையும் இல்லாமல் சௌகரியம் செய்துகொடுக்க வேண்டும் என்பதாகவும் செய்தி போட்டிருந்தார்களே.. நம் தமிழக அரசியல்வாதிகளே அப்படித்தான்.. விஷயம் இருந்தால்தான் வருவார்கள். கெட்டிக் காரர்கள். எப்படியோ வேவு பார்த்து, கண்டுபிடித்து உன்னிடம் தேடி வந்து கோரிக்கை வைக்கிறார்கள். ஆனால் நீதான் யார் கேட்டாலும் உடனே கொடுப்பவன் ஆயிற்றே.. யார் யாருக்கு என்னென்ன கொடுப்பது என்பதை சற்று எச்சரிக்கையுடன் செய்யவும் (ஏதோ ஒரு உரிமையில் சொல்லிவிட்டேன்.. கோபித்துக் கொள்ளாதே).

உன் கோவில் நம்மாழ்வார் பாடியபடி வைகுந்தன் பூதங்கள் சேவை செய்யும் கோவில் - ஏழைகளுக்கும் கோவில், பணக்காரர்களுக்கும் கோவில், அதிகாரிகளுக்கும், வணிகர்களுக்கும், மாணவர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் கோவில்தான் என்பதை அங்கு வந்து பார்த்த பிறகுதான் புரிந்தது, உன் கோவிலில் பேதமே கிடையாது. உன்னை விஸா பாலாஜி என்று செல்லமாக பிள்ளைகள் அழைக்கிறார்கள். அவர்கள் கேட்டவுடனே அந்த விஸாவை எளிய முறையில் நீ பெற்றுத் தருவதால்; பொதுவாக பெற்றவர்கள்தான் தம் பிள்ளைகளைக் கட்டாயப்படுத்திக் கூட்டிக் கொண்டு கோவிலுக்குச் செல்வார்கள். ஆனால் உன் கோவிலில்தான் குழந்தைகள் பெற்றவரைக் கூட்டிக் கொண்டு வரும் ஆச்சரியத்தையும் பார்த்தேன். உன்னைக் காண வரும் பக்தர்கள் உன்னைக் கண்டதுமே அவர்கள் கோரிக்கைகளை உன் காதில் போட்டுவிட்டு ’இனி உன் பாடு’, என கவலையற்றுச் செல்வதையும் அதே ஆச்சரியத்தோடு பார்த்தேனே..

எத்தனையெத்தனை ஆச்சரியங்கள்.. உன்னை இனி அடிக்கடிக் காணவருவேன்.. இந்த முறை கண்டது போலவே அப்போதும் வழி செய்வாய் என்று எனக்குத் தெரியும். கடைசியாக ஒரு சின்ன கோரிக்கை. நாங்கள் சௌந்தரராஜனாரிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே ஒரு அழகான இளம் தம்பதியினர் கேரளாவில் இருந்து வந்தனர். அவர்கள் சௌந்தரராஜனாரிடம் தம் மனக் குறையை தீர்க்க வழி கேட்டனர். வழியை அவர் காட்டினார். அந்தக் குறையையும் தீர்த்து வைப்பாயாக.. (இதுவும் ஒரு உரிமையில்தான்)..

எனக்கெனவும் ஏராளமான கோரிக்கைகள் உள்ளனதான். ஆனால் உன்னைப் பார்த்த மாத்திரத்தில் அவையெல்லாம் மறந்து போய்விடுகின்றன.. என் மனம் நீ அறிவாய்.. சமயம் பார்த்து அவையாவும் நீயே ஞாபகம் வைத்துக் கொண்டு நிறைவேற்றி அருளும்படிக் கேட்டுக் கொள்கிறேன்..

இப்படிக்கு
அடியேன் திவாகர்.

’வாக்’ பத்திரிகையைப் பற்றிய விவரங்களை www.vakchilkur.org எனும் வலைத்தளத்தில் காணலாம். வாக் பத்திரிகை வாங்குவதால் ஒரு சிறுதுளியை கோவில் காணிக்கையாகவும் நாம் அளிக்கிறோம்.

Friday, February 25, 2011

மனோகரமான லட்டு

திருமலையில் அருளப்படும் பிரசாதங்களின் வரலாறு

திருப்பதியில் கல்வெட்டுகள் சுமார் 650 இருக்கின்றன. இவைகளில் சிற்சில தவிர்த்து ஏனைய அனைத்தும் திருமலைக் கோயிலைப் பற்றியவையே. அதிலும் தமிழ் கல்வெட்டுகள் சுமார் 600 இருக்கின்றன. கல்வெட்டுகளின்படி பார்க்கும்போது இன்றைய திருப்பதியும் திருமலையும் பல்வேறு வகையான ஏற்ற தாழ்வுகளை சந்தித்து இன்று உலகின் இந்துக்கள் அனைவராலும் போற்றப்படும் கோயிலாக உருவாகியிருப்பதைப் புரிந்து கொள்ளலாம்.கல்வெட்டுகள்தான் என்ன நடந்தது என்பதை நமக்கு ஆதாரமாகக் காண்பிக்கும் தடயங்கள். ஒவ்வொரு கல்வெட்டும் பல நிகழ்வுகளை சொல்லிக் கொண்டே போகிறது. நமக்குத் தேவையான சில முக்கிய நிகழ்வுகளை மட்டும் இந்தக் கட்டுரையில் தர இருக்கிறேன்.

பிரசாதங்கள் என்பது கோயில்களில் மிக மிக முக்கியமான விஷயமாகக் கருதப்பட்ட காலம் அவைகள். பிரசாதம் மூலமாக திருமலை ஏறி வரும் அடியார் பசி தீர்க்கவே பல வேண்டுதல்கள் நிறைவேற்றப்பட்ட விஷயங்களுக்காக பலர் நிவந்தங்களை விட்டுச் சென்றுள்ளனர். பிறரும் தம்மைப் போல இப்படிச் செய்யவேண்டும் என்பதற்காகவே கல்லிலும் தாங்கள் செய்த செயலை செதுக்கிவிட்டுச் சென்றார்கள்.

அரசர் முதலியோர் விட்டுச்சென்றுள்ள கல்வெட்டுகளிலிருந்து அவர்கள் பிரசாதத்தைப் பெரிதாக மதிக்கவில்லை என்றே தோன்றினாலும் உள்ளர்த்தமாகப் பார்க்கையில்் இந்த உணவுப்பொருட்களுக்கும் சேர்த்தே நிவந்தம் அளித்துள்ளார்கள் என்பது தெரியவரும். சாளுவ நரசிங்கரும், ஸ்ரீகிருஷ்ணதேவராயரும் நிவந்தங்கள் இப்படித்தான் அளித்தனர். தாங்கள் பெரிதாக வழங்கிய நிலங்கள், நகைகள், பொற்காசுகள், ஆபரணங்கள், தங்கப் பேலா (ஸ்ரீகிருஷ்ணதேவராயரின் இரண்டு மனைவியரிடையே போட்டி போலும், ஒரு ராணி ஒரு தங்கப்பேலா கொடுத்தாள் என்பதற்காக அதைவிடப் பெரிய தங்கப்பேலாவை இன்னொரு ராணி ஓரிரு வருடங்கள் இடைவெளியில் கொடுத்துவிட்டு அந்த இருவரும் கன்னட பாஷையில் கல்லில் பதித்து விட்டுச் சென்றுள்ளனர்)இவைகளில் நிலங்களின் விளைச்சல் மூலம் கிடைக்கும் வருவாய் கோயிலின் எல்லா செலவுகளுக்கும் எடுத்துக் கொள்ளப்படவேண்டும். இதில் பிரசாதங்களும் மறைமுகமாக வரும். ஆனால் பொதுமக்களோ, வணிகர்களோ, பெரிய தனவந்தர்களோ அப்படி இல்லை. அவர்கள் வெட்டிய கல்வெட்டுகளின் படி பார்க்கும்போது குறிப்பாகவே பிரசாதங்களுக்காக ஏராளமாக காணிக்கையளித்துள்ளனர் என்பது புலப்படும். வயிற்றுப் பசியின் அருமை தெரிந்தவர்கள் போலும்.

9ஆம் நூற்றாண்டில் சாமவை எனும் பல்லவ இளவரசிதான் முதன்முதலில் தாம் செய்ததை கல்வெட்டில் ஏற்றிய உத்தமபுத்திரி. இவள் கைராசி அடுத்த 700 ஆண்டுகளில் ஏறத்தாழ அறுநூறு கல்வெட்டுகள் திருமலையில் செதுக்கப்பட்டன. அதிர்ஷ்ட வசமாக இவள் வடித்த இரண்டு தமிழ் கல்வெட்டுகளிலும் திருவேங்கடமுடையான் பெயரும், அவனுடைய உற்சவ மூர்த்தியாக வெள்ளியிலே வார்க்கப்பட்ட மணவாளப்பெருமான் பெயரும் சொல்லப்பட்டிருக்கிறது. ஏறத்தாழ இரண்டு முறை நான்காயிரம் குழிகள் தனித்தனியாக நிலங்கள் நிவந்தமாக அளித்து, அந்த நிலங்கள் மூலம் கிடைக்கும் தொகையில் முதன் முதலாக பத்து நாள் உற்சவம் ஏற்பாடு செய்யவும் அவள் கட்டளையாக கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. ஆக திருமலையில் முதல் பிரும்மோற்சவத்தை பல்லவ இளவரசி சாமவைதான் ஏற்பாடு செய்ததாக இதன் மூலம் உறுதியாகிறது. இவள் பெயரால் உற்சவம் ஏற்பாடு செய்யும் சபைக்குக் கூட சாமவை அல்லது சாம்பவை என அழைக்கப்பட்டது. இந்த உற்சவகாலம் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தில் சுக்ல பட்சத்தில் ஆரம்பித்து வைகுண்ட ஏகாதசியோடு பூர்த்தி ஆகுமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த நாளான துவாதசி நாளன்று சுதர்சனருக்கு நீராடல் செய்யப்பட்டு உற்சவம் முடியும். (இந்தக் கல்வெட்டு ஆதாரமாகத்தான் ‘திருமலைத் திருடன்’ நாவலில் கூட மார்கழி மகோற்சவம் சிறப்பாக எடுத்துக் கொள்ளப்பட்டு அந்த அடிப்படையில் கதையின் முக்கிய சாராம்சம் கூட சொல்லப்படும்.)

திருப்பதியில் உள்ள மலைமேல் குடிகொண்டிருக்கும் திருவேங்கடமுடையான் கோயிலின் பொற்காலம் என்றால் அது 1350 ஆம் ஆண்டு முதல் 1600 ஆம் ஆண்டு வரைதான் என்று சொல்லவேண்டும். முக்கியமாக விஜயநகர அரசர்கள் ஆண்ட காலம் இது. திருமலை புகழின் உச்சியில் இருந்தது. சதா சர்வ காலமும் விழாக் காலமாக 1440 இலிருந்து 1560 வரை இருந்ததை ஏராளமான கல்வெட்டுகள் நிரூபிக்கின்றன. ஆண்டொன்றுக்கு பதினோறு மாதங்கள் பிரம்மோத்சவம் நடைபெற்ற காலம் இவை. மார்கழி தவிர அனைத்து மாதங்களும் திருவேங்கடத்தானுக்கு உற்சாக உற்சவங்கள், மேளதாளங்களால் வீதி ஊர்வலங்கள், விழாக்கால வழக்கமான கொண்டாட்டங்கள் (வெடிச் சத்தம் கூட உண்டு) என மலையே அதிரும்படி கலகலவென இருந்த மலை, அடுத்த இருநூறு ஆண்டுகளில் யாருமே தங்கமுடியாத சூழ்நிலைக்குக் கூட சென்றது என்பது கல்வெட்டுகளின் மூலம் பரிபூர்ணமாகத் தெரியும்.

1800 ஆண்டுகளில் பிரிட்டனின் கிழக்கிந்தியக் கம்பெனியின் அதிகாரத்துக்கு வந்தபோது திருமலையில் மலேரிய பரப்பக்கூடிய கொசுக்கள் அதிகம் என மலை மேலே செல்வதற்கே தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலே இருந்த அர்ச்சகக்குடும்பங்கள் (சுமார் 50 பேர்) கூட திருப்பதி அடிவாரத்துக்கு வந்துவிடவேண்டுமென கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் 1600 ஆண்டுகளுக்குப் பிறகு, விஜயநகர சாம்ராஜ்ய வீழ்ச்சிக்குப் பிறகு சில நாயக்க ராஜாக்கள் திருமலையின் விழாக்கால நிலையை சிறிது காலமே போற்றி வந்தனர். மராத்தியர்கள் தமிழ்நாட்டை ஆண்டு வந்த காலத்தில் திருப்பதி பகுதி ஆற்காடு நவாபின் ஆளுகையிலும், மராத்தியர் ஆளுகையிலும் மாறி மாறி வந்ததால் திருமலைக் கோயில் அரசர்கள் ஆதரவின்றி அர்ச்சகர்கள், மடாதிபதிகள் மற்றும் போஷகர்கள் (பெரும்பாலோர் வைசியர்கள்) மட்டுமே கட்டிக் காக்க வேண்டிய நிலையில் தள்ளப்பட்டது. பிரிட்டிஷார் வந்தபோது இந்த நிலை இன்னமும் மோசமானதுதான்.

முதலில் திருப்பதி வேங்கடவன் என நினைத்தாலே நம் கண், நாசி, நாவையும் நிரப்புவது இந்த ஒரு சொல்தான்.. லட்டுதான்.

திருமலை வேங்கடவன் பிரசாதமாக வழங்கும் லட்டு என்றிலிருந்து ஆரம்பித்தது என்பது கல்வெட்டுகள் படி எங்கும் காணப்படவில்லை. பொதுவாக க்டந்த 200 வருடங்களாக கல்யாண உத்சவம் செய்யும்போது இனிப்பு வகையறாக்களோடு ஒன்றாக லட்டும் சேர்ப்பித்திருக்கலாம் என்று ஊகிக்கலாம்தான். விஜயநகர அரசர் காலங்களில்தான் உற்சவமூர்த்தியான ‘மலைகுனிய நின்ற பெருமாள்’ கல்யாண உற்சவம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த கல்யாண உற்சவத்தினைப் பற்றிய முதல் கல்வெட்டு கி.பி. 1546 ஆம் ஆண்டு தாலபாக்கம் திருமலை அய்யங்கார் என்பவரால் முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்டது என்ற விவரம் தெரிய வருகிறது. தாலபாக்கம் என்பது அன்னமய்யா பிறந்த ஊர். இவர் அவருக்கு என்ன உறவு எனக் கல்வெட்டில் சொல்லப்படவில்லை.

இந்தக் கல்யாணோத்சவத்தில் (பெள்ளித் திருநாள் என்று எனத் தெலுங்கிலும், கல்யாணோத்சவம் என தமிழிலும், வைவாகோத்சவம் என சமுஸ்கிருதத்திலும் வடிக்கப்பட்டது) பங்குனி மாதத்தில் ஐந்து நாட்கள் நடந்த இந்தத் திருநாள் உற்சவத்தையும் திருமாமணிமண்டபத்தில் உற்சவமூர்த்தியான மலைகுனிய நின்றபெருமாள் (பின்னால், மலைகுனிய நின்றான், பின் மேலும் மலையப்பனாக சுருக்கப்பட்டது) தம் இரு தேவியருடன், ஐந்து நாட்களும் விழாக்கோலம் எங்கும் காண, கல்யாணம் செய்து கொண்ட காட்சியையும் கொஞ்சம் விவரணையாகவே இந்தக் கல்வெட்டு சொல்கிறது. ஆனால் கல்யாணத்து இனிப்பு வகையறாக்களில் ‘லட்டு’ இல்லை. திருமணத்தில் பிரசாதங்களாக வடைப்பிடி (வடை), மனோகரம் (இது மிகவும் பழைய காலத்திலிருந்தே தொடர்ந்து வருவது) எனும் இனிப்பு, அவல், பொறி இவைகளைத் தந்ததாக இந்தக் கல்வெட்டு சொல்கிறது. மேலும் திருக்கல்யாணத்தில் ஊஞ்சல் உற்சவத்துக்காக ‘பஞ்சவண்ணப்பிடி’ என ஐந்து வர்ணங்களில் செய்யப்பட்ட அன்னமும் தயாரிக்கப்ட்டதாகவும், இந்த ஐந்து நாள் மொத்த செல்வுகளுக்காக திருமலை அய்யங்கார், ஐநூறு கட்டி வராகன் தொகை செலுத்தியதாகவும் கல்வெட்டு சொல்கிறது. அதாவது பொதுமக்களில் முதன் முதலாகக் கோயிலுக்குப் பணம் கட்டி பெருமாளுக்கு இவர்தாம் கல்யாணம் செய்வித்ததாகத் தெரிகிறது.

லட்டு என்பது திருவேங்கடவன் கோயிலில் 20ஆம் நூற்றாண்டில்தான் முறைப்படியாக பிரசாதமாக வந்ததாகவும், கல்யாணம் ஐய்யங்கார் என்பவர்தாம் இப்போதைய ருசிகரமான லட்டுவுக்கு காரணகர்த்தா எனவும் தகவல் உள்ளது. 1932 ஆம் ஆண்டில் சென்னை (மதராஸ்) அரசாங்கத்தாரால் தி.தி.தேவஸ்தானம் உருவாக்கப்பட்டு அவர்களின் நிர்வாகத்தின் கீழ் திருமலைக் கோயில் வந்தாலும் மடைப்பள்ளியும் பிரசாதங்கள் செய்யும் உரிமையை மிராசிகள் பெற்று வந்ததும் எல்லோரும் அறிந்ததுதான். இப்படி ஐந்து மிராசிகளின் பிரதிநிதியாக கல்யாணம் ஐயங்கார் உரிமை பெற்று சமையலறை நிர்வாகத்தினைப் பொறுப்பெடுத்துக் கொண்டதாக தகவல் கூட தி.தி.தே அலுவலத்தில் இன்றும் உள்ளது. ‘கொண்டந்தா லட்டு’ (மலையளவு லட்டு) எனும் ஒரு பிரார்த்தனையை ஒரு தெலுங்கர் செய்ய, அதற்கேற்றவாறு கல்யாணம் ஐயங்காரும் ஏராளமான அளவில் செய்து கொடுக்க, அந்த லட்டு பிறகு பிரசாதமாக ஏராளமானவர்கள் எடுத்துச் செல்ல, லட்டு புகழ் வையம் அறியச்செய்யும் விதமாக இந்த நிகழ்ச்சியும் இருந்ததாக சொல்வர். (ராஜாஜி அவர்களே கல்யாணம் ஐயங்கார் செய்த லட்டுவின் பெருமையைப் போற்றியதாகவும் சொல்வர்). ஆனால் லட்டு நிச்சயமாக ஆதியிலிருந்து திருப்பதியில் பிரசாதமாக இருக்கவில்லை.

லட்டுக்குப் பிறகு எல்லோருக்கும் பிரியமான பிரசாதம், அதுவும் பெருமாள் கோயிலென்றால் அது புளியோதரைதான். இந்தப் பதார்த்தம் எப்போதையிலிருந்து ஆரம்பித்தது என்று ஆராய்ந்துதான் பார்க்கவேண்டும். ஆனால் புளியோதரைக்கு அடிப்படை தேவையான புளி எனும் வார்த்தை திருமலை கல்வெட்டுகளில் இல்லை.

ஆனால் 1250ஆம் ஆண்டில் சுந்தரபாண்டியன் காலத்தில் எடுக்கப்பட்ட சில கல்வெட்டுகளில் பிரசாத விஷயங்கள் வருகின்றன. தயிர்சாதம், எலுமிச்சை சாதம் போன்றவை வருகின்றன. புளியோதரையை விட எலுமிச்சை சாதம் செய்வது மிக எளிது. (அப்படியே புளிப்பு ருசி சற்று குறைந்தாலும் பிழிந்த எலுமிச்சை மீது பழியைப் போட்டு மடைப்பள்ளிக்காரர்கள் தப்பித்துவிட சந்தர்ப்பம் உண்டுதான்)

அடுத்த பதின்மூன்று, பதிநான்காம் நூற்றாண்டுகளில் ஏகப்பட்ட கல்வெட்டுகளில் பொங்கல் வருகிறது. பொங்கல் எனும் பெயர் வரவில்லையென்றாலும், பாசிப்பருப்பும், அரிசியும், உப்பு, மிளகு, நெய் போன்றவை (இவை ஐந்தும் சேர்ந்து சமைக்கப்பட்டால் பொங்கல்தானே!) ஏராளமாக கொடையாக கொடுக்கப்பட்டதற்கான கல்வெட்டுகள் உள்ளன. அடுத்து அதிகம் கல்வெட்டுகளை ஆக்கிரமித்திருப்பது பானகம். மலையில் நடந்து செல்லும் பக்தருக்காக, கோயில் நிர்வாகமே (தனத்தார் செலவில் இருந்து) பானகம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு அரசர் முதற்கொண்டு சாதாரண பொதுமக்கள் வரை தனத்தாருக்கு (temple treasury) பணம் செலுத்தியதற்கு அந்தக் காலத்தில் கல்லிலே உளி கொண்டு எழுதி ரசீதாகக் கொடுத்திருப்பது ஒரு விசேஷம்தான்.

வருடம்: ஆங்கிலம் 1446:

கல் ரசீது பெறுபவர்: எர்ர கம்பய்யத் தேவரின் மகனான பெரியமல்லையத்தேவர்,

தொகை: 1000 பணம்

பானகத்துக்குத் தேவையான பொருள்கள் வாங்குவதற்காக மேற்படியாரால் தனத்தாரிடம் வழங்கப்பட்டது.


வருடம்:1451.

பெயர்: துவாரபதி மலையபெருமாள் மகனான பிள்ளைபொறுத்தார் தன் பிறந்தநாளான உத்திரநட்சத்திரத்து நாளில் திருமலை மலைகுனிய நின்றானுக்கு பானக ஆராதனைக்காக, பானகம் பொருள் வாங்க 5000 பணம் தனத்தாரிடம் செலுத்தப்பட்டது.

பானகம் தவிர அடுத்து அதிகமாகப் பேசப்பட்ட பிரசாதம் மனோகரம் எனும் தின்பண்டம்தான். இப்போதெல்லாம் மனோகரம் கோயில் பிரசாதங்களில் நடைமுறையில் இல்லையென்றாலும் இன்னமும் ஆந்திரக் குக்கிராமங்களில் மனோகரம் செய்வதும், விருந்து உபசாரத்தில் அதை வைப்பதும் உண்டுதான். மனோகரம் என்பது அரிசிமாவும், வெல்லப்பாகும் கலந்த உலர்ந்த கலவையை எண்ணெயில் போட்டு (முறுக்கு போல) வறுத்தெடுப்பதுதான். ஆனால் எண்ணெய் பணியாரமாகப் பார்ப்பதற்குத் தெரியாது. மனோகரம் என்றால் அழகானது என்ற பொருள். கோலம் என்றாலும் அழகு என்றுதான் சொல்வார்கள். கோலமாவில் கோலம் போடுவது போல அழகான நெளிவு சுளிவு கொண்டு, பார்ப்பதற்கு எழிலாக இருக்கும் இந்த தின்பண்டம் வெறும் அரிசி மாவும் வெல்லமும் கொண்டு தயாரிக்கப்படுவதால் இதற்குத் தேவையான பொருட்களாக, அரிசி, வெல்லம், கடலை (எண்ணெய்க்காக) போன்றவை நிவந்தனமாக ஏராளமான கல்வெட்டில் காணப்படுகிறது. மனோகரம் படையல் செய்வதற்காக எனும் பெயரோடும் சில கல்வெட்டுகள் உள்ளன. இந்தக் கால லட்டுவின் இடத்தை இந்த மனோகரம்’தான் ஒருகாலத்தில் திருமலையில் பிடித்திருந்ததாகக் கூட சொல்லலாம். கரகரவென பல்லால் கடித்து உண்ண சுவையான ஒரு தின்பண்டம்தான் இது.

தமிழகத்தில் திருமணங்களில் இந்த மனோகரத் தின்பண்டம், (கொஞ்சம் கரகரவென இல்லாமல், மெத்தனமாக இருக்கும், ஆனால் ருசி ஒன்றுதான்) கூம்பு போல செய்யப்பட்ட கூடுகளில் அடைத்து மணமகள் சார்பில் மணமகன் வீட்டாருக்கு சீர் செய்வது பழையகால வழக்கம். பிராம்மணர் இல்லத்துத் திருமணங்களில் ’பருப்புத் தேங்காய்’ எனும் பெயரிட்டு இன்னமும் முந்திரிப்பருப்பு தேங்காய், வேர்க்கடலைப் பருப்புத் தேங்காய், அல்லது இந்த மனோகர தின்பண்டத் தேங்காய்’ என சீர் செய்து எல்லோர் கண்களிலும் ’காண்பித்துக் கொண்டுதான்’ இருக்கிறார்கள்.

மனோகரமான இந்த குறிப்பிட்ட தின்பண்டம் ஆந்திர மக்களிடையே மிகப்பிரபலம்.

அடுத்து வருவது அப்பம். இதுவும் மேற்கண்ட பொருள்களினைக் கொண்டே செய்யப்படுவது. ஆனால் மனோகரத்துக்கு உலர்ந்த கலவை தேவைப்படும். அப்பம் அப்படி செய்யப்படுவதில்லை. மனோகரம் இன்று திருமலைக்கோயில் பிரசாதங்களில் இருந்து மறைந்தாலும் இந்த அப்பம் இன்னும் மறையவில்லை. இன்றும் திருவேங்கடத்தானுக்கு முக்கியப் பிரசாதங்களில் ஒன்றாக அப்பமும் இருந்து வருகிறது. அப்பமும், மனோகரமும் அதிக நாட்கள் இருக்கக்கூடியவை கூட.. மலையேறி திருவேங்கடவனைத் தரிசித்து செல்லும் பக்தர்களுக்கு அதிக நாள் நீடிக்கக்கூடிய பிரசாதமாக 12ஆம் நூற்றாண்டிலேயே இருந்ததை கல்வெட்டுகள் பேசுகின்றன

சரி, கீழ்க்கண்ட அளவில் ஒரு பட்டியல் ஒரு கல்வெட்டில் இருக்கிறது. இதனைச் சற்று பார்ப்போம். இந்த அளவையில் எப்படிப்பட்ட பிரசாதங்கள் செய்யமுடியும் என்பதினை எளிதாக உணர்ந்தாலும் எத்தனை பேருக்காக சமைக்கப்பட்டிருக்கிறதோ என்பதையும் கவனிக்கவேண்டும். ஏனெனில் இந்த அளவைகள் ஒரு குறிப்பிட்ட தினத்துக்காக மட்டுமே.

> 153 மரக்கால் அரிசி (8 படி = ஒரு மரக்கால்)
> 506 நாழி நெய் (ஒரு நாழி என்பது 1.3 லிட்டர்)
> 12660 பலம் வெல்லம்,
> 14 நாழி மிளகு,
> 24 மரக்கால் பச்சை பருப்பு
> 30 மரக்கால் கடலைப் பருப்பு
> 30 மரக்கால் கோதுமை
> 67 மரக்கால் நெல்
> 100 நாழி: பால்
> 5 நாழி: தேன்

> திருக்கை விளக்கம் (தட்சிணை அல்லது செய்கூலி) 896-1/4 பணம்

இவை அனைத்தும், அதிரசம், வெல்லப்பொங்கல், வெண்பொங்கல் செய்வதற்காக விஜய நகர சாம்ராஜ்யத்தை ஆண்ட அரசர் சாளுவ நரசிங்கராயாரால் 1473 ஆம் ஆண்டு நடந்த ஊஞ்சல் உற்சவத்தின் போது திருவேங்கடமுடையானுக்கு நிவேதனம் செய்ய நிவந்தமாக அருளப்பட்டது. கோதுமை எந்தப் பதார்த்தம் செய்வதற்காக என்பது குறிப்பிடப்படவில்லை.

சாளுவநரசிம்மரின் விருப்பப்படி பண்டிதர்களின் உதவியோடு திருவேங்கடத்தான் புராணமான ’திருவேங்கடமகாத்யம்’ 1491 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. இன்றைய திருவேங்கடத்தான் கோயில் புராணக் கதையான பத்மாவதி கல்யாணம், குபேரனுக்குக் கடன் பட்டது போன்றவையும் இந்த ‘திருவேங்கடமகாத்யத்தில்’ சொல்லப்பட்டதுதான். இந்தப் புராணக் கருத்துக்களையும் மக்களிடையே பரவலாக்க உத்தரவிட்டதற்கான ஒரு கல்வெட்டும் அதற்கு தேவைப்படும் சில நிவந்தங்களும் கீழ்திருப்பதி கோவிந்தராஜனின் கோயிலில் இருக்கிறது. இவருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த இரண்டாம் தேவராயர் (துளுவவம்சம், கிருஷ்ணதேவராயரின் தந்தை) சாளுவ நரசிம்மரின் இந்த ஏற்பாட்டை மிக விரிவாகச் செய்ததற்கும் கல்வெட்டுகள் மலைக் கோவிலிலேயே உள்ளன.

இந்தப் புராணக் கதை வெளியான பிறகுதான் வைகானஸ விதிப்படி முறையான ஆகமவிதிகளை திருமலைக் கோயிலில் பின்பற்ற ஆரம்பித்தார்கள் என்று கூட சொல்லலாம். ஆகம விதிகளின்படி முறையான வழிபாடுகளும் ஆரம்பித்தன. முதலில் ஸ்ரீனிவாஸ ஸகர்ஸநாமம் எழுதப்பட்டு ஓதப்பட்டு அர்ச்சனையை ஆரம்பித்ததும் 1491 ஆம் வருடம்தான் என்றொரு கல்வெட்டு சொல்கிறது. இந்த அர்ச்சனையைப் பற்றிய இன்னொரு கல்வெட்டு ஸ்ரீகிருஷ்ணதேவராயர் காலத்தில் அதாவது 1517 ஆம் ஆண்டும் ஒரு கல்வெட்டு சொல்கிறது.

ஆண்டு: 1517,

காலம்: ஸ்ரீகிருஷ்ணதேவராயரின் 8ஆம் ஆண்டு.

விஷயம்: ஒவ்வொரு நாளும் சகஸ்ரநாம அர்ச்சனைக்குப் பிறகு பிரசாதமாக நான்கு நாழி நெய், தேவைப்படும் அரிசி, பச்சைப் பருப்பு, உப்பு, மிளகு, தயிர் போன்றவை முறையே பயன்படுத்திக் கொள்ள 5000 குழி நிலங்கள் நிவந்தனமாக திருமலையானுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. இந்த விளைநிலங்களில் இருந்து கிடைக்கும் வருவாயை சூரி்யனும் சந்திரனும் உள்ளவரை ஒவ்வொரு நாளும் சகஸ்ரநாமம் பூஜைக்குப் பிறகு பிரசாத செலவுகளுக்காக பயன்படுத்தவேண்டும்.

இன்றும் கூட அதிகாலை தரிசனம் செய்து வருவோருக்கு பொங்கல், தயிர்சாதம் போன்றவை கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது. ஒரு நல்ல அரசனின் கோரிக்கை இத்தனை நாட்களாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. இனியும் நீடிக்கும்.

உலகையே காத்தருளும் திருவேங்கடமுடையானை தரிசிக்க எந்த பக்தருக்குத்தான் இஷ்டம் இருக்காது. ஆனால் அவனோ உயரத்தே மலை மீது கோயில் கொண்டவன். கஷ்டப்பட்டு மலை ஏறி வரும் அடியவர் கூட்டம் வயிறார சாப்பிடுவதற்கு எந்தக் குறையும் இருக்கக்கூடாது என்பதில் பழங்காலத்து அரசர்கள் மிகவும் சிரத்தையுடன் இருந்தார்கள். உற்சவகாலங்களில் அன்னதானம் என்பது மிகப் பெரிய புண்ணிய காரியமாக பழங்காலத்திலிருந்து நம்பப்பட்டு செயல்பட்டு வந்தாலும், இந்த அன்னதானமானது இன்னொரு வகையில் (பொதுவாக பசியால் வாடும் )ஏழைகளின் பசியை சில நாட்களாவது தீர்க்கும் எனப் பார்க்கும்போது அன்னதானத்தின் உயர்வை நம்மால் உணரமுடியும்.

(pictures courtesy: TTD.)

Saturday, February 5, 2011

Aduththa Veettil Oru Arputha Manithar

அடுத்தவீட்டில் ஒரு அற்புத மனிதர்:உன்னால் முடியும் தம்பி எனும் ஒரு படம், நல்ல படம், சமுதாய நோக்கோடு எடுக்கப்பட்ட சில படங்களில் ஒன்று. இதன் கதை சினிமாவுக்காக தயாரிக்கப்பட்ட கதை. ஒரு இளைஞன் மக்கள் சேவையே மகேசன் சேவை என்று சொல்ல, இளஞனின் தந்தை மறுக்க, சில பல உணர்ச்சி வசமான வசனங்கள், காட்சிகள், தியாகங்கள் என கதை இளைஞனுக்கு சாதகமாக சுபமாக முடியும். இது தெலுங்கில் முதல்முதலாக சிரஞ்சீவியை வைத்து எடுக்கப்பட்டு வெற்றியைக் கண்ட இயக்குநர் தமிழிலும் கமலஹாசனை வைத்து எடுத்தார். .

சரி, விஷயத்துக்கு வருவோம். இந்தக் கதையில் நடப்பதாகச் சொல்லப்பட்ட விஷயங்கள் யாவும் நடைமுறை வாழ்க்கையில் சாத்தியமானதா என்றால் உண்மையான பதில் இன்றைய சூழலில் இந்த நாட்டில் இப்படியெல்லாம் சாத்தியமில்லை என்றுதான் வரும். ஆனால் திரையில் வரும் இந்த உணர்ச்சிவசப்படும் சம்பவங்கள் மற்றும் வசனங்கள் இவை யாவும் தவிர்த்து உண்மையாகவே சமுதாயத்துக்கு நல்லதொரு சேவை செய்யவேண்டுமென களத்தில் குதித்து பல்வேறு சோதனைகளைக் கடந்து இன்னமும் தம் வாழ்க்கையையே இந்த சமுதாய முன்னேற்றத்துக்காக அர்ப்பணித்த மாமனிதர் ஒருவரை சமீபத்தில் சந்தித்த அனுபவம்தான் இந்தப் பதிவு.

எழுபது வயது நிரம்பிய இளைஞர் திரு பரமேஸ்வர ராவ். பாகவத சாரிட்டி டிரஸ்ட் எனும் பெயரில் மிகப் பெரிய விவசாயப் பண்ணையை உருவாக்கிக்கொடுத்த இவர் கதையையே சற்று சினிமாவுக்காக ஏற்றபடியாக மாற்றி திரைப்படம் எடுத்தார்கள் என்ற விஷயம் எல்லோருக்குமே (இந்த பிராந்தியத்தில்) தெரிந்த விஷயம்தான்.

விசாகப்பட்டினம்-சென்னை மார்க்கத்தில் விசாகப்பட்டினம் நகரத்திலிருந்து சுமார் 60 கி.மீ தூரத்தில் பஞ்சதாரா எனும் ஊரில் அழகான குடிரம் அமைத்துக் கொண்டு, ஒரு உயர்நிலைப்பள்ளியையும் அருகே கட்டிக்கொண்டு, நாளைய நல்ல இளைஞ்ர்களை இங்கே உருவாக்கிக் கொண்டு வரும் இந்த மகாமனிதரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் பள்ளி அருகேயே ஒரு பழைய கோவில் ஒன்று உள்ளது. சுமார் ஆயிரம் வருடகாலம் பழமையானது. சிவனுக்காக ஒரு சில யாதவகுல அரசர்களும், போயகுல வீரர்களும் நிர்மாணித்த கோவிலுக்கு 1967 ஆம் ஆண்டு வனபோஜனம் செய்வதற்காக நண்பர்கள், உறவினர்களோடு வந்தவர் பரமேஸ்வர ராவ். அப்போதே அவர் அமெரிக்கவாசி. வந்தவர் அங்குள்ள கோயிலின் பழமை பாதுகாக்கப்படாமல் பாழடைந்து வரும் நிலை அவருக்கு மிக வருத்தமளிக்க,அரசாங்கங்களின்(மத்திய-மாநில) அதிகாரவர்க்கம் பழைமையின் பவித்ரத்தில் ஒளிந்து கொண்டு யாரும் அந்தக் கோயிலை அண்டவிடாமல் செய்தது - அதாவது எவ்வித மாறுதலும் செய்யக்கூடாது எனும் தடையைப் போட்டது (இன்னமும் அப்படித்தான்). அதன் அருகேயே ஒரு கணப்தி கோயில் நிர்மாணித்தால் நன்மை பயக்கும் என சிலர் கூறிய யோசனையின் படி அந்தக் காலத்திலேயே ரூ 22 லட்சம் செலவில் திவிமுகவிநாயகர் கோவிலை நிர்மாணித்தார்.
(சமீபத்தில் கட்டப்பட்ட புதிய கோயிலும் அதன் பின்னே பழைய கோயிலும்)

அத்தோடு அங்கு சுற்றுச் சூழல் மலையும் வளமான நிலங்களும் உள்ள இடங்களை விளைநிலங்களாக மக்கள் சரியாகப் பயன் படுத்திக் கொள்ளாததும், கல்வி வசதி இல்லாமையும் பரமேஸ்வர ராவை யோசிக்க வைத்தன. இந்த நிலையைப் பார்த்து ஏதும் செய்யமுடியாமல் தமக்குள்ளே வருத்தப்படுவதைக் காட்டிலும் அவரால் முடிந்தவரை தாமாகவே களத்துள் இறங்கி களப் பணி செய்வதன் மூலம்தான் வெளி உலகத்துக்கு சேவையின் பயனை எடுத்துச் செல்லமுடியும் என்பதை உணர்ந்தார். தாம் அதிகம் சம்பாதித்துக் கொண்டிருந்த வெளிநாட்டு வேலையையும் வெளிநாட்டுக் குடிமகன் என்ற கௌரவத்தையும் உதறிவிட்டு தான் பிறந்த மண்ணுக்கு நிரந்தரமாகக் குடிவந்ததோடு மக்களோடு மக்களாக ஒன்றிப்போய் தம் செல்வத்தையும் பகிர்ந்து கொண்டு அவர்கள் முன்னேற்றத்துக்காக பாடுபட ஆரம்பித்தார்.’சுவித்யா’ எனும் பெயரில் தரமான கல்வியை சுற்றுப்புற ஜில்லாக்களில் வாழும் ஏழை மாணவர்களுக்காக கட்டினார். இங்கே இப்போது சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட ஏழை மாணவர்கள் இங்கேயே தங்கியிருந்து கல்வி கற்று வருகின்றனர். கல்வி என்றால் சாதாரணக் கல்வியல்ல. கலையோடு, நம் நாட்டின் தொன்மையையும் சிறப்பையும் பால பருவத்திலிருந்தே அவர்களுக்குப் போதித்து வரும் கல்வி. அந்தக் குழந்தைகளைப் பார்க்கும்போது அவர்கள் முகத்தில் சந்தோஷத்தையும், கவலையில்லா பருவத்தில் நேர்த்தியான கல்வியைப் பயின்று வரும் ஆர்வத்தையும் பார்க்கும்போது நமக்கும் அந்த மகிழ்ச்சி தொற்றிக் கொண்டுவிடுகிறது.பரவேஸ்வரராவ் பரந்த பார்வையும் ஜாதிமதபேதமில்லா சேவையும் எத்தனையோ நல்லவர்களை அவர் பக்கம் வரவழைத்தது. அவர்களின் சேவைகளின் பலன் யாவும் சாதாரண மக்களுக்கே சென்று சேர்கின்றது. இதையெல்லாம் காணும்போது அரசாங்கங்களின் மக்கள் முன்னேற்ற திட்டங்கள், பட்ஜெட்டில் பல்லாயிரம் கோடி ஒதுக்கீடுகள், கடைசியில் அந்த ஒதுக்கீட்டில் 90 சத்வீதம் அரசியல்வாதிகளின் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் ஜேபிகளுக்கே செல்லும் என்பதையும் பார்க்கும்போது அரசாங்கத்தை நம்பி வாழும் பொதுமக்கள் எத்தனையோ நாட்களாக ஏமாற்றிவருகிறார்களே என்ற கவலையும் சேர்ந்தே வருகிறதுதான். அரசாங்கத்தைக் குறைந்த அளவே நம்பி, மிகுந்த அளவில் தாமாகவே செயல்படும்போது, அதன் பலன்கள் நேரடியாக அதுவும் ஏராளமானவையாக சாதாரண மக்களுக்குச் செல்கின்றன என்பதை தாம் வாழுகின்ற வாழ்க்கை மூலம் நிரூபித்துக் கொண்டிருப்பவர் பரமேஸ்வரராவ்.
(இப்போது ஏதோ சுமாராகக் காணப்படும் பழைய கால சிவன் கோயில்)

பரமேஸ்வரராவின் பூர்வீகம் தமிழகம்தான் என்பதை அவரே நேரடியாக என்னிடம் தெரிவித்தபோது எனக்குள் ஏகப்பட்ட வியப்பு. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்திலிருந்து வேதம் சொல்லப்படுவதற்காக சோழராசனின் கட்டளையால் ஒரு ஐந்து குடும்பம் இங்கு (ஆந்திரத்தில்) வந்ததாம். அந்த குடும்பத்தின் வாரிசுதான் நாங்கள் என்றார். இதைப் பற்றி என்னுடைய வம்சதாரா சரித்திர நாவலில் குறிப்பிட்டுள்ளதையும் நான் அவருடன் பகிர்ந்து கொண்டேன். குலோத்துங்கன் காலத்தில் இன்னும் ஏராளமான அளவில் தமிழ் அந்தணர் குடும்பங்கள் ஆந்திரத்துக்கு குடிபெயர்ந்ததைப் பற்றிய சரித்திர குறிப்புகள் உள்ளதையும், திராவிடர் எனும் குடும்பப்பெயருடன் அழைக்கப்படுவதையும், காஞ்சி பரமாச்சாரியார் குறித்து வைத்த சான்றோடு நான் குறிப்பிட்டபோது அவர் முகத்தில் இன்னும் மகிழ்ச்சி நிறைந்து காணப்படுவது தெரிந்தது.

ஆனாலும் தமிழ் தெலுங்கு எனும் வேற்றுமை எல்லாம் இவரிடத்தில் இல்லை. மானிடர் சேவையே மகேசன் சேவை எனும் குறிக்கோளுடன் வாழும் இவர் எல்லாவகை இனத்துக்கும் பொதுவானவர் அன்றோ..

(அவர் வாழும் குடீரம், அவரே வடிவமைத்துக் கட்டியது)

காலம் இப்போதெல்லாம் மிக மாறிவிட்டது. தற்போதைய சூழ்நிலைகள் மனிதரை சுயநலமிக்கவராக மாற்றிவிட்டது. இப்படி சுயநல வாழ்வை சூழ்நிலையாக கொண்ட நாம் எந்தவித சுயநலமும் இல்லாமல் சக மனிதரின் தேவைகளை உணர்ந்து அவர்களுக்கு உதவி செய்து கொண்டே வாழும் யாராவது ஒரு மனிதரைப் பார்த்தாலும் ஆச்சரியப்படுகிறோம். பரமேஸ்வரராவ் எனும் மாமனிதரைப் பற்றிய ஆச்சரியம் என் மனதை விட்டு அகலவே அகலாது. நான் அவரை போட்டோ எடுக்கவேண்டும் என்று சொன்னவுடன் தம்மருகே இரண்டு மாணவர்களைக் கூட்டிக்கொண்டார். குழந்தைகளுடன் இந்தப் பெரிய குழந்தையும் சேர்த்து காணும்போது கள்ளமில்லா உள்ளங்களின் கருணை மழையில் நனைந்தோம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

மனிதனாய் பிறந்து சக மனிதருக்கு உதவி செய்து வாழ்வது என்பதே இறைவன் விதித்த விதி என்பதை சொல்லாமல் சொல்லும் பரமேஸ்வரராவ் அவர்கள் இன்னமும் ஏராளமான ஆண்டுகள் வாழ்ந்து சேவை செய்யவேண்டுமென இறைவனை வேண்டுகிறோம்.