Thursday, February 25, 2010


நாராயணனும் நாம கைங்கரியமும்

ஆந்திரத்தின் கதையே அலாதிதான்.

ஆந்திரர்கள் மிக நல்லவர்கள். நான் இங்கு வசிப்பதனால் இதை நான் சொல்வதில்லை. பொதுவாகவே மற்ற மாநில மக்களைக் காட்டிலும் (சுயநலம் குறைந்த) நல்லவர்கள். ஆனாலும் இவர்களுக்கு தங்கள் பழமையின் பெருமை இன்னும் புரியவில்லையோ.. தங்கள் நிலத்தின் வளமையும், மொழியின் வளமையும் இன்னமும் கூட தெரிந்து கொள்ளவில்லையா அல்லது தெரிந்து கொள்ள முயலவில்லையா என்பதும் எனக்கு இன்னமும் சந்தேகம்தான்.

ஆந்திரப்பிரதேச வரலாறு இங்கு மக்களுக்கு இன்னமும் சரிவரப் போதிக்கப்படுவதில்லை என்பது என்னுடைய மிகப் பெரிய குற்றச்சாட்டு. இந்தக் குற்றச்சாட்டை பல இடங்களில் இங்கு நான் பதிவு செய்தபோதெல்லாம் சிரித்துவிட்டுப் போய்விடுகின்றனர். பழமையின் பெருமை தெரிந்து என்ன செய்யப்போகிறோம் என்பதில் உள்ள அலட்சியப் போக்கா என்பது கூட தெரியவில்லை.

நம் தமிழ் மண்ணில் உள்ள குகைக் கோயில்கள் போலவே பழமையான குகைக் கோயில்கள் இங்கு உள்ளன. முக்கியமாக விஜயவாடா நகரின் மத்தியிலேயே மூன்று குகைக் கோயில்கள் இருந்தாலும், நகரவாசிகள் பலருக்கு இங்கு சென்று காணும் ஆர்வம் கிடையாது என்பதில் எனக்கு வருத்தமுண்டு. நகரை அடுத்த தென்பகுதியில், கிருஷ்ணா நதியின் தென் கரையில் ஒரு அழகான குகைக் கோயில் உண்டவல்லி எனும் ஊரில் கட்டப்பட்டுள்ளது.


அனந்தசயனனான விஷ்ணுக்கும் சிவனுக்கும், பிரம்மாவுக்கும் எடுப்பிக்கப்பட்ட குகைக் கோயில் இது. ஒரே பாறையில் செதுக்கப்பட்ட அனந்தசயனன் மிகமிக விசேஷமாக நம்மைக் கவர்கிறார். உண்டவல்லி குகைச் சிற்பங்கள் பற்றி பல கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. நம் சிங்கப்பூர் விஜய் அழகான சிற்பப்படக் கட்டுரையைக் கூட எழுதியுள்ளார்.( www.poetryinstone.in/.../was-this-the-inspiration-behind-mahendra-pallavas-sculptural-quest.htm நாம் ஆகவே இந்தச் சிற்பங்களுக்குள் நுழைய விரும்பவில்லை.

என்னை மிகவும் வெகுவாகக் கவர்ந்தவர் இந்த பதினேழு அடியில் படுத்துக் கொண்டிருக்கும் அனந்தசயனன்.. பாற்கடலில் பள்ளி கொள்வதுபோல இருந்தாலும், பாற்கடலை தவிர்த்து அங்கே அத்தனை முனிவர்களும் தேவர்களும் பெருமாளைச் சேவிப்பது போல செதுக்கியுள்ளது ஒரு விசேஷம்.
அவரையே நானும் நண்பர்களும் பார்த்துக் கொண்டிருந்தபோது விசேஷமான ஒரு விஷயம் நம் கண்ணில் பட்டது. அது பெருமாளுக்குப் போடப்பட்டிருந்த நாமம். நல்ல பெரிய தென் கலை நாமத்தை கண்களுக்கு பளிச்சிட செதுக்கியிருந்தார்கள்.

ஆனால் நாமம் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பெருமாளோடு சேர்ந்து செதுக்கப்பட்டதாக இருக்கமுடியாது என்பதும் புரிந்தது, ஏனெனில் நாமம் இவ்வளவு பெரிதாக பெருமாளுக்கு போடப்படுவது உடையவர் ஸ்ரீராமானுஜர் காலத்தில்தான் மிகப் பரவலாக வளர்ந்தது. ராமானுஜருக்கு முந்தைய காலக் கட்டத்தில் சந்தனக் கீற்றாக ஒரு யூ வடிவில் போடப்பட்டதாக சில குறிப்புகள் கிடைக்கின்றன.

உடையவர் காலம் பதினோராம் நூற்றாண்டு. இந்த சிற்பம் படைக்கப்பட்ட காலத்தை சற்று ஆராய்ந்தோம். ஆந்திராவை பல அரச வம்சங்கள் பலப் பல ஆண்டுகளுக்கு ஆண்டுவந்தார்கள்.

கிருத்து பிறப்பதற்கு முன் இருநூறு ஆண்டுகளும், பிறந்த பின் 250 ஆண்டுகளுமாய் சுமார் நானூற்றைம்பது ஆண்டுகள் ஆண்ட பெருமை உடையவர்கள் சாதவாகனர்கள். இவர்கள் வேதமதத்திலும் பிறகு புத்தமதத்திலும் சேர்ந்து பெருமை படைத்தவர்கள்.

இவர்களுக்கு பின் அடுத்த நானூறு ஆண்டுகளுக்கு ஆந்திரம் பல்வேறு அரசுகளால் ஆளப்பட்டது. இவர்களில் ஆந்திர இக்ஷவாகு அரசர்களும் (கி.பி. மூன்றாம் நூற்றாண்டு) ஆனந்த கோத்திர அரசர்களும் (கி.பி. நான்கும் ஐந்தாம் நூற்றாண்டு மத்தி வரை) இவர்கள் காலத்திலேயே இவர்களுக்குப் போட்டியாக வந்த விஷ்ணுகுந்தின் வம்சமும் மிகவும் புகழ்பெற்றவை. கி.பி.600 ஆம் ஆண்டு வரை ஆண்ட இந்த அரசர்களுக்குப் பிறகு சாளுக்கிய வம்சத்தினர், மேலைச் சாளுக்கியமாகவும், கீழைச் சாளுக்கியமாகவும் ஆந்திராவைப் பிரித்து ஆள ஆரம்பித்தனர். நம் தகவல்களுக்கு இந்தச் சரித்திரம் போதும் என நினைக்கிறேன்.

சரி, இந்த இடத்தில் நாம் குறிப்பிட்ட ஆனந்தகோத்திர அரசர்களால்தான் இந்த உண்டவல்லி குகைக் கோயில் குடையப்பட்டது. அதாவது சுமார் கி.பி.450-500 ஆண்டு கால கட்டங்களில் வேதமதத்தை மிகச் செழிப்பாக வளர்க்கும் உத்தியில் சிவன் - விஷ்ணு - பிரும்மா வுக்காக சிறுமலையைக் குடைந்து உளி கொண்டு செதுக்கப்பட்ட உயிரோவியங்கள். இப்படி இது நான்கு-ஐந்து நூற்றாண்டு கால ஆனந்தர்களால் கட்டப்பட்டது என்பதை அங்கேயே செதுக்கப்பட்ட, ரெட்டி அரசர்களின் 13ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்று சொல்கிறது.

சரி, நாம் இப்போது நாம கைங்கரியத்துக்கு வருவோம்,

ராமாநுஜருக்கு முந்தைய நூற்றாண்டுகளில், அதுவும் அந்த ஐந்தாம் நூற்றாண்டு காலத்தில் இந்த நாம வடிவம் இன்றுள்ளதைப் போல இல்லை என்று எல்லா சரித்திர ஆசிரியர்களும் எளிதாகவே சொல்லிவிடுவர். ஆனால் இந்த ஒரே பாறைச் சிற்பத்து பெருமாளில் எப்படி நாமம் வந்தது. அந்த நாமம் மட்டும் சுதை கொண்டு பின்னாளில் அதாவது பதினோராம் நூற்றாண்டில் இணைக்கப்பட்டுள்ளதாக சரித்திர ஆய்வாளர்கள் சொன்னார்கள்.

முதலில் எனக்கு சந்தேகம்தான். என்னதான் சுதையில் செய்து தனியாக இணைத்தாலும் இன்னமும் ஆயிரம் ஆண்டுகளாக இந்தக் காலத்திலும் பொருந்துகிற அளவுக்கு அத்தனை கச்சிதமாக இருக்குமோ என்ற கேட்டதில் சமீபத்தில் ஒரு சரித்திர ஆராய்ச்சியாளர் எனக்கு ஒரு புத்தகத்தைக் கொடுத்து அந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்பை எடுத்துக் கொண்டு ஆராயச் சொன்னார். இது மறைந்த முன்னாள் பேராசிரியர் திரு பி.எஸ்.ராவ் அவர்களின் ஆந்திர நாட்டுச் சரித்திரம்.

இந்த உண்டவல்லியைச் சுற்றி உள்ள பகுதிகளால் நம் தமிழ்நாட்டு வைணவர்கள் குடும்பம் குடும்பமாக 10ஆம் நூற்றாண்டு முதல் குடிபெயர்ந்து நிரந்தரமாக தங்கிவிட்டதைக் குறிப்பிடுகிறார். குண்டூர் மாவட்டம் சாத்லூரு போன்ற இடங்களில் (உண்டவல்லியும் குண்டூர் மாவட்டம்தான்) இன்னமும் இந்த வைணவக் குடும்பங்கள் உள்ளதாகவும் இவர்கள் திவ்வியபிரபந்தங்களில் சிறந்து விளங்குவதாகவும் தெரிய வந்தது. (சாத்லூரு ஸ்ரீமன் கோபாலகிருஷ்ணமாச்சார்யுலு, இங்கு விசாகப்பட்டினத்தில் வசிக்கிறார். பிரபந்தத்தில் சிறந்த பண்டிதர். மிகச் சரளமாக தெலுங்கிலும், தமிழிலும் திவ்வியப்பிரபந்த பாடல்களை உபன்யாஸம் செய்வதில் வல்லவர்.) இப்படிப்பட்ட செய்திகளோடு இந்தப் புத்தகத்தில் இன்னொரு கூடுதல் செய்தியும் கிடைத்தது.

‘”வேங்கி மகாராஜுவைன ராஜேந்திர சோளுடு ஆக்ஞகு கட்டுபடி, அதடு சோளதேச சக்கரவர்த்தி ஆயினவெண்டனே, நாராயணராஜா ஆக்ஞபிரகாரம் சேஷசயனுடுகி பலு மராமத்து பணுலு சேயபடினதி”

என்று எழுதப்பட்டுள்ளது. கி.பி. பதினோராம் நூற்றாண்டில் அதாவது 1070 இல் ராஜேந்திரசோழன் வேங்கி அரசனானதும் அடுத்த ஆண்டிலேயே குலோத்துங்கசோழன் எனும் பெயர் பெற்று சோழதேசத்து சக்கரவர்த்தியாக முடிசூட்டிக்கொண்டான். குலோத்துங்கசோழனின் தெலுங்கு நண்பனான நாராயணன் என்பானும் அவன் அண்ணனும் குண்டூர், கிருஷ்ணை மாவட்டங்கள் இணந்த ‘கம்மராட்டிரம்’ எனும் பகுதியை அரசாண்டதாக வரலாறு சொல்கிறது. இந்த சமயத்தில்தான் உண்டவல்லி அனந்தசயனப் பெருமாளுக்கு இந்த நாராயண சிற்றரசனால் நாம கைங்கரியம் செய்திருக்கப்படவேண்டும்.



இந்தக் கால கட்டத்தில் ‘சுதை’ எனப்படும் சுண்ணாம்புக் கலவை சிறபங்களில் உபயோகப்படுத்தப்படுவதென்பது தமிழகமெங்கும் புகழ்பெற்றிருந்த கலையாகும். மணிமேகலை இயற்றப்பட்ட காலத்திலிருந்தே இந்த சுதை சிற்பங்கள் உபயோகத்துக்கு வந்துவிட்டன. (http://www.tamilvu.org/courses/diploma/d061/d0612/html/d0612332.htm) பல்வேறு தூண்களில் இவை போல சிற்பங்கள் இன்னமும் காலத்தால் அழியப்படாமல் அதே களையுடன் சுதை கொண்டு பல்வேறு ரூபங்களில் செதுக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். அதே சுதை கொண்டு நாமம் மட்டுமே கூடுதலாக, ஒரு இணைப்பாக, ஒரு சிறு நிலத்தை ஆண்ட நாராயணனால் ஒரே பாறையில் செதுக்கப்பட்ட நிலம் நீர் வானம் என எல்லாவற்றையும் ஆளும் அந்த ஆண்டவனான பழைய நாராயணனுக்கு கைங்கரியமாக செய்துள்ளான் என்பது தெரியவருகிறது.

நாராயணனால் நாராயணனுக்கு செய்யப்பட்ட நாம கைங்கரியம் எனக் கொள்வோமா..

திவாகர்