Wednesday, March 16, 2016

விசாகப்பட்டினம் - மாற்றமும் ஏமாற்றமும்

 
’என்ன உறவோ என்ன பிரிவோ’ என்ற கவிஞர் வாலியின் கவிதைத்தனமான கேள்விதான் எனக்குள் இப்போதும் ஒலிக்கிறது.


பிரிந்தும் பிரியாத நிலையில் விசாகப்பட்டினத்தை விட்டு வந்திருக்கும் நான் சிறிது இடைவெளிவிட்டு அந்த அழகிய நகருக்குச் செல்லும் வாய்ப்பு மறுபடி வந்தபோது அழகாக அந்த வாய்ப்பைப் பயன்படுத்தினாலும் இந்த உறவும் பிரிவும் பாதிக்காத வேறு ஒரு மனநிலையை அனுபவித்தேன் என்றுதான் சொல்லவேண்டும்.

பட்டினம் என்று தமிழிலே பழஞ்சொல்லொன்று உண்டு. கடல் சார்ந்து மக்கள் புழங்கும் இடங்களைப் பட்டினம் என்பார்கள். சேரநாட்டுக் கரையிலிருந்து ஒரிய நாட்டுக் கரை முழுவதும் இப்படி ஏராளமான பட்டினங்களை இப்போதும் பார்க்கலாம். அதுவும் ஆந்திரக் கடலோரப் பட்டினங்கள் ஏராளமாக உள்ளன. ஆந்திரத் துறைமுகங்களான வடக்கே கலிங்கப்பட்டினம் முதல் தெற்கே நெல்லூர் அருகே உள்ள கிருஷ்ணப்பட்டினம் வரை நம் செந்தமிழ்ப் பெயர் பரவித்தான் உள்ளது.

துறைமுக நகரமான விசாகப்பட்டினம் என்ற பெயர் கூட இந்த இடத்துக்குப் பின்னர் வந்ததுதான். தொளாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கலிங்கப் போரில் வெற்றி வாகை சூடிய சோழர்கள் படைத்தலைவன் (கருணாகரத் தொண்டைமான்) இந்த ஊரின் பெயரை தங்கள் அரசன் குலோத்துங்கன் பெயரில் குலோத்துங்க சோழப்பட்டினம் என்று பெயர் சூட்டினான். இதற்கான 12 ஆம் நூற்றாண்டு கல்வெட்டொன்று தமிழில் எழுதப்பட்டு இன்னமும் கிழக்குப் பிராந்திய கடற்படைப்படை தலைமை அலுவலக அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இங்கு நம் முருகருக்காக ஒரு கோயிலும் தமிழர்களால் எழுப்பப்பட்டு விசாகேஸ்வரர் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்ததாகச் சொல்வர். இந்தக் கோயில் பின்னாட்களில் கடல் சீற்றத்தில் சிதைவடைந்ததோ அல்லது கடலால் உள்வாங்கப்பட்டுப் பாழானதோ தெரியவில்லை. ஆனால் விசாகேஸ்வரர் இந்த நகருக்கு அழகான பெயரை மட்டும் தந்துவிட்டுதான் மறைந்து போயிருக்கிறார்.

விசாகப்பட்டின சரித்திரமே தனி. இந்த மண்ணுக்கென மைந்தர் யாருமே இல்லை இங்கே. இருப்பவரில் ஏராளமானோர் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். ஏனையோர் அண்டை மாநிலங்கள் அல்லது வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். சென்னை போன்ற பெரு நகரங்களோடு ஒப்பிடும்போது நகரம் மிகச் சிறியதுதான். ஒரு மணி நேர காலகட்டத்தில் நகரின் நாலாபுறத்தையும் மிதித்து வரலாம்தான்.

என் இலக்கிய வாழ்க்கை இங்குதான் பலப்பட்டது. இந்த நகரத்தையும் அதன் சுற்றுப்புறங்களையும் மையமாகக் கொண்டுதாம் என்னுடைய முதல் நாவல் வம்சதாரா எழுதப்பட்டது. என்னுடைய எல்லா இலக்கிய படைப்புகளுக்கும் இந்த நகரத்தில்தான் விழா எடுத்து நண்பர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். தெலுங்கு இலக்கிய உலகமும் என்னை அவ்வப்போது அழைத்து கௌரவப்படுத்திய நகரம்தான். என் இஷ்டதெய்வம் கனகமகாலக்ஷ்மி இங்கு கோயில் கொண்டதோடு என் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட இடம் இது. எத்தனையோ தமிழ் நாடகங்களை நான் இங்கு மேடையேற்றியுள்ளேன். அஜாத சத்ருவாய் நான் வலம் வரும் இடம் கூட.

பல வருடங்களாகவே இந்த நகரத்தைக் கவனித்துக் கொண்டுதான் வருகின்றேன். மூன்று பக்கங்களிலும் மலையும் நாலாவதாக கடலையும் எல்லையாகக் கொண்டு தன்னைத் தானே எப்படியோ எங்கேயோ நுழைத்து நீட்டிப் பெருக்கிக் கொண்டு வளரும் விசித்திரமான நகரம் இது. பொதுவாக நகரத்துக்கென்றே உருவான நாகரீகம் இங்கும் உண்டு. காலத்தால் ஏற்படும் மாற்றங்கள் இந்த நகரத்தையும் ஏகத்துக்கு மாற்றிவிட்டதுதான்.. 

விலைவாசி அதிகம் உள்ள நகரத்தில் இதுவும் ஒன்று. விசாகப்பட்டினத்தைச் சுற்றிலும் விளையும் பயிர்வகைகள் மிக மிகக் குறைவு. சுற்றிலும் உள்ள மலைப் பிராந்தியங்கள் விளைநிலங்களைத் தந்ததில்லை. காய் கனி வகைகள் அனைத்தும் வெளியிடங்களிலிருந்து வந்தால்தான் நகரமக்கள் நன்றாக வாழமுடியும். இயற்கையாகவே மந்த கதியில் சூரியன் இந்த நகரை வைத்திருக்கிறானோ என்று கூட சில சமயங்களில் தோன்றும். கோடை மழைகள் அதிகம் என்றாலும் கூடவே நாள் முழுதும் வேர்த்து விறுவிறுக்கும் போது சற்று ஆயாசம் கூட வரும். வெய்யிலின் சூடு தகிக்கிறதா அல்லது கடல் இங்கே வெந்நீராக மாறி சித்ரவதை செய்கிறதா என்ற அளவில் கடற்கரையில் கூட சில்லென்ற காற்று நம்மை சில சமயங்களில் அண்ட விடாது செய்யவைக்கும் இயற்கையான தட்பவெப்பம். ஏற்கனவே அகலம் சிறிதான அளவில் இருக்கும் கடற்கரை மேலும் சுருங்குகிறதோ என்ற சந்தேகம் எப்போதும் மனதில் தோன்றும் அளவுக்கு கடலலைகள் கையில் கத்தியை வைத்துக்கொண்டு கரை மணலை அரித்துக் கொண்டே நகரத்துக்குள்ளே நுழைய ஆசைப்படும் காட்சியைப் பார்க்கும்போது நகரத்தின் எதிர்கால கடற்கரை எப்படி இருக்குமோ என்ற பயம் கூட மனதில் தோன்றும்தான்.  


முப்பதுவருடங்களுக்கு முன்பு வரை இருந்த கடற்கரையின் இயற்கையான அழகையெல்லாம் மனிதன் களவாடி சிதைத்து விட்டு பச்சைப் பசேல் என்ற பகுதியில் செயற்கை அழகைச் செதுக்கி வைத்து சீராட்டிப் பார்த்ததால் கடற்கரை சாலையின் விளிம்பு வரை வந்த சிமெண்ட் கட்டடங்கள் நமக்கு சற்று எரிச்சலைக் கூட தரலாம். சாலைகள் அழகாகத்தான் தெரிகின்றன. தலைவர்கள் வரும்போதெல்லாம் கூட மேடு பள்ளங்கள் சீரமைக்கப்படுவதால் எளிதில் கடக்கமுடியும்தான். ஆனால் துறைமுகத்தில் வந்திறங்கும் கரி மூலமாக வெளிப்படும் கரும்புகை நகரம் முழுவதும் ஏற்கனவே மூடுபனி போல படிந்து கிடக்கின்ற நிலையில் வாகனங்கள் மூலம் வெளிப்படும் புகையும் சேர்ந்து கொள்வதால் அந்த அழகான சாலைகளில் கூட முகத்தை மூடிக்கொண்டுதான் செல்லமுடிகின்ற நிலை. இத்தனைக்கும் இந்த நகரத்தில் மற்ற நகரங்களைப் போல மக்கள் பெருக்கம் அப்படி ஒன்றும் அதிகம் இல்லை.. சாதாரண அளவில் மட்டுமே மக்கள் தொகை பெருகுகிறது.
 கொஞ்சம் உன்னிப்பாகப் பார்த்தோமேயானால் முந்தைய பிளவுபடாத ஆந்திர மாநிலத்தின் தொழில் நகரம் என்ற பெயரை எப்போதோ விசாகப்பட்டினம் பெற்றிருந்தது வாஸ்தவம்தான். நகரத்தின் தெற்கே இந்தியாவிலேயே பெரிதான கப்பல் தொழிற்சாலையோடு (மேலே உள்ள படம்) எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, உரம் தயாரிக்கும் ஆலை, இரும்பு உக்காலை, மிகப் பெரிய பாரத் ஹெவி ப்ளேட்ஸ் அண்ட் வெஸ்ஸெல்ஸ் ஆலை (பிஹெச்பிவி) என தொழில் சிறக்கும் ஆலைகள் நிறைந்த பிரதேசம் இந்த நகரம். இந்தத் தொழிற்சாலைகளினால் எத்தனையோ சிறு, நடுத்தரத் தொழிற்சாலைகள் வளர்ந்து கொண்டிருந்தன. 

ஆனால் தற்போதைய நிலையை நினைத்துப் பார்த்தால் நெஞ்சுக்குக் கஷ்டமாகத்தான் இருக்கிறது. மிகப் பெரிய கப்பல் கட்டும் தொழிற்சாலையும், மிகப் பெரிய பிஹெச்பிவியும்  மிகவும் சீரழிந்த நிலையில் இருக்க புதிய தொழிற்சாலை ஏதுமே இந்த முப்பது ஆண்டுகால நகர வரலாற்றில் கொண்டு வரப்படவே இல்லை. சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மந்த கதியில் இன்றைக்கு இயங்கும் நிலை கூட சீரணிக்க முடிவதில்லை. அன்றைக்கு மாநிலத்தின் தலைநகரமான ஹைதராபாத் நகருக்கு வெகு முக்கியமான நிலை கொடுக்கப்பட்டதால் தொழில் வெகு வேகமாக அங்கு வளர இங்கிருந்த இளைஞர்கள் வேலை தேடி ஏராளமான அளவில் தலைநகருக்குக் குடியேற ஆரம்பித்தனர். ஒரு தலைமுறை அங்கு சென்றால் அவ்வளவுதான். விசாகப்பட்டினம் நகரம் தொழில் ரீதியாக எந்த வளர்ச்சியுமில்லாமல் கிடக்க கரும்புச் சாறினை எதிர்பார்த்துப் பயணிக்கும் ஈக்களைப் போல வேறு பயன்கிடைக்கும் இடங்களுக்கு மக்கள் போவதை யாராலும் தடுக்கமுடியவில்லை.


இன்று மாநிலம் இரண்டாகிவிட்டது. புதிதாக பிரிந்த ஆந்திராவில் மிகப் பெரிய இடம், நகரம் இந்த விசாகப்பட்டினம்தான். ஒருகாலத்தில் ஹைதாராபாத் நகரத்தை எப்படியெல்லாம் பெரிதாக்க முயன்று எத்தனையோ தொழிற்சாலைகளை அங்கு நிறுவினார்களோ, அதே போல இன்று இங்கும் சாதிக்க முடியும். ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த சாதனைக்கான ஆரம்ப கட்ட முயற்சிகள் கூட இதுவரை எடுக்கப்படவில்லை என்றுதான் சொல்லவேண்டும். நகரத்தின் எல்லைகளில் விரிந்து கிடக்கும் காலி இடங்களை இந்தச் சமயத்தில் காணும்போதெல்லாம் இங்கு ஒரு இன்ஃபோஸிஸ் வரலாமே, அல்லது டிஸியெஸ் வரலாமே என்று ஏங்கவைக்கிறதுதான். ஆனால் முதலில் காண்பிக்கப்பட்ட அந்த நம்பிக்கை இப்போது மறைந்து கொண்டே வருகிறது. இத்தனைக்கும் மிக நல்ல பொறியாளர்களை விசாகப்பட்டினக் கல்விக் கூடங்கள் தந்துகொண்டுதான் இருக்கிறது. அவர்கள் அனைவரையும் இதே பெரிய கம்பெனிகள் இவர்கள் படிக்கும் கல்லூரிக்கே வந்து தங்கள் இருப்பிடங்களுக்குத் தூக்கிச் செல்கின்றனர்தாம். பல கல்லூரிகளில் நல்ல தரமான கல்வி கொடுக்கப்படுகிறது. ஆனாலும் கொடுக்கும் இடத்துக்கு இதனால் ஒரு பயனும் இல்லை என்பதுதான் வேதனை.

இந்த வேதனை தீரவேண்டும்.. நகரத்தின் பயனை உணர்ந்து பல பெரிய தொழில் நிறுவனங்கள் இங்கு தொழில் அமைக்க வரவேண்டும். மென்பொருள் நிறுவனங்கள் எந்த மூலதனமும் இல்லாமல் நிறுவுவதற்கு ஏதுவாக அரசாங்கம் வழி வகை செய்யவேண்டும். இப்படித்தான் ஹைதராபாதில் செய்தார்கள். பேசிக் கொண்டே காலம் கழிக்காமல் அரசாங்கம் செயல் ரீதியில் தங்கள் சாதனைகளை நடத்தி இந்த நகரத்தைக் காப்பாற்ற வேண்டும். கல்விக்கூடங்கள் பெருகுகின்றன.. உண்மைதான்.. ஆனால் கொண்ட ஊருக்கு உதவாத கல்விக்கூடங்களால் இந்த நகரத்துக்கு என்ன பயன் என்பதையும் நாம் கவனிக்கவேண்டும். நகரத்தில் உறவு கொண்டு வாழும் இளைய தலைமுறைகள் இந்த நகரத்திலேயே தங்கள் கல்விக்கு ஏற்றவாறு வேலைகிடைக்கும் என்ற நம்பிக்கையை வளரவிடவேண்டும். தங்கள் உறவுகளைப் பிரித்துக் கொண்டு அல்லது உறவை அப்படியே தூக்கிக் கொண்டோ வேறு இடத்துக்கு மாறாத சூழ்நிலை உருவாக வேண்டும். ஒரு காலத்தில் வந்தாரை வாழவைக்கும் நகரமாக விசாகப்பட்டினம் இருந்தது. இன்று அப்படி இல்லை.. உள்ளவர்களுக்கே உதவி செய்ய முடியாத நிலை. இந்த நிலை மாறவேண்டும். ஏமாற்றம் தீரவேண்டும்.

அதே சமயத்தில் இந்த நகரத்தில் வாழ்ந்து பார்த்தவர்களுக்குதான் ஒன்று தெரியும் இந்த நகரில் உள்ள அமைதியான சூழ்நிலை வேறெங்காவது கிடைக்குமா என்றால் இல்லை என்று நிச்சயமாக பதில் வரும். இங்கு நகரை ஆளும் அதிகாரிகள் கூட அரசியல் தலையீடு இல்லாமல் இயல்பாகவும் சுதந்திரமாகவும் பணி செய்யும் நிலை வேறெங்கும் கிடைக்காது என்பதை உணர்ந்துதான் இருப்பர். அரசியல்வாதிகள், மக்கள் பிரதிநிதிகள் கூட அன்போடு மக்களோடு மக்களாகப் பார்க்கப்படும் சூழல் இங்கு மட்டுமே கிடைக்கும். இந்த நகரத்தில் மட்டுமே காவல்துறை உண்மையாகவே மக்களின் தோழர்களாகத்தான் இருப்பர். இந்த நகரத்தில் குண்டர்குழாம் கிடையாது. கூலிப்படை கிடையாது. ஏனைய நகரங்களை விட இந்த நகரத்தில் பெண்களுக்கு சற்று பாதுகாப்பு அதிகம்தான். 

மொத்தத்தில் இந்த நகரத்தில் கிடைக்கும் நிம்மதி வேறெங்காவது கிடைக்குமா என்றால் அதுவும் சந்தேகம்தான். மனித நேயத்தை இங்கு தாராளமாகக் காணலாம். அதனால்தானோ என்னவோ வயதான காலத்தில் ஓய்வுக் காலத்தைக் கழிக்க இங்கு நிறையபேர் வருகிறார்கள்.
ஆனால் ஓய்வுலக நகரம் என்ற பெயரை விசாகப்பட்டின நகரம் தத்தெடுத்தாலும், வந்தாரை, வருவோரை, மிக முக்கியமாக இருப்போரை வாழ வைக்கும் நகரமாக இருப்பதுதான் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நல்லது. அப்படிப் பட்ட நிலையில் வைக்க விசாகப்பட்டினத்தில் தென்கடல் அருகே கோயில் கொண்டுள்ள கனகமகாலக்ஷ்மியும், வடகடற்கரையான பீமிலியில் கோயில் கொண்டுள்ள சிவானந்த மகாலக்ஷ்மியும் அருள் தந்து உதவவேண்டும். நகரத்து உறவுகள் பிரியாமல் இருக்க அவள்தான் அருள்புரிய வேண்டும்.

எனக்கும் விசாகப்பட்டினத்துக்கும் உள்ள உறவில் பிரிவு வராதுதான். ஆனாலும் இன்றைய விசாகப்பட்டின நிலை ’என்ன உறவோ என்ன பிரிவோ’ என்ற கேள்வியை என் மனதில் உண்டாக்கிவிட்டதுதானே..

(படங்கள் மேலே கைலாஷ்கிரி சிவசக்தி, கீழே கனகமகாலக்ஷ்மி)