Follow by Email

Wednesday, September 26, 2012

தேசமென்றால் வெறும் மண்ணல்லடா, அது மனிதம்’


சென்ற ஞாயிறன்று தெலுங்கு இலக்கிய உலகின் பாரதியான குருஜாடா வெங்கட அப்பாராவ் அவர்களின் 150 ஆவது பிறந்த நாள் விழாவில் அவரது சிறுகதை தொகுப்பு ஒன்று குறித்து பேசுவதற்காக அடியேனுக்கு அழைப்பு விடுத்திருந்தார்கள். நல்ல கூட்டம். ஒருநாள் முன்பே கொஞ்சம் ஏற்பாடு செய்துகொண்டும், எதைப் பேசவேண்டும் என திட்டமிட்டுக் கொண்டு சென்றதால் நம் பேச்சுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. தெலுங்கு தினப் பத்திரிகைகளிலெல்லாம் போட்டோவுடன் செய்தி போட்டு தூள் கிளப்பி விட்டார்கள். இந்தச் செய்தியுடன் என் தற்பெருமையையும் நிறுத்திக் கொண்டு பொதுவாக நல்ல சிந்தனையாளர் ஒருவரின் இலக்கியத்தை தமிழர்களும் நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால் இக்கட்டுரையை உங்கள் முன் சமர்க்கின்றேன்.. முதலில் குருஜாடா பற்றி சில விவரங்கள்.

குருஜாடா அப்பாராவ் 1862ஆம் வருடம் இங்குள்ள (ஆந்திராவின் வடகோடி) விஜயநகரத்தின் அருகே ராயவரம் எனும் ஊரில் ஒரு அந்தணக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். இந்தப் பகுதியில் எல்லாம் ஊருக்கு ஊர் ராஜாக்கள் என்றிருந்த காலம் அது. விஜயநகர ராஜாவான பசுபாடி அனந்த கஜபதி ராஜு (இதே பெயரில் இவரது பேரன் இன்று இருக்கிறார்) இவரைப் பிரத்தியேகமாகக் கவனித்து நன்றாகப் படிக்க வைத்தார். F.A. வும் B.A வும் முடித்த இவரை ராஜா தன் பெயரில் உள்ள பள்ளியும் கல்லூரியும் சேர்ந்த கல்விக்கூடத்தில் ஆசிரியராக வேலைக்கு அமர்த்திக் கொண்டதோடு தனது தனிப்பட்ட செயலாளராகவும் பொறுப்பு கொடுத்து ஒரு நல்ல அந்தஸ்த்தினைக் கொடுத்தார். (ராஜா காலமானதும் ராணியின் தனிப்பட்ட செயலாளராக்வும் பொறுப்பேற்றுக் கொண்டார்). குருஜாடா.தனது 30 ஆவது வயதில் அதாவது 1892 ஆம் ஆண்டில் ‘கன்யாசுல்கம்’ என்ற நீண்ட நாடகத்தை எழுதி அதை விஜயநகரத்தில் அந்த வருடமே மேடையேற்றியவர். தெலுங்கு இலக்கிய உலகில் முதல் நாடக இலக்கியத்தைப் படைத்தவர் இவர்தான். கன்யாசுல்கம் என்றால் ’காசு பெற்று கன்னியைக் கொடுப்பது’ என்று பொருள். பெண்கள் விடுதலை என்பதெல்லாம் கனவு என்கிற காலத்தில் எழுதப்பட்ட ஒரு புரட்சிக் கருத்துகள் கொண்ட  இந்த நாடகம், சாதாரண ஆசிரியாராக எம்.ஆர் கல்லூரியில் பணி செய்து கொண்டிருந்த குருஜாடா அப்பாராவ் அவர்களை எங்கேயோ உயரத்தில் தூக்கி வைத்து விட்டது.

இந்த நாடகத்தைத் தொடர்ந்து பல்வேறு கவிதைகள் கதைகள் என எழுதினார் குருஜாடா. ’தேசமண்டே மட்டி காதோயி, தேசமண்டே மனுஷோயி’ - என்ற இவரது கவிதை வரிகள் காலா காலத்துக்கும் தெலுங்கு மக்கள் சொல்லக்கூடிய மந்திரச் சொல்லாக மாறியது.

’தேசம் என்பது வெறும் மண்ணென நினைத்தாயோ,
தேசமென்றால் வெறும் மண்ணல்லடா, அது மனிதம்’


என்ற உன்னதமான வார்த்தையைக் கொடுத்தவர். இவரது நாடகமாகட்டும், கவிதையோ அல்லது கதைகளோ ஆகட்டும் எல்லாமே பேச்சுத் தெலுங்கில் எல்லோருக்கும் புரியக் கூடிய எளிய வகையில் எழுதினார் என்பது முக்கியமான விஷயமாகும். அதுநாள் வரை தெலுங்குப் புத்தகமோ, இலக்கிய எழுத்துக்களோ சாஹித்ய தெலுங்கில் எழுதுவது என்பது கற்றறிந்த தெலுங்கு சான்றோர்களின் பணியாகவே இருந்து வந்தது. அதற்குக் காரணமும் உண்டு..

தெலுங்கு மொழியின் ஆதிகவியாக நன்னய்யா மகாபாரதத்தை தெலுங்கில் பாடியதுதான் தெலுங்கு மொழிக்காக எழுத்துபூர்வ ஆதாரமாக முதல் நூலாகப் பெயரெடுத்துள்ளது. 1052 ஆம் ஆண்டில் வேங்கிராஜபுரத்தில் ராஜராஜ நரேந்திரன் (சோழ சக்கரவர்த்தியான ராஜேந்திர சோழனின் மருமகன், அம்மங்காதேவியின் கணவன்) அரசவையில் இந்த தெலுங்கு நூல் ஆந்திர மாஹாபாரதம் எனும் பெயரால் நன்னய்யாவினால் அரங்கேற்றப்பட்டது.

ராஜராஜநரேந்திரனையும் ஒரு பாட்டின் மூலம் சரித்திரத்தில் நிலையாக இடம் பெற வைத்தவர் நன்னய்யா. அதே போல டிக்கன்னா, யர்ரப்ரகடா, இந்த இருவரும் நன்னய்யா எழுதி ஆரம்பித்த மகாபர்ரத நூலை முழுமையாக தெலுங்கு மொழியில் மாற்றம் செய்தனர். ஏறக்குறைய எல்லா தெலுங்குப் புலவர்களுமே புராண இதிகாசக் கதைகளை தெலுங்கில் எழுதினர். 13ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சுமதிசதகம் (சுமதிநூறு) மட்டும் நம் நாலடியார் போல நீதி சாஸ்திரத்தைப் போதிப்பது. இந்த நூறு பாடலை எழுதியவர் பெத்தன்னா பூபாலுடு என்பவர். ஸ்ரீநாத எனும் பெரும் புலவர் சரித்திரம் மற்றும் புராணங்களைக் கவிதையாகப் படைத்தார். இவர் ஒருவரே தெலுங்கில் கவிச்சக்கரவர்த்தி எனும் பெயர் பெற்றவர். பல்நாட்டி சரித்ரா எனும் சரித்திர நிகழ்வு கூட இவரால் எழுதப்பட்டது என்பர் சிலர். பின்னர் வேமனா (வேமன சதகம்), அன்னமய்யா (வேங்கடவன் கீர்த்தனைகள்) போன்றோர் தெலுங்கு மொழியில் அதிகமான அளவில் கவிதைகள் இயற்றியவர்களாவர்.

ஆனால் தெலுங்கு மொழி மிகப் பிரபலமாக இருந்த காலம் என்பது விஜயநகர சாம்ராஜ்யத்தில் ஸ்ரீகிருஷ்ணதேவராயர் பேரரசராக வீற்றிருந்த காலத்தில்தான். அஷ்டதிக்கஜங்கள் என்று சொல்லப்பட்ட எட்டு மகாகவிகள் (அல்லசானி பெத்தன்னா தலைமைப் புலவர், தெனாலி ராமனும் இவர்களில் ஒருவர்தான்) தெலுங்கு மொழியை மிக உயர்நிலையில் வைத்திருந்தனர். சிருங்காரமும், ஆட்சி இயலும், பக்தியும், புராணங்களும் அதிகம் தெலுங்கில் எழுதப்பட்ட காலமும் இதுதான்.  ஸ்ரீகிருஷ்ணதேவராயர், தான் துளு மொழிக்காரராய் பிறந்தாலும், தன் ஆட்சி மொழி கன்னடமாகவே இருந்தாலும் ‘ஆமுக்த மால்யதா’ எனும் பெயரில் தமிழுக்கான கவிதை மாலையை தானே இயற்றி அரங்கேற்றினார். உண்மையான திராவிடனாக ஸ்ரீ கிருஷ்ணதேவராயர் இருந்தது என்பது இந்த ஒன்றே சாட்சியாகும். கி.பி. 1500 - 1550 ஆண்டுகள் தெலுங்கு மொழியின் பொற்காலம் கூட. குறிப்பாக தூர்ஜதி எழுதிய ஸ்ரீகாளஹஸ்தி சதகம் என்பது நம் திருவாசகத்துக்கிணையாகப் போற்றப்படும் பாடல்கள் ஆகும்.

பின்னர் 1650 இல் எழுதப்பட்ட கோபன்னாவின் ராமதாச கீர்த்தனைகளாகட்டும், திருவையாறு தியாகையா பாடிய ராமநாம கீர்த்தனைகளாகட்டும் போத்தனா எனும் புலவர் நாவுக்கு மிக இனிமையாகவும் பொருள் செறிந்து எழுதிய தெலுங்கு-பாகவதம் ஆகட்டும், தெலுங்குக் கவிதை என்பது சாதாரண மக்கள்: படிக்கும் அளவுக்கு அவ்வளவு எளிதாக இல்லை. மிகவும் கற்றறிந்த சான்றோர் துணை கொண்டே எந்தக் கவிதையும் படித்து பொருள் அறிந்து கொள்ள வேண்டிய நிலை இருந்து வந்தது. திராவிட மொழிக் குடும்பத்தில் இருந்துதான் தெலுங்கு வந்தது என்றாலும் வடமொழி சற்று அளவுக்கதிகமா தெலுங்குக் கவியாக்கத்தில் கலந்து போனது ஒருவிதத்தில் பாலோடு தேன் சேர்ந்ததாக இருந்தாலும், இந்தத் தேனினும் இனிய மொழியை சான்றோர்களால் மட்டுமே மிகவும் ரசித்து சுவைக்கவேண்டியதாயிற்று என்பது உண்மை. அத்துடன் இவையனைத்தும் வடமொழிக் கவிதைக்கான இலக்கண மரபு மாறாமல் எழுதப்பட்டதையும் நோக்கவேண்டும்.

தெலுங்கு மொழி பேசும் நாட்டில் ஆதிகாலத்திலிருந்தே படித்தவர் என்போர் உயர்குலம் என்பதாக சொல்லப்பட்ட நால்வகை வர்ணத்திலேதான் அதிகம் இருந்தது. தெலுங்கு நாடு நல்ல ஆறுகளாலும், மலைவளத்தாலும் சூழப்பட்ட நாடு. வனங்களும், சுரங்கங்களும் அதே சமயத்தில் பாறைகளும் இயற்கையாகவே அதிகம் அமையப்பெற்ற நாடு இது. ஆகையினால் உழைக்கும் வர்க்கத்தினருக்கு எந்நாளும் வேலையும் வேலைக்கேற்ற ஊதியமும், கொண்டாட்டங்களும், திருவிழாக்களும் அதிகம் இருந்ததால் ஏட்டுப்படிப்பறிவு என்பது தேவையான ஒன்று என்பதை அவர்கள் அறியவில்லை என்றே சொல்லலாம். உழைக்கும் வர்க்கத்தினர் அனைவரும் ஆதிக்க வர்க்கத்தினர் பிடியில் இருந்தனர் என இக்கால வழக்கச் சொல்படி ஏற்றுக் கொண்டாலும் இதனால் இவர்கள் துன்பங்களை அனுபவிக்கவில்லை என்பதுதான் உண்மை. இத்தகைய நிலை ஆங்கிலேயர் ஆட்சியைக் கையில் எடுக்கும் வரை நீடித்தது. ஆங்கிலேயர் காலம் முதற்கொண்டுதான் வேலைகளுக்கு வரைமுறை, அடக்குமுறை, அதிக வரி வசூல், சாதிகளுக்கிடையே ஏற்றதாழ்வுகளைப் பயன்படுத்தி அதனால் பயன் அடைவது போன்றவை அதிக அளவில் வெளியே தெரியவந்தன. இந்த ஏற்றதாழ்வுகளும் அதனால் ஏற்படும் துன்பங்களும் ஒரு சிலரை உண்மையாகவே காயப்படுத்தியதால் எவரெவர் துன்பத்துக்கு ஆளானவரோ அவர்களை ஆறுதல்படுத்தும் விதமாக உழைக்க ஆரம்பித்தனர்.

இப்படித்தான் குருஜாடா அப்பாராவின் சமூகப் பணியும் தொடர்ந்தது. இவரது நற்பணிகள் அறியப்பட்டு பிற்காலத்தில் மிகப் பெரிய சமூகசீர்திருத்தவாதி என்றும் அழைக்கப்பட்டார். சமூகத்தில் இழைக்கப்படும் அநியாயங்களை தனக்கே உரிய பாணியில் எகத்தாளமாகவும், சாஸ்திரத்தை சுயநலத்துக்காக பயன்படுத்தி இழைக்கப்படும் அவமானங்களையும், பெண்களுக்கான இழிநிலையையும் எதிர்த்து எழுத ஆரம்பித்தார். இதற்கு அவர் வெளியே உள்ள ஆதிக்க சாதியைச் சாடவில்லை. முதலில் தன் சாதியிலிருந்தே தொடங்கினார்.

(இரண்டாம் பகுதி வரும்)


1 comment: