Thursday, November 4, 2010

November One

நவம்பர் ஒன்று என்பது இது நாள் வரை ஆந்திர தேசத்தில் மிகப் பிரபலமாக இருந்ததுதான். ஆனால் எப்போது தெலுங்கானா கோஷம் வலுப்பெற்றதோ, அந்த நவம்பர் ஒன்று இன்று வலுவிழந்துகொண்டே வருகிறது.

1956 இல் மொழிவாரி மாநிலங்கள் இந்த நவம்பர் ஒன்றாம் நாள்தான் அதிகாரபூர்வமாக செயல்பட ஆரம்பித்தன. தமிழ்நாடு ‘மெட்ராஸ் மாநிலம்’ எனும் பெயரில் மிகப் பெரிய மாநிலமாக உண்மையான திராவிட மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, கொஞ்சம் ஒரியா என ஆறு மொழிகளும் பேசப்படும் திராவிட நிலமாக இருந்து வந்ததைப் பொறுக்காமல், அவரவர்களுக்கு, அவரவர் மொழிகளுக்கு அவரவர் நிலம் தேவை என்று பிரிக்கப்பட்ட நாள்.

1953/56 வரை நம் மாநிலம் உண்மையான திராவிட தேசமாக இருந்து வந்தது எவ்வளவு தூரம் நம் இளைய தலைமுறைக்குத் தெரியும் என்பது கண்டிபிடிப்பது சற்று கஷ்டம்தான். ஒரு கால கட்டத்தில் தெலுங்கும் தமிழும் கோலோச்சி ஒன்றுடன் ஒன்று உராய்ந்து கொண்டு காதல் பாட்டு பாடிக் கொண்டு இன்பமாய் பவனி வந்த நகரம்தான் சென்னை என்பது கூட தெரியுமோ தெரியாதோ.

ஆனாலும் யார் கண் பட்டதோ.. அல்லது தெலுங்கருக்கே தாங்கள் படும் இன்பம் கசந்ததோ என்னவோ, மொழி வாரியாகப் பிரித்துத் தா என்று கோஷம் போட்டு, ஒரு சிலர் உயிர்த்தியாகம் (நம் ஊரில் எல்லாம் உயிர்களின் விலை ரொம்ப சீப்) செய்து, ராஜாஜிக்கு அந்தச் சமயத்தில் எதிராக இருந்த ஸ்ரீமான் நேரு தான் நேராக மூதறிஞருடன் மோதாமல் காமராஜர் மூலமாக மோதி ஒப்புதல் அளித்து, எப்படியோ ஒரு கமிட்டி போட்டு, அந்தக் கமிட்டி மூலம மொழி வாரி மாநிலங்கள் என்று வாங்கியும் விட்டார்கள். ஐம்பத்திநான்கு ஆண்டுகள் ஓடியே விட்டன (கூடவே என் வயதோடு).

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியையோ, விவசாய உற்பத்தி வளர்ச்சியோ இந்த மொழிவாரி மாநிலங்கள் மெட்ராஸ் மாநிலத்திலிருந்து பிரிந்ததனால் எந்த சிறு அளவும் பாதிக்கவில்லை என்பது மிகப் பெரிய உண்மைதான். ஆனால் ஆந்திராவின் நிலைமை அப்படி அல்ல. என்று பிரிந்தார்களோ, அன்றிலிருந்து அவர்களுக்கு சோதனை மேல் சோதனைதான்.

ஆந்திரா நீர்வளமும், நில வளமும், மலை வளமும் கொண்ட பகுதி, இயற்கை அழகு கொஞ்சும் பிரதேசங்கள் இங்கு அதிகம். பொதுவாகவே மக்களில் பலர் அன்புக்கு அடிமை கொள்பவர்கள். இயற்கையை நேசித்து இயற்கையோடு ஒன்றிப் போய் வாழ்பவர்கள்.

ஆந்திராவை மூன்று பகுதிகாளாக எப்போதுமே பார்த்துப் பழகிவிட்டவர்கள் ஆந்திரர்கள். ராயலசீமா என தென் மேற்கு ஆந்திராவையும், கடற்கரையை ஒட்டிய மாவட்டங்களைச் சேர்த்து, கடற்கரை ஆந்திரா எனவும் வடக்குப் பகுதியை தெலுங்கானா என்றும் எப்போதும் பேசி வருபவர்கள், இந்தப் பேச்சு நாளடைவில் இன்னொரு மிகப் பெரிய பிரிவினைக்கு வழி வகுக்கும் எனத் தெரியாமல் காலத்தைக் கழித்து விட்டவர்கள்.

இன்னும் இரண்டு மாதங்கள்தாம். ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி தெலுங்கானாவுக்காக நிச்சயம் சாதகமாகத்தான் பரிந்துரைக்கும்.. எப்போது சிதம்பரனார் சென்ற ஆண்டுக் கடைசியில் தெலுங்கானா வரும், என்று முதலில் அறிவித்து வாபஸ் வாங்கினாரோ, அப்போதே மத்திய அரசு தெலுங்கானாவுக்கு சாதகமாகத்தான் இருக்கிறது என்பதும் தெரிந்த ரகசியம்தான்.

ஆந்திரர்கள் அதாவது கடற்கரை மற்றும் ராயலசீமா மக்கள் மட்டும் எல்லோரும் ஒன்றாய்தான் இருக்கவேண்டும் என்று வெளியே பேசினாலும் பிரிவு உறுதி என்பதில் மட்டும் நிச்சயமாகத்தான் இருக்கிறார்கள். வெளியே அப்படி பிரிவு பற்றிப் பேச வேண்டிய கட்டாயம் நேரும்போது, தெலுங்கானா பிரிந்துபோனால் பிரியட்டும், ஆனால் ஹைதராபாத் நிச்சயமாக எங்களுக்கும் தேவை என்பதிலும் கவனமாக நிர்ப்பந்தித்து வருகிறார்கள்.

மொழிவாரி மாநிலம் என்ற கோஷத்தில் பெறப்பட்ட தேசம் இரண்டாகப் போவது ஏறத்தாழ நிச்சயமாக்கப்பட்டதாகத்தான் எல்லோரும் சொல்கிறார்கள். ஹைதராபாத் விஷயம் கொஞ்சம் சாதகமாக அமையப் பேசித் தீர்த்துக் கொண்டால் இன்னமும் நலம் என்றே இரு தரப்பினரும் நினைக்கிறார்கள். ஆக ஒரே மொழி பேசும் மாநிலம் இரண்டாகப் போகிறது. இது ஒருவிதத்தில் வேதனைக்குரியதுதான். பிரிவு என்ற சொல்லே வேதனைதான்.

பிரிவு என மனதால் முடிவெடுக்கும்போது, வேறு சில பிரச்சினைகளையும் எதிர்கொள்ளவேண்டி இருக்கிறது. இந்த வருடம் நவம்பர் ஒன்றாம் நாளைக் கொண்டாடவே கூடாது என்று தெலுங்கானாக் காரர்கள் நிர்ப்பந்திக்க, ஏனைய ஆந்திரர்கள் இதைப் பற்றி எதிர்த்துப் பேசாமல் இருக்க, அரசாங்கம் மட்டும் ஏனோ தானோ என்று அந்த ஒன்றாம் நாளைக் கொண்டாடியது. ஒரு சில வருடங்களுக்கு முன்னால் நவம்பர் ஒன்று என்றால் இந்த மாநிலமே கலகலக்கும். அரசாங்க விழாவில் ஆளும் தலைவர்கள் ஆடம்பரமாக வார்த்தைகளை அள்ளி வீச ஒரு வாய்ப்பாகக் கருதுவர். இப்போது இவையெல்லாம் மிஸ்ஸிங்.

உத்தமர் காந்தியின் உத்தம சீடர் பொட்டி ஸ்ரீராமுலு. இவர் சொந்த வாழ்க்கை பெரும் சோகக்கதை. குழந்தை பிறந்தவுடனே மனைவி இறந்துவிட்டாள். பிறந்த குழந்தையும் கொஞ்சநாள் வாழ்வை முடித்துக் கொண்டு தாயோடு வானுலகில் சேர்ந்துகொண்டது. ஆனாலும் மனம் தளராதவர் தன் வாழ்க்கையை தேசத்துக்காகவே அர்ப்பணித்து காந்தியுடன் தன்னை சேர்த்துக் கொண்டவர். கொண்ட கொள்கையில் உறுதியானவர். ஒருமுறை காந்தியுடன் 29 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து சாதனை படைத்தவர் இவர். காந்தியே இவரைப் போல பத்து பேர் சேர்ந்தால் சுதந்திரம் எளிதில் கிடைத்துவிடும் என்று புகழ்ந்ததாக ‘டைம்’ பத்திரிகை சொல்கிறது. அப்படிப்பட்டவர் காந்தி இறந்தபின் ஆந்திரம் தனியாகச் செல்லவேண்டும் எனக் கேட்டது ஏன் என்பது புரியாத புதிர். கஷ்டப்பட்டு வாங்கிய சுதந்திரத் திருநாட்டில் இப்படி மொழிவாரி மாநிலங்களாக நாட்டைக் கூறு போட அவர் மறுபடியும் உண்ணாவிரதம் இருந்தது ஏன் என்ற கேள்விக்குப் பதில் இன்றுவரை இல்லைதான். அதுவும் பிடிவாதமாக பிரிந்து போகும் ஆந்திரத்துக்கு சென்னையை தலைநகராக்க வேண்டும் எனக் கேட்டவிதமும் அதற்காக சென்னையில் அவர் ஏறத்தாழ இரண்டு மாதங்கள் உண்ணாவிரதம் இருந்து இன்னுயிரைத் துறந்ததும் சற்று வேதனை தரக்கூடியதுதான்.

பொட்டி ஸ்ரீராமுலு இப்படி தன் உயிரைத் தியாகம் செய்து பெற்ற ஆந்திரத்தில் தற்சமயம் அந்த மகாமனிதருக்கே அவ்வளவு மரியாதைத் தரப்படுவதுமில்லை என்பதும் பெரிய சோகம்தான். ஹைதராபாதில் அவர் சிலைக்கு மாலையிட வேண்டுமென்றால் நிச்சயம் போலிஸ் பெடாலியனோடுதான் போகவேண்டும். மொழிவாரி மாநிலமாகப் பிரிந்திருக்க வேண்டாமோ என்றுதான் சரித்திரம் தெரிந்த பலரும் பேசுகின்றனர்.

இப்போதெல்லாம் இங்கு இருக்கும் பெரிசுகள் கொஞ்சம் வேதாந்தமாக மாறிவிட்டனர். இவர்கள் அந்தக் காலத்திலேயே மெட்ராஸ் மாநிலத்திலேயே எவ்வளவு அந்தஸ்த்தோடு இருந்தனர் என்பதை பட்டியல் போட்டுப் பேச ஆரம்பித்து விட்டனர். மெட்ராஸ் பிரிந்ததால் நஷ்டம் நமக்குத்தான் என்பதையும் அடித்துக் கூற ஆரம்பித்து விட்டனர். தெலுங்கும் தமிழும் கலந்து இருந்தால்தான் என்ன, குடி முழுகியா போய்விடும்.. இப்போதும் சென்னனயிலும் கோவையிலும் தெலுங்குக் காரர்கள் நன்றாக வாழவில்லையா.. அவர்களைப் போல நாமும் இல்லாமல் போய்விட்டோமே.. என்ன பெரிய மொழிவாரி மாநிலம்.. ஹைதராபாதில் இப்போதும் உருதுவுக்குதான் முதல் மரியாதை.. தெலுங்கும் ஹிந்தியும் தெலுங்கானா வட மாவட்டங்களில் கலந்து ஆட்சி செய்யவில்லையா.. எல்லோரும் சேர்ந்து இருக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சியே தனிதான்..

எது எப்படி ஆனாலும் மறுபடியும் தமிழ்நாட்டோடு சேரமுடியாது என்ற நிதர்சமும் இவர்களுக்குத் தெரியும். இருந்தாலும் சில வயது கடந்த பெரிசுகள் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே ‘அந்தக் காலத்திலே..’ என்று ஆரம்பிப்பார்களே, அதைப் போலத்தான் இதுவும் ஒரு அங்கலாய்ப்பாகத்தான் எடுத்துக் கொள்ளவேண்டும்..

தெலுங்கானாப் பிரிவினையாளர்கள் சொல்லித் தந்த பாடத்தால் 60 வருடங்களுக்குப் பிறகுதான் பிரிவினை என்ற ஒன்று எவ்வளவு தவறு என்பதே பலருக்கு உறைக்கிறது. இது பிற்காலத்தவருக்குப் பாடமாக அமையுமா என்பதை காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

அடுத்த வருடம் நவம்பர் ஒன்று என்பதை எப்படி எந்தவிதமாக கொண்டாடப்படும்.. என்பதையும் பொறுத்திருந்து பார்க்கவேண்டும்..

3 comments:

  1. //தெலுங்கானாப் பிரிவினையாளர்கள் சொல்லித் தந்த பாடத்தால்//

    கடைசியில் சொல்லியிருக்கும் இந்தப் பாரா கொஞ்சம் தவறான வரலாற்றுச் சித்திரத்தைத் தருகிறார்போல இருக்கிறதே சார்!

    உண்மையில் தெலங்கானா மக்கள் போராட்டம், வெறும் மொழிவாரி மாகாணப் போராட்டமாக இருந்ததே இல்லை. ஹைதராபாத் நிஜாம் செய்த கொடுமைகளைத் தாங்கிக் கொள்ள முடியாத மக்கள், தங்களுடைய வாழ்வாதாரங்களை ரஜாக்கர்களிடம் பறிகொடுத்த மக்களுடைய ஆவேசமாகத் தான், 1946-1951 களில், கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல தரப்பினரும் சேர்ந்து நடத்திய போராட்டமாக நடந்தது. இப்போது கூட, தெலங்கானா பிரச்சினைக்கு மூல காரணமாக, விசால ஆந்திரா என்று பொய் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றியவர்கள், தெலங்கானா பகுதியில் இருக்கும் இயற்கை வளங்களை அந்தப் பகுதி மக்கள் பயன் படுத்த முடியவில்லை, பலனடையவில்லை, மற்ற பகுதியினர் தான் சுரண்டிக் கொழுத்து வருகிறார்கள் என்ற கசப்பே காரணமாக இருக்கிறது.

    மொழி உணர்வைத் தூண்டி, அதன் பின்னணியில் தங்களுடைய அஜெண்டாவை நிறைவேற்றிக் கொண்டவர்கள், அப்புறம் அதை மறந்து போய்விடுவதும் இயல்பு தானே! இங்கே மொழிவாரி மாகாணங்களாக 1956 இல் உருவானபோது, சென்னை ஆந்திராவுடன் சேரவிருந்ததை உறுதியாக எதிர்த்துப் போராடியவர் திரு ம பொ சிவஞானம் அவர்கள்! மற்றவரை விடுங்கள்!சென்னை மக்களில் இன்றைக்கு அவரை நினைப்பாருண்டா? அதே மாதிரி, நாகர்கோவில், கன்னியாகுமரிப் பகுதிகளைத் தமிழகத்தின் பகுதிகள் தான் என்று கடுமையாகப் போராடி, நடத்திக் கொடுத்தவர் திரு நேசமணி அவர்கள். அவரையாவது தமிழ் நாடு நினைவு வைத்துக் கொண்டிருக்கிறதா?

    நவம்பர் முதல்தேதியை, ஆந்திரா தான் ராஜ்யோச்த்சவ தினமாகக் கொண்டாடி வருகிறது. அடுத்து, கர்நாடகா, ஆனால் து வேறு ஒரு தேதியில் என்று நினைவு. கேரளாவில் இப்படி தனி மாநிலமாக்கப்பட்ட நினைவு தினம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆரம்ப நாள் முதலே, தமிழ் நாட்டில், இப்படி நவம்பர் முதல் தேதியை சென்னை மாகாணம் உருவான தினமாகக் கொண்டாடியதே இல்லை! காரணம், அது அதற்கும் முன்னால் இருந்தே இருந்தது தான்! நவம்பர் முதல் தேதி, 1956 இல் தன்னுடைய பிரதேசங்களில் சில பகுதிகளை மொழிவாரி மாகாணங்கள் அமைந்ததில், மற்ற மாநிலங்களுக்கு விட்டுக் கொடுத்தது தான் நடந்தது.

    மொழிவாரி மாகாணங்கள், ஜனங்களைக் குறுகிய மனோபாவம் உள்ளவர்களாக, தனித் தீவுகளாக ஆக்கி விட்டன என்பது மறுக்க முடியாத உண்மை!

    ReplyDelete
  2. உறவு என்றொரு சொல்லிருந்தால், பிரிவு என்றொரு சொல்லிருக்கும். மனது வருத்தப்பட்டாலும், சகித்துக் கொல்லத்தான் வேண்டும். காலம் அப்படி.

    உன் வலி உன் எழுத்தில் தெரிகிறது. அருமையான உண்மை.

    ReplyDelete
  3. >மொழிவாரி மாகாணங்கள், ஜனங்களைக் குறுகிய மனோபாவம் உள்ளவர்களாக, தனித் தீவுகளாக ஆக்கி விட்டன என்பது மறுக்க முடியாத உண்மை! <

    இதுதான் இந்தக் கட்டுரைக்கு ஆதாரம். மேலும் இந்தக் கட்டுரை ஆந்திரர்களின் கருத்துகள் மேலே உருவாக்கப்பட்ட ஒரு கட்டுரை.

    நான் என் கருத்தை இங்கே திணிக்கவில்லை.

    ReplyDelete