Saturday, November 27, 2010

விசாகேஸ்வரா.. மயில்வேலவனே .. முருகா.. சுப்ரமணியா

முருகன் தமிழ்க்கடவுள் என்பதை சங்ககாலம் முதலே நாம் பெருமையுடன் சொல்லிக் கொண்டு வருகிறோம். செந்திலாண்டவனே குமரிக்கண்டத்தின் கண்கண்ட தெய்வம் என சில ஆய்வாளர்களும் சொல்லி வருகின்றனர். கல்தோன்றி மண்தோன்றா காலத்து முன்தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி என்றால் அது முருகன் என்ற முதன்மையிலிருந்துதான் ஆரம்பமானது என்பதாக பெருமையோடு சொல்லும் முருகபக்தர்கள் அநேகர். தமிழன் எங்கெல்லாம் காடு மலை க்டந்தும் கடல்கடந்தும் சென்றாலும் முருகனை தன் நெஞ்சத்துள் மட்டுமல்லாமல் வெளியேயும் அவனுக்கு கோயில் அமைத்து காலம் காலமாக வழிபடுவது புதிய செய்தியுமல்ல. முருகனே முழுமுதற்கடவுள், அவனே தாயாய், தந்தையாய், மாமனாய், வேறு பல ரூப விகற்பதாய், கூறறியதாய் மாறி மாறி உலகெங்கும் ஆட்சி செய்து வருவதாக அருணகிரிநாதரின் திருப்புகழ் விலாவாரியாக நமக்கு விவரிக்கும். முருகன் என்ற ஒரு சொல்லில் உலகில் அசையும் அசையா அத்தனையுமே அடக்கம் என்பதாக திருப்புகழ் பாடும் பாசுரங்களை எத்தனையோ சித்தர்கள் தமிழில் எழுதி வைத்திருக்கின்றனர். முருகா என்று ஓதுவார்முன் வல்வினையும் வருத்தும் கிரகமும் எதிர்தான் நிற்குமோ என்று நாம் நிதமும் முருகனின் நாமத்தைச் சொல்லிக் கொண்டே வருகிறோம். உலகத்தின் ஓங்காரமந்திரமாக ஓம் எனும் பிரவணத்தைக் கொடுத்து தந்தைக்கே குருவாய் உருமாறி அந்த ஓங்காரமந்திரத்துள் உலகத்தையே அருளாட்சி செய்த முருகனை போற்றாத புராணங்களே இல்லை எனச் சொல்லிவிடலாம். காளிதாசனை மிகவும் கவர்ந்தவள் காளி என்றால் அந்தக் காளியின் புத்திரன் முருகனோ அவனை முழுதும் ஆக்கிரமித்துக் கொண்டதால் அல்லவோ குமாரசம்பவம் எனும் அருமையான காவியம் நம்க்குக் கிடைத்தது.

வடநாடுகளில் குமாரசுவாமி எனவும் ஸ்கந்தன் எனவும் ஷண்முகம் எனவும், கார்த்திகேயன் எனவும் மனதார பக்தர்களால் ஓதப்படும் முருகனை நாம் முருகா என்று ஓதும்போது கிடைக்கும் இன்பமே தனிதான். முருகநாமம் நம் தமிழருக்கு என்றுமே ஆனந்தம் தரக்கூடியதுதான். நாம் முருகா என்று சொல்லிவிட்டு மனதில் அவனை ஒரு கணம் நினைத்து அதையும் உள்ளுக்குள் உணரும் தருணம் ஏற்படும்போது கிடைக்கும் திருப்திக்கு ஈடு இணை ஏது,,

அப்படிப்பட்ட முருகனை இந்த ஆந்திரதேசமும் நிச்சயமாக கவர்ந்திருக்கவேண்டும்தான். குன்று இருக்குமிடமெல்லாம் குமரன் இருக்குமிடமாக ஏ.பி.என் திருவிளையாடல் திரைப்படத்தில் அவ்வையார் மூலம் சொல்லுவார். விஜயவாடா இந்திரகிலாத்திரி மலையில்தான் தனிக்கோயில் கொண்ட முருகனை அடியேன் முதன் முதலாக சந்தித்தேன்.. (1978) என் மகிழ்ச்சியில் அவனைத் தமிழ்க்கடலாக பார்த்ததால் அந்தக் கோயில் மலைப்பாறையில் ‘அருள்மிகு வள்ளி தெய்வயானை ஸமேத சுப்பிரமணிய ஸ்வாமி தேவஸ்தானம்’ என வெள்ளைப் பெயிண்டால் தமிழில் எழுதவைத்தது. அதனால் எழுந்த சில பரபரப்புகள் அதன் பிறகு நடந்த கோலத்தையும், தகராறுகளையும் ஏற்கனவே ஒரு பதிவில் (வம்சதாராவில்) எழுதி இருக்கிறேன். முருகன் அவன் திருவுருவைப் பார்க்கும்போதே உள்ளம் சிலிர்சிலிர்க்கும். அவன் அப்படித்தான். அதுவும் உரிமையோடு அவனை சொந்தம் கொண்டாடுவோரை அவன் எப்போதும் கைவிடுவதே இல்லை என்பதை அங்கு நேரிலேயே அனுபவித்தேன்.

ஆனால் முருகனின் ஆந்திரதேசத்து வரலாறு மிக மிகப் பழையானது. ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கும் முன்பே கட்டப்பட்ட பஞ்சாராமம் (வேங்கியில் ஐந்து இடங்களில் சிவனுக்காக எடுக்கப்பட்ட கற்கோயில்) திருக்கோயில்களில் முருகனுக்கு சிறப்பிடம் உண்டு. சாமல்கோட் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள சிவஸ்தலம் குமாரராமம் திருக்கோயில் என்றே இன்னமும் அழைக்கப்படுவது மிகவும் விசேஷன். ஏனைய நான்கு திருக்கோயில்களில் குமரனுக்கு தனி சந்நிதி உண்டு. இவை கட்டி முடிக்கப்பட்டு 250 ஆண்டுகள் கழித்து முதல் கலிங்கப் போரில் கலந்துகொண்ட விக்கிரம சோழன் 1100 ஆம் ஆண்டில் ஆந்திராவின் கீழைக்கோடியில் உள்ள ஸ்ரீமுகலிங்கம் திருக்கோயிலில் ஒரு சந்நிதி புதிதாக சேர்க்கவைத்து அங்கு முருகனை பிரதிஷ்டை செய்வித்ததாக ஒட்டக்கூத்தர் பாடல் மூலம் தெரியவரும். அந்த முருகன் கையில் ஒரு கொம்புடன் ஔவைக்கு தரிசனம் தந்தவிதமான கோலத்துடன் (சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டு தமிழ் மூதாட்டியை ஒரு கலக்கு கலக்கிய அந்த சுட்டிப் பையன் போலவே) இருக்கிறான். மேகங்கள் மேலே மூடிக்கொண்டிருக்கும் ஒரு அழகான பகல் பொழுதில் சின்ன சின்ன மழைத்துளிகள் மேலே பட பட அதை அப்படியே தலைமேல ஆனந்தமாக வாங்கிகொண்டே அந்த அழகனை அப்படியே மனதுக்குள்ளே படம் பிடித்துக்கொண்டதை மறக்கமுடியாதுதான்.

இரண்டாம் கலிங்கப்போர் இந்தப் பிராந்தியத்தில் மிகக் கடுமையாக நிகழ்ந்ததை நம் தீந்தமிழ் கலிங்கத்துப் பரணி ஒன்றே பறை சாட்டினாலும் அந்தப் படையை வெற்றிகரமாக முடித்து விட்டு குலோத்துங்க அரசன் கட்டளையின் பேரில் இன்றைய விசாகப்பட்டினத்துப் பிராந்தியத்தே கடலருகே முருகனுக்கு ஒரு கோயில் எடுப்பித்ததாகவும், விசாகை நட்சிரத்துக்கு உரியவனான முருகனுக்கு விசாகேஸ்வரன் என நாமமிட்டதாகவும் எத்தனையோ செய்திகள் இந்த பிராந்தியத்தில் உள்ளன.

இங்குள்ள கடலோரப்பகுதிகள் சற்று விசித்திரமானவை. கடல் அரிப்புகள் ஒருகாலத்தில் மிக அதிகமான அளவில் நிலத்தை அழித்து ஊருக்குள் நீர் புகுந்துகொண்டிருக்கவேண்டும் என்பதை இங்குள்ள நில அமைப்பைக் கொண்டே எத்தனையோ அறிஞர்கள் கட்டுரை வடித்துள்ளனர். காலவட்டத்தில் 900 ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பப்பட்ட அப்போதைய கடலோரக் கோயில், முருகனுக்காக தமிழரசனால் எழுப்பப்பட்ட கற்கோயில் கடல் கொண்டிருக்க வாய்ப்புகள் அதிகம் என்று திரு நரசய்யா போன்ற கடல்சார்அறிஞர்கள் கூட கூறி வருகிறார்கள். ஆந்திர பல்கலைக்கழகத்தில் இந்தக் கடல்சார் கழகத்தில் ஒரு பேராசிரியர் கங்காதர் என்று பெயர், அவருக்கு நிச்சயமான நம்பிக்கை, இந்த விசாகேஸ்வரர் கோயில் கடல் கொண்ட கோயில்தான், எப்படியும் மீட்டு விடுவோம் என்று அவ்வப்போது சபைகளில் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் பேசிவருபவர். திரு கங்காதரரின் முயற்சியால் இந்திய கடற்படையில் நீரில் மூழ்கி தேடும் பயிற்சி பெற்ற வீரர்களைக் கொண்டு ஒரு சில வாரங்கள் கூட இந்தத் தேடல் முயற்சி செய்யப்பட்டது.

கப்பற்படையைச் சேர்ந்த கமாண்டர் சுரேஷ்குமார் மிகச் சிறந்த ஆழ்கடல் வீரர். தமிழர். அவர் இந்தக் குழுவில் மிக ஆர்வத்துடன் பங்கு கொண்டவர். அதுவும் நம் தமிழ்க்கடவுள் முருகன் அவன் கோயிலுக்காக தேடுகிறோம் என்பதில் அவருக்கு படு உற்சாகமாம். சமீபத்தில் சுரேஷ் குமாரை எதேச்சையாகப் பார்த்துப் பேசியபோதுதான் அவரும் கலந்துகொண்டது எனக்குத் தெரியவந்தது. ஆனால் ’இலக்கு’ இல்லாமல் தேடியதால் முயற்சி வீணானது சார்.. என்றார்.

ஆனாலும் விசாகப்பட்டினம் எனும் தமிழ்ப்பெயரைக் கொண்ட இந்த நகரில் நிச்சயமாக விசாகேஸ்வரனின் கோயில் இருந்ததுதான் காரணப்பெயர் என்கின்றனர் நகரத்துப் பெரிசுகள்.
என்றாலும் ஒருநாள் விசாகேஸ்வரன் நிச்சயம் நம் மீது கருணை காட்டி தன்னை வெளிப்படுத்திக் கொள்வான் என்று நம்புபவர்களும் நிறைய உண்டு.

அந்த விசாகேஸ்வரன் வராவிட்டால் என்ன, இல்லை அவன் இங்கு நகரத்துக்கு வரும் வரை என்னைப் பாருங்கள் என்று இன்னொரு முருகன் இங்கே நகர மக்கள் எல்லோரையும் கவர்ந்து வருகிறான். சங்கரமடம் அமைந்த வளாகத்தில் தனியே தனக்கென ஒரு கோயில் அமைத்துக் கொண்டு மயில் வாகனனாகக் காட்சி தருபவன். ம்யிலோடும் வேலும் சேரும்போது அவனுடைய காட்சி கண்களுக்கும் மனதுக்கும் மிக இனிமையாக இருப்பதால் அவனுக்கு ‘மயில்வேலவன்’ எனப் பெயர் சூட்டி அந்தப் பெயரிலேயே அவனைப் பூசை செய்து வருகிறேன். மயில் வேலவன் இப்போதெல்லாம் படு பிஸி. மக்களிடையே பிரச்னைகள் ஏராளம்.. நாளுக்கு நாள் பெருகிவரும் கஷ்டங்கள் பக்தருக்கு தீராச் சோதனையாக மாறிவரும் காலத்தில் தம் கஷ்டத்தைப் போக்க இவனைத் தவிர வேறு யார் என்ற அளவில் அவனைத் தேடி வரும் பக்தர்கள் மிக அதிகமாகி விட்டார்கள். செவ்வாய் நாயகனான மயில்வேலவனுக்கு செவ்வாய்க் கிழமைதோறும் நடக்கும் அபிஷேகங்கள் முன்னூறைத் தாண்டிவிடுகின்றன. அப்படியும் எனக்கும் அவனுக்கும் உள்ள உறவே தனி.. ’உன்னையன்றி எனக்கு யார் முருகா’ என்று ’சோப்’ போட்டுக் கொண்டே போவதால் ஒருவேளை அவன் மயங்கி விட்டதைப் போல காட்சி தந்தாலும் எனக்கும் அவனுக்கும் உள்ள உள்ளார்ந்த இணைப்பை வர்ணிக்க முடியாதுதான். அவனுக்கு நிகர் அவன் ஒருவனேதான் அல்லவோ.. நாம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்,, அதுவும் அருணையார் சொல்லித் தந்ததுதான். எப்போதும் எந்தச் சமயத்திலும் அவன் நாமம எம் நாவில் உணர்வோடு இருக்க அவன் அருள் புரிய வேண்டும்.

முருகன் குமரன் குகனென்று மொழிந்
துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய்

19 comments:

  1. ஆழமாகப் படிக்கவேண்டும். பிறகு கமென்ட் போடுகிறேன்.

    ReplyDelete
  2. திவாகரை காணவேண்டுமானால் எங்கும் செல்ல வேண்டாம், செவ்வாய் மாலை சங்கரமடம் முருகன் சந்நிதானம் சென்றால் போதும் என்று தெரியும். ஆனால் அதில் இவ்வளவு உள்ளதா? அடுத்த வாரம் விஜயவாடா செல்கிறேன். அப்படியே முடிந்தால் சாமல்கோட் பார்க்கிறேன்.

    நன்றி நண்பா.

    ReplyDelete
  3. நமஸ்தே திவாகர்ஜி.
    விசாகபட்டிணத்தின் குமரக் கடவுள் விசாகேஸ்வரன் பற்றிய தங்கள் பதிவு அற்புதம். நன்றி.
    நான் சாமல் கோட் பக்கத்தில் இருக்கும் குமாரராமம் கோவிலுக்குச் சென்று தரிசித்திருக்கிறேன். அதே போல அமராவதிக்கும் சென்று தரிசித்த மகிழ்ச்சி எனக்கு உண்டு.

    பஞ்ச ஆராமக் கோவில்களைப் பற்றிய ஒரு தனிப் பதிவு (எங்கிருக்கிறது, எப்படிச் செல்ல வேண்டும், மற்றும் ஸ்தலபுராணம், படங்கள் போன்ற எல்லா விவரங்களுடன்) தாங்கள் வெளியிட்டால் நன்றாக இருக்கும். நம்பிக்கை குழுமம் தொடங்கி, இரத்தினமாலை குழுமம் வரை எனது மேல் கண்ட கோரிக்கையை திவாகர்ஜி கண்டுகொள்ளவில்லை. :(
    விரைவில் குமரன் அருளால் என் தேவை பூர்த்தி ஆகும் என்று நம்புகிறேன்.
    --
    'அன்பே சிவம்' அஷ்வின்ஜி
    ---------------------------------------------------
    பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?
    ----------------------------------------------------
    வேதாந்த வைபவம் - www.vedantavaibhavam.blogspot.com
    வாழி நலம் சூழ - www.frutarians.blogspot.com

    ReplyDelete
  4. அரியது கேட்கும் எரிதவழ் வேலோய்
    அரிது அரிது, ஆந்திராவில் முருகன் கோயில் அரிது...என்பதை மாற்ற எண்ணி விட்டான் போலும் மயிலான் ஒயிலான்! :)

    விசாகத்தான்-விசாகப் பட்டினம் படிக்க இனிமை!
    வெறுமனே பெயர்த் தொடர்பாக இல்லாமல், முறையான ஆய்வுகள் மேற்கொண்டு படிப்பது, இன்னும் இனிமை!

    ReplyDelete
  5. மிக்க நன்றி டாக்டர் கந்தசுவாமி அவர்களுக்கு.. கந்தன் கருணை கிட்டட்டும்.

    ReplyDelete
  6. மனோ,
    முதலில் நம்ம முருகனை வந்து பார்க்கவும்.

    ReplyDelete
  7. அஸ்வின் ஜி! பதில் குழுமத்துக்கு அனுப்பப்பட்டது.

    ReplyDelete
  8. KRS,
    முருக பக்தரே!
    நன்றி..

    ReplyDelete
  9. >>குன்று இருக்குமிடமெல்லாம் குமரன் இருக்குமிடமாக ஏ.பி.என் திருவிளையாடல் திரைப்படத்தில் அவ்வையார் மூலம் சொல்லுவார்.<<
    Thiru Ganesh! I have taken your note that
    குன்று இருக்குமிடமெல்லாம் குமரன் இருக்குமிடமாக ஏ.பி.என் திருவிளையாடல் திரைப்படத்தில் நடிகை சாவித்திரி மூலம் சொல்லுவார்.
    நன்றி!

    ReplyDelete
  10. திரு நரசய்யா அவர்கள் குழுமத்தில் இட்டுள்ளதை இங்கே அவர் அனுமதி கேட்காமல் (!) வெளியிடுகிறேன்.
    --------------------------------------------
    சில நூற்றாண்டுகளுக்கு இவ்வூரின் பெயர் குலோத்துங்க சோழ பட்டினம் என்றும் இருந்துள்ளது. பின்னரே விசாகபட்டினம் ஆயிற்று.

    கங்காதர் இக்கோயிலைப் பற்றி ஆய்வு செய்துள்ளார். நான் விசாகை சேர்ந்தபுதிதில் கடலில் நீந்த ஞாயிற்றுக்கிழமைகளில் லாசன்ஸ் பே செல்வேன் அது 1965 ஆம் வருடம். அப்போது எமது தாயார் அங்கு வந்திருந்தார். எமது தந்தை விசாகையில் 1930 லிருந்து 33 வரை இருந்துள்ளார். அப்போது அவர்கள் முசலகண்டவாரு வீத்யில் குடியிருந்தனர்.

    தாயார் சொன்னது:
    “ஒரு நாள் அப்போதே புதிதாக அங்கு வந்திருந்த தவ்வாட (டிரெட்ஜர்) தோண்ட ஆரம்பித்தபோது இப்போது இருக்கும் வெளி ஹார்பர் பகுதியில் அந்த கப்பல் ஒரு விக்கிரஹத்தைக் கண்டெடுத்தது அது ஒரு கிருஷ்ண விக்ரஹம். (அது இப்போது ஜெனெரல் ஆஸ்பத்திரி அருகில் உள்ள சிறு குன்றில் உள்ளது. நானே பார்த்துள்ளேன்) அது விசாகேஸ்வரர் ஆலயத்திலிருந்து வந்தது என்றார்கள்”

    விசாகை போர்ட் தொடங்கப்பட்டது 1933 ஆம் வருடம்

    நான் கேட்ட போது சில பெரியோர்கள் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப்த்தில், அக்கோயிலின் கோபுரம் வெளியில் தெரிந்து கொண்டிருந்ததாகக் கூறினர்.

    எஸ் ஆர் ராவ் அவர்களை நான் சந்தித்த போது இன்னும் சரியாக ஆய்வு செய்யவில்லை என்றார்.

    ஐ. என் எஸ் தர்ஷக் என்ற கப்பல் பற்றி திவாகர் கேட்டால் தெரியலாம்.
    திவாகர் விடாமல் முய்ற்சிக்கவும்.

    சுந்தரம் நூலில் கூட குறிப்பிட்டுள்ளார் என் நினைக்கிறேன் நிச்சயமாகத் தெரியாது.

    நரசய்யா

    ReplyDelete
  11. //மயில் வேலவன் இப்போதெல்லாம் படு பிஸி. மக்களிடையே பிரச்னைகள் ஏராளம்.. நாளுக்கு நாள் பெருகிவரும் கஷ்டங்கள் பக்தருக்கு தீராச் சோதனையாக மாறிவரும் காலத்தில் தம் கஷ்டத்தைப் போக்க இவனைத் தவிர வேறு யார் என்ற அளவில் அவனைத் தேடி வரும் பக்தர்கள் மிக அதிகமாகி விட்டார்கள்.//

    “கங்கையில் படிந்திட்டாலும் கடவுளைப் பூசித்தாலும்
    சங்கையில் வந்தஞான சாத்திரம் உணர்ந்திட்டாலும்
    மங்குபோல் கோடிதானம் வள்ளலாய் வழங்கிட்டாலும்
    பொங்குறு புலால் புசிப்போன் போய் நரகு(அ)டைவன் அன்றே!”

    கங்கையிலே காவிரியில் நூறுமுறை மூழ்கி
    கணக்கற்ற திருக்கோயில் கால்தேற சுற்றி
    வெங்கொடிய பலநோன்பு ஏற்றுடலை வருத்தி
    வேதங்கள் கூறுகின்ற யாகமெல்லாம் செய்து
    பங்கமிலா வேதியர்கை பணம்அள்ளி தந்து
    பசுவதனைப் பூசித்து அதன் கழிவை உண்டு
    தங்களுயிர் மோட்சத்தை அடைவதற்கே முயலும்
    தயவில்லார் சத்தியமாய் முக்தியதை யடையார்.
    -திருவருட்பா (இறவா நிலை)-


    தான் செய்த பாவங்கள் நீங்குவதற்காக கங்கை, காவிரி இன்னும் அநேக புனித
    தீர்த்தங்களில் நீராடினால் பாவம் தீரும் என்று நினைப்பவர்கள் உண்டு.
    பெருமைக்குரிய கோவில்களுக்கு பாதயாத்திரை சென்று வழிபாடு செய்துவந்தால்
    இறையருள் பெருகும் என்று நினைப்பவர்களும் உண்டு. மேலும் விரத அனுஷ்டானம்
    கடைபிடித்து பட்டினி கிடந்து உடம்பை வருத்தி இறையருள் பெறலாம் என்று
    நினைப்பவர்களும் உண்டு. மேலும் அநேக வேதங்களில் சொல்லப்பட்ட வேள்விகள்
    செய்து அதன்மூலம் கடவுளின் ஆசி பெறலாம் என்று நினைப்பவர்களும் உண்டு.
    இன்னும் சிலர் அந்தணர்களாகிய வேதியர்களுக்கு அவர் விரும்புகின்ற
    அனைத்தும் அள்ளித்தந்து இறையருள் பெறலாம் என்று நினைப்பவர்களும் உண்டு.
    மேலும் பசுவை பூஜித்தும் அதனுடைய கழிவைப் பருகி இறையருள் பெறலாம் என்று
    நினைப்பவர்களும் உண்டு. மேலே சொல்லப்பட்ட அத்தனை கருத்துக்களையும்
    பின்பற்றி நடந்தபோதிலும், பசித்த ஏழைகளுக்கு பசியாற்றி வைக்கவேண்டும்
    என்ற எண்ணம் இல்லாவிட்டால் எந்த வகையிலும் ஆன்மலாபம் பெறமுடியாது என்பது
    அருட்பெருஞ்சோதி ஆண்டவராகிய ஆசான் இராமலிங்கசுவாமிகளின் உபதேசமாகும்.

    ReplyDelete
  12. உன்னையன்றி எனக்கு யார் முருகா!!!

    ReplyDelete
  13. திரு சிவ அறிவொளியான் - உங்கள் நீஈஈண்ட கடிதம் எடுத்துக் கொண்ட தலைப்பை விடுத்து எங்கோ சென்று கொண்டிருக்கிறது. மக்கள் சாதாரணமானவர்கள். கஷ்டத்தில் உழலும்போது அவர்களுக்கு முருகன் (அல்லது எந்த பெயரில் வேண்டுமானாலும்) அருள் பெறவேணுமெனும் உந்துதலில் நம்பிக்கையோடு வருகிறார்கள் என்பதுதான் இங்கு குறிப்பு.

    நீங்கள் வேறு எங்கேயோ போய்விட்டீர்கள். எனினும் தங்கள் மடலுக்கு நன்றி!

    ReplyDelete
  14. விஜய்..
    அது சோப்பிங் கமெண்ட்..lol

    ReplyDelete
  15. sankaramatam muruganukku neengal kodutha build up konjam adhihamo?. aanan onru, ungalal than apappa nanum anda muruganai dharisikkinderen.

    Nandri nanbare.

    Gowtham

    ReplyDelete
  16. என்ன கௌதம் இப்படி சொல்லிட்டிங்க.. சரி, பரவாயில்லே.. நம்ம ஆள் இதெல்லாம் கண்டுக்கமாட்டார்.. ஒருதடவை செவ்வாய் கிழமை மத்தியானம் 2 மணிக்கு அந்த ரோட்டிலே போய்ப் பாருங்க.. ம்ம்.. முருகபக்தர்களையும் முண்டியடித்துக் கொண்டுதான் முருகனை அங்கு பார்க்கமுடியும்..

    ReplyDelete
  17. நாள் என் செயும், வினைதான் என் செயும்
    எனை நாடி வந்த கோள் என் செயும்
    கொடும் கூற்று என் செயும்
    தோலும் சிலம்பும் தண்டையும் என் கண்முன்னே தோன்றிடினே....

    விசாகேஸனைப் பற்றிய தகவல்கள் மிகவும் அருமை...

    ReplyDelete
  18. சதீஷ் சொல்வதுதான் சரி..

    ReplyDelete