Tuesday, October 6, 2009

தமிழை வாழ்த்தும் தெலுங்கு

தமிழுக்கோர் பூமாலை ஆமுக்தமால்யதா



நான் முன்பு கங்கர்களைப் போரில் வெல்வதற்காக அவர்கள் மீது படையெடுத்துச் சென்ற காலத்தில் விஜயவாடா அருகில் சிலவாரங்கள் பாசறை அமைத்தேன். அங்கே உள்ள பெருமாள் கோவிலில் (திவி சீமாவில் உள்ள ஸ்ரீகாகுளம்) ஏகாதசி விரதம் இருந்து அன்றிரவு அங்கேயே உறங்கினேன். அடுத்தநாள் அதிகாலை துவாதசி வரும்போது திடீரென எனக்கு ஒரு அரிய காட்சி கிடைத்தது. ஆஹா.. எப்படி வர்ணிப்பேன் அந்த அதிசய காட்சியை..

நிறமோ, மழையை மடிமீது சுமந்துவரும் மேகங்களை நினைவூட்டுகிறது.. அந்தக் கண்கள்.. ஆகா.. உயர்ந்தவகைத் தாமரை மலர்கள் விரிந்த போது மேலும் செம்மையாகுமே.. அந்தப் பூக்களையும் விட அழகான சிவந்த கண்கள்.. கருடனின் தங்கநிறமான சிறகை விட ஒளி எங்கும் பரவ, மார்பில் கௌஸ்தூப மணி காலைச் சூரியனைப் போல சுடர் விட, பெருமாள் காட்சி அளித்தார். அருகேயே அகலாமல் உள்ள மகாலக்குமி தன் ஒரு கையில் விரிந்த கமலத்தைக் காட்ட, மறு கையால் ஆசியளிக்க, அந்த அற்புதக் காட்சியை எப்படி விவரிப்பேன்.. ஆஹா! இதோ பெருமாளே பேசுகிறாரே..

‘நான் ஆந்திர விஷ்ணு.. நீ வடமொழியில் பல நூல்கள் புனைந்துள்ளாய்.. எனக்காக நீ தெலுங்கு மொழியில் ஒரு நூல் எழுதவேண்டும்.. தேச பாஷைகளில் தெலுங்கு உயரிய பாஷை.. எனக்கு ஒருசமயம் மதுராவில் (வடமதுரை) அளிக்கப்பட்ட மாலையில் அவ்வளவாக மகிழ்ச்சி இல்லை. ஆனால் வில்லிபுத்தூரில் கோதை தன் மாலையை அணிவித்தாளே, அவள் மாலையுடன் ரங்கநாதனைக் கலந்ததைப் பற்றி எழுதி என்னை நீ மகிழ்விக்க வேண்டும். மேலும் அந்த மாலையை திருவேங்கடவன் முன்பு நீ சமர்ப்பிப்பாயாக”


ஸ்ரீகிருஷ்ணதேவராயரின் சொந்த வாக்கியங்கள்தான் மேலே கண்டவை. தெலுங்கு மொழியில் முதல் முதலாய் ஒரு முழு காவியமாக படைக்கப்பட்ட ‘ஆமுக்தமால்யதா’ எனும் காவியம்தான் பெருமாள் மேலே கேட்டுக் கொண்டதற்கிணங்க ஸ்ரீகிருஷ்ண தேவ ராயரால் எழுதப்பட்டதாகும். அந்தக் காவியத்திலேயே குறிக்கப்பட்ட வார்த்தைகள்தான் இவை.

ஆமுக்தமால்யதா, (அந்த சிறப்பான (ஆணிமுத்ய) மாலை) தமிழின் தெய்வீகத் தேவதையும், சூடிக் கொடுத்த சுடர்க்கொடியுமான கோதை நாச்சியாரைப் பற்றியும் அவள் தந்தை பெரியாழ்வாரின் பக்தியைப் பற்றியும் பொதுவாகப் பேசும் காவியம் என்றாலும், இதைக் காவியமாக வடித்த கிருஷ்ணதேவராயன், தம் காலத்தே உள்ள அரசாங்க நிலையையும், ஒரு அரசன் என்பவன் எப்படி தருமத்தின் துணைகொண்டு எப்படியெல்லாம் அரசாளவேண்டும் என்பதையும் எழுதியுள்ளான். காவியம் முழுவதும் ஆன்மீகத்தின் ஒளி பரவி உள்ள ஒரு அற்புத படைப்பு இது.

முதலில் ஒன்றைச் சொல்லிவிடவேண்டும். சரியாக ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு (கி.பி.1509) அரச பீடம் ஏறிய இந்த துளுவ கிருஷ்ணதேவராயன் ‘திராவிடன்’ எனும் சொல்லுக்கு முழு உரிமையும் கொண்டவன். இவன் ஒருவனே சரியான தென்னிந்தியன் என்று சற்று இந்தக் காலகட்டத்திற்கேற்றவாறு கூட சொல்லலாம். பாருங்கள். இவன் பிறப்பால் துளுவன்.. (மங்களூர் அருகே பிறந்ததாகச் சொல்வார்கள்). ஆட்சி செய்யும் இடமோ, அதாவது தலைநகரம் அமைந்த இடமோ கன்னடம் செழித்தோங்கும் விஜயநகரம். இவன் படைத்த காவியமோ தெலுங்கு மொழியில், காவியத்தின் நாயகியோ தமிழன்னையின் தவப்புதல்வியான ஆண்டாள். திராவிடத்தின் மொத்த உருவத்தையும் தன்னகத்தேக் கொண்ட ஒரு உன்னதத் தலைவன் ஸ்ரீகிருஷ்ண தேவராயன். வடமொழியில் வல்லவனான கிருஷ்ணதேவராயனுக்கு தென் மொழியான தமிழ் மிக நல்ல பரிச்சயம். அதுவும் வைணவத்தை ஆராதிப்பவனான அரசன் தமிழ்ப் பாமாலைகளான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தினைக் கரைத்துக் குடித்தவன் என்றே சொல்லலாம். இதற்கு உதாரணம் அவனே எழுதிய வரிகளைப் படியுங்கள்!

பன்னிரு சூரியர்கள் பிரபஞ்சம் முழுதும்
நடுவிலே நாராயணன் பரிபாலிக்க
ஏன் இந்த வெப்பம் என உணர்ந்தவன்
வெப்பம் தணியவே தனிவழி தேடி
பன்னிரு ஆழ்வாரின் நெஞ்சத்துக் குளிர்ச்சியிலே
தஞ்சம் புகுந்தானோ..அந்தக் குளிர்ச்சியிலே
உறைந்து மணத்திலே மனதைக் கொடுத்த
அந்த அமரர்களின் அதிபதிக்குத் தலை வணங்குவோம்


பன்னிரெண்டு சூரியர்களின் சூட்டைத் தாங்கமுடியாமல் தம்மிலேயே ஆழ்ந்திருக்கும் பன்னிரெண்டு ஆழ்வார்களின் நெஞ்சக்குளிர்ச்சியில் தன்னைப் புதைத்துக் கொண்டானாம்.. ஒரு சில வரிகளில் ஆழ்வார்களை ஸ்ரீகிருஷ்ணதேவராயன் எவ்வளவு பெருமைப் படுத்திவிட்டான்..

ஆண்டாள் அரசனை மிகவும் கவர்ந்தவள் என்றே சொல்லவேண்டும். இவன் காவியத்தில் ஆண்டாளைப் போற்றிப் பாடினாலும், நாச்சியார் திருமொழி வாக்கியங்களை மற்ற காவியப் பொருள்களிலும் தாராளமாக கையாள்கிறான் அரசன். அதுவும் திருவேங்கடவனின் சங்கினைப் போற்றும் பாடலில், ‘கற்பூரம் நாறுமோ, கமலப் பூ நாறுமோ, திருப்பவளச் செவ்வாய்தான் தித்திருக்குமோ’ என ஆண்டாள், கண்ணனின் வாய் எச்சிலின் மகிமையைப் பற்றி சங்கினைக் கேட்பாளே, அதே கேள்விகளை போற்றுதல்களாக மாற்றி ஸ்ரீகிருஷ்ணதேவராயன் தெலுங்கில் வடித்திருப்பது மிகவும் போற்றுதலுக்குரியதுதான். அதே சமயம் ஆண்டாளின் தமிழ் இவனை எப்படியெல்லாம் பாதித்திருக்கிறது என்பதையும் நாம் பார்க்கவேண்டும்.

இதோ நாரணன் சங்கை ஊதிவிட்டான்
ஆஹா.. கீதமா சங்கீதமா
நறுமணம் என்றால் இதுதானோ
நல்ல தேனினை உண்டு கொண்டிருந்த
தேனீக்களே.. ஏன் திடீரென அங்கு ஓடுகிறீர்கள்
ஓ, புரிந்து விட்டது.. இந்த நல்ல கமலங்களில்
கிடைக்கும் நறுமணத்தைவிட, இனிய தேனை விட
விட நறுமணம் வீசும் நாரணன் எச்சில்
அந்த சங்கூதலால் கிடைத்துவிட்டதா..


சங்காரைப் பற்றியே இப்படி முப்பது பாடல்கள் காவியத்தில் உள்ளன. இந்தப் பாமாலைகளைப் போலவே தன்னுடைய காவியம் முழுவதும் ஆண்டாளின் தமிழ்த் தாக்கம் அதிகமாகவே தெரியும்வகையில் படைத்திருக்கிறான் அரசன். பொதுவாகவே அரசர்கள் என்போர் கவி புனைவது என்பது ஒத்து வராத விஷயம். அரசர்கள் சபையில் ஆன்றோர் பலர் இருப்ப, அந்த ஆன்றோர்களும் சான்றோர்களும் படைக்கும் காவியங்களை மிகவும் ரசித்து அந்தப் புலவர்களைக் கௌரவிப்பதே அரசன் கடமை என சரித்திரத்தில் நிறைய படித்திருக்கிறோம். மகேந்திரபல்லவன் நாடகங்கள் படைத்திருக்கிறான். அவனுக்குப் பிறகு ஒரு சில அரசர்கள் கவிதை உலகத்துக்கு பங்கு அளித்தார்கள்தான் என்றாலும், ஸ்ரீகிருஷ்ணதேவராயனின் இலக்கிய பங்கு என்பது வியப்புக்குரியதுதான்.

ஏனெனில் கிருஷ்ணதேவராயனின் அவையிலேயே அஷ்ட திக்கஜங்கள் என்று பெருமை பெற்ற எட்டு பேர் கொண்ட ஒரு பெரிய புலவர் படையே இருந்தது. அல்லசாணி பெத்தண்ணா என்ற புகழ்பெற்ற தெலுங்குப் புலவர் சபைக்குத் தலைவர் போல இருந்தவர். கன்னட மொழிப் புலவர்கள் பலர் இருந்தனர். ஆனால் தமிழுக்கு என்று பெயர் சொல்லக்கூடிய புலவர் ஒருவரும் அவனுடைய சபையில் அந்தக் கால கட்டத்தில் இல்லாததைக் குறிப்பிட்டுச் சொல்லத்தான் வேண்டும். ஆனால் தமிழ் அவன் சபையில் இல்லை என்பதை ஈடு செய்யவே கிருஷ்ணதேவராயனே முன்வந்து தமிழ்ப் பாடல்களின் மகிமையை தெலுங்கு மொழியில் இயற்றினானோ என்னவோ.. ஒவ்வொரு சமயம் நினைத்துப் பார்க்கும்போது தமிழன்னை தன்னை உயர்த்திக் காட்ட இந்தக் காவியம் படைக்க இப்படி ஒரு வகை செய்தாளோ என்றுதான் தோன்றும்.

இல்லையேல், ஒரு ராஜா அதுவும் தமிழல்லாத ராஜா, சண்டை போட இருந்த ஒரு இடத்தில், யுத்த கால கட்டத்தில், நாராயணனே முன் தோன்றி, ‘எனக்கு கோதையின் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி மாலை தெலுங்கில் காவியமாக வேண்டும், அதையும் அரசனான நீயே செய்யவேண்டும் என்று கேட்பானா? இந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியைக் கூட ‘ஆமுக்தமால்யதா’ வில் அரசன் எழுதுகிறான்.. .

‘ஆஹா.. சாட்சாத் நாராயணனே இலக்குமி சகிதம் வந்து என்னிடம் ஆணை போட்டுவிட்டான்.. அமைச்சர்களே.. புலவர்களே.. இதன் நிமித்தம் சொல்லுங்களேன்..’

என ஆன்றோர்களைக் கேட்கவும் அந்த யுத்தபூமியிலும் சபை மளமளவெனக் கூடுகிறது. இலக்குமியின் ஒரு கையில் தெரிந்த கமலம், இந்த யுத்தத்தின் வெற்றியின் பரிசு என்பதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. பிறகு காவியம் எழுது என்று சொல்லிவிட்டானே ஆண்டவன்.. காவியத்துக்கே உரிய வகையறாக்கள் ஆராயப்படுகின்றன. கடவுள் வாழ்த்து கூட வைணவ மார்க்கத்தில் முதலில் திரு (இலக்குமி) யைப் போற்றி எழுதப்படவேண்டும் என்று நிர்ணயிக்கிறார்கள். அப்போது ஒரு சிறிய மாற்றம் அரசரால் சொல்லப்படுகிறது. ஆந்திர விஷ்ணு, திருமலையில் நின்றவடிவில் ஆருள் புரியும் திருவேங்கடவன் முன்பு இந்தப் பாமாலையினை சமர்ப்பிக்கும்படி ஆணையிட்டிருப்பதால் இலக்குமியை முன்வைத்து அந்தத் திருவேங்கடவனுக்கே முதல் பாடல் எழுதப் போகிறேன்.. என்று சொல்கிறான். அதுவும் எந்த இலக்குமி, திருவேங்டவன் திருமார்பில் வாசம் செய்வதாக நம்மாழ்வார் சொல்கிறாரே ‘அகலகில்லேன், இறையும் என அலர்மேல்மங்கையுரை மார்பா’ அந்த மகாலக்குமியைப் போற்றவேண்டும் என தேவர் முடிவு செய்கிறார்.

இலக்குமியின் திருமார்பில் ஒளிரும் ஆரத்தின் ஒளி நீயே
அவன் திருமார்பில் ஒளிரும் கௌஸ்தப மணியின் ஒளி அவளே
ஒருவருக்கொருவர் உள்ளேயே ஒளிந்திருந்தும் இந்த மணிகளின்
வழியே தெள்ளத் தெளிவாய் வெளியே தெரியும் விந்தையை
அளித்த திருவேங்கடவனே, உனக்கு முதல் வணக்கம்!


அவனும் அவளும் ஒன்றுதான்.. ஆனால் அவள் மூலம் அவனிடம் செல்வது என்பது மிக மிக எளிது.. இதுவே ஆண்டாளும், நம்மாழ்வாரும், திருமங்கைமன்னனும் ஏற்கனவே காண்பித்தது என்பது விஜயநகரத்து மன்னன் ஸ்ரீகிருஷ்ணதேவராயனுக்கு பரிபூரணமாகத் தெரிந்திருக்கிறது. அவன் வார்த்தைகளில் உள்ள சத்தியம் ஆணும் பெண்ணும் ஆண்டவனிலிருந்து அகிலம் முழுமைக்கும் ஒன்றுதான் என்ற கருத்து பலமாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்தனையும் தமிழின் கருத்து. அப்படியே அண்டை மொழி மூலம் ஆண்டவன் கட்டளையாக, அந்த ஆண்டவனுக்கே அழியாத மாலையாக அழகாகக் கோர்த்து மாலையிட்டவன் ஸ்ரீகிருஷ்ணதேவராயன்.

ஆமுக்தமால்யதா தெலுங்கில் பொருள் அறிந்து படிக்க படிக்க தெலுங்கு மொழியின் மகிமையை விட தமிழின் மகிமை மிக அதிகமாக தமிழராகிய நமக்கு விளங்கும். தமிழராகிய நாம் தலை நிமிர்ந்து நடக்க, ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ஒரு மகாகாவியம் இந்த ‘ஆமுக்தமால்யதா’ என்று பெருமை கொள்வோம்.

திவாகர்

(பி.கு. ஆமுக்தமால்யதாவின் தமிழ் வரிகள், டாக்டர் பிரேமா நந்தகுமார் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு மூலம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அவருக்கு நம் நன்றி)

மேலே உள்ள படம், திருமலை வேங்கடவன் கோயிலில், ஸ்ரீகிருஷ்ணதேவராயர், அவர் மனைவிகள் இருவரோடு சிலைகளாக செதுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள காட்சி.

மேற்கண்ட கட்டுரை 'யுகமாயினி' மாத இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

27 comments:

  1. //ஒவ்வொரு சமயம் நினைத்துப் பார்க்கும்போது தமிழன்னை தன்னை உயர்த்திக் காட்ட இந்தக் காவியம் படைக்க இப்படி ஒரு வகை செய்தாளோ என்றுதான் தோன்றும்.//

    நல்ல ரசனையுடன் அநுபவித்து எழுதி உள்ளீர்கள். அருமையாய் இருக்கு. முடிஞ்சால் ஆமுக்த மால்யதாவைத் தமிழ்ப்படுத்திக் கொடுங்களேன். நமக்குத் தெலுங்கு தெரியாதே! அப்புறம் எப்படி மத்ததைப் படிக்கிறது???

    ReplyDelete
  2. //நல்ல ரசனையுடன் அநுபவித்து எழுதி உள்ளீர்கள். அருமையாய் இருக்கு. முடிஞ்சால் ஆமுக்த மால்யதாவைத் தமிழ்ப்படுத்திக் கொடுங்களேன். நமக்குத் தெலுங்கு தெரியாதே! அப்புறம் எப்படி மத்ததைப் படிக்கிறது???//

    கீதாம்மாவை ரிப்பீட்டிக்கிறேன் :) 'ஆமுக்த மால்யதா" என்ற பெயரே அழகா இருக்கு.

    ReplyDelete
  3. முடிஞ்சால் ஆமுக்த மால்யதாவைத் தமிழ்ப்படுத்திக் கொடுங்களேன்>>>

    இப்படியெல்லாம் யாரும் கேட்கக்கூடாது. அப்புறம் இந்தத் தெலுங்கு மண்ணிலிருந்தே என்னை விரட்டி விடுவார்கள்.

    கீதாம்மா..
    ஆமுக்தமால்யதா எனும் நூல் படிக்க தெலுங்கு ஒன்று தெரிந்தால் மட்டுமே போதாது. ஏறத்தாழ 75% சமஸ்கிருதம் கலந்த தெலுங்கு. வடமொழியிலும் தெலுங்கிலும் நன்கு கற்றுத் தேர்ந்த சான்றோர் மட்டுமே இந்த நூலைச் சரியாகப் புரிந்து கொள்ளமுடியும். இப்படி இதை புரிந்துகொண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் டாக்டர் பிரேமா நந்தகுமார். அவர் சொற்பொழிவையையும் சமீபத்தில் (ஆமுக்தமால்யதா பற்றி) கேட்டேன். இந்தக் கட்டுரை எழுதுவதற்கு முன்பு கேட்டதால் நிறைய விவரங்கள் எழுதமுடியாமல் போயிற்று.

    உண்மையில் இந்த காவியத்தின் நாயகர்கள் அனைவருமே தமிழர்கள்தான். பெரியாழ்வார், அவருக்குப் பொற்கிழி கொடுத்த பாண்டிய அரசன், ஆண்டாள் தாயார் மற்றும் மாலதாசன். பிறகு முடிவில் ஆண்டாள் திருக்கல்யாணம் அரங்கனுடன் என முடியும் காவியம். மிகவும் பெரிதான வலுவான செழிப்பான விஷயங்கள் ஆதலால், வடமொழியும் தெலுங்கும் மிக நன்றாக அறிந்த டாக்டர் பிரேமா நந்தகுமாரையே நேயர் விருப்பமாகக் கேட்போம்.
    அவரையே தனிமடலில் கேட்டால் போயிற்று. இன்னமும் இனிமையாக இருக்கும் அவர் தமிழில் எழுதினால்.

    கவிநயா!
    என்னுடைய பதிலும் ரிப்பீட்டு!!

    திவாகர்

    ReplyDelete
  4. 'ஆமுக்த மால்யதா" என்ற பெயரே அழகா இருக்கு.

    ஆமாம். கவிநயா பேர் மாதிரிதான்.

    திவாகர்

    ReplyDelete
  5. அட்டகாசம் திவாகர்..படித்துப்படித்து என் உள்ளம் நெகிழ்ந்தது.எவ்வளவு உயர்ந்த உள்ளம்ராயருடையது!தெய்வீகமும், தமிழ் உணர்வும்,தெலுகு பக்தியும் கலந்த அவனது-- கோவில் திருத்துழாய் போல-நின்ற உள்ளத்தைப்புரிந்துகொண்டு வியந்துபோய் நிற்கின்றேன்.
    வாழ்க உம்பணி!
    யோகியார்

    ReplyDelete
  6. Dhivakar..wonderful work. Vazthukal. We expect more such articles.

    Natpudan

    A.Vaidyanathan, New Delhi

    ReplyDelete
  7. Thanks Vaiththi!

    யோகியாரின் ஆசிகள் மிக மிகத் தேவை. அவ்வப்போது உங்கள் வாழ்த்துக்களைப் பெறும்போது உள்ளம் ஆனந்தக் களிப்படைகின்றது.

    திவாகர்

    ReplyDelete
  8. அன்புள்ள திவாகர், ஸ்ரீகிருஷ்ணதேவ ராயரின் மகுடாபிஷேகத்தின் 500வது ஆண்டு விழா இந்த வருடம். அந்த மாமன்னரின் நினைவிற்குப் பெருமிதம் சேர்க்கும் வகையில் அருமையான பதிவு. படித்தேன், மகிழ்ந்தேன்! ஆமுக்த மால்யதாவில் 60% சதவீதம் சம்ஸ்கிருதமா? அப்போ, தியாகராஜர் கீர்த்தனங்கள் போலவே புரிந்து கொள்ள எனக்கு எளிதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

    தமிழகத்தின் மதுரை மீனாட்சி கோயிலையும், திருவரங்கத்தையும் மாலிக்காபூரின் எச்சங்களாக கொடுங்கோல் ஆட்சி செய்த முஸ்லிம் மன்னர்களிடமிருந்து மீட்டவர் இதே விஜ்யநகர சாம்ராஜ்யத்தில் ராயருக்கு முன் ஆண்ட குமார கம்பண்ணர். அவரது கீர்த்தியையும், போர் வெற்றிகளையும் பற்றி அவரது மனைவி கங்கம்மா தேவி மதுரா விஜயம் என்று ஒரு காவியம் எழுதியிருக்கிறாள் - அது சம்ஸ்கிருத மொழியில்! இந்தக் காவியம் இந்த இரு மாநிலங்களை விட பிரபலமாக அறியப் பட்டிருப்பது ஆந்திராவில் தான்.

    பாரத நாட்டின் கலாசார ஒருமைக்கு ஒரு ஒளிவீசும் உதாரணம் விஜயந்கரப் பேரரசு என்று சொன்னால் மிகையில்லை. ஆயிரம் ஆண்டுகளாக தென்னகத்தின் இந்து கலாசாரத்தைக் கட்டிக் காத்த அந்தப் பேரரசிற்கான பொறியை உருவாக்கிய மகாஞானி வித்யாரண்யருக்கும், மாவீரர்கள் ஹரிஹரர், புக்கருக்கும் தென்னகம் முழுவதும் கடமைப் பட்டுள்ளது.

    ReplyDelete
  9. >>மகாஞானி வித்யாரண்யருக்கும், மாவீரர்கள் ஹரிஹரர், புக்கருக்கும் தென்னகம் முழுவதும் கடமைப் பட்டுள்ளது.<<

    மிக மிக உண்மையான வார்த்தைகள் ஜடாயுசார்.
    1344 லிருந்து 1565 வரை இருந்த விஜயநகரப் பேரரசு மட்டும் வந்திராவிட்டால் அதைக் கற்பனை செய்யக்கூட அச்சமாக உள்ளது.

    கங்கம்மா தேவியின் மதுராவிஜயம் இங்கு தெலுங்குப் புலவரிடையே கொஞ்சம் புகழ்பெற்றதுதான்.

    வித்யாரண்யரின் நியதிப்படி விஜயநகரப் பேரரசு ஒரு 3000 ஆண்டுகளுக்கு நிலைபெற்றிருக்கவேண்டும். இருந்தும் காலத்தின் கோலமும் நம்மவர்களின் அவசர புத்தியும் அந்த அரசை 222 ஆண்டுகளே நிலைபெற்றிருக்கவைத்தது. ஆனாலும் இந்தக் குறுகிய காலத்துக்குள் ஒரு நீண்ட காலப் பாதுகாப்பை நம் கலாசாரத்துக்குக் கொடுத்து விட்டுத்தான் அகன்றார்கள் இந்த மன்னர்கள். நாம் எல்லோரும் என்றைக்குமே பெருமைப்பட வேண்டிய விஷயங்கள்..

    திவாகர்

    ReplyDelete
  10. //இவன் பிறப்பால் துளுவன்.. (மங்களூர் அருகே பிறந்ததாகச் சொல்வார்கள்). ஆட்சி செய்யும் இடமோ, அதாவது தலைநகரம் அமைந்த இடமோ கன்னடம் செழித்தோங்கும் விஜயநகரம். இவன் படைத்த காவியமோ தெலுங்கு மொழியில், காவியத்தின் நாயகியோ தமிழன்னையின் தவப்புதல்வியான ஆண்டாள். திராவிடத்தின் மொத்த உருவத்தையும் தன்னகத்தேக் கொண்ட ஒரு உன்னதத் தலைவன் ஸ்ரீகிருஷ்ண தேவராயன்//

    நச்!
    சரியான ஒப்புமை திவாகர் சார்!
    திராவிடர் தலைவன் கிருஷ்ண தேவ ராயன் வாழி வாழி!
    கவிஞன் கிருஷ்ண தேவ ராயன் வாழி வாழி!

    ReplyDelete
  11. //பன்னிரெண்டு சூரியர்களின் சூட்டைத் தாங்கமுடியாமல் தம்மிலேயே ஆழ்ந்திருக்கும் பன்னிரெண்டு ஆழ்வார்களின்//

    அழகான கற்பனை!
    ஏகாதச ருத்ரர்கள் தெரியும்! அது என்ன பன்னிரு சூரியர்கள்?
    எதுவாயினும், பன்னிரு கதிர்களின் வெப்பம் தாங்காது, தண்ணென்று திகழும் ஈரப் பாசுர உள்ளங்களில் குடி கொள்ளப் புகுந்தவன் தான், இன்னும் திரும்ப வைகுண்டம் போக மனமில்லாமல், ஆழ்வார் உள்ளத்திலேயே தங்கி விட்டான்!

    சோலை சூழ் தண் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்பு,
    கோல நீள் கொடிமூக்கும் தாமரைக் கண்ணும் கனி வாயும்,
    நீலமேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே! என் நெஞ்சம் நிறைந்தனவே!

    ReplyDelete
  12. //கிருஷ்ணதேவராயனுக்கு தென் மொழியான தமிழ் மிக நல்ல பரிச்சயம். அதுவும் வைணவத்தை ஆராதிப்பவனான அரசன் தமிழ்ப் பாமாலைகளான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தினைக் கரைத்துக் குடித்தவன் என்றே சொல்லலாம்//

    உம்.....அரசனுக்குத் தமிழ் கற்பித்தவர் யாரோ? அவரு வாழ்வாங்கு வாழ்க!
    நாலாயிர அருளிச் செயல்கள் தமிழகம் மட்டுமல்லாது, ஆந்திரம், கேரளம், கன்னடம், நேபாளம் என்று பல இடங்களிலும் ஒலிக்கச் செய்த உடையவர் இராமானுசரின் தொலைநோக்கு தான் என்னே! பின்னாளில் ஒரு ஆமுக்த மால்யதா பிறக்க வேணும், அதுவும் ஒரு அரசன் வாயிலிருந்து என்று இருக்கிறதே!

    ReplyDelete
  13. //பொதுவாகவே அரசர்கள் என்போர் கவி புனைவது என்பது ஒத்து வராத விஷயம்//

    தமிழ் இலக்கியத்தில் இளங்கோவடிகள் அரச குலக் கவிஞர் தான்! செங்குட்டுவன் பொருட்டு பின்னர் துறவு பூண்டாலும், அவரும் அரச கவி தான்!

    அதற்கும் முன்பு சங்க இலக்கியத்திலும் பல தமிழ் அரசர்கள் கவிஞராய் இருந்துள்ளனர்!
    சேரமான் கணைக்கால் இரும்பொறை, சோழன் நலங்கிள்ளி, பாண்டியன் அறிவுடைநம்பி, நெடுஞ்செழியன், கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி-ன்னு இன்னும் நிறைய அரச கவிஞர்கள் உண்டு!

    * பின்னாளில் குலசேகராழ்வாரும், திருமங்கை மன்னனும் அரசன் + கவிஞர்!
    * அதே போல் சேரமான் பெருமாள் நாயனாரும் அரச + கவிஞர்!
    - கவனிச்சீங்களா? பின்னாளில் சேர நாட்டில் தான் நிறைய அரசர்களே கவிஞராகவும் இருந்துள்ளனர்! :)

    ReplyDelete
  14. //இலக்குமியின் திருமார்பில் ஒளிரும் ஆரத்தின் ஒளி நீயே
    அவன் திருமார்பில் ஒளிரும் கௌஸ்தப மணியின் ஒளி அவளே//

    //அளித்த திருவேங்கடவனே, உனக்கு முதல் வணக்கம்!//

    திருவேங்கடவன் திருவுருவத்திலேயே அன்னையின் சாயலும் தெரிகிறதே! அதனால் அல்லவா சேலையையே பீதாம்பரமாக உடுத்திக் கொள்கிறான்! அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பன்!
    அதனால் தான் போலும் இருவரையும் ஒரே வாழ்த்துச் செய்யுளில் வைத்துத் துவங்குகிறான் கிருஷ்ண தேவ ராயன்!

    கோதையும் வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே என்று தான் நாச்சியார் திருமொழி முதல் பாசுரம் பாடுகிறாள்!
    அவள் கதையான தெலுங்கு ஆமுக்த மால்யதாவும், அவள் விதிக்கச் சொன்ன வேங்கடவனுக்கே அமைந்தது தான் இன்னும் அழகு!

    வேங்கடவற்கு என்னை விதி என்ற இம்மாற்றம்
    நாங்கடவா வண்ணமே நல்கு!

    ReplyDelete
  15. பேரரசர் கிருஷ்ண தேவராயர் செய்தருளிய ஆமுக்த மால்யதா = ஆணி முத்து மாலை என்னும் தெலுங்கு நூலுக்கு, விஷ்ணு சித்தீயம் என்ற இன்னொரு பெயரும் உண்டு!

    கோதையின் கனவும் நனவும் தான், இந்த இலக்கியத்தின் கருப்பொருள் என்றாலும்...
    இன்ன பிற செய்திகளும் இதில் வரும், திவாகர் சார்!

    * பெரியாழ்வார் வரலாறு, பாண்டியன் சபையில் பரம்பொருள் நிர்ணயம் செய்து கிழி அறுத்தது!
    * இராமானுசரின் குருவான ஆளவந்தார் சரித்திரம்
    * மாலா தாசரி என்னும் தாழ்ந்த குலத்தவனாகக் கருதப்பட்டவன், உயர்ந்தவனாக கருதப்பட்ட அந்தணனுக்கு மோட்ச வழி காட்டியது - (நம்ம கைசிக ஏகாதசி நம்பாடுவான் கதை)
    என்று பலதையும் தொட்டுச் செல்வார் ராயர்!

    ReplyDelete
  16. //பி.கு. ஆமுக்தமால்யதாவின் தமிழ் வரிகள், டாக்டர் பிரேமா நந்தகுமார் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு மூலம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அவருக்கு நம் நன்றி//

    Link Please! :)

    ReplyDelete
  17. இருட்டில் இருந்து உண்மையாகவே வெளிச்சத்தை வேண்டும் போதெல்லாம், இந்த புண்ணிய பூமியில் இத்தகு அற்புதம் மீண்டும் மீண்டும் நிகழ்ந்திருக்கிறது என்பதை சமீபத்திய வரலாற்று நிகழ்வுகளே கூறும்.

    தெற்கே விஜயநகர சாம்ராஜ்யம் சனாதன தர்மத்தைக் காப்பாற்றியது போலவே, மராட்டிய மண்ணில் ஒரு சன்யாசியின் பிரார்த்தனையும் ஒரு தாயின் ஆதங்கமும் சேர்ந்து ஒரு சிவாஜியை உருவாக்கியது. வங்கத்தில் சைதன்ய மகாப்ரபு ஸ்ரீகிருஷ்ண நாம சங்கீர்த்தனத்தைவைத்து சோர்ந்து கிடந்த மக்களை தட்டி எழுப்ப முடிந்தது.

    அதற்குப்பின்னால், பிரார்த்தனையும், உண்மையான ஆர்வமும், விழைதலும் இல்லாத வெற்று ஆரவாரமும், ஊர்வலம் நடத்துவதும் மட்டுமே மிஞ்சிப்போன நிலையில்..........

    இன்றுள்ள நிலவரத்தைத் தான் காண முடியும்!

    இதுவும் கடந்துபோகும்!

    ReplyDelete
  18. அட.. எங்கடா இவரைக் காணோமே..என்றுதான் நினைத்தேன். நம்ம போஸ்ட் போகலைன்னா கூட, ஆண்டாளும் ஆழ்வார்களும் காந்தம் மாதிரி நியூயார்க் போய் இழுத்துக் கொண்டு வந்துவிடுவார்கள் என்று தெரியும்தான். கே.ஆர்.எஸ்! ஆமுக்தமால்யதா பற்றி பல சுவையான செய்திகளுக்கு நன்றி.. என்னதான் அரசர் ஆண்டாளையும், ஆழ்வார்களையும் அப்படியே காப்பியடித்தாலும் (எத்தனை பெருமை!) கடைசியில் மாலதாசன் கதையில் வரும்போதுதான் ராஜாவின் உத்தமகுணத்தைப் புரியவைத்துவிடுவார். மாலதாசன் என்றால் ஹரிஜனம் என்று தெலுங்கில் இன்றும் பிரபலம் என்றாலும் அந்த மாலதாசன் பிரம்மராட்சசனின் பிடியில் இருந்து மாலவன் சேவைக்காக தன்னை விடுவித்துக் கொண்டு, சேவை முடிந்தவுடன், மறுபடியும் அந்த பிரம்மராட்ச்ஸனிடம் தன்னை ஒப்படைக்கும் கதையில், ஜாதி என்பது என்ன என்பதன் முழு அர்த்தத்தையும், ஆண்டவனுக்கு ஜாதி வேறுபாடுகள் கிடையாது என்பதன் அழுத்தத்தையும் தந்துவிடுவார் இந்த திராவிட அரசர்.

    இவருக்கு ஆண்டாளும் ஆழ்வாரும் எப்படி பரிச்சயம் என்றால், இவருக்கு சின்ன வயதிலிருந்தே அரசியல் குரு, அதாவது சந்திரகிரி கோட்டையைத் தலைமையாகக் கொண்டு ஆண்டுவரும் சாலுவ நரசிம்மா என்கிற ப்ராம்மண ராஜாதான் காரணம் என்று சொல்லலாம். இந்த நரசிம்மா என்கிற செல்லப்பாதான் ஸ்ரீவில்லி கோயிலையே புதிதாக செப்பனிட்டுக் கட்டியதாக தகவல் உண்டு. இவருக்கு ஆண்டாளே சின்னப் பெண் வடிவில் தரிசனம் தந்ததாக பர்டன் ஸ்டெஇன் எழுதி இருக்கிறார். கூடவே (அப்போது குட்டி) கிருஷ்ணதேவனும் இருந்திருக்க வாய்ப்புண்டு. இந்த செல்லப்பனுக்கு கந்தையாடை என்றொரு ஜீயர்தான் குரு. அந்த குருவின் உதவியும் கிருஷ்ணதேவராயருக்கு கிடைத்திருக்கலாம். மேலும் அகோபில மடத்துத்து ஜீயரையும் ஆமுக்த மால்யதாவில் போற்றுகிறான். போதாதா அரசன் எப்படி வைணவனான் என்பது?

    டாக்டர் பிரேமா நந்தகுமார் எழுதிய ஒரு கட்டுரை என்னிடம் இருக்கிறது. லின்க், கூகிளாரைக் கேட்கலாம். நானும் முயற்சிக்கிறேன்.

    திவாகர்

    ReplyDelete
  19. கிருஷ்ணமூர்த்தி சார்!

    இந்த அரசனும் இவனுக்கு முன்னோர்களும்தான் மதுரையைக் காப்பாற்றியது. இன்னும் தமிழகத்தில் உள்ள நூற்றுக்கணக்கான கோயிகளை புத்துயிர் ஊட்டி புதிப்பித்தது. தர்மம் செழிக்க அவ்வப்போது, நீங்கள் சொல்கிறபடியே இவர்களெல்லாம் அவதரிக்கும்போது நம் தேசம் இன்னமும் செழிப்போடு விளங்கும் எனும் 'பாஸிடிவ்' நினைவலைகள் தாக்குவதே சந்தோஷம்தானே!

    திவாகர்

    ReplyDelete
  20. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    *ஏகாதச ருத்ரர்கள் தெரியும்! அது என்ன பன்னிரு சூரியர்கள்?*

    பன்னிரு ஆதித்யர்கள் –
    தாதா,மித்ரன்,அர்யமா,சக்ரன்,வருணன்,அம்சன்,பகன்,விவஸ்வான்,பூஷன்,ஸவிதா,த்வஷ்டா,விஷ்ணு (மஹாபாரதம் – ஆதி பர்வம்)
    இவர்கள் அதிதி தேவியின் புதல்வர்கள்.

    ஆதித்யர்கள் - 12
    ருத்ரர்கள் - 11
    வஸுக்கள் - 8
    அச்வினி குமாரர் – 2
    -----
    33

    ஒன்று மூன்றாகிறது; மூன்று முப்பத்து மூன்றாகிறது;
    முப்பத்து மூன்று 33 கோடியாகிறது என்பார் காஞ்சிப்
    பெரியவர்.

    தேவ்

    ReplyDelete
  21. பன்னிரு ஆதித்யர்கள் –
    தாதா,மித்ரன்,அர்யமா,சக்ரன்,வருணன்,அம்சன்,பகன்,விவஸ்வான்,பூஷன்,ஸவிதா,த்வஷ்டா,விஷ்ணு (மஹாபாரதம் – ஆதி பர்வம்)

    இதுக்குத்தான் தேவ் வரணும்கிறது.. திடீர்னு பன்னிரெண்டு ஆதித்யர் யாருன்னு கேட்ட கே.ஆர்,எஸ்க்கு எப்படி பதில் ன்னு தேடிட்டு இருக்கேன், ரொம்ப நன்றி தேவ் சார்..
    ம்ம்.. விஷ்ணுவும் தன்னை ஆதித்தியர்களில் ஒருவராக இணைத்துக் கொண்டது அவரது கருணை.
    ஒன்று மூவருமாகி, மூவர் முப்பத்துமூவராகி, முப்பத்து மூவர் முப்பத்து மூன்று கோடியாகி.. (எத்தனை விஷயங்கள் தெரிய வருகின்றன பாருங்கள்!)

    திவாகர்

    ReplyDelete
  22. //ஆதித்யர்கள் - 12
    ருத்ரர்கள் - 11
    வஸுக்கள் - 8
    அச்வினி குமாரர் – 2
    -----
    33
    //

    இத, இத, இதைத் தான் எதிர்பார்த்தேன்! :)
    இதுக்குத் தான் "தேவ"ப் பெருமாள் வரணும்ங்கிறது! :) நன்றி தேவ் சார்!

    //ஒன்று மூன்றாகிறது; மூன்று முப்பத்து மூன்றாகிறது;
    முப்பத்து மூன்று 33 கோடியாகிறது//

    அருமை!
    "ஒன்று நூறாயிரமாக்" கொடுத்துப்பின்னும் ஆளும் செய்வன்,
    தென்றல் மணங்கமழும் திருமால் இருஞ் சோலை தன்னுள்
    நின்ற பிரான்,அடியேன் மனத்தே வந்து நேர்படிலே

    ReplyDelete
  23. நன்றி கே ஆர் எஸ்

    தி

    ReplyDelete
  24. திவாகர் ஐயா.

    கல்லூரியில் படிக்கும் போது (1990 / 91) இந்த நூலைப் படித்திருக்கிறேன். தமிழ் மொழிபெயர்ப்புடன் படித்த நினைவு. நீங்கள் சொன்னது போல் சங்கதம் நிறைய இருந்ததால் எனக்கு நேரடியாகத் தமிழெழுத்தில் இருந்த தெலுங்கு வரிகளைப் படிக்கும் போதே நன்கு புரிந்தது போல் நினைவு. :-)

    ReplyDelete
  25. குமரன்,
    தமிழ் மொழி பெயர்ப்பு உண்டானால், விவரம் சேகரித்துத் தரமுடியுமா.. என்ன இருந்தாலும் எதையும் தமிழில் படித்தால்தானே சுவையே கூடுகிறது!!

    அன்புடன் திவாகர்

    ReplyDelete
  26. ’அஷ்ட திக் கஜங்கள்’ மாமுனிகளின் சீடர்களின் எண்ணிக்கையும் எட்டு; க்ருஷ்ணதேவராயரின் அவைப்புலவர்களின் எண்ணிக்கையும் எட்டு.
    இந்த ஒற்றுமைக்கு ஏதேனும் காரணம் உண்டா ?

    தேவ்

    ReplyDelete
  27. கேட்டுப்பார்த்தேன் தேவ்!.

    எட்டு விதமான தனித்தத்துவங்களை இந்த எட்டுப் புலவர்களுமே தன்னகத்தே கொண்டு விஜயநகரப் பேரரசுக்குக் காவலாகவே இவர்களை அஷ்டதிக்கஜங்கள் என்று அழைத்ததாக தகவல். பொதுவில் இவர்கள் கிருஷ்ணதேவராயர் காலத்துக்கு முன்னம் இருந்தே சிறப்பு பெற்றவர்கள் என்று தெரிகிறது. ஸ்ரீகிருஷ்ணதேவராய மன்னரின் அவை காலத்தால் பெற்ற வாழ்த்துப் பெயர்தான் அஷ்டதிக் கஜங்கள், என்று சொல்கிறார்கள்.

    திவாகர்

    ReplyDelete