Follow by Email

Saturday, September 19, 2009


விசாகப்பட்டினமும் வம்சதாரா பிறந்த கதையும்


விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்ஹாத்ரி மலையில் வராகநரசிம்மர் கோயில் கொண்டுள்ளார். அருமையான இயற்கை காட்சிகளைக் கொண்டுள்ள இந்த வைணவத்தலம் நூற்றெட்டு திவ்விய தேசங்களின் வரிசையில் சேர்க்கப்படவில்லை என்றாலும் ராமானுஜர் (கி.பி.1017-1137) வருகையினால் புகழ்பெற்ற தலமாகும். அவர் வரும் காலத்தில் கோயில் மிகச் சிறப்பான புகழையும் பெற்றிருந்தது என்பதற்கு அவர் வருகையே ஒரு காரணம்.

சுமார் 1000 வருடங்களுக்கும் முந்தையதான இக்கோயிலைப் பற்றிய முதல் இரண்டு சரித்திர ஆதாரங்களுமே தமிழில் வடிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளாக கிடைக்கப்பெற்று இந்திய தொல்லியல் கழகத்தாரால் பதிவு செய்யப்பட்டவை என்பதே மிகப் பெரிய ஆச்சரியமான தகவல்கள்தான்.

இந்தத் தலம் மிக மிகப் பழைமையானது என்பதில் சந்தேகமே இல்லை என்றாலும் இத்தலத்தைப் பற்றிய பல விஷயங்களை நாம் மிக மிக தாமதமாகத்தான் தெரிந்துகொள்ள முடிந்தது. காரணம், இத்தலம் அமைந்த பகுதிதான். சுற்றிலும் காடுகளும் மலைவளமும் மிக்க பகுதியில் ஒரு சிறிய மலை மீது இக்கோயில் நம் பழைய சோழர்கால மரபில் கட்டப்பட்டதாகும். தமிழர்களின் வடஎல்லையான திருப்பதியில் இருந்து சுமார் ஐநூறு மைல் தொலைவில், ஒருகாலத்தின் தென் கலிங்கநாட்டின் நட்ட நடுப்பகுதியில் இந்தக் கோயில் இருந்தது என்று சொன்னால் அது மிகை ஆகாது. யார் இந்தக் கோயிலைக் கட்டியது என்ற விவரம் இன்று வரை கிடைக்கவில்லை.

இடமோ காடு, நாடோ தமிழர்களுக்கு மிக தொலைவிலுள்ள கலிங்கநாடு. காட்டாறுகளும் மலை ஓடைகளும், கொடிய விலங்கினங்களும் மிகுதியான உள்ள இந்தப் பகுதியில் ஒரு பெரிய அளவினான பெருமாள் கோயில், சோழர் சிற்பக்கலையுடன் கூடிய வகையிலும், கோபுரமும், சந்நிதிகளும் கட்டப்பட்ட இந்த அழகான கோயிலில் தமிழர்களால் செதுக்கப்பட்ட இரண்டு கல்வெட்டுகள் கிடைக்கின்றன. இந்தக் கல்வெட்டுகளின் செய்திகள் இரண்டுமே வித்தியாஸமானவை.

முதல் கல்வெட்டு கிருத்து பிறந்த 1100 ஆம் ஆண்டில் (இன்றைக்கு சுமார் 909 ஆண்டுகளுக்கு முன்பு) தமிழரான ஒரு வர்த்தகர் ஒரு நந்தவனத்தை இந்தக் கோயிலுக்காக எழுதிவைத்திருக்கிறார். இன்னொரு கல்வெட்டு அடுத்த இரண்டு வருடங்களில் இன்னொரு செய்தியைச் சொல்கிறது. அதாவது சோழதேசத்து ஆச்சாரியாரான படைத்தலைவர் சிம்மாசலநாதருக்கு காணிக்கையாக நகைகள் அளித்திருப்பதாக அந்தக் கல்வெட்டு தெரிவிக்கிறது.

முதல் கல்வெட்டைப் பார்ப்பதற்கு முன் இரண்டாவது கல்வெட்டைப் பற்றிய சில தகவல்கள் தெரியவேண்டும். இந்தச் செய்தி நம் கலிங்கத்துப் பரணியிலும், ஆந்திராவில் உள்ள கோதாவிரி மாவட்டத்தில் உள்ள திராட்சாராமம் கோயில் சுவரில் காணப்படும் எழுத்துக்களிலும் ஏற்கனவே காணப்பட்டதுதான். அதாவது கருணாகரத் தொண்டைமான் எனும் சோழநாட்டுத் தளபதி, வண்டை வள நாட்டின் அரசன், இவன் குலோத்துங்க சோழனுக்காக கலிங்க நாட்டின் மீது படையெடுத்து வென்றதில் கிடைத்த செல்வங்களில் சில செல்வங்களை சிம்மாசல நாதருக்கும், திராட்சாராமம் பீமேசுவரநாதருக்கும் காணிக்கையாக கொடுத்தது. அது மட்டுமல்லாமல் இன்றைய விசாகப்பட்டினத்துக்கு குலோத்துங்க சோழப்பட்டினம் என்ற தமிழ்ப் பெயரையும் கொடுத்தவனும் இந்த தளபதிதான் என்றும் இன்றைய விசாகப்பட்டின வரலாறு சொல்லுகிறது.

அதனால் இரண்டாம் கல்வெட்டின் செய்தி தெரிந்தாயிற்று.. சோழநாட்டு தளபதியான கருணாகரத் தொண்டைமான் கலிங்கப்போரில் கைப்பற்றிய சில செல்வங்களை சிம்மாசலத்திற்குக் கொடையாகக் கொடுத்தது என்பதும் புரிந்துகொண்டோம். அப்படியானால் முதல் கல்வெட்டு செய்தி என்ன சொல்கிறது, கோயிலுக்காக ஒரு பெரிய நந்தவனத்தையே ஒரு தமிழ்வணிகர் எழுதி வைத்திருக்கிறார். இங்குதான் நம் சிந்தனை விரிகிறது..

அளவு இவ்வளவு என்பது தெரியாவிட்டாலும் பெரிய அளவில் பூச்செடிகளும், மரங்களும் பயிரப்படும் நல்ல இடத்தை, ஒரு பெரிய பூங்காவனத்தை அதுவும் தமிழர் ஒருவர் எப்படி எழுதிவைத்திருக்கமுடியும். இவர் நிச்சயமாக வழிப்போக்கராக இருக்கமுடியாது இந்தக் கோயிலுக்கு எழுதி வைத்தது போக இன்னும் எத்தனை பெரிய அளவில் நிலச்சுவாந்தராக இவர் இருந்திருப்பார், அல்லது இவர் போல இன்னும் எத்தனையோ தமிழ்க் குடும்பங்கள் இங்கு இருந்தனவோ.. அவர்களும் பெரிய அளவில் இங்கு குடியேறி இருந்தனரோ..

தமிழகம் எங்கே, இந்தக் கலிங்கம் எங்கே.. இரண்டுக்கும் உள்ள இடைவெளி தூரம் மிக அதிகம் ஆயிற்றே.. அதுவும் இந்தக் கோயில் அமைந்த இடமோ மலைமேலுள்ள ஒரு சிறிய சமவெளிப்பகுதி. அப்படியானால் இந்தத் தமிழர்களானவர்கள் மலைக்குக் கீழே உள்ள அடிவாரப்பகுதியில்தான் குடியேறி இருந்திருக்கவேண்டும்.(இப்போதும் அதன் பெயர் அடிவாரம்தான், சற்று மருவி அடவிவரம் ஆனது) சரி, இவர்கள் ஏன் இங்கு குடியேறவேண்டும், எதற்கு இந்த காடு மலை சூழ்ந்த கோயிலையும் கரடு முரடான கடலைச் சார்ந்த பகுதியையும் தேர்ந்தெடுக்கவேண்டும்?

கலிங்கத்துப் பரணியில் கலிங்கப்படை தோற்று ஓடிய சமயத்தில் அவர்களைப் பிடிக்கச் சென்ற சோழ வீரர்களிடம் ‘ஐய்யயோ.. நான் கலிங்கன் இல்லை, தமிழன், தமிழன், என்னை விட்டு விடுங்கள்’ என்று சொல்வதாக வரும். ஆக அந்தக் கால கட்டத்தில் இந்த இடத்தில் தமிழர்கள் வசித்தமையால் மட்டுமே அந்த வார்த்தையை கலிங்கர்களால் சொல்லமுடிந்தது என்பதும் ஒரு செய்தி.

ஆந்திரப் பல்கலைக்கழக சரித்திரப் பேராசிரியர் திரு கே. சுந்தரம் தன்னுடைய கட்டுரை ஒன்றில் (இது 1963ஆம் ஆண்டு ஹிந்து நாளிதழில் பிரசுரிக்கப்பட்டது) எப்படியெல்லாம் தமிழர்கள் வணிகநிமித்தம் கூட்டம் கூட்டமாக இந்தப் பிராந்தியத்தில் வசித்துவந்தார்கள் என்பதை வெகு விளக்கமாக எழுதியுள்ளார். இந்த நாளைய வணிக மையம் போல, இந்த இடங்களிலெல்லாம் தங்கினர் என்பதையும், கரையோரத்தில் ஒதுங்கும் வெளிநாட்டில் இருந்து வரும் கப்பல்கள் மூலம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்து ஏற்கனவே உள்ள வியாபார மையங்களில் தேக்கி வைத்து, தகுந்த காலத்தில் தங்கள் ஊர்களுக்கு எடுத்துச் செல்வது என்பதை தமிழர்கள் நேர்த்தியாக செய்து வந்தார்கள் என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது. அப்படிப்பட்ட மையங்கள்தான் இன்றைய விசாகப்பட்டினத்தின் ஒருபகுதியாக விளங்கும் சிம்மாசலம், மற்றும் ஸ்ரீகாகுளம் என்பதும் இந்த இரண்டு இடங்களிலும் ஏறத்தாழ தமிழர் வசிக்கும் இடங்களாகவே மாறி இருந்தன என்றும் தெரிய வந்தது.

சரி!. முதல் கல்வெட்டு வணிகர் பெரிய அளவில் இருந்தமைக்கு அதாவது கி.பி,1100 ஆம் ஆண்டின் போது,, அதாவது அமைதியான நிலையில் ஒரு வணிகர் ஆண்டவனுக்கு சமர்ப்பித்த காணிக்கையைப் பற்றி சொன்னது. ஆனால் அடுத்த இரு ஆண்டுகளில் வெட்டப்பட்ட மறு கல்வெட்டே ஒரு மாபெரும் போர் நடந்த விஷயத்தைப் பற்றி பறை சாற்றுகிறதே.. அப்படியானால் கலிங்கத்துப் பரணி எனும் போர்க் காவியம் பாடும் இடங்கள் இதுதானோ.. இங்கெல்லாம் தமிழர் யானைப் படைகளோடும், குதிரைப்படைகளோடும், (ஒட்டகங்கள் கூட இந்தப் போரில் பயன்படுத்தப்பட்டன) பெருங்கூட்டமாக வந்திருந்து இந்த இடங்களில் போர் செய்தார்களா.. அதுவும் எப்படிப் பட்ட போர் அது..

‘எது கொல் இது! இது மாயை ஒன்று கொல்!
எரி கொல்! மறலி கொல்! ஊழியன் கடை
அதுகொல்! என அலறா இரிந்தனர்
அலகு குலதியோடு ஏழ்கலிங்கரே!’

‘என்ன போர் இது.. இது வெறும் மாயையோ.. அல்லது கொள்ளை கொண்டு போகும் நெருப்போ, அல்லது உயிரைக் குடிக்கும் எமனோ, அல்லது இதுதான் ஊழிக்காலமோ, அதனால்தான் இந்த யமன் இப்படி ஒரேயடியாக தாக்குகிறானோ’ என்று ஏழு மலைப் பகுதிகளைக் கொண்டு வாழும் கலிங்க மக்களே இந்த மாபெரும் போரை வியப்பதாக வரும்.

‘ஆயிரம் யானைகளையும் ஆயிரமாயிரம் வீரர்களும் விழுங்கிய கலிங்கக் களப் போர் உரைப்போருக்கு நா ஆயிரமும், நாள் ஆயிரமும் வேண்டுமாம்’, என்று ஜெயங்கொண்டார் பாடுகிறார் என்றால் எத்தனை கடுமையாக இந்தப் போர் நடைபெற்றிருக்கவேண்டும் என்பது புரியும். திராட்சாராமம் கோயில் கல்வெட்டு இந்தப் போரைப் பற்றிப் பேசும்போது ‘சகல கலிங்கத்தையும் சாம்பல்படுத்தி’ என்று ஆரம்பிக்கின்றது. குலோத்துங்க சோழனின் மெய்க்கீர்த்தி ‘வடதிசை வேங்கி மண்டலமும் கடந்து கலிங்கமும் தநலெரி பரப்ப’ என்று பாடப்படுகிறது. ஆலங்குடி செப்பேடுகளில் இந்த கடுமையான போரில் வென்றதற்காக சோழன் புகழ் பேசப்படுகிறது.

இந்த சோழப்படை வெகுதூரம் பயணித்து கலிங்கம் வந்ததை கலிங்கத்துப் பரணி விரிவாகவே சொல்லுகிறது. தற்போதைய ஒரிசாவுக்கும், காஞ்சிபுரத்துக்கும் இடையிலான அத்தனை நதிகளையும் பட்டியல் போட்டு சோழர் படை கடந்ததாக விவரிக்கிறது. தெற்கே பாலாறு முதல், கிருஷ்ணை, கோதாவிரி முதல் வம்சதாரா நதி வரை அனைத்தையும் சொல்கிறார் ஜெயங்கொண்டார்.

சரி.. இத்தனை கொடுமையான போருக்குக் காரணம் என்ன, காவியத்தில் சொன்னபடி சாதாரணமான விஷயமான ‘திரை செலுத்தவில்லை’ என்ற ஒரு காரணத்துக்காகவா இப்படிப் பட்ட போரை தமிழர்கள் இங்கு நடத்தினார்கள். ‘எரிகின்றது பதி, இடிகின்றன மதில்’ என காணும் இடத்தை எல்லாம் இங்கு ஏன் தமிழர்கள் இப்படி நாசப்படுத்தினர்.. பேய்களுக்கெல்லாம் அவை இருக்கும் காலம் வரை யானை மாமிச மலை கிடைக்கிறது இங்கே என்று இந்தப் போரை நேரில் கண்ட ஒரு கிழப்பேய் மற்ற பேய்களையெல்லாம் இங்கே அழைத்து வந்ததாக ‘கலிங்கத்துப் பரணி’ சொல்லும் இந்தப் பயங்கரப் போருக்குப் பின்னணி என்ன..

இப்படியெல்லாம் ஆராய்ந்ததில் வந்த வினைதான் என் முதல் நாவலான வம்சதாரா.

வம்சதாரா என்றால் இரண்டு மூன்று பொருள்கள் உண்டு. முதலில் ஒரு நதியின் பெயர். ஏறத்தாழ ஒரு பெரிய காட்டாறு போல மகேந்திர மலையில் உற்பத்தி ஆகி மழைக்காலங்களில் பெருவெள்ளமாய் வரும் வழியில் உள்ள அனைத்தையும் அழித்து தன்னுள் அடக்கி அப்படியே கீழைக்கடலில் கொண்டு போய் தானும் கலந்துவிடும் நதி வம்சதாரா. (இப்போதும் அப்படித்தான் இருக்கிறது). வம்சதாரா என்றால் வம்சத்தை வீழ்த்துவதற்கும் அப்படி ஒரு பொருள் உண்டு. தெலுங்கில் தாரா என்றால் வீழ்ச்சி, (இது தமிழ்ப்பெயர்தான், கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது என்பார்கள்).
இன்னொரு எதிர்மறை பொருளும் வம்சதாராவுக்கு உண்டு. அதாவது வம்சத்தின் நட்சத்திரம், வம்சத்தை வாழ்விக்கும் ஒளி என்றும் சொல்லப்படுவது உண்டு.

இத்தனைப் பொருள்களும் தன்னகத்தே கொண்ட ஒரு கதாநாயகியையும், மேலே குறிப்பிட்ட வணிகர்களையும் அருமையான சுற்றுச் சூழல் கொண்ட இந்த விசாகப்பட்டின மாவட்டத்தையும் ஒரு களமாகக் கொண்டுதான் வம்சதாரா எனும் நாவலை எழுதி முடித்தேன். நான்கு வருட உழைப்பான இந்த நாவலில் இந்த இடங்களைப் பற்றி பல செய்திகள் சொல்லப்பட்டிருக்கின்றன.

விசாகப்பட்டினம் மற்றுமல்லாமல் கோதாவரி மாவட்டத்தையும் பற்றியும், அங்குள்ள திராட்சாராமம் சிவன் கோயிலையும் பற்றியும் கதை பேசுகின்றது. அந்தக் காலத்தில் இந்த திராட்சாராமத்திற்கு ‘இடர்க்கரம்பை’ என்ற தமிழ்ப் பெயர் உண்டு. தமிழன் கால் வைத்த இடத்திலெல்லாம் குமரனுக்கும் கோயில் எடுப்பது வழக்கம்தானே.. இங்குள்ள சிவன் கோயில்களில் எல்லாம் குமரனுக்கு என தனிச் சன்னிதிகள் தமிழர்களால் உண்டாக்கப்பட்டன. திராட்சாராமம், சாமல்கோட், ஸ்ரீமுகலிங்கம் சிவன் கோயில்களில் இப்படி செய்திருக்கிறார்கள். இன்றைய ஸ்ரீகாகுளம் நகருக்கு, குளம் என்றே அந்தக் காலத்தில் பெயர் என்பதை ஒட்டக்கூத்தனார் நூலிலிருந்து தெரியவருகிறது. இங்குள்ள மலைவாழ் மக்களின் கலைரசனை, ஆட்டங்கள் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.. தோண்டித் தோண்டிப் பார்த்து துருவித் துருவித் தேடினால் இன்னும் எத்தனையோ கிடைக்கும்.. நானும் அதைப்போலவே தோண்டிக் கொண்டே இருக்கிறேன்...
----------------------------------------------------------------------------------------------------

15 comments:

 1. அரிய செய்திகள்; அனைத்துமே இதுவரை கேட்டிராதவை.நன்றி

  தேவ்

  ReplyDelete
 2. பல அரிய செய்திகள் திவாகர். சிம்ஹாசலம் ஒரு புனிதத் தலம் மட்டுமே என்று நினைத்திருந்தேன். அங்கு இவ்வளவு வரலாறு புதைந்து கிடக்கிறதா !

  சமீபத்தில் சிம்ஹாசலம் பற்றி வரும் செய்திகள் மன வருத்தம் ஏற்படுத்துகின்றன. மறைந்த முதல்வர் ராஜசேகர் ரெட்டியின் கிறிஸ்தவ மதவெறி அரசியலின் விளைவாக, சிம்ஹாசலம் கோயிலின் சொத்துக்கள் கிறுஸ்தவ மிஷநரிகளுக்கு விற்கப்பட்டதாக அறிகிறேன்.

  இந்தக் கட்டுரை பாருங்கள் -

  http://www.organiser.org/dynamic/modules.php?name=Content&pa=showpage&pid=180&page=8

  Situated 15 kilometres from the port city of Vishakhapatnam, SIMACHALAM is the Ancient Temple of Narasimha Swamy. Very Recently the Temple has come under siege by Missionaries, who have illegally occupied over 300 Acres of temple land with the help of Missionary land Mafias and local Congress Leaders. The Devotees are denied access at the foothills by the Missionaries who hurl insults and abuse at Hindu God as demons and try physically to stop them from undertaking the yatra. They lure these Hindus by providing them basic day to day needs. On many occasions the devotees have complained to the local administration, which watches these events but does not enforce the law. In a span of 20 Months, four churches and 3 convent schools have come up in the vicinity at the foothills and acting criminally a small temple of Hanuman Ji has also been demolished in the thick of the night.

  இந்த அளவுக்கா அங்கு கிறிஸ்தவ ஆதிக்கம் உள்ளது? என்ன கொடுமை!

  ReplyDelete
 3. திவாகர்,

  வம்சதாரா என்பதற்கு நீங்கள் கூறும் இரு பொருள்கள் உண்மையில் இருவேறு சொற்கள் -

  vamsha*dhaa*raa - தாரை தாரையாக என்பதில் உள்ளது போல. நதியின் பெயர்.
  vamsha*thaa*raa - தாரா என்றால் நட்சத்திரம், ஒளிவிளக்கு என்று இதைக் குறிக்கிறீர்கள்.

  தமிழ் உச்சரிப்புப் பற்றாக் குறையைக் கணக்கில் கொண்டால் தான் இந்த இரு பொருள்கள் வரும் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 4. கலிங்கத்துப்பரணி முதல் வம்சதரா பெயர்க் காரணம் வரை பல புதிய அழகிய தகவல்கள், திவாகர் சார்! பதிவு மிக நன்றாக வந்திருக்கிறது!

  ReplyDelete
 5. மிகவும் அரிய தகவல்கல். நீண்ட ஆராயிச்சி. கடிண உழைப்பு, இவை எதுவும் வீண் போகவில்லை. தொடரட்டும் உன் சீரிய் பணி. (நாடகமும் எழது)

  ReplyDelete
 6. >>>The Devotees are denied access at the foothills by the Missionaries who hurl insults and abuse at Hindu God as demons and try physically to stop them from undertaking the yatra<<<

  ஜடாயு சார்
  இது கீழே அடிவார நடைப்படி அருகே நடந்த சம்பவம். ஆனால் .. சிம்மாசலத்தில் மலை மேலே சின்ன சமவெளிப்பகுதியில் உள்ள கோவில் வாசலிலேயே இவர்கள் 'பிடிபட்டார்கள்'. இரண்டு மூன்று நாட்களுக்கு இங்கு அதை பரபரப்பாகப் பேசினார்கள். இப்போது அந்த பரபரப்பும் போய்விட்டது. எல்லாம் நார்மல்.. இதெல்லாம் சகஜம்.. என்ற நிலைக்கு வந்து விட்டது.

  திவாகர்

  ReplyDelete
 7. தேவ், மனோகர்:

  இதைப் போல அரிய செய்திகள் எங்கும் நிரவி உள்ளன. கிருஷ்ணா கோதாவரி நதிக்கரை முழுவதும் சரித்திரம் நிறைந்து நிகழ்ந்த இடங்கள். ஆராய்ச்சி அதிகம் செய்யப்படாத இடங்கள் இவை.

  தி

  ReplyDelete
 8. ரவி!

  பதிவு எப்படி சரியாக பதிக்கப்படவேண்டும் என்பதை உங்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொள்கிறேன். (ஆனா ரொம்ப ஸ்லோ)

  தி

  ReplyDelete
 9. arumaiyaana pathivu

  பரணி - inayathil tharavirakkam seiyum padi kidaikkumo?

  nandri
  vijay

  ReplyDelete
 10. Kalingathup parani is available here:

  http://bharani.dli.ernet.in/pmadurai/mp123.html

  A copy can be saved to the local machine provided the first page is not altered. Hope this helps.

  அன்புடன்,
  ஹரிகி.

  This is sent by Thiru Harikrishnan, My senier to group mail.

  Dhivakar

  ReplyDelete
 11. //இத்தனைப் பொருள்களும் தன்னகத்தே கொண்ட ஒரு கதாநாயகியையும், மேலே குறிப்பிட்ட வணிகர்களையும் அருமையான சுற்றுச் சூழல் கொண்ட இந்த விசாகப்பட்டின மாவட்டத்தையும் ஒரு களமாகக் கொண்டுதான் வம்சதாரா எனும் நாவலை எழுதி முடித்தேன். நான்கு வருட உழைப்பான இந்த நாவலில் இந்த இடங்களைப் பற்றி பல செய்திகள் சொல்லப்பட்டிருக்கின்றன.//

  தீவிரமான உழைப்புடன் கூடிய கதையைப் படிக்கணும். பல புதிய விஷயங்களைத் தெரிவித்திருக்கிறீர்கள். தேடல் தொடரட்டும். தொடர்ந்தால் இன்னும் பல நல்ல நாவல்களும், தேடுதல் மூலம் கூடுதல் தகவல்களும் கிட்டுமே. ஒரு காலத்தில் தமிழர் எப்படிப் பரந்து விரிந்து இருந்தனர் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. பாராட்டுகள். தாமதமான பின்னூட்டத்துக்கு மன்னிக்கவும். :(

  ReplyDelete
 12. திவாகர்,
  வம்சதாரா ,நதி மூலம் பதிந்ததற்கு நன்றி. எவ்வளவு உழைப்பு உள்ளடக்கி இந்த நாவல் வந்து இருக்கிறது என்பதைப் பார்க்கும் போது பிரமிப்பு அகல மறுக்கிறது.
  சம்ஸ்கிருத தா இரண்டு சப்தம் இருக்கும் இல்லையா.தைல தாரை போல என்று ஒரு சிமிலி வரும்.
  நட்சத்திரம் இருக்கவே இருக்கு:)
  வெகு சுவையான தாரையைக் கொடுத்து இருக்கிறீர்கள்.
  நன்றி திவாகர்.
  உங்கள் ''குமுதினி'' அவர்களைப் பற்றிய பதிவிற்கு என்னால் மிந்தமிழில் பின்னூட்டம் போட முடியவில்லை

  ReplyDelete
 13. தேடல் தொடரட்டும். தொடர்ந்தால் இன்னும் பல நல்ல நாவல்களும், தேடுதல் மூலம் கூடுதல் தகவல்களும் கிட்டுமே.

  கீதாம்மா!
  உங்கள் சொல்படியே ஆக இறைவன் அருள் புரியட்டும்.

  திவாகர்

  ReplyDelete
 14. ஆஹா வல்லிம்மா எங்கயாவது வந்து ஆசி கொடுத்தா போதுமே..

  நன்றிம்மா!

  திவாகர்

  ReplyDelete