Follow by Email

Saturday, May 18, 2019


சாஸோ எனும் ஆந்திர ஜெயகாந்தன்.
பழைய புதிய ஆந்திராவின் கலைத் தலைநகரமாக இருப்பது எப்போதுமே விஜயவாடாதான் என்று பலவருடங்களாய் எனக்குள் ஒரு நினைப்பு இருந்துகொண்டே இருக்கிறது. காரணம் விஜயவாடாவில் நான் இருந்த ஆரம்ப வருட கால கட்டங்களில் ஏராளமான கலைநிகழ்ச்சிகள் கண்டு களித்தவன் என்கிற முறையிலும் என்னுடைய நாடகங்களுக்கு வெற்றிகரமான அடிக்கல் கொடுத்ததும் விஜயவாடாதான் என்பதாலும் இந்த நினைப்பு ஒருவேளை இருந்திருக்கும். சாவித்திரியிலிருந்து சில்க் ஸ்மிதா வரை தென்னகத் திரை உலகுக்குக் கொடையாகக் கொடுத்த ஊரும் விஜயவாடாதான். தெலுங்குத் திரையுலகின் மிகப் பிரசித்தமான என்.டி.ஆரும், ஏ.என்.ஆரும் இந்தப் பகுதியின் பக்கத்தில்தான் பிறந்தனர். தெலுங்கு சினிமாவில் இன்றளவும் போற்றிப் பாடப்படுகின்ற பின்னணிப்பாடகர் கண்டசாலா கூட இந்த பிராந்தியம்தான். திரைப்படங்களும் நாடகங்களும் மூச்சுக்காற்று போல விட்டு எடுத்துக்கொண்டுத் திரியும் மக்கள் நிறைந்த நகரம் விஜயவாடா.. நாங்கள் (நானும் நண்பன் தேவாவும்) நாடகம் போடும் சமயத்தில் நாடகப் பாத்திரங்களுக்காக அதுவும் பெண் கதாபாத்திரங்களுக்காகத் தேடி அலைந்த நாட்கள் விஜயவாடாவில் உண்டுதான்.

ஆனால் கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால் எத்தனைதான் விஜயவாடா கலைத் துறையில் புகழ்பெற்று விளங்கினாலும், தெலுங்கு இலக்கியத் துறையில்  அறிஞர்களின் நகரமாக ஆந்திராவில் வேறு ஒன்று இருப்பதைப் போகப் போகத்தான் புரிந்துகொண்டேன். அது ஆந்திராவின் வடகோடியில் இருக்கும் விஜயநகரம்தான். உண்மையில் ஆந்திர அறிஞர்களுக்கிடையே ஒரு போட்டி வைத்தால் விஜயநகரத்துக்காரர்கள் வெகு எளிதாக திறமையினை முன்னின்று காட்டி வென்று விடுவார்கள்தான்.

ஊர் என்னவோ மிகச் சிறிய ஊர்தான். ஆனால் ஊரிலுள்ள அத்தனை மக்களும் ஏதாவது ஒரு வகையில் தெலுங்கு மொழிக்கும் நாட்டின் பண்பாட்டுக்கும் மிகவும் உறுதுணையாக இருந்தார்களோ என்ற எண்ணம் கூட வரும். குருஜாடா அப்பாராவ் உட்பட எத்தனையோ சிறந்த இலக்கியகர்த்தாக்களை தெலுங்கு இலக்கிய உலகுக்கு அள்ளித்தந்த ஊர் விஜயநகரம்தான்.. புரட்சிகரமான கருத்துகள் முன்வைத்து அதி முக்கியமாக முதலாளிவர்க்கத்துக்கு எதிராக பேனாமுனைப் போர் நடத்தியவர்கள் விஜயநகரத்தார்தான். குருஜாடா அப்பாராவ், சாகண்டி ஸோமாயஜுலு, போன்றவர்கள் அந்த காலகட்டத்திலிருந்த சாதாரணமான ஏழைகளுக்காகவும் அந்தச் சமுதாயம் முன்னேறவும் எழுதிக்கொண்டே இருந்தார்கள்.

தமிழில் எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு இணையாக தெலுங்கு இலக்கிய உலகில் பேசக்கூடிய, எழுதக்கூடிய எழுத்தாளர்தான் சாகண்டி ஸோமாயுஜுலு (Chaganti Somayajulu) என்கிற சாஸோ (ChaSo) அவர்கள். . அடித்தட்டு வர்க்கத்தோடு, மத்தியதர வர்க்கமும் பாகுபாடின்றி முன்னேறவேண்டுமென தன் எழுத்தை முழுவீச்சாகப் பயன்படுத்தியவர் சாஸோ. சமீபத்தில் இவருடைய நூறாண்டு கடந்த பிறந்தநாள் விழாவுக்கு என்னையும் அழைத்து சிறப்பித்தனர் சாஸோவின் குடும்பத்தார்.

சாஸோவின் குமாரத்தி சாகண்டி துளசியும் தற்காலத்து தெலுங்கு எழுத்தாளர்களில் முதன்மையானவர். என்னுடைய வம்சதாரா புதினம் சமீபத்தில் தெலுங்கு மொழிமாற்றம் செய்யப்பட்டு பெரிதும் வரவேற்கப்பட்டதைக் கேள்விப்பட்ட துளசி அம்மையார் ஒருநாள் திடீரென தொலைபேசி மூலம் சாஸோவின் ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக வந்திருந்து கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தார். அத்துடன் இல்லாமல் ‘‘உங்களுக்கு அப்பாவின் புத்தகம் ஒன்றினை அனுப்புகிறேன்.. அது இப்போதுதான் சாகித்ய அகடமியால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. சாஸோவின் எழுத்துக்கள் பற்றியும் அவரைப் பற்றியும் அறிந்துகொள்ள இந்தப் புத்தகம் உதவும். நீங்கள் விழாவில் பேசுகிறீர்கள்’ என்ற அன்புக் கட்டளையிட்டதால் விஜயநகரம் வருவதாக ஒப்புக்கொண்டேன். 
விஜயநகரம் செல்வதற்கு இன்னொரு காரணம் அங்கே எனக்குப் பிடித்த பைடதல்லி அம்மனின் தரிசன வாய்ப்பு கிடைக்குமே என்பதாலும் கூட.. இங்கு தசராவுக்குப் பின்னர் வரும் ‘சிரிமானு’ உற்சவம் மிக மிகப் பிரசித்தமானது. (வம்சதாரா புதினத்தில் குறிப்பிட்டுள்ளேன்).

’சாஸோவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்’ என்ற தலைப்பில் தமிழில் ‘கௌரி கிருபானந்தன்’ மொழி பெயர்த்து சாகித்ய அகடமியால் புதிதாக வெளியிடப்பட்ட புத்தகத்தை அனுப்பி வைத்தார். இந்தப் புத்தகத்தை வெளியிடும் பாக்கியத்தையும் விழா மேடையில் வழங்கினார் துளசி அம்மையார்.

மனித உறவுகள் பொருளாதார ரீதியில் வேறுபட்டவை என்பதையும் சமுதாய ஏற்றதாழ்வுகள் அந்தக் காலத்தில் மலிந்து கிடந்ததையும் தனிமனிதரின் எண்ணங்கள் சீரடைந்தால் ஒழிய சமுதாய மாற்றத்தைக் கொண்டுவருவது கடினம் என்பதும் இந்தச் சிறுகதைகளைப் படித்ததில் ஏற்படும் தாக்கத்தில் யாருமே உணர்ந்துகொள்ளமுடியும்.

சாஸோவின் எழுத்துகளும் ஜெயகாந்தனின் எழுத்துகளும் மிக அழகாக ஒத்துப் போவது எனக்கு ஆச்சரியம்தான். ஒருவரைப் போல மற்றொருவர் எழுதமுடியாது என்று எனக்குத் தெரியும். ஆனாலும் இருவர் எழுத்துக்களைப் படித்ததன் மூலம் இந்த ஆச்சரியத்தை உணர்ந்தேன்.ஜெயகாந்தன் எழுதிய  ’சில நேரங்களில் சில மனிதர்கள்’ ’ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் சாஸோவின் சிறுகதைகளில் நிறைய இடங்களில் வரும். அதே வலுவான எழுத்து. ஒரே சீரான நடை. சமுதாயச் சீர்கேடுகளை மிகவும் வலுவாக வெளிக்கொணர்ந்து அதன் தராதரத்தினை ஆராய்ந்து பார்க்கும் எழுத்துகள்.
சாஸோ மிக தைரியமான எழுத்தாளராக இருந்திருக்கிறார். மேல்தட்டு வர்க்கத்தை அந்தக் காலத்தில் கேள்வி கேட்பதோ அவர்கள் ஏழைகளை சுரண்டி வாழ்வதையும் உல்லாச உற்சாக நடவடிக்கைகளை கேலி செய்தும் எழுதுவது என்பது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில் இவர்கள் எழுத்துகள் படிக்கப்படுவதே மேல்தட்டு வர்க்கத்தாலும், மத்தியதர வர்க்கத்தாலும்தான். ஆனால் சாஸோ தைரியமாக அவர்களிடமிருந்துகொண்டே அவர்கள் அவலங்கள் பற்றி எழுதியிருக்கிறார். சாஸோவின் எழுத்துகள் மிகவும் எளிமையானது. எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் தெலுங்கு நாட்டில் படிப்பவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவான சதவிகிதம்தான் என்பதையும் நாம் நினைத்துப் பார்க்கவேண்டும்.

ஜெயகாந்தன் போலவே மத்தியதரவர்க்கத்தைப் பற்றிய நிறை குறைகள், அவர்களின் தனிப்பட்ட உணர்ச்சிகளின் சீரும் சிறப்பும், சீர்கேடும் அப்பட்டமானவகையில் சொல்லப்படுவது ஏராளமாகவே சாஸோவின் எழுத்தில் மலிந்து கிடக்கின்றன, சாஸோ சிறுகதை மன்னர் என்பதை அவரின் ஒவ்வொரு கதையும் தெளிவுபடுத்தும். பொண்டு மல்லலு, ஏலூரு வெள்ளாலி, பதிலி (கடிதக் கதை), லேடி கருணாகரம் போன்ற கதைகள் அக்கால சமுதாயத்தை நம் கண் முன்னே அப்படியே நிறுத்துகின்றன.

விஜயநகரத்தில் பெரிய நூலகம் குருஜாடா அப்பாராவ் பெயரில் அரசாங்கம் நிர்மாணித்துள்ளது. அந்த நூலகத்தின் மாடியிலேயே சாஸோ’வின் நினைவாக ஒரு அரங்கத்தையே நிர்மாணித்திருக்கிறார்கள் சாஸோவின் வாரிசுகள். இலக்கியவாதிகள் அடிக்கடி கூடும் இடமாக இந்த அரங்கம் அமைந்துள்ளது இன்னமும் விசேஷம்தான். கடந்த 2015 ஆம் ஆண்டில்தான் சாஸோவின் நூற்றாண்டு விழாவை மிகப் பிரமாண்டமாகக் கொண்டாடினார்களாம். சாஸோவின் பெயரில் ஒரு நினைவு விருதை நிறுவி ஆண்டுதோறும் தெலுங்கில் சிறந்த படைப்பாளி ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவருக்கு பரிசும் நிதித் தொகையும் வழங்கிவருகிறார்கள். இந்த விழாவின் போது கூட இந்த நற்செயல் தொடர்ந்தது. விஜயநகரத்திலிருந்து தொலைதூரத்திலுள்ள கடப்பாவிலிருந்து வேம்பள்ளி ஷெரீஃப் எனும் இளைஞரை வரவழைத்து அவர் எழுதிய ‘ஜும்மா’ எனும் நூலுக்காக விருது வழங்கினார்கள். ஷெரிஃப் ஏற்கனவே யுவஸாகித்ய விருதினைப் பெற்றவர் என்றாலும் சாஸோவின் பெயரால் ஏற்படுத்தப்பட்ட இந்த நினைவு விருது என்பது அவருக்கு மிகவும் மேன்மையாகப் பட்டது. இதிலிருந்தே சாஸோ எழுத்துகளின் மேன்மை கூட நமக்கு வெளிப்படுகின்றது.

சாகண்டி துளசி அம்மையாரின் அன்பும் ஆளுமையும் எனக்குப் பிடித்திருந்தது. அங்கு உள்ளோர் அனைவருமே துளசி அம்மையாரை தங்களின் சொந்த உறவாகப் பாவித்து மரியாதை செய்வதைப் பார்த்து மனம் மகிழ்ச்சியுற்றது, அதற்குக் காரணம் சாஸோவா, அவரின் மேன்மையான எழுத்துகளா,  அல்லது தந்தையின் எண்ண ஆளுமைகளை அப்படியே தன்னுள் பாவித்துக் கொண்டு தனக்கென ஒரு பாணி வைத்துக் கொண்டு எழுதிவரும் துளசியின் திறமையா என்பதையெல்லாம் சட்டென முடிவெடுத்துச் சொல்லமுடியாது.

ஆந்திர ஜெயகாந்தனின் அன்பு வாரிசுக்கு என்றென்றும் வாழ்த்துகள் என்று மட்டும் சொல்லமுடிந்தது.

Top Image no.1 - The symbolic fort tower of Vizianagaram
2. Writer Chaganti Somayujulu
3. Pydathalli Ammavaru Temple
4. Dr. Chaganti Tulasi
5 and 6. Function photos.
first image to 4th one - Thanks to Google
5 and 6 - Self.

2 comments:

  1. தகவலுக்கு நன்றி ஐயா. அவரது நூலை தமிழாக்கம் செய்யலாமே.

    ReplyDelete
  2. இந்தத் தமிழாக்க சேவைகளை இந்திய சாஹித்ய அகடமி செய்து கொண்டிருக்கிறது. அந்த அகடமியின் அமைக்கப்பட்டதற்கான அடிப்படையே நல்ல நூல்களையெல்லாம் பிற மொழிகளில் கொண்டு செல்லவேண்டுமென்பதே.

    ReplyDelete