Saturday, June 18, 2011

தமிழ் ஆந்திரத்துக்குக் கொடுத்த ‘வைணவம் ஆயிரம்’

’மற்றவர் துயரத்தை உணர்ந்து வருந்துபவன், அந்தத் துயரத்தைப் போக எவன் உதவி புரிகிறானோ அவனே வைணவன்’ என உடையவர் பற்றிய வரலாற்றில் உடையவர் சொல்லியதாக வரும்.

ஒருமுறை ஆந்திரத்து ராமானுஜர் என்று அடியேன் அன்புடன் அழைக்கும் (தற்சமயம் வைகுண்டவாசி) ஸ்ரீபாஷ்யம் அப்பளாசார்யுலு அவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் சொன்ன ஒரு வார்த்தை இப்போதும் காதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது.

“நான் சின்ன வயதில் என்னை ஸ்ரீவைணவன் என்பதாகவே நினைத்துக் கொண்டிருந்தேனே தவிர ஒரு பிராம்மண குலத்தில் பிறந்தவனாக நினைத்துப் பார்க்கக் கூட இல்லை.”

ஆந்திரத்தைப் பொறுத்தவரை அந்த உத்தமர் சொன்னது மிகப் பொருத்தமானதுதான். ஸ்ரீவைஷ்ணவர்கள் ஜாதிப்பிரிவினைகளே அல்லாத தனிக் குழுமமாகத்தான் தங்களை சமூகத்துக்கு இங்கு அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். ஜாதி என்பதே ஒவ்வொருவர் செய்யும் தொழிலால வந்தது என்பது அனைவரும் அறிந்த விஷயம் என்றாலும், அது ஒரு பிரிவினையை சமூகத்தில் கொண்டுவந்ததும், அந்த ஜாதிப்பிரிவினை சமூகத்தையே நாசமாக்கிக் கொண்டிருப்பதையுமே காலம் காலமாகவே அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இன்னமும் சொல்லப்போனால் இப்படிப்பட்ட காலத்தில் ஆந்திரத்தில் புரட்சிகரமாக இங்கு ஒரு ஜாதிக்கலவையே ஸ்ரீவைஷ்ணவத்தில் ஒரு பகுதியில் நடந்து முடிந்திருக்கிறது. இந்த ஜாதிக்கலவையில் மூன்று முக்கிய சாதிகள், பிராம்மணர், வைசியர், சத்திரியர் இந்த மூவரும் கலந்து ஸ்ரீவைஷ்ணவராகி, தங்களை த்ரைவர்க்கம் என்றே அழைத்துக் கொண்டனர். இவர்கள் எல்லோருமே நம் தமிழகத்தில் சாதிகள் ஒழிய பாடுபட்ட ஸ்ரீ ராமானுஜர் அடி தொட்டி வழி படுபவர்கள், அவரது பெயரில் ராமானுஜ கூடம் நிறுவி அங்கு திராவிட வேதமான நம்மாழ்வார் பாடல்களையும், ஆண்டாளின் தீந்தமிழ்ப் பாடல்களையும் தினசரி பாராயணம் செய்து கொண்டிருப்பவர்கள். இவர்களுக்கு தாய்மொழி தெலுங்கானாலும், தெய்வமொழி என்னவோ தமிழ்தான்.

ஒருமுறை எனக்கும் பெரியவர் சம்பத்துக்கும் இங்குள்ள ராமானுஜகூடத்தில் வைகாசி விசாகத் திருநாளன்று நம்மாழ்வார் விழாவில் பங்கு கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்கள் அங்கு பூஜை செய்யும் அழகு, ஆழ்வார் பாடல்களை நிதானமாகப் பாடும் பாங்கு (இப்போதெல்லாம் தமிழகத்தில் பெருமாள் கோயில்களில் அவசரம் அவசரமாக ஆழ்வார் பாசுரங்கள் சொல்லப்படும் வேகம் பார்க்கவேண்டுமே!) இவைகளையெல்லாம் கேட்டபோதும், நம் கொஞ்சுதமிழ் அவர்கள் வாயால் பாடப்படும் போதும் எங்களை மிகவும் வியப்பில் ஆழ்த்தி விட்டனர். அவர்கள் வீட்டு பெண்’மணி’கள் ஆண்டாள் திருப்பாவை மிக அழகாக பாடுவார்கள். கோதையின் தீந்தமிழ்ப் பாடல்கள் அத்தனையும் அவர்களுக்கு மனப்பாடம். அதனால் ஒவ்வொரு மார்கழியன்றும் ஒருநாள் அவர்களைக் கூப்பிட்டு தமிழ்மன்றத்தில் தமிழ்பாட அழைப்பதும் உண்டு.

சரி, ஸ்ரீவைஷ்ணவம் ஆந்திரத்துக்கு எப்போது வந்திருக்கும்?. நிச்சயம் ராமானுஜருக்கும் முந்தையகாலத்தில்தான் தமிழகத்திலிருந்து இங்கு வந்தது என்றே சொல்லலாம். பத்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு ஏராளமான வைஷ்ணவக்குடும்பங்கள் இங்கு குடியேறியதாக திரு பி.சேஷகிரிராவ் தனது ‘ஆந்திரா சமூக சரித்திரம்’ புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக ஸ்ரீவிஷ்ணு பரப்பிரம்ம தத்துவத்தை முன்னிலைப்படுத்தி ஆழ்வார்களால் ஆறாம் நூற்றாண்டு முதல் தமிழகத்தில் பாசுரங்கள் பாடப்பட்டாலும், வைணவம் மதநெறியில் கொண்டுசெல்லப்பட்டது என்பது ஏறத்தாழ பத்தாம் நூற்றாண்டின் கடைசியிலும், பதினொன்றாம் நூற்றாண்டின் ஆரம்பித்திலும்தான் என்று சொல்லலாம். அந்தச் சமயத்தில் தோன்றிய நாதமுனிகள் வைணவமதத்தை மக்களிடையே கொண்டுசென்ற மிகப் பெரிய ஆச்சாரியார். அவரின் சீடர்கள்தான் திராவிடமெங்கும் குடும்பம் குடும்பமாக இடம் பெயர்ந்து வைஷ்ணவமதத்தை ஆங்காங்கே விதைத்தவர்கள். (இப்படிப் பட்ட வைஷ்ணவர்களைப் பற்றிய தகவல் இன்றைய பாபட்லாவில் (குண்டூர் அருகே) கிடைத்த கல்வெட்டின் மூலம் தெரிகின்றது – AR No.322 of 1899 and AR no.298C mentioning in sanscrit that four vaishnava Brahmins fetched water. The period is 1023 AD) இந்த விதைதான் அடுத்த ஐம்பது அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு உடையவர் ராமானுஜர் இந்த இடங்களில் வந்தபோதெல்லாம் வைஷ்ணவம் மரமாக வளர்க்கப்பட பெரிதும் உதவியது. முதலில் ஆங்காங்கே கட்டப்பட்ட பெருமாள் கோவில்களில் சேவைக்காக வந்தவர்கள் இவர்கள் என பொன்னூரில் (இதுவும் குண்டூர் அருகே உள்ள இடம்) உள்ள இன்னொரு கல்வெட்டு சொல்கின்றது. ஆக ஆந்திர வைஷ்ணவம் என்பதின் வேர் அதன் அடுத்த வீடான தமிழகம்தான். அதிலும் கிருஷ்ணை நதியின் தென்கரைப் பகுதி அரசர்கள் காலம் காலமாக எல்லா மதத்தவருக்கும் கால் பதிக்க இடம் கொடுத்தவர்கள் என்ற பெருமையைப் பெற்றவர்கள். காலத்துக்குத் தகுந்தவாறு பார்க்கையில் ஆதியில் புத்த பெருமான் தன் சீடர்களுடனும், தொண்ணூற்றாறு தேசத்து ராசாக்களுடனும் இங்குள்ள அமராவதி (தான்யகடகம்) நகருக்கு விஜயம் செய்து ’காலச்சக்கரம்’ எனும் பிற்கால நிகழ்வுகளை எடுத்துரைத்ததாக சொல்லப்படுகிறது. இதைப் பற்றிய ஸ்தூபி ஒன்று புத்தர் வந்து சென்ற இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு கி.மு 3 நூற்றாண்டு சமயத்தில் சாதவாகன அரசர்களால் நிறுவப்பட்டது (அது இன்னமும் உள்ளது) முதன் முதலாக தென்னகத்திலேயே பௌத்தமதம் மிக வேகமாகப் பரவிய இடம், அதன் பிறகு வேதமதம் மறுபடி காலூன்ற இடம் கொடுத்ததும் இந்த அரசர்கள்தான். வேதமதம் என்றதும் சைவ வைணவம் இரண்டும் கலந்தே இருந்தாலும் இதே பிராந்திய அரசர்கள் ஒவ்வொரு சமயத்தில் வைணவத்துக்கும் விஷ்ணு கோயில்களுக்கும் அதிக முக்கியத்துவத்தைக் கொடுத்திருந்தார்கள். வைஷ்ணவம் மிக அதிகமாக பரவிய இடங்கள் கூட குண்டூர் மாவட்டத்தில்தான். ஆந்திர வரலாற்றை மிக விவரங்களோடு எழுதிய என். வெங்கட்ராமய்யா, குண்டூர் மாவட்டத்தை வைணவர்களின் குடியிருப்புகள் ஆயிரம் ஆண்டுகளாக வளர்ந்து விரிந்த இடமாகவும் குறிப்பிடுகிறார். பாபட்லா, பொன்னூர் (நிடப்ரோலு), சாட்லூரு, வங்கிப்பற்று, கரம்பிச்செடு, புட்னூர், வீரவல்லி, குண்டூர் போன்ற இடங்களில் வைணவப் பிராமணர்கள் தமிழகத்திலிருந்து குடியேறியதாக மறைந்த தெலுங்கு பல்கலைக் கழகப் பேராசிரியர் பி.எஸ்.எல், ஹனுமந்தராவ் ’சோஷியல் மொபிலிடி இன் ஆந்திரப்பிரதேஷ்’ எனும் புத்தகத்தில் விரிவாக எழுதியுள்ளார். இந்த கிராமங்கள் அனைத்தும் குண்டூர் மாவட்டத்தில்தான் உள்ளன.

இந்த குண்டூர் மாவட்டத்தில்தான் கிருஷ்ணை நதி தென்கரையில் உண்டவல்லி குகைக் கோயில் உள்ளது. சிற்பச் சிறப்பு வாய்ந்த இந்த உண்டவல்லி குகைக் கோயில் மிகப்பழையதுதான் என்றாலும் காலம் காலமாக் அங்கு இருந்த ராஜாக்கள் புதிப்பித்துக் கொண்டோ அல்லது புதிதாக சேர்த்துக் கொண்டே இருந்திருக்க வேண்டும். நரசிம்ம சுவாமி கோயில்கள் நிறைந்த இடம் கூட இதுதான். விஷ்ணு மூர்த்தி ஆதிசேடன் மீது சயனகோலத்தில் வைகுண்டத்தில் இருந்த காட்சியை அப்படியே சிற்பிகள் அற்புதமான முறையில் செதுக்கி வைத்துள்ளனர். விஷ்ணுவின் இரண்டு வேறுபட்ட முக்கிய அவதாரங்களான வாமன, திருவிக்கிரம சிற்பங்கள் கண்ணைக் கவருகின்றன.(உண்டவல்லியில் செதுக்கப்பட்ட அற்புதமான சிற்பம் - மூன்றடி மண் கேட்டான், வாமனன் உலகிலே - மகாபலி அவன் பின்னே அவனைத் தடுக்கும் சுக்கிராச்சாரியார், வாமனன்) ஆஹா.. வாமனன் திரிவிக்கிரமனாகி மூன்றாவது அடிக்காக அப்படியே காலை உயரத் தூஊஊஊக்கி மாவலியின் தலையில் கால் வைப்பது - உண்டவல்லியின் இன்னொரு அற்புதச் சிற்பச் செல்வம்)

பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப்பிறகு ஆந்திர வைணவத்தில் சிறிது தொய்வு ஏற்பட்டாலும் பதினைந்தாம் நூற்றாண்டில் மிகபெரிய வளர்ச்சியை விஜயநகர ராஜாவான செல்லப்ப நரசிம்மன் மூலமாக கண்ட பிராந்தியம் கூட இதுதான். பிறகு வந்த ஸ்ரீகிருஷ்ணதேவராயர் தன்னை வைஷ்ணவராகவே உலகுக்கு அறிவித்துக் கொண்டு, வைஷ்ணவ வரலாறாக தெலுங்கில் ‘ஆ முக்த மால்யதா’ என்ற காவியம் படைத்தவர். ’ஆ முக்த மால்யதா’ தமிழிலிருந்து வந்த வைணவத்தின் சரித்திரம் சொல்லும் நூல்.

திருப்பதி அருகே சந்திரகிரி கோட்டையில் கந்தாடை அய்யங்கார் என்பவர் விஜயநகர ராஜாவுக்கு அந்தச் ச்மயத்தில் மந்திரியாகவும் ஆலோசகராகவும் இருந்ததாக சரித்திர ஆதாரங்கள் உள்ளன. பர்டன் ஸ்டெயின் எழுதிய ‘விஜயநகரம்’ புத்தகத்தில் இந்த விவரம் உள்ளது. ராஜ மரியாதை பெற்று வந்த வைணவர்களுக்கு அய்யங்கார் என்று அழைக்கும் விவரங்கள் ஏராளமாக விஜயநகர நாயக்கர் காலத்து எழுத்துகளில் காணப்படுகின்றன. எப்படி சோழர்கள் காலத்தில் ’பிரும்மராயர்’ எனும் பட்டம் அமைச்சுப் பணி செய்யும் பிராம்மணர்களுக்கு ஏற்பட்டதோ, அதே போல விஜயநகர அரசர்கள் காலத்தில் ராஜகாரியம் அல்லது குருஸ்தானத்தில் உள்ள வைஷ்ணவ பிராம்மணர்களுக்கு இந்த தெலுங்கு மரியாதைச் சொல் சேர்ந்திருக்கலாம். எல்லாப்பெயர்களும் காலப்போக்குக்கு ஏற்றவாறு கொண்டுள்ள மாற்றம்தான் வைஷ்ணவர்களுக்கு ஆந்திரம் மூலமாக வந்த மாற்றமாகவும் கொள்ளலாம்.

ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் 15, 16 ஆம் நூற்றாண்டில் தெலுங்குதான் தமிழகம் உள்ளிட்ட தென்னகத்தின் முக்கியப்பகுதிகளில் ஆட்சி மொழி.

அதே சமயத்தில் ஆந்திராவில் தமிழ்நாட்டு வைஷ்ணவம் பரவி ஆயிரம் ஆண்டுகளாக செழித்து வரும் நிலையை இந்தச் சமயத்தில் நம் கோதை நாச்சியார் இங்கு வந்து பார்த்தால் ‘வாரணம் ஆயிரம்’ பாடலோடு ‘வைணவம் ஆயிரம்’ என ஆரம்பித்து பாடுவாளோ என்னவோ..

20 comments:

  1. சூப்பர்! அருமையான கட்டுரை! ஒரு நூலாய் விரிவதற்கான அனைத்து புள்ளிகளும் இந்தக் கட்டுரையில் அடங்கியுள்ளன!

    //ஆந்திரத்தில் புரட்சிகரமாக இங்கு ஒரு ஜாதிக்கலவையே ஸ்ரீவைஷ்ணவத்தில் ஒரு பகுதியில் நடந்து முடிந்திருக்கிறது.
    இந்த ஜாதிக்கலவையில் மூன்று முக்கிய சாதிகள், பிராம்மணர், வைசியர், சத்திரியர் இந்த மூவரும் கலந்து ஸ்ரீவைஷ்ணவராகி, தங்களை த்ரைவர்க்கம் என்றே அழைத்துக் கொண்டனர்//

    அருமை!

    ReplyDelete
  2. மிக அழகானதொரு கட்டுரை.இன்றளவும் இந்தியாவில், தெலுங்கு பெரும்பாலானர்வர்கள் பேசப்படும் மொழியாக உள்ளது அல்லவா.மிகப் பழமையான சிற்பங்களின் வடிவங்களையும் சேர்த்துக் கொடுத்திருப்பது சிறப்பு ஐயா. பகிர்விற்கு நன்றி.வைணவம் பற்றி அறிந்து கொள்ள மிக எளிமையான ஒரு கட்டுரை.

    ReplyDelete
  3. enna sir, poetryinstone guest post poda vendiya pathivai inge pottuteenga !! the pillar sculpture is amazing, for such an early date of Undavalli

    ReplyDelete
  4. katturai arumai... vainaththai patti therinthum kollalaam.

    ReplyDelete
  5. >>பிராம்மணர், வைசியர், சத்திரியர் இந்த மூவரும் கலந்து ஸ்ரீவைஷ்ணவராகி, தங்களை த்ரைவர்க்கம் என்றே அழைத்துக் கொண்<<

    திரு சம்பத் அவர்கள் தனி மடலில் ’த்ரைவர்ணிகா’ என்று அழைக்கவேண்டும் என்று எழுதியுள்ளார். த்ரைவர்க்கம் இல்லை.. த்ரைவர்ணிகம். திரு சம்பத் அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  6. திரு கே ஆர் எஸ்:
    கட்டுரையை ரசித்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  7. விஜய்:

    கல்லிலே கலை வண்ணம் கண்டான் பதிவுகளில் உண்டவல்லி கலைச் செல்வங்கள் ஏற்கனவே இடம் பெற்றுள்ளனவே.. மறுபடியும் எதற்கு எனப் போடவில்லை.. சிற்பம் என வரும்போது என் முதல் விருப்பம் ‘பொயட்ரி இன் ஸ்டோன்’ தான்.

    ReplyDelete
  8. உளி, பித்தன் வாக்கு ஆகியோருக்கு நன்றி!

    பவளாவின் (நித்திலம்) வாழ்த்துகளுக்கும் நன்றி!

    ReplyDelete
  9. அருமையான கட்டுரை, ஆனாலும் வைணவம் என்பது விஷ்ணு பக்தர்களை அழைப்பதற்கு மட்டுமே பயன்படும் ஒன்றா?? சந்தேகம்! ஏனெனில் வடநாட்டில் அவ்வாறு இல்லை. வைணவம் என்பது ஒரு பொதுவான அழைப்புச் சொல். இந்தக் கட்டுரையின் தகவல்களும், அதை ஒட்டிய சிற்பங்களும் அருமை, விஜே சொன்னது போல் கல்லிலே கலைவண்ணம் கண்டிருக்க வேண்டும். :D பல புதிய தகவல்கள் நிறைந்த கட்டுரை.

    ReplyDelete
  10. ஒரு தனிப்பட்ட முறையில் அழைத்துக் கொள்ள சில அடையாளங்களும் பெயரும் எப்போதும் தேவைதானே. ஆனால் வடமாநிலங்களில் வேறுபாடு இல்லைதான். பத்ரிநாத், கேதார்நாத் எல்லோருமே செல்லும் இடம்தானே..

    கல்லிலே கலைவண்ணத்துக்கு இன்னொரு அரிய சிற்பம் கொடுக்கப்பட்டுள்ளது. வரும் வரும்.

    ReplyDelete
  11. இங்கேயும், மின்தமிழிலும், இந்தப்பதிவு தொடர்பான விவாதங்களைத் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.

    வைணவம், வைணவன் என்பது ஏதோ பிராமணாள் காபி கிளப் என்பது போலப் பொத்தாம் பொதுவாக சொல்லிவிட்டுப் போய்விடுகிற வார்த்தை இல்லை!

    வைணவம் என்பது ஒரு வாழ்க்கை நெறி, தானே உகந்து ஏற்றுக் கொள்கிற விரதம், உண்ணும் சோறு பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்ற நினைவோடு கூடியிருந்து குளிர்கிற பாகவத அனுபவம்!

    தமிழ்நாடு, ஆந்திரத்துக்கு அளித்தது என்று சொல்வது அவ்வளவு பொருத்தமானதாக எனக்குத் தோன்றவில்லை. அது எல்லாம் அவனே என்று ஏற்றுக் கொள்கிற எல்லோருக்குமானது.ஐயங்கார் என்ற சொல். பாஞ்சராத்ர ஆகமத்தைப் பின்பற்றுகிறவர்கள் என்ற பொருளில் பின்னாளில் ஆகியிருக்கலாம்! வைணவன் என்பது ஒரு பரந்தபொருளில் தான் ஆரம்ப முதலே இருந்து வந்திருக்கிறது. சைவப் பிள்ளை, சைவ முதலியார். ஆதிசைவன், வீர சிவன், லிங்காயத் என்று வரிசையாகத் தங்களுக்கு முன் அடைமொழியாக சாதியையும் சேர்த்துக்கொண்டதுபோல வைணவமோ, வைணவ ஆசார்யார்களோ அதை என்றைக்கும் குறுக்க முயன்றதில்லை என்பதுதான் வைணவத்தின் தனிப் பெரும் சிறப்பு, மாண்பு.

    இங்கே தென்னகத்தில் மட்டுமன்றி, வடக்கேயும் கூட வைணவம் ஒரு பரந்த பார்வையாக, விசேஷ குணமாக மட்டுமே பார்க்கப்பட்டது என்பதை நர்சி மேத்தாவின் வைஷ்ணவ ஜனதோ பாடலில், ஒரு வைஷ்ணவனின் லக்ஷணங்கள் விவரிக்கப்படுவதில் இருந்து தெரிந்து கொள்ள முடியும்.

    வெள்ளாளர்களின் எழுச்சியாக, சைவம் சோழர்கள் காலத்தில்எழுச்சியடைந்தபோது சைவம் அரசு சார்ந்த மதமாக இருந்ததைப்போல வைணவம் தன்னை ஒரு ஆக்கிரமிக்கும் மதமாகவோ, கோட்பாடாகவோ எப்போதும் முன்னிறுத்திக் கொண்டதில்லை என்பதும் வரலாறு. ஏதோ கிபி ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னால் ஆழ்வார்கள் வந்துதான் நாராயணனே பரப் பிரம்மம் என்று நிறுவியதாக இந்தக் கட்டுரையில் சொல்லப் பட்டிருப்பது சரியான தகவல் தானா?

    புருஷ சூக்தம் முதற்கொண்டு, வேதங்களிலும், இங்கே சங்க இலக்கியங்களிலுமே கூட, திருமால் வழிபாடு மிகத்தொன்மையானதாக இருந்தது நிறையவே பேசப்பட்டிருக்கிறது.

    ReplyDelete
  12. அருமையான கட்டுரை. வைணவத்தை அறிந்து கொள்ள முடிகிறது.

    ஓரு கருத்து வேறுபாடு திவா..

    பத்ரிநாத், கேதார்நாத் எல்லோருமே செல்லும் இடம்தானே? அப்படியாக எனக்கு தெரியவில்லை. கேதார்நாத் செல்லும் 98% சைவர்கள் பத்ரிநாத் செல்கிறார்கள். ஆனால் 10% வைணவர்கள் கூட கேதார்நாத் செல்வதில்லை. அவ்வளவு ஏன் உள்ளூரில் இருக்கும் சிவன் கோவிலுக்கே எத்தனை வைணவர்கள் செல்கிறார்கள்? இப்படிப் பட்ட சூழ்நிலயில் அடையாளப் பெயர் அவசியம் தானே?.

    ReplyDelete
  13. >>வெள்ளாளர்களின் எழுச்சியாக, சைவம் சோழர்கள் காலத்தில்எழுச்சியடைந்தபோது சைவம் அரசு சார்ந்த மதமாக இருந்ததைப்போல வைணவம் தன்னை ஒரு ஆக்கிரமிக்கும் மதமாகவோ, கோட்பாடாகவோ எப்போதும் முன்னிறுத்திக் கொண்டதில்லை என்பதும் வரலாறு. ஏதோ கிபி ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னால் ஆழ்வார்கள் வந்துதான் நாராயணனே பரப் பிரம்மம் என்று நிறுவியதாக இந்தக் கட்டுரையில் சொல்லப் பட்டிருப்பது சரியான தகவல் தானா?<<

    திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள்,

    வைணவத்தைப் பற்றிய என் கருத்து இந்தப் பதிவின் முதல் வரியில் ஏற்கனவே எழுதிவிட்டதுதான்..ஆழ்வார்கள் பற்றி நான் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளேன்.

    >>பொதுவாக ஸ்ரீவிஷ்ணு பரப்பிரம்ம தத்துவத்தை முன்னிலைப்படுத்தி ஆழ்வார்களால் ஆறாம் நூற்றாண்டு முதல் தமிழகத்தில் பாசுரங்கள் பாடப்பட்டாலும், வைணவம் மதநெறியில் கொண்டுசெல்லப்பட்டது என்பது ஏறத்தாழ பத்தாம் நூற்றாண்டின் கடைசியிலும், பதினொன்றாம் நூற்றாண்டின் ஆரம்பித்திலும்தான் என்று சொல்லலாம்.<<

    இது பொதுவான கருத்து.

    நீங்கள் எழுதிய வெள்ளாளர் வரலாறு பற்றி நான் இன்னமும் ஆராயவேண்டும்.

    உங்கள் கருத்துக்கு நன்றி!!

    அன்புடன்
    திவாகர்

    ReplyDelete
  14. மனோகர்
    இதெல்லாம் ஒரு கருத்து வேறுபாடா? உன் கருத்தோடு நானும் ஒத்துப் போகிறேன்.

    ReplyDelete
  15. Dhivakar sir, I have recently started following your blog on Srivaishanavam in Andhra Desam. Nice postings. But one things which is a bit of Nerudal (awkward)is that dating of Alwar to sixth century .Devar might have done your research on that , but per Ramanuja Sampradayam the Dating of Alwar's is completely different, Nammazhwar who is supposed to be the middle azwhar (based on chronology) seems to have taken Avatharam 43 days after Kannan reached Than Addi Sothi (Paramapadham) and Kannan had supposed to have reached Thann Adi Sothi, during the Yuga Santhi of Dwapara and Kaliyugam which is around 5100 odd years before current date. Please correct if I am wrong.

    ReplyDelete
  16. Thank you for this wonderful share..

    ReplyDelete
  17. அதே சமயத்தில் ஆந்திராவில் தமிழ்நாட்டு வைஷ்ணவம் பரவி ஆயிரம் ஆண்டுகளாக செழித்து வரும் நிலையை இந்தச் சமயத்தில் நம் கோதை நாச்சியார் இங்கு வந்து பார்த்தால் ‘வாரணம் ஆயிரம்’ பாடலோடு ‘வைணவம் ஆயிரம்’ என ஆரம்பித்து பாடுவாளோ என்னவோ./

    அருமையான ஆக்கம்..

    கர்நாடக இசைப்பாடல் உலகில்
    செங்கொலோச்சுவது தெலுகுதானே!

    பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

    ReplyDelete
  18. Dear Shri Dhivakar, Your indepth study and presentation on any given subject is great. I salute you. Kindly give a separate account of the Ponnuru temples and their history with photos. Once i visited Ponnure and I was wonderstruck by the mammoth murtis of Lord Krishna, Lord Shiva and Lord Anjaneya. I am eagerly waiting for that.

    ReplyDelete