அ’பாக்கியநகரம்’
அடுத்த வீட்டு ஆந்திராவை இப்போது ரணகளமாக்கும் முயற்சிகளை, தெலுங்கானா பிரச்னையை முன்வைத்து, இந்த அரசியல் தலைவர்கள் ஆரம்பித்து விட்டார்கள். ஆண்டவன் அருளால் இவர்கள் முயற்சி வெற்றியடையாமல் போக ஏகப்பட்ட வேண்டுதல்கள் வேண்டிக்கொள்ளும் நிலைக்கு எல்லோரையும் தள்ளிவிட்டார்கள்.
நானூறு ஆண்டுகளுக்கு முன் கோல்கொண்டா நிஜாம் குத்துப் ஷா தன் காதலி பாக்கியவதிக்காக மூசி நதிக்கரையில் இந்த நகரைக் கட்டுவித்தான். அதனால் இந்த நகருக்கு பாக்கிய நகரம் என்ற பெயர் உண்டு. ஆந்திரத் தொலைகாட்சிகளில் சில வேண்டுமென்றே ஹைதராபாதில் என்று சொல்லாமல் ’பாக்கிய நகரத்தில் இன்று’ என்றே கூவும் கூட. அப்படிப்பட்ட பாக்கிய நகரம் இன்று அபாக்கிய நகரமாக ஆகிவிட்ட, ஆக்கிவிட்ட, ஆக்கப்படவிட்ட வேதனையான கதைதான் இது.
கடந்த ஐந்து நாட்களாக இந்த ஹைதராபாத் மகாநகரத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று வர ஒரு சந்தர்ப்பம் கிடைத்தபோது இங்கு ஒரு ஆட்சியே நடக்கவில்லை என்ற உண்மை புரிந்தது. ’சகலஜனலு பந்த்’ என்ற பெயரில் கடந்த ஒரு மாதமாக ஹைதராபாத் நகரத்தின் இயல்பு வாழ்க்கையைப் பாழாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
பொதுமக்கள் ஒத்துழைப்பே இல்லாமல் அரசியல்வாதிகளால் எந்தக் காரியமும் செய்யமுடியாதுதான். அது போராட்டமானாலும் சரி, பொதுத்தொண்டானாலும் சரி. ஆனால் இங்கே அரை மனதுடன் வேண்டா வெறுப்பாக ஒத்துழைக்கும் பொதுமக்களைப் பார்க்கையில் நிச்சயம் பரிதாபமாகத்தான் இருக்கிறது..
ஆளும் மாநில அரசும், மத்திய அரசும் வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டிருப்பது இன்னமும் வேதனைதான். ஒருமாத காலமாக வேலை செய்யாமல் இருக்கும் அரசு அலுவலர்களை (முக்கியமாக தெலுங்கானாவைச் சேர்ந்தவர்கள்) கெஞ்சிக் கொண்டே இருக்கிறது. அவர்கள் இந்த அரசைச் சீண்டவே இல்லை என்பதை என்னவென்று சொல்ல?. தீபாவளிக்கு பணம் அட்வான்ஸ் தருகிறேன்.. வாருங்கள் என்கிறார்கள்.. ’ஊம்ஹூம்.. முதலில் ஏற்கனவே ஸ்ட்ரைக் செய்த நாட்களுக்கு எங்களுக்குப் பணத்தை எண்ணி மேலே வை.. பிறகு பேசலாம்’, என்கிறார்கள். அதாவது இவர்கள் வேண்டிய அளவு வேலையில்லாமல் ஸ்ட்ரைக் செய்தாலும் சம்பளம் மட்டும் சரியாக ஒன்றாம் தேதி வந்துவிடவேண்டும்.. சகல டிபார்மெண்ட்களும் ஸ்ட்ரைக். இதில் ஒரு வேடிக்கை. ஏதோ சில பேர் வேலை செய்கிறார்களே.. அவர்கள் எப்படி வேலை செய்யலாம் என்று தடுத்த சில தெலுங்கானா அரசு அலுவலர்களை கைது செய்து உள்ளே வைத்தார்கள். அவர்களை ஜாமீனில் வெளிவர அனுமதியும் அளித்தது போலீஸ். ஆனால் வெளிவரமுடியவில்லை. காரணம் ஜாமீன் கொடுக்கவேண்டிய முன்சீப் ஜட்ஜ்களும் ஸ்ட்ரைக்கில் இருப்பதால் உள்ளே போனவர்கள் அங்கேயே உட்காரவேண்டிய நிலை.
ஆட்டோ டிரைவர்களைக் கேட்டேன்.. ’அரே பாஸ்.. இவர்கள் (பஸ்கள்) ஸ்ட்ரைக் செய்யட்டும்.. அப்போதான் நமக்கு நாலு காசு எக்ஸ்ட்ரா வரும்’ என்கிறார்கள்.
அளவுக்கு அதிகமான பவர்-கட், ஓடாத பஸ்கள், அதிக குமபலுடன் உள்ள நிலையை காசாக்கும் ஷேர் ஆட்டோக்கள், ஆட்டோக்கள், காசு உள்ளவர்களால் மட்டுமே பயணம் செய்யவேண்டிய நிலையில் கார் கட்டணங்கள், அவ்வப்போது மூடித் திறக்கும் கடைகள், ஆங்காங்கே குவிந்து கிடக்கும் குப்பைகள், அரைகுறைப் பாலங்களால் ஆங்காங்கே அவதிப்படுகின்ற ட்ராஃபிக், தொழில்துறையும் சுற்றுலா துறையும் அதிக அளவில் பாதிக்கப்பட்டதால் அவதிப்படும் சின்ன வியாபாரிகள் என ஒரு அவலமே இந்த நகரத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது என்றே சொல்லலாம்.
மிகப் பணக்கார இடங்களான ஜூப்லி ஹில்ஸ், பஞ்ஜாரா ஹில்ஸ் பகுதிகளில் பல இடங்களில் அடுக்கு மாடிக் காம்ப்ளக்ஸ்’கள் அப்படியே பாதி வேலைகளோடு நின்று கிடக்கின்றன. மருந்துக் கம்பெனிகளின் தலைநகரம் என்ற புகழ்பெற்ற இந்த நகரத்தில் அந்த மருந்துத் தொழிற்சாலைகள் வேறெங்காவது இடம் பெயரலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு மாதாபூர், ஹைடெக் சிடி மட்டும் இன்னமும் பிஸியாகத் தெரிவது போலப் பட்டாலும் இது கூட எத்தனை நாளோ என்ற நிலைமையும் கண்கூடாகத் தெரிகிறது.
இந்தியாவின் அத்தனை நகரங்களும் இன்று மக்கள் தொகையால் திண்டாடிக்கொண்டும், நிலம், வீடு விலைகள் கிடு கிடு ஏற்றத்துடன் இருக்கும்போது, ஒரே ஒரு ஹைதராபாத் மட்டும் ஏற்றம் இல்லாமல் இறங்கிக் கொண்டே போய்க் கொண்டிருப்பது காலத்தின் கோலம்தான்.
ஒரு காலத்தில் அமெரிக்க அதிபரான பில் கிளிண்டன் அழைத்து வரப்பட்டதாலேயே வெகுவாகப் பேசப்பட்ட ஹைதராபாத் இன்று பொலிவிழந்து கிடக்கும் நிலையில் அரசியல்வாதிகள் வைத்துவிட்டார்கள்.
பண்டைய அரசர்கள் காலத்தில் புகழ் பெற்ற நகரங்களாகத் திகழ்ந்தவை காலத்தால் அழிந்தோ, அல்லது வெகு சிறிதான அளவில் தேய்ந்து போவதையோ சரித்திரம் நமக்கு நிறையச் சொல்லியிருக்கிறது. ஆனால் ஒரு நகரம் நம் கண் முன்னேயே அழிக்கப்படுவதைக் காணும்போது யாருக்குதான் கவலை வராது.
ஆனாலும் ஆந்திராவில் உள்ளோர் நினைத்தால் இந்த அழிவுக்கு ஒரு முடிவு உண்டு என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள். எப்படியும் நீளும் இந்தத் தகராறுகளுக்கு ஆந்திரக்காரர்கள் என்றோ ஒரு நாள் வளைந்து கொடுக்கத்தான் வேண்டும், என்கிறார்கள். அதை இப்போதே செய்தால் என்ன என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது. தலைநகரம் என்பதால் ஏகப்பட்ட இடங்களில் ஆந்திரர்களின் சொத்துக்க முடக்கத்தில் உள்ளன. இவைகளுக்கெல்லாம் ஒரு மாற்று வழி சொல்லப்பட்டால் தெலுங்கானாவிலும் நிலை மாறலாம்.. சொல்வார்களா என்பது புரியவில்லை.
ஆனாலும் நிலைமை உடனடியாக சீரடைந்தால் மட்டுமே ஹைதராபாத் இந்தியநாட்டின் பெரிய நகரங்களில் ஒன்று என்ற பெயர் நிலைக்கும். இல்லாவிட்டால் ஹைதராபாதும் ஒரு பெரிய நகராக ஒரு காலத்தில் இருந்தது என்ற பெயர்தான் கிடைக்கும்.
Saturday, October 15, 2011
Subscribe to:
Post Comments (Atom)
பேய்கள் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.
ReplyDeleteநெஞ்சு கொதிக்குதே இந்த நிலைகெட்ட மானிடரை நினைந்து!
எப்போ விடிவு?? மனமே பதைக்கிறது. ஒரு பக்கம் நாடே இருளில் மூழ்கும் என்ற தகவல்; இன்னொரு பக்கம் அடங்காத ஊழல் செய்திகள்; இதிலே எந்தவிதமான தலையீடும் இல்லாமல், முடிவுகள் எடுக்க அஞ்சிக்கொண்டு, மெளனப் பிள்ளையாரான ஒரு பிரதமர். செயலற்ற பிரதமரைக் கொண்டிருக்கும் நாட்டை இப்போதுள்ள நிலையில் இறைவன் தான் காப்பாற்ற வேண்டும்.
to continue
ReplyDeleteபணம் கொழிக்கிறது என்றார்கள். ஐடி வளர்ச்சி என்றார்கள். இப்படி ஒரு நகரத்தைப் பாழடிப்பார்களா.
ReplyDeleteஎங்கேயும் ராவண ராஜ்ஜியம் தானா.
வருத்தமாக இருக்கிறது.
இல்லை இல்லை ராவணன் கூடத் தன் நகரத்தை நன்றாகத்தான் வைத்திருந்தான்.
என்ன சொல்வதென்றே தெரியவில்லை :(
ReplyDeleteஒரு நகரம் நம் கண் முன்னேயே அழிக்கப்படுவதைக் காணும்போது யாருக்குதான் கவலை வராது.
ReplyDeleteஎப்போ விடிவு?? எப்போ விடிவு??
Wonderful article, found it just now:-(
ReplyDeleteAnd the drama is going to be enacted again. Along with the heat, lack of water,lack of power, we need this too! Abhagyanagar, Andhera Pradesh it will be.
We pray to those Gods, please save.