Wednesday, January 6, 2010

WIFE, HUSBAND AND DIVORCE


TELANGANA - PART 2

WIFE - HUSBAND & DIVORCE

தெலுங்கானா என்பது இவர்கள் சொல்வது போல ஒருதாயின் மக்கள் இல்லையா.. என்று கேட்டால் ‘இது அப்படியெல்லாம் இல்லை’ என்று சொல்லிவிட்டு பண்டித ஜவஹர்லால் நேருவின் புகழ்பெற்ற வார்த்தையை உதாரணமாக வைக்கிறார்கள். அது என்ன?

“தெலுங்கானா ஆந்திரா இணப்பு என்பது கணவன் மனைவி திருமணத்தைப் போன்றது. இதில் இன்னொரு சௌகரியம் என்னவென்றால் ஒருவேளை நாளடைவில் இருவர் மனமும் ஒத்துப்போகவில்லை என்றால் ‘விவாகரத்து’ வேண்டுமானாலும் இவர்கள் கேட்டுப்பெறலாம்”.

இது நமது நேரு மாமாவின் பொன்னான வார்த்தை. அப்படியே திருமணம், கணவன் மனைவி என்றாலும் திருமணத்தை வாழ்த்துபவர்கள் நம் இந்தியக் கலாச்சாரத்தில் எப்படி வாழ்த்துவார்கள்.. பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என முழு நம்பிக்கையோடு வாழ்த்துவார்கள். ஐரோப்பிய கலாசாரம்தான் திருமண விஷயங்களில் சற்று பாதுகாப்பான எச்சரிக்கையாக இருக்கும். அதனால் அங்கு உள்ள அரசாங்கங்கள் இதற்கேற்றவாறு முன்னெச்சரிக்கையாகவே, திருமணம் பதிவு செய்வதற்கு முன்பேயே ஒருவேளை இது பிற்காலத்தில் விவாகரத்தானால் என்னென்ன செய்யலாம் என்கிற மனோபாவத்தில் யோசித்து அதற்காக ஒரு பாதுகாப்புச் சட்டம் வைத்திருப்பார்கள். இந்த விஷயத்தில் நேரு மேற்கத்திய பாணியைப் பின்பற்றி மேலோட்டமாகவே நம்பிக்கையில்லாமல் வாழ்த்தினார் என்றுதான் சொல்லவேண்டும்.

தெலுங்கானா ஆதியிலிருந்தே ஆந்திராவுடன் சேர மறுப்பு தெரிவித்துவந்தது. காரணம் தன் தனித் தன்மையை இழக்க நேரிடுமோ என்ற பயமும், ஆந்திராவின் கொள்ளைச் செல்வமும் தங்களுக்குக்குப் பயன் தரமுடியாதவகையில் இயற்கையாகவே அமைந்துள்ளதால், இருவரும் மணமுடித்துச் சேருவதால் அப்படி ஒன்றும் பயனில்லை என்றே கருதினர்.

ஆனால் 1950 களில் தெலுங்கானாவில் நிலைமை சற்று வித்தியாசமானது. ஆந்திரத் தெலுங்கர்கள் காங்கிரஸில் செல்வாக்காகவும், கட்சிக்குத் தூண்களாகவும் செயல்பட்டு வந்த காலகட்டம். ஏற்கனவே மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படவேண்டுமென்ற கோரிக்கையில் வெற்றி பெற்ற ‘மாவீரர்’கள். மொழிவாரிமாநில ஆணையம் தெலுங்கானா பகுதியும் (சுமார் ஒன்பது மாவட்டங்கள் ஹைதராபாத் உள்பட) ஆந்திரப்பிரதேசத்தில் இணைக்கப்படவேண்டும் என்று கருதியபோது, அப்போதைய தெலுங்கானா முதல்வர் பி.ராமகிருஷ்ணராவ் சிறிய சலசலப்பு செய்ததோடு ஒரு சாதாரணமான எதிர்ப்பைக் காண்பித்து சில பல ஒப்பந்தங்கள் ஏற்கப்பட்டதால் இணைப்பை ஒப்புக் கொண்டார்.

தெலுங்கானா நினைத்திருந்தால் அப்போதே ஏனைய இந்தி பேசும் தனித்து மாநிலங்கள் போல தனக்கும் ஒரு மாநிலம் வேண்டும் என்று கேட்டிருக்கலாம். அல்லது இன்றைய விதர்பா, சட்டிஸ்கரின் தென் பகுதிகள் இவைகளை தன்னுடம் சேர்த்துக் கொண்டு மேலும் பெரிய மாநிலமாக தன்னை உருவாக்கிக்கொண்டு இருந்திருக்கலாம். ஆனால் வாய்ப்பை இழந்துவிட்டது அப்போது என்றே சொல்லவேண்டும். அங்கே அப்படி நினைத்துச் செயல்படும் அளவுக்கு தலைமை அப்போது இல்லை என்பதே பெரிய குறைபாடு.

தெலுங்கானாதான் ஆதி தெலுங்கு பேசும் நாடு என்று அந்த இருப்பிடங்களைச் சேர்ந்தவர் பெருமை பேசுகின்றனர். தெலுங்கானாதான் மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தெலுங்கு நாடு என்றும், ராமர் வனவாசத்தில் கோதாவரி வட கரையில் (பத்ராசலத்துக்கு மேற்கே 22 கி.மீ) பர்ணசாலை வைத்துக் கொண்டு, சீதா தேவியுடனும், தம்பி லக்குவனுடனும் சில ஆண்டுகள் தங்கி இருந்தார் என்றும் சொல்வர். ஆனால் மொகலாயர் ஆட்சிக் காலத்தில் இந்த பிரதேசம் முழுமையும் நிஜாம் ஆளுமையில் இருந்தததும், பத்ராசலம் கோயில் கட்டி அதனால் சிறைப்பட்ட கோபன்னா எனும் இராமதாசர் கதையில் தெரியும். நிஜாம் ஆட்சியில் ஒரு காலகட்டத்தில் ஆங்கிலேயருக்கு தெலுங்கானாவின் எல்லாப்பகுதியையும் ‘காவு’ கொடுத்துவிட்டு, அவர்கள் சம்மதத்துடன் கோல்கொண்டா, ஹைதராபாதை மட்டும் ஆண்டுகொண்டிருந்தவர்கள், அதையும் 1948 இல் போலிஸ் நடவடிக்கை மூலம் பறிகொடுத்துவிட்டார்கள். இந்தப்பகுதியை மீட்டு இந்திய அரசு தெலுங்கானாவின் மற்ற பகுதிகளுடன் சேர்த்து ஹைதராபாத் மாநிலம் என்று பேர் வழங்கியது. 1951 இல் குடியரசு பிரகடனப்படுத்திய நேரத்தில் தெலுங்கானாவின் முதலமைச்சராக வி.கே. மேனன் எனும் மலையாள ஐ.சி.எஸ் ஆபீசரை இந்திய அரசாங்கம் முதல் அமைச்சராக நியமித்து 1952 இல் தேர்தல் நடத்தி பி. ராமகிருஷ்ணராவை தெலுங்கானாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முதலமைச்சராக்கியது. ஆனால் இவையெல்லாம் ஆந்திர அரசியல்வாதிகளின் ஆதிக்கத்தின் (அந்தக் காலத்தில்) முன்பு நீடிக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.


(படம் உதவி: கூகிளார்)

பொதுவாகவே ஹைதராபாதை விடுத்து ஏனைய தெலுங்கானா பகுதிகளைப் பார்த்தோமானால், தக்ஷிணப் பீடபூமியும், மலைவளங்களும் சூழ்ந்தபிரதேசமாகவே தெலுங்கானா காணப்படும். அதிக விவசாய நிலங்கள் ஆந்திரக் கடற்கரை மாநிலங்களைப் போல கிடையவே கிடையாது. மலைவளமும் கனிவளமும் எங்கே கிடைத்தாலும் அல்லது இருந்தாலும் அவை இந்தியா முழுமைக்கும் பொதுவாக பயன்படுத்தப்படுகின்ற இயற்கைச் செல்வம். இந்த வளங்களைத் தன்னுள் கொண்டுள்ளதனால் ஒரு சில பகுதிகள் (சிங்கரேணி சுரங்கப் பகுதிகள், சில பேப்பர் மில்கள்) தவிர தெலுங்கானா இந்த அறுபது ஆண்டுகளில் மிகப் பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வளர்ச்சி பெறவில்லை என்பது வாஸ்தவமே. ஏனைய இடங்களில் பெறவேண்டிய அத்தனை வளர்ச்சிகளுமே ஹைதராபாத் நகரம் ஒன்றே பெற்றுவிட்டதால் ஏனைய மாவட்டத் தலைவர்கள் ஒன்றுமே செய்யமுடியாத நிலையும் அங்கு ஏற்பட்டது.

முக்கியமாக மக்களின் கல்வி அறிவு வளர்ச்சி தெலுங்கானாவில் எதிர்பார்த்த அளவில் முன்னேறவில்லை. இருக்கும் கல்வி அறிவு பெற்றோரில் கூட கணிசமானோர் முதலாளிகளின் அடக்குமுறையை ஏற்கமுடியாமல் கம்யூனிச இயக்கங்களில் சேர்ந்து, வசிக்கும் இடத்தின் வளர்ச்சியை மேலும் குறைக்கவே செய்தனர். கம்யூனிசம் இன்னமும் கூட கம்மம், பத்ராசலம், பெல்லம்பள்ளி போன்ற மலைக் காடு உள்ள பகுதிகளில் ஏராளமான செல்வாக்கு பெற்றும் பாராளுமன்றத்தில் படிப்படியாக குறைந்துவரும் கம்யூனிச கட்சிகளின் எண்ணிக்கையை தக்கவைக்கும் வகையில் பிரதிநிதிகளை அனுப்பிக் கொண்டுதான் இருக்கின்றன. இந்த கம்யூனிச பிரதிநிதிகள் இந்தக் கால அரசியல்வாதிகளோடு பழகினாலும், சம்பாதிக்கத் தெரியாததாலும், (ஊழலும் கிடையாது) மக்களுக்கு ஒருவேளை சாப்பாடு கண்டிப்பாகக் கிடைக்கவேண்டும் என்ற கொள்கையில் வேலையாட்களாகவே பயிற்றுவித்து, அந்த மாபெரும் ஜனங்களைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் வகையில் சுதந்திரத்தின்போது எப்படி இருந்தோமே அப்படியே அவர்களை வைத்திருப்பதிலும் நிகரில்லாதவர்கள். பெரிய முதலாளிகள் இந்தப் பகுதியில் முதலீடு செய்வதில் மிக மிகத் தயங்குவார்கள்.

அதே சமயத்தில் ஆந்திரா எல்லாவகையிலும் முன்னேறியது.. நல்ல விளைநிலங்கள், தண்ணீர் வளம், மின்சார உற்பத்தியில் தடையில்லாமை, கல்வி நிறுவனங்கள், மருத்துவம், சாலை வளர்ச்சி, கிராம வளர்ச்சி என எல்லா முன்னேற்றமும் கண்டாலும் ஊழலிலும் மிகவும் தொழில்முறை நேர்த்தியாக எங்கெங்கும் எவ்வெதிலும் முன்னேறிய சமுதாயமாக மாறிவிட்டார்கள்.

1956 இல் சென்னையிலிருந்து மொழிவாரி மாகாணமாகப் பிரிந்து சென்ற ஆந்திர மக்கள், தெலுங்கானாவைக் கூட்டித் தம்மோடு வைத்துக் கொண்டு, தம் தலைநகரமான ஹைதராபாத் மிக மேன்மையான நிலையில் முன்னேற மிகக் கடுமையாக உழைத்தவர்கள், தங்கள் முதலீடுகளையும் தாராளமாகவே தலைநகரில் வாரி இறைத்தார்கள்.

சரி, இதைப் பற்றி மேலும் பார்ப்போம்..

2 comments:

  1. தெலங்கானா மக்களுக்குச் சரியான தலைமை கிடைக்கவில்லை என்பது அவ்வளவு சரியான தகவல் இல்லை.

    1946-1951 காலகட்டங்களில் தெலங்கானா மக்கள், ஹைதராபாத் நிஜாமை எதிர்த்து நடத்திய போராட்டம், கம்யூனிஸ்டுகளால் தான் நடத்தப் பட்டது.
    நிஜாமைக் கொஞ்சம் தட்டி வைத்து, இந்திய யூனியனோடு சேர்த்துக் கொண்ட பிறகு, நிஜாம் ராஜ பிரமுகராகவும், கொள்ளையடித்த சொத்துக் குவியலோடு வாழவும் இந்திய அரசு அனுமதித்தது. ரஜாக்கர்கள் நடத்திய அட்டூழியத்திற்கோ, அதை முன்னின்று நடத்தியவனுக்கோ எந்தவித தண்டனையுமில்லை.

    அதே நேரம், கம்யூனிஸ்டுகள் மீது காங்கிரசுக்கு ஒரு வெறுப்பு இருந்தது, கம்யூனிஸ்டுகளை வேட்டையாடுவது, போராட்டங்களை ஒடுக்குவதிலும் உறுதியாக இருந்தது. தெலங்கானா போராட்டம் தான் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைவதற்கு மூல காரணமாக இருந்தது. அங்கே மட்டுமல்ல, நாடு முழுவதும், காங்கிரஸ்காரர்கள் இந்த வேலையை, மிகவும் தந்திரமாக அன்றிலிருந்து இன்றைக்கும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இங்கே தமிழ்நாட்டில், காமராஜர் கழகங்களை மறைமுகமாக ஆதரித்தது, அவர்கள் அவரைப் பச்சைத் தமிழன் என்று ஏற்றுக் கொண்டது, கேரளாவில் நம்பூதிரிபாத் தேர்தலில் ஜெயித்து ஆட்சியைப் பிடித்தபோது, NSS நாயர் செர்விஸ் சொசைடி போராட்டமாக வளர்த்து விட்டுமன்னத் பத்மநாபன் கொலை செய்யப் பட்டதை சாக்காக வைத்து, 356 ஆம் பிரிவின் கீழ் ஜனநாயகக் காவலர் நேரு காலத்திலேயே, ஜனநாயகம் சிதைக்கப் பட்டது.

    தோழர் பி சுந்தரய்யா எழுதிய தெலுங்கானா போராட்டமும் படிப்பினையும் என்ற தனது புத்தகத்தில், அன்று நடந்த அவலங்களைச் சொல்லியிருக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சிக்கு சமர்ப்பிக்கப் பட்ட அறிக்கை இது, புத்தகமாகவும் வந்தது. சக தோழர்களால் நிறைய வெட்டிச் சுருக்கப் பட்ட ஆவணமாக இருந்த போதிலுமே கூட, தெலுங்கானா மக்களுடைய நிலையைப் படம் பிடித்துக் காட்டிய ஒரே புத்தகம் எனக்குத் தெரிந்து அது தான். இன்றைக்கு இடது, வலது கம்யூனிஸ்ட் கட்சிகள், கட்சிக்குள் கூட தெலங்கானா போராட்டத்தைப் பற்றிப் பேசுவதையே மறந்து வெகுகாலமாயிற்று.

    ஹைதராபாத் நிஜாம் காலத்திலேயே நன்கு திட்டமிடப்பட்டு, வளர்ச்சியடைந்த நகரமாகப் பிரிவினைக்கு முன்னாலேயே இருந்தது. நிஜாம் செய்த ஒரே நல்ல காரியம், ஒஸ்மானியா பல்கலைக் கழகம்தான்!

    ReplyDelete
  2. கம்யூனிஸ்ட் பற்றிய கருத்துக்களை அப்படியே ஒப்புக்கொள்கிறேன். ஆனால் காங்கிரஸில் அந்த காலகட்டத்தில் ராமகிருஷ்ணாவைத் தவிர தெலுங்கானா தலைவர் என்று சொல்லிக் கொள்ளும் அளவுக்கு யாரும் இல்லை என்று எழுதியுள்ளேன். சென்னா அப்போது 'சின்னா' இல்லையோ.. (:

    உங்கள் அழகான கருத்துக்களுக்கு நன்றி! தோழர் சுந்தரய்யாவுடன் உடையாடியுள்ளேன்.

    திவாகர்

    ReplyDelete