Follow by Email

Tuesday, January 5, 2010

ஆந்திரப்பிரதேசம் ஆத்திரப்பிரதேசமாக மாறியது ஏனோ

ஆந்திரப்பிரதேசம் ஆத்திரப்பிரதேசமாக மாறியது ஏனோ?
ஆந்திர ஐக்கியவாதி
: நாம் ஒரு தாய் மக்கள்.. ஒரே பாஷை.. நாம் ஒன்றாகவே இருக்கவேண்டும் தம்பி, நமக்குள் பிரிவினை வேண்டாம்.. நானும் நீயும் அண்ணன் தம்பி.. தெலுகு தல்லி Bபிட்டலு மனமு! சொல்வதைக் கேள்!.தெலுங்கானா: ஏற்கனவே உருது இருந்தாலும் தெலுங்கு அதிகம் பேசப்படுவதால் நாம் ஒரே மொழி என்று வேண்டுமானால் ஒருவகையில் பொருந்தும்.. ஆனால் ஒரு தாய் மக்கள் என்று சொல்லாதே.. 1956 க்கு முன் உன் தாய் வேறு.. என் தாய் வேறு.. ஏதோ விதி வசத்தால், முட்டாள்தனமாக ஒன்றானோம்.. இப்போது பிரித்துக் கொள்கிறோம். போ.. போ.. இங்கிருந்து போய்விடு.. எம் நாட்டை எமக்குக் கொடு.. நீ உன் நாட்டில் போய் சௌக்கியமாக இருந்துகொள்.. யார் வேண்டாமென்பது..ஐக்கிய ஆந்திரா: ஐயோ, கொடுமை.. இதை யாரேனும் கேட்பது கிடையாதா.. நாங்கள் எல்லாம் ஒன்றாக இருக்கலாமென்றுதானே அன்று மொழிவாரியாக இணைந்தோம். இந்த ஐதராபாத்தை இவ்வளவு பெரிய புகழ்பெற்ற நகரமாக ஆக்கியிருக்கிறோம்.. கிளிண்டன் வந்தது யாரால்.. ஷம்சாபாத் ஏர்போர்ட் வந்தது யாரால்.. ஹைதராபாத் நகரத்தையே ஒரு பெரிய கம்ப்யூடர் மென்பொருள் சிடி என்று உலகமெல்லாம் புகழவைத்தோமே, யாரால்.. இந்தியாவின் ‘மருந்து மாத்திரைகளின் தலைநகரம் ஹைதராபாத்’ என்று பேசவைத்தோமே.. எல்லாம் ஆந்திரப் பெருமக்களாலல்லவோ.. இப்போது திடீரென தெலுங்கானா கேட்டால் எப்படி கொடுப்பது.. முடியாது.. முடியாது.. தனித் தெலுங்கானா இல்லை.. இல்லை.. அதெல்லாம் கொடுக்கவும் முடியாது.. நான் அண்ணன், நீ தம்பி, நான் மூத்தவன் சொல்வதைக் கேள் தம்பி, பிரிவினை பேசாதே..தெலுங்கானா: நீயெல்லாம் ஒரு அண்ணனா? இதையெல்லாம் உங்களை செய்யச் சொல்லி யார் கேட்டது.. இதோ பார்! இந்தியாவில் எந்த ஒரு பெரு நகரமும் இந்த அறுபது ஆண்டுகளில் மிகப் பெரிய வளர்ச்சி கண்டுள்ளது இயற்கையான முறையால்தான். அங்கே சென்னையைப் பார்.. நீங்கள் வந்ததிலிருந்து இன்னமும் பெரிய நகரமாக மாறிவிட்டது.. பெங்களூரைப் பார்.. எப்படிப்பட்ட வளர்ச்சி.. அதைப் போலத்தான் ‘எங்கள்’ ஹைதராபாத் நகரமும்! நாங்கள் கடந்த ஐம்பது வருடங்களாக தெலுங்கானா தனியாக வேண்டும் எனப் போராடிக் கொண்டிருக்கிறோம்.. சென்னா ரெட்டியிலிருந்து கே சி ஆர் வரை தெலுங்கானா வுக்காக போராடிய தலைவர்கள் பட்டியல் இருக்கிறது. ஐம்பது வருட போராட்டம் என்று தெரிந்தும், இந்த ஹைதராபத்தில் தொடர்ந்து உங்கள் ஆந்திரர்கள் முதலீடு செய்கிறீர்கள் என்றால், பணம் சம்பாதிக்கத்தானே.. இது வரை எத்தனை கோடி லாபம் பார்த்துவிட்டீர்களோ.. இனியும் எங்கள் தெலுங்கானா தல்லி (தாய்) பொறுக்கமாட்டாள். நாட்டைக் கொடுத்துவிட்டு உன் ஊர்ப்பக்கம் ஓடு..ஐக்கிய ஆந்திரா: ஹா! இது அடுக்குமா.. அநியாயமாக அன்று மெட்ராசில் சண்டை போட்டு பிரிவினை வாங்கி ஒன்றாக வாழலாமே என்று வந்தோமே.. இந்த வார்த்தைகளை உன்னிடமிருந்து கேட்கத்தானா.. தம்பி, நான் சொல்வதைக் கேள்.. எங்களை விலக்காதே.. நானும் நீயும் ஒரே ரத்தம்.. இரண்டு பேருக்கும் பொதுவானது ஹைதராபாத். நாம் ஒன்றாகவே இருப்போம்..தெலுங்கானா: நீ எப்படி வேஷம் போட்டாலும் சரி! நீங்கள் எல்லோருமே சினிமாக் கும்பல்தானே.. உங்கள் நடிகர்கள் படத்தைப் பார்க்க கண்ணில் ரத்தம் வடிய எங்கள் தெலுங்கானா மக்கள் எவ்வளவு அழுதிருக்கிறோம்.. எங்கள் செல்வத்தையெல்லாம் இழந்தோமே.. இனியும் உங்கள் சகாப்தம் வேண்டாம்..ஐக்கிய ஆந்திரா: ஐய்யோ.. இப்போது அடிமடியில் கை வைத்துவிட்டாயே தம்பி!.. சினிமாக்காரர்கள் அதிகம் ஹைதராபத்தில் வசிக்கிறார்கள்.. அவர்களெல்லாம் துரத்தி அடித்தால் எங்கே என்று போவார்கள்..சினிமாக்காரர்கள் (அழுதுகொண்டே) : வேறெங்கு போவதாம்? மறுபடியும் மெட்ராசே கதி.. எங்களை இன்னும் அங்கே அரவணைப்போர் அதிகம்.. எங்களை வேண்டாமென்றால் நாங்கள் அங்கேயே போய்விடுகிறோம்.. ரொம்ப நல்லவங்க அவங்க..ஐக்கிய ஆந்திரா: பார்த்தாயா.. எப்படி அரண்டுபோய்விட்டார்கள் இவர்கள்.. இந்த முகத்தைப் பார்த்தாலாவது உன் முடிவை மாற்றிக் கொள் தம்பி!தெலுங்கானா: ஐய்யோ தெலுங்கானா தல்லி! இவர்கள் நாடகத்தை சற்று நிறுத்தச் சொல்லேன்.. இவர்கள் அழுதாலும் சரி, கெஞ்சினாலும் சரி.. நாங்கள் தெலுங்கானா அடைந்தே தீருவோம்.. ஹைதராபாத் எங்கள் தலைநகரம்.. ஜெய் தெலுங்கானா..மேலே கண்டவை எல்லாமே மிக மிக வாஸ்தவமாக தற்சமயம் ஆந்திர தேசத்தில் அடித்துக் கொண்டு பேசிக்கொள்ளப்படுபவை.. ஆந்திரப்பிரதேசம் ஆத்திரப் பிரதேசமாக மாறி ஏகமாக கூச்சல் போட்டுக் கொள்கிறார்கள். ஏறத்தாழ பத்து தெலுங்கு செய்தித் தொலைக்காட்சி பெட்டிகளுக்கு இப்போதெல்லாம் வயிறு முட்ட முட்ட சாப்பாடு.. பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா.. எம் எல் ஏ வெல்லாம் கூண்டோடு ராஜினாமா.. அமைச்சர்கள் கூட வேலை செய்யமாட்டோம், என்று கோஷம்.. மாணவ மணிகளோ ஏகத்துக்கு உண்ணாவிரதம் இருந்து சாகும் கொடுமைகள் ஆங்காங்கே.. ஒரு போலிஸ் பெரிய பெண் அதிகாரி தெலுங்கானாவுக்கு ஜே என்று ராஜினாமா செய்து களத்தில் குதித்து விட்டார். இன்று ஆந்திரத்தின் எந்த மூலையில் போனாலும், இந்த தெலுங்கானா பிரிவினைதான் பேசப்படுகின்றது என்ற அளவுக்கு இது மக்கள் பிரச்சினையாக எல்லோரும் சேர்ந்து ஆக்கிவிட்டார்கள். இன்றைக்கு நடைமுறையில் பார்த்தோமானால் ஹைதராபாதிலேயே, தெலுங்கானா-ஆந்திரா என்று அரசாங்க அலுவலகத்திலும் பிரிவினை வந்துவிட்டது. ஆட்சியும் சரியாக நடத்த விடவில்லை.. தொழில் முடங்கிக் கிடக்கிறது. கல்விக் கூடங்கள் போராட்டக்களமாக மாறிப் போய்விட்டன..சரி!.. ஒருவேளை தெலுங்கானா வந்தால் ஆந்திரர்கள் என்ன செய்வார்கள். ஏன் ஹைதராபாத்தை அவ்வளவு விடாப்பிடியாக பிடித்துக் கொள்கிறார்கள். அதெல்லாம் சரி, தெலுங்கானா என்பது இவர்கள் சொல்வது போல ஒருதாயின் மக்கள் இல்லையா.. ஏன் தெலுங்கானா கேட்கிறார்கள். இதையெல்லாம் சற்று ஆராயலாமா..

3 comments:

  1. நல்ல அலசல். தொடருங்கள்.

    ReplyDelete
  2. ஆந்திராவை பற்றி ஆராய நல்லது எவ்வளவோ இருக்கும் பொழுது, தேவையற்ற தெலுங்கான விஷயம் தானா கிடைத்தது? (இதில எப்ப போன் பண்ணினாலும் பிசி வேற)

    ReplyDelete