(எல்லோருக்கும் ஒரு சுபசெய்தி.. இந்த தெலுங்கானா கட்டுரையை இத்துடன் முடித்துவிட்டேன்.. மகிழ்ச்சிதானே)
சுமார் ஐம்பத்தைந்து வருடங்களுக்கு முன்பே மத்திய அரசால் சரி செய்யப்பட்டிருக்க வேண்டிய ஒரு பிரச்சினை இந்த தெலுங்கானா பிரச்னை. இந்த பிரச்சினை உடனடியாக தீர்க்கப்படாமல் அவ்வப்போது மிகப் பூதாகரமாக வெளிவந்து பல இளம் மாணவ உயிர்களைக் கொள்ளை கொண்டு போவதுதான் மனதுக்கு சிரமம் விளைவிக்கிறது. இந்த தெலுங்கானா பிரச்சினையால் சுமார் 400 மாணவர்கள் தியாகம் செய்துள்ளதாக தெலுங்கானா ஆதரவாளர்கள் மிகப் பெருமையாகச் சொல்லிக் கொண்டாலும், மாணவர்களை ஏன் அநியாயமாக காவு கொடுக்கவேண்டும் என்று அவர்களை அதுவும் அந்த அரசியல்வாதிகளை கேட்போர் யாரும் இல்லை. பொதுவாகவே இளம் பிஞ்சுகளின் உயிர்கள் பலி வாங்கப்படும்போது மனம் கவலைப்படுமே.. இந்தக் கவலை இங்குள்ள அரசியல்வாதிகள் யாரிடத்திலும் இல்லை.
இந்த முறை மறுபடி பூதாகாரமாக வெடித்த இந்தப் போராட்டத்திலும் ஒரு சில இளம்பிஞ்சுகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டன. பல இடங்களில் மாணவர்களே முன்னின்று உண்ணாவிரதம் இருப்பதும் அவைகளை ஆதரிப்பதாக அரசியல் தலைவர்கள் செய்தி சேனல்களுக்கு போஸ் கொடுத்துவந்ததும், பேருக்காக இந்த அரசியல் தலைவர்களும் உண்ணாவிரதம் இருந்து (சலைன் வாடர் ஏற்றிக்கொண்டே) பயமுறுத்தியதும் அனைவரும் புரிந்துகொண்டுதான் இருந்தனர். இந்த அரசியல்வாதிகளின் பூடக உண்ணாவிரதத்தின் மகிமை எல்லோருக்குமே நன்றாக தெளிவாக விளங்கியதால் இவைகளை அவ்வளவாக ஆந்திரமக்கள் ஆதரிக்கவில்லை என்றே சொல்லலாம். தெலுங்கில் நிராஹார தீட்சை (உண்ணாநோன்பு) என சொல்லப்படுவது இவர்களால் ‘நீராஹாரதீட்சை’ (தண்ணீர் அருந்தும் விரதம், அதாவது மருத்துவர்களால் சலைன் வாட்டர் ஏற்றப்பட்டது) ஆகிவிட்டது
ஆனால் மத்திய அரசு இந்த முறை வலியவந்து வலையில் மாட்டிக் கொண்டதாகவே இங்குள்ள அரசியல் நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள். கடந்த டிசம்பர் 9ஆந்தேதி வரை சாதாரணமாக இருந்த இந்தப் போராட்டத்தை நிறுத்துவதாக நினைத்துக் கொண்டு நட்டநடு நிசியில் வெளியிட்ட சிதம்பரத்தின் ‘தெலுங்கானா அமைப்பதற்கான ஏற்பாடுகள் துவங்கப்படும்’ என்ற அறிக்கை இங்குள்ள நிலவரத்தை ஒரேயடியாக தலைகீழ் நிலைக்குத் தள்ளிவிட்டது. பழைய புட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய பூதத்தையும் வெளியே விட்டுவிட்டது.
அந்த அறிக்கை சிதம்பரத்தின் (பாவம் அவர்!) அறிக்கையாகவே இங்குள்ள (ஏனைய ஆந்திரப்பகுதிகளில்) பாவித்து மிகப் பெரிய அளவில் போராட்டம் செய்தனர். ஐக்கிய ஆந்திரத்தைப் பிரிக்க மாபெரும் சதி நடக்கிறது என்றும், ஒரே மொழி பேசும் மக்களைப் பிரிப்பது மகா பாபம்.. என்றும் ஏனையபகுதிகளில் விவரங்கள் எடுத்துச் செல்லப்பட்டு காட்டுத் தீ போல பரவியது. சென்ற 1972 இல் தனி ஆந்திரா கேட்ட இவர்கள் அந்தக் கோரிக்கைக்கு முற்றும் மாறாக ஐக்கிய ஆந்திரம்தான் தேவை என்று போராட்டத்தில் மாணவர் சகிதம் இறங்கிவிட்டனர். அத்தனை மக்கள் பிரதிநிதிகளும் கட்சி பேதமில்லாமல் ராஜினாமா செய்ய, மத்திய அரசாங்கத்தை ஒரு கலக்கு கலக்கி விட்டார்கள். சுமார் 25 பாராளுமன்ற எம்.பி.க்கள் கொண்ட பகுதியிலிருந்து வந்த எச்சரிக்கை மத்திய அரசுக்குப் பெரும் தலைவலியாகப் போகவும், அது ஏற்கனவே தெரிவித்த தெலுங்கானா ஏற்பாடுகள் துவங்கப்படும் என்பதற்கு மேலும் விளக்கமாக, 'இது பற்றி பரவலான கருத்துகள் சேகரித்தபின் முடிவு செய்யப்படும்' என்று குழப்பமாக (மறுபடியும் சிதம்பரம்) தெரிவிக்கவே, ஆந்திரா ஓய்ந்து மறுபடியும் தெலுங்கானா ரணகளம் ஆகியது.
மத்தளத்துக்கு இரண்டுபக்கமும் இடி.. மத்திய அரசுக்கு இப்போது எந்தப் பக்கம் பேசினாலும் ஆபத்தே.. ஆனால் இத்தனை கஷ்டத்திலும் ஒரு மகிழ்ச்சி அவர்களுக்கு என்னவென்றால் மாநிலத்தின் பெரிய கட்சியான தெலுகுதேசத்தை உடைக்கும் நிலைக்கு எடுத்துச் சென்றுவிட்டார்கள். காங்கிரஸ் தெலுங்கானாவில் வந்தாலும், ஆந்திராவில் வந்தாலும் அவர்களுக்கு லாபமே. ஆனால் தெலுகுதேசத்தாருக்கு அப்படி இல்லை.. தெலுங்கானா தெலுகுதேசக் கட்சிக்காரர்கள் தனியே போவதற்கு தயாராகிவிட்டார்கள். இது அசகாயசூரரான நாயுடுவுக்கு பெரும் சோதனைதான். என்ன செய்வார் என்று பார்க்கவேண்டும். இன்றைய தேதிவரையில் அக்கட்சியில் இது பற்றி ஒன்றும் சொல்லாமல் இருக்கிறார். இதுதான் அவரை இதுவரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த மௌனம் எத்தனைநாள் நீடிக்கும் என அவருக்கே தெரியவில்லையோ என்னவோ..
சரி, இந்தத் தெலுங்கானா பிரச்னைக்கு என்னதான் வழி.. பிரிந்து போவதா.. அல்லது ஒன்றாய் இருந்துகொண்டே சண்டை போட்டுக்கொண்டு ரத்தம் வடிப்பதா.. இந்தப் பிரச்சினை ஒரு முடிவுக் கட்டத்தில் இருக்கின்றது என்றே அரசியல் நிபுணர்கள் கூற்று. ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்ற நிலை உருவாகிவிட்டதாகவே கருதுகிறார்கள்.

சரி, பிரிந்தால் என்னவாகும்: உண்மையாகச் சொன்னால் ஒன்றும் ஆகாது.. ஹைதராபாத் விஷயத்தில் மத்திய அரசு ஆட்சியின் பொறுப்பில் பொதுவாக வைத்துவிட்டும், மற்ற தெலுங்கானா மாவட்டங்களைப் பிரித்துக் கொடுத்தால், ஆந்திரருக்கு எந்த விதக் கவலையும் இல்லை.. ஐக்கியம் பேசுவோர் அனைவரும் உடனே ஒப்புக் கொள்ள வழி இருக்கிறது. ஆனால் ஹைதராபாத் இல்லாத தெலுங்கானா, காரமில்லாத ஊறுகாய், இனிப்பில்லாத திருப்பதி லட்டு, பருப்பே இல்லாத சாம்பார். இவர்கள் அனைவரின் கண்ணும் அந்த மாபெரும் நகரத்தின் மேல்தான். செல்வமும், நாகரீகமும் கொழிக்கும் ஹைதராபாதைப் பிரித்து தெலுங்கானா கொடுத்தால் தெலுங்கானா மக்கள் ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள்.
ஹைதராபாதை ஒரு பொதுவான நிலையில் வைப்பதிலும் உள்கஷ்டங்கள் நிறைய இருக்கின்றன என்பது மத்திய உளவுத்துறைக்குத் தெரியும். ஏற்கனவே போலிஸ் நடவடிக்கை மூலம்தான் பணியவைக்கப்பட்ட ஒரு நகரத்தைக் கடந்தகால நிலைக்கு எடுத்துச் செல்வதில் மத்திய அரசுக்கு விருப்பம் இருக்காது.
ஒருவேளை ஹைதராபாதையும் சேர்த்து தெலுங்கானாவை அவர்களுக்குக் கொடுத்துவிட்டால் ஏறத்தாழ 30 லட்சம் ஆந்திரர்களும், அவர்கள் உழைப்பும் செல்வமும் வீணாக ஒரு சந்தர்ப்பம் கொடுத்துவிட்டோமே என்ற ஒரு மாபெரும் பயம், ஆந்திராவை ஆக்கிரமிக்கும் சூழ்நிலை உருவாகும். இந்த ஒரு நிலை முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இல்லை. ஆனால் இப்போது இப்படித்தான். இனியும் இப்படித்தான் இருக்குமே தவிர ஹைதராபாதிலிருந்து விலகிவருவது என்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல! நிலத்தின் மீது, தொழில்களின் மீது என ஏராளமான ஆந்திர முதலீடுகள் ஹைதராபாதில் சிக்கிக் கொண்டுள்ளன. அவ்வளவு சீக்கிரம் மீளவும் முடியாது.
வேறு என்னதான் வழி! மத்திய அரசு என்ன செய்யப்போகிறது? ஒருவேளை சென்னாரெட்டியை மடக்கிச் செய்தது போல கேசிஆருக்கு முதலமைச்சர் பதவி கொடுத்து சமாளிக்கமுடியுமா என்றால் ஏராளமான விழிப்புணர்வுக்கு மத்தியில் உள்ள தெலுங்கானா மக்கள் கேசிஆருக்கு எதிராகக் கிளம்பி சுனாமி போல ஆனால் என்ன செய்வது என்ற பயம் இப்போது உண்டு.
மத்திய அரசுக்கு இன்னொரு சிக்கலும் உண்டு. இப்போதே மற்ற மாநிலங்களும் தங்களுக்குள் தனித்தனிப் பிரிவினைக் கோரி அவர்களை நெருக்கவாரம்பித்துள்ளனர். தெலுங்கானா கொடுத்துவிட்டால் அவர்களுக்கும் இவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும். ஒரே மொழிப் பிரதேசத்தையே இரண்டாகப் பிரித்தால், விதர்பா மராத்தி பேசாது இந்தி பேசும் மாநிலம், அதை உடனடியாகச் செய்யுங்கள் என்று போர்க்கொடி எழும்.
அட, தெலுங்கானாவுக்குத் தேவை சுயவளர்ச்சிதானே.. அது செய்துகொடுத்தால் போகிறது.. என்று யாரும் பேசவும் இனி வாய்ப்பில்லை. காலம் கடந்துவிட்ட வாய்ப்பு அது.
ஒரு விவரம் தெரிந்த ஆந்திர அறிஞர் சொன்னார்.. இந்தப் பிரச்சினையை ஏன் தீர்க்கமுயலவேண்டும்.. பிரச்சினை அப்படியே இருக்கட்டும், அதுவே ஆறி அணைந்து சாம்பலாகிவிட்டு, மறுபடியும் சிறிது காலம் கழித்து யாராவது புதிய தலைவர் மூலம் சாம்பல் ஊதப்பட்டு பிரச்சினை பெரிதாகி, மறுபடியும் சிலபல ‘தியாகங்கள்’ மூலம் ஆற்றப்பட்டு.. பிறகு.. மறுபடியும் பழைய குருடி, கதவைத் திறடி கதை போல இப்படியே இருக்கவேண்டியதுதான்.. காலம் செல்லச் செல்லப் பழகிவிடும் என்கிறார். காலம் ஒரு பெரிய மாயாவி என்றும் அந்த அனுபவசாலி ஆறுதல் சொல்கிறார்.
இது ஒருவகை பழைய தந்திரமே தவிர, பிரச்சினையை முடித்து சுமுகநிலை காணவேண்டும் என்ற விருப்பம் யாரிடத்திலும் இல்லையோ என்ற ஐயத்தைதான் எழுப்பும்.
அண்ணன் தம்பி உறவோ, அல்லது கணவன் மனைவி தகறாரோ, இந்தக் குடும்பத்தில் ஏற்கனவே சந்தேகங்களும், அடிதடியும் வெகு ஆழமாகப் பதிந்துள்ளன என்பதையும் அப்படியும் கட்டாயப்படுத்தி ஒரே குடும்பமாக வைத்தால் இந்த அடிதடியுடன் எத்தனை நாட்கள் ஒன்றாக காலம் கழிப்பார்கள் என்ற கவலையும் வருகிறது.
‘யதா ராஜா ததா ப்ரஜா என்ற காலம் போய் யதா ப்ரஜா ததா ராஜா’ என்ற ஓட்டு வாங்கிப் பிழைக்கும் கட்டத்தில் இருக்கும் மத்திய அரசாங்கம் இனி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் மிக மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டுமே என்ற கவலையும் கூடவே சேர்ந்து வருகிறது. இதுதான் இன்றைய சாதாரண ஆந்திர-தெலுங்கானா பிரஜையின் கவலையும் கூட..
திவாகர் (08-01-2010)
(நடுவே உள்ள படம் : தெலுங்கானா தல்லி (தாய்)படம் உதவி: கூகிளார்.