Saturday, November 29, 2014

குலோத்துங்கனும் நானும்

 சென்ற ஞாயிறன்று மாலை விசாகையில் அடியேன் எழுதிய அம்ருதா நாவலை நண்பர்கள் முன்னின்று வெளியீடு செய்தார்கள். 'காலத்தால் செய்த உதவி சிறிதெனினும், ஞாலத்தின் மாணப் பெரிது’ என்பது திருவள்ளுவர் குறள் சொல்வது. . என் விசாகப்பட்டினம் நண்பர்கள் இக்குறளோடு இணைவது மட்டுமல்லாமல் அதற்கும் மேலே ஒரு படி ஏறிச் சென்று எனக்கு ஊக்கம் அளிப்பவர்கள். அதனால்தான் விழாவில் கூட இந்தக் குறளோடு என் ஏற்புரையை அங்கு ஆரம்பித்தேன்.

என்னுடைய எட்டாவது புத்தகமும், ஐந்தாவது சரித்திர நவீனமான ‘அம்ருதா’ என் கைக்குக் கிடைத்த  இரண்டாவது நாளே கடகடவென அதி வேகமாக அம்ருதாவின் விடுதலையையும் தீர்மானித்து நடத்தியும் காட்டி விட்டார்கள்.. இது ஒவ்வொரு முறை என்னுடைய புத்தகம் வெளிவரும்போதெல்லாம் நடைபெறும், செயல்தான். 2004 ஆம் ஆண்டில் வம்சதாரா வந்த புதிதில் நண்பர்களிடத்தே இருந்த அந்த வேகம் பத்து வருடம் கடந்தாலும் இன்னமும் குறையவில்லை என்பதை நினைத்துப் பார்க்கும்போதே என் மனதில் அவர்களது அன்பு கடந்த உணர்ச்சி என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. இது காலத்தால் செய்த உதவியையும் விட மேலானது அன்றோ..
விழாவில் அம்ருதா நவீனம் குலோத்துங்க சோழனைப் பற்றிய கதை என்றதும் என்னிடம் ஒரு நண்பர் கேட்டார்.. ‘நானும் பார்க்கிறேன்.. உங்கள் கதைகளில் எப்படியாவது குலோத்துங்கனைக் கொண்டு வந்துவிடுகிறீர்கள்.. குலோத்துங்கன் உங்களை மிகவும் பாதித்திருக்கிறான்'’ என்று ஆச்சரியமாகச் சொன்னார். ’இதில் ஒன்றும் ஆச்சரியமே இல்லை.. விசாகப்பட்டினத்துக்குப் பழைய காலப் பெயரே’ ‘குலோத்துங்க சோழப் பட்டினம்’ தான்.. அந்தப் பட்டினத்திலிருந்து கதை எழுதினால் குலோத்துங்கன் வரத்தான் செய்வான்’ என்று மேம்போக்காக பதில் கூறினாலும் அவரைக் கதையைப் படித்து விட்டு இந்தக் கேள்வியைக் கேட்கச் சொன்னேன். அம்ருதா நாவலை அறிமுகப்படுத்தியபோது சிறப்புத் தலைவர் திரு ராஜேந்திரன் (சுங்க ஆணையர், திருக்குறள் உலகம் முழுதும் பரவுவதற்கு வழிவகை செய்து வருபவர்) அடியேனைப் பற்றிப் பேசும்போது முந்தைய ஜென்மத்தில் குலோத்துங்கன் அவையில் இருந்திருப்பாரோ என்னவோ என்று சந்தேகம் கூட எழுப்பினார். குலோத்துங்கனுக்கு இரண்டு பெயர்கள் உண்டு. அவன் பிறக்கும்போதே அவனுக்கு ராஜேந்திரன் என்று பெயர் வைத்தனர். பின்னாளில் அரசாண்டபோது வணிகர்களுக்கு சாதகமாக சுங்கவரியைத் தவிர்த்து, ‘சுங்கம் தவிர்த்த சோழன்’ என்ற பெயரையும் பெற்றவன். ஆகையினால் இந்த சுங்கம் தவிர்த்த சோழனின் கதை சொல்லும் நூலை விடுதலை செய்ய சுங்கவரி ஆணையர் திரு ராஜேந்திரன் வந்திருந்தது கூட தற்செயலான செயலாக எனக்குத் தோன்றவில்லை.

ஆனால் இப்போது யோசித்துப் பார்க்கையில் ஏதோ ஒரு வகையில் இந்த சுங்கம் தவிர்த்த ராஜேந்திரனான குலோத்துங்க சோழன் என்ற மகாமன்னன் வரலாறு என்னைப் பாதித்திருக்கவேண்டும்தான்’ என்றே தோன்றுகிறது. நான்கு வருடங்கள் வம்சதாரா நாவலுக்கும், ஒரு வருடம் திருமலைத் திருடன் நாவலுக்கும், ஏறத்தாழ இன்னொரு நான்கு வருடங்கள் அம்ருதா நாவலுக்கும் நாட்களை செலவழித்தபோது, அந்த ஒன்பது வருடங்களில் எழுதப்பட்ட இந்த மூன்று கதைகளிலும் அடித்தளமாக விளங்கிய குலோத்துங்கனை எப்படி அவ்வளவு சுளுவாக என் மனம் தன் பளுவிலிருந்து தள்ளிவிடும் என்றுதான் தோன்றியது.

குலோத்துங்கனை தெலுங்கு ராஜாவாக அம்ருதாவில் ஒரு பேச்சுக்கு அறிமுகப்படுத்தியிருந்தாலும் அவன் முழுக்க முழுக்க தமிழுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவன். தமிழில் அவனை ஒரு பெரும்புலவனாக கலிங்கத்துப் பரணி எழுதிய ஜெயங்கொண்டார் வர்ணிக்கிறார். அவன் காலத்தின் சரித்திரக் கல்வெட்டுகளை மிகவும் கூர்ந்து நோக்கினால் எல்லாமே தமிழும் வடமொழியுமே தவிர ஒரு சில கல்வெட்டுகள் மட்டுமே தெலுங்கு மொழியில் அதுவும் அவன் சார்ந்த தெலுங்கு குட்டி ராஜாக்கள் தங்களோடு அவன் பெயரையும் சேர்த்துக்கொண்டு உயர்த்திக் கொண்ட செய்திகளை மட்டுமே சொல்வதாகும். அதுவும் அந்தக் கல்வெட்டுகள் தெலுங்கு மொழி பேசும் இடங்களில் மட்டுமே கிடைத்திருக்கின்றன. (அப்படிக் கிடைத்த சில தெலுங்கு கல்வெட்டுகள் கூட இக்கதைக்கு உதவி புரிந்தது இன்னொரு விஷயம்) ஆனால் அவன் தமிழில் எடுப்பித்த கல்வெட்டுகள் ஏராளம்.. ஏராளம்.
அம்ருதா கதையில் குலோத்துங்கன் ஆட்சிபீடம் ஏறியது பற்றிய விளக்கம் தந்திருக்கிறேன். இந்த விளக்கம் எப்படி ஒரு சரித்திர பூர்வ ஆதாரமாகும் என வாசகர்கள் கேட்கலாம்தான். நேரடியாக நாம் பார்த்திராத, நேரடியாக தெரிவித்திராத விஷயத்தினை ஒரு சரித்திரக் கதை மூலம் தெளிவாக்கி, அதை ருசுப்படுத்தி விடலாமா எனக் கேட்கலாம்தான். இதற்கு நாயகனான குலோத்துங்கன் காலத்தை நாம் கொஞ்சம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
நான் இந்த கதைஉக்கு ஆதாரமாக பல கல்வெட்டுகளை எடுத்துக் கொண்டாலும் கூட பொதுவாக கல்வெட்டுகள் மூலம் தரப்படும் செய்திகளை விட குலோத்துங்கனைப் பற்றிய கோர்வையான விவரங்களை நமக்கு அள்ளித் தருபவர் அந்த சோழராஜாவின் அரசவைப் புலவராக இருந்த கவிப்பேரரசர் ஜெயங்கொண்டார்தான். அவர் எழுதிய கலிங்கத்துப் பரணியை இன்னமும் கூட சில சரித்திர ஆய்வாளர்கள் ஒரு இலக்கிய நூலாக மட்டுமே மதிக்கிறார்களே தவிர, அந்தக் காவியத்தில் கிடைக்கும் இடைப்பட்ட தரமான செய்திகளை ருசுவாக அதிகமாக எடுத்துக் கொள்ளவில்லை.. எத்தனையோ செய்திகள் எல்லாமே சரித்திர காலத்து புள்ளி விவரங்கள் போல தெளிவானவை.. ஆனாலும் நான் படித்த சரித்திரப்புத்தகங்களிலே (நீலகண்ட சாஸ்திரியார், டி.என். சுப்பிரமணியம், வெங்கடராமையா தவிர்த்து) கலிங்கத்துப் பரணியில் விரவிக் கிடக்கும் செய்திகளை இவர்கள் சீண்டவில்லை..  ஏன் இந்த போக்கு இவர்களிடம் என்பதும் புரியவில்லை.. பழைய காலத்தில் ஒரு செய்தி நடந்தது என்றால் அது நிச்சயம் கல்வெட்டு மூலமாக மட்டுமே கிடைக்கும் என்று இவர்கள் மனதில் மாற்ற முடியாத எண்ணம் பதிந்திருக்கலாமோ என்னவோ.. எதேச்சதிகார மனப்பான்மை கொண்ட அரசர்களின் ஆட்சியில் கல்வெட்டுச் செய்திகள் முழுமையான ஆதாரங்கொண்ட செய்தியாக எப்படி இருக்கமுடியும் என்பதை இவர்கள் மறந்து விடுகிறார்களோ

கலிங்கத்துப் பரணியின் நாயகனே குலோத்துங்கன்தான். அவன் ஆட்சியைப் பிடித்த காலத்தைப் பற்றிய ஒரு தகவல் ஜெயங்கொண்டார் மூலமாக வருகின்றது.

மறையவர் வேள்வி குன்றி மனுநெறி யனைத்து மாறித்
துறைகளோ ராறு மாறிச் சுருதியு முழக்கம் ஓய்ந்தே.          27

சாதிக ளொன்றொ டொன்று தலைதடு மாறி யாரும்
ஓதிய நெறியின் நில்லா தொழுக்கமும் மறந்து போயே.     28

ஒருவரை யொருவர் கைம்மிக் கும்பர்தங் கோயில் சோம்பி
அரிவையர் கற்பின் மாறி யரண்களு மழிய வாங்கே.       29

கலியிருள் பரந்த காலைக் கலியிருள் கரக்கத் தோன்றும்
ஒலிகட லருக்க னென்ன உலகுய்ய வந்து தோன்றி.    30

காப்பெலா முடைய தானே படைப்பதுங் கடனாக் கொண்டு
கோப்பெலாங் குலைந்தோர் தம்மைக் குறியிலே நிறுத்தி வைத்தே.  31

வேதம் ஓதியோர் வேதமரபை மறந்தனர். நீதி குலைந்தது, நேர்மை அழிந்தது, ஒழுக்கம் மறைந்தது, எங்கெங்கு நோக்கினும் அடிதடி, கொலை, கொள்ளை, ஆட்சியாளர் தர்மம் மறந்தனர், ஆலயங்கள் சோம்பிக்கிடந்தன. தேவதைகள் வலுவிழந்து நின்றன. மங்கையரின் கற்பு சீர்கெட்டது. சாதிகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டு அழிவைப் பெரிதாக்கியது. எங்கும் காரிருளான வாழ்க்கை.

அந்தக் காரிருளான வாழ்க்கையில் ஒளிபுகுத்த வந்தவன் குலோத்துங்க சோழன்.. என்பதாக கலிங்கத்துப் பரணி குலோத்துங்கன் சோழ ஆட்சியைக் கைக்கொண்ட சமயத்தில் சோழ தேசத்தில் இருந்த நிலைமையைச் சொல்கிறது.

இப்படிப்பட்ட சீர்குலைந்த தேசத்தை நம் கற்பனையில் ஒரு கணம் கொண்டு வாருங்கள். கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். இந்த சீர்கெட்ட காலத்துக்கு சற்று முன்னர்தாம் ராஜராஜ சோழன் ஒரு மிகச் சிறந்த அரசாட்சியையும், அவன் மகன் ராஜேந்திரனோ தந்தையை விட சிறந்த அரசனாகவும் விளங்கினான் என்று சரித்திரத்தில் பரவலாக படித்திருக்கிறோம். தர்மத்தின் ஆட்சி மிகப் பரவலாக நடந்த காலம் அது. சமுதாயத்தில் பல சீர்கேடுகள் அழிக்கப்பட்டு அரசியலில் குடவோலை மூலம் ஊராட்சியை சாதாரண மக்களே செய்ய வழிவகை செய்யப்பட்ட காலங்கள் அது, மிகப் பெரிய கோயில்கள், மிகப் பெரிய ஏரிகள் கட்டப்பட்ட காலம் அது. எங்கும் வேதகோஷங்களோடு தெய்வத்திருமுறை தமிழொலியும் சேர தெய்வங்கெளெல்லாம் ஒரு சேர நின்று வாழ்த்திய காலகட்டம் கூட அதுதான். ராஜேந்திரனின் மகன்கள் கடைக் காலத்தில் மிகச் சிறந்த சோழ தேசம் ஏன் இப்படி சீர்கெட்டுப் போகவேண்டும்? வேதம் ஓதிய காலம் அத்தனை அதி சீக்கிரத்தில் சாத்தானின் கைக்குள் ஏன் சிக்கவேண்டும்? சாதிச்சண்டை என்பது நம் பாரததேசத்தில் சகஜமான ஒன்றுதான்.. ஆனால் நல்ல ஆட்சியாளர்கள் அந்த சாதிப் பிரிவினையை காணாமல் போகடித்தது வாஸ்தவமே.. அப்படி இருக்கும்போது ஏன் நல்ல ஆட்சியாளர்கள் திடீரென மாயமாக வேண்டும்?

இத்தகைய அவலங்களை நாம் ஏதோ கற்பனையில் காணவில்லை.. அழகான கவிதைப் பாடலாக கலிங்கத்துப் பரணியே சொல்கின்றது என்றால் அந்தக் குறிப்பிட்ட காலங்கள் எப்படியெல்லாம் சீரழிந்து கிடந்தனவோ.. அந்த காரிருள் படிந்த நாட்களில் கொள்ளையர் கும்பலாக மக்கள் மாறிக் கொண்டிருக்கும் வேளையில் இந்த குலோத்துங்கன் ஆட்சியைப் பிடித்து அரசனாகிறான், அடுத்த ஒரு ஐம்பது ஆண்டுகள் அவன் ஆட்சி நீடிக்கிறது. அமைதி எங்கும் நிரவி தர்மம் தலையெடுத்துத் தழைத்தோங்குகிறது, கோயில்கள் சிறக்கின்றன, சாதிப் பிரிவினைகள் மட்டுப்படுத்தப்பட்டு எதிரிகளைக் கட்டுப்படுத்தி ஒரு பேரரசனாக உருவாகுகிறான் என்றால் இந்த அரசன் எப்படிப்பட்டவனாக இருந்திருக்கவேண்டும்.. தேசத்தின் காரிருளைப் போக்கி ஒளியைப் புகுத்திய ஒரு மாபெரும் தலைவனாக வந்திருக்கிறான் என்றால் அவன் சக்தியும், குணமும் எத்தகையதாக இருந்திருக்கவேண்டும்.. அதர்மத்தை அழித்து தர்மம் காத்திருக்கிறான் என்றால் அவன் ஆளும் திறமையும், நேர்மையும் எந்த அளவில் இருந்திருக்கமுடியும்,..

இந்தக் கேள்விகள்தான் அம்ருதாவின் கதைக்கு ஆதாரம். இந்தக் கேள்விகள்தான் என்னுடைய மூன்று நாவல்களிலும் அடிப்படையாக நிரவிக்கிடந்து பதிலாக வருகின்றது. இந்த மூன்று நாவல்களில் குலோத்துங்கன் பற்றி அதிகம் பேசப்படுவது அம்ருதா’வில் மட்டுமே..

விசாகப்பட்டினத்துக்கும் குலோத்துங்கனுக்கும் தொடர்பு உண்டுதான். கலிங்கத்துப் போர் நடந்து முடிந்ததும், அவன் பெயரை இந்த ஊருக்கு வைத்துவிட்டுப் போன செய்தியை இங்கு அறிஞர்கள் சொல்லி வருகின்றார்கள். சோழர்கள் எங்கு சென்றாலும் ஊர்ப் பெயரை மாற்றி விடுவது பொதுவான வழக்கம்தான். இங்கு கோதாவரி வடகரை புண்ணிய தலமான திராட்சாராமம் என்னும் அழகிய ஊர், குலோத்துங்கன் காலத்தில் ’இடர்க்கரம்பை’ என்னும் அழகிய தமிழ்ப்பெயரில் வழங்கி வந்தது. விஜயவாடாவையே பெயர் மாற்றி ராஜேந்திரசோழபுரம் என்று அப்போது மாற்றி இருந்தனர்.  சட்டிஸ்கரில் உள்ள இன்றைய பஸ்தார் நகரம் சோழர்கள் காலத்திலே ‘சக்கரகோட்டம்’ என்ற தமிழ்பெயராக பேசப்பட்டது. ஆகையினால் குலோத்துங்க சோழபட்டினம் என்று இந்த இந்த கடற்கரை ஊருக்கு சோழர்கள் பெயர் வைத்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லைதான்.

ஆனால் எங்கேயோ சோழ தேசத்து ஆளுகையில் இருந்து கொண்டு இத்தனை தூரம் வந்து புகழ்பெறச் செய்த குலோத்துங்கன் எனும் அந்தப் பெயருக்கு ஏதோ ஒரு சக்தி இருக்கவேண்டும்தான். அந்த சக்திதான் என்னுள் வந்து இந்த அம்ருதா கதையை எழுதவைத்ததோ என்னவோ...
ஏறத்தாழ 950 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கதைதான் என்றாலும் குலோத்துங்கன் என்ற அரசன் பெயர் இத்தனை காலத்துக்குப் பிறகும் இன்றும் பேசப்படுகின்றது, இன்னமும் வரும் காலங்களிலும் பேசப்படும் என்பதில் குலோத்துங்கனுக்கு மட்டுமா பெருமை.. அந்த குலோத்துங்கன் நடந்து சென்ற தேசத்தில் பிறந்த அத்தனை பேருக்கும் பெருமைதானே..

எதற்கும் ஒருமுறை அம்ருதாவைப் படித்து விடுங்கள்.. நீங்களும் அவன் பெருமை பேசலாமே என்று கூட தோன்றலாம்.. 














( மேலே படத்தில் முதல் நூலைப் பெற்ற டாக்டர் சுகந்தி, சுங்கம் ஆணையர் திரு ராஜேந்திரன், மற்றும் தமிழ்க்கலைமன்ற செயலர் திரு பெருமாள்)

6 comments:

  1. Happy to see the pictures, and to read about the function

    ReplyDelete
  2. புத்தகத்தைக் குறித்த செய்திகளே மனதைக் கவர்கின்றது. புத்தகம் படிக்கும் ஆவலையும் தூண்டுகிறது. வாழ்த்துகள். இதில் உங்களோடு இணைந்து நம் சிநேகித, சிநேகிதிகளும் பங்காற்றி இருப்பதையும் இப்போதே அறிந்தேன். அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. பயனுள்ள நூல். படைத்தவருக்குப் பாராட்டு.

    ReplyDelete