Friday, October 24, 2014

அடுத்த வீட்டில் ஏற்பட்ட அலங்கோலம்


சென்ற பதினொன்றாம் தேதி சனிக்கிழமையன்று மாலை சென்று போன மின்சாரம் சரியாக எட்டுநாள் கழித்து இதோ மீண்டும் எட்டிப்பார்த்து எங்களை அடையாளம் கண்டுகொண்டு சரியான இடத்தில்தான் வந்துசேர்ந்தோம் என்று வந்துவிட்டதைப் பற்றியும் அதற்கு மூலகாரணமான அதி பயங்கர ஹூட் ஹூட் புயலையும் பற்றி எழுத வேண்டுமென்றிருந்தேன். 

மூன்று நான்கு நாட்களாகவே ‘அட்வான்ஸ் இன்ஃபார்மேஷன்’ கொடுத்து வருவேன் வருவேன் என்று சாதாரணமாக பயமுறுத்திக்கொண்டே திடீரென பயங்கரமான உருவெடுத்து ஒரேயடியாக நகரத்தை அழித்திடுவேன் என்று தனக்குப்பிடித்த வரையில், தன்னால் முடிந்தவரை அழிக்க வந்து போன அந்த ஹுட்ஹூட் புயலைப் பற்றி எழுதாமல் எப்படி விட்டு விடமுடியும்.

வெப் துனியாவிலிருந்து நண்பர் அண்ணா கண்ணன் சனிக்கிழமை இரவு தொலைபேசியிருந்தார். புயலைப் பற்றி எழுதி வெப் துனியாவுக்கு போட்டோவுடன் அனுப்புங்கள் என்றார். நானும் மிக எளிதாகவே நினைத்துக்கொண்டு அதற்கென்ன, அப்படியே என்று சொன்னவன்தான்.

ஆனால் அடுத்த வந்த நாட்களில் எதை எழுதுவது, எப்படி எழுதுவது, என்று புரியாமல் இருந்தது வாஸ்தவம்தான்.

அந்த மறக்கமுடியாத ஞாயிற்றுக்கிழமையன்று வந்த இந்தப் புயல் இந்த நகரத்துக் கரையைக் கடந்து போனபோது தன்னுடன் கூட்டிக் கொண்டு போன அலைபேசி இணைப்புகளை விடாப்பிடியாகப் போராடி மீட்டுக் கொண்டு வந்து கொடுத்ததைச் சொல்லலாமா, இல்லை..
மனித உயிர்கள் பறிக்கப்படவில்லையே என்ற கோபத்துடன் கண்ணில் கண்ட மரங்களையும், மின்சாரக்கம்பங்களோடு, தொலைபேசிக் கமபங்களையும் வேரோடு சாய்த்துச் சென்றதைப் பற்றிச் சொல்லவா..
சக்தி (பவர்) இல்லையேல் இயக்கமில்லை என்பதைத் தெள்ளத் தெளிவாக சாதி மத பேதமில்லாமல் உணர்த்த வந்து இந்த அனுபவத்தை எப்படிச் சொல்வது.. மின்சாரம் இல்லாமையால் எதையுமே இயக்கமுடியாத நிலையில் வைத்திருக்கும் இந்த உலகத்தை இந்தவிதமாக இந்த சமயத்தில் ஏன் இப்படி வைத்திருக்கிறார்கள் என்று அடிக்கடி வந்து போன கோபத்தைச் சொல்வதா? 

இதுதான் வாழ்வில் கடைசி தருணமோ என்று நினைத்து வருத்தப்படும் மக்களின் கவலை தீர்ந்ததுதான் என்றாலும் அந்தக் கவலைக்குப் பின் வந்த தொடர் துன்பங்களைத் துயரப்படாமல் தாங்கிய தைரியத்தைச் சொல்வதா..

எது வந்தாலும் உங்களுக்கு அண்டமாக உங்களுக்கு அருகேயே உங்கள் குறை தீரும் வரை இருப்பேன் என்று மக்களிடையே மக்களில் ஒருவராய் ஒரு முதலமைச்சர் இருந்த அதிசயத்தைச் சொல்வதா

குறைகள் பல இருந்தாலும் முணுமுணுக்காமல் பணியாற்றிய இந்த அரசு சேவகர்களைப் பற்றி சொல்வதா

ஏறத்தாழ ஒருகோடியே ஐம்பது லட்சம் மக்கள் கஷ்டங்களில் வசிக்க ஆனாலும் அரசாங்கத்திடம் அதிகம் எதிர்பார்க்காமல் தங்கள் தேவைகளைத் தாங்களே பூர்த்தி செய்யும் இந்தப் பகுதி மக்களைப் பற்றிச் சொல்வதா..

எதைச் சொல்வது, எதை எழுதுவது என்பது புரியாமல் ஏதோ கண்ணில் கண்ட காட்சியை மட்டும் அவசரம் அவசரமாக விவரித்து, கிடைத்த ஒரு துளி இன்வெர்டர் மின்சாரத்தில் அண்ணா கண்ணனுக்கு அன்றே அனுப்பி விட்டு பின் நிதானமாகத்தான் பவர் வந்த பிறகுதான் அதன் சக்தி கொண்டு எழுத ஆரம்பித்தேன்.  

ஆனாலும் எப்பேர்ப்பட்ட ஒரு அனுபவம் என்பதை மட்டும் வாழ்க்கையில் இந்த மக்களுக்கும் ஆண்டவன் கொடுத்திருக்கிறான் என்பதை மட்டும் சொல்ல ஆசை எழுகிறது.. அந்த அனுபவத்தை நேரில் அனுபவிக்கும் பாக்கியத்தை அல்லது அபாக்கியத்தைப் பெற்றவன் என்கிற முறையில் உங்களோடு பகிர்ந்துகொள்ளத்தான் வேண்டும். சாதாரணமான ஞாயிற்றுக் கிழமையா அது.. ஞாயிறே தோன்றாமல் போய்விடுமோ என்று வானத்தை அப்படியே வருணபகவானும், வாய் பகவானும் கட்டிப்போட்ட விந்தையை எப்படி விவரிக்கமுடியும் என்று தெரியவில்லைதான்.
”திவாகர்.. உங்களுடன் நான் பேசும் கடைசிப் பேச்சாக இது இருக்குமோ என்று அஞ்சுகிறேன்.. என்னுடைய கைபேசியில் சார்ஜ் இல்லை.. மங்கி வருகிறது. எங்கள் ஃப்ளாட் மூன்றுமுறை ஆடிவிட்டது.. எல்லோரும் கீழேதான் இருக்கிறோம்.. பீச் ரோட்டில் பல கட்டடங்களில் மக்கள் இந்த நிலைதான்.. இறைவன் அருளால் நன்றாக இருந்தால் மறுபடி சந்திப்போம்.. பை சார்!!”

துறைமுகத்தில் பெரிய பதவியில் இருக்கும் ஒரு நண்பரின் இந்த பேச்சுதான் என்னுடைய ஏர்-டெல் இணைப்பு கைபேசியில் கடைசி பேச்சாகும்.. ஞாயிறன்று சுமார் பதினொன்று மணியளவில் இந்த பேச்சோடுஎன் இணைப்பும் மங்கிப்போய்விட்டதுதான். ஏர்டெல், ஐடியா, டாடா என இந்த மூன்று இணைப்புகளுமே செயலழிந்து போன நிலையில் பி எஸ் என் எல் மட்டும் உயிர் பிழைத்து எங்களை மற்ற மனிதர்களுடன் தொடர்பு கொள்ள வைத்திருந்ததைப் பாராட்டத்தானே வேண்டும்.

நாங்கள் இருந்த கட்டடம் ஆடியது என்பது அந்தச் சமயத்தில் ஏனோ அபாயமாகத் தோன்றவில்லை.. ஏனெனில் நகரத்தில் அத்தனை அடுக்கு மாடிக் கட்டங்களுமே அவ்வப்போது ஆட்டம் கண்டுகொண்டுதான் இருந்தன.. எங்கள் அடுக்கு மாடியும் அவைகளில் ஒன்று என்பதால் அத்தனை குடும்பங்களும் கீழே வந்து சற்று ஒதுங்கியும், எதிர்பார்த்தவிதத்தில் கட்டடம் நொறுங்கினால் உடனே வெளியேற சித்தமாகவும்தான் இருந்தோம். குழந்தைகளும் பெரியவர்களும் சற்று முன்னரே இருக்கவைத்தோம்.. காற்று மிக அதிக வேகத்தில் வீச வீச காற்றோடு அதிகபட்ச மழையும் தொடர எதையும் எதிர்பார்க்கும் விதத்தில்தான் அந்தக் கணத்தில் இருந்தோம்.

ஞாயிறன்று காலையிலிருந்தே அதிவேகப்புயல் மழையோடு தாக்கத் தொடங்கிவிட்டது. புயலும் மழையும் யாருக்குமே சகஜம் என்பதால் காலைக்கடன்கள் எல்லாமே சகஜமாகத்தான் இருந்தன. மின்சாரம் ஒன்று மட்டுமே இல்லையென்பதால் இதுவும் சகஜம்தானே என்றுதான் அன்று காலையில் எங்கள் மனநிலை இருந்தது. ஒன்பது மணி தாண்ட அந்த அதிவேகக் காற்று இன்னமும் வேகம் பிடித்தது.. நான் காற்றைப் படம் பிடிக்க மேல் தளத்துக்குச் சென்றுவிட்டேன்.. 

கீழே வந்ததும் மேலும் மேலும் தீவிரமடைந்தபோதுதான் கவனித்தோம்.. நாங்கள் இருந்த கட்டடம் ஒருமுறை அதிர்ந்தது. ஆனாலும் மழை தீவிரமாக இருந்து வராண்டா முழுவதும் தண்ணீர் நிலைக் கதவு வழியாக உள்ளேயும் வர ஆரம்பித்தது. . இத்தனைக்கும் நாங்கள் இருந்த நான்காவது மாடியில் ஏறத்தாழ எட்டடி இடைவெளியில் நிலைக்கதவு  உள்ளே தள்ளி இருந்ததுதான். அப்படியும் அந்தக் கதவை மிகப் பலமாக காற்றும் மழையும் தட்டி உடைக்க ஆரம்பிக்க, நாங்கள் உள்ளேஇருந்து அந்தக் கதவை அடைக்க உள் வராண்டாவில் இருந்த சோபா இருக்கைகளை அந்தக் கதவை நெருக்கி வைத்துப் பார்த்தோம். இந்தச் சமயத்தில்தான் இரண்டாவது முறையாக கட்டடம் அதிர்ந்தது. மேலும் அங்கு இருக்க விரும்பாமல் எங்கள் நான்காவது மாடியில் வந்து அனைவரையும் கீழே செல்லும்படி சொன்னவுடன், ஏற்கனவே பீதியில் இருந்தவர்கள் படிக்கட்டு வழியாக கீழே இறங்கினர். இத்தனை பீதியிலும் ஒரு குடும்பத்தினர் தங்கள் நகைகளையும், கேஷ் போன்றவைகளையும் ஒரு பெட்டியில் போட்டு எடுத்து வைத்திருந்து கீழே தன்னுடன் கொண்டு சென்றனர். (பெட்டியில் என்ன என்று கேட்டபோது செவியில் ரகசியமாகச் சொன்னார்). ஏறத்தாழ பதினைந்து குடும்பங்களுடன் வெளிப்பக்கம் குடிசைகளில் இருந்த நான்கு குடும்பங்கள் அந்தக் கீழ்ப்பகுதியில் மழையையும் புயலையும் பார்த்துக் கொண்டே காலம் நகர்த்தினோம்.
நான் கீழே எனது காரில் உட்கார்ந்து எஃப் எம் ரேடியோவில் செய்தி கேட்டுக் கொண்டே மற்றவர்களிடம் பகிர்ந்துகொண்டிருந்தேன்.. கரைக்கு 40 கி,மீ அருகே வந்துகொண்டிருப்பதாகவும் விசாகப்பட்டினத்தருகே எந்த நேரத்திலும் கரையைக் கடக்கலாம் என்று சொன்னபோதும் அந்த எஃப் எம் செய்தியாளர் சொன்னபோது அவர் குரலில் இருந்த பீதி எல்லோர் வயிற்றையும் கலக்கியதுதான்..

இந்த சமயத்தில்தான் மேற்கண்ட போன் வந்தது.. எல்லோருக்கும் தெரியப்படுத்தினேன்.. நாம் எல்லோருமே ஒரே நிலைமையில்தான் என்பதில் எல்லோருமே தெரிந்து வைத்திருந்தனர். அடுத்த அரை மணிநேரத்தில் மணிக்கு 200-220 கிமீ வேகத்தில் (பின்னர்தான் இந்தக் கணக்கு விவரம் தெரிந்தது) காற்று வீச காலை நன்றாக ஊனிக்கொண்டு நின்று கொண்டிருந்த எங்களை அப்படியே முன்னே தள்ள ஆரம்பித்தது. பெரியவர்கள் குழந்தைகள் சுவற்றின் பின்னால் கெட்டியாக சாய்ந்து கொண்டனர். குழந்தைகள் பீறிட்டுஅலற யாருக்கு என்ன செய்வது என்பது புரியாத நிலை.. கீழ்வீட்டுக் காரர் தன் கடைசிகாலம் என்று ஏதோ சொல்ல அது சரியாக காதில் செல்லாமல் காற்று அப்படியே அள்ளிக்கொண்டு போனதுதான்..எங்கேயோ பக்கத்தில்தான் கரையைக் கடக்கிறது என்று மட்டும் தெரிந்தது. கரையைக் கடந்த போது நாங்கள் இருந்த கட்டடம் இன்னொரு முறை ஆட்டம் கண்டதை அனைவருமே உணர்ந்தோம்.. 

சற்று நேரம் கழித்து காற்று ஒரேயடியாக நின்று போனது மழை மட்டும் நிதானமாக இருந்தது. அப்பாடி பிழைத்தோம் என்று ஒவ்வொருவரும் அவரவர் இல்லத்தில் சேரும்போது மறுபடியும் அந்தக் காற்று அதே வேகத்துடன் வீசத்தொடங்கியது. இப்போது ஒரு விஷயம் புரிந்தது. காற்றுக் கரையைக் கடந்த போது வீசுவது சற்று நேரம் நிற்கும் என்றும் பின்னர் கரையில் தன் வேகத்தைத் தொடரும் என்றும் ஏற்கனவே புயல் மையம் தெரிவித்திருந்தது. ஆனால் போகப்போக அது வலுவிழக்கும் என்பதாகவும் சொல்லி இருந்தார்களாதலால் சற்று நிம்மதியுடன் இருந்தோம்.. ஆனால் மழை மிக அதிகமான அளவில் காற்றின் வேகம் சிறிதளவும் குறையாமல் இருந்தது.. ஆனால் காற்றின் திசை மாறி இருந்தது. காலை வரை கிழக்குத் திசையிலிருந்து மேற்காக வீசிய காற்று இப்போது மேற்கிலிருந்து கீழைதிசை நோக்கி வீசியது. அத்துடன் மட்டுமல்லாமல் அடுத்தவீட்டு அடுக்கு மாடி வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் ஏதோ கல்வீச்செறிவது போல சர்வ சாதாரணமாக வந்து கொண்டிருந்தன. பால்கணியும் போக முடியாமல், வெளியேயும் வர முடியாமல்வேறு யாரோடும் பேச முடியாமல் இருக்கும் ஒரு நிலை.. ஏறத்தாழ மூன்று மணி நேரத்துக்குப் பிறகுதான் கொஞ்சம் வெளியே வரமுடிந்தது.. வெளியே மரங்கள் ஒன்று கூட இல்லாமல் அத்தனையும் கீழே கிடக்க, மின்சாரக் கம்பங்கள் ஒடிந்து அல்லதுபிடுங்கப்பட்டுக் கிடக்க ஆங்காங்கே ஜன்னல் கண்ணாடிகள் ஒடிந்துபோய் பளபளவென ஒளிற இப்படியுமா ஒரு அழிவு என்பதைக் கண்ணால் கண்டபோது கண்ணீர்தான் வந்தது.

வானிலை அறிவிப்பு அலுவலக நிர்வாகி சொன்னது, இந்த 220 கி.மீட்டர் வேகத்தில் வந்த புயலானது விசாகப்பட்டினத்தில் தாக்கியதில் நகரம் இந்த சிறிய அளவிலாவது தப்பிப் பிழைக்கப் பெரிய காரணம் நகரைச் சுற்றி உள்ள மலைகள்தான், என்றார். 220 கி.மீ வேகத்தை மலைகளும் தாங்கிக் கொண்டதால் அந்த அதிவேகத்தின் தாக்கம் நகரத்தின் மீது அவ்வளவாகப் படவில்லை என்றும் சொன்னார். கட்டங்கள் ஆடியதே என்று கேட்டதற்கு இதெல்லாம் 180 கி,மீட்டருக்கே ஆடும், ஆனால் 220 கி.மீட்டர் வேகத்தில் நாசங்கள்தான் அதிகமாக விளையும், உயர் அடுக்கு மாடிக் கட்டடங்கள் தாளாது அந்த வேகத்தை, என்றார். அதே சமயத்தில் நகரத்தில் உள்ள அதிக அளவிலான மரங்கள் மக்களுக்குப் பதில் தாம் விழுந்து மிகச் சிறந்த தியாகத்தைச் செய்துள்ளன என்று அவர்பாணியில் வர்ணித்தார். மரங்கள் விழுந்ததால் மனிதர்கள் மரத்தின் அடியில் பட்டு ஏறத்தாழ நாற்பது பேர் இறந்தனரென்பதையும் நூற்றுக்கு மேற்பட்டோர் காயமுற்றனர் என்பதையும் அவர் சொல்லவில்லை.. இரண்டு நாட்கள் கழித்து அரசாங்கம் சொல்லியது.
மனிதர்களின் கதியே இதுவென்றால் கால்நடைகளையும், பறவைகளையும் பற்றிச் சொல்ல இயலாது, கால்நடைக்காவது துணையாக மனிதன் இருக்கின்றான். ஆனால் இருப்பிடங்களான மரங்களை பரிபூரணமாக இழந்த பறவைகளின் கதி.. பரிதாபம்தான்..

இந்தப் பகுதி மக்களின் ஒற்றுமை எனக்குப் பிடித்திருந்தது. சிரமகாலத்தில் மட்டுமே ஒருவருக்கொருவரின் உதவி என்பது இன்றியமையாதது என்பதை நிரூபித்தனர்.. பல அடுக்கு மாடிக் கட்டடங்களில் இப்படிப்பட்ட சிரமங்கள் வந்தபோது துன்பங்களைப் பகிர்ந்துகொண்டு ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக்கொண்டார்கள். இங்கு ஒதுக்குப்புறமான நகரப் பகுதியில் முப்பது வீடுகள் கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்போர் மூன்று நாட்களுக்குக் கூட்டுச் சமையல் செய்து பகிர்ந்து உண்டனர் என்பதை ஹிண்டு நாளிதழ் ஒரு அதிசயச் செய்தி போல கட்டம் கட்டி வெளியிட்டிருந்தது.

எங்கள் குடியிருப்பிலும் இந்த ‘அதிசயம்’ நிகழ்ந்ததுதான். ஒருவருக்கொருவர் அதிகம் தொடர்பில்லாமல் பழகிப் போய்விட்டபடியால் முதலில் சற்று சங்கோஜப்பட்டாலும் பின்னர் சரியாகிவிட்டதுதான்.. அதைப் போல கீழ் மாடியில் வசிக்கும் ஒருமுஸ்லீம்குடும்பப் பெண்மணி ஞாயிறன்று பகல் வேளையில் ஏறத்தாழ முப்பது பேருக்கு (வெளியே இருந்து புகலிடம் கேட்டு வந்த நான்கு குடும்பங்களுக்கும் சேர்த்து) பிரியாணி செய்து பகிர்ந்து கொண்டார். நாங்களும் எங்களிடமிருந்த அனைத்து ரெடிமேட் உணவு வகைகளையும், பழங்களையும், கொடுத்து விட்டோம். ஞாயிறன்று காலை பலமாக சாப்பிட்ட எங்கள் காலை உணவு கைகொடுக்க, ஊரில் தக்காளி மட்டுமே தனியொரு காய்கறியாக ஆட்சி செய்ய, அடுத்த நான்கு நாட்களுக்கும் தக்காளியை வைத்தே தினம் தினம் வேளா வேளைக்கு விதம்விதமான வகையறா செய்து சாப்பிட்டோம்.
தொலைபேசி இணைப்பில் பி.எஸ்.என் எல் பங்கு மிகச் சிறப்பானது.அத்தனை தனியார் இணைப்புகளும் புயலில் தொலைந்து போக மிகத் தைரியமாக இந்த அதிவேகக் காற்றை எதிர்த்துப் போராடிய இந்த அரசாங்கக்கம்பெனியை எத்தனைப் பாராட்டினாலும் தகும். 
இந்த பி.எஸ்.என்.எல் உதவியால்தான் ஏதோ என்னால் கொஞ்சம் (என் மனைவியின் கைபேசி துணையுடன்) வெளியாருடன் உலாவவும் பேசவும் முடிந்தது. அவ்வப்போது முகநூலில், இருக்கும் கொஞ்ச நஞ்ச சார்ஜ் கொண்டு, தகவல்களையும் தர முடிந்தது.
எங்களுக்கு ஜெனரேட்டர் உதவி ஏற்கனவே இருந்தாலும் டீஸல் கிடைப்பது சிரமமாக இருந்ததால் இருக்கும் எண்ணெயைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டிய நிலையில் இருந்தோம். ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரம் மட்டுமே.. அதற்குள் போன் பேட்டரி ரீசார்ஜ் செய்து விடுவோம். ஜெனரேட்டர் இருந்ததால் மட்டுமே எங்களால் நிலத்தடி நீரைப் பயன்படுத்தமுடிந்தது.. அதே சமயத்தில் ஜெனரேட்டார் இல்லாத பல அடுக்கு மாடி வீடுகளின் நிலைமை படு மோசமாக இந்தத் தண்ணீர் விஷயத்தில் இருந்தது. ஹிண்டு’வில் ஒருசெய்தி வந்திருந்தது. அதாவது ஒரு இளம்பெண் தான் இரண்டுநாட்களாகக் குளிக்கமுடியவில்லை என்றும் அடுத்த நாள் தன் பிறந்ததினம் வருவதாகவும் யாராவது ஒரு வாளி தண்ணீர் பிறந்த நாள் பரிசாகத் தந்தால் மகிழ்ச்சியடைவேன், என்பதாகவும் செய்தி போட்டிருந்தனர். மின்சாரம் இல்லாததால் குடிதண்ணீரும் தரமுடியாத நிலையில் நகரம் இருந்தது. ஏதோ இரண்டு நாட்களாகத்தான் பெரிய ஜெனரேட்டர் கொண்டு வந்து குடிநீர் பம்பிங் செய்து அனுப்புகிறார்கள். மின்சாரம் இல்லாததால் ஊரில் மெழுகுவர்த்திதட்டுப்பாடு.. ஒரு சாண் ஒல்லி மெழுகுவர்த்தி ஐம்பது ரூபாய் வரைக்கும் சென்றது.

இரவானால் வீட்டில் மட்டுமல்ல, ஊரெங்கும் இருட்டுதான் என்பதால் வெளியே பயணம் செய்வோர் மிகக் குறைவு. அப்படியும் பயணம் செய்பவர்கள் சாலையில் கிடக்கும் மரக்கிளைகளைத் தாண்டிச் செல்வதென்பது இன்னமும் கடினம்தான். நகரம் பகலிலேயே கோரமாகக் காட்சியளித்ததுதான் என்றாலும் இருளில்கேட்கவா வேண்டும்?
சென்ற ஞாயிறு விடுமுறை தினமாகப் பார்த்து இந்த புயல் வந்தாலும் எங்கள் மேல் கரிசனம் கொண்டு அடுத்து வந்த ஏழு நாட்களுக்கும் விடுமுறையை எல்லோருக்கும் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டதுதான்.. யாரும் வேலைக்கோ, தனியார் கம்பெனி அலுவலகத்துக்கோ சென்ற வாரம் முழுதும் செல்லவில்லை.. அப்படியே வீட்டில் அடைந்து கிடந்தனர். இதனால் குடும்பங்களில் சண்டை சச்சரவுகள் அதிகமாக நடக்க வாய்ப்புண்டு என்றாலும் அந்நியோன்னியத்துக்குக் கூட அதிக வாய்ப்புண்டுதானே..

எர்லி டு பெட், எர்லி டு ரைஸ் என்பார்களே.. அது கிட்டதட்ட எல்லோருமே கடைபிடித்தார்கள். போன் இணைப்புத் துண்டிக்கப்பட்டதால் அடுத்தவருடன் பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதும் ஒரு காரணம் என்றாலும் மிகப் பெரிய காரணம் தொலைக்காட்சி வசதி துண்டிக்கப்பட்டதுதான்.. இன்றோடு பதினைந்து நாட்கள் ஆயிற்று தொலைக்காட்சியைப் பார்த்து.. (நல்லதுதானே என்று பலர் சொல்வார்கள்).. ஆனாலும் இந்தப் பிராந்தியத்தில் உள்ள ஒருகோடியே ஐம்பது லட்சம் பேர் தொலைக் காட்சியை இத்தனை நாட்களாகப் பார்ப்பதில்லை (பார்க்கமுடியவில்லை) என்பதையும் தெரிந்து கொண்டால், இந்தக் காலகட்டத்திலிது ஒரு பெரிய அதிசயமே.

இன்னொரு அதிசயம் இங்கு தீபாவளி இந்தமுறை பட்டாசு சப்தமில்லாமல், வெடிக்கப்படாமல் கொண்டாடியதைச் சொல்லவேண்டும். ஏற்கனவே வாயுதேவனும் வருணபகவானும் மாறி மாறி வறுத்தெடுக்கையில், மரங்களெல்லாம் பிடுங்கப்பட்டும் பறிக்கப்பட்டும் குப்பைக் கூளமாய்க் குவிந்திருக்கையில் ஒரு சிறு தீப்பொறி பட்டாலே போதும் ஒரு அக்கினிக் காடொன்று உருவாக. இந்த நிலைமையில் அரசாங்கம் கேட்டுக்கொண்டதற்கிணங்க மக்கள் யாருமே வெடி வெடிக்கவில்லை என்பதோடு அமைதியாக தீபாவளியைக் கொண்டாடினர் என்பது ஆச்சரியமான உண்மைதான்.

எதிர்காலத்தில் எதையுமே எதிர்கொள்ளமுடியும் என்ற நம்பிக்கையையும் ஹூட் ஹூட் கொடுத்துவிட்டுப் போயுள்ளது என்பதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். இயற்கையின் மாபெரும் சக்தியின் முன் மனிதர்கள் எம்மாத்திரம் என்ற வேதாந்தக் கருத்து எடுபட்டாலும், இயற்கையின் இன்னொரு பக்கத்தைச் சந்திக்கும் மனோதைரியம் இருந்தால் மனம் பக்குவப்படும் என்றும் புரிந்தது. இதுவும் ஒரு நன்மைதானே.

இயற்கையே நீ அழகு என்று
இனி ஒரு வார்த்தை சொல்லுமுன் கொஞ்சம்
உன் இன்னோரு பக்கத்தையும் நினைக்க வைக்கிறாய்..
நீ அழகுதான்.. ஆனால் அதிஆபத்தான அழகு!!
                           ************************ 

படங்கள் 1. விசாகப்பட்டினம் ஏர்போர்ட் மேல்கூரை எல்லாம் ஒடிந்து போய் விழுந்த அலங்கோலம்.
2. இடம் ஒன்றே, முதல் படம், புயலுக்கு முன்னே மரங்களுடன்
3. பக்கத்தில் புயலுக்குப் பின்னேமரங்களெல்லாம் அழிந்தவுடன் 
4. அரக்கு வேல்லி மலி ரயில்பாதை சிதைந்து போன காட்சி
5. மரங்கள் நிறைந்த துரைமுகப் பூங்காவன் மரங்களழிந்து மங்கலம் இழந்த அலங்கோலக் காட்சி
6. சிமெண்ட கலவையால் கட்டப்பட்ட மின்கம்பம் உடைந்த கோலம்..

3 comments:

  1. வாவ்! நினைக்கவே நடுக்கமாக இருக்கிறது, உங்கள் அனுபவம். மனித உயிர்கள் தப்பிப் பிழைத்ததும், நெருக்கடியான சமயங்களில் மக்கள் ஒற்றுமை காப்பதும், ஒருவருக்கொருவர் உதவிகள் செய்து கொள்வதும், மனதுக்கு இதம் தரும் செய்திகள். பகிர்வுக்கு நன்றிகள், திவாகர் ஜி.

    ReplyDelete
  2. தானே காலத்தை நினைவு படுத்திய பதிவு!

    ReplyDelete
  3. இயற்கையின் ருத்ர தாண்டவத்தை துல்லியமாய்ப் பதிவிட்டுருக்கீர்கள். இது நிச்சயமாய், அனுபவித்த ஒவ்வொருவருக்கும் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்றாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. முழுக்க முழுக்க கிலியூட்டும் விவரணையில், ஆறுதலாக இருந்த ஒரே இடம், இது மட்டும்தான்:-

    "மக்களின் ஒற்றுமை எனக்குப் பிடித்திருந்தது. சிரமகாலத்தில் மட்டுமே ஒருவருக்கொருவரின் உதவி என்பது இன்றியமையாதது என்பதை நிரூபித்தனர்.. "

    இயற்கையின் ஒரு சாதாரண நிகழ்வில், நம்மை நமக்கு நினைவுறுத்தும் வைபவமோ என்னவோ ...

    நேரிடையாக இந்நிகழ்வை அனுபவிக்காவிடினும், அவ்வனுபவத்தை தங்களின் வர்ணனை கொடுத்தது.

    பாதிக்கப்பட்டோருக்கு வருத்தமும், கடந்து வந்தவர்களுக்காக இறைவனுக்கு நன்றியும் கூறுவதன்றி என்ன செய்துவிட முடியும்.

    ReplyDelete