Saturday, December 7, 2013

உறவும் பிரிவும்

உறவும் பிரிவும்

இதோ, அதோ, வரும், வந்து விடும், வந்து கொண்டே இருக்கிறது என்று சொல்லப்பட்ட தெலுங்கானாவை இத்தனை நாளாகத் தள்ளிப் போட்டுவிட்டு இப்போது திடீரென எப்படியாகிலும் கொண்டே வந்துவிடவேண்டும் என்ற துடிப்பில் இருக்கக்காரணம் பொதுத்தேர்தல் நெருங்குவதுதான் என்பது எல்லோருக்குமே தெரியும்தானே.. மத்திய அரசாங்கம் தெலுங்கானாவை அங்கீகரித்து ஜனாதிபதிக்கு தேதி குறிக்க அறிக்கையை அனுப்பிவிட்டது. அவர் மாநில சட்டசபையைக் கூட்டி தீர்மானம் கேட்பார்.. மாநில சட்டசபை தீர்மானத்தை ஆதரித்தாலும் எதிர்த்தாலும், அதைப் பற்றிக் கவலை கொள்ளாமல் மக்களவையில் வாக்குக்கு விட்டு தெலுங்கானாவைத் தனியாகப் பிரித்து விடுவார்கள். அது எப்படி ஒரு மாநிலத்தின் சட்டசபை எதிர்க்கும் தீர்மானத்தை மத்திய அரசு ஏற்காமல் பாராளுமன்றத்தில் வாக்குக்கு விடலாமா’ என்று யாரும் கேட்கவேண்டாம். இதற்கு இந்திய ஆளுமை சட்டம் ஆர்டிகிள்-3 உதவுகிறதாம். எப்படியும் ஒரு மாநிலத்தை பிரிப்பது என்று ஒரு தரப்பாரால் மட்டுமே முடிவு செய்யப்பட்டு சுயலாபத்துக்காக இரண்டாகப் பிரித்துப் போட்டுவிட்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

மொழி வாரி மாநிலமாக ஆந்திரம் 1950 களில் பிரிந்தபோது அல்லது பிரித்தபோது நாட்டில் அத்தனை போராட்டங்களில்லைதான். எல்லையோரத்தில் ஒரு சில பகுதிகள் இணைக்கப்படவேண்டும், அல்லது இணைக்கப்படக்கூடாது என்பதாக சில போராட்டங்கள் அமைந்தன, அவைகளிலும் ஒரு சிலரின் பிடிவாதங்கள் கலந்திருந்ததால் அவை கசப்பான நிலையில் அன்று இருந்தன என்பதும் அந்தக் கசப்புக் கூட காலம் எனும் ரப்பரால் அழிக்கப்பட்டது என்பதையும் நாம் அறிவோம்தான். அந்த மொழிவாரி மாநிலங்கள் பிரிந்ததால் மக்கள் பாதிக்கப்படவில்லை. அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படவில்லை. அவர்கள் பொருளாதாரத்திலோ அல்லது ஒருவருடன் ஒருவர் பழகுவதிலோ மாற்றம் இதுவரை ஏற்படவே இல்லை. 

ஆனால் இந்த ஆந்திராக்காரர்களும் தெலுங்கானக்காரர்களும் ஒன்று சேர்ந்து ’தெலுங்கு மொழி பேசும் ஒரே குடும்பமாக’ 1956 இல் ஒன்றாக இணைக்கப்பட்டபோது இந்தக் குடும்பத்தில் சில கசமுசாக்கள் இருந்தன என்பது என்னவோ உண்மைதான். கசமுசாக்களின் காரணம் அன்றைய நிஜாம் ஆளுகைக்குட்பட்ட மாகாணங்களின் எல்லைப் பகுதிகள் வெவேறு மொழி பேசும் மாநிலங்களில் கலந்திருந்ததும், உருது, தெலுங்கு, கன்னடம், மராத்தியம் போன்ற மொழிகள் பேசப்பட்ட கலவையாக இருந்ததைக் கவனத்தில் கொண்டும், மாநில அளவில் மட்டுமலாது தேசிய அளவிலும் பலம் மிகுந்த ஆந்திரத் தலைவர்களின் மீதுள்ள இயற்கையான அச்சமும் இந்த பிராந்தியத்தில் இருந்ததையும் கண்டுகொண்ட அன்றைய நிதான புத்தியும் பொதுநலத்தில் அக்கறை கொண்ட ஆட்சியாளர்கள் சாமர்த்தியமாகப் பேசித்தான் இந்த நிஜாம் நாட்டிலிருந்த மொழிவாரி பகுதிகளை சீராகப் பங்கு போட்டு, தெலுங்கு பேசும் தெலுங்கானாப் பகுதிகளை ஆந்திரத்துடன் சேர்த்தனர். இதில் எல்லா தெலுங்குப் பகுதியினருக்கும் முதலில் சந்தோஷம்தான் என்றுதான் சொல்லவேண்டும்.


அக்காலக் கட்டத்தில் தெலுங்கானாவில் காங்கிரஸுக்கு ஒரே எதிரியாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு அதிக செல்வாக்குப் போகக்கூடாதே என்ற ஒரு அச்சத்தில் ஜவஹர்லால் நேரு கூட அந்தப் பகுதி மக்களுக்கு ஒரு தைரியமான வார்த்தையை தாரை வார்த்தார். “தெலுங்கானா பகுதியினரும் ஆந்திரப்பகுதியினரும் கணவன் மனைவி போன்றவர்கள். இன்று இணையும் இவர்கள் எதிர்காலத்தில் இவர்கள் மத்தியில் வெறுப்பு ஏற்பட்டால் ‘விவாகரத்து’ வாங்கிக் கொள்ளலாம்’, என்றவர்தான் நேரு.. இத்தனைக்கும் இந்தியாவில் விவாகரத்து என்பது ஒரு கூடாத விஷயமாக, பாரதகலாசாரத்தில் இல்லாத விஷயமாகக் கருதப்பட்ட காலங்கள் அவை என்பதையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். கல்யாணம் என்று சொல்லும்போதே வாழ்த்தவேண்டிய பெரியவரான நேரு இப்படியெல்லாமா பேசுவார் என்று கேட்பவர்களுக்கு ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும் பண்டித ஜவஹர்லால நேரு மேலைநாட்டுக் கலாசாரத்தில் அதிகம் பழகி வாழ்ந்தவர் என்பதுதான் அது.. மேலைநாடுகளில் கல்யாணம் பதிவு செய்யும்போதே அது பிற்காலத்தே விவாகரத்தானால் யார் யாருக்கு பணவிஷயங்களில் என்னென்ன பொறுப்பு என்பதை நிர்ணயம் செய்யும் வகையில் விவாக சட்டம் வகை செய்கிறது.

தெலுங்கர் என வரும்போது தெலுங்கு மொழி பேசும் யாவரும் ஒன்றே என்ற கொள்கை முதலில் பிடித்திருந்தது. நேரு குறிப்பிட்டது போல இந்த குடும்பத்தில் முதலில் புதுக் கல்யாணத்தம்பதி போல வாழ்க்கை இனித்தது. ஆனாலும் அவ்வப்போது ஏதாவது வம்பில் மாட்டிவிட்டு அதனால் ஏற்படும் தீயில் குளிர் காய்வர் சில அரசியல்வாதிகள். ஆனால் தீ பரவாமல் அணைக்கப்படும். தீ இருந்தவரை ஏற்பட்ட தீக்காயங்களுடன் தப்பித்து மறுபடியும் சேர்ந்து வாழத் தொடங்குவர். 1968/69 வரைக்கும்இதுதான் நிலை.

அந்தக் காலகட்டத்தில்தான். சென்னாரெட்டி திடீரென நினைவு வந்தது போல தெலுங்கானா மாநிலம் பெற்றே தீரவேண்டுமென மிகப் பெரிய போராட்டத்தைத் தூண்டினார். இதுதான் சந்தர்ப்பம் போல, ஆந்திரத்திலும் தனி ஆந்திரம் வேண்டும் எனக் கேட்டு பெரும் போராட்டம் வெடித்தது. மாணவர்கள் என்றுமே அப்பாவிகள். பாவம்.. ஒரு சில அப்பாவி மாணவர்களின் பலியோடு இந்தப் பெரும் தீயும் அணைக்கப்பட்டது. ஆனால் இதன் பலனாக சென்னாரெட்டிக்கு அவர் ஆசைப்பட்ட முதல்வர் பதவி வந்தது. ஆந்திரர்களுக்கு.. ஏமாற்றம்தான் மிச்சம். அவர்கள் அப்போதே தனி ஆந்திரம் கேட்டுப் போராடி வெற்றியும் பெற்று இருந்தால் இன்றைக்கு ஹைதராபாத் இவ்வளவு பெரிய நகரமாக வந்திருக்கமுடியாது என்கிற கசப்பான உண்மை இன்று ஆந்திரத்தில் யாரைக் கேட்டாலும் ஒப்புக் கொள்வர்.

ஆனால் 1972 இல் சாதாரணமான நகரமாக இருந்த ஹைதராபாத்தை மிகப் பெரிய ஆளுமை கொண்ட நகரமாக ஆக்கிக் காண்பித்தவர் நிச்சயம் சந்திரபாபு நாயுடுதான். சாதாரணமான பழைய நாகரீகக் களையுடன் அழகாக இருந்த ஒரு நகரம் 1996 இலிருந்து மிக அபரிதமான வளர்ச்சி காண ஆரம்பித்தது. ஆந்திர மக்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் பெற்றுத் தர ஆரம்பிக்கவே லட்சக்கணக்கான அளவில் ஆந்திரமக்கள் ஹைதராபாதை தஞ்சமடைந்தனர். ஏறத்தாழ ஆந்திர மாகாணங்களில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஏதோ ஒரு சொந்தம் ஹைதராபாதில் குடியிருந்து வரும் நிலைக்கு இன்று ஹைதராபாத் தள்ளப்பட்டது. அங்கு ஆந்திரர்களின் வாழ்வாதாரம் மிகுந்த செல்வாக்கைப் பெற்றது. இந்தியாவின் மிகப் பெரிய சட்டமன்றத் தொகுதி என்று குக்கட்பள்ளி தொகுதியைச் சொல்வார்கள். இந்தத் தொகுதியில் ஏறத்தாழ 80 சதவீதத்தினர் ஆந்திரர்கள்தான். ஆந்திரர்களின் பல வியாபாரங்கள் இன்றும் இங்கு செழித்துக் கொழிக்கின்றன. அதிக நிலங்களை ஆந்திரர்கள் வாங்கினார்கள்.ஒரு காலத்தில் விலை போகாத நிலங்களின் விலைகள் படிப்படியாக ஆனால் வேகமாகக் கூடின. . ஒரு உதாரணம் சொல்கிறேன்..  இது நானே தெலுங்குத் தொலைக்காட்சியில் பார்த்ததுதான்.

சில வருடங்களுக்கு முன்பு ஹைதராபாதில் மோகன்பாபு என்கிற பிரபல நடிகரின் தெலுங்குப்பட விழாவுக்கு நம்  ரஜினிகாந்த் வந்தார்.அவர் அந்த விழாவில் பேசும்போது ஒரு நிகழ்வினைக் குறிப்பிட்டார். 1978-80 களில் ரஜினி தெலுங்குப் படங்களில் நடித்தபோது ஒரு தயாரிப்பாளர் பணம் கொடுக்கமுடியாமல் அதற்குப் பதிலாக ஹைதராபாத் ஜூபிளி ஹில்ஸ் எனும் பகுதியில்  ஒரு நிலத்தைக் காண்பித்து அதைப் பெற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தினாராம். ஆனால் மோகன் பாபு தன் நண்பரான ரஜினிகாந்துக்கு அப்படியெல்லாம் செய்யாதே, அது பாறை நிலம்.. விலை போகாது’ என்று சொல்லித் தடுத்து விட்டாராம். இந்த நிகழ்ச்சியை அந்த விழாவில் குறிப்பிட்ட ரஜினிகாந்த, தன் நண்பரான மோகன் பாபுவை வேடிக்கைக்காக கண்டித்து, இவர் தடுத்திருக்காவிட்டால், இன்று நகரின் நடுவில் இருக்கும் பலகோடிகள் பெறுமான அந்த ஜூபிலி ஹில்ஸ் நிலத்தை அன்றே எடுத்துக் கொண்டிருப்பேன், என்று சொன்னாராம். ஒன்றுமே இல்லாத பாறை பூமிகள் கோடிக்கணக்கில் விற்பனையாயின என்றால் ஹைதராபாதின் தரம் எந்த அளவுக்கு உயர்ந்துள்ளன.. நகரம் எந்த அளவுக்கு விரிந்துள்ளன என்று புரியும்.

1972 இல் ஆந்திரா மட்டுமே வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்திய ஆந்திர அரசியல்வாதிகள் இன்று ஹைதராத்துடன் கூடிய ஆந்திரா வேண்டுமென்கிறார்கள் என்றால் அரசியல்வாதிகள், பொதுமக்கள் எல்லோருமே அந்த நகரின் வளர்ச்சியில், அந்த நகரின் செல்வத்தில் தம்மை ஏதாவது ஒருவகையில் இணைத்துக் கொண்டவர்கள்தான். சரி, தெலுங்கானாவுடன் ஹைதராபாத்தைக் கொடுத்தால் ஆந்திரர்கள் ஏன் சிரமப்படவேண்டும் எனக் கேட்கலாம். நாளை தெலுங்கானா மக்கள் அரசியல் அதிகாரம் கொண்டு ஆந்திரர்களைத் துரத்திவிடலாம் என்கிற அச்சம் பொதுவாகவே உண்டு. மேலும் இதைப் போன்ற நிகழ்வுகள் ஏற்கனவே பாட்னா, கௌஹாத்தி போன்ற நகரங்களில் நடந்தேறியதையும் அவர்கள் முன்மாதிரியாகக் கொள்கிறார்கள். (லாலு ஆட்சியில் மார்வாரிகள், குஜராத்திகள், மற்றும் வடமாநிலத்து செல்வந்தர்கள் பயமுறுத்தப்பட்டுத் துறத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் உண்டு).

தர்போதைய மத்திய மந்திரிகள் கூட்டமைப்பு ஹைதராபாத் நகரை பத்தாண்டுகள் கவர்னர் தலைமையில் ஆட்சி செய்ய சிபாரிசு செய்துள்ளது. அவர் ஹைதராபதில் உள்ள நிலம், நிலத்துவாழ் உயிர்களுக்குப் பத்தாண்டுகள் பாதுகாப்பளிக்கவேண்டும்.  இன்றைய அதிவேக் நவீன உலகில் பத்தாண்டுகளெல்லாம் கடகடவென ஓடிவிடும். பத்தாண்டுகளுக்குப் பிறகு துரத்தப்பட்டால்? இதற்கெல்லாம் பதில் இல்லை.

ஆனால் டெல்லிமாநகரில் இருக்கும் அரசாங்கத்துக்கோ அல்லது நடுவில் பங்குபோடும் தெலுங்கறியாத மத்திய அமைச்சர்களுக்கோ இவை பெரிய விஷயமேயில்லை. தெலுங்கானாவைப் பிரித்தால் காங்கிரஸுக்கும் பி.ஜே.பி’க்கும் சில சீட்டுகள் கிடைக்கும். தற்போதைய நிலையில் அப்படி பிரிக்கவில்லையென்றால் ஒன்று கூட கிடைக்காது.; இது ஒன்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மாநிலத்தை இரண்டாகப் பிரித்து விட்டார்கள். 

ஒரு ஹைதராபாத் என்றல்ல, நதிநீர் பங்கீடு, நிர்வாகத்துறை, மின்சாரம், வருவாய் என்கிற முக்கிய  துறைகளில் இன்று வரை ஒன்றாக இருந்து பகிர்ந்துகொண்டவர்கள் இனிமேல் இந்தத் துறைகளில் கடும் சோதனைகளை சந்திக்கவேண்டியிருக்கும். ஹைதராபாதிலிருந்து வரும் வருவாய் மிக மிக அதிகம். கோதாவரி நதி நீருடன் தெலுங்கானாவில் பாய்ந்தால் அது ஆந்திரா வரும்போது வலுவிழந்து தலைவனுக்காக ஏங்கி நிற்கும் பழைய சங்க காலத் தலைவி போல மெலிந்து அடங்கி ஒடுங்கி வருகிறது. தெலுங்கானா அமைந்துவிட்டால் கோதாவரி ஆந்திரா வரும்போது மென்மேலும் மெலிவடைவாள். அதே சமயத்தில் தெலுங்கானாவில் மின்சாரத் தட்டுப்பாடு அதிகம் ஏற்படும். மின்சார உற்பத்தி எல்லாமே ஆந்திரத்தில் அதிகம். தானிகி தீனிகி சரிப்போயிந்தி என்று சமாதானம் அடைவார்களா அல்லது சண்டை போடுவார்களா இன்று இனிமேல்தான் தெரியும். ஆந்திர எல்லைகளிலிருந்து ஏறத்தாழ 100 கி.மீ தொலைவில் உள்ளடங்கி இருக்கும் ஹைதராபாதை பொது தலைநகராக அமைக்கமுடியாத சூழ்நிலையில் அந்நகரம் இருக்கின்றது. அதற்காக ஆந்திரத்துக்கு ஒரு தலைநகரம் புதிதாக அமைக்கவேண்டும். அந்தப் புதிய தலைநகரம் எங்கே அமைப்பது.. இது மிகப் பெரிய சிக்கல்தான். பொதுவாக ஆந்திரர்களுக்கு ஏமாற்றம்தான் இந்த முறையும் மிச்சம் என்றுதான் படுகிறது.

யாரையும் எதையும் சேர்த்து வைப்பதுதான் கஷ்டம். பிரித்து வைப்பது என்பது எளிய கலைதான். பிரித்து வைப்பதால் ஏற்படும் கஷ்டங்களைத்தான்  எப்படி சமாளிப்பார்களோ.. தெலுங்கானாவின் பத்ராசலம் ராமரும், ஆந்திரத்து வெங்கடேஸ்வரரும்தான் சாதாரண மக்களைக் காக்கவேண்டும். இப்படி எழுதும்போதே பத்ராசலம் என்பது 1956க்கு முன்பேயே ஆந்திரமாநிலத்தோடு இருந்தது என்பதால் ஸ்ரீராமரின் திருநகரையும் ஆந்திரத்தோடு இணைக்கவேண்டும் என்ற குரல்களும் ஒலிக்காமல் இல்லை.

நாடு இரண்டாகப் பிரிந்தால் அரசியல் கட்சிகளுக்கு ஆதாயம் இருக்கிறதோ இல்லையோ, சாதாரண மக்கள் வேதனையில் வீழ்வார்களோ இல்லையோ, ஆனால் ஒரு பகுதியினருக்கு படு குஷியாக இருக்கும். அது டீ.வி மீடியாவைத்தான் சொல்கிறேன்.. ஸ்டொமக் ஃபுல் என்பதைப் போல வஞ்சனை இல்லாமல் செய்திகள் தாராளமாகக் கிடைக்கும்.

எல்லாம் சரி, மத்திய அரசாங்கம் இப்படி தன்னிச்சையாகச் செயல்பட்டு உறவுக்காரர்களை இப்படிப் பிரித்துப் போடுவது என்ன நியாயம் என்று கேட்கிற அதே சமயத்தில், இன்றைக்கு ஆந்திரத்து உறவுக்கு ஏற்பட்ட இந்த இழப்பு நாளை இந்தியாவில் யாருக்கும் ஏற்படலாம் என்பதும் ஆந்திர மாநிலப் பிரிவினையை ஒரு முன்மாதிரியாகக் கொண்டு எந்த மாநிலத்தையும் இஷ்டத்துக்குப் பிரித்து விளையாடலாம் என்பதும் ஒரு வேதனைக்குரிய உண்மையாகும்.
படங்களுக்கு நன்றி : கூகிள்
கடைசியில் பத்ராசலம் சீதாராமச்சந்திரமூர்த்தியும், திருமலை திருவேங்கடவரும்.

10 comments:

  1. மனித மனம் பொதுவாக மலினமானது. சண்டை போட ஏதேனும் ஒரு காரணம் வேண்டும். ஒத்துப்போவது, சகித்துப்போவது எல்லாம் மலையேறிவிட்டன! பிரித்தாலும் பிரச்சினைதான், பிரிக்காவிட்டாலும் பிரச்சினைதான்!
    அப்புறம் பெருமாள் படம் கொஞ்சம் ஆச்சரியம்!

    ReplyDelete
  2. ஓம் சாமியே சரணம் ஐயப்பா...

    ReplyDelete
  3. அரசியல்வியாதிகளின் சுயநலத்துக்குப் பலியாகும் அப்பாவி மக்கள்! :(

    ReplyDelete
  4. It is unfortunate that even language and culture cannot keep the people together... Money ,vote bank politics and Power play divisive and decisive role. Common man become victim ..C.Rajendiran

    ReplyDelete
  5. பொதுவாக, மேலோட்டமாகப் படிக்கும் பொழுது ஒரு நல்ல பதிவு என்று நான் கருதுகிறேன். ஆனால், ஏன் தெலுங்கானவைப் பிரிக்க வேண்டும் என்ற துயரமான கேள்விக்கு உரிய பதிலும் இந்த பதிவில் உள்ளது. இணைத்திருக்க வேண்டாத இரண்டு பகுதிகள் ஒரு நாள் பிரிந்து போவதை இயல்பாகவே ஏர்றுக்கொள்ள வேண்டும் . ஹிந்தி மொழி பேசும் பல மாநிலங்கள் பிரிக்கப்பட்டு அமைதியாக வாழும் பொழுது தெலுங்கு பேசும் இரண்டு மா நிலங்கள் இருந்து விட்டு போகட்டுமே. வருத்தங்களும் பிரச்சனைகளூம் காலப் போக்கில் மறைந்துவிடும்

    ReplyDelete
  6. Nice Article Diwakar. You have truly reflected all bystander's feelings. Thanks for expressing.

    Sathish
    Hindu

    ReplyDelete
  7. திரு. வாசாவின் கருத்து ஏற்புடையதாக இருக்கிறது.

    ReplyDelete
  8. திரு வாசா அவர்கள்,
    1.இக் கட்டுரை இன்றைய நிலையை எடுத்துச் சொல்லும்விதமாகத்தான் எழுதப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். 1972க்கு இந்த பிரிவினை ஏற்பட்டிருந்தால் இன்றைய ஆந்திரர்கள் சந்தோஷமாகவே விட்டிருப்பார்கள். ஆனால் ஆந்திரர்களின் சொந்த பந்தங்கள் ஹைதராபாதில் ஏராளமாக சேர்ந்துவிட்ட இந்த கால கட்டநிலையில் ஆந்திரர்களின் பாதுகாப்பு புதிய தெலுங்கானாவில் கேள்விக்குறியாகவே இருக்கும்.

    2. தெலுங்கு மொழி இனச் சேர்ப்பு என்ற போர்வையில்தான் இன்றைய ஆந்திரர்கள் போராடமுடியும். இவர்களுக்கு இன்றைய நிலை அப்படி.

    3. ஹைதராபாதில் இவர்களுக்கு திருப்தியான வகையில் நிரந்தர பாதுகாப்புக் கிடைக்குமானால் இந்த ஆந்திர-தெலுங்கானா பிரிவில் இங்கு யாரொருவருக்கும் சம்மதேமே. இது உள்ளிடாக இருந்து வரும் உணர்ச்சி.. இந்த உணர்ச்சியில் மொழிப் போர்வை கலைந்து போகும்தான்.

    ReplyDelete
  9. நேர்மையான அலசல் திவாகர்ஜி! நல்ல ஆழ்ந்த பார்வை! பகிர்விற்கு நன்றி.

    அன்புடன்
    பவளா

    ReplyDelete