Follow by Email

Friday, March 22, 2013

உப்புமாவும் விசாகையும்வீட்டுக்கு திடீரென சொல்லாமல் கொள்ளாமல் விருந்தினர்கள் (பசியோடு) வந்துவிட்டார்கள். விருந்துபசாரம் என்ன செய்வது.. உட்காருங்கள் என்று சொல்லிவிட்டு மளமளவென அவசரத்துக்கு ஒரு உப்புமாவைச் செய்து அவர்களுக்கு விருந்தோம்பல் செய்வோம். பசியாற்றும் உணவு என்பதால் உப்புமா எப்படி இருந்தாலும் ருசிக்கத்தான் செய்யும்.. (வந்தவர்களுக்கும் வேறு வழியில்லை) அப்படிப்பட்ட சந்தர்ப்பம் ஒன்று அடியேனுக்கும்  வாய்த்தது.

நான்கு நாட்கள் முன்புதான் இந்த அழைப்பு வந்தது. அவசரம் அவசரமாக வந்து கூப்பிட்டதில் இருந்து அது புரிந்தது. உலக கவிதை தினம் - மார்ச் 21` அன்று இந்தியன் சொஸைடி ஃபார் கல்சுரல் கோ-ஆபரேஷன் அண்ட் ஃப்ரெண்ட்ஷிப் எனும் அமைப்பு விசாகப்பட்டினத்தில் இந்த கவிதை தினத்தைக் கொண்டாடுவதாகவும் நான் ஒரு தமிழ்க்கவிதை பாடவேண்டுமென்றும், அதற்கான தெலுங்கு விளக்கமும் தரவேண்டுமென அவர்களால் கோரப்பட்டு நான் பதில் கூறுமுன்னேயே என் ஒப்புதல் பெறப்பட்டதாகவே சொல்லிவிட்டுச் சென்றார்கள். என் தூக்கத்தையும் கெடுத்தார்கள்.

கதையாளனுக்கும் கவிதையாளனுக்கு ஏகப்பட்ட வித்தியாஸம் உண்டு. ஒருவேளை ஆலையில்லா ஊரில் இலுப்பைப்பூ சர்க்கரை என்பார்களே.. அது போல நினைத்துக் கூப்பிட்டார்களோ என்னவோ.. இருந்தாலும் இதையும் ஒரு பிடி பிடித்துவிடுவதுதான்.. தேடிவந்ததை ஏன் விடுவானேன் என மனதுக்குள் நினைத்துக் கொண்டு நான் இலக்கிய உலகில் வளர வழி வகுத்த இந்த விசாகையைப் பற்றி ஒரு கவிதை எழுதி வாசித்துவிடுவது என்று தீர்மானித்துக் கொண்டேன்.. இதோ கவிதையும் எழுதி நேற்று வாசித்தும் ஆயிற்று. அதற்கு தெலுங்கு விளக்கமும் கொடுத்து அதையும் வாசித்திருந்தேன். அதை அப்படியே அவர்கள் மைத்ரி மாத இதழில் பிரசுரிக்கப் போகிறார்களாம்.. ஒருவேளை அவர்களின் பசிக்கு என் கவிதை உப்புமா போல பட்டிருக்கலாமோ என்னவோ.. (அப்படித்தான் பட்டது எனக்கு)


எந்தைமுன் வினையால் என்முன்னே எனைக்காண
முந்தைய நாளொன்றில் ஒளிபடர தோன்றியவள்
அந்தமிலா அழகுடையாள் அதிதேவதை அவளாம்
சிந்தனைக்கு விருந்தாக சொல்லியதைத்தான் கேளீரே!

பிந்தைய நாளெல்லாம் பிழைகள் பெரிதாகும்
வெந்திடும் நரகமாய் வாழ்வை வைத்துவிடும்
தொந்தரைதான் மிஞ்சும் துன்பங்கள் பெருகும்
எந்திர வாழ்வு வரும் வேகம் பெரிதாகும் 
மந்திரதந்திரமும் மாயாஜாலமும் கொண்டதாய்
மந்தைக் கூட்டமாய் மானிடர் நடுவே
மந்தஹாசமாய் வாழ இடமொன்று வேண்டாமோ
தந்தைதாயை விட்டு தனியனாய் வந்தாலும்
அந்தரங்க அபிலாஷை ஆயிரம்தான் இருந்தாலும்
சிந்தையிலே தெய்வம்விட்ட வழியென்று சொல்வாய்
பிந்தி வரும்நாளைப் பற்றிப்பெரும் கவலைகொள்வாய்
எந்த ஊரொன்று மனிதத்தைப் போற்றுகின்றதோ
எந்த ஊரொன்று மானிடத்தைக் காக்கின்றதோ
எந்த ஊரொன்று கலையழகை மதிக்கின்றதோ
எந்த ஊரொன்று கல்விச்செல்வம் தருகின்றதோ
அந்த ஊருக்கு  வழிசொல்வேன் கேளாயோ

நல்லாறும் வற்றிப்போய் கலியாளும் காலமிது
வல்லூறு போல் மனிதர்மாறும் வேளையிலே
கல்லாகிப்போன மனம் கொண்டோர் ஆள்கையிலே 
புல்லைப்போல் புழுவைப்போல் மதிப்போர்தம் மத்தியிலே
சொல்லால் தீயாய் சுடுகின்ற கூட்டத்திலே
பொல்லாத பலபேர்கள் பலமாகும் போதினிலே
செல்லாக்காசாய் சென்றிடும் இப்புவியிலே அதிசயமாய்
கல்லாதான் பொல்லாதான் பொய்யனென வந்நெஞ்சர்
இல்லாதார் அதிகம் இருப்பார் இடமாக
பல்சுவையாய் பாங்குடனே சுந்தரத்தெலுங்கு பேசி
நல்லோர்பலர் நாவும் நலம்பாட நீ வாழ
சில்லென்ற காற்றும் சிறப்பான ம்லையழகும்
நில்லாமல்  கொள்ளாமல் அள்ளாமல் குறையாமல்

அலைகடலும் ஆர்ப்பரித்து ஆரவாரமாய் கரைவந்து
நிலைகொள்ளாமல் கரைதேடி  நிதம்வந்து  வணங்கும்
கலையழகாய் கருணையுடன் கனக மகாலட்சுமியாய் 
கோலமயிலாய் குடிகொண்டு அருள்தரும் சிறந்தநகராம்

விசாகையெனும் பெயராம் அங்கிருப்போர் யாவும்
விசால மனதுடையராம் இச்சைகொண்டு செல்வாயே
அச்சமின்றி வாழ அந்நியருமங்கு வருவாரே
இச்சகத்தே தீந்தெலுங்கும் செந்தமிழும் சேர்ந்தோங்க
பச்சைமனதோடு பத்திரமாய் பக்குவமாய் பலரோடு
சுயேச்சையாக இருப்பாயே பல்லாண்டு காலம்

தேவதேவியே எனையென்னாளும் கண்போல் காக்கும்
பவதாரிணியே கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் பர
தேவதையே என்னேயுன்பேச்சு உன்போக்கே என் போக்கு
காவலாய் கனகமகாலக்ஷ்மியாய் எக்கணமும் துணையிருக்க
ஆவலாய் செல்வேனே அழகான விசாகைக்கு
ஏவல்செய்வேனே.. தமிழார்வத்தால் கோலம் செய்வேனே
காவியம் செய்வேனே கர்த்தர்வியமெனக் கொண்டு
ஓவியக்காரியே ஓங்காரியே ஒப்பிலாதவளே வாழ்கவாழ்கவே!!
10 comments:

 1. அழகான கவிதை அருமையாய் உள்ளது! பகிர்விற்கு நன்றி ஐயா!
  http://www.krishnaalaya.com

  ReplyDelete
 2. கவிதைக்கு விசா கையோடு வைத்திருக்கும்
  கனக மகாலக்ஷ்மி கருணையோடு உமிழ்கிறாள் கவிதை மழை கையோடு எழுதிப் பொருளும் சொல்ல
  வித்தகர் வி திவாகர் இருக்க கவலையில்லை
  விசாகப் பட்டிணத்து பெருமக்களுக்கு

  அன்புடன்
  தமிழ்த்தேனீ

  ReplyDelete
 3. அவசரத்தி லெழுதிடினினும் அர்த்தமிங்கு குறையவில்லை
  தவ‌சரண மென்றவளின் கால்பிடிக்கக் கவலையில்லை
  பவதரணி எனவழைத்து விசாகையின் உயர்வுரைத்து
  திவகரனின் நன்றியினைச் சொன்னவித மிகவழகு!

  ReplyDelete
 4. உப்புமாவைப் போலக் கைகொடுப்பது வேறெது? :)
  விசாகையைப் போற்றி அன்னை சொன்ன வார்த்தைகள் அருமை. பகிர்விற்கு நன்றி!

  ReplyDelete
 5. அந்தரிகி நா வந்தனமு!!

  வாழ்த்தியவர்களுக்கு என மனமார்ந்த நன்றி!!

  ReplyDelete
 6. ////காவலாய் கனகமகாலக்ஷ்மியாய் எக்கணமும் துணையிருக்க
  ஆவலாய் செல்வேனே அழகான விசாகைக்கு/////

  எனக்கும் ஆவலாகவே இருக்கிறது அழகான விசாகை வர. ஒருமுறையேனும் அன்னை என் வேண்டுகோளுக்கு செவி சாய்க்க வேண்டும். அழகான கவிதைக்கும் அருமையான பதிவிற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 7. நண்பரே அருமையான பதிவு, மேலும் ஒரு தகவல் . கூகுளே அட்சென்ஸ் போல. http://www.taxads.in/ தமிழ் தளங்களுக்கு விளம்பரம் தருகிறார்கள். உங்கள் தளத்தையும் பதிவு செய்து பயன் பெறுங்கள். http://www.taxads.in/

  ReplyDelete
 8. இந்த தளமும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்... Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_7.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
 9. மிக அருமை!

  உமா

  ReplyDelete