Tuesday, December 18, 2012

ஸ்கந்த, குமாரா, கார்த்திகேயா, சுப்பிரமணியா!! - 3


முருகனும் ஆந்திரமும் - 3





சிவனும் சகதியுமாக இணைந்ததே சிவஸ்வரூபம் என்பார்கள். சிவஸ்பரூபத்தின் நெற்றிக்கண்ணிலிருந்து வெளிப்பட்ட ஐந்து பொறிகளும், சிவஸ்வரூபமே ஆறாவது பொறியுமாக மாற, அந்த ஆறு பொறிகளையும் வாயு எடுத்துக்கொண்டு வந்தாலும் அந்த அக்கினிக்குஞ்சுகளின் அதிதீவிரத்தனமையைத் தணிக்க ஆகாய கங்கையே பெற்றுக்கொண்டு ஆறு கார்த்திகைப் பெண்களிடம் விடுத்ததாகவும்,  ஆறு பொறிகள் ஆறு முகங்களாக கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்து அன்னை பார்வதியின் அருளால் ஒரே ரூபமாக மாறி ஸ்கந்தன் எனும் பெயர் பெறுகிறான்.

ஆனந்தோ பிரஹ்மேதி வஜநாத் தைத்ரிய உபநிஷத்தில் (III,6) சொல்லும்போது அதன் பொருளாக சிவா என்பது சத்ஆகவும், உமையம்மை ‘சித்ஆகவும், ஸ்கந்தன் ‘ஆனந்தமாகவும் முழுமைத்தன்மை உடையவனாகவும் குறிப்பிடப்படுகிறான். அவனுக்கென உருவான சரவணபவ எனும் ஆறெழுத்து மந்திரத்தில் ஐந்தெழுத்து சிவனாகவும் ஆறாம் எழுத்து சக்தியாகவும் கருதப்படுகிறது. பரப்பிரம்ம ஸ்வரூபத்தை யாராலும் வர்ணிக்க இயலாது. யாராலும் அறிய முடியாது. யாராலும் அறிவிக்கவும் முடியாது. இந்து தர்மத்தின் பவித்ரமான சொத்தான வேதங்களாலும் கூட இந்த பரப்பிரும்மமானது இப்படித்தான் இருக்கும் என்று கற்பனை செய்யக்கூட முடியாது. இப்படி யாராலும் கற்பனையால் கூட அடையமுடியாதவன் அவனே விரும்பினால் மட்டுமே அவனால் ஏனையவருக்குக் காட்சியருள முடியும். ஏறத்தாழ முருகன் அவதாரத்தை இப்படி எடுத்துக்கொள்ளலாமோ என்னவோ..

அதனால்தானோ என்னவோ அவனை வழிபடுபவர்களும், அவன் அருளைப் பெறுபவர்களும், அவனைக் கண்ணாரக் கண்டு துதிப்பவர்களும் கூட ஒவ்வொருவிதமாக அவனை வர்ணிக்கிறார்கள். அவர்கள் வழிபடும் உருவமும் வெவேறு விதமாக மாறுபடுகின்றது. கந்தனின் தோன்றுதல் என்பது தாரகாசுரனை சம்ஹாரம் செய்வதற்காக என்று காரண காரியம் செய்தாலும் அவன் இந்த உலகத்தவரின் நன்மைக்காகத்தான் வந்தான் என்பதை எத்தனையோ காவியங்கள் வரலாறுகள், ரிஷிகள், யோகிகள், சான்றோர்கள் நமக்குச் சொல்லிச் சென்றார்கள்..

முருகன் வழிபாடு என்பது அவன் எப்படியெல்லாம் வழிபடவேண்டும் என நினைக்கிறானோ அப்படியெல்லாம் அந்தத்த பிராந்தியங்களில் நடைபெறுகிறது என்றே சொல்லவேண்டும். அவன் தீப்பொறிகளாகத் தோன்றியவன், செக்கச் செவேலெனும் செம்மை நிறத்து ஜோதியாக பழங்குடிகள் (சேயோன்) வணங்கினார்கள். ஜோதிஸ்வரூபமானவன் தெய்வம் என்பது எல்லா இந்துமதப் பிரிவுகளும் ஒப்புக்கொண்டவைதான். 'திருமுறுகாற்றுப்படை'  பாடலில் 'முருகனை' ஜொலித்தபடி இருக்கும் 'சூரியனுடன்' ஒப்பிட்டு, கடலில் இருந்து வெளிச் சிதறியபடிக் காட்சி தரும் 'சூரிய' ஒளி போல 'முருகனின்' உடலும் ஜொலித்தது என்று கந்தனைக் குறித்துப் பாடப்படுகின்றது.

கந்தன் இயற்கையோடு இயைந்தவன். கங்கைதேவியிலிருந்து கார்த்திகைப் பெண்கள் வரை அன்னை சக்தியோடு முருகனின் தாய் ஸ்தானத்துக்கு போட்டி போடுவார்கள். அதுவும் இயற்கைதான். தமிழ்நாட்டின் காடுகளில் அவ்வை பிராட்டியின் பேரனாகவும் பரிமளித்தவன் அல்லவா அவன். இயற்கை என்று வர்ணிக்கப்பட்டதால் இயற்கையின் அத்தனை ஸ்வரூபத்திலும் நீககமற நிறைந்தவன். பிரபஞ்சத்திலிருக்கும் அத்தனை வகைப் பிறவிகளுக்கும் சொந்தமானவன். குறிஞ்சித்தெய்வம் என்பார்கள் சிலர். மலைவாழ் மக்களின் செலவக்குமரன் என்பார்கள். குறிஞ்சி என்றல்ல தமிழில் ஐந்திணை என்று சொல்லப்படும் ஐந்து வகை நிலங்களிலும் அவன் பேசப்படுவதை சங்க இலக்கியங்கள் வர்ணிக்கின்றன. மானிடப் பிறவி என்றில்லை. எந்த வகைப் பிறவிக்கும் அவன் பாந்தமானவன், இதை ஆந்திர அரசர்கள் உணர்ந்தவர்களாதலால் பழைய கால நாணயத்தில் முருகனை ஆறுமுகமாகவும், நாகம், மான், மரம் போன்ற பிறவிகளையும் சேர்த்து கல்லில் செதுக்கி வழ்பட்டார்கள்.

(Scholars have discussed about the “Karttikeya type” of coins in the Journal of the Numismatics Society of India and other works. The depiction of Vishaka, Kumara and Mahasena prominently on the Yaudheya, Kushana, Kumara and Kuninda coins during the second centuries of before current / common era and after is very interesting in numismatic studies. (திரு கே.வி.,ராமக்ரிஷ்ணாராவ் அவர்களின் கட்டுரையிலிருந்து)
                                                           
இங்கு ஏற்கனவே கூறியதைப் போல மஹாசேனனுக்குக் கோயில் எழுப்பியது போலவே இக்குவாகு அரசர்கள் தங்கள் நாணயங்களைக் கூட ஆறுமுக உருவத்தோடு பொறித்து வெளியிட்டிருக்கிறார்கள். இன்றைய நாகார்ஜுன கொண்டா பகுதியில் நாகார்ஜுன சாகர் எனும் மிகப் பெரிய அணை கட்டப்பட்டுள்ளது. (அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அடிக்கல் நாட்டியது) 1926 ஆம் ஆண்டில்தான் அங்கே பல இடங்கள் தோண்டப்பட்டன. பௌத்தர்களின் புதையுண்ட புராதன சின்னங்கள் பல கிடைத்தன. 1953ஆம் ஆண்டில் தோண்டப்பட்டபோது மேலும் பல குறிப்புகள் கிடைத்தன. அப்போதுதான் முருகப்பெருமானான மஹாசேனனின் ஆலயக் குறிப்பும் சரித்திர ஆய்வாளர்களுக்கு விரிவாகக் கிடைத்தது பழங்கால நாணய சேகரிப்புகளிலிருந்து கிடைக்கப்பெற்ற சில காசுகளில் கார்த்திகேயனின் ஆறுமுக உருவமும் அருகே மான், வேல் போன்றவை தெரியவந்தது. நாணயத்தின் பின்பக்கமும் தேவசேனா தெய்வத்துக்கும் ஆறுமுகம் கொடுத்ததாகவும் பண்டைய காலத்தர்கள் ஷண்முகி அல்லது சஷ்டி என அழைத்ததாகவும் தன் கட்டுரையில் கே.வி. ராமகிருஷ்ணராவ் குறிப்பிடுகிறார். தேவசேனாவையும் கார்த்திகேயனையும் தெய்வமாகப் போற்றி வழிபடும் முறையையும் தோற்றுவித்தார்கள்.

இன்றைக்குக் காண்பது போல ஆகம சாத்திரப்படி கோவில்கள் கட்டுவது என்பது அந்தக் கால கட்டத்தில் பாரதம் எங்குமே அரிதாக இருந்தது. தமிழகத்தில் கூட ஆகமவிதிகளுக்குட்பட்டு கோயில்கள் சங்க காலத்துக்குப் பின்னர்தான் கட்டினார்கள் என்று சரித்திர ஆய்வாளர்கள் ஒப்புக் கொள்வர். ஆனால் திரு உருவச் சிலைகளை எடுப்பித்து வணங்குவது என்பது கி.மு. காலத்திலேயே இருந்தது. ஸ்தூபமும் உருவச் சிலைகளையும் எடுப்பிப்பதை புத்தமதத்தைப் பின்பற்றியோர் ஏராளமாக செய்துள்ளார்கள் என்பதை நாம் அறிவோம். அதே போல நம் கலியுகத் தெய்வமான திருவேங்கடத்தான் வானமே கூரையாக சூரிய சந்திரர்கள் இருவரும் இரண்டு பக்கங்களில் ஒளிவீச, வேங்கட மலை மீது நெடியோனாக நின்றதை இளங்கோ அடிகள் குறிப்பிட்டிருப்பதைப் பார்த்தால் திருவேங்க்டத்தவனுக்கு கோயில் என்பது பிற்காலத்தில்தான் எழுப்பப்பட்டிருக்கவேண்டும் என்று தெரிய வரும். அது போல ஸ்ரீசைலம் அமராவதி போன்ற இடங்களிலும் கோயில் என்பது ஒரு சிறிய வளாகமாகவோ, அல்லது சிலைகளுக்கான இருப்பிடமாகவோத்தான் இருந்திருக்கவேண்டும். இக்கோயில்கள் யாவும் இவை தோன்றிய சமயத்தில் ஆகம சாத்திரங்களுக்கு உட்படவில்லை என்பதைக் கூட நாம் இங்கே உணரவேண்டும். (இன்றைய ஸ்ரீசைலம் கோயில் பல அரசர்களால் பல்வேறு கால கட்டத்தில் கட்டப்பட்டது. மராத்திய சிவாஜி கூட அங்கே மேலைக் கோபுரம் கட்டியுள்ளார்).

கிருஷ்ணை அல்ல்து கோதாவரி நதி தீரத்து மக்கள் நிலவரத்தைப் பொதுவாகப் பார்க்கும்போது மலைவாழ்மக்களே அதிகம் இருக்கிறார்கள். மலைவாழ்மக்கள் எனும்போது அவர்கள் வழிபாடுமுறையில் தொன்மத்தை அப்படியே பாதுகாத்து வருவார்கள். இன்றளவும் தொன்மத்தைப் பாதுகாத்து வரும் ஆதி குடியினர்கள் கூட இவர்கள்தான். இவர்களில் பல பிரிவினர் இருந்தாலும் பொதுவாகவே தங்கள் பூர்வீகர் நாகர் என்று சொல்லிக்கொள்வர். இவர்களின் தெய்வமும் நாகம்தான் (சர்ப்பம்). முதல் நூற்றாண்டுகளில் இந்த மலைவாழ் வீரர்களின் உதவியால் இக்குவாகு வம்சத்தினர் ஆட்சிக்கு வந்த போது வேதமதத்தினருக்கு மிகப் பாதுகாப்பாகவும் பிராம்மணர்களுக்கு எல்லா வகைகளிலும் உதவி செய்து வாழ்ந்ததையும் திரு பி.எஸ்.எல்.ஹனுமந்தராவ் எழுதி இருக்கிறார் (The Age of Satavahanas’ by B.S.L. Hanumantharao). இந்த நாகவம்சத்தின் பிரிவினர் இந்தப் பகுதியில் ‘போயர்கள்’ (boya’s) எனத் தங்களைக் கூறிக்கொண்டனர். ஆனால் இவர்கள் எந்தக் காரணத்தினாலும் நாக வழிபாட்டைக் கைவிடவில்லை. இவர்களுக்கு முருகன் நாக வடிவத்தில் காணப்பட்டதாகவும், ஸுப்ரமணியம் என்ற சொல்லின் பொருளே இவர்கள் நாகப்பாம்பு என எடுத்துக் கொண்டதாகவும் திரு ஹனுமந்தராவ் எழுதி இருக்கிறார். அதே சமயத்தில் எந்தத் தெய்வத்தையும் நாகரூபத்தில் ஆராதனை செய்யும் பழக்கத்தை ஆதியிலே கொண்டிருந்ததால் இவர்கள் சுப்பிரமணிய ஆராதனை என வரும்போதும் நாக (சர்ப்ப) வடிவில் பூஜித்தார்கள் என்றே கொள்ளவேண்டும் என்ற பொதுக் கருத்தையும் நாம் மதிக்க வேண்டும். சுப்ரமணியம் என்றால் நல்ல பிரும்மம் என்பது ஏற்கனவே எழுதிய பிறகு அதே சொல் நாகத்துக்கு எந்த வடிவத்தில் பொருந்தும் என்பதை விவரிக்க இயலாது எனினும் இந்த மலைப் பிராந்தியங்களுள் சுப்பிரமணியம் எனும் சொல்லுக்கு நாகம் என்றே பெயர் நாகம் என்றே பொருள் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

ஆதி சங்கரர்  திருச்செந்தூரில் புஜங்கமாலை தோத்திரத்தில் முருகனைப் பாடி சருமவியாதி நீங்கப்பெற்றதாகக் கூறுவர். பாடல்வகைகளில் புஜங்கவகைப் பாடல் என்பது வடமொழியில்  ஒரு கவிதை அளவைக் குறிக்கும் (Bhujanga Meter) என்பர். புஜங்கம் என்றால் சர்ப்பம் அல்லது பாம்பு என்று பொருள். மருத்துவத்துக்காக சுப்பிரமணிய புஜங்கம்’ என்ற தலைப்பில் முருகனைப் பாடும் முப்பத்து மூன்று தோத்திரப் பாடல்களில் 27 ஆம் பாடல் ஒன்று முக்கிய செய்தியைக் குறிக்கும்.
                                                                           
முனீனா முதாஹோ ந்ருணாம் பக்தி பாஜா
மபீஷ்டப்ரதா ஸந்தி ஸர்வத்ர தேவா
ந்ருணாமந்த்ய ஜாநாமபி ஸ்வார்த்ததானே
குஹாத்தைவமன்யம் நஜானே நஜானே (27)

இதன் சுருக்கமான பொருள் என்னவென்றால் பக்திமார்க்கத்தில் செல்லும் பக்தர்களுக்கு உதவ முனிவர்களும் தேவர்களும் இன்னும் ஏனைய தெய்வங்களும் இருக்கிறார்கள். ஆனால் எப்படிப்பட்டவராக இருந்தாலும், குகனே! ஒரு முறை மனதில் நினைத்தாலே அவர் எத்தனை சாதாரணகுலமாக இருந்தாலும் ஓடி வந்து காப்பாற்றும் உன்னைப் போல ஒரு தெய்வமுண்டோ.. இல்லவே இல்லை.

இங்கே முக்கியமான மறைபொருள் ஒன்றைக் கவனிக்கவேண்டும். பாரதத்திலே சமயபேதம் நிறைந்த அந்தக் காலகட்டத்தையும், வேத, பௌத்த சமண மதங்கள் ஒன்றோடொன்று சாதாரண மக்களைக் கவர வேண்டிய அவசியத்தில் தள்ளப்பட்டிருந்தது. வேதமதம் யாகங்களை முன்னிறுத்தும் அந்த காலகட்டத்தில் எவ்விதமான கட்டுப்பாடும் இல்லாமல்  பொதுவாகவே இந்தியாவின் ஆதி குடிமக்கள் தங்கள் குலதேவதையும், நாகங்களையுமே பூஜித்து வரும் வேளையில் முருகன் அவர்களுக்கும் தெய்வமாகவே பட்டதால், பரவலாகவே மலைவாழ்மக்களிடையே முருக வழிபாடு நாகவடிவத்தில் இருந்திருக்கவேண்டும். பின்னாளில் இதே ஆந்திரத்து போயர்கள் வேதங்களில் தேர்ச்சி பெற்றதையும், உதாரணத்துக்கு மடிபோயா என்பவர் மடிசர்மா என மாற்றிக்கொண்டதையும் போன்ற எத்தனையோ குறிப்புகள் கிடைத்தாலும் போயர்கள் போன்ற மலைவாழ் மக்களின் குல தெய்வமாக சுப்பிரமணியனே ஆதியிலிருந்து வழிபடப்படுகிறான் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. முதலில் நாகம் வாழும் புற்றுகளை வழிபட ஆரம்பித்தவர்கள் பிறகு படிப்படியாக பாறைகளில் பாம்பு ஓவியத்தினை செதுக்கி சுப்பிரமணியத்தை வழிபட்டார்கள். வேதம் கற்றவுடன் இவர்கள் காலத்தின் போக்குக்கேற்ப சிவபூசையையும், ஆகம சம்பிரதாயக் கோவில்களையும் வழிபட ஆரம்பித்தனர். ஆனாலும் சுப்பிரமணிய பூசை மட்டும் நாக வடிவத்தில்தான் இன்னமும் இருக்கிறது. வேதாமக விதிகள் இவர்கள் வழிபாட்டை மேலும் பண்படுத்தின. மங்கள வாரத்தில் (செவ்வாயன்று) சிறப்பு வழிபாடும், சஷ்டித் திதியில் விரதநியதிகளும் மெல்ல மெல்ல பழக்கங்களில் வந்தன. சுப்பிரமணிய பூஜை விஷயத்தில் மட்டும் இந்த மலைவாழ் மக்களின் பழக்க வழக்கங்களை எல்லா இனங்களையும் பின்பற்ற ஆரம்பித்தனர். முருகனின் அருள் எந்த ரூபத்திலும் வருமென்ற சாதாரண விஷ்யமும் எல்லோருக்கும் புரிபட ஆரம்பித்தது என்றே சொல்லவேண்டும்.

அந்தக் கால கட்டத்திலேயே நாகசுப்பிரமணியர்கள் பல்வேறு இடங்களில் கல்லில் செதுக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வருவது இந்த பிராந்தியங்களில்  அதிகம். இப்போதும் அப்படிப்பட்ட கற்சிலைகள் ஒவ்வொரு கோவிலிலும் உண்டு. 
         
ஆனால் ஆதிகாலத்தில் எப்படி பாம்புப் புற்று ஒன்றையே சுப்பிரமணியராகப் பாவித்து வழிபட்டனரோ அதே போன்ற வழிபாட்டை இன்றளவும் பின்பற்றப்பட்டு வரும் ஒரு சுப்பிரமணிய புற்றுதான் இன்று சற்று பெரிய கோவிலாக கட்டப்பட்டு நாளும் நூற்றுக்க்கணக்கில் பக்தர்களைக் கவரும் மோபிதேவி சுப்பிரமணியத் தலம்.

இந்தத் தலத்தைப் பற்றியும் நாக வடிவிலான முருகன் வரலாற்றையும் மேலும் பார்ப்போம்.
    
இன்னும் வரும்
ப்டங்களுக்கு நன்றி: கூகிளார்.                              

5 comments:

  1. காலடியில் பாம்படக்கும் ம‌யில்மீது அம‌ர்ந்திருந்து அருள்செய்யும் முருக‌னின் பெருமையைப் பாம்பிலிருந்து தொட‌ங்கி இருக்கிறீர்க‌ள்! அடுத்து ம‌யில், முருக‌ன் என‌ வ‌ர்ண‌னை தொட‌ருமென‌ எதிர்பார்க்கிறேன்!
    அடுத்த‌ ப‌குதிக்கு ஆவ‌லுட‌ன்.... மு.மு. த‌‌ட்ட‌ச்சுப் பிழைக‌ளைச் ச‌ரிபார்க்க‌வும்.

    ReplyDelete
  2. முருகன் தமிழ்க்கடவுள், தமிழுக்குத்தலைவன் என்பதையும் முதற்சங்கத்தை ஏற்படுத்தியரில் ஒருவன் என்பதையும் விட்டுவிட்டீர்கள் நண்பரே.. முருகு என்றாலே அழகு..அழகு என்றாலே தமிழ்..

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீதேவா! இந்தக் கட்டுரையின் முதற்பகுதியைப் பார்க்கவும்.ஆரம்பக் கட்டத்திலேயே நீங்கள் குறிப்பிட்டதைச் சொல்லிவிட்டேனே.. இந்தக் கட்டுரையின் நோக்கமே கந்தனின் புகழ் எவ்வாறெல்லாம் அண்டை மாநிலங்களில் பரவியிருந்தது என்பதுதான். கந்தனையும் தமிழையும் பற்றியும் ஆயிரக்கணக்கான கட்டுரைகள் வந்துவிட்டன. இது முழுமுழுக்க ஆந்திரப்பகுதியில் உள்ள கந்தனின் வரலாறாக மட்டுமே பார்க்கவும்.

      Delete
  3. எங்கள் வீட்டில் எங்க்லள் தாயார் சொல்லி எங்களுக்கு எல்லாம் மனப்பாடமாக இருப்பது திருமுருகாற்றுப்படையும், சுப்ரமணிய புஜங்கமும் (தமிழில்) தான்!நீங்கள் குறிப்பிட்டது 26 ஆவது பாடல்
    அது இவ்வாறுள்ளது:
    பிறதேவர் முனிவர்க்கு மிகுபக்தியோர்க்கும்
    பிரியங்க டருவார்கள் புலையர்க்கும் அருள்வார்
    பிறர் யாவர் மணிவாரி வலைவீசு செந்திற்
    பிறானன்றி யறியேன் சொனேன் நம்புவீரே!

    உங்கள் கட்டுரை முருக பக்தர்களுக்கு மனநிறைவைக் கொடுக்கும். உங்களை முருகன் அருள் பாலித்து நடத்திச் செல்வான்!
    நரசய்யா

    ReplyDelete