முருகன் தமிழ்க்கடவுள் என்பதை சங்ககாலம் முதலே நாம் பெருமையுடன் சொல்லிக் கொண்டு வருகிறோம். செந்திலாண்டவனே குமரிக்கண்டத்தின் கண்கண்ட தெய்வம் என சில ஆய்வாளர்களும் சொல்லி வருகின்றனர். கல்தோன்றி மண்தோன்றா காலத்து முன்தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி என்றால் அது முருகன் என்ற முதன்மையிலிருந்துதான் ஆரம்பமானது என்பதாக பெருமையோடு சொல்லும் முருகபக்தர்கள் அநேகர். தமிழன் எங்கெல்லாம் காடு மலை க்டந்தும் கடல்கடந்தும் சென்றாலும் முருகனை தன் நெஞ்சத்துள் மட்டுமல்லாமல் வெளியேயும் அவனுக்கு கோயில் அமைத்து காலம் காலமாக வழிபடுவது புதிய செய்தியுமல்ல. முருகனே முழுமுதற்கடவுள், அவனே தாயாய், தந்தையாய், மாமனாய், வேறு பல ரூப விகற்பதாய், கூறறியதாய் மாறி மாறி உலகெங்கும் ஆட்சி செய்து வருவதாக அருணகிரிநாதரின் திருப்புகழ் விலாவாரியாக நமக்கு விவரிக்கும். முருகன் என்ற ஒரு சொல்லில் உலகில் அசையும் அசையா அத்தனையுமே அடக்கம் என்பதாக திருப்புகழ் பாடும் பாசுரங்களை எத்தனையோ சித்தர்கள் தமிழில் எழுதி வைத்திருக்கின்றனர். முருகா என்று ஓதுவார்முன் வல்வினையும் வருத்தும் கிரகமும் எதிர்தான் நிற்குமோ என்று நாம் நிதமும் முருகனின் நாமத்தைச் சொல்லிக் கொண்டே வருகிறோம். உலகத்தின் ஓங்காரமந்திரமாக ஓம் எனும் பிரவணத்தைக் கொடுத்து தந்தைக்கே குருவாய் உருமாறி அந்த ஓங்காரமந்திரத்துள் உலகத்தையே அருளாட்சி செய்த முருகனை போற்றாத புராணங்களே இல்லை எனச் சொல்லிவிடலாம். காளிதாசனை மிகவும் கவர்ந்தவள் காளி என்றால் அந்தக் காளியின் புத்திரன் முருகனோ அவனை முழுதும் ஆக்கிரமித்துக் கொண்டதால் அல்லவோ குமாரசம்பவம் எனும் அருமையான காவியம் நம்க்குக் கிடைத்தது.
வடநாடுகளில் குமாரசுவாமி எனவும் ஸ்கந்தன் எனவும் ஷண்முகம் எனவும், கார்த்திகேயன் எனவும் மனதார பக்தர்களால் ஓதப்படும் முருகனை நாம் முருகா என்று ஓதும்போது கிடைக்கும் இன்பமே தனிதான். முருகநாமம் நம் தமிழருக்கு என்றுமே ஆனந்தம் தரக்கூடியதுதான். நாம் முருகா என்று சொல்லிவிட்டு மனதில் அவனை ஒரு கணம் நினைத்து அதையும் உள்ளுக்குள் உணரும் தருணம் ஏற்படும்போது கிடைக்கும் திருப்திக்கு ஈடு இணை ஏது,,
அப்படிப்பட்ட முருகனை இந்த ஆந்திரதேசமும் நிச்சயமாக கவர்ந்திருக்கவேண்டும்தான். குன்று இருக்குமிடமெல்லாம் குமரன் இருக்குமிடமாக ஏ.பி.என் திருவிளையாடல் திரைப்படத்தில் அவ்வையார் மூலம் சொல்லுவார். விஜயவாடா இந்திரகிலாத்திரி மலையில்தான் தனிக்கோயில் கொண்ட முருகனை அடியேன் முதன் முதலாக சந்தித்தேன்.. (1978) என் மகிழ்ச்சியில் அவனைத் தமிழ்க்கடலாக பார்த்ததால் அந்தக் கோயில் மலைப்பாறையில் ‘அருள்மிகு வள்ளி தெய்வயானை ஸமேத சுப்பிரமணிய ஸ்வாமி தேவஸ்தானம்’ என வெள்ளைப் பெயிண்டால் தமிழில் எழுதவைத்தது. அதனால் எழுந்த சில பரபரப்புகள் அதன் பிறகு நடந்த கோலத்தையும், தகராறுகளையும் ஏற்கனவே ஒரு பதிவில் (வம்சதாராவில்) எழுதி இருக்கிறேன். முருகன் அவன் திருவுருவைப் பார்க்கும்போதே உள்ளம் சிலிர்சிலிர்க்கும். அவன் அப்படித்தான். அதுவும் உரிமையோடு அவனை சொந்தம் கொண்டாடுவோரை அவன் எப்போதும் கைவிடுவதே இல்லை என்பதை அங்கு நேரிலேயே அனுபவித்தேன்.
ஆனால் முருகனின் ஆந்திரதேசத்து வரலாறு மிக மிகப் பழையானது. ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கும் முன்பே கட்டப்பட்ட பஞ்சாராமம் (வேங்கியில் ஐந்து இடங்களில் சிவனுக்காக எடுக்கப்பட்ட கற்கோயில்) திருக்கோயில்களில் முருகனுக்கு சிறப்பிடம் உண்டு. சாமல்கோட் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள சிவஸ்தலம் குமாரராமம் திருக்கோயில் என்றே இன்னமும் அழைக்கப்படுவது மிகவும் விசேஷன். ஏனைய நான்கு திருக்கோயில்களில் குமரனுக்கு தனி சந்நிதி உண்டு. இவை கட்டி முடிக்கப்பட்டு 250 ஆண்டுகள் கழித்து முதல் கலிங்கப் போரில் கலந்துகொண்ட விக்கிரம சோழன் 1100 ஆம் ஆண்டில் ஆந்திராவின் கீழைக்கோடியில் உள்ள ஸ்ரீமுகலிங்கம் திருக்கோயிலில் ஒரு சந்நிதி புதிதாக சேர்க்கவைத்து அங்கு முருகனை பிரதிஷ்டை செய்வித்ததாக ஒட்டக்கூத்தர் பாடல் மூலம் தெரியவரும். அந்த முருகன் கையில் ஒரு கொம்புடன் ஔவைக்கு தரிசனம் தந்தவிதமான கோலத்துடன் (சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டு தமிழ் மூதாட்டியை ஒரு கலக்கு கலக்கிய அந்த சுட்டிப் பையன் போலவே) இருக்கிறான். மேகங்கள் மேலே மூடிக்கொண்டிருக்கும் ஒரு அழகான பகல் பொழுதில் சின்ன சின்ன மழைத்துளிகள் மேலே பட பட அதை அப்படியே தலைமேல ஆனந்தமாக வாங்கிகொண்டே அந்த அழகனை அப்படியே மனதுக்குள்ளே படம் பிடித்துக்கொண்டதை மறக்கமுடியாதுதான்.
இரண்டாம் கலிங்கப்போர் இந்தப் பிராந்தியத்தில் மிகக் கடுமையாக நிகழ்ந்ததை நம் தீந்தமிழ் கலிங்கத்துப் பரணி ஒன்றே பறை சாட்டினாலும் அந்தப் படையை வெற்றிகரமாக முடித்து விட்டு குலோத்துங்க அரசன் கட்டளையின் பேரில் இன்றைய விசாகப்பட்டினத்துப் பிராந்தியத்தே கடலருகே முருகனுக்கு ஒரு கோயில் எடுப்பித்ததாகவும், விசாகை நட்சிரத்துக்கு உரியவனான முருகனுக்கு விசாகேஸ்வரன் என நாமமிட்டதாகவும் எத்தனையோ செய்திகள் இந்த பிராந்தியத்தில் உள்ளன.

இங்குள்ள கடலோரப்பகுதிகள் சற்று விசித்திரமானவை. கடல் அரிப்புகள் ஒருகாலத்தில் மிக அதிகமான அளவில் நிலத்தை அழித்து ஊருக்குள் நீர் புகுந்துகொண்டிருக்கவேண்டும் என்பதை இங்குள்ள நில அமைப்பைக் கொண்டே எத்தனையோ அறிஞர்கள் கட்டுரை வடித்துள்ளனர். காலவட்டத்தில் 900 ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பப்பட்ட அப்போதைய கடலோரக் கோயில், முருகனுக்காக தமிழரசனால் எழுப்பப்பட்ட கற்கோயில் கடல் கொண்டிருக்க வாய்ப்புகள் அதிகம் என்று திரு நரசய்யா போன்ற கடல்சார்அறிஞர்கள் கூட கூறி வருகிறார்கள். ஆந்திர பல்கலைக்கழகத்தில் இந்தக் கடல்சார் கழகத்தில் ஒரு பேராசிரியர் கங்காதர் என்று பெயர், அவருக்கு நிச்சயமான நம்பிக்கை, இந்த விசாகேஸ்வரர் கோயில் கடல் கொண்ட கோயில்தான், எப்படியும் மீட்டு விடுவோம் என்று அவ்வப்போது சபைகளில் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் பேசிவருபவர். திரு கங்காதரரின் முயற்சியால் இந்திய கடற்படையில் நீரில் மூழ்கி தேடும் பயிற்சி பெற்ற வீரர்களைக் கொண்டு ஒரு சில வாரங்கள் கூட இந்தத் தேடல் முயற்சி செய்யப்பட்டது.
கப்பற்படையைச் சேர்ந்த கமாண்டர் சுரேஷ்குமார் மிகச் சிறந்த ஆழ்கடல் வீரர். தமிழர். அவர் இந்தக் குழுவில் மிக ஆர்வத்துடன் பங்கு கொண்டவர். அதுவும் நம் தமிழ்க்கடவுள் முருகன் அவன் கோயிலுக்காக தேடுகிறோம் என்பதில் அவருக்கு படு உற்சாகமாம். சமீபத்தில் சுரேஷ் குமாரை எதேச்சையாகப் பார்த்துப் பேசியபோதுதான் அவரும் கலந்துகொண்டது எனக்குத் தெரியவந்தது. ஆனால் ’இலக்கு’ இல்லாமல் தேடியதால் முயற்சி வீணானது சார்.. என்றார்.
ஆனாலும் விசாகப்பட்டினம் எனும் தமிழ்ப்பெயரைக் கொண்ட இந்த நகரில் நிச்சயமாக விசாகேஸ்வரனின் கோயில் இருந்ததுதான் காரணப்பெயர் என்கின்றனர் நகரத்துப் பெரிசுகள்.
என்றாலும் ஒருநாள் விசாகேஸ்வரன் நிச்சயம் நம் மீது கருணை காட்டி தன்னை வெளிப்படுத்திக் கொள்வான் என்று நம்புபவர்களும் நிறைய உண்டு.
அந்த விசாகேஸ்வரன் வராவிட்டால் என்ன, இல்லை அவன் இங்கு நகரத்துக்கு வரும் வரை என்னைப் பாருங்கள் என்று இன்னொரு முருகன் இங்கே நகர மக்கள் எல்லோரையும் கவர்ந்து வருகிறான். சங்கரமடம் அமைந்த வளாகத்தில் தனியே தனக்கென ஒரு கோயில் அமைத்துக் கொண்டு மயில் வாகனனாகக் காட்சி தருபவன். ம்யிலோடும் வேலும் சேரும்போது அவனுடைய காட்சி கண்களுக்கும் மனதுக்கும் மிக இனிமையாக இருப்பதால் அவனுக்கு ‘மயில்வேலவன்’ எனப் பெயர் சூட்டி அந்தப் பெயரிலேயே அவனைப் பூசை செய்து வருகிறேன். மயில் வேலவன் இப்போதெல்லாம் படு பிஸி. மக்களிடையே பிரச்னைகள் ஏராளம்.. நாளுக்கு நாள் பெருகிவரும் கஷ்டங்கள் பக்தருக்கு தீராச் சோதனையாக மாறிவரும் காலத்தில் தம் கஷ்டத்தைப் போக்க இவனைத் தவிர வேறு யார் என்ற அளவில் அவனைத் தேடி வரும் பக்தர்கள் மிக அதிகமாகி விட்டார்கள். செவ்வாய் நாயகனான மயில்வேலவனுக்கு செவ்வாய்க் கிழமைதோறும் நடக்கும் அபிஷேகங்கள் முன்னூறைத் தாண்டிவிடுகின்றன. அப்படியும் எனக்கும் அவனுக்கும் உள்ள உறவே தனி.. ’உன்னையன்றி எனக்கு யார் முருகா’ என்று ’சோப்’ போட்டுக் கொண்டே போவதால் ஒருவேளை அவன் மயங்கி விட்டதைப் போல காட்சி தந்தாலும் எனக்கும் அவனுக்கும் உள்ள உள்ளார்ந்த இணைப்பை வர்ணிக்க முடியாதுதான். அவனுக்கு நிகர் அவன் ஒருவனேதான் அல்லவோ.. நாம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்,, அதுவும் அருணையார் சொல்லித் தந்ததுதான். எப்போதும் எந்தச் சமயத்திலும் அவன் நாமம எம் நாவில் உணர்வோடு இருக்க அவன் அருள் புரிய வேண்டும்.

முருகன் குமரன் குகனென்று மொழிந்
துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய்