Thursday, May 27, 2010




வயிறு எரிகிறது..

அப்படித்தான் அனைவருமே சொல்லுகிறார்கள் ஆந்திர அரசாங்கத்தின் அலட்சியப் போக்கை நினைத்து.

காலி (Gali) கோபுரம் என தெலுங்கர்களால் அழைக்கப்பட்டு வந்த 136 அடி உயர காளஹத்தி கோயில் தலைவாசல் கோபுரம் சுக்கு நூறாக இடிந்து விழுந்த காட்சியை என்னவென்று சொல்வது..




கி.பி. 1516 ஆம் ஆண்டு, கங்கர்களை போரில் வென்றவுடன், தன் காணிக்கையாக இந்த ராஜகோபுரத்தை சுவர்ணமுகி நதிக் கரையில் ஸ்ரீகிருஷ்ணதேவராயர் கட்டியபோது, இந்த கோபுரம் ஒரு ஆயிரம் ஆண்டாவது நிலைபெற வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் கட்டிய கோபுரமாகத்தான் அவன் நினைத்திருக்கவேண்டும். அப்படித்தான் இத்தனை காலமாக இருந்தது. அந்தக் கோபுரத்தின் உயரத்திலும், சிவனுக்காக கட்டிய மாபெரும் தெய்வீகத் தொண்டு என்ற பெருமையிலும் அந்த கோபுரத்தின் பக்கத்திலேயே ஒரு சிலையாக நின்று கொண்டு தவம் செய்த அந்த அரசனின் கனவு கூட இந்த கோபுரத்து இடிபாடுடன் இடிந்த போன சோகக் கதையை என்னவென்பது?

அடித்தளம் பாறையுடன் கூடியது மேலே செங்கல்லும், சுண்ணமும், பாறாங்கல்லும் சேர்ந்த கலவையோடு கட்டும்போது, இந்தக் கோபுரத்தை தமக்குப் பின் வருவோர் அவ்வப்போது மராமத்து செய்வார்கள், நிச்சயம் அவர்கள் நன்றாகக் கட்டிக் காப்பார்கள் என்று ஆசையுடன் எதிர்பார்த்து நின்ற அந்த அரசனின் கனவு அப்படியே நொடிந்தபோன நிலையை எப்படி சொல்வது?

வெளிநாடுகளில், அதுவும் நாகரீகம் மிகுந்த மேலை மற்றும் கீழை நாடுகளில் 200 வருடம் பழையது என்றாலே மிகுந்த அக்கறையோடு பொறுப்பெடுத்து அவைகளைப் பாதுகாப்பார்கள். ஆனால் 500 வருடம் பழைமை மிகுந்த இக்கோபுரம் இடியப் போகிறது என்று நன்றாகவே முன்னமேயே தெரிந்தும், அதிகாரிகளின் அலட்சியப் போக்கினால் மட்டுமே இடிந்தபோன இந்த உயர்ந்த கோபுரத்தை இனி மறுபடியும் காண்பதேது? மேலே உள்ள படத்தில் மட்டுமே காணலாம் இனி..

136 அடி உயரத்தில் உள்ள கோபுரம் பழைய கோபுரம்தான். பல ஆண்டுகளாகவே மேலிருந்து கீழாக விரிசல் விட்டு எப்போது இடிந்து விழுவோம் என்று பயமுறுத்திக் கொண்டிருந்த கோபுரம்தான். (படத்தை விரிவாக்கிக் கூர்ந்து பார்த்தால் இந்த விரிசல் தெரியும், இத்தனைக்கும் இது பழைய படம்). ஆனாலும் கோயில் பொறுப்பாளர்களுக்கு பொறுப்பு வரவில்லை. 1960 ஆம் ஆண்டில் ஒருமுறை, மறுபடியும் 1990 ஆண்டு ஒருமுறை இந்த விரிசல்களை செப்பனிட்டார்களாம்.(இந்தப் பணம் கூட திருப்பதி தேவஸ்தானம் கடனாக - ரூ. பத்து லட்சம் கொடுத்ததாம்) இன்னும் ஒரு முப்பது ஆண்டு காலம் அதாவது 2020 ஆன் ஆண்டு வரை காத்திருப்போம் என்று விட்டு விட்டார்களோ என்னவோ.. அல்லது வேறு யாராவது கடன் கொடுக்க முன் வந்தால் அப்போது பார்த்துக் கொள்ளலாமே என்று ‘சும்மா’ இருந்துவிட்டார்களோ என்னவோ..

இத்தனைக்கும் சமீபத்தில் வந்த ‘லைலா’ புயல் காற்று இவர்களுக்கு அந்த விரிசலை அகலப் படுத்தி (சுமார் ஒரு அங்குலம் விரிசல்) ஆட்சியாளருக்குப் பாடம் வேறு புகட்டியது. இப்போதாவது கவனியுங்கள் சாமி, என்பதைப் போல.

ஏதோ கவனித்தார்கள். எச்சரிக்கைப் பலகை ஒன்று போட்டார்கள். ‘இந்தக் கோபுரம் இடிந்து விழும் நிலையில் இங்கு யாரும் வரவேண்டாம்’ என்று. (இப்படிப் போட்டதால் மனித உயிர்கள் காப்பாற்றப்பட்டன் என்றாலும் அந்தக் கோபுரங்களில் வாழும் நூற்றுக்கும் மேலான குரங்குகளும், பறவைகளும் ‘படிப்பறிவு’ இல்லையாதலால் பார்க்கவில்லை) சென்னன ஐ.ஐ.டி யிலிருந்து நிபுணர் ஒருவரை சொகுசுக் காரில் வரவழைக்கப்பட்டு அவர் மூலம் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட கோரிக்கை விடுத்ததாம். அவரும், இந்த அரசாங்கம் போலவே, ஆகா.. இதோ செய்கிறோமே.. என்று இன்னமும் திட்டம் தயாரித்துக் கொண்டிருக்கிறாரோ என்னவோ..

ஆனால் ஆகாச அளவுக்கு உயர்ந்த அந்த கோபுரம் ‘அறிவில்’ மனிதன் அளவு கூட உயரவில்லை அல்லவா.. திட்டம் போட மனிதன் பேப்பர் எடுத்து எழுதுவதற்கு முன்பே இடிந்து விழுந்துவிட்டது. அத்தோடு குரங்குகளும் பறவைகளும் கூட சமாதி ஆகிவிட்டன.. பாவம்.. வாயில்லா ஜன்மங்கள்..

எல்லாம் முடிந்த பின்னே, ‘அடடே.. இது பழைய கட்டடம்,, காற்றுக்கு இடிந்து போவது சகஜம்தான்.. புதியது ஒன்று கட்டிவிடலாமே.. என்ன பத்து கோடி ஆகுமா.. சரி, உடனே கோப்பு ஒன்று எழுதுங்கள்.. உடனடியாக கட்டிவிடலாம்’ என்று ஆந்திர அரசு சாவகாசமாக சொல்கிறது. இந்த பத்து கோடியில் பத்தில் ஒரு பங்கு முன்னமேயே கொடுத்து மராமத்து செய்திருந்தால் ஒரு புராதனக் கோயிலின் புராதனக் கோபுரம் கட்டிக் காக்கப்பட்டிருக்குமே.. அதோ இடிபாடுகளுக்குள்ளும் இடிபடாமல் அப்படியே சோகமாக நிற்கும் ஸ்ரீகிருஷ்ணதேவனை சுகமாக நிற்க வைத்திருக்கலாமே.. ஒரு புராதன நினைவுச் சின்னம் சின்னாபின்னாபடுத்தப் படாமல் முறைப் படுத்தியிருக்கலாமே.. இறந்து போன வாயில்லா ஜீவன்கள் தம் இருப்பிடத்தை செப்பனிட்டதற்காக வாயார அல்லது நெஞ்சாற வாழ்த்தியிருக்குமே..



ஏன் தோன்றவில்லை இவர்களுக்கு,

அப்படி ஒன்றும் கோயில் ஏழைக் கோயிலும் இல்லை. நல்ல வருமானம் ஈட்டித் தரும் பெரிய கோயிலில்களில் ஆந்திரத்து காளஹத்திக் கோயிலும் ஒன்று. காளஹத்தி ஈஸ்வரன் எல்லோருக்கும் எல்லா நன்மையும் உடனடியாக செய்து கொடுப்பதால் கோயிலில் வரும் பக்தர்களில் வருகையும் நாளுக்கு நாள் அதிகம்தான். சிவராத்திரி நாட்களில் ஊரே நெருக்கத்தில் தவியாய் தவிக்கும். பஞ்சபூத சேத்திரங்களுள் ஒன்று. ‘கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்’ என்று திருவாசகத்தால் பாராட்டப்பட்ட ஒப்பற்ற பக்தனான கண்ணப்பன் இருந்து வழிபட்ட தலம் இது. இத்தகைய தலத்தை இப்படி அலட்சியப்படுத்தலாமா.. பல்லவர் காலம் தொட்டுப் புகழ் பெற்ற கோயிலில் இப்படி ஒரு வருத்தமான நிகழ்ச்சியை நடத்த விடலாமா.. ஆன்மீகம் போற்றப்படும் ஆந்திராவிலேயே இப்படிப்பட்ட நிலைமையா?

ஸ்ரீகிருஷ்ணதேவராயன் அரசாட்சி ஏற்று சென்ற வருடத்தோடு ஐந்நூறு ஆண்டுகாலம் நிறைவு பெறும் நேரத்தில், அந்த ஒப்பற்ற அரசனுக்கு நாம் செய்யும் நன்றிக்கடன் இதுதானா.. நம் அலட்சியப் போக்கால் காலத்தால் அழிக்கமுடியாத செல்வங்களை இப்படி அழித்துக் கொண்டே போனால்,.. எதற்கும் சாட்சி தேவைப் படும் இந்த அசாதாரண உலகத்தில் புராதனம் அழிந்த நிலையில் நாளை பாரதம் தன்னை உலகத்தாருக்கு எப்படி வெளிக் காட்டிக் கொள்ளும்..

வயிறு எரிகிறதுதான்.

(Pictures curtesy The New Indian Express and Srikalahasti Temple GurukkaL)

21 comments:

  1. கலை கொலை செய்யப்பட்டது. இறையின் மேல் கறை தெளித்தார்கள். இனியும் தெளியமாட்டார்கள்.
    இன்னம்பூரான்

    ReplyDelete
  2. வேதனை தரும் செய்தி

    ReplyDelete
  3. என்ன சார் இது? ஒரு நாள் விரிசல்ன்னு செய்தி வருது; அடுத்த நாள் இடிஞ்சு போச்சுன்னு செய்தி? வயிறு எரியுது! :-(

    ReplyDelete
  4. இது மற்ற கோயில்களூக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்து அவர்களாவது உரிய நேரத்தில் உரிய பணி செய்து நமது அரிய கலைச்செலவ்ங்களைக் காப்பாற்றவேண்டும்.

    ReplyDelete
  5. ஹும், கோயில்களை என்றைக்கு அரசின் பிடியிலிருந்து விடுவிக்க முடியுமோ அன்றைக்குத் தான் இவற்றுக்குக் கதி மோக்ஷம்! இனியாவது விழித்துக்கொள்வார்களா என்றால், ம்ஹும், அசைய மாட்டாங்க, மறுபடி இப்படி ஒண்ணு நடக்கும், வருத்தம் தெரிவிப்பாங்க, இது ஒரு தொடர்கதை! அருமை தெரியாதவங்க கையிலே போகும்னு நம் நாட்டை ஆண்ட பேரரசர்களும், சக்கரவர்த்திகளும் நினைச்சுக் கூடப் பார்த்திருக்க மாட்டாங்க.

    ReplyDelete
  6. என்ன பண்றது நாம் புலம்பத்தான் முடியும். அரசாங்கம் இதை (ப்ளாக்குகளை) பார்ப்பதில்லை. இதை பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது கோயில் நிர்வாகம் கூட மெத்தனமாக இருந்து வந்திருக்கிறது. சரி ஜன புழக்கம் மிகுந்த கோயில் தப்பித்தவரி பல பேர் கூட மாண்டுபோயிருக்ககூடும் அந்த வாயில்லா ஜந்துக்கள் கூட காப்பாற்றப் பட்டிருக்கலாம். நிச்சயமாக வயிறு எரிகிறது.
    கே.வீ.விக்னேஷ்

    ReplyDelete
  7. இந்தக் கதி ந்மது ஸ்ரீரங்கம் அரங்கன் ஆலயக் கோபுரத்துக்கும் நேர்ந்துவிடாதபடி அந்த ரங்கன் தான் காப்பாற்றவேண்டும்.
    வழிப்போக்கன்

    ReplyDelete
  8. Many temples in Tamil nadu are in similar status.Recently in Bhavani a part of a roof fell and two devotees died.

    D Balasundaram

    ReplyDelete
  9. கேட்கவே ரொம்ப வருத்தமா இருக்கு :((( அனைவரும் சொன்னது போல இனிமேலாவது அரசாங்கம் கவனமாக இருக்கணும். அதுக்கு இறைவன்தான் அருளணும்.

    ReplyDelete
  10. இந்தப் படத்தில் இருக்கும் விரிசலே 3 அங்குலத்திற்கும் மேல் இருக்கும்போல் தெரிகிறது! இது பல ஆண்டு காலங்களாக அடித்தளத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் உண்டானதாகத் தான் இருக்க வேண்டும். இதற்கான எங்கள் தொழில்நுட்ப வார்த்தை "uneven settlement". விரிசல் கீழிருந்து மேலாக செல்கிறது அதாவது வலது பக்க settlement இடது பக்கத்தை விட அதிகமாக இருக்கிறது. இது இயற்கையாகவும் நடந்திருக்கலாம் அல்லது நாம் ஆழ்துளை குழாய்கள் இடுவதாலோ அல்லது வேறு எதேனும் கட்டுமானச் செய்கைகளாலோ ஏற்பட்டிருக்கலாம்.

    எது எப்படியோ, அரசின் உதாசீனத்தாலோ, ஆலய நிர்வாகிகளின் அலட்சியப் போக்காலோ, மக்களின் கவனக் குறைவாலும்தான் இது நடந்திருக்கிறது. எவ்வளவோ நல்ல உள்ளங்கள் ஏராளமான ஆலயங்களுக்கு செலவு செய்து வருகிறார்கள், அவர்களின் கவனத்திற்கு இதைக் கொண்டு சென்றிருந்தால் இந்தக் கோபுரத்தை காப்பாற்றி இருக்க முடியும்.

    தாங்கள் சொல்லியிருப்பது போல் இது ஒன்றும் ஆளரவமற்ற ஆலயம் அல்ல, நான் செல்லும் பொழுது எல்லாம் பெரிய வரிசையில் நின்றுதான் தரிசித்திருக்கிறேன் ஈசனின்.

    ஒருவேளை இதுதான் அந்த ஆண்டவனின் விருப்பமோ அல்லது எச்சரிக்கையோ! அவனே அறிவான்...

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. நெஞ்சு பொறுக்குதில்லையே!!!

    ReplyDelete
  13. ட்ரேட் செண்டர் கண் முன்னால் தூளானபோது புலம்பினவர்கள் கூட,
    இப்படி நம்ம ஊரிலியே ஒண்ணு நடக்கப் போகிறது என்று நினைத்திருக்கமாட்டார்கள்.
    இறைவனின் இருப்பை காட்டும் கோபுரம் கண்முன்னால் மறைவதைப் பார்க்கும்போது
    மனம் பதைத்தது.
    இப்படிக் கூட நடக்குமா பகவானே என்று தவித்தது.
    அடைக்கலம் கொடுக்கும் கோவில் கோபுரமே இடிந்தால்
    வேறு என்ன பாக்கி இருக்கிறது.

    ReplyDelete
  14. ஆன்மிகத்தைப் போற்றும் ஆந்திரத்திலேயே இப்படி என்றால் ......


    தேவ்

    ReplyDelete
  15. Today in TV9 they showed some saplings hanging in the golden plated top gopuram of Tirupathi temple. If the roots of these plants are not destroyed now itself, GOD only can sae HIM

    ReplyDelete
  16. Great sacrifices inspire change. i hope this costly price helps people to learn their lessons. heartbreaking to see a heritage treasure reduced to rubble.

    vj

    ReplyDelete
  17. One more temple to follow the steps of Kalahasthi tower soon...
    South tower of Varadaraja perumal temple, they have not repaired the base lintel stones which have cracked through thunder, but are white washing the periphery in the name of Renovation.
    We in REACH FOUNDATION (www.conserveheritage.org) have ways to mend. Who listens? Heart breaks are often..unable to consol ourselves. Timely article Mr. Dhivakar

    ReplyDelete
  18. வருத்தத்தில் கலங்துகொண்ட அனைவருக்கும் நன்றி!

    பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை கட்டாயமாக கும்பாபிஷேகம் செய்யவேண்டும் என்று பெரியோர்கள் சட்டம் போல வைத்திருப்பதே இந்த கோபுரங்கள் அவ்வப்போது சரியாக பராமரிக்கப்படவேண்டும் என்பதற்காகவே.

    காளஹத்தி ராஜகோபுரம் குலைந்ததற்கு இப்போது ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், ஆட்சியாளர்களும், ஆலயத்து அதிகாரிகளும் பொறுப்பற்று இருந்ததால்தான் என்பதை அவர்களாலேயே மறுக்கமுடியாது.

    இப்போது என்னதான் முழித்துக் கொண்டு, கமிட்டி போட்டு, காரணத்தை ஆராய்ந்து அதன் மூலம் பழியிலிருந்து தப்பித்துக் கொள்ள முயன்றாலும், அல்லது புதுக் கோபுரமே இரண்டு ஆண்டுகளுக்குள் கட்டி முடித்தாலும்,அது நிச்சயமாக இவர்கள் அலட்சியப்போக்கினால் இடி்ந்து போன அண்டப் பழைய கட்டிடத்தின் புகழையும் பொலிவையும் திரும்பக் கொண்டு வராது.

    ReplyDelete
  19. அடிப்படையிலேயே கோளாறு இருந்ததினால்தான் அவ்வளவு பெரிய கோபுரம் இடிந்து விழுந்திருக்கிறது. எத்தனை மராமத்து செய்திருந்தாலும் பிரயோஜனம் இருந்திருக்காது.

    தமிழனுக்கே உள்ள வியாதி,எது நடந்தாலும் அரசாங்கத்தையும் நிர்வாகிகளையும் குறை கூறுவது. இதை விட்டுவிட்டு புது கோபுரம் கட்டுவதற்கு ஒத்துழைப்பு தாருங்கள்.

    ReplyDelete
  20. This is saddening. Couldn't believe no preventive measures were taken soon after the slight crack...
    My Travelogue

    ReplyDelete