Thursday, April 29, 2010

கடவுளும், தெலுங்கு எழுத்தாளர்களும்

என்ன காரணம் என்று தெரியவில்லை., இந்த மாதம் முதல் தேதியிலிருந்தே தினம் ’அன்புத்தொல்லை’க் கொடுத்துக் கொண்டிருந்த திருவாளர் பிரும்மாஜி கடந்த இரண்டு மூன்று நாளாக தொலைபேசியிலும் சரி, நேரிலும் சரி, வரவில்லைதான். கொஞ்சம் மனதுக்குள் வருத்தமாக இருந்தது. மனுஷன் பேசினா கேள்வியும், ஆதங்கமும்தான்.. இத்தனை ஆதங்கங்கள், மனதில் தாங்கிக் கொண்டு அதை வெளிப்படுத்த முடியாத எழுத்தாளராக அதுவும் இந்த 60 வயது வாழ்க்கை அனுபவத்தில் இப்படி இவரால் எப்படி இருக்க முடிகிறது என நான் வியப்பதுண்டு. ஆனாலும் இவர் கேள்விகளுக்கும், கவலைகளுக்கும் என்னிடம் தீர்வு கிடையாது.

’திருமலைத் திருடன்’ நாவல் பற்றி தெலுங்கில் பேச வேண்டுமென இங்குள்ள ’சஹ்ருதய சாஹிதி’ எனும் தெலுங்கு இலக்கிய அமைப்பு கேட்டதினால், அதுவும் தெலுங்கில் பேசவேண்டும் என்ற கோரிக்கையினால், நானே சற்று உள்ளுக்குள் உதறலோடுதான் அந்தச் சபையில் ஆஜரானேன். ஏதோ பேசினோமா, முடித்தோமா, போனோமா என்ற நிலையில் நான் அங்கிருந்து வெளியே வந்தபோதுதான் நம் பிரும்மாஜி என்னுடனே கூடவே வந்தார்.

’என் பெயர் பிரும்மாஜி!. உங்க நாவல் கதை முழுவதும் சொன்னீங்க.. கேட்பதற்கு ரொம்ப நல்லா இருந்திச்சு.. (இதுவரைக்கும் எனக்கும் நல்லாவே இருந்துச்சு).. ஆனா சார்.. உங்க நாவல் ல ஆண்டவன் இருக்கானா அல்லது இல்லையான்னு தெளிவா முடிவுல சொல்லி இருக்கீங்களா?’

”சார்.. ஆண்டவன் இருக்கிறதுனாலதான் இந்தக் கதையே இப்படி நடந்ததுன்னு கடைசில விளக்கம் கொடுத்தேனே சார்..”

”ஆங்! கொடுத்தீங்க சார்.. ஆனா. உண்மையிலே ஆண்டவன் இருக்கானா சார்.. உங்க சொந்த அபிப்பிராயம் என்ன.. அதைச் சொல்லுங்க..”

“அவன் இருக்கறதுனாலேதானே சார் உங்களை மாதிரி அன்பர்களையெல்லாம் சந்திச்சுப் பேசிண்டிருக்கேன்.. ஏன்.. உங்களுக்கு நம்பிக்கை இல்லையா..”

’இது பத்தி உங்கள்ட்ட பேசணும் சார்.. உங்க விலாசம் கொடுங்க.. நான் வரதுக்கு முன்னாடியே போன் பண்ணிட்டு, நீங்க வரச் சொன்னா மட்டுமே வருவேன்.. அநாவசிய டிஸ்டர்பன்ஸ் பண்ணமாட்டேன் சார்..’

’என்ன சார் இது.. கட்டாயம் வாங்க..’

அங்கிருந்து அவரிடம் அப்படி சொல்லித் தப்பித்து விட்டதாகத் தான் அன்றிரவு நினைத்தேன். ஆனால் நாம் ஒன்று நினைத்தால் இறைவன் இன்னொன்று நினைப்பான் அல்லவா.. அடுத்த நாள் காலையே போன் செய்து, மாலை என் அலுவலகம் வரலாமா என்று பர்மிஷன் கேட்டு, நானும் முழு மனதோடு (?) கொடுக்க, அன்று மாலையே மறுபடி பிரும்மாஜி என்னெதிரே ஆஜர்.

”சார்.. தப்பா எடுத்துக்காதீங்க.. இங்கே இருக்கற எழுத்தாளர்கள்னு சொல்லிக்கிறவங்கள்ளே – என்னையும் சேர்த்து - முக்கால்வாசிப்பேருக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது.!”’ என்று ஆரம்பித்த பிரும்மாஜி, கவிஞர்கள், கதை எழுத்தாளர்கள் பலர் பெயர்களையும், அவர்கள் புத்தக விவரங்களையும் எடுத்துச் சொன்னார். முக்கால்வாசி புத்தகங்கள் இன்னமும் புரட்சிகளை முன் வைத்தே எழுதப்படுகின்றன என்பதையும், சுரண்டல் பேர்வழிகள், முதலாளிகள் இவர்கள் ஒழிக்கப்படவேண்டும் என்ற கருத்தை முன்வைத்தே எழுதப்படுகின்றன என்பதையும் தெரிவித்தார். தெய்வபக்தி போன்றவை பெண்களுக்கு மட்டுமே சொந்தம் என்ற பாவனையில் பலர் இருப்பதாகவும், கோயில் குளம் என்று செல்லும் எழுத்தாளர் பலர் கூட வீட்டுப் பெண்டிர் வற்புறுத்தலால் மட்டுமே அதிகம் செல்கிறார்கள் என்றும் சொன்னார்.

‘சார்.. என்ன இப்படிச் சொல்லிட்டிங்க.. நித்யானந்தா மாதிரி எந்த குருசாமி எந்த ஊர்லேருந்து வந்தாலும் முதல்ல ஆதரவு கொடுக்கறது நீங்கதானே சார்..’

மறுபடியும் எனக்கு தெளிவு படுத்தினார் பிரும்மாஜி. ஆந்திரர்கள் இன்னமும் முழுமையாகப் படிப்பறிவு பெறவில்லை எனவும், பாதிக்கும் மேற்பட்டோர் மூடநம்பிக்கையில் கிடந்து மோசம் போகிறார்கள், இவர்களைக் காப்பாற்ற எங்களைப் போன்ற எழுத்தாளர்கள் எத்தனையோ முயற்சி செய்தும் இவர்கள் திருந்த முன்வரவே இல்லை..’ என ஆதங்கத்துடன் பேசினார்.

’தெலுங்கு எழுத்தாளர்களின் முன்னோடி ஸ்ரீ ஸ்ரீ அவர்கள் தான் சார். இவரும் புரட்சிகரமான கம்யூனிச எழுத்தாளர். சாகித்ய அகதமி விருது பெற்ற எழுத்தாளர்களில் பாதிப்பேர் புரட்சி சிந்தனை எழுத்தாளர்கள்தான்’ என்று சொல்லிய பிரும்மாஜி, சில விருது பெற்ற எழுத்தாளர்களின் பெயரைக் குறிப்பிட்டார்.

தெலுங்கு மக்கள் என்னவோ இத்தகையவர்களை ஆதரிக்கவில்லை, இவர்கள் புத்தகங்களையும் வாங்குவதில்லை என்று பிரும்மாஜி வருத்தப்பட்டாலும், தெலுங்கு வாசிப்பு என்பதே மக்களிடையே சுவாதி, ஜோதி (நம் குமுதம், விகடன் போல) என்ற வர்த்தகப் பத்திரிகைகள்தான் என்றும் சொன்னபோது, ’அட, இது எங்கள் ஊரிலும் இப்படித்தான்.. நாடெங்கும் தேசமெங்கும் இருக்கும் நிலைதானே சார்!,’ என்று அவரிடம் சொன்னேன்.

அவர் ஒப்புக் கொள்ளவில்லை. ’என்ன இருந்தாலும் தமிழர்களின் படிப்பறிவே தனி சார். அவர்கள் புத்தகங்களை மதிக்கத் தெரிந்தவர்கள். இங்கு புத்தகப்பதிப்பகங்கள் அவ்வளவாகக் கிடையாது. அப்படியே பதிப்பகங்கள் ஒவ்வொன்று கிடைத்தாலும் எழுத்தாளர் செலவு செய்தே பிரசுரிக்கவேண்டும். எழுத்தாளர் என்றால் அரசாங்கத்திடமோ, அல்லது பொது மக்களிடமோ எந்தவித மரியாதையும் கிடையாது. அதுவும் தெலுங்குப் புத்தக வாசிப்பு என்பதே கௌரவக் குறைச்சல் என்ற அளவுக்குப் போய்விட்டது சார்’ என் வருத்தப்பட்டார் பிரும்மாஜி.

‘உங்கள் நூலகங்கள் என்ன செய்கின்றன பிரும்மாஜி?’

’வெட்கக்கேடு, இந்த நூலகங்கள் பராமரிக்க இங்கே அரசாங்கம் ஒன்றும் செய்வதில்லை. அப்படியே ஒரு 200 நூலகங்கள் நாடெங்கும் இருந்தாலும் அவைகளில் புதிய தெலுங்குப் புத்தகங்கள் சேர்ப்பதுமில்லை. லைப்ரரி என்ற சொல்லே வேறு ஒரு புதிய அர்த்தத்துக்கு இப்போது வழி வகுத்துள்ளது’

‘என்ன சார் அது?’

’நாளிதழ், வார இதழ்கள் படிப்பதற்கும், விஞ்ஞானம் பற்றிய பழைய செய்திகள் பார்ப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன சார். ஆங்கில நூல்கள் அதுவும் பழைய நூல்கள் ஏராளமாகப் பார்க்கப்படுகின்றன.. தெலுங்கு மொழியை இதில் கூட சீண்டுவார் இல்லை. ஏனெனில் தெலுங்கு மொழியில் யார் என்ன பெரிதாக எழுதி இருக்கப்போகிறார்கள் என்ற மனப்போக்கு மக்களிடையே அதிகம்..’

உண்மையாகவே மனம் வேதனைப்படுகின்றது. பிரும்மாஜி கடந்த இரண்டு ஆண்டுகளாக தெலுங்கு மொழி சீரடைவது ஏன் என்ற ஆராய்ச்சி செய்து வருகிறாராம். இவர் இப்படியெல்லாம் ஒரு மொழியின் அழிவைப் பற்றிப் பேசும்போது அது கேட்க மிகவும் கஷ்டமாகத்தான் இருக்கின்றது.

’ஆனால் தெலுங்குக்கு உண்மை நிலை இன்று இதுதான் சார். நானே 20 புத்தகங்கள் எழுதி என் செலவில் அச்சடித்து வெளியுட்டுள்ளேன். ஆதரிப்பார் யாரும் இல்லை. இலவசமாக விநியோகித்து வருகிறேன் சார்” என்று பிரும்மாஜி வருத்தத்தோடு சொன்னார்.

’என்ன செய்தால் இந்த நிலை மாறலாம்’ என்ற ஆலோசனைகள் உங்களைப் போன்றோர் தரவேண்டும். நான் இப்படிப் பலரையும் சந்தித்துப் பேசி அவர்கள் ஆலோசனைகளைப் பதித்து வருகின்றேன்.. பிறகு இந்த ஆலோசனைகளை எடுத்துக்கொண்டு ஐதராபாத் வரை நான் செல்லத் தயார். ராஜதானியில் பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து ஏதாவது நம் மொழி வளர்ச்சிக்குச் செய்யவேண்டும் சார்.. நான் என் ஆராய்ச்சியின் முடிவுரையைத் தயார் நிலையில் வைத்திருக்கிறேன். அதே போல உங்கள் யோசனைகளையும் சொல்லுங்கள் சார்.. தமிழ் எழுத்தாளர்கள் நியாயமாகச் சொல்வார்கள் எனும் நம்பிக்கை எனக்கு உண்டு. என்னுடைய ஆய்வு முடிவுக் கட்டுரைக்கும் ரொம்பவும் உதவியாக இருக்கும், என்று பிரும்மாஜி கேட்டுக் கொண்டு போனவர், இரண்டு நாட்களாக வரவில்லை.

முதன் முதலில் தெலுங்கு மொழியில் நன்னய்யா எனும் பெருங்கவிஞர் மகாபாரதத்தை கவிதை நடையில் எழுதினார். நன்னய்யாவை தெலுங்கின் ஆதிகவி என்று சொல்வார்கள். அவருடைய பாரதத்தில் முதல் மூன்று வரிகளே மும்மூர்த்திகளை வணக்கம் சொல்லி பாடப்பட்ட முத்தான சமுஸ்க்ருத வரிகள். ஸ்ரீ, வாணி, கிரிஜா ஆகியோரை தங்களிடத்தே கொண்ட மும்மூர்த்திகளே, ஆதி தெய்வங்களே! இந்த உலகத்தை, ஆக்கி, காத்து, அழித்து, மறுபடியும் அருளும் பரப்பிரம்மத்தின் சொருபங்களே! எங்களை வாழ்த்துங்கள் என்று சொல்லி ஆரம்பிப்பார். பிறகு பாடப்பட்ட அனைத்துப் பாடல்களுமே தெலுங்கில்தான். (இவரால் மகாபாரதத்தை முழுமையாக எழுத முடியவில்லை. பின்னர் வந்த திக்கனா, எர்ரனா இருவரும் இந்த நூலை முடித்து வைத்தனர்)

நன்னய்யாவின் பாரதம் மிகவும் புகழ்பெற்ற நூல். இவர் எழுதிய காலம் சுமார் 1050 ஆம் ஆண்டாக இருக்கலாம் என்பது என் கணிப்பு. ஏனெனில் இவரின் இரண்டாவது பாடல், சோழப் பேரரசனான ராஜ ராஜ சோழனின் மருமகனான விமலாதித்தன் எனும் வேங்கி அரசனின் மகனான ராஜ ராஜ நரேந்திரன் (கி.பி.1022-1060) எனும் பெயருடைய அரசன் மீது பாடப்பட்டதாகும். (இவ்விவரங்களை நன்னய்யாவே தனது இரண்டாவது பாடலில் மிக மிகத் தெளிவாக எழுதியிருக்கிறார்) இதைக் கொண்டு பார்க்கும்போது ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பாடப்பட்ட தெலுங்கு நூல் இன்னமும் புகழ்பெற்று விளங்குகிறது ஏன் என்று இன்றைய தெலுங்கு எழுத்தாளர்கள் சிந்திக்கவாவது முயலவேண்டும்.

அடுத்து 15ஆம் நூற்றாண்டில் தெலுங்கு மொழியில் பாடப்பட்ட அன்னமய்யாவின் பாடல்கள், திருவேங்கடத்தான் மீது பாடப்பட்ட அற்புதமான நாவுக்கினிய கீதங்கள், பாமரனுக்கும் புரியக்கூடிய எளிய வரிகள், ஐந்நூறு வருடத்துக்கு முன் இயற்றப்பட்ட இவை இன்று பட்டி தொட்டியெங்கும் பரவத்தொடங்கி உள்ளதையும் இந்தக் கால எழுத்தாளர்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். ஸ்ரீகிருஷ்ணதேவராயரின் ‘ஆமுக்தமால்யதா’, அதே போலவே ராமதாசரின் கீதங்கள் கூட மக்களிடையே பிரபலம்தான்.

இன்றைய காலகட்டத்தில் அதுவும் இந்த ஒரு நூற்றாண்டில் எத்தனை தெலுங்கு நூல்கள் எழுதப்பட்டு சிறந்து விளங்கின என்று சில தெலுங்கு எழுத்தாளர்களிடம் கேட்டேன். எல்லோருமே ஸ்ரீரங்கம் ஸ்ரீனிவாசலு எனும் ஸ்ரீ ஸ்ரீ கவிதைகளைப் பற்றியே சொல்கிறார்களே தவிர, ஏனைய எழுத்தாளர்களைப் பற்றி தெரிந்துகொள்ள முயல்வதில்லை என்றே படுகிறது. எனக்குத் தெரிந்து ஜகன்னாத ராஜு எனும் நம் ராஜபாளையத்துக் காரர் பல தமிழ் நூல்களை தெலுங்கில் மொழி பெயர்த்துள்ளார். ஆனால் இன்றைய தெலுங்கு எழுத்தாளர்கள் அவைகளை சீண்டுவதில்லை என்பது வாஸ்தவமே. மக்களுக்கு எடுத்துச் சொல்லவும் யாருமில்லை என்பது கூட உண்மைதான். எண்டமூரி வீரேந்திரநாத் கதைகள் தெலுங்கில் ஒரு காலத்தில் மிக மிகப் பரவலாகப் பேசப்பட்டவை (தமிழில் சுஜாதா போல) ஆனால் இப்போது இவர் கூட ஒரு சபையில் பேசும்போது தன்னுடைய கதைகள் அவ்வளவாக விற்பதில்லை, ஆனால் பணம் சம்பாதிப்பது எப்படி என்று எழுதிய தன்னுடைய சிறிய நூல் ஒன்று லட்சம் பிரதிகள் விற்கிறது என்று ‘வருத்தத்துடன்’ குறிப்பிட்டார். ஆக இவரும் எழுத்தாளராக மிகவும் புகழ் பெற்றாலும், தெலுங்கில் புத்தகங்கள் வாங்குவதில்லை என்ற குறையை பகிரங்கமாகவே சொல்லி வருகிறார். தெலுங்கு இலக்கிய உலகம் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்பதை ஒரு அமைச்சரே சமீபத்தில் அரசாங்க நிகழ்ச்சியில் பேசியதை நானே கேட்டுள்ளேன். இப்படி எல்லோருமே கவலைப்படுவது போல முகத்தை சோகமாக்கிக் கொண்டு பேசி வருகிறார்களே தவிர உண்மையில் இவர்களுக்குத் தங்கள் மொழி வளர்க்கப்படவேண்டும் என்ற எண்ணம் உள்ளதா என்பதே சந்தேகமாகத்தான் இருக்கிறது.

நல்ல தரமான எழுத்துகளுக்கு, அது எந்த மொழியாக இருந்தாலும் சரி, நிச்சயம் தெய்வம் துணை நிற்கும். அரசாங்கம் உண்மையிலே கவலைப்பட்டால், அது முதலில் செய்யவேண்டிய வேலை ஊரெங்கும் நூலகங்கள் ஏற்படுத்தி தெலுங்கு நூல்களை ‘டப்பு’ செலவழித்து வாங்கவேண்டும். எல்லா தெலுங்கு நூல்களும் ஒவ்வொரு நூலகமும் கட்டாயம் வாங்கியே தீரவேண்டும் என்ற சட்டம் இயற்றப்படவேண்டும். இப்படி சட்டம் இயற்றப்படுவதால் ஒரு சில தீமைகளும் எழலாம். புற்றீசல் போல நெறியற்ற எழுத்துகள் நாடெங்கும் எழுதப்பட்டு, நூலகங்களுக்கு விற்கப்படும் வாய்ப்புகள் ஏற்படலாம். ஆனால் காலாகட்டத்தில் இவை தேய்ந்துதான் போகும்.

ஆனால் உயர்ந்த சிந்தனைகள், லட்சியங்கள், இலக்கிய ஆதாரங்கள், மண்ணின் வளம், பாரதத்தின் பண்டைய மேம்பாடு, என எழுத்துகள் வர ஆரம்பிக்கும்போது மொழி செழிப்பாக வளர நிச்சயம் வாய்ப்புண்டு. மேலே குறிப்பிட்ட விஷயங்கள் தங்கள் எழுத்தில் இன்றைய எழுத்தாளர்கள் கொண்டு வர வேண்டுமென்றால் இந்த விஷயங்களின் அடிப்படை உணர்ச்சியே தெய்வ நம்பிக்கை என்பதையும் இவர்கள் தெளியவேண்டும்.

விஜயநகரப் பேரரசு தென்னகமெங்கும் பரந்து விரிந்து கோலோச்சும் வேளையில் அதாவது சுமார் 200 வருடங்களுக்கு தெலுங்கு மொழியும் அரசவை மொழியாக கோலோச்சியது.தமிழகத்திலேயே தஞ்சை, மதுரை, காஞ்சியில் அப்போதெல்லாம் தெலுங்கு மொழிக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. தெலுங்கு மொழி பாடல் வகைகளுக்கேற்ற இனிய மொழி. நல்ல திரைப்படப் பாடல்கள் கூட இன்னமும் இனிய கீதமாக வேற்றுமொழிக்காரர்களால் கூட பாடமுடியும் அளவுக்கு இனிமை நிறைந்த மொழி. ஆனால் இம்மொழி மெல்ல மெல்ல மறைந்து வருகிறது..

‘கன்ஞ்சு ம்ரோகினட்டு கனகம்பு ம்ரோகுனா’ (வெண்கலம் கணீர் என கேட்பதைப் போல, தங்கத்தால் அப்படி முடியாதுதான், ஆனால் தங்கத்தின், அதன் தரத்தின் முன்னே வெண்கலம் நிற்குமா) என்று ’வேமனா’ எனும் பெரும் புலவர் தெலுங்கில் கேட்பார். தாய்மொழி தங்கம் போன்றது என்பதை எப்படி மக்களிடையே எடுத்துச் சொல்வது?

பிரும்மாஜி போன்றோர் கவலைகள் கவனிக்கப்படவேண்டியவை. மிகவும் ‘சீரியஸ்’ ஆக கவனிக்கப்படவேண்டியவை. மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லாத நிலையில் ஒரு மொழியை தெலுங்கு எழுத்தாளர்களான இவர்கள் வைத்திருக்கக்கூடாது. சமீபத்தில் ‘யுனெஸ்கோ’ அறிக்கையில், வருங்காலத்தில் மறைந்து போகும் உலக மொழிகளில் தெலுங்கும் ஒன்று என்று வந்துள்ளதாக சொல்கிறார்கள். இது உண்மையென்றால் நிச்சயம் நிலைமை கவலைக்கிடம்தான். தெலுங்கு மொழியைக் கடவுள்தான் காப்பாற்றவேண்டும்..

இப்படி (கடவுள்தான் காப்பாற்றவேண்டும்) நான் பிரும்மாஜியிடம் சொன்னால் அவர் ஏற்றுக் கொள்வாரோ என்னவோ தெரியாது.. இருந்தாலும் சொல்லிவிடவேண்டியதுதான்.. ஏற்கனவே சொன்னேன், பிரும்மாஜி இரண்டு நாட்களாகக் காணவில்லை என்று.. வரட்டும்.. சொல்லிவிடலாம்..

15 comments:

  1. திவாகர்,

    "சமீபத்தில் ‘யுனெஸ்கோ’ அறிக்கையில், வருங்காலத்தில் மறைந்து போகும் உலக மொழிகளில் தெலுங்கும் ஒன்று என்று வந்துள்ளதாக சொல்கிறார்கள்."

    அது உண்மையல்ல. அப்படிச் சொல்லப்படவில்லை. நான் யுனெஸ்கோ ரிப்போர்ட் படித்துள்ளேன். தமிழைப் பற்றியும் அப்படித்தான் புரளி கிளப்பி இப்போது கொஞ்சம் அடங்கியுள்ளது.

    தியாகராஜர் கிருதிகளை ஆந்திரர்கள் எப்படி மதிக்கிறார்கள்? அதை அவர்கள் தெலுங்கு இலக்கியமாக மதிப்பதுண்டா?

    ரெ.கா.

    ReplyDelete
  2. தெலுங்கு இலக்கியம் பற்றி அவ்வளவாய்த் தெரியாது. எண்டமூரியின் கதைகளின் தமிழாக்கமும், பாநுமதி ராமகிருஷ்ணாவின் அத்தகாரு தமிழாக்கமும் படிச்சது தவிர. ஆனாலும் மொழி அழிந்து போகும்னு எல்லாம் தோணலை. உலகிலேயே அதிகம் பேசப்படும் மொழிகளுள் ஒன்று தெலுங்கு. அதெல்லாம் அழிய விடமாட்டார்கள், சமீபத்தில் தமிழ் மொழிதான் அழியப் போறதுனு எல்லாக் குழுமத்திலும் விவாதம் நடந்தது. இதெல்லாம் அப்போதைய சென்சேஷனல் நியூஸ்னு விட வேண்டிய ஒன்றே.

    ReplyDelete
  3. இந்தியாவிலேயே இந்திக்கு அடுத்து அதிகமாகப் பேசப்படும் மொழி எனத் தசாவதாரத்தில் பல்ராம் நாயுடு கூறியது நினைவுக்கு வருகிறது. தெலுங்கர்களுக்கு இவ்வளவு மொழிப் பற்று இருக்கையில் பிரும்மாஜி சொல்வது வேறு கோணம்.

    தெலுங்கு நூல்களை ‘டப்பு’ செலவழித்து வாங்கவேண்டும் என்பது முழுமையான தீர்வு ஆகாது. மக்களுக்கு ஏற்ற வகையில் புத்தகங்கள் எழுதப்படுகிறதா என ஆராய வேண்டும்.

    சிரஞ்சீவி, விஜயசாந்தி.... என நட்சத்திரங்கள் புத்தகங்களை எழுதினால் நிறைய விற்கக்கூடும். பொதுவாக, பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள் எனக் கவனிக்கும் ஆர்வம் மக்களிடம் உண்டு. அல்லது, எழுத்தாளர்கள் பிரபலம் அடைவதற்கு ஏதாவது 'அதிரடி' வேலைகளில் ஈடுபட்டால் உடனடிப் பயன் கிட்டும்.

    ReplyDelete
  4. இக்கரைக்கு அக்கரை பச்சை!

    பொதுவாகவே புத்தகம் படிக்கும் பழக்கம் மெல்ல ஆரம்பித்து, இப்போது வேகமாகவே குறைய ஆரம்பித்து விட்டது. புத்தகங்கள் பக்கம் போக ஒட்டாமல் சினிமாவும், மெகா சீரியல்களும், வேறு விதமான கேளிக்கை வடிவங்களும் செய்து விட்டன என்றே சொல்ல வேண்டும். மெகா சீரியல்களிலேயே மூழ்கி மூசு மூசென்று அழுது வடிந்து கொண்டிருப்பவர்களுக்குப் புத்தகம் படிப்பதற்கு நேரம் தான் ஏது?இதில் தெலுங்கு, தமிழ், கன்னடம் என்று தனித்துச் சொல்ல முடியாது. கேரளாவில் நிலை சற்றே மாறுபட்டிருப்பதாக என்னுடைய நண்பர்கள் வழியாக அறிகிறேன்.

    அரசின் தயவை எதிர்பார்த்து நிற்பதை விட, புத்தகம் படிக்கும் பழக்கத்தை சிறுவயதில் இருந்தே பெற்றோர்கள் ஊக்குவிப்பது ஒன்று தான் நல்ல வழி!மேல்நாடுகளில் பதிப்பாளர்கள் ஒன்று சேர்ந்து புத்தக தினம் என்று கொண்டாடுகிறார்கள். குழந்தைகளுக்கான புத்தகங்களைக் கட்டுப் படியாகக் கூடிய விலையில் அறிமுகப் படுத்துகிறார்கள்.

    இங்கே சென்னையில் கூட சில ஆண்டுகளாக, பதிப்பாளர்கள் கூடி புத்தகக் கண்காட்சி நடத்துவதில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் புத்தகங்கள் விற்பனையாகிக் கொண்டு தான் இருக்கின்றன. வாங்கின அளவுக்குப் படித்தார்களா என்ற சந்தேகம் எனக்கு நிறையவே உண்டு.

    சேத் கோடின் தன்னுடைய இந்தப் பதிவில் ஒரு அருமையான வழியைச் சொல்கிறார் பாருங்கள்!

    http://sethgodin.typepad.com/seths_blog/2010/04/empty-your-library.html

    ReplyDelete
  5. i think ebooks are the way forward. govt should invest in paying authors for their works ( old ones - say 10 years old - no longer viable to reprint) - and release eversions

    rgds
    vj

    ReplyDelete
  6. // உயர்ந்த சிந்தனைகள், லட்சியங்கள், இலக்கிய ஆதாரங்கள், மண்ணின் வளம், பாரதத்தின் பண்டைய மேம்பாடு, என எழுத்துகள் வர ஆரம்பிக்கும்போது மொழி செழிப்பாக வளர நிச்சயம் வாய்ப்புண்டு. //

    உண்மைதான். ஆனால் பேசும் மொழியாக சுந்தரத்தெலுங்கு ஒரு போதும் அழியாது என்பது ஆறுதல்.

    எங்கள் கெடாவில்(கடாரம்) தெலுங்கு மொழி பேசுபவர்கள் நிறைய இருக்கிறார்கள்.அவர்கள் பொதுவில் என்னதான் மலாய் மொழியிலோ ஆங்கிலத்திலோ பேசினாலும் அவர்களுக்குள்
    தங்களின் தாய்மொழியில்த்தான் பேசிக்கொள் கிறார்கள்.

    இங்கு வானொலி,தொலைக்காட்சிகளில்
    கூட அதற்கென்று நேரம் ஒதுக்கி தினமும் பாடல்கள்,படங்கள் இசை நிகழ்ச்சிகள்,
    விசேஷ தினங்களில் அதற்கான உள்ளூர் தயாரிப்புகள் என தெலுங்கு மொழி அமர்களப்படும்!இது என்றும் தொடரும்.

    கீதாஜீ சொல்வதுபோல் எனக்கும் தெலுங்கு இலக்கியம் பற்றி ஒன்றும் தெரியாது.

    ReplyDelete
  7. >>தியாகராஜர் கிருதிகளை ஆந்திரர்கள் எப்படி மதிக்கிறார்கள்? அதை அவர்கள் தெலுங்கு இலக்கியமாக மதிப்பதுண்டா?<<

    ரெ.கா! விவரங்களுக்கு நன்றி!

    தெலுங்கு இலக்கியமாக தியாகையா கீர்த்தனைகள் இங்கு பார்க்கப்படுவதில்லை. ஒரு சிலரால் மட்டுமே இந்த சங்கீத கீர்த்தனைகள் இன்னமும் அழியாமல் பாதுகாக்கப்படுகின்றன.
    இந்த விஷயத்தில் பழைய தெலுங்கு சினிமாக்கள் சில நல்ல சேவைகளைப் புரிந்ததால், அதனை இக்கால தொலைக்காட்சிகள் அவ்வப்போது பாடல் போட்டிகளில் காண்பிக்கும்போது செவிக்கு இனிமையாக உணர்கிறார்கள். அவ்வளவுதான்.

    ReplyDelete
  8. >>ஆனாலும் மொழி அழிந்து போகும்னு எல்லாம் தோணலை. உலகிலேயே அதிகம் பேசப்படும் மொழிகளுள் ஒன்று தெலுங்கு. அதெல்லாம் அழிய விடமாட்டார்கள்<<

    கீதாம்மா,
    தெலுங்கு மொழி பேசிக்கொண்டிருக்கும் மாநிலத்திலிருந்து எழுதுகிறேன். பேசப்படும் மொழி எனப் பார்த்தால் உங்கள் கருத்து ஓ.கே. தமிழ்நாட்டில் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமாக தெலுங்கு பேசுவோர் உண்டு. இதற்கும் எழுத்து வளர்ச்சிக்கும் என்ன சம்பந்தம்? இங்குள்ள மக்கள் தெலுங்கு மொழி வளர்ச்சிக்கு ஆதரவு கொடுப்பதில்லை என்பது கண்கூடு. தெலுங்கு இனம் வேறு.. மொழி வளர்ப்பது வேறு.. இங்குள்ள எழுத்தாளர் கணிப்பே, அந்த எழுத்துகள் மக்களிடையே செல்வதில்லையே என்ற பெரிய ஆதங்கம்தானே..

    அண்ணா கண்ணன் எழுதியதைப் படியுங்கள். ஒரு வேளை அப்படியாவது செய்யலாம் என்றுதான் தோன்றுகிறது..

    ReplyDelete
  9. அண்ணா கண்ணன்! உங்கள் கணிப்பு சரிதான்.

    ஆனால் அரசாங்கம் நூல்களை வாங்குவதில்லை என்ற பெரிய குறை இங்கு எழுத்தாளர்களிடையே உள்ளது.

    ReplyDelete
  10. >>புத்தகங்கள் பக்கம் போக ஒட்டாமல் சினிமாவும், மெகா சீரியல்களும், வேறு விதமான கேளிக்கை வடிவங்களும் செய்து விட்டன என்றே சொல்ல வேண்டும். மெகா சீரியல்களிலேயே மூழ்கி மூசு மூசென்று அழுது வடிந்து கொண்டிருப்பவர்களுக்குப் புத்தகம் படிப்பதற்கு நேரம் தான் ஏது?<<

    இது எந்த பாஷைக்கு பொருந்துமோ இல்லையோ, தெலுங்குக்கு பொருந்தும் சார்.

    ReplyDelete
  11. மீனாம்மா!
    ஊம்ஹூம்! பேசும்மொழியாக ஒரு மொழி நீடிப்பதில் என்ன பெருமை? இதே ஆந்திரத்தில் இப்படி பேசும் மொழிகளாக, அதாவது மண்ணின் மொழிகளாகவே நான்கு மொழிகள் உள்ளன. ஒரு சில குடும்ப மொழிகளாக சில நூறு ஆண்டுகளாக இவை இருப்பதாகச் சொல்கிறார்கள். துளு போன்ற மொழிகள் இன்னமும் பேசு மொழியாக பல நூற்றாண்டுகள் அப்படியே உள்ளன. மொழி வளமை என்பது எழுத்தினால் மட்டுமே சாதிக்கமுடியும்.

    ஒரு விஷயம் சொல்ல விழைகிறேன். தெலுங்கு 5, 6ஆம் நூற்றாண்டில் மொழி வடிவம் பெற்று பிறகு அழிந்துவிட்டது (மொழிவடிவத்தை). நன்னய்யா என்கிற ஆதிகவி கூட தெலுங்கு மொழியை சமுஸ்கிருதத்தில் லிபி வடிவில் எழுதியதாக வரலாறு சொல்கிறது. பிற்காலத்தில் அதாவது 300 ஆண்டுகள் கழித்துதான் நன்னய்யாவில் பாரதத்தை, திக்கனா, எர்ர பிரகடா இருவரும் தெலுங்கில் லிபி வடிவில் எழுதியதாக வரலாறு உண்டு. இன்னமும் 11ஆம் நூற்றாண்டு தெலுங்கு கல்வெட்டுகள் சமுஸ்கிருத லிபியிதான் வரையப்பட்டுள்ளன.

    நிச்சயமாக எழுத்துகள் மட்டுமே ஒரு மொழிக்கு வளம் சேர்க்கும். பேசுமொழியை வைத்துக் கொண்டு என்ன செய்வது? சொல்லுங்கள் தாயே!

    ReplyDelete
  12. நூலகங்களுக்காக அரசு புத்தகங்களை வாங்குவது என்பது ஒரு குறைந்தபட்ச உத்தரவாதம் தான்! முன்னாட்களில் தமிழ் நாட்டு அனுபவத்தோடு ஒப்பிடும் போது, மிகவும் மனச் சோர்வை அளிப்பதும் கூட!

    கேரளாவில்இருந்தது போல எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கங்கள், தானே பதிப்பித்து, விற்பனையையும் வெகு ஜன இயக்கமாக நடத்திய மாதிரி, மக்களிடம் கட்டுபடியாகக் கூடிய விலையில் கொண்டு போவது ஒரு வழி.

    சேத் கோடின் பதிவில் சொன்னது போல (லிங்க் முந்தைய பின்னூட்டத்தில் இருக்கிறது) நீங்கள் வாசித்து முடித்த ஒரு நூலை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து படிக்கக் கொடுங்கள், உங்கள் நூலகத்தைக் காலி செய்யுங்கள் என்று வாசிக்கும் வழக்கம் உள்ளவர்கள், வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் இயக்கமாக நடத்துவது இன்னொரு வழி.

    எல்லாவற்றுக்கும் மேலாக, எழுத்தாளன், சமுதாயப் பிரக்ஞையோடு எழுதுவது, ஜனங்களுக்காக எழுதுவது என்பது மிகவும் முக்கியம்! இங்கே நா.பார்த்தசாரதி, அகிலன் போன்றவர்கள் எழுதியபோது, அதைப் படித்த அத்தனைபேரும், எழுத்தாளருடைய தார்மீக ஆவேசத்தில் பங்கு கொண்டார்களே அந்த மாதிரி!

    ReplyDelete
  13. I think the main reson of Tamil litt. flourshing in T.N. is because, the past and present CM s are themselves very good speakers and writers in Tamil. They knew the language well and wanted to propagate it. The government of TN buys books for its library in thousands. It is the main responsible of the govt. to make the language and writers to flourish. Having said that, the writers also should not leave the total responsibility to the Govt. It should create a forum, meet the relevent people and do the needful for the upliftment.

    If it is done, then the support of other language writiers will always be there.

    Long live Telugu litterature

    ReplyDelete
  14. திவாகர்,
    நான விசாகையில் இருந்த போது எனது வீட்டிலேயே எழுத்தாளர்கள் கூட்டம் ஒன்றை நடத்தினேன். நல்ல எழுத்தாளர்கள் வந்திருந்தனர். எனது நெருங்கிய இலக்கிய நண்பர் வாகாடி பாண்டுரங்கராவ், பராகோ, கோசனா, முதலியோர் வந்திருந்தனர். வாகாடி சாஹித்ய அகாதமிக்குப் பல தமிழ் நூல்களை தெலுங்கில் மொழிபெயர்த்தவர். என்னுடைய கதைகளைக் கூடத் தெலுங்கில் மொழிபெயர்த்தவர்.
    இக்கூட்டம் நடந்தது 80களின் ஆரம்பத்தில். அப்போது சினிமாவில் தடம் வைத்திருந்த மிஸ்ரோவும் இருந்தார். (நினைத்தாலே இனிக்கும் படம்) நான் கூட்டம் ஆரம்பிக்கு முன்னர் டி. ஆர். மஹாலிங்கம் பாடிய பாரதி பாடல்களை எல். பி. ரெகார்ட் போட்டுக் காட்டியபோது அக்குரலை எல்லோரும் ரசித்தனர். பின்னர் கூட்டத்தில் கடவுள் பற்றிய சர்ச்சை எழுந்தது. தெலுங்கு எழுத்தாளர்களில் பலர் நாஸ்திகர்கள் என்பது அப்போது தான் தெரிந்தது. ரா வி (ரா. விசுவநாத சாஸ்திரி)யும் (தமிழில் அற்பஜீவி - வாசகர் வட்டம்) அவ்வழி நினைப்பவர்! அதிகமானவர்கள் பிராமணர்கள்! ஆச்சர்யமாக இருந்தது! தெளிவான சிந்தனை!
    அவர்கள் சொன்ன அன்றைய கருத்துகளும் கிட்டத்தட்ட உங்கள் நண்பர் பிரம்மாஜி போன்றது தான்!
    நரசய்யா

    ReplyDelete