Friday, November 6, 2009

தண்ணீர் தண்ணீர்




இந்தியாவில் பொதுவாகவே நதிநீர்ச் செல்வம் என்பது மிக அதிகமாக ‘வெள்ளம்’ போல நிறைந்து காணப்படுவதுதான் பெரிய விசேஷம். ஆனால் இருக்கும் செல்வத்தை எப்படி உபயோகிப்பது என்பது மட்டும் நன்றாகவே நமக்குத் தெரிந்தாலும் நாம் செய்யமாட்டோம். உலகில் நாம்தான் தனி மனித வகை ஆயிற்றே!

பொதுவாகவே ஆந்திரம் மற்றும் தமிழ்நாடு இவை இரண்டுமே வண்டல் மண் நிறைந்த வளநாடாகவே பழங்காலந்தொட்டு இருந்துவருகிறது. தஞ்சையை தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று நாம் அழைத்துக் கொள்கிறோம். ஆனால் தஞ்சை மண்டலத்தை விட மிகச் செழிப்பாக உள்ள இடங்கள் ஆந்திராவெங்கும் மண்டிக் கிடக்கின்றன என்றே சொல்லவேண்டும். தெற்கே நெல்லூரிலிருந்து வடக்கே ஸ்ரீகாகுளம் வரைக்கும் இந்த வண்டல் மண் பிரதேசங்கள் உள்ள அளவுக்கு வேறு எந்த மாநிலத்திலாவது இருக்குமா என்ற சந்தேகம் கூட வரலாம். அந்த அளவுக்கு, நதிகள் மேற்கிலிருந்து மலைப் பிரதேசங்களில் உள்ள கனிமச் சாறு செல்வங்களையெல்லாம் அப்படியே அள்ளிக் கொட்டுகின்றன.

சர்க்கார் எக்ஸ்பிரஸ் என்ற ஒரு ரயில், சென்னையிலிருந்து தினம் காகிநாடாவுக்குக் கிளம்பித் திரும்பி வரும். அப்படி திரும்பி வரும் சமயத்தில் யாராவது அந்த வண்டியில் பயணம் செய்தால் பிற்பகல் பொழுது முழுவதும் பொழுது போவதே தெரியாது. அந்த வண்டி மெதுவாகச் சென்றாலும், வேகமாக சென்றாலும் அதைப் பற்றிக் கவலை கொள்ளாமல் சன்னல் வழியே சுற்றுப் புறத்தைச் சுற்றிப் பாருங்கள். நீங்கள் பார்க்கவில்லையென்றாலும் பார்க்க வைத்து விடும். அப்படி எங்கே பார்த்தாலும் பச்சை பசேலென செழுத்து வளரும் நெல்லையும் கரும்புகளையும் சீசனே இல்லாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வரலாம். கண்ணுக்கும் மனதுக்கும் இனிமையான இயற்கை சூழ்நிலை. அதுவும் கோதாவரி இரண்டாகப் பிரிந்து சற்றே விரிவான பிரதேசத்தில் பாய்வதால் பச்சைப் பசேலுக்கு எங்குமே குறைவிருக்காது.

ஆந்திராவில் இரண்டு பெரிய நதிகளான கோதாவரியும் கிருஷ்ணையையும் தவிர துங்கபத்திரா, வடபெண்ணை, வம்சதாரா போன்ற அகல நதிகளும் உண்டு. அகல நதிகள் என்று குறிப்பிடுவதற்குக் காரணம், அவை பெரிய நதிகள் என்று சொல்ல முடியாவிட்டாலும், அவற்றின் அகலத் தன்மையும் பாயும் அதிக அளவு நீரும் ஆந்திராவுக்கு மிகப் பெரிய பயனைத் தருகின்றன என்றே சொல்லலாம்.




ஆந்திராவை ஏறத்தாழ பாதியாகப் பிரித்துக் கொண்டு கிருஷ்ணை நதி (படத்தில் உள்ள மஞ்சள் கோடு) செல்லுவதைக் காணும்போது, ஆகா, இப்படி ஒரு நதியா என்ற ஆச்சரியம் தோன்றும். நம் காவிரியும் தமிழகத்தைப் பாதியாகப் பிரித்துக் காட்டும் நதிதான் என்றாலும் ஒரு சில இடங்களைத் தவிர மற்ற இடங்களில் நம் காவிரி சற்றுக் குறுகல்தான். மேலும் காவிரியில் ஓடி வரும் தண்ணீரும், கிருஷ்ணையில் ஓடி வரும் தண்ணீரின் அளவையும் ஒப்பிட முடியாது, ஏனெனில், காவிரி குளம் என்றால் கிருஷ்ணை கடல். சீஸன் காலங்களிம் கிருஷ்ணை எங்கும் பொங்கி வழியும் காட்சியை இன்னமும் காணலாம். காவிரியை அப்படியெல்லாம் பார்த்து எத்தனையோ வருடங்கள் ஆயிற்று. சரி, பாதியாகப் பிரித்துச் செல்லும் கிருஷ்ணையில் ஆந்திரர்கள் மிகப் பெரிய இரண்டு அணைகள் கட்டித் தடுத்துள்ளார்கள் (ஸ்ரீசைலம், நாகார்ஜுனசாகர்) என்பது ஒரு சின்ன விஷயம் என்றாலும் இந்த அணைகளை எல்லாம் சாப்பிட்டு கீழே உள்ள பகுதிகளையெல்லாம் ஜலமயம் செய்து வீணாகக் கடலில் கலக்கும் தண்ணீரின் அளவு ஒப்பீட்டு நோக்கில் பார்த்தால் மிக மிக அதிகம். இது போல காவிரியில் தண்ணீர் வீணாகக் கடலில் கலக்க அவ்வளவாக வாய்ப்பில்லை.

கிருஷ்ணை இப்படியென்றால் அந்த நதிக்கு வடக்கே சற்றுத் தொலைவில் ஆந்திராவில் வடக்கு எல்லைக் கோடாக வியாபித்து ஒரு கடலளவு நீரை கையோடு கொண்டுவரும் கோதாவரியைப் பற்றி சொல்லவேண்டிய அவசியமே இல்லை. கிருஷ்ணையின் பயன்பாடு ஆந்திராவின் தெற்கே என்றால் கோதாவரி மற்ற பகுதிகளையெல்லாம் பார்த்துக் கொள்கிறது. இப்படி ஆந்திரா முழுமைக்கும் செல்வம் கொடுக்கும் நதிகள் இவை இரண்டும்.

ஆனால் இப்படிப் பயன் தரும் நதிகள் எத்தனைதான் அழகாகவும் அகலமாகவும் ஆர்ப்பரித்து ஓடி வந்து அற்புதமான வண்டல்மண்ணை வாரி இறைத்தாலும் அவ்வப்போது இந்த நதிகள் மூலம் ஏற்படும் அழிவையும் சொல்லி மாளாதுதான். இந்த நதிகள் மூலம் ஏற்படும் இழப்புக்கு இயற்கையின் மீது பழியைப் போட்டுத் தப்பிக்கவே விரும்புகிறார்கள் நம் ஆட்சியாளர்கள். ஆனால் ஒவ்வொரு வருடமும் நடக்கும் இந்த அழிவை எப்படித் தடுக்கலாம் என்று யோசிக்கவே மாட்டார்கள். ஒவ்வொரு முறையும் கோதாவரி ஜூலை மாதத்தில் பொங்கி வழிந்து கீழை மாவட்டங்கள் நஷ்டமடைவதும், கிருஷ்ணையோ சற்று தாமதமாகப் பொங்கிக் கொண்டு வந்து ஆந்திராவைப் பயமுறுத்திப் போவதை ஓவ்வொரு வருடமும் நீலிக் கண்ணிரோடு பார்த்துக் கொண்டே இருப்பார்கள். அது அழித்து விட்டுப் போனபிறகு வரும் நஷ்டத்துக்கு ஒரு கணக்குப் போட்டு அதையும் ஸ்வாஹா செய்து விடுவதே வழக்கமாகிக் கொண்டிருப்பவரிடம் நஷ்டப்படும் பொது ஜனம் என்னதான் எதிர்பார்க்கமுடியும். ஒரு சின்னக் கணக்கு விவரம் பார்த்தோமானால் கிருஷ்ணாவில் இந்த அக்டோபர் முதல் வாரம் மட்டுமே கடலுக்குள் போன தண்ணீரின் அளவு சுமார் 400 டி.எம்.சி கொள்ளளவு. கோதாவரியிலிருந்து வருடத்துக்கு ஏறத்தாழ 600 டி.எம்.சி கொள்ளளவு என்றால் நதிநீர் எத்தகைய பெரிய அளவில் வீணடிக்கப்படுகிறது என்று பாருங்கள்.

இப்படித்தான் அக்டோபர் முதல்வாரத்தில் கிருஷ்ணா நதியில் வந்த வெள்ளமும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட அழிவுகளும். ஒவ்வொரு வருடமும் ஏற்படும் நஷ்டத்தை விட இந்த முறை சற்று அதிகமாகவே ஏற்பட்டுவிட்டது. இதற்குக் காரணம் இரண்டு. ஒன்று அணைகளின் கட்டுப்பாட்டைச் சரியான முறைகளில் கண்காணிக்காத அதிகாரவர்க்கம், இரண்டு, எதையும் அலட்சியப்படுத்தும் அரசாங்கம்.

அணைகளில், அதுவும் குறிப்பாக நீர்மின்சார உலைகளைக் கொண்ட அணைகள் எப்போதும் ஒரு குறிப்பிட்ட அளவு நீர் கையிருப்பு வைத்திருக்கவேண்டும். அப்படி வைத்திருந்தால்தான் மின்சாரம் தயாரிக்கமுடியும். அப்படி தயாரிக்கும்போது வெளியே விடப்படும் நீர் அவ்வளவு அதிகமாக இருக்காது. இதனால் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இந்த இஞ்சினீயர்கள் இருக்கவேண்டும். ஆனால் தேசம் முழுவதும் இந்த முறை மழைப் பொய்த்துவிட்டது, இனிமேல் மழையெல்லாம் வர வாய்ப்பில்லை எனக் கருதினார்களோ என்னவோ, அளவுக்கு அதிகமாகவே அணைகளில் நீரைச் சேமித்து வைத்திருந்தனர். சரி, நல்ல முன்யோசனைதான். ஆனால் மேலே, மேற்கே மலைச் சரிவுகளில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழையாமே.. அந்த மழைநீர்தானே வெள்ளமாய் திரண்டு சில நாட்களில் நம் அணை மீதும் பாயும்.. அதுவரை ஏன் காத்திருக்கவேண்டும் என்று அணையில் மிதமிஞ்சிய அளவில் உள்ள நீரை முன்கூட்டியே, அதாவது நான்கு நாட்கள் முன்னதாகவே கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றி இருந்தால், அந்த இஞ்சினீயர்கள் சிறந்த முறையில் யோசித்து செயல்படுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் அந்த மலைப் பிரதேச மழையெல்லாம், சும்மா, ஜூஜூபி.. அப்படியே அதிகநீர் வந்தாலும் கர்நாடகத்திலே இருக்கும் இரண்டு பெரிய ராட்சத அணைகளில் வாங்கிக் கொள்வார்கள். அந்த ராட்ச்சர்கள் சாப்பிட்டு ஏப்பம் விட்டு மீந்ததைத்தான் கீழே நமக்கு அனுப்புவார்கள். அப்படி ஏதாவது கொஞ்சம் வந்தால் அப்போது திறந்துவிட்டால் போயிற்று, என்று அலட்சியமாக இருந்ததனால், ஏற்பட்ட நஷ்டம் ஏறத்தாழ 12 ஆயிரம் கோடி ரூபாயாக கணக்கிடப்பட்டுள்ளது. இது பயிர் நஷ்டம், சாலை நஷ்டம், வீடு வாசல் நஷ்டமாக இருந்தால் கூட பரவாயில்லை. நூற்றுக்கணக்கான மக்கள், ஆயிரக்கணக்கில் கால்நடைகள் வேறு உயிரை இழந்திருக்கிறார்கள். எங்கே கொண்டு இவர்களைப் பற்றிய குறைகளை சொல்லி அழுவது.. இங்கேயும் ஒரு சின்ன கணக்கு. ஸ்ரீசைலம் அணையின் மொத்த தண்ணீர் உயரம் சுமார் 895 அடிகள் என்றால் இந்த வெள்ளம் வருவதற்கு முன்னமேயே சுமார் 876 அடி வரை தண்ணீரை சேமித்து வைத்திருந்தார்கள். அதற்கும் கீழே உள்ள நாகார்ஜுன சாகர் அணையின் உயரம் சுமார் 580 அடி உயரம். அங்கும் தேவைப்பட்டதற்கு அதிகமாகவே சேமித்து வைத்திருந்தார்கள்.

கடைசியில் நிஜமாகவே புலி வந்தபோது முழித்துக் கொண்டாலும் என்ன பலன்.. அணைகளால் ஓடிவரும் தண்ணீரை வாங்கமுடியவில்லை.. பின்னோக்கி நீர் தள்ளப்பட்டதால் அங்கே கிடந்த கர்நூல் நகரம் முதற்கொண்டு வெள்ளக்காடு. அடடே, அணைகளைத் திறந்துவிடுங்கள் என்று அரசாங்கம் கட்டளையிட்டவுடன், ஒரேயடியாக லட்சக் கணக்கு க்யூசெக்ட்டில் (10 லட்சத்துக்கும் மேல்) திறந்து கீழே வரும்போது கிருஷ்ணையால் பயன்பட்ட அத்தனை கீழை மாவட்டங்களும் பலியாகிப் போகிறது. இத்தனைக்கும் மேலே அணைகளில் திறந்துவிடப்பட்ட வெள்ளநீர் கீழே விஜயவாடா தாண்ட எடுத்துக் கொள்ளும் கால அவகாசத்திலாவது சில முன்னேற்பாடுகள் செய்திருக்கலாம். ஏதோ பேருக்கு ஒரு வேனில் எல்லோரும் காலிசெய்யுங்கள் என்ற கூப்பாடு ஒன்று போட்டார்கள். அவ்வளவுதான். அப்படி காலிசெய்தவர்கள் எங்கு போவார்கள். அப்படிப் போனால் அவர்களுக்கு என்ன வசதி.. ஊம்ஹூம்..

இத்தனை மத்தியிலும் இந்த டி.வி. மீடியாக்கள் பயமுறுத்தும் கூத்து இன்னொரு வேதனை.. இதோ வெள்ளம், இந்த நகரம் தண்ணீரில் மூழ்கியாகிவிட்டது.. என்பதைப் போல பயமுறுத்தல் மணிக்கொருதரம் வந்துகொண்டே இருக்கும். கிரிக்கெட் ஸ்கோர் கேட்பது போல வெள்ளம் வராத ஊர்களில் உள்ள மக்கள் எந்த ஊர் வெள்ளத்தில் எப்போது மாட்டிக் கொண்டது என்பதாகக் கேட்கும் நிலையைக் கூட உருவாக்கிவிட்டார்கள் இவர்கள்.

அதுவும் இந்த வெள்ளம் வந்தவுடன் அரசாங்க யந்திரம் என்ற ஒன்று செயல்படும் விதம் பார்க்கவேண்டுமே.. வெட்கக் கேடாக முழித்துக் கொண்டு வேடிக்கைப் பார்க்கத் தெரியும் இல்லாவிட்டால் சட்டத்தின் எழுத்துக்களைக் காட்டி மற்றவர் கொடுக்கும் உதவிகளை தடை செய்யத் தெரியும். வெள்ள காலம் மட்டுமல்ல, இயற்கையின் சீற்றங்களுக்கு மக்கள் பலி ஆகும் காலமெல்லாம் உதவி என்று சொன்னால், ராமகிருஷ்ணா மடம், ரெட் கிராஸ் போன்ற பொது அமைப்புகள்தாம் முன்வந்து உதவி செய்கின்றனவே தவிர அரசாங்கம் என்பது இருக்கிறதா என்ன என்பதைப் போலவே இந்த அதிகாரிகள் நடந்துகொள்வர்.

நதிநீர்ச் செல்வம் எத்தனை இன்றியமையாததோ அத்தனை செல்வத்தையும் ஒழுங்காகப் பாதுகாத்துப் பராமரித்துப் பயன்படுத்திக் கொள்வதும் மிக மிக முக்கியம். ஒரு பெரிய மாநிலமே செல்வச் செழிப்பாக இருக்கவேண்டிய அளவுக்கு ஆந்திரம் இத்தனை நாட்களில் வளம் பெற்றிருக்கவேண்டும். எல்லா நதிகளையும் இணைத்து குறுக்காகக் கால்வாய்கள் ஏற்படுத்துவோம் (கட்டுமானப் பணிகள் எல்லாமே பலவீனமானவை என்று நிபுணர்கள் சொல்வதையும் சேர்த்து) என்று அரைகுறையாகவே இதுநாள் வரைச் செய்தார்களே தவிர உருப்படியாக என்ன செய்தார்கள் என்று கேட்கத் தோன்றுகிறது. அப்படி உருப்படியாக செய்திருந்தால், சென்னைக்குப் போடப் பட்டிருந்த தெலுங்குக் கங்கைக் கால்வாய் மிக அகலமாக விரிவு படுத்தப்பட்டு இந்த வெள்ள காலத்தில் சென்னை மட்டுமல்ல வட தமிழ்நாட்டுக்கே அல்லவா பயன் பட்டிருக்கும். தண்ணீருக்கு இப்போதும் தவிக்கும் தென்புலத்தாருக்கு தண்ணீர் ஊற்றிய பெருமை வந்துவிடுமே.. இத்தனைக்கும் ஒரு 15 டி..எம்.சி. தண்ணீர் மட்டுமே சென்னைக்குத் தருவதாக ஒப்பந்தம் வேறு ஒன்று உண்டு. இதையும் ஒழுங்காகத் தருவதில்லை. காரணம் ஆந்திரப் பகுதியில் சரியாக அமைக்கப்படாத வாய்க்கால் கட்டுமானப் பணிகள். (சத்ய சாய்பாபா டிரஸ்ட் உதவியால் ஆந்திர எல்லை-சென்னைக் கால்வாய் உருவாக்கப்பட்டது என்பது உபரி விஷயம்)

கோதாவரியை வடக்கேயும், மத்தியில் கிருஷ்ணையையும், தெற்கே துங்கபத்திரை, வடபெண்ணை.. ஹைய்யோ.. இத்தனை நதிநீரை வைத்துக் கொண்டிருப்பதால் ஆந்திரா இந்தியாவுக்கே அத்தனை செல்வத்தையும் பகிர்ந்து அளிக்கலாமே என்று யாரும் கேட்டுவிடவேண்டாம். நான் தான் முதலிலேயே சொல்லிவிட்டேனே, நமக்கு எல்லாம் தெரியும், ஆனால் செய்யமாட்டோம்..



--------------------------------------------------------------------------------

10 comments:

  1. இந்த தண்ணி(ல)இவ்வளவு விவகாரம் இருக்கா...ஆ!

    கொஞ்சம் கூட கொடுத்தா என்ன கஷ்டம் வருமாம் என்றால்

    கொடுக்காமலே கஷ்டம் எதற்கு இதெல்லாம்!

    ReplyDelete
  2. என்ன சொல்வது. லக்ஷ்மி கடைக்கண் பார்வை அளிக்கட்டும் நமக்கு. அவளும் அவங்க ஊர் மலைக்குக் கீழ தான் உட்கார்ந்திருக்கிறாள்:))

    ReplyDelete
  3. திவாகர் சார்,
    இதை நல்லதொரு ஆய்வுக் கட்டுரையாகப் பார்க்கிறேன்.

    எல்லோருக்கும் எல்லாமும் தெரியும், எப்பொழுதும் தூங்கி வழிந்து கொண்டிருக்கும் பொதுப்பணித்துறையின் நீர் மேலாண்மை மற்றும் பொறியியல் துறை என்றாவது ஒருநாள் விழித்துக் கொண்டு ஏதாவது ஒரு திட்டத்தை கொண்டு வந்தாலும் அதை அரசு ஏற்றுக் கொள்ளாது.

    எல்லாரையும் நம்ம வரலாறை எடுத்து படிக்கச் சொல்லனும், நம் முன்னோர்கள் காலத்துல எப்படி எல்லாம் நீர் ஆதாரங்களை பாதுகாத்து சரியா பயன்படுத்தினாங்கன்னு தெரிஞ்சிக்க. ஒரு தொழில்நுட்பமும் இல்லாத அந்த காலத்துலயே எவ்வளவோ பண்ணியிருக்கும் போது, இன்னிக்கு எதுவானாலும் செய்ய முடியுங்கற நிலைமையில ஏதாவது செய்யனும்கற எண்ணம் இருந்தாதான் செய்யமுடியும்.

    ”எல்லாம் அவன் செயல்”னு நாம நம்ம வேலைய பார்க்க வேண்டியதுதான் போலிருக்கு...

    ReplyDelete
  4. திவாகரா,
    இவ்வளவு புத்தகங்கள்,கட்டுரைகள் எழுதிய உனக்கு, நாட்டின் நிலமை புரியவில்லை.நதிகலை இணைப்பதால் அரசியல்வாதிகளுக்கு என்ன லாபம் கிடைக்கும் என்றும் எழுதியிருந்தால் உடனே பலன் கிடைத்திருக்கும்.

    நல்ல கட்டுரை. என்று தணியமோ இந்த தாகம்

    ReplyDelete
  5. மீனாம்மா!

    நம்ம ஊர் செல்வம் ரொம்ப அதிகம் வீணாப் போயிண்டிருக்கேன்னு கவலைதான்.. இன்னும் சொல்லப் போனா கொடுக்க கொடுக்க பெருகும் செல்வம் இது.. சரியாப் புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்களே!

    ReplyDelete
  6. வல்லிம்மா!
    அலர்மேல்மங்கா கண் திறக்கட்டும் என்கிறீர்கள். அவளருளாலேதான் சத்யசாய்பாபா கண் திறந்தார். அவர் செலவுதான் நம்ம தமிழ்நாட்டுக் கால்வாய்..

    ReplyDelete
  7. சதீஷ்!

    இந்த வெள்ளக் காலம் இருக்கிறதே.. அது ஒரு சோக காலக் கட்டம்தான் எங்கும். இந்த ஆந்திரமும் அந்தக் காலத்தில் விதி விலக்கல்ல. இந்த தண்ணீர் விஷயத்தில் சுயநலம் பாராமல், சொந்தநாட்டு நலன் நினையாமல் கோதாவரி நதியைக் கட்டுக்குள் கொண்டுவந்தவர் சர் காட்டன் துரை எனும் ஆங்கிலப் பிரபு. முதலில் மதமாற்றத்துக்காக வந்தவர், மக்களின் தேவை மதம் அல்ல, மதகுகளும், அணைகளும்தான் என்று உணர்ந்து, முதலில் நம் காவிரிக்கும் அதன் பிறகு வெகுவாக பிரயத்தனப்பட்டு கோதாவரிக்கும் அணைகள் கட்டி, பெருகி வரும் வெள்ளத்தைக் கட்டுப் படுத்தியவர் இந்த மகான். காட்டன் துரைக்கு இன்னமும் ராஜமுந்திரியில் ஒரு கோயில் கட்டி (தௌலேஸ்வரம்) கும்பிடுகிறார்கள் இந்த ஆந்திரமக்கள்.

    பொதுவாக இந்தக் காலத்தில் ஆளும்வர்க்கத்தினரால் பொதுமக்கள் நலன் பார்க்கப்படுவதில்லை. தம்-மக்கள் நலன் மட்டுமே பேணப்படுகிறது.

    ReplyDelete
  8. மனோ, நதிநீர் இணைப்புத் திட்டம்
    யாரோ, கொஞ்சம் நாள் முன்ன, ஒரு கோடி ரூபா தான் முதல் போடறதா சொன்னாங்க இல்லே..?

    தெலுகுகங்கை ஏறத்தாழ நதிநீர் இணைப்புக் கால்வாய்தான். கிருஷ்ணையயும் வடபெண்ணாறையும் இணைக்கிறது. அதாவது ஸ்ரீசைலத்திலிருந்து, நெல்லூருக்கு வடக்கே உள்ள பெண்ணாற்றில் கட்டப்பட்டுள்ள சோமசிலா அணைக்கு கால்வாய் மூலம் நீர் அனுப்பப்பட்டு அங்கிருந்து இன்னொரு கால்வாய் மூலம் சென்னைக்கு வருகிறது. இந்தக் கால்வாய்கள் சரியாகக் கட்டப்படவில்லை என்று பல புகார்கள். இதன் மத்தியிலே நம் ரா.சே. ரெட்டியால் கோதாவரி-கிருஷ்ணை நதி இணைப்புக் கால்வாய் ஆரம்பிக்கப்பட்டு வேலை மிக மிக மெதுவாக ஊர்ந்து கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். இவையெல்லாம் எப்போதோ ஒரு நாள் முடிக்கப்பட்டாலும் அதனால் விவசாயத்துக்கு சிறிய சிறிய பலன்களே தவிர பெரிய அளவில் பயன் இல்லை. கால்வாயின் அகல ஆழமெல்லாம் குறைந்த கொள்ளளவே.. காண்டிராக்டர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும்தான் லாபம்.

    ReplyDelete
  9. திவாகர்,
    நீங்க சொன்ன அத்தனையையும் அரசாங்கம் செய்திருந்தால் அமைச்சர்கள் ஹெலிகாப்டரில் வெள்ளச் சேதத்தை எப்படிப் பார்வையிட முடியும்? வெள்ள நிவாரண நிதி எப்படிக் கொடுக்க முடியும்? அது பற்றித் தொலைக்காட்சிகளிலும், தினசரிகளிலும் எவ்வாறு விளம்பரம் செய்து கொள்ள முடியும்? எதிர்க்கட்சி ஆளும் மாநிலம் என்றால் பனிரண்டு கோடிக்கு மட்டுமே தான் நிதி கொடுக்கும் மத்திய அரசு. தன் கட்சி ஆளும் மாநிலம் என்றால் ஆயிரக்கணக்கான கோடிகளுக்குக் கொடுக்கும். அப்போது தானே எதிர்க்கட்சி ஆளும் மாநிலத்தில் வெள்ள நிவாரணப் பணிகள் சரிவர நடக்கவில்லை, அரசாங்கம் ராஜினாமா செய்யவேண்டும் என வற்புறுத்த முடியும்?? இத்தனையையும் விட்டுவிட்டு, நீங்க சொன்னதை எல்லாம் செய்தால் அரசியல் வியாபாரம் நடப்பது எப்படி?

    ReplyDelete
  10. இந்த வெள்ளப் பிரச்சினையை என்னுடைய பதிவில் கொஞ்சம் அலசிக் காயப்போட்டிருக்கிறேன்!

    http://consenttobenothing.blogspot.com/2009/11/blog-post.html

    தகவல் உபயம்

    http://balaji_ammu.blogspot.com/2009/10/550.html

    ReplyDelete