Tuesday, October 6, 2009

தமிழை வாழ்த்தும் தெலுங்கு

தமிழுக்கோர் பூமாலை ஆமுக்தமால்யதா



நான் முன்பு கங்கர்களைப் போரில் வெல்வதற்காக அவர்கள் மீது படையெடுத்துச் சென்ற காலத்தில் விஜயவாடா அருகில் சிலவாரங்கள் பாசறை அமைத்தேன். அங்கே உள்ள பெருமாள் கோவிலில் (திவி சீமாவில் உள்ள ஸ்ரீகாகுளம்) ஏகாதசி விரதம் இருந்து அன்றிரவு அங்கேயே உறங்கினேன். அடுத்தநாள் அதிகாலை துவாதசி வரும்போது திடீரென எனக்கு ஒரு அரிய காட்சி கிடைத்தது. ஆஹா.. எப்படி வர்ணிப்பேன் அந்த அதிசய காட்சியை..

நிறமோ, மழையை மடிமீது சுமந்துவரும் மேகங்களை நினைவூட்டுகிறது.. அந்தக் கண்கள்.. ஆகா.. உயர்ந்தவகைத் தாமரை மலர்கள் விரிந்த போது மேலும் செம்மையாகுமே.. அந்தப் பூக்களையும் விட அழகான சிவந்த கண்கள்.. கருடனின் தங்கநிறமான சிறகை விட ஒளி எங்கும் பரவ, மார்பில் கௌஸ்தூப மணி காலைச் சூரியனைப் போல சுடர் விட, பெருமாள் காட்சி அளித்தார். அருகேயே அகலாமல் உள்ள மகாலக்குமி தன் ஒரு கையில் விரிந்த கமலத்தைக் காட்ட, மறு கையால் ஆசியளிக்க, அந்த அற்புதக் காட்சியை எப்படி விவரிப்பேன்.. ஆஹா! இதோ பெருமாளே பேசுகிறாரே..

‘நான் ஆந்திர விஷ்ணு.. நீ வடமொழியில் பல நூல்கள் புனைந்துள்ளாய்.. எனக்காக நீ தெலுங்கு மொழியில் ஒரு நூல் எழுதவேண்டும்.. தேச பாஷைகளில் தெலுங்கு உயரிய பாஷை.. எனக்கு ஒருசமயம் மதுராவில் (வடமதுரை) அளிக்கப்பட்ட மாலையில் அவ்வளவாக மகிழ்ச்சி இல்லை. ஆனால் வில்லிபுத்தூரில் கோதை தன் மாலையை அணிவித்தாளே, அவள் மாலையுடன் ரங்கநாதனைக் கலந்ததைப் பற்றி எழுதி என்னை நீ மகிழ்விக்க வேண்டும். மேலும் அந்த மாலையை திருவேங்கடவன் முன்பு நீ சமர்ப்பிப்பாயாக”


ஸ்ரீகிருஷ்ணதேவராயரின் சொந்த வாக்கியங்கள்தான் மேலே கண்டவை. தெலுங்கு மொழியில் முதல் முதலாய் ஒரு முழு காவியமாக படைக்கப்பட்ட ‘ஆமுக்தமால்யதா’ எனும் காவியம்தான் பெருமாள் மேலே கேட்டுக் கொண்டதற்கிணங்க ஸ்ரீகிருஷ்ண தேவ ராயரால் எழுதப்பட்டதாகும். அந்தக் காவியத்திலேயே குறிக்கப்பட்ட வார்த்தைகள்தான் இவை.

ஆமுக்தமால்யதா, (அந்த சிறப்பான (ஆணிமுத்ய) மாலை) தமிழின் தெய்வீகத் தேவதையும், சூடிக் கொடுத்த சுடர்க்கொடியுமான கோதை நாச்சியாரைப் பற்றியும் அவள் தந்தை பெரியாழ்வாரின் பக்தியைப் பற்றியும் பொதுவாகப் பேசும் காவியம் என்றாலும், இதைக் காவியமாக வடித்த கிருஷ்ணதேவராயன், தம் காலத்தே உள்ள அரசாங்க நிலையையும், ஒரு அரசன் என்பவன் எப்படி தருமத்தின் துணைகொண்டு எப்படியெல்லாம் அரசாளவேண்டும் என்பதையும் எழுதியுள்ளான். காவியம் முழுவதும் ஆன்மீகத்தின் ஒளி பரவி உள்ள ஒரு அற்புத படைப்பு இது.

முதலில் ஒன்றைச் சொல்லிவிடவேண்டும். சரியாக ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு (கி.பி.1509) அரச பீடம் ஏறிய இந்த துளுவ கிருஷ்ணதேவராயன் ‘திராவிடன்’ எனும் சொல்லுக்கு முழு உரிமையும் கொண்டவன். இவன் ஒருவனே சரியான தென்னிந்தியன் என்று சற்று இந்தக் காலகட்டத்திற்கேற்றவாறு கூட சொல்லலாம். பாருங்கள். இவன் பிறப்பால் துளுவன்.. (மங்களூர் அருகே பிறந்ததாகச் சொல்வார்கள்). ஆட்சி செய்யும் இடமோ, அதாவது தலைநகரம் அமைந்த இடமோ கன்னடம் செழித்தோங்கும் விஜயநகரம். இவன் படைத்த காவியமோ தெலுங்கு மொழியில், காவியத்தின் நாயகியோ தமிழன்னையின் தவப்புதல்வியான ஆண்டாள். திராவிடத்தின் மொத்த உருவத்தையும் தன்னகத்தேக் கொண்ட ஒரு உன்னதத் தலைவன் ஸ்ரீகிருஷ்ண தேவராயன். வடமொழியில் வல்லவனான கிருஷ்ணதேவராயனுக்கு தென் மொழியான தமிழ் மிக நல்ல பரிச்சயம். அதுவும் வைணவத்தை ஆராதிப்பவனான அரசன் தமிழ்ப் பாமாலைகளான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தினைக் கரைத்துக் குடித்தவன் என்றே சொல்லலாம். இதற்கு உதாரணம் அவனே எழுதிய வரிகளைப் படியுங்கள்!

பன்னிரு சூரியர்கள் பிரபஞ்சம் முழுதும்
நடுவிலே நாராயணன் பரிபாலிக்க
ஏன் இந்த வெப்பம் என உணர்ந்தவன்
வெப்பம் தணியவே தனிவழி தேடி
பன்னிரு ஆழ்வாரின் நெஞ்சத்துக் குளிர்ச்சியிலே
தஞ்சம் புகுந்தானோ..அந்தக் குளிர்ச்சியிலே
உறைந்து மணத்திலே மனதைக் கொடுத்த
அந்த அமரர்களின் அதிபதிக்குத் தலை வணங்குவோம்


பன்னிரெண்டு சூரியர்களின் சூட்டைத் தாங்கமுடியாமல் தம்மிலேயே ஆழ்ந்திருக்கும் பன்னிரெண்டு ஆழ்வார்களின் நெஞ்சக்குளிர்ச்சியில் தன்னைப் புதைத்துக் கொண்டானாம்.. ஒரு சில வரிகளில் ஆழ்வார்களை ஸ்ரீகிருஷ்ணதேவராயன் எவ்வளவு பெருமைப் படுத்திவிட்டான்..

ஆண்டாள் அரசனை மிகவும் கவர்ந்தவள் என்றே சொல்லவேண்டும். இவன் காவியத்தில் ஆண்டாளைப் போற்றிப் பாடினாலும், நாச்சியார் திருமொழி வாக்கியங்களை மற்ற காவியப் பொருள்களிலும் தாராளமாக கையாள்கிறான் அரசன். அதுவும் திருவேங்கடவனின் சங்கினைப் போற்றும் பாடலில், ‘கற்பூரம் நாறுமோ, கமலப் பூ நாறுமோ, திருப்பவளச் செவ்வாய்தான் தித்திருக்குமோ’ என ஆண்டாள், கண்ணனின் வாய் எச்சிலின் மகிமையைப் பற்றி சங்கினைக் கேட்பாளே, அதே கேள்விகளை போற்றுதல்களாக மாற்றி ஸ்ரீகிருஷ்ணதேவராயன் தெலுங்கில் வடித்திருப்பது மிகவும் போற்றுதலுக்குரியதுதான். அதே சமயம் ஆண்டாளின் தமிழ் இவனை எப்படியெல்லாம் பாதித்திருக்கிறது என்பதையும் நாம் பார்க்கவேண்டும்.

இதோ நாரணன் சங்கை ஊதிவிட்டான்
ஆஹா.. கீதமா சங்கீதமா
நறுமணம் என்றால் இதுதானோ
நல்ல தேனினை உண்டு கொண்டிருந்த
தேனீக்களே.. ஏன் திடீரென அங்கு ஓடுகிறீர்கள்
ஓ, புரிந்து விட்டது.. இந்த நல்ல கமலங்களில்
கிடைக்கும் நறுமணத்தைவிட, இனிய தேனை விட
விட நறுமணம் வீசும் நாரணன் எச்சில்
அந்த சங்கூதலால் கிடைத்துவிட்டதா..


சங்காரைப் பற்றியே இப்படி முப்பது பாடல்கள் காவியத்தில் உள்ளன. இந்தப் பாமாலைகளைப் போலவே தன்னுடைய காவியம் முழுவதும் ஆண்டாளின் தமிழ்த் தாக்கம் அதிகமாகவே தெரியும்வகையில் படைத்திருக்கிறான் அரசன். பொதுவாகவே அரசர்கள் என்போர் கவி புனைவது என்பது ஒத்து வராத விஷயம். அரசர்கள் சபையில் ஆன்றோர் பலர் இருப்ப, அந்த ஆன்றோர்களும் சான்றோர்களும் படைக்கும் காவியங்களை மிகவும் ரசித்து அந்தப் புலவர்களைக் கௌரவிப்பதே அரசன் கடமை என சரித்திரத்தில் நிறைய படித்திருக்கிறோம். மகேந்திரபல்லவன் நாடகங்கள் படைத்திருக்கிறான். அவனுக்குப் பிறகு ஒரு சில அரசர்கள் கவிதை உலகத்துக்கு பங்கு அளித்தார்கள்தான் என்றாலும், ஸ்ரீகிருஷ்ணதேவராயனின் இலக்கிய பங்கு என்பது வியப்புக்குரியதுதான்.

ஏனெனில் கிருஷ்ணதேவராயனின் அவையிலேயே அஷ்ட திக்கஜங்கள் என்று பெருமை பெற்ற எட்டு பேர் கொண்ட ஒரு பெரிய புலவர் படையே இருந்தது. அல்லசாணி பெத்தண்ணா என்ற புகழ்பெற்ற தெலுங்குப் புலவர் சபைக்குத் தலைவர் போல இருந்தவர். கன்னட மொழிப் புலவர்கள் பலர் இருந்தனர். ஆனால் தமிழுக்கு என்று பெயர் சொல்லக்கூடிய புலவர் ஒருவரும் அவனுடைய சபையில் அந்தக் கால கட்டத்தில் இல்லாததைக் குறிப்பிட்டுச் சொல்லத்தான் வேண்டும். ஆனால் தமிழ் அவன் சபையில் இல்லை என்பதை ஈடு செய்யவே கிருஷ்ணதேவராயனே முன்வந்து தமிழ்ப் பாடல்களின் மகிமையை தெலுங்கு மொழியில் இயற்றினானோ என்னவோ.. ஒவ்வொரு சமயம் நினைத்துப் பார்க்கும்போது தமிழன்னை தன்னை உயர்த்திக் காட்ட இந்தக் காவியம் படைக்க இப்படி ஒரு வகை செய்தாளோ என்றுதான் தோன்றும்.

இல்லையேல், ஒரு ராஜா அதுவும் தமிழல்லாத ராஜா, சண்டை போட இருந்த ஒரு இடத்தில், யுத்த கால கட்டத்தில், நாராயணனே முன் தோன்றி, ‘எனக்கு கோதையின் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி மாலை தெலுங்கில் காவியமாக வேண்டும், அதையும் அரசனான நீயே செய்யவேண்டும் என்று கேட்பானா? இந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியைக் கூட ‘ஆமுக்தமால்யதா’ வில் அரசன் எழுதுகிறான்.. .

‘ஆஹா.. சாட்சாத் நாராயணனே இலக்குமி சகிதம் வந்து என்னிடம் ஆணை போட்டுவிட்டான்.. அமைச்சர்களே.. புலவர்களே.. இதன் நிமித்தம் சொல்லுங்களேன்..’

என ஆன்றோர்களைக் கேட்கவும் அந்த யுத்தபூமியிலும் சபை மளமளவெனக் கூடுகிறது. இலக்குமியின் ஒரு கையில் தெரிந்த கமலம், இந்த யுத்தத்தின் வெற்றியின் பரிசு என்பதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. பிறகு காவியம் எழுது என்று சொல்லிவிட்டானே ஆண்டவன்.. காவியத்துக்கே உரிய வகையறாக்கள் ஆராயப்படுகின்றன. கடவுள் வாழ்த்து கூட வைணவ மார்க்கத்தில் முதலில் திரு (இலக்குமி) யைப் போற்றி எழுதப்படவேண்டும் என்று நிர்ணயிக்கிறார்கள். அப்போது ஒரு சிறிய மாற்றம் அரசரால் சொல்லப்படுகிறது. ஆந்திர விஷ்ணு, திருமலையில் நின்றவடிவில் ஆருள் புரியும் திருவேங்கடவன் முன்பு இந்தப் பாமாலையினை சமர்ப்பிக்கும்படி ஆணையிட்டிருப்பதால் இலக்குமியை முன்வைத்து அந்தத் திருவேங்கடவனுக்கே முதல் பாடல் எழுதப் போகிறேன்.. என்று சொல்கிறான். அதுவும் எந்த இலக்குமி, திருவேங்டவன் திருமார்பில் வாசம் செய்வதாக நம்மாழ்வார் சொல்கிறாரே ‘அகலகில்லேன், இறையும் என அலர்மேல்மங்கையுரை மார்பா’ அந்த மகாலக்குமியைப் போற்றவேண்டும் என தேவர் முடிவு செய்கிறார்.

இலக்குமியின் திருமார்பில் ஒளிரும் ஆரத்தின் ஒளி நீயே
அவன் திருமார்பில் ஒளிரும் கௌஸ்தப மணியின் ஒளி அவளே
ஒருவருக்கொருவர் உள்ளேயே ஒளிந்திருந்தும் இந்த மணிகளின்
வழியே தெள்ளத் தெளிவாய் வெளியே தெரியும் விந்தையை
அளித்த திருவேங்கடவனே, உனக்கு முதல் வணக்கம்!


அவனும் அவளும் ஒன்றுதான்.. ஆனால் அவள் மூலம் அவனிடம் செல்வது என்பது மிக மிக எளிது.. இதுவே ஆண்டாளும், நம்மாழ்வாரும், திருமங்கைமன்னனும் ஏற்கனவே காண்பித்தது என்பது விஜயநகரத்து மன்னன் ஸ்ரீகிருஷ்ணதேவராயனுக்கு பரிபூரணமாகத் தெரிந்திருக்கிறது. அவன் வார்த்தைகளில் உள்ள சத்தியம் ஆணும் பெண்ணும் ஆண்டவனிலிருந்து அகிலம் முழுமைக்கும் ஒன்றுதான் என்ற கருத்து பலமாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்தனையும் தமிழின் கருத்து. அப்படியே அண்டை மொழி மூலம் ஆண்டவன் கட்டளையாக, அந்த ஆண்டவனுக்கே அழியாத மாலையாக அழகாகக் கோர்த்து மாலையிட்டவன் ஸ்ரீகிருஷ்ணதேவராயன்.

ஆமுக்தமால்யதா தெலுங்கில் பொருள் அறிந்து படிக்க படிக்க தெலுங்கு மொழியின் மகிமையை விட தமிழின் மகிமை மிக அதிகமாக தமிழராகிய நமக்கு விளங்கும். தமிழராகிய நாம் தலை நிமிர்ந்து நடக்க, ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ஒரு மகாகாவியம் இந்த ‘ஆமுக்தமால்யதா’ என்று பெருமை கொள்வோம்.

திவாகர்

(பி.கு. ஆமுக்தமால்யதாவின் தமிழ் வரிகள், டாக்டர் பிரேமா நந்தகுமார் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு மூலம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அவருக்கு நம் நன்றி)

மேலே உள்ள படம், திருமலை வேங்கடவன் கோயிலில், ஸ்ரீகிருஷ்ணதேவராயர், அவர் மனைவிகள் இருவரோடு சிலைகளாக செதுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள காட்சி.

மேற்கண்ட கட்டுரை 'யுகமாயினி' மாத இதழில் வெளியிடப்பட்டுள்ளது.