Tuesday, September 3, 2013

அடுத்த வீட்டில் ஒரு நனவுலக குட்டி நகரம்:




அன்புள்ள தூலிபாலா ராமச்சந்திர ராவ் அவர்களுக்கு!

தமிழர்தம் மேலாட்சியை ஆவலோடு ஏற்றுக்கொண்ட உங்களுக்கு அடியோடு தமிழ் வராது என்பது தெரியும் என்றாலும் நான் எழுதும் இக்கடிதத்தின் சாரத்தை ஏற்கனவே தங்களிடம் தெலுங்கில் சொல்லிவிட்டதால் கொஞ்சம் விஸ்தாரமாகவே உங்கள் அனுமதியுடன் ஆரம்பிக்கிறேன். நீங்கள் இதையெல்லாம் படிக்கப் போவதில்லை என்று தெரிந்தாலும் எழுதுவது ஏதோ கடமை போலத் தென்பட்டதால் வந்த விளைவுதான் இக்கடிதம்

ஏனாம் அல்லது யேனாம் என்ற குட்டி நகரத்தில் தற்போது வசித்து வரும் சுமார் 42000 மக்களில் நீங்கள்தான் வயதானவர் என்பதால் ஒரு கூடுதல் வணக்கம். 85 வயது இளைஞரான நீங்கள் நூறாண்டு காணவும் புதுவை மாநிலத்திலேயே மூத்தவர் எனும் பெயரையும் எடுக்கவும் எனக்கு ஆசை.

நம் சந்திப்பு விந்தைதான் என்றாலும், எதிர்பார்க்கப்படாததுதான் என்றாலும், இந்த தூலிபாலா என்றொரு பழைய தெலுங்கு சினிமா நடிகர் ஒருவரைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன். அதனால் உங்கள் பெயர் கேட்டதும் ஒரு இயற்கையான சின்ன கவர்ச்சி உண்டானது வாஸ்தவமே..

நீங்கள் 1954 ஆம் ஆண்டில் ஏனாம் மீது பிரயோகிக்கப்பட்ட அந்த பழைய கால போலீஸ் ஆக்‌ஷன் பற்றிப் பேசினீர்கள். எனக்குக் கொஞ்சம் ஆச்சரியம்தான். ஏதோ ஏனாமில் யாரோ எப்போதோ எதிர்த்தார்கள். இந்திய அரசாங்கம் மிரட்டியதும் பணிந்து விட்டார்கள் என்றுதான் மேலோட்டமாகக் கேள்விப்பட்டேன். ஆனால் ஏனாம் இந்தியாவோடு சேர்க்கப்பட்டதில் இத்தனை விஷயம் இருக்கும் என்று யோசிக்கவில்லைதான்.

பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்பு என் முதல் நாவலான வம்சதாராவுக்காக ஏனாம் அருகே இருக்கும் திராட்சாராமம் வந்துள்ளேன். அப்போது ஏனாம் ஊருக்குள்ளும் வந்தேன். நான் வந்ததன் காரணம் வேறு நதி வளமும், என் கதைக்கான போக்கும் ஏராளமாக கிடைத்ததால் எனக்குப் பிடித்துப் போன ஒரு இடமாக ஏனாம் அப்போதே மாறிவிட்டது. இன்னொரு விந்தையும் அப்போதே கண்டேன். ஏனாம் எனும் ஊர் ஆந்திர கிராமங்களைப் போல சிற்றூர் அல்ல. மாறி வரும் வளர்ந்த ஊராகப் பட்டது. ஆனால் சமீபத்தில் ஏனாம் வந்தபோது இந்த விந்தை மாறிப்போய் ‘ஆஹாஎனும் சந்தோஷத்தில் மிதந்து போனேன் என்ற உண்மையை நான் முழு மனதோடு ஒப்புக் கொள்ளவேண்டும்தான்.

நீர்வளத்தை நல்ல விதத்தில் மாற்றியுள்ளீர்கள். கௌதமி நதிக்கு மிக அழகானதொரு கரை கட்டி ஊர் நெடுகிலும் செல்லவைத்து ஏனாமுக்கு பூமாலை சூட்டி இருக்கிறீர்கள். அழகான பூங்காக்கள், மண்டபங்கள் சிறிய பேருந்து நிலையம் என்றாலும் கச்சிதமான அளவில் கட்டப்பட்டுள்ள திற்மை, தூய்மையான சுற்றுப் புற சூழல், நல்ல சாலைகள் அதுவும் குண்டும் குழியும் காணப்படாத அளவில் ஊர்த் தேவைக்கு சற்று அளவுக்கதிகமாகவே அகலமான சாலைகள்.. நல்ல விடுதிகள் என்று இந்த சிற்றூரை அயல்நாட்டு நகரங்களுக்கு நிகரான வசதிகளுடன் முன்னேற்றி இருப்பதைக் காண மனம் மகிழ்கிறது. அதுவும் விவசாயிகள் சங்கத்துக்காக என்று குளிர்சாதன் வசதிகள் கொண்ட விடுதிகள் கட்டி இருப்பது மேலும் மகிழ்ச்சியைக் கூட்டியதுதான்.


எனக்கு ஆந்திரமாநிலத்தைப் பற்றியும், கோனசீமா, திவிசீமா போன்ற செழுமையான பகுதிகள் பற்றியும் பெருமைகள் பல உண்டு என்றாலும் குறைகளும் அதிகம்தான். பச்சைப்பசேலென்ற வயல்கள் சூழ்ந்தாலும் செழிப்பு அங்குதான் காணப்படுமே தவிர அந்த வயல்களைச் சூழ்ந்த ஊர்களில் காணமுடியாது. சுத்தம் என்பது சற்றே குறைவான அளவில்தான் காணலாம் என்றுதான் சொல்வேன். புழுதியைக் கட்டுப்படுத்தாத, கட்டுப்படுத்த முடியாத ஊர்களும், சுகாதார விஷயத்தில் அடிமட்டமாகச் செயல்படும் ஊர்களையும்தான் பார்த்துப் பழக்கமானதால் இப்படி சொல்கிறேன். அரசியல் பகைகளிலே காலம் கழித்துக் கொண்டே இருக்கும் மக்கள் சமுதாய நன்மைக்கு அதிகம் பங்கு கொள்ளவில்லை என்ற ஏக்கம் உண்டு. இந்த நிலைமை இந்தியாவில் எந்த ஒரு கிராமத்துக்கும் உண்டுதான். ஆனால் ஏனாமில் இந்த நிலமை இல்லை. சுத்தம் பேணப்பட்டு சுகாதாரம் காக்கப்பட்டு மக்களுக்குத் தேவையான (தேவைக்கும் அதிகமான) சகல வசதிகளும் செவ்வனே செய்யப்பட்டு ஒரு சிற்றூர், இன்று சிறந்த குட்டி நகரமாக முன்னேறி உள்ளதை யாரால்தான் பாராட்டாமல் இருக்கமுடியும்.


அடடே.. ஆரம்பத்தில் உங்களைப் பற்றி ஆரம்பித்து உங்களைப் பற்றி எழுதாமல் ஊருக்குள் நுழைந்துவிட்டதற்கு மன்னிக்கவும். காரணம் அந்த ஊர் என்னை அப்படிக் கவர்ந்து விட்டதுதான். 1954 ஆம் ஆண்டு வரை பிரெஞ்சுக் காரார்கள் ஆதிக்கத்திலிருந்த ஏனாம் நகரை சுதந்திர இந்தியாவில் இணைக்கவேண்டும் என்று ஊரில் மூத்தவர்கள் தாதால ரமணய்யா, மாடிம்செட்டி சத்யானந்தம் போன்றோருடன்  இளைய வயதுக்காரரான தாங்கள் சாலையில் உட்கார்ந்து போராடியதையும், அப்போதைய கால கட்டத்தில் ஆட்சி செய்த பிரெஞ்சு தேசத்து நட்பாளரும் மேயருமான சமதம் கிருஷ்ணய்யா (இவர் தன் பெயரையே க்ரௌஸ்ச்ணய்யஎன்று பிரெஞ்சுக்காரர் விரும்பும் வகையில் பிரெஞ்ச் மொழியில் மாற்றிக்கொண்டவர்) இந்தியாவுடன் இணைய மறுத்ததையும், பிறகு இந்திய அரசாங்கம் ஒரு போலீஸ் படையை அனுப்பி சண்டை செய்து மேயரை வீழ்த்தியதையும் குறிப்பிட்டதும் அந்த சண்டையில் மேயர் கொல்லப்பட்டதும் தெரிந்து கொண்டேன். பின்னர் விஷயம் கேள்விப்பட்ட புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு அரசாங்கம் புதுச்சேரியிலிருந்து ஒரு சிறிய பிரெஞ்சு போர்க்கப்பலை அனுப்ப முன்வந்ததாகவும், இந்திய அரசாங்கத்தின் எச்சரிக்கைக்குப் பயந்து அங்கேயே பின்தங்கிவிட்டதையும் குறிப்பிட்டீர்கள். ஏறத்தாழ 140 ஆண்டுகள் தொடர்ச்சியான பிரெஞ்சுப் பிடியிலிருந்து 1954 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13 ஆம் தேதி ஏனாம் மட்டுமே (இப்போதுள்ள புதுவை மாநிலப்பகுதிகளில்) முதன் முதலாக இந்தியாவுடன் இணைக்கப்பட்டது என்பதும் அதற்கடுத்த நாட்களில்தான் மாஹி இந்தியாவுடன் சேர்க்கப்பட்டதும் அதன் பிறகு மெல்ல புதுச்சேரியும் காரைக்காலும் பெருங்கடலுடன் சங்கம்மான நதிபோல ஓடி வந்து பாரதத்துடன் கலந்துகொண்டதையும் இன்றைய காலத்து இளைய சமுதாயம் அறிந்திருக்குமா என்பது கேள்விக்குறிதான்.

1970 களில் ஏனாமைச் சேர்ந்த காமிச்செட்டி என்பவரைப் பற்றி தமிழகமே அறியும். புதுவையில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இவர் ஆதரவு தேவை என்பதாலும் அந்தக் காலக் கட்டத்தில் புதுவையில் ஆட்சி மாறுதல் சர்வ சகஜமானது என்பதும் ஆனால் எந்தக் கட்சியானாலும் காமிச்செட்டியின் ஆதரவு உண்டு என்பதால் ‘ஏனாம்ஊருக்கு எப்போதுமே புதுவை அரசாங்கத்தார் மத்தியில் ஒரு ‘அருட்கண்உண்டு என்பது கூட அன்றைய காலகட்டத்து அரசியல் ஆர்வலர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

அதே போலத்தான் இன்றைய ஏனாம் பிரதிநிதியும் கூட என்பதால் அவர்களால் இந்த ஏனாம் குட்டி நகருக்கு பல வசதிகள் கொண்டுவரப்பட்டதையும் அறிந்த போது அரசியல் சில சமயங்களில் வளர்ச்சி விஷயத்திலும் எவ்வாறெல்லாம் உதவுகிறது என்றுதான் எண்ணத் தோன்றியது.

எது எப்படி இருந்தாலும் ஏனாம் என்றொரு சிற்றூர் இன்று அதிசயத்தக்க விதத்தில் எல்லா வசதிகளுடன் கூடிய ஒரு குட்டி நகரமாக, மக்களுக்கு பலன் தரக்கூடிய விதத்தில் வளர்ந்து இருக்கிறது. குட்டி நகரம்தான் ஆனாலும் ஏனாம் எனும் ஊரிடமிருந்து ஏனைய சிற்றூர்கள் கற்றுக் கொள்ளவேண்டியது ஏராளம். ஏனாம் ஏன் இப்படி வளம் பெரும் ஊராக மாறியது.. ஏனாமைப் போல ஏனைய ஊர்களும் ஏன் இப்படி தம்மை வளப்படுத்திக் கொள்ளக்க்கூடாது? 

நான் அப்படி மாறும் வருங்கால இந்தியாவை கனவு காண்பது போல பார்க்கும்போது மிகப் பிரமிப்பு மிக்க நாடாக அந்தக் கனவில் பாரதநாடு எனக்குத் தெரிகிற்து என்ற விஷயத்தை இங்கே சொல்லிவிடுகிறேன்.

தூலிபாலா அவர்களே.. என்னைப் போன்று யாரேனும் உங்களைப் சந்திக்க நேர்ந்தால் அவர்களுக்கும் ஏனாம் என்கிற நனவுலகம் பற்றி எடுத்துச் சொல்லி ஏனாம் போல ஒரு அழகிய பட்டணத்தை உருவாக்கச் சொல்லுங்கள் என்பதே என் வேண்டுகோள். அவர்களும் என்னைப் போல கனவு காணலாம். கனவிலாவது பாரத சமுதாயத்தில் மறுமலர்ச்சியைக் கண்டு மகிழலாம்தானே!

வணக்கம், நன்றி!!

அன்புடன்
திவாகர்




Wednesday, May 22, 2013

வைகாசி சுவாதியை வாழ்த்தும் வைகாசி விசாகம்


ஆந்திரத்தில் நரசிம்மரின் சிம்ம கர்ஜனை:
வைகாசி மாதத்தில் வரும் சுவாதி நட்சத்திரத்தில் இங்கு ஆந்திரர்கள் நரசிம்ம ஜெயந்தியைக் கொண்டாடுவார்கள். ஸ்ரீமகாவிஷ்ணுவின் அவதாரங்களில் மிகவும் உயர்ந்த தத்துவத்தைக் கொண்டதுதான் நரசிம்ம (அல்லது ந்ருஸிம்ஹ) அவதாரம். எப்படி தமிழகத்தின் மலைகள் தோறும் முருகன் கோயில் கொண்டுள்ளானோ, அப்படியே ஆந்திரத்தின் மலைகள் தோறும் நரசிம்மர் கோயிலை நாம் காணலாம். விசாகப்பட்டினத்தின் அருகே அமைந்துள்ள சிம்ஹாத்ரி மலையிலிருந்து வான் வழியே தென்மேற்கே போகப் போக மலை உச்சிகளிலெல்லாம் நரசிம்மர் காட்சியளிப்பது போலத்தான் தோன்றும் என்ற எண்ணம் உண்டு எனக்கு.

காடுகளும் மலைகளும் சூழ்ந்த அஹோபிலத்தில் மட்டுமே ஒன்பது நரசிம்ம க்ஷேத்திரங்கள் அமைந்துள்ளன. ஆந்திரத்தில் ஓடிவரும் கிருஷ்ணை நதிக்கும் ஹிரண்யகசிபுவை வென்ற நரசிம்மருக்கும் அப்படி என்ன விருப்பமான பொருத்தமோ, கிருஷ்ணைக் கரையை அடுத்தமட்டில்  பஞ்சநரசிம்ம க்ஷேத்திரங்களாக மட்டப்பள்ளி (நல்கொண்டா மாவட்டம்),  வடபள்ளி, வேதாத்ரி (மேலே படத்தில் உள்ளது), கேட்டவரம் (கிருஷ்ணா மாவட்டம்), மங்களகிரி (குண்டூர் மாவட்டம்) என நரசிம்மர் சிம்ம கர்ஜனை புரிந்து கொண்டு ஆள்கின்ற பிராந்தியம் இது. 
மட்டப்பள்ளி நரசிம்மர் கோயில்  (படத்தில்)குகைக் கோயில்தான். பாறையில் நரசிம்ம வடிவத்தில் சுயமபுவாக தன்னைக் காட்சிப்படுத்தியதாக தல வரலாறுகள் சொல்கின்றன. ஏறத்தாழ ஓரடி உயரத்தில் சங்கு சக்கரதாரியாகக் நரசிம்ம பெருமாள் காட்சியளிக்கிறார். பொதுவாக குடைவரை கோயில்கள் ஆந்திரத்தில் பல்லவர் காலத்திலேயே அதிகம் கிருஷ்ணை நதிக் கரையில் எழுப்பப்பட்டன என்பதற்கு வரலாற்று சாட்சியங்கள் ஏராளமாக உள்ளன. அதே சமயத்தில் நரசிம்மர் எப்போதும் காடு மலைகள் நிறைந்த சூழ்நிலையில் இந்தப் பிராந்தியங்களில் காணப்படுவது கூட ஒரு ஆச்சரியமான விஷயமே. ஏனெனில் தமிழகத்தில் பெருமாளின் அவதாரமாக ஏராளமான கோயில்கள் திவ்யத் தலங்களாக நரசிம்மமூர்த்திக்குதான் உண்டு என்பதும் அந்தக் கோயில்கள் பூமியின் சமதரைப்பகுதியில் கட்டப்பட்டுள்ளது என்பதையும் ஒரு ஒப்பீட்டுக்காக இங்கு குறிப்பிடுகின்றேன். 
அதே போல கிருஷ்ணையின் தென் கரையில் மங்களகிரி எனுமிடத்தில் மலை மீது குடைவரையாக எழுப்பப்பட்ட தலத்தில் பானக நரசிம்மர் மிகவும் விசேஷமாக பூசிக்கப்படுகின்றார். இங்கு குடிகொண்ட குடைவரை பானக நரசிம்மரின் வாயில் எந்த அளவு கொண்ட பாத்திரத்தில் பானக்ம் ஊற்றினாலும் பாதிதான் செல்கிறது. இப்போது நேராக கோயிலுக்கே மலைப்பாதை அமைத்துவிட்டார்கள். மலையடிவாரத்திலும் நரசிம்மருக்கு ஒரு அழகான கோயிலும் நீண்டு உயர்ந்த கோபுரமும் உண்டு. (படம் மேலே) பதினோரு அடுக்குகள் கொண்ட இந்த 153 அடி உயர கோபுரத்தை வாசிரெட்டி வெங்கடாத்ரி நாயுடு (பக்கத்தில் உள்ள அமராவதி நகரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்ட சிறு மன்னர்) என்பவர் கட்டினார்.

கிருஷ்ணா நதியை பிரிய மனமில்லாமல் பிரிந்து சற்று வடக்கே வந்தோமேயானால் ராஜமுந்த்ரி அருகே கொருகொண்டா மலையில் 650 படிகளுடன் கட்டப்பட்ட கோயிலில் குடிகொண்ட சாத்வீக நரசிம்மரை தரிசனம் செய்துவிட்டு இன்னும் சற்று வடக்கே விசாகப்பட்டினம் சிம்ஹாத்ரி மலையில் வராகருடன் இணைந்த நரசிம்ம பெருமான் காட்சி தருகிறார். 
வராகநரசிம்மரை அவர் முழு உருவைக் காண் வேண்டுமென்றால் ஒவ்வொரு வருடமும் இதே வைகாசியில் வரும் அட்சயத்திருதியைத் திருநாள் வரும் வரைக் காத்திருக்கவேண்டும். அன்றுதான்  சந்தனம் கொண்டு உள்ளே ஒளித்து வைக்கப்பட்டிருந்த அழகான வராகநரசிம்மரை முழுதாக தரிசனம் செய்யமுடியும். அன்று அவரைப் பார்த்துவிட்டால் இந்த ஒருநாளுக்காக வருடம் முழுவதும் தவம் இருக்கலாம் என்றுதான் தோன்றும், . இந்த தலமும் ஒரு நூற்றாண்டுக்கு முன்வரை காடுகளும் மலைகளும் சூழ்ந்த வனாந்தரப் பகுதிதான். 

விசாகப்பட்டினத்திலிருந்து பதினைந்து கிலோ மீட்டர் தூரத்தில் மலைப்பகுதியான சிம்மாசலத்தில் அமைந்துள்ள இந்தக் கோயில் சோழர்களின் கலைக் கண்காட்சியாக கண்ணுக்குத் தெரியும் என்பதும், அதைவிட ஆச்சரியமாக அந்த பதினோராம் நூற்றாண்டுக் கால கட்டத்தில் ஒரு நடுக் காட்டுக்குள் சோழர்கள் எப்படி இவ்வளவு அருமையான கோயிலைக் கட்டினார்கள் என்பதும் விந்தையான செய்திதானே..

ஆந்திரத்தில் தெலுங்கானா பகுதியிலும் நரசிம்ம க்ஷேத்திரங்கள் மிக அதிகம். தர்மபுரியிலும், யாதகிரிகட்டா எனும் சிறுகுன்றில் எழுப்பப்பட்ட யோக நரசிம்மரைப் பற்றிச் சிறிதாவது சொல்லவேண்டும்.

கோதாவரிக் கரையில் கரீம்நகர் மாவட்டத்தில் தர்மபுரி க்ஷேத்திரத்தில் நரசிம்மர் கோயில் மிகவும் புகழ் பெற்றது. இந்தப்பகுதியை ஆண்ட தர்மசேனா மிகவும் கடினமாக தவம் செய்து நரசிம்மரின் தரிசனம் பெற்றதாகச் சொல்வர். ஸ்ரீராமர் பூஜித்தத்தாக சொல்லப்படும் சிவன் கோயிலைக் கொண்ட இந்த க்ஷேத்திரத்தில் தர்மசேனாவின் முயற்சியால் தனக்குத் தரிசனம் தந்த யோகநரசிம்மருக்கு அவனே ஒரு பெரிய கோயில் எழுப்பியதாக தல வரலாறு சொல்கிறது.

அதே யோக நரசிம்மர் ஹைதராபாத் அருகே உள்ள யாதகிரிகட்டாவிலும் காட்சி தருகிறார். காசிபேட் இலிருந்து ஹைதராபாத் செல்லும் இருப்புப் பாதை வழியாகப் பார்த்தால் ரயிலில் செல்லும்போது இந்த குன்று தெரியும். இங்கே ஜ்வாலாநரசிம்மமூர்த்தி குடைவரைக் கோயிலில் குடிகொண்டுள்ளார். கருவரைக் கோபுரத்தில் ஒரு தங்க சுதர்ஸன சக்கரம் 3 அடி சுற்றளவில் பொருத்தப்பட்டுள்ளது. ஏறத்தாழ ஆறு கிலோ மீட்டார் சுற்றளவுக்கு இந்த சக்கரம் தெரிகின்றது.

ஆந்திரத்தில் 108 நரசிம்ம க்ஷேத்திரங்கள் உள்ளதாகவும் அவைகளில் 32 தலங்கள் புகழ்பெற்றதாகவும் சொல்வதுண்டு. நதிக்கரைக்கருகில் காடுகளிலும், வனம் சூழ்ந்த மலைகளிலும் காணப்படும் நரசிம்மர் ஒரு மாறுதலுக்காக கடற்கரைப் பகுதியிலும் நமக்காக தரிசனம் தருகிறார். 

மேற்கு கோதாவரி மாவட்டத்தில் நரசாப்பூர் அருகே அந்தர்வேதி எனும் சிற்றூர் கடலுக்கு சற்று அருகே உள்ளது. இங்கே கோதாவரியில் கிளை நதியான வசிஷ்டநதி கடலில் கலக்கிறது. இந்த தலம் கோதாவரி பாயும் தலங்களிலேயே மிகவும் புனிதமான இடம் என்று போற்றப்படுகின்றது. கடலிலிருந்து மேற்கே பார்த்தவிதமாக இங்கே நரசிம்மர் அருள் புரிகின்றார்.

நரசிம்மர் தத்துவம் என்பதை உயர்ந்ததாகச் சொல்லி மேலே இந்தக் கட்டுரையை ஆரம்பித்தேன் அல்லவா.. இதோ அந்தத் தத்துவத்தைப் பற்றி அடியேன் அறிந்த வரையிலும், அதற்கேற்ற நம்மாழ்வார் பாடலும் தந்திருக்கிறேன்.

பெருமாளின் அவதாரங்களில் எது சிறந்தது, எது நிறைந்தது என்றெல்லாம் சொல்லமுடியாது. ஒவ்வொரு அவதாரமும் ஒவ்வொரு வகையில் சிறந்தது. ஆனால் நரசிம்ம அவதாரம் இருக்கிறதே.. அந்த அவதாரம் வந்த காலகட்டத்தை நாம் சற்று கூர்ந்து ஆராய்ந்தால் சில தகவல்கள் வியப்பூட்டும்.

ஹிரண்யகசிபு, ஒரு சிறந்த அரசனாகத்தான் பொதுவாகப் போற்றப்பட்டிருக்க வேண்டும், அவன் ஆட்சியைப் பொறுத்தமட்டில் மக்கள் அப்படித்தான் நினைத்திருக்க வேண்டும். பாருங்கள், பூமியில் வாழும் மானிடருக்கு பொதுவாக வாழ்க்கையில் என்ன தேவை?

நிம்மதியான வாழ்க்கை,
சுகமான வாழ்க்கை,
கேளிக்கை நிறைந்த வாழ்க்கை,
கவலையற்ற வாழ்க்கை,
பருவ காலத்தில் சரியாகப் பெய்யும் மழை, பயிர் விளைச்சலில் நல்ல மகசூல், பொருட்செல்வம், மக்கட்செல்வம், பிரச்சினைகள் அறவே இல்லாத போக்கு, பொதுவாக மக்களுக்கு இது போதாதா..

இவை அனைத்தையும் ஹிரண்யகசிபு கொடுத்திருக்கவேண்டும். மூவுலகையும் ஒரு சேர ஆண்ட அவனுக்கு மழையையும் செல்வத்தையும் தருவிப்பது அத்தனை கடினமா.. ஆனால் அதற்கு அவன் கொடுத்த விலை, அசுரத் தவம் பெற்று கேட்டுக்கொண்ட வரங்கள். அந்த வரங்கள் மூலம் தேவர் முதலாக அனைவரும் அவன் அடிமைகள். போகவாழ்க்கை அனைவருக்குமே.. ஒரே ஒரு நிபந்தனை.. எல்லோருக்குமே இவன் ஒருவனே கடவுள்.. இவன் பெயரை உச்சரித்தால் போதும்.. எல்லாம், எல்லாமுமே கிடைக்கும்.

இப்படிப்பட்ட வாழ்க்கை இப்போது இருந்தால், அதுவும் மாபெரும் உலகாயுதமான வாழ்க்கையில் இந்த ஹிரண்யாயநம எனும் வார்த்தையை யார்தான் சொல்ல மாட்டார்கள்.

ஆனால் இன்னும் நன்றாக யோசித்துப்பார்த்தால், இதுவும் ஒரு வாழ்க்கையா என்று தோன்றும், இந்தக் காலத்தில் நடிகை வீட்டு நாய்க்குட்டிகளும், பூனைக் குட்டிகளும் கூட ராஜ போகத்தில் வாழுகின்றன. வேளா வேளைக்கு நல்ல புரதச் சத்தும், வைட்டமின் களும் கலந்த உணவாக, இன்றைய மாட்டுப்பண்ணைகளில் உள்ள மாடுகளுக்குக் கொடுக்கப்படுகிறது. வலிதெரியாமல் பாலைக் கூட முழுவதுமாகக் கறந்து விடலாம். இதைப் போல மேலைநாடுகளில் உள்ள ஆட்டுப் பண்ணைகள். சிறந்த உணவும், பரந்த, பச்சைப் பசேலெனும் திறந்த வெளியில் உல்லாசமுமாக ஆடி ஓடும் ஆடுகளையும், மாலையானால் அவரவர் இருப்பிடங்களுக்குப் போய் பூச்சி, பொட்டு, கொசு  தொந்தரவு கூட இல்லாமல் தூங்கும் பண்ணைகள் உண்டு. இவைகளுக்குதான் என்ன குறை? அவற்றைப் பொருத்தவரை அது சொர்க்கபோகம் அல்லவா..

இவைகளைப் போலவே இல்லாமல் சற்றுக் கூடுதலாக இன்பமாக நினைந்து உணர மனித ஜன்மம் கொடுத்து, அவர்களையும் செல்வத்தில் தழைக்க வைத்து, கேளிக்கை விருந்தோடு, ஆட்டமும் பாட்டமும் பாடிக்கொண்டு இந்தப் பண்ணை போன்ற இடங்களில்  அல்லது ஊரில் விட்டு விட்டால் (அவ்வப்போது ஹிரண்யாயநம என்ற வார்த்தையும் சொல்லிக் கொண்டு) ஆஹா.. இன்பமேதான்.. இதுவே சொர்க்கம்தான்.

இது உண்மையிலேயே நிலையான இன்பமா.. இல்லை துன்பமா..

மனிதப் பிறப்பு ஒரு விசித்திரம் மட்டுமல்ல,
தெய்வத்தின் அருள் கூட..
மனிதப்பிறப்பே அடுத்த பிறவிக்கும்,
பிறவியில்லாமைக்கும் திறவுகோல்..
மனிதன் சுதந்திரமான சிந்தனைக்கு உரியவன்.
இந்த சிந்தனை எனும் அரிய மருந்து
அவன் அந்த பிறப்பை எப்படி அந்த சிந்தனையின் மூலம் தெய்வபக்தியில் செலுத்தி சரியாகப் பயன்படுத்தி,
இந்த பிறப்பின் மூலம் மேம்பாடு அடைவதற்காக அருளப்பட்டது. மனிதன் சிந்தனை எப்போதுமே சுதந்திரத்தின் மீதே இருக்கும்.. இருக்கவேண்டும்.. அந்த சுதந்திரம் ஒன்று இருந்தால் மட்டுமே மனிதனாகப் பிறந்த காரிய சித்தி அடையமுடியும்.

ஆனால் எத்தனைதான் இன்பங்கள், எத்தனைதான் கவலையற்ற, பிரச்சினைகளற்ற வாழ்க்கை கிடைத்தாலும் சுதந்திர சிந்தனை இல்லாமல் வாழ்வது என்பதும் வசதியான மாட்டுப்பண்ணையில் வாழ்வது ஒன்றுதான். இல்லையா பின்னே! பகவானை வணங்காமல் வாழும் ஒரு வாழ்க்கையும் வாழ்க்கையா..

இப்படிப்பட்ட மாட்டுப்பண்ணைகளையும, ஆட்டுப்பண்ணைகளையும்தான் ஹிரண்யகசிபு ஆண்டுகொண்டிருந்தான்.

இதை உணர்ந்த பெரியோர்கள், அவர்கள் முனிவர்களாக இருந்தாலும், யோகிகளாக இருந்தாலும், தேவ தேவர்களாக இருந்தாலும் ஏதும் செய்யாத நிலை.. இந்த நிலையில் இருந்து மனிதகுலத்தைக் கரையேற்றுவதற்காகவே பூமியில் பிறந்தவன் பிரகலாதன். ஹிரண்யகசிபுவின் சொந்த உதிரத்தில் உதித்த மகன். ஆனால் தந்தை பேரை நாமமாகச் சொல்ல மறுத்து நம் எல்லோருக்கும் பொது நாமம் நாராயணனே என்று சின்னஞ்சிறு குழந்தையாக இருந்து ஆனானப்பட்ட, சகல ஜீவிகளுக்கும் தலையாக இருந்த தந்தைக்கே சவால் விட்டவன். இதுவரை யாருமே கேட்காத, கேட்டாலும் வராத தெய்வம் இந்த சிறுவனுக்காக கூப்பிட்டால் வருமோ.. எங்கே வரவழை உன் நாராயணனை இங்கே, என்னுடைய வெற்றிக்கற்களால் கட்டப்பட்ட தூணில்..’ என்றான் ஹிரண்யகசிபு.

பிரகலாதனுக்காக, அவன் ஒருவனுக்காகவா நரசிம்மர் அவதாரம் எடுத்தார்?.. அந்த ஒருவன் கேட்டதால் நரசிங்கம் வந்தது என்னவோ வாஸ்தவம்தான்.. ஆனால் பிரகலாதன் ஒரு கருவி, மனிதகுல மேம்பாடே இங்கு முக்கியம்.. நரசிங்கம் ஹிரண்யகசிபுவை நகத்தால் கிழித்தது. அழித்தது. ஒரு மாய உலகை சிருஷ்டித்து மனிதகுல சூத்திரத்தைக் குலைத்தவன் ஹிரண்யகசிபு. பிரகலாதன் நம்பிக்கையாக கேட்டான். உடனே ஓடி வந்தது நரசிங்கம்.. உலகத்தையும் ரட்சித்தது.

இந்த அரக்கன் போனதால் மனிதகுல தர்மம் பிழைத்தது.. மனிதனுக்கு உண்மையான சுதந்திரத்தை, அந்த சுதந்திரத்தின் மூலமாக மனிதன் சிந்திக்க மறுபடி கற்றுக் கொண்டான். தனது பிறப்பின் பெருமையை உணரத் தலைப்பட்டான். இப்படி மனித குலத்துக்காகவும், மனிதப் பிறவியை மேம்பாடு செய்துகொள்ளவும் மாபெரும் சந்தர்ப்பத்தை மனிதர்களுக்குக் கொடுத்தருளிய நரசிங்கத்தை நம்மாழ்வார் பாடும்போது தன்னையே மறந்து விடுகிறார். ஏனெனில் நம்மாழ்வாரே மனிதரை மேம்படுத்த வந்தவர். ஆனால் அவருக்கும் முன்னேயே எத்தகைய ஒரு மாபெரும் பணியை மனிதகுல மேம்பாட்டுக்காக தம் தலைவர் நரசிம்மபெருமான் செய்திருக்கிறாரே என்று நினைத்ததும் மேலும் உருகுகிறார்.

ஆடியாடி யகம்கரைந்து, இசை
பாடிப்பாடிக் கண்ணீர்மல்கி, எங்கும்
நாடிநாடி நரசிங்காவென்று,
வாடிவாடும் இவ் வாணுதலே

(அசைந்து ஆடி ஆடி, மனம் நீராய் உருகி, இன்னிசையாக பாடிப் பாடி, கண்கலில் கண்ணீர் நிரம்பி, எல்லா இடத்திலும்பல முறையும் தேடித் தேடி, நரசிம்மா என்று கூவி விட்டு உடனே வாடுகிறாள் இவ்வனிதையே - தாய் தன் பெண் ஆற்றாமையைக் கண்டு வருந்துவதாக இப்பாடல் அமைகிறது)

(படங்களுக்கு நன்றி கூகிளார்.)

Friday, March 22, 2013

உப்புமாவும் விசாகையும்



வீட்டுக்கு திடீரென சொல்லாமல் கொள்ளாமல் விருந்தினர்கள் (பசியோடு) வந்துவிட்டார்கள். விருந்துபசாரம் என்ன செய்வது.. உட்காருங்கள் என்று சொல்லிவிட்டு மளமளவென அவசரத்துக்கு ஒரு உப்புமாவைச் செய்து அவர்களுக்கு விருந்தோம்பல் செய்வோம். பசியாற்றும் உணவு என்பதால் உப்புமா எப்படி இருந்தாலும் ருசிக்கத்தான் செய்யும்.. (வந்தவர்களுக்கும் வேறு வழியில்லை) அப்படிப்பட்ட சந்தர்ப்பம் ஒன்று அடியேனுக்கும்  வாய்த்தது.

நான்கு நாட்கள் முன்புதான் இந்த அழைப்பு வந்தது. அவசரம் அவசரமாக வந்து கூப்பிட்டதில் இருந்து அது புரிந்தது. உலக கவிதை தினம் - மார்ச் 21` அன்று இந்தியன் சொஸைடி ஃபார் கல்சுரல் கோ-ஆபரேஷன் அண்ட் ஃப்ரெண்ட்ஷிப் எனும் அமைப்பு விசாகப்பட்டினத்தில் இந்த கவிதை தினத்தைக் கொண்டாடுவதாகவும் நான் ஒரு தமிழ்க்கவிதை பாடவேண்டுமென்றும், அதற்கான தெலுங்கு விளக்கமும் தரவேண்டுமென அவர்களால் கோரப்பட்டு நான் பதில் கூறுமுன்னேயே என் ஒப்புதல் பெறப்பட்டதாகவே சொல்லிவிட்டுச் சென்றார்கள். என் தூக்கத்தையும் கெடுத்தார்கள்.

கதையாளனுக்கும் கவிதையாளனுக்கு ஏகப்பட்ட வித்தியாஸம் உண்டு. ஒருவேளை ஆலையில்லா ஊரில் இலுப்பைப்பூ சர்க்கரை என்பார்களே.. அது போல நினைத்துக் கூப்பிட்டார்களோ என்னவோ.. இருந்தாலும் இதையும் ஒரு பிடி பிடித்துவிடுவதுதான்.. தேடிவந்ததை ஏன் விடுவானேன் என மனதுக்குள் நினைத்துக் கொண்டு நான் இலக்கிய உலகில் வளர வழி வகுத்த இந்த விசாகையைப் பற்றி ஒரு கவிதை எழுதி வாசித்துவிடுவது என்று தீர்மானித்துக் கொண்டேன்.. இதோ கவிதையும் எழுதி நேற்று வாசித்தும் ஆயிற்று. அதற்கு தெலுங்கு விளக்கமும் கொடுத்து அதையும் வாசித்திருந்தேன். அதை அப்படியே அவர்கள் மைத்ரி மாத இதழில் பிரசுரிக்கப் போகிறார்களாம்.. ஒருவேளை அவர்களின் பசிக்கு என் கவிதை உப்புமா போல பட்டிருக்கலாமோ என்னவோ.. (அப்படித்தான் பட்டது எனக்கு)


எந்தைமுன் வினையால் என்முன்னே எனைக்காண
முந்தைய நாளொன்றில் ஒளிபடர தோன்றியவள்
அந்தமிலா அழகுடையாள் அதிதேவதை அவளாம்
சிந்தனைக்கு விருந்தாக சொல்லியதைத்தான் கேளீரே!

பிந்தைய நாளெல்லாம் பிழைகள் பெரிதாகும்
வெந்திடும் நரகமாய் வாழ்வை வைத்துவிடும்
தொந்தரைதான் மிஞ்சும் துன்பங்கள் பெருகும்
எந்திர வாழ்வு வரும் வேகம் பெரிதாகும் 
மந்திரதந்திரமும் மாயாஜாலமும் கொண்டதாய்
மந்தைக் கூட்டமாய் மானிடர் நடுவே
மந்தஹாசமாய் வாழ இடமொன்று வேண்டாமோ
தந்தைதாயை விட்டு தனியனாய் வந்தாலும்
அந்தரங்க அபிலாஷை ஆயிரம்தான் இருந்தாலும்
சிந்தையிலே தெய்வம்விட்ட வழியென்று சொல்வாய்
பிந்தி வரும்நாளைப் பற்றிப்பெரும் கவலைகொள்வாய்
எந்த ஊரொன்று மனிதத்தைப் போற்றுகின்றதோ
எந்த ஊரொன்று மானிடத்தைக் காக்கின்றதோ
எந்த ஊரொன்று கலையழகை மதிக்கின்றதோ
எந்த ஊரொன்று கல்விச்செல்வம் தருகின்றதோ
அந்த ஊருக்கு  வழிசொல்வேன் கேளாயோ

நல்லாறும் வற்றிப்போய் கலியாளும் காலமிது
வல்லூறு போல் மனிதர்மாறும் வேளையிலே
கல்லாகிப்போன மனம் கொண்டோர் ஆள்கையிலே 
புல்லைப்போல் புழுவைப்போல் மதிப்போர்தம் மத்தியிலே
சொல்லால் தீயாய் சுடுகின்ற கூட்டத்திலே
பொல்லாத பலபேர்கள் பலமாகும் போதினிலே
செல்லாக்காசாய் சென்றிடும் இப்புவியிலே அதிசயமாய்
கல்லாதான் பொல்லாதான் பொய்யனென வந்நெஞ்சர்
இல்லாதார் அதிகம் இருப்பார் இடமாக
பல்சுவையாய் பாங்குடனே சுந்தரத்தெலுங்கு பேசி
நல்லோர்பலர் நாவும் நலம்பாட நீ வாழ
சில்லென்ற காற்றும் சிறப்பான ம்லையழகும்
நில்லாமல்  கொள்ளாமல் அள்ளாமல் குறையாமல்

அலைகடலும் ஆர்ப்பரித்து ஆரவாரமாய் கரைவந்து
நிலைகொள்ளாமல் கரைதேடி  நிதம்வந்து  வணங்கும்
கலையழகாய் கருணையுடன் கனக மகாலட்சுமியாய் 
கோலமயிலாய் குடிகொண்டு அருள்தரும் சிறந்தநகராம்

விசாகையெனும் பெயராம் அங்கிருப்போர் யாவும்
விசால மனதுடையராம் இச்சைகொண்டு செல்வாயே
அச்சமின்றி வாழ அந்நியருமங்கு வருவாரே
இச்சகத்தே தீந்தெலுங்கும் செந்தமிழும் சேர்ந்தோங்க
பச்சைமனதோடு பத்திரமாய் பக்குவமாய் பலரோடு
சுயேச்சையாக இருப்பாயே பல்லாண்டு காலம்

தேவதேவியே எனையென்னாளும் கண்போல் காக்கும்
பவதாரிணியே கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் பர
தேவதையே என்னேயுன்பேச்சு உன்போக்கே என் போக்கு
காவலாய் கனகமகாலக்ஷ்மியாய் எக்கணமும் துணையிருக்க
ஆவலாய் செல்வேனே அழகான விசாகைக்கு
ஏவல்செய்வேனே.. தமிழார்வத்தால் கோலம் செய்வேனே
காவியம் செய்வேனே கர்த்தர்வியமெனக் கொண்டு
ஓவியக்காரியே ஓங்காரியே ஒப்பிலாதவளே வாழ்கவாழ்கவே!!




Friday, December 21, 2012

ஸ்கந்தா, குமரா, கார்த்திகேயா, சுப்பிரமணியா - 4

முருகனும் ஆந்திரமும் - 4
                    பிக்கவோலு சுப்பிரமணியர்

”ஏட்டின் விதிப்படியே கொ(ண்)டு  மா புர வீட்டில் அடைத்து
இசைவே கசை மூணு அதில் ஏற்றி அடித்திடவே 
கடல் ஓடம் அது என ஏகி ஏற்கும் எனப் பொருள் ஆசை 
பெ(ண்)ணாசை கொளாது என திரியா பரியா 
தவம் ஏற்றி இருப்பிடமே அறியாமலும் உடல் பேணி
பூட்டு சரப்பளியே மதனாம் என 
ஆட்டி அசைத்தி இயலே திரி நாளையில்
பூத்த மலக் குகையோ பொதி சோறோ என 
கழு காகம் போற்றி நமக்கு இரையாம் எனவே கொள 
நாட்டில் ஒடுக்கு எனவே விழு போதினில் 
பூட்டு பணி பத மா மயிலா அருள் புரிவாயே” - (திருப்புகழ்)

(சுருக்கமான விளக்கம்) விதிப்படியே பிறந்து சுகதுக்க வாழ்க்கைப் படகில் பயணித்து, நல்லது கெட்டது தெரியாமல், அழகிய மன்மதனாக பாவித்து பெண்மீதும் பொன் மீதும் ஆசை வைத்து கஷ்டப்பட்டாலும், நல்ல நெறிக்கான தவத்தை செய்யாமல் கடைசிகாலம் வரை இஷ்டம் போல இந்த ஈனவாழ்க்கை வாழ்ந்து உயிர் பிரிய உடல் அழுகும் காலத்திலே எனைக் கரையேற்ற காப்பாற்ற வருவாயே.. கால்களில் பாம்பை அழுத்தமாகக் கட்டியுள்ள அழகிய மயிலின் மீது அமர்வோனே, நீ அருள் புரிவாயாக. பனி (phani) என்றால் நாகம் எனப் பொருள்.

அருணகிரியாரின் இந்த அழகிய திருப்புகழ் பாடலை ஒருமுறை என் சித்தியும், திருப்புகழின் பெருமையைப் பரப்பி வருபவருமான திருமதி ராதா முத்துசாமி சென்னையை அடுத்த பள்ளிக்கரணை எனும் ஊரில் ஒரு முருகபக்தர் வீட்டில் பாடிக்கொண்டிருக்கும்போது நிஜமாகவே ஒரு நாகப்பாம்பு வீட்டின் தாழ்வாரம் வரை வந்திருந்து நின்று தலையெடுத்து பாடல் முடிந்தபின்னர் மெதுவாக சென்றுவிட்டதையும் இன்றைக்கும் சொல்லுவார். சாட்சாத் முருகன் அவனே பாம்பு வடிவில் வந்து இந்தப் பாடலைக் கேட்டுவிட்டுப் போனான் என்பார்.

இந்துமதத் தெய்வங்கள் அனைவருமே நாகத்தோடு சம்பந்தப்பட்டவர்தாம். சிவன் உடலெங்கும் நாகாபரணமாக அணிந்தவர். அவர் பெயரே நாகபூஷணன. திருமாலுக்கு ஆதிசேஷன் படுத்தால் படுக்கை, உட்கார்ந்தால் இருக்கை, நின்றால் குடை. விநாயகரின் புரிநூலே பாம்புதான். அன்னை பார்வதியின் கையில் கங்கணமாக நாகம் இருக்கும். மயிலேறும் வெற்றி வேலனுக்கோ காலடியில் பாம்பு என்றும் உண்டு.

நாகப்பாம்பை தமிழ்நாட்டில் அம்மன் உருவாக வணங்குவோர் அதிகம். தமிழகத்தில் எல்லா அம்மன் கோயில்களிலும் நாகப்புத்து நிச்சயமாக இருக்கும். ஆனால் முருகன் கோயில்களில் இந்த வழிபாடு கிடையாது. நாகம்தான் முருகன் என்பதில் இன்றைக்கு தமிழர்களுக்கு இருக்கும் நம்பிக்கையை விட ஆந்திரர்களுக்கு நம்பிக்கை  அதிகமாக இருப்பதைப் பரவலாகவே பார்த்துள்ளேன். நாகதோஷம் உள்ளவர்கள் ஆறு வாரம் முருகனுக்கு செவ்வாயன்று அபிஷேகம் செய்து வந்தால் அந்த தோஷம் நிவாரணம் ஆகும் என்பது ஆந்திரா-கர்நாடகா பிராந்தியத்தில் இப்போதும் பிரபலம். நாகபஞ்சமி கர்நாடகத்தில் விசேஷம் என்றால் ஆந்திரத்தில் நாகசதுர்த்தி மிகவும் விசேஷம். தீபாவளி அமாவாசையை அடுத்து நான்கு நாட்களில் வரும் ‘நாகுலு சவிதி’ இங்குள்ளோருக்கு பண்டிகை தினம். அரசாங்க விடுமுறை தினம் கூட. இன்றும் கூட ஆந்திரத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாயன்று முருகனுக்கு (எங்கெல்லாம் முருகன் சன்னிதி உள்ளதோ அங்கெல்லாம்) காலை வேளையிலிருந்து மதியம் வரை அபிஷேகம் நடந்து கொண்டிருப்பதை சகஜமாகக் காணலாம். வாரத்தின் மற்ற நாட்களில் முருகனுக்கு இந்த விசேஷ பூஜையை இவர்கள் செய்வதில்லை என்றும் சொல்லலாம். கிருத்திகை நட்சத்திரத்தில் அத்தனை பரபரப்பு காட்டுவதில்லை. ஆனால் சஷ்டி திதி தோறும் முருகனுக்கு சிறப்பு வழிபாடு உண்டு.
                   மோபிதேவி சுப்பிரமணியர் ஆலயம்

கிருஷ்ணா மாவட்டத்தில் அமைந்துள்ள முருகத்தலமான மோபிதேவி கோயில் வழிபாடு எப்போது ஸ்தாபிதம் ஆனது என்பதற்கான ஆதி வரலாறு இல்லை. இங்கே அர்ச்சகராக இருக்கும் பனிபூஷணம் (இவரும் நாகத்தின் பெயர் கொண்டவர்தான் - Phanibhushanam) தம் முன்னோர்கள் காலம் காலமாக வழிபட்டு வருவதாகவும் தற்போதுள்ள கோபுரமும் பிரகாரங்களும் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகக் கூறினார். ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளாக இங்கே சுப்பிரமணியர் நாகவடிவில் வழிபடப்படுவதாகவும் இங்கே தவம் செய்த அகஸ்தியமுனியால் இந்த நாகசுப்பிரமணிய வழிபாடு இந்த இடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது என்று தல வரலாறு கூட சொல்கிறது (தெலுங்கு மொழியில் ஒரு புத்தகமாக எழுதி வெளிட்டு இருக்கிறார்கள்). கோயிலின் உட்புறத்தில் ஏராளமான புற்றுகள் இன்றும் உள்ளன. புற்றுகளை தாண்டி சென்றால் பெரிய புற்று இருக்கிறது. புற்றுக்கு லிங்காதரணம் செய்துள்ளனர். இருபக்கங்களிலும் வள்ளிக்கும் தெய்வானைக்கும் சன்னிதிகள் உண்டு. இங்கு எல்லாமே முருகன்தான்.. எங்கும் முருகன். நான் சென்ற தினத்தில் ஏகப்பட்ட மக்கள் கூட்டம். திருவிழா போல இந்த முருகன் கோயிலைக் கண்டதில் அடியேனுக்கும் ஏகப்பட்ட மகிழ்ச்சி.. தமிழக ஆலயங்களில் முருகனை ஆண்டியாகப் பார்த்துள்ளோம், தனி ஒருவனாக கையில் வேலேந்திப் பார்த்துள்ளோம், வள்ளிக் கணவனாக சிரித்தமுகத்தோடு பார்த்துள்ளோம், வள்ளி தேவானையோடு அருள்புரிவதையும் பார்த்துள்ளோம், சிவனுக்கே குருவாக சிவகுருநாதனாகப் பார்த்துள்ளோம், ஆறுமுகத்தையும் பார்த்துள்ளோம், மயில் வாகனனாக பார்த்துள்ளோம்.. ஆனால் மோபிதேவியில் புற்று வடிவத்தில் உள்ளே இருந்துகொண்டு லிங்காரூபனாக அருவுருவாகக் காட்சியளிக்கும் சுப்பிரமணியத் தேவனை நினைத்துப் பார்க்கையில் அருணகிரியாரின் கந்தர் அனுபூதி பாடல் நினைவுக்கு வந்தது. ‘முருகன் தனி வேல் முனிநம் குருவென்என்று தொடங்கும் அந்தப் பாடலில் முருகன் அவன் ரூபம் எதுவாக இருக்கும் என்ற ஆராய்ச்சியை நமக்குள் ஏற்படுத்தி விட்டு ஒரு அசாதாரண அனுபூதியையும் மனதுக்குள் உண்டாக்கிவிடுவார் அருணகிரிநாதர்.
                              குக்கே சுப்பிரமணியர் கோயில்

தென்னிந்தியாவின் கிருஷ்ணாநதி கீழைக்கடலில் கலக்கும் பகுதியில், அதாவது இன்றைய குண்டூர், பிரகாசம், கர்நூல் மாவட்டப் பகுதியிலிருந்து மேற்கே அரபிக்கடலோரம் இருக்கும் மங்களூர், உடுப்பி, கொங்கணி தேசம் வரை குறுக்காக இருப்பது போல விட்டு விட்டு மலைவரிசை இருப்பதை சரித்திர ஆய்வாளர்களும் பூஇயல் ஆய்வாளர்களும் நன்றாகவே அறிவார்கள். இந்த குறுக்கு வரிசையின் நடுவே தட்சிணபீடபூமியும் இணையும்.. நல்லகொண்டா என்று தெலுங்கில் அழைக்கப்படும் இந்த ஆந்திரமலைப்பகுதிகளில் இருந்து ஆரம்பித்துப் பார்த்தோமேயானால், ஸ்ரீசைலம், அஹோபிலம், (இன்னமும் இவைகளில் புகழ்பெற்ற திருமலையையும் சேர்த்துக்கொள்ளலாம்),சித்திரதுர்கா, சந்திரகிரி, இந்திரகிரி, சிக்மகளூர், பத்ராவதி போன்ற மலைவளங்கள் மேற்கே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைத்தோடரில் விட்டு விட்டு இணைவதையும் பார்க்கலாம். கிருஷ்ணை நதி மஹாராஷ்டிர மாநிலத்தில் ஆரம்பித்து கர்நாடகத்தைக் கடந்து ஆந்திராவில்தான் தான் அள்ளிக்கொண்டு வந்த வளங்களையெல்லாம் வழங்குகிறது. இந்த கிருஷ்ணா நதி ஆந்திர-கர்நாடக எல்லை வரை ஏறத்தாழ மலைகளையே ஒரு பக்க எல்லையாக வைத்துக் கொண்டுள்ளது என்றால் அது மிகையல்ல. ஏழாம் நூற்றாண்டில் சாளுக்கியர்கள் ஆட்சியின் போதெல்லாம் இந்தப் பகுதிகள் அனைத்தும் ஒரே அரசின் கீழ்தான் இருந்தன. பின்னால் மேலை, கீழை என அந்த ராஜவம்சம் பிரிந்தாலும் மக்களிடையே உள்ள ஒருங்கிணைப்பு நன்றாகத்தான் இருந்திருக்கவேண்டும் என்று சொல்லவேண்டும்.
               ( நாகவடிவில் சுப்பிரமணியர், பஞ்சதாரா)

இங்கு இன்னோர் விசித்திர மக்கள் வழக்கமும் உண்டு. இன்றும் கூட ஸ்ரீசைலத்தில் உள்ள மல்லிகார்ஜுன தலத்துக்கு கர்நாடகத்தில் உள்ள மலைப்பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருவது பல நூறாண்டுகளாக நிகழ்ந்து வருவது.. மஹாசிவராத்திரியன்று இவர்கள் கூட்டம் மிக அதிகமாக இருக்கும். இந்தப் பழக்க வழக்கங்களின் நீட்சியாகத்தான் முருக வழிபாடும் அமைந்திருக்கும் என்று எண்ணவும் தோண்டுகிறது. குக்கே எனும் மேற்குக் கரையோர சுப்பிரமணியத் தலம் மிகவும் விசேஷமாக பெயர் பெற்றிருக்கும் ஊராகும். இங்குள்ள சுப்பிரமணியர் பாம்பு வடிவில் தரிசனம் தருகிறார். இங்கு மட்டுமல்ல. புகழ்பெற்ற உடுப்பி கிருஷ்ணன் கோயிலிலும் கூட முருகனுக்கு ஒரு சன்னிதி உண்டு.. அங்கேயும் முருகன் நாகரூபத்தில்தான் கோயில் கொண்டுள்ளார். இன்னும் ஆந்திரப்பகுதியிலேயே சற்று வடக்காக சென்றால் சில பழைய தலங்களிலே பாறையிலே வரையப்பட்ட நாக சிற்பங்களை இன்னமும் சுப்பிரமணியமாகவே வணங்குகிறார்கள்.
                   (ஹைதராபாதில் புதிதாக எழுந்த கோயிலில்)

வாசுகியான நாகம் மேற்கு மலைத் தொடரின் பகுதியிலே குக்கே எனும் ஊரிலே ஒரு குகையிலே பல்லாண்டுகள் தவமிருந்து சுப்பிரமணியத்திடம் வேண்டியதாம். முருகன் வாசுகியின் தவத்துக்கு மதிப்பளித்து நாகரூபம் எடுத்ததாகச் சொல்கிறார்கள். கருடபக்‌ஷிக்கு பயந்து இங்கு ஒதுங்கியபோது முருகன் வாசுகியைக் காத்து ரட்சித்ததாகவும், முருகனை என்றும் தன்னுடனே இருக்கக் கோரியதாகவும் தன் பக்தனின் கோரிக்கையை ஏற்று வாசுகியின் ரூபத்தில் இருப்பதாகவும் இன்னொரு புராணக்கதை உண்டு. குக்கே கோயிலில் கருடன் தூண் உண்டு. வாசுகியின் சுடுமூச்சைக் கட்டுப்படுத்தவே அந்தத் தூண் அங்கு உள்ளதாகச் சொல்வர். இங்கு நாகபஞ்சமியன்று கூட்டம் அலைமோதும்.
                                 (பீமாவரம் சுப்பிரமணியர் )

ஆனால் ஆந்திரமக்கள் முருகனின் மேல் தணியாத ஆசைகொண்டு அவனை ஆராதிப்பவர்கள். ஆதிகாலத்தில் நாகரூபமாக வழிபட்டமுறையை அப்படியே இன்னமும் பின்பற்றினாலும் தமிழர் முருகனை வழிபடும் முறையையும் பின்னாளில் ஏற்றுக்கொண்டவர்கள். ஒன்பதாம் நூற்றாண்டில் முதன் முதலாக ஆகமவிதிக்குட்பட்டு இங்கு சிலை வடிவ வழிபாடு மூலம் முருகன் வணங்கப்பட்டதாக இங்குள்ள சில கோயில் தல வரலாறுகள் தெரிவிக்கின்றன. கோதாவரி நதியின் வடகரைப் பிரதேசமான பிக்கவோலு எனும் தலத்தில் மிகப் பழைய முருகர் கோயில் கட்டப்பட்டது. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் இந்தப் பகுதிகளில் ஆகமவிதிகளுக்குட்பட்டு சிவன் கோயில்கள் கட்டப்பட்டன. அவற்றில் சாமல்கோட்டா (குமாரராமம்), திராக்‌ஷாராமம், பீமாராமம் சிவன் கோயில்களில் பிரத்யேகமாக முருகன் சன்னிதி கட்டப்பட்டு முருகன் சிலாரூபத்தில் ஆராதிக்கப்படுகிறான்.
                               ( குமாரராமம் - சாமல்கோட் முருகன்.)

இன்னும் சற்றும் வடக்கே சென்றால் விசாகப்பட்டினமும் ஸ்ரீகாகுளமும் வருகிறது. விசாகப்பட்டினத்தில் விசாகேசுவரன் என்ற பெயரில் முருகன் கோயில் இருந்ததற்கான செவி வழி வரலாறும், காலப்போக்கில் இங்கு ஏற்பட்ட கடல் சீற்றத்தில் அழிந்து போனதாகவும், கடற்கரையில் இந்த விசாகேஸ்வரன் கோயில் இருந்த காரணத்தினால் இந்த இடத்துக்கு விசாகப்பட்டினம் என்றும் பெயர் வந்ததாக இங்குள்ள ஆந்திரப் பல்கலைக்கழக சரித்திர ஆய்வுக் கட்டுரைகள், குறிப்பாக பேராசிரியர் திரு கே. சுந்தரம் போன்ற சான்றோர்கள் எழுதியது சொல்கின்றன. கலிங்கத்துப் பரணியில் பாடப்பட்ட நாயகன் கருணாகரத் தொண்டைமான் இங்கு தங்கியிருப்பதற்கான ஆதாரங்கள் சோழர் கால தமிழ் கல்வெட்டொன்று தெரிவிக்கிறது. கலிங்கத்தை வென்றதனால், இந்த நகருக்கு தங்கள் அரசன் நினைவாக குலோத்துங்க சோழபட்டினம் என்று பெயர் மாற்றியதாகவும் தகவல்கள் உள்ளன. விசாகேஸ்வரர் லிங்க வடிவில் அருவுருவாக இருந்தார் என்று சொல்வோரும் உண்டு.

ஸ்ரீகாகுளம் ஜில்லாவில் ஓடும் வம்சதாரா நதியின் வடகரையில் உள்ள சிவத்தலம் முகலிங்கேசுவரர் (ஸ்ரீமுகலிங்கம்) கோயில். இக்கோயில் ஒன்பதாம் நூற்றாண்டில் ஒரியக் கலைவடிவத்தில் கட்டப்பட்டதாகும். பதினோராம் நூற்றாண்டில் நடந்த சோழ கலிங்க முதலாம் யுத்தத்தில் (கிபி.1090) கலிங்கர்களை வீழ்த்தியபின் சோழ இளவரசனான விக்கிரமன் இங்கு முருகன் சிலையை எடுப்பித்திருப்பதை திராட்சாராமக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் சொல்கின்றன. இந்த சன்னிதியும் முருகனும் (கையில் கழியுடன் இருப்பான்) இன்றும் கூட பொலிவோடு இருப்பதை இங்கு காணலாம்.

பிற்காலத்தில் அதாவது கடந்த நூறு ஆண்டுகளில் எத்தனையோ இடங்களில் ஆந்திராவில் பல புதிய முருகன் கோயில்கள் எழுப்பப்பட்டுள்ளன. பெரிய கோயில்கள் எனச் சொல்கையில் விஜயவாடாவில் இந்திரகிலாத்திரி மலைமேலே முருகன் வள்ளி தேவசேனா சமேதருடன் கோயில் கொண்டுள்ளான். ஆந்திரத் தலைநகரமான ஹைதராபாதில் ஸ்கந்தகிரியில் முருகனுக்கு சிறப்பான முறையில் கோயில் எழுப்பப்பட்டு வணங்கப்படுகிறான்.

மிகப்பழங்காலந்தொட்டு முழுமுதற்கடவுளாகத் தமிழர்களால் போற்றி வணங்கப்பெற்று வரும் திருமுருகக் கடவுள் ஆந்திரர்களால் ஸ்கந்தனாகவும், குமாரசுவாமியாகவும், கார்த்திகேயனாகவும், சுப்பிரமணியனாகவும் அதே பழங்காலந்தொட்டு வணங்கப்பட்டு வருகிறான். இங்குள்ள பழங்கால கோயில்களில் முருகனைத் தரிசனம் செய்யும்போதெல்லாம் இந்த விவரங்களையெல்லாம் எழுதி எல்லோருக்கும் தெரியப்படுத்தவேண்டும் என்றும் ஒவ்வொரு பொழுதும் தோன்றும்தான்.. ஆனால் அதற்கும் அவனருள் வேண்டுமே..

முருகனைப் பற்றி சொல்ல சொல்ல நா இனிக்கும்தான்.எழுத எழுத எழுத்தும் கூடும். அதனால் எழுதிக்கொண்டே போகலாம். முருகனின் ஆந்திர விலாஸத்தைப் பற்றி ஏற்கனவே இந்த வலைப்பூவில் ஒரு பதிவு செய்திருக்கிறேன். இருந்தாலும் இப்போது பதிவு செய்துள்ள இந்தக் கட்டுரையால் என் மனம் நிறைகிறது. அப்படிப்பட்ட மனநிறைவைத் தந்த எந்தை முருகனை எந்நாளும் என் மனத்தில் வந்து இப்படியே ஆக்கிரமிக்கவேண்டும் என்ற நினைப்போடு, பொறுமையாக படித்த வாசக அன்பர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றி! அதே போல அவ்வப்போது பல விஷயங்கள் விஷயதானம் செய்த பெரியவர்களுக்கும், நண்பர்களுக்கும் என் நன்றி உரித்தாகுக!!

எந்தாயுமெனக் கருள்தந்தையுநீ
சிந்தா குலமா னவைதீர்த் தெனையாள்
கந்தா கதிர்வே லவனே யுமையாள்
மைந்தா குமரா மறைநா யகனே.
(அருணகிரியாரின் ‘கந்தர் அனுபூதியிலிருந்து)

(படங்கள்: பிக்காவோலு, பீமாவரம் முருகர் - நன்றி, நண்பர் திரு கே.எஸ். சங்கரநாராயணன்.)

Tuesday, December 18, 2012

ஸ்கந்த, குமாரா, கார்த்திகேயா, சுப்பிரமணியா!! - 3


முருகனும் ஆந்திரமும் - 3





சிவனும் சகதியுமாக இணைந்ததே சிவஸ்வரூபம் என்பார்கள். சிவஸ்பரூபத்தின் நெற்றிக்கண்ணிலிருந்து வெளிப்பட்ட ஐந்து பொறிகளும், சிவஸ்வரூபமே ஆறாவது பொறியுமாக மாற, அந்த ஆறு பொறிகளையும் வாயு எடுத்துக்கொண்டு வந்தாலும் அந்த அக்கினிக்குஞ்சுகளின் அதிதீவிரத்தனமையைத் தணிக்க ஆகாய கங்கையே பெற்றுக்கொண்டு ஆறு கார்த்திகைப் பெண்களிடம் விடுத்ததாகவும்,  ஆறு பொறிகள் ஆறு முகங்களாக கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்து அன்னை பார்வதியின் அருளால் ஒரே ரூபமாக மாறி ஸ்கந்தன் எனும் பெயர் பெறுகிறான்.

ஆனந்தோ பிரஹ்மேதி வஜநாத் தைத்ரிய உபநிஷத்தில் (III,6) சொல்லும்போது அதன் பொருளாக சிவா என்பது சத்ஆகவும், உமையம்மை ‘சித்ஆகவும், ஸ்கந்தன் ‘ஆனந்தமாகவும் முழுமைத்தன்மை உடையவனாகவும் குறிப்பிடப்படுகிறான். அவனுக்கென உருவான சரவணபவ எனும் ஆறெழுத்து மந்திரத்தில் ஐந்தெழுத்து சிவனாகவும் ஆறாம் எழுத்து சக்தியாகவும் கருதப்படுகிறது. பரப்பிரம்ம ஸ்வரூபத்தை யாராலும் வர்ணிக்க இயலாது. யாராலும் அறிய முடியாது. யாராலும் அறிவிக்கவும் முடியாது. இந்து தர்மத்தின் பவித்ரமான சொத்தான வேதங்களாலும் கூட இந்த பரப்பிரும்மமானது இப்படித்தான் இருக்கும் என்று கற்பனை செய்யக்கூட முடியாது. இப்படி யாராலும் கற்பனையால் கூட அடையமுடியாதவன் அவனே விரும்பினால் மட்டுமே அவனால் ஏனையவருக்குக் காட்சியருள முடியும். ஏறத்தாழ முருகன் அவதாரத்தை இப்படி எடுத்துக்கொள்ளலாமோ என்னவோ..

அதனால்தானோ என்னவோ அவனை வழிபடுபவர்களும், அவன் அருளைப் பெறுபவர்களும், அவனைக் கண்ணாரக் கண்டு துதிப்பவர்களும் கூட ஒவ்வொருவிதமாக அவனை வர்ணிக்கிறார்கள். அவர்கள் வழிபடும் உருவமும் வெவேறு விதமாக மாறுபடுகின்றது. கந்தனின் தோன்றுதல் என்பது தாரகாசுரனை சம்ஹாரம் செய்வதற்காக என்று காரண காரியம் செய்தாலும் அவன் இந்த உலகத்தவரின் நன்மைக்காகத்தான் வந்தான் என்பதை எத்தனையோ காவியங்கள் வரலாறுகள், ரிஷிகள், யோகிகள், சான்றோர்கள் நமக்குச் சொல்லிச் சென்றார்கள்..

முருகன் வழிபாடு என்பது அவன் எப்படியெல்லாம் வழிபடவேண்டும் என நினைக்கிறானோ அப்படியெல்லாம் அந்தத்த பிராந்தியங்களில் நடைபெறுகிறது என்றே சொல்லவேண்டும். அவன் தீப்பொறிகளாகத் தோன்றியவன், செக்கச் செவேலெனும் செம்மை நிறத்து ஜோதியாக பழங்குடிகள் (சேயோன்) வணங்கினார்கள். ஜோதிஸ்வரூபமானவன் தெய்வம் என்பது எல்லா இந்துமதப் பிரிவுகளும் ஒப்புக்கொண்டவைதான். 'திருமுறுகாற்றுப்படை'  பாடலில் 'முருகனை' ஜொலித்தபடி இருக்கும் 'சூரியனுடன்' ஒப்பிட்டு, கடலில் இருந்து வெளிச் சிதறியபடிக் காட்சி தரும் 'சூரிய' ஒளி போல 'முருகனின்' உடலும் ஜொலித்தது என்று கந்தனைக் குறித்துப் பாடப்படுகின்றது.

கந்தன் இயற்கையோடு இயைந்தவன். கங்கைதேவியிலிருந்து கார்த்திகைப் பெண்கள் வரை அன்னை சக்தியோடு முருகனின் தாய் ஸ்தானத்துக்கு போட்டி போடுவார்கள். அதுவும் இயற்கைதான். தமிழ்நாட்டின் காடுகளில் அவ்வை பிராட்டியின் பேரனாகவும் பரிமளித்தவன் அல்லவா அவன். இயற்கை என்று வர்ணிக்கப்பட்டதால் இயற்கையின் அத்தனை ஸ்வரூபத்திலும் நீககமற நிறைந்தவன். பிரபஞ்சத்திலிருக்கும் அத்தனை வகைப் பிறவிகளுக்கும் சொந்தமானவன். குறிஞ்சித்தெய்வம் என்பார்கள் சிலர். மலைவாழ் மக்களின் செலவக்குமரன் என்பார்கள். குறிஞ்சி என்றல்ல தமிழில் ஐந்திணை என்று சொல்லப்படும் ஐந்து வகை நிலங்களிலும் அவன் பேசப்படுவதை சங்க இலக்கியங்கள் வர்ணிக்கின்றன. மானிடப் பிறவி என்றில்லை. எந்த வகைப் பிறவிக்கும் அவன் பாந்தமானவன், இதை ஆந்திர அரசர்கள் உணர்ந்தவர்களாதலால் பழைய கால நாணயத்தில் முருகனை ஆறுமுகமாகவும், நாகம், மான், மரம் போன்ற பிறவிகளையும் சேர்த்து கல்லில் செதுக்கி வழ்பட்டார்கள்.

(Scholars have discussed about the “Karttikeya type” of coins in the Journal of the Numismatics Society of India and other works. The depiction of Vishaka, Kumara and Mahasena prominently on the Yaudheya, Kushana, Kumara and Kuninda coins during the second centuries of before current / common era and after is very interesting in numismatic studies. (திரு கே.வி.,ராமக்ரிஷ்ணாராவ் அவர்களின் கட்டுரையிலிருந்து)
                                                           
இங்கு ஏற்கனவே கூறியதைப் போல மஹாசேனனுக்குக் கோயில் எழுப்பியது போலவே இக்குவாகு அரசர்கள் தங்கள் நாணயங்களைக் கூட ஆறுமுக உருவத்தோடு பொறித்து வெளியிட்டிருக்கிறார்கள். இன்றைய நாகார்ஜுன கொண்டா பகுதியில் நாகார்ஜுன சாகர் எனும் மிகப் பெரிய அணை கட்டப்பட்டுள்ளது. (அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அடிக்கல் நாட்டியது) 1926 ஆம் ஆண்டில்தான் அங்கே பல இடங்கள் தோண்டப்பட்டன. பௌத்தர்களின் புதையுண்ட புராதன சின்னங்கள் பல கிடைத்தன. 1953ஆம் ஆண்டில் தோண்டப்பட்டபோது மேலும் பல குறிப்புகள் கிடைத்தன. அப்போதுதான் முருகப்பெருமானான மஹாசேனனின் ஆலயக் குறிப்பும் சரித்திர ஆய்வாளர்களுக்கு விரிவாகக் கிடைத்தது பழங்கால நாணய சேகரிப்புகளிலிருந்து கிடைக்கப்பெற்ற சில காசுகளில் கார்த்திகேயனின் ஆறுமுக உருவமும் அருகே மான், வேல் போன்றவை தெரியவந்தது. நாணயத்தின் பின்பக்கமும் தேவசேனா தெய்வத்துக்கும் ஆறுமுகம் கொடுத்ததாகவும் பண்டைய காலத்தர்கள் ஷண்முகி அல்லது சஷ்டி என அழைத்ததாகவும் தன் கட்டுரையில் கே.வி. ராமகிருஷ்ணராவ் குறிப்பிடுகிறார். தேவசேனாவையும் கார்த்திகேயனையும் தெய்வமாகப் போற்றி வழிபடும் முறையையும் தோற்றுவித்தார்கள்.

இன்றைக்குக் காண்பது போல ஆகம சாத்திரப்படி கோவில்கள் கட்டுவது என்பது அந்தக் கால கட்டத்தில் பாரதம் எங்குமே அரிதாக இருந்தது. தமிழகத்தில் கூட ஆகமவிதிகளுக்குட்பட்டு கோயில்கள் சங்க காலத்துக்குப் பின்னர்தான் கட்டினார்கள் என்று சரித்திர ஆய்வாளர்கள் ஒப்புக் கொள்வர். ஆனால் திரு உருவச் சிலைகளை எடுப்பித்து வணங்குவது என்பது கி.மு. காலத்திலேயே இருந்தது. ஸ்தூபமும் உருவச் சிலைகளையும் எடுப்பிப்பதை புத்தமதத்தைப் பின்பற்றியோர் ஏராளமாக செய்துள்ளார்கள் என்பதை நாம் அறிவோம். அதே போல நம் கலியுகத் தெய்வமான திருவேங்கடத்தான் வானமே கூரையாக சூரிய சந்திரர்கள் இருவரும் இரண்டு பக்கங்களில் ஒளிவீச, வேங்கட மலை மீது நெடியோனாக நின்றதை இளங்கோ அடிகள் குறிப்பிட்டிருப்பதைப் பார்த்தால் திருவேங்க்டத்தவனுக்கு கோயில் என்பது பிற்காலத்தில்தான் எழுப்பப்பட்டிருக்கவேண்டும் என்று தெரிய வரும். அது போல ஸ்ரீசைலம் அமராவதி போன்ற இடங்களிலும் கோயில் என்பது ஒரு சிறிய வளாகமாகவோ, அல்லது சிலைகளுக்கான இருப்பிடமாகவோத்தான் இருந்திருக்கவேண்டும். இக்கோயில்கள் யாவும் இவை தோன்றிய சமயத்தில் ஆகம சாத்திரங்களுக்கு உட்படவில்லை என்பதைக் கூட நாம் இங்கே உணரவேண்டும். (இன்றைய ஸ்ரீசைலம் கோயில் பல அரசர்களால் பல்வேறு கால கட்டத்தில் கட்டப்பட்டது. மராத்திய சிவாஜி கூட அங்கே மேலைக் கோபுரம் கட்டியுள்ளார்).

கிருஷ்ணை அல்ல்து கோதாவரி நதி தீரத்து மக்கள் நிலவரத்தைப் பொதுவாகப் பார்க்கும்போது மலைவாழ்மக்களே அதிகம் இருக்கிறார்கள். மலைவாழ்மக்கள் எனும்போது அவர்கள் வழிபாடுமுறையில் தொன்மத்தை அப்படியே பாதுகாத்து வருவார்கள். இன்றளவும் தொன்மத்தைப் பாதுகாத்து வரும் ஆதி குடியினர்கள் கூட இவர்கள்தான். இவர்களில் பல பிரிவினர் இருந்தாலும் பொதுவாகவே தங்கள் பூர்வீகர் நாகர் என்று சொல்லிக்கொள்வர். இவர்களின் தெய்வமும் நாகம்தான் (சர்ப்பம்). முதல் நூற்றாண்டுகளில் இந்த மலைவாழ் வீரர்களின் உதவியால் இக்குவாகு வம்சத்தினர் ஆட்சிக்கு வந்த போது வேதமதத்தினருக்கு மிகப் பாதுகாப்பாகவும் பிராம்மணர்களுக்கு எல்லா வகைகளிலும் உதவி செய்து வாழ்ந்ததையும் திரு பி.எஸ்.எல்.ஹனுமந்தராவ் எழுதி இருக்கிறார் (The Age of Satavahanas’ by B.S.L. Hanumantharao). இந்த நாகவம்சத்தின் பிரிவினர் இந்தப் பகுதியில் ‘போயர்கள்’ (boya’s) எனத் தங்களைக் கூறிக்கொண்டனர். ஆனால் இவர்கள் எந்தக் காரணத்தினாலும் நாக வழிபாட்டைக் கைவிடவில்லை. இவர்களுக்கு முருகன் நாக வடிவத்தில் காணப்பட்டதாகவும், ஸுப்ரமணியம் என்ற சொல்லின் பொருளே இவர்கள் நாகப்பாம்பு என எடுத்துக் கொண்டதாகவும் திரு ஹனுமந்தராவ் எழுதி இருக்கிறார். அதே சமயத்தில் எந்தத் தெய்வத்தையும் நாகரூபத்தில் ஆராதனை செய்யும் பழக்கத்தை ஆதியிலே கொண்டிருந்ததால் இவர்கள் சுப்பிரமணிய ஆராதனை என வரும்போதும் நாக (சர்ப்ப) வடிவில் பூஜித்தார்கள் என்றே கொள்ளவேண்டும் என்ற பொதுக் கருத்தையும் நாம் மதிக்க வேண்டும். சுப்ரமணியம் என்றால் நல்ல பிரும்மம் என்பது ஏற்கனவே எழுதிய பிறகு அதே சொல் நாகத்துக்கு எந்த வடிவத்தில் பொருந்தும் என்பதை விவரிக்க இயலாது எனினும் இந்த மலைப் பிராந்தியங்களுள் சுப்பிரமணியம் எனும் சொல்லுக்கு நாகம் என்றே பெயர் நாகம் என்றே பொருள் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

ஆதி சங்கரர்  திருச்செந்தூரில் புஜங்கமாலை தோத்திரத்தில் முருகனைப் பாடி சருமவியாதி நீங்கப்பெற்றதாகக் கூறுவர். பாடல்வகைகளில் புஜங்கவகைப் பாடல் என்பது வடமொழியில்  ஒரு கவிதை அளவைக் குறிக்கும் (Bhujanga Meter) என்பர். புஜங்கம் என்றால் சர்ப்பம் அல்லது பாம்பு என்று பொருள். மருத்துவத்துக்காக சுப்பிரமணிய புஜங்கம்’ என்ற தலைப்பில் முருகனைப் பாடும் முப்பத்து மூன்று தோத்திரப் பாடல்களில் 27 ஆம் பாடல் ஒன்று முக்கிய செய்தியைக் குறிக்கும்.
                                                                           
முனீனா முதாஹோ ந்ருணாம் பக்தி பாஜா
மபீஷ்டப்ரதா ஸந்தி ஸர்வத்ர தேவா
ந்ருணாமந்த்ய ஜாநாமபி ஸ்வார்த்ததானே
குஹாத்தைவமன்யம் நஜானே நஜானே (27)

இதன் சுருக்கமான பொருள் என்னவென்றால் பக்திமார்க்கத்தில் செல்லும் பக்தர்களுக்கு உதவ முனிவர்களும் தேவர்களும் இன்னும் ஏனைய தெய்வங்களும் இருக்கிறார்கள். ஆனால் எப்படிப்பட்டவராக இருந்தாலும், குகனே! ஒரு முறை மனதில் நினைத்தாலே அவர் எத்தனை சாதாரணகுலமாக இருந்தாலும் ஓடி வந்து காப்பாற்றும் உன்னைப் போல ஒரு தெய்வமுண்டோ.. இல்லவே இல்லை.

இங்கே முக்கியமான மறைபொருள் ஒன்றைக் கவனிக்கவேண்டும். பாரதத்திலே சமயபேதம் நிறைந்த அந்தக் காலகட்டத்தையும், வேத, பௌத்த சமண மதங்கள் ஒன்றோடொன்று சாதாரண மக்களைக் கவர வேண்டிய அவசியத்தில் தள்ளப்பட்டிருந்தது. வேதமதம் யாகங்களை முன்னிறுத்தும் அந்த காலகட்டத்தில் எவ்விதமான கட்டுப்பாடும் இல்லாமல்  பொதுவாகவே இந்தியாவின் ஆதி குடிமக்கள் தங்கள் குலதேவதையும், நாகங்களையுமே பூஜித்து வரும் வேளையில் முருகன் அவர்களுக்கும் தெய்வமாகவே பட்டதால், பரவலாகவே மலைவாழ்மக்களிடையே முருக வழிபாடு நாகவடிவத்தில் இருந்திருக்கவேண்டும். பின்னாளில் இதே ஆந்திரத்து போயர்கள் வேதங்களில் தேர்ச்சி பெற்றதையும், உதாரணத்துக்கு மடிபோயா என்பவர் மடிசர்மா என மாற்றிக்கொண்டதையும் போன்ற எத்தனையோ குறிப்புகள் கிடைத்தாலும் போயர்கள் போன்ற மலைவாழ் மக்களின் குல தெய்வமாக சுப்பிரமணியனே ஆதியிலிருந்து வழிபடப்படுகிறான் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. முதலில் நாகம் வாழும் புற்றுகளை வழிபட ஆரம்பித்தவர்கள் பிறகு படிப்படியாக பாறைகளில் பாம்பு ஓவியத்தினை செதுக்கி சுப்பிரமணியத்தை வழிபட்டார்கள். வேதம் கற்றவுடன் இவர்கள் காலத்தின் போக்குக்கேற்ப சிவபூசையையும், ஆகம சம்பிரதாயக் கோவில்களையும் வழிபட ஆரம்பித்தனர். ஆனாலும் சுப்பிரமணிய பூசை மட்டும் நாக வடிவத்தில்தான் இன்னமும் இருக்கிறது. வேதாமக விதிகள் இவர்கள் வழிபாட்டை மேலும் பண்படுத்தின. மங்கள வாரத்தில் (செவ்வாயன்று) சிறப்பு வழிபாடும், சஷ்டித் திதியில் விரதநியதிகளும் மெல்ல மெல்ல பழக்கங்களில் வந்தன. சுப்பிரமணிய பூஜை விஷயத்தில் மட்டும் இந்த மலைவாழ் மக்களின் பழக்க வழக்கங்களை எல்லா இனங்களையும் பின்பற்ற ஆரம்பித்தனர். முருகனின் அருள் எந்த ரூபத்திலும் வருமென்ற சாதாரண விஷ்யமும் எல்லோருக்கும் புரிபட ஆரம்பித்தது என்றே சொல்லவேண்டும்.

அந்தக் கால கட்டத்திலேயே நாகசுப்பிரமணியர்கள் பல்வேறு இடங்களில் கல்லில் செதுக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வருவது இந்த பிராந்தியங்களில்  அதிகம். இப்போதும் அப்படிப்பட்ட கற்சிலைகள் ஒவ்வொரு கோவிலிலும் உண்டு. 
         
ஆனால் ஆதிகாலத்தில் எப்படி பாம்புப் புற்று ஒன்றையே சுப்பிரமணியராகப் பாவித்து வழிபட்டனரோ அதே போன்ற வழிபாட்டை இன்றளவும் பின்பற்றப்பட்டு வரும் ஒரு சுப்பிரமணிய புற்றுதான் இன்று சற்று பெரிய கோவிலாக கட்டப்பட்டு நாளும் நூற்றுக்க்கணக்கில் பக்தர்களைக் கவரும் மோபிதேவி சுப்பிரமணியத் தலம்.

இந்தத் தலத்தைப் பற்றியும் நாக வடிவிலான முருகன் வரலாற்றையும் மேலும் பார்ப்போம்.
    
இன்னும் வரும்
ப்டங்களுக்கு நன்றி: கூகிளார்.