முருகனும் ஆந்திரமும் - 4
”ஏட்டின் விதிப்படியே கொ(ண்)டு மா புர வீட்டில் அடைத்து
இசைவே கசை மூணு அதில் ஏற்றி அடித்திடவே
கடல் ஓடம்
அது என ஏகி ஏற்கும் எனப்
பொருள் ஆசை
பெ(ண்)ணாசை கொளாது
என திரியா
பரியா
தவம் ஏற்றி
இருப்பிடமே அறியாமலும் உடல் பேணி
பூட்டு சரப்பளியே மதனாம் என
ஆட்டி அசைத்தி
இயலே திரி
நாளையில்
பூத்த மலக்
குகையோ பொதி
சோறோ என
கழு காகம்
போற்றி நமக்கு
இரையாம் எனவே
கொள
நாட்டில் ஒடுக்கு
எனவே விழு
போதினில்
பூட்டு பணி
பத மா மயிலா அருள்
புரிவாயே” - (திருப்புகழ்)
(சுருக்கமான
விளக்கம்) விதிப்படியே பிறந்து சுகதுக்க வாழ்க்கைப் படகில் பயணித்து, நல்லது
கெட்டது தெரியாமல், அழகிய மன்மதனாக பாவித்து பெண்மீதும் பொன் மீதும் ஆசை வைத்து
கஷ்டப்பட்டாலும், நல்ல நெறிக்கான தவத்தை செய்யாமல் கடைசிகாலம் வரை இஷ்டம் போல இந்த
ஈனவாழ்க்கை வாழ்ந்து உயிர் பிரிய உடல் அழுகும் காலத்திலே எனைக் கரையேற்ற காப்பாற்ற
வருவாயே.. கால்களில் பாம்பை அழுத்தமாகக் கட்டியுள்ள அழகிய மயிலின் மீது அமர்வோனே,
நீ அருள் புரிவாயாக. பனி (phani) என்றால் நாகம் எனப்
பொருள்.
அருணகிரியாரின் இந்த அழகிய திருப்புகழ் பாடலை ஒருமுறை என் சித்தியும்,
திருப்புகழின் பெருமையைப் பரப்பி வருபவருமான திருமதி ராதா முத்துசாமி சென்னையை
அடுத்த பள்ளிக்கரணை எனும் ஊரில் ஒரு முருகபக்தர் வீட்டில்
பாடிக்கொண்டிருக்கும்போது நிஜமாகவே ஒரு நாகப்பாம்பு வீட்டின் தாழ்வாரம் வரை வந்திருந்து
நின்று தலையெடுத்து பாடல் முடிந்தபின்னர் மெதுவாக சென்றுவிட்டதையும் இன்றைக்கும்
சொல்லுவார். சாட்சாத் முருகன் அவனே பாம்பு வடிவில் வந்து இந்தப் பாடலைக்
கேட்டுவிட்டுப் போனான் என்பார்.
இந்துமதத் தெய்வங்கள் அனைவருமே நாகத்தோடு சம்பந்தப்பட்டவர்தாம். சிவன்
உடலெங்கும் நாகாபரணமாக அணிந்தவர். அவர் பெயரே நாகபூஷணன. திருமாலுக்கு ஆதிசேஷன்
படுத்தால் படுக்கை, உட்கார்ந்தால் இருக்கை, நின்றால் குடை. விநாயகரின் புரிநூலே
பாம்புதான். அன்னை பார்வதியின் கையில் கங்கணமாக நாகம் இருக்கும். மயிலேறும் வெற்றி
வேலனுக்கோ காலடியில் பாம்பு என்றும் உண்டு.
நாகப்பாம்பை தமிழ்நாட்டில் அம்மன் உருவாக வணங்குவோர் அதிகம். தமிழகத்தில்
எல்லா அம்மன் கோயில்களிலும் நாகப்புத்து நிச்சயமாக இருக்கும். ஆனால் முருகன்
கோயில்களில் இந்த வழிபாடு கிடையாது. நாகம்தான் முருகன் என்பதில் இன்றைக்கு
தமிழர்களுக்கு இருக்கும் நம்பிக்கையை விட ஆந்திரர்களுக்கு நம்பிக்கை அதிகமாக
இருப்பதைப் பரவலாகவே பார்த்துள்ளேன். நாகதோஷம் உள்ளவர்கள் ஆறு வாரம் முருகனுக்கு
செவ்வாயன்று அபிஷேகம் செய்து வந்தால் அந்த தோஷம் நிவாரணம் ஆகும் என்பது ஆந்திரா-கர்நாடகா
பிராந்தியத்தில் இப்போதும் பிரபலம். நாகபஞ்சமி கர்நாடகத்தில் விசேஷம் என்றால்
ஆந்திரத்தில் நாகசதுர்த்தி மிகவும் விசேஷம். தீபாவளி அமாவாசையை அடுத்து நான்கு நாட்களில் வரும் ‘நாகுலு சவிதி’ இங்குள்ளோருக்கு பண்டிகை தினம். அரசாங்க விடுமுறை தினம் கூட. இன்றும் கூட ஆந்திரத்தில் ஒவ்வொரு
வாரமும் செவ்வாயன்று முருகனுக்கு (எங்கெல்லாம் முருகன் சன்னிதி உள்ளதோ
அங்கெல்லாம்) காலை வேளையிலிருந்து மதியம் வரை அபிஷேகம் நடந்து கொண்டிருப்பதை
சகஜமாகக் காணலாம். வாரத்தின் மற்ற நாட்களில் முருகனுக்கு இந்த விசேஷ பூஜையை
இவர்கள் செய்வதில்லை என்றும் சொல்லலாம். கிருத்திகை நட்சத்திரத்தில் அத்தனை பரபரப்பு
காட்டுவதில்லை. ஆனால் சஷ்டி திதி தோறும் முருகனுக்கு சிறப்பு வழிபாடு உண்டு.
கிருஷ்ணா மாவட்டத்தில் அமைந்துள்ள முருகத்தலமான மோபிதேவி கோயில் வழிபாடு
எப்போது ஸ்தாபிதம் ஆனது என்பதற்கான ஆதி வரலாறு இல்லை. இங்கே அர்ச்சகராக இருக்கும் ’பனி’பூஷணம்
(இவரும் நாகத்தின் பெயர் கொண்டவர்தான் - Phanibhushanam) தம் முன்னோர்கள் காலம் காலமாக வழிபட்டு
வருவதாகவும் தற்போதுள்ள கோபுரமும் பிரகாரங்களும் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகக் கூறினார். ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளாக இங்கே சுப்பிரமணியர்
நாகவடிவில் வழிபடப்படுவதாகவும் இங்கே தவம் செய்த அகஸ்தியமுனியால் இந்த
நாகசுப்பிரமணிய வழிபாடு இந்த இடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது என்று தல வரலாறு
கூட சொல்கிறது (தெலுங்கு
மொழியில் ஒரு புத்தகமாக எழுதி வெளிட்டு இருக்கிறார்கள்). கோயிலின் உட்புறத்தில்
ஏராளமான புற்றுகள் இன்றும் உள்ளன. புற்றுகளை தாண்டி சென்றால் பெரிய புற்று
இருக்கிறது. புற்றுக்கு லிங்காதரணம் செய்துள்ளனர். இருபக்கங்களிலும் வள்ளிக்கும்
தெய்வானைக்கும் சன்னிதிகள் உண்டு. இங்கு எல்லாமே முருகன்தான்.. எங்கும் முருகன். நான்
சென்ற தினத்தில் ஏகப்பட்ட மக்கள் கூட்டம். திருவிழா போல இந்த முருகன் கோயிலைக்
கண்டதில் அடியேனுக்கும் ஏகப்பட்ட மகிழ்ச்சி.. தமிழக ஆலயங்களில் முருகனை ஆண்டியாகப்
பார்த்துள்ளோம், தனி ஒருவனாக கையில் வேலேந்திப் பார்த்துள்ளோம், வள்ளிக் கணவனாக
சிரித்தமுகத்தோடு பார்த்துள்ளோம், வள்ளி தேவானையோடு அருள்புரிவதையும்
பார்த்துள்ளோம், சிவனுக்கே குருவாக சிவகுருநாதனாகப் பார்த்துள்ளோம்,
ஆறுமுகத்தையும் பார்த்துள்ளோம், மயில் வாகனனாக பார்த்துள்ளோம்.. ஆனால் மோபிதேவியில்
புற்று வடிவத்தில் உள்ளே இருந்துகொண்டு லிங்காரூபனாக அருவுருவாகக் காட்சியளிக்கும்
சுப்பிரமணியத் தேவனை நினைத்துப் பார்க்கையில் அருணகிரியாரின் கந்தர் அனுபூதி பாடல்
நினைவுக்கு வந்தது. ‘முருகன் தனி வேல் முனிநம் குருவென்’ என்று தொடங்கும் அந்தப் பாடலில் முருகன் அவன் ரூபம் எதுவாக
இருக்கும் என்ற ஆராய்ச்சியை நமக்குள் ஏற்படுத்தி விட்டு ஒரு அசாதாரண அனுபூதியையும்
மனதுக்குள் உண்டாக்கிவிடுவார் அருணகிரிநாதர்.
தென்னிந்தியாவின் கிருஷ்ணாநதி
கீழைக்கடலில் கலக்கும் பகுதியில், அதாவது இன்றைய குண்டூர், பிரகாசம், கர்நூல்
மாவட்டப் பகுதியிலிருந்து மேற்கே அரபிக்கடலோரம் இருக்கும் மங்களூர், உடுப்பி,
கொங்கணி தேசம் வரை குறுக்காக இருப்பது போல விட்டு விட்டு மலைவரிசை இருப்பதை
சரித்திர ஆய்வாளர்களும் பூஇயல் ஆய்வாளர்களும் நன்றாகவே அறிவார்கள். இந்த குறுக்கு
வரிசையின் நடுவே தட்சிணபீடபூமியும் இணையும்.. நல்லகொண்டா என்று தெலுங்கில்
அழைக்கப்படும் இந்த ஆந்திரமலைப்பகுதிகளில் இருந்து ஆரம்பித்துப் பார்த்தோமேயானால்,
ஸ்ரீசைலம், அஹோபிலம், (இன்னமும் இவைகளில் புகழ்பெற்ற திருமலையையும்
சேர்த்துக்கொள்ளலாம்),சித்திரதுர்கா, சந்திரகிரி, இந்திரகிரி, சிக்மகளூர்,
பத்ராவதி போன்ற மலைவளங்கள் மேற்கே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைத்தோடரில் விட்டு
விட்டு இணைவதையும் பார்க்கலாம். கிருஷ்ணை நதி மஹாராஷ்டிர மாநிலத்தில் ஆரம்பித்து
கர்நாடகத்தைக் கடந்து ஆந்திராவில்தான் தான் அள்ளிக்கொண்டு வந்த வளங்களையெல்லாம்
வழங்குகிறது. இந்த கிருஷ்ணா நதி ஆந்திர-கர்நாடக எல்லை வரை ஏறத்தாழ மலைகளையே ஒரு
பக்க எல்லையாக வைத்துக் கொண்டுள்ளது என்றால் அது மிகையல்ல. ஏழாம் நூற்றாண்டில் சாளுக்கியர்கள்
ஆட்சியின் போதெல்லாம் இந்தப் பகுதிகள் அனைத்தும் ஒரே அரசின் கீழ்தான் இருந்தன. பின்னால்
மேலை, கீழை என அந்த ராஜவம்சம் பிரிந்தாலும் மக்களிடையே உள்ள ஒருங்கிணைப்பு
நன்றாகத்தான் இருந்திருக்கவேண்டும் என்று சொல்லவேண்டும்.
இங்கு இன்னோர் விசித்திர மக்கள் வழக்கமும்
உண்டு. இன்றும் கூட ஸ்ரீசைலத்தில் உள்ள மல்லிகார்ஜுன தலத்துக்கு கர்நாடகத்தில் உள்ள
மலைப்பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருவது பல நூறாண்டுகளாக நிகழ்ந்து
வருவது.. மஹாசிவராத்திரியன்று இவர்கள் கூட்டம் மிக அதிகமாக இருக்கும். இந்தப்
பழக்க வழக்கங்களின் நீட்சியாகத்தான் முருக வழிபாடும் அமைந்திருக்கும் என்று
எண்ணவும் தோண்டுகிறது. குக்கே எனும் மேற்குக் கரையோர சுப்பிரமணியத் தலம் மிகவும்
விசேஷமாக பெயர் பெற்றிருக்கும் ஊராகும். இங்குள்ள சுப்பிரமணியர் பாம்பு வடிவில்
தரிசனம் தருகிறார். இங்கு மட்டுமல்ல. புகழ்பெற்ற உடுப்பி கிருஷ்ணன் கோயிலிலும் கூட
முருகனுக்கு ஒரு சன்னிதி உண்டு.. அங்கேயும் முருகன் நாகரூபத்தில்தான் கோயில்
கொண்டுள்ளார். இன்னும் ஆந்திரப்பகுதியிலேயே சற்று வடக்காக சென்றால் சில பழைய
தலங்களிலே பாறையிலே வரையப்பட்ட நாக சிற்பங்களை இன்னமும் சுப்பிரமணியமாகவே
வணங்குகிறார்கள்.
வாசுகியான நாகம் மேற்கு மலைத் தொடரின்
பகுதியிலே குக்கே எனும் ஊரிலே ஒரு குகையிலே பல்லாண்டுகள் தவமிருந்து
சுப்பிரமணியத்திடம் வேண்டியதாம். முருகன் வாசுகியின் தவத்துக்கு மதிப்பளித்து
நாகரூபம் எடுத்ததாகச் சொல்கிறார்கள். கருடபக்ஷிக்கு பயந்து இங்கு ஒதுங்கியபோது
முருகன் வாசுகியைக் காத்து ரட்சித்ததாகவும், முருகனை என்றும் தன்னுடனே இருக்கக்
கோரியதாகவும் தன் பக்தனின் கோரிக்கையை ஏற்று வாசுகியின் ரூபத்தில் இருப்பதாகவும்
இன்னொரு புராணக்கதை உண்டு. குக்கே கோயிலில் கருடன் தூண் உண்டு. வாசுகியின்
சுடுமூச்சைக் கட்டுப்படுத்தவே அந்தத் தூண் அங்கு உள்ளதாகச் சொல்வர். இங்கு
நாகபஞ்சமியன்று கூட்டம் அலைமோதும்.
ஆனால் ஆந்திரமக்கள் முருகனின் மேல் தணியாத
ஆசைகொண்டு அவனை ஆராதிப்பவர்கள். ஆதிகாலத்தில் நாகரூபமாக வழிபட்டமுறையை அப்படியே
இன்னமும் பின்பற்றினாலும் தமிழர் முருகனை வழிபடும் முறையையும் பின்னாளில்
ஏற்றுக்கொண்டவர்கள். ஒன்பதாம் நூற்றாண்டில் முதன் முதலாக ஆகமவிதிக்குட்பட்டு இங்கு
சிலை வடிவ வழிபாடு மூலம் முருகன் வணங்கப்பட்டதாக இங்குள்ள சில கோயில் தல வரலாறுகள்
தெரிவிக்கின்றன. கோதாவரி நதியின் வடகரைப் பிரதேசமான பிக்கவோலு எனும் தலத்தில்
மிகப் பழைய முருகர் கோயில் கட்டப்பட்டது. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் இந்தப்
பகுதிகளில் ஆகமவிதிகளுக்குட்பட்டு சிவன் கோயில்கள் கட்டப்பட்டன. அவற்றில்
சாமல்கோட்டா (குமாரராமம்), திராக்ஷாராமம், பீமாராமம் சிவன் கோயில்களில்
பிரத்யேகமாக முருகன் சன்னிதி கட்டப்பட்டு முருகன் சிலாரூபத்தில்
ஆராதிக்கப்படுகிறான்.
இன்னும் சற்றும் வடக்கே சென்றால்
விசாகப்பட்டினமும் ஸ்ரீகாகுளமும் வருகிறது. விசாகப்பட்டினத்தில் விசாகேசுவரன் என்ற
பெயரில் முருகன் கோயில் இருந்ததற்கான செவி வழி வரலாறும், காலப்போக்கில் இங்கு
ஏற்பட்ட கடல் சீற்றத்தில் அழிந்து போனதாகவும், கடற்கரையில் இந்த விசாகேஸ்வரன்
கோயில் இருந்த காரணத்தினால் இந்த இடத்துக்கு விசாகப்பட்டினம் என்றும் பெயர்
வந்ததாக இங்குள்ள ஆந்திரப் பல்கலைக்கழக சரித்திர ஆய்வுக் கட்டுரைகள், குறிப்பாக
பேராசிரியர் திரு கே. சுந்தரம் போன்ற சான்றோர்கள் எழுதியது சொல்கின்றன. கலிங்கத்துப்
பரணியில் பாடப்பட்ட நாயகன் கருணாகரத் தொண்டைமான் இங்கு தங்கியிருப்பதற்கான
ஆதாரங்கள் சோழர் கால தமிழ் கல்வெட்டொன்று தெரிவிக்கிறது. கலிங்கத்தை வென்றதனால்,
இந்த நகருக்கு தங்கள் அரசன் நினைவாக குலோத்துங்க சோழபட்டினம் என்று பெயர்
மாற்றியதாகவும் தகவல்கள் உள்ளன. விசாகேஸ்வரர் லிங்க வடிவில் அருவுருவாக இருந்தார்
என்று சொல்வோரும் உண்டு.
ஸ்ரீகாகுளம் ஜில்லாவில் ஓடும் வம்சதாரா
நதியின் வடகரையில் உள்ள சிவத்தலம் முகலிங்கேசுவரர் (ஸ்ரீமுகலிங்கம்) கோயில். இக்கோயில்
ஒன்பதாம் நூற்றாண்டில் ஒரியக் கலைவடிவத்தில் கட்டப்பட்டதாகும். பதினோராம்
நூற்றாண்டில் நடந்த சோழ கலிங்க முதலாம் யுத்தத்தில் (கிபி.1090) கலிங்கர்களை
வீழ்த்தியபின் சோழ இளவரசனான விக்கிரமன் இங்கு முருகன் சிலையை எடுப்பித்திருப்பதை
திராட்சாராமக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் சொல்கின்றன. இந்த சன்னிதியும் முருகனும்
(கையில் கழியுடன் இருப்பான்) இன்றும் கூட பொலிவோடு இருப்பதை இங்கு காணலாம்.
பிற்காலத்தில் அதாவது கடந்த நூறு
ஆண்டுகளில் எத்தனையோ இடங்களில் ஆந்திராவில் பல புதிய முருகன் கோயில்கள்
எழுப்பப்பட்டுள்ளன. பெரிய கோயில்கள் எனச் சொல்கையில் விஜயவாடாவில்
இந்திரகிலாத்திரி மலைமேலே முருகன் வள்ளி தேவசேனா சமேதருடன் கோயில் கொண்டுள்ளான். ஆந்திரத்
தலைநகரமான ஹைதராபாதில் ஸ்கந்தகிரியில் முருகனுக்கு சிறப்பான முறையில் கோயில்
எழுப்பப்பட்டு வணங்கப்படுகிறான்.
மிகப்பழங்காலந்தொட்டு முழுமுதற்கடவுளாகத் தமிழர்களால் போற்றி வணங்கப்பெற்று வரும்
திருமுருகக் கடவுள் ஆந்திரர்களால் ஸ்கந்தனாகவும், குமாரசுவாமியாகவும்,
கார்த்திகேயனாகவும், சுப்பிரமணியனாகவும் அதே பழங்காலந்தொட்டு வணங்கப்பட்டு
வருகிறான். இங்குள்ள பழங்கால கோயில்களில் முருகனைத் தரிசனம் செய்யும்போதெல்லாம்
இந்த விவரங்களையெல்லாம் எழுதி எல்லோருக்கும் தெரியப்படுத்தவேண்டும் என்றும் ஒவ்வொரு பொழுதும் தோன்றும்தான்.. ஆனால்
அதற்கும் அவனருள் வேண்டுமே..
முருகனைப் பற்றி சொல்ல சொல்ல நா
இனிக்கும்தான்.எழுத எழுத எழுத்தும் கூடும். அதனால் எழுதிக்கொண்டே போகலாம். முருகனின் ஆந்திர
விலாஸத்தைப் பற்றி ஏற்கனவே இந்த வலைப்பூவில் ஒரு பதிவு செய்திருக்கிறேன். இருந்தாலும்
இப்போது பதிவு செய்துள்ள இந்தக் கட்டுரையால் என் மனம் நிறைகிறது. அப்படிப்பட்ட
மனநிறைவைத் தந்த எந்தை முருகனை எந்நாளும் என் மனத்தில் வந்து இப்படியே ஆக்கிரமிக்கவேண்டும்
என்ற நினைப்போடு, பொறுமையாக படித்த வாசக அன்பர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது
மனப்பூர்வமான நன்றி! அதே போல அவ்வப்போது பல விஷயங்கள் விஷயதானம் செய்த
பெரியவர்களுக்கும், நண்பர்களுக்கும் என் நன்றி உரித்தாகுக!!
எந்தாயுமெனக் கருள்தந்தையுநீ
சிந்தா குலமா னவைதீர்த் தெனையாள்
கந்தா கதிர்வே லவனே யுமையாள்
மைந்தா குமரா மறைநா யகனே.
சிந்தா குலமா னவைதீர்த் தெனையாள்
கந்தா கதிர்வே லவனே யுமையாள்
மைந்தா குமரா மறைநா யகனே.
(அருணகிரியாரின் ‘கந்தர்
அனுபூதியிலிருந்து)
(படங்கள்: பிக்காவோலு, பீமாவரம் முருகர் - நன்றி, நண்பர் திரு கே.எஸ். சங்கரநாராயணன்.)
ஆந்திர தேசத்தில் முருகனின் பெருமையை மிகவும் சிரமப்பட்டு, தேடியலைந்து, சேகரித்து அருமையானதொரு ஆராய்ச்சிக் கட்டுரையாகத் தொகுத்து அளித்த உங்களுக்கு என் பணிவன்பான வணக்கம், திவாகர் ஐயா. அரிய பல தகவல்களைத் தெரிந்து கொண்டேன். முருகனருள் முன்னிற்கும்.
ReplyDeleteமலைப்பாக இருக்கிறது. இத்தனை தகவல்களைப் பொறுமையாகவும், சிரத்தையாகவும் திரட்டிக் கொடுத்ததுக்கு நன்றி. அரிய பொக்கிஷமும் கூட. இதை மரபு விக்கியில் உங்கள் அனுமதியுடன் இணைக்கலாமா?
ReplyDeleteதொடர
ReplyDeleteஅன்பின் திரு திவாகர்ஜி,
ReplyDeleteஅற்புதமான படைப்பு.அரிய தகவல்கள். உங்களுடைய கடுமையான உழைப்பு தெரிகிறது. அந்த சுப்பிரமணியர் அருளால் படங்களும் மேலும் பெருமை சேர்க்கிறது
அன்புடன்
பவள சங்கரி
படிச்ச நினைவா இருக்கேனு நினைச்சுட்டே வந்தேன். விசாகம் ஸ்பெஷலா?? :)))))
ReplyDeleteபெருமைக்குரிய திரு திவாகர் அவர்களுக்கு ,
ReplyDeleteஎங்கெங்கோ ஒளிந்து கிடக்கும் அருமையான தகவல்களைச்
சேகரித்து மக்களுக்களித்த தங்களுக்கு நன்றியும் , பாராட்டுகளும் . இவை யாவுமே அரிய பொக்கிஷங்கள் .
வெளிவந்து கொண்டிருக்கும் எத்தனையோ ஆன்மீகப் பத்திரிகைகளில் ஏதாவது ஒன்றில் இவைகள் பிரசுரம் ஆனால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் !
கூத்தநாயனார் அவர்களுக்கு,
ReplyDeleteதங்கள் கருத்துக்கு நன்றி!
பத்திரிகைகளில் போடுவதில் ஆட்சேபணை ஒன்றும் இல்லை... அவர்க்ளின் கத்திரி கட்டுரையின் மீது வெட்டுப்படாதவரை.