Friday, October 5, 2012

தேசமென்றால் வெறும் மண்ணல்ல, மனிதம்


குருஜாடா - முடிவுப்பகுதி

குருஜாடாவின் இன்னொரு கதையில் நம் தமிழர்களும் பங்கு பெறுவர். ஆனால் நகைச்சுவையாக எழுதப்பட்டதால் சில ஏளனவகைப் படைப்பு கூட நகைச்சுவை உணர்ச்சியோடுதான் பார்க்கவேண்டும். 

‘உன் பெயர் என்ன’ எனும் ஒரு கதையில் சைவ வைணவர்களின்  அந்தக் காலப் போக்கும், அந்தப் பிரிவைச்ச் சார்ந்தவர்கள் மக்களிடையே வேறுபாட்டை ஏற்படுத்தும் நோக்கத்தையும் ஏளனமாகக் கண்டிக்கிறார் குருஜாடா அப்பாராவ், கதையை அப்படியே தமிழாக்கம் செய்யாமல் கதைச் சுருக்கத்தை மட்டுமே இங்கு அளிக்கிறேன்.

விஜயநகரம் அருகே உள்ள ஒரு ஊரில் வைணவ பிராமணக் குடும்பம் ஒன்று ராமர் கோவில் பூஜை செய்விப்பதற்காக தமிழகத்திலிருந்து தருவிக்கப்படுகிறது. ஊருக்கு வந்த வைணவர் பரம சாது. ஆனால் வடமொழி தென்மொழிகளில் பரம ஞானி. வந்தவுடன் தன் வேலையைப் பார்த்துக்கொண்டும் பூசைகளைக் கவனித்துக் கொண்டும், ஊருக்குத் தேவைப்படும்போது வேதத்தில் சொல்லப்பட்ட நல் உபதேசங்களைச் சொல்லிக்கொண்டும்தான் காலம் கழிக்கிறார். இவர் மகனுக்கும் காலா காலத்தில் திருவரங்கத்தில் ஒரு பெண்ணைப் பார்த்து கலியாணம் செய்து வைத்துத் தன்னுடன் இருத்திக் கொள்கிறார். மகனுக்கு தந்தையளவு ஞானம் இல்லையென்றாலும் சாதுவாக இருப்பவர், ஆனால் கொண்டு வந்த மருமகளுக்கு நல்ல ஞானமும் நல்ல கல்யாணகுணங்களும் உண்டு. இந்தக் கலியாணத் தம்பதியருடனே திருவரங்கத்திலிருந்து வந்த மணவாளன் எனும் வைணவர்தான் இனிமேல் இந்தக் கதைக்கு பலம் சேர்க்கப்போகிறார்.

ஊரில் இரு பெரிய குடும்பங்கள். நாயுடு ஜாதியைச் சேர்ந்தவர்கள். பெரிய நாயுடு சொல்தான் ஊரில் அம்பலமேறும். சின்ன நாயுடு கொஞ்சம் முரடன். ஆனால் வயதான காலத்தில் ஊர் நிர்வாகத்தை சின்ன நாயுடு கையில் கொடுத்து விட்டு ஹாயாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். பெரிய நாயுடு. இவர்களுக்கு இதுவரை வைணவம் சைவம் என்றெல்லாம் ஏதும் தெரியாது. ஊரில் உள்ள சிவன் கோயில் ராமர் கோயில் இரண்டுமே நல்லபடியாகத்தான் போய்க்கொண்டிருக்கின்றன.

இந்தச் சமயத்தில்தான் ஒரு வைணவஜீயர் இந்த ஊருக்கு வருகிறார். பெரிய நாயுடுவும் தடபுடலாக வரவேற்பு கொடுக்கிறார். தன்னை உபசரித்த பெரிய நாயுடுவிடம் ’உயிர் போனபின்பு ஆத்மா ஆங்காங்கே அலைந்து பயனென்ன, பெருமாளைச் சரணடைந்தால் வைகுண்டப் பிராப்தி கிடைத்து நிம்மதி அடையுமே’ என்று கூற வயதான பெரிய நாயுடுவும் உடனடியாக வைணவத்தை மேற்கொள்கிறார். அவர் சொல்படி ஊரில் உள்ள மக்கள் பலர் வைணவராகி விடுகின்றனர். அப்போது மணவாளன் நடுவில் புகுந்து ஊர் முன்சீப் சின்ன நாயுடு வைணவனானால் ஊருக்கு நல்லது என்கிறான். இதற்கு முரடனான சின்ன நாயுடி தயக்கம் காட்டுகிறான். எதற்கு தனியாக இப்படி நாமம் போட்டுக் கொண்டு அலையவேண்டும் என்பதே அவன் கேள்வி. மணவாளனுக்கு அவனுடைய பலவீனங்கள் தெரியும். அவனுக்குப் பிடித்த புளியோதரையில் அவன் ரசித்து சுவைத்துக் கொண்டிக்கும்போதே வைணவத்தின் குறிக்கோள் பாதி சொல்லப்பட்டு, மீதி மயக்கத்திலேயே அவன் ஒப்புக் கொள்கிறான். அடிக்கடி புளியோதரை கிடைக்குமா என்ற அவன் கேள்விக்குப் பதிலாக துவாதசி நாளில் மாதத்துக்கு இருமுறை பெருமாளுக்குக் கண்டிப்பாக புளியோதரைதான் நைவேத்தியம் என்று உறுதி அளிக்கப்பட்டவுடன் அவன் தன் நெற்றியில் போடப்பட்ட நாமத்தைப் பெருமையாகப் போற்றுகிறான்.

இப்படி ஏறத்தாழ ஊரில் பாதிக்கும் மேலோர் வைணவத்தில் மாறிப்போனது ஹைதராபாத் அருகே உள்ள  வீரசைவர்களுக்குத் தெரிய வருவதால் அவர்களும் ஒரு கால கட்டத்தில் அந்த ஊரில் டேரா போட்டு நள்ளிரவில் மேள சத்தத்தோடு சிவபூஜை செய்வதாக ஊரையே நடுங்க வைத்தனர். சிவபூஜையின் கடைசி நாளன்று அவர்கள் அனைவரும் அக்னி வளர்த்து அக்னியில் நடப்பதாகவும் ஊருக்குப் பெரியவரான பெரிய நாயுடுவும் முன்சீப் சின்ன நாயுடுவும் அந்த விழாவுக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். இப்படிச் செய்வதால் நாளை பெரிய நாயுடுவும் ஊரும் சைவப் பிரிவுக்கு மாறிவிடும் என்று அஞ்சிய மணவாள்னுக்கு ஒரு திட்டம் தோன்றுகிறது. ஹாயாக தன் நண்பர்களுடம் அளவளாவிக் கொண்டிருந்த சின்ன நாயுடுவிடம் வைணவத்துக்கு வந்து பேராபத்தைச் சொல்கிறார். சைவர்கள் அக்னியில் நடந்தால் ஊரே இனி சைவம்தான் என்றும் துவாதசி புளியோதரையும் கூட இனிக் கிடைக்காது என்கிறார். அவன் கவலை அதிகமாக நண்பர்களிடம் உதவி கேட்கிறான். அவர்கள் இதுபற்றியெல்லாம் ஒன்றும் அறியாதவர்களாதலால் உதட்டைப் பிதுக்க மணவாளனையே ஆலோசனை கொடுக்கும்படி சொல்கிறார். 

“நாமும் இதைப் போல ஒரு அக்னிப் பரிட்சை அடுத்த வாரம் வைத்து விடலாமே.. உங்களுக்கு தெரிந்த சிலருக்குக் கள்ளை நன்றாக ஊற்றி விட்டு, ராமர் கோயில் உற்சவ சிலையையும் தலையில் ஏற்றி அக்னியை மிதிக்கச் செய்தால் வைணவம் இங்கு நிலைக்கும் என்ன சொல்கிறீர்கள்..’

‘ஓ செய்யலாமே..  அடுத்த வாரம் எதற்கு, இதற்கெல்லாம் முகூர்த்தம் பார்க்கவேண்டாம்.. இன்றிரவே செய்து விடலாம். ஏன் நீரே முதலில் அக்னியில் இறங்கும்.. நீரே உற்சவ விக்ரஹத்தையும் தலையில் வைத்துக் கொள்ளும், உம்மைத் தொடர்ந்து என் நண்பர்கள் சிலரை கள்ளைக் குடித்து விட்டு இறங்கச் சொல்கிறேன்”

மணவாளனுக்கு பயம் வந்துவிட்டது. அவர் எதிர்பார்த்தது அந்த முரட்டு நண்பர்கள் கள்ளின் போதையில் வலி தெரியாமல் எளிதாக இறங்குவார்கள் என்றுதான். ஆனால் இது தன் தலைக்கே வினையாகப் போனதால் கவலை வந்து விட்டது. உடனடியாக மணவாளன் சமாளித்தார்.

“ஐய்யய்யோ.. நான் சரிவரமாட்டேன்.. ஒன்று செய்யலாமே.. நம்ம ராமர் கோவில் பந்துலுவே முன் வந்து அக்னி மிதிக்கட்டுமே.. சாஸ்திரம் அறிந்தவர், அவர் செய்தால் மேலும் நமக்கு நன்மைதானே” என்று தனக்கு குருவுக்கு சமமான ராமர் கோவில் ஆச்சாரியரையே பழியில் மாட்டிவிட்டார். ஆனால் தள்ளாடும் வயதில் உள்ள அந்த ஆச்சாரியார் இந்தக் கதையைக் கேட்டு விட்டு சிரித்து விட்டு தான் இதையெல்லாம் நம்பாதவன் என்றும், சாஸ்திரங்களில் இப்படிப்பட்டது இல்லை என்றும் அத்தோடு இங்குள்ள ஜனங்கள் எந்தப் பிரிவைச் சேர்ந்தாலும் ராமர் கோவிலுக்கு வரத்தான் செய்வார்கள் என்றும் சிவன் கோயில்காரர்கள் செய்வதால் நீங்களும் செய்யவேண்டும் என எதிர்பார்க்காதீர்கள்” என்று சொல்லிவிட்டார். ஆனாலும் மணவாளன் விடவில்லை. அவரையே அக்னி மிதிக்கும்படி கூட்டத்தில் கோள் சொல்லி மூட்டிவிட்டுக் கொண்டிருந்தான். பெரியவரோ முடியாது, தனக்குச் சம்மதமில்லை என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.

இந்தச் சமயத்தில்தான் அவர் மருமகள் அங்கு வருகிறாள். சான்றோரான மாமனார் திண்டாடும் நிலையில் இருப்பதைப் பார்த்து கூட்டத்தை அமைதிப்படுத்துகிறாள். வைணவர்கள் அக்னிபரீட்சைக்கு உள்ளாகும்படி முதலில் கருத்துச் சொன்னவர் யார் என்று கூட்டத்தைப் பார்த்துக் கேட்கிறாள். சின்ன நாயுடு மணவாளனைக் காண்பித்து ‘இவர்தான்’ என்கிறார். அவளின் குரலின் தோரணை, கேள்வியில் உள்ள கண்டிப்பு எல்லோரையும் கொஞ்சம் ஸ்தம்பிக்க வைத்ததுதான். அவள் அறிவுள்ள பெண் என ஏற்கனவே தெரிந்திருந்ததால் ஊரார் சற்று மரியாதையுடனே பேசினர். அவள் மணவாளனைப் பார்த்தாள் 

“மணவாளரே.. ஏன் நீங்களே அக்னியில் இறங்கிப் பார்த்து விடவேண்டியதுதானே.. நீங்களும் நல்ல வைணவர்தானே?”

“ஐயய்ய, அப்படி இல்லைம்மா, நான் வைணவனே ஆனாலும் ஜாதியில் தாழ்ந்தவன்.. அதனால்தான் இறங்கக்கூடாது என்று கட்டுப்பாட்டுடன் சொன்னேன்.. என்னை விடுங்களம்மா.. நீங்க ஆணை போட்டால் ஸ்ரீரங்கத்துகே வேணும்னா ஓடி விடுகிறேன்...”

“சரி, உங்களுக்கு பயம் என்று தெரிகிறது.. ஊரை மூட்டி விட்டு நீங்கள் குளிர் காய்ந்தால் எப்படி?”

“வேண்டுமானால் நான் அக்னியில் இரங்கட்டுமா?” என்று கூட்டத்தைப் பார்த்துக் கேட்கிறாள். அதே சமயத்தில் மணவாளரும் கூட்டத்தின் பின்னால் ஒதுங்கி ஓடுகிறார். 

கூட்டம் வேண்டாம் என்கிறது. “அப்போது ஒன்று செய்யலாம். நம் துணிகளைத் தைத்துத் தரும் பீர் சாஹிப்பைக் கூப்பிடுங்கள்.. அவர் கபீர்தாசரின் பக்தர்.. நான் சொன்னால் கேட்பார்..”

அவள் குரல் கேட்டதும் ஊர் தையல்காரரான பீர் சாஹிப் கூட்டத்தின் மத்தியிலேயிருந்து வருகிறார். “நீங்க என்ன சொன்னாலும் செய்யறேன்’மா.. எனக்கு பயம் இல்லே”

”பீர் சாஹிப் இன்றிரவு அக்னியில் நடந்துவிட்டாரானால் நீங்களனைவரும் முஸ்லீம் மதத்துக்கு மாறிவிடவேண்டுமே.. என்ன செய்வது”

இவள் இப்படிச் சொன்னதும் ஊர்க்கூட்டம் திகைக்கிறது.. உடனே அவள் “இதோ பாருங்கள்! அக்னி மிதித்தால்தான் கடவுள் அருள் புரிவார், அப்படி இப்படியெல்லாம் என்பது எந்த மதத்திலும் இல்லை. என்னுடைய அன்பான வார்த்தைக்குக் கட்டுப்பட்டு பீர்சாஹிப் முன் வந்தார் பார்த்தீர்களா.. இதுதான் கடவுள். அன்புதான் கடவுள்.. இந்த அன்பை முன் வைத்து யார் வேண்டுமானாலும் நெருப்பை மிதிக்கலாம்.. அன்பு எனும் பெரு வெள்ளம் நெருப்பை மிக வேகமாக அணைத்துவிடும்” என்கிறாள்.

மருமகளின் வார்த்தை அன்றைக்கு இரவு மெய்யானது.. ஊரில் பலரும் ஒருவரையொருவர் சந்தோஷத்துடன் கைப்பிடித்துக் கொண்டு தீமிதியில் கலந்துகொண்டு அதை சைவ விழாவிலிருந்து பொது விழாவாக ஆக்கிக் கொண்டாடினர். மிதித்தவர்களில் பீர் சாஹிப்பும் சின்ன நாயுடுவும் உண்டு என்பதையும் இங்கு சொல்லி விடுவோம்.
                                                     *********************************

குருஜாடா இந்தக் கதையில் பல்வேறு கருத்துக்களை முன் வைக்கிறார். தெய்வம் ஒன்று என்பதை பல்வேறு கட்டங்களில் சொன்னாலும், சமூக அவலங்கள் எப்படியெல்லாம் இருந்தன என்பதையும் விவரிக்கும்போது கூடவே பெண் கல்வியையும் முன் நிறுத்துகிறார். அறிவாளியான பெண் தன் திறமையினால் எப்படி இக்கட்டுகளை சமாளிக்கிறாள் என்பதை மருமகள் பாத்திரத்திலிருந்து வெளிப்படுத்துவது அருமை.

நம்மில் பலருக்கு பி.டி.ஸ்ரீநிவாச ஐயங்காரைத் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். சரித்திரப் பேராசிரியர், ஆராய்ச்சியாளர், தத்துவ ஞானி, இவை எல்லாவற்றையும் விட மற்றவர்களை எப்போதும் கை தூக்கிவிடுவதில் இவருக்கு நிகர் இவர்தான். இவர் 1928 இல் எழுதிய தமிழர் வரலாறு எனும் ஆங்கிலப் புத்தகம் எனக்கு இன்னமும் பல சேதிகளைச் சொல்லிக்கொண்டே இருக்கிறது. 

பி.டி.எஸ் ஐயங்கார்தான் குருஜாடாவின் வழிகாட்டி என்று சொன்னால் மிகையாகாது. ஐயங்கார் இங்கு விசாகப்பட்டினத்தில் ஏ.வி.என் காலேஜில் சரித்திரப் பேராசிரியராகப் பொறுப்பேற்று பல மாணவர்களை ஊக்குவித்தவர். குருஜாடாவின் எழுத்து ஞானம் இவரைக் கவர்ந்திருக்கிறது. ஆனால் இலக்கியத் தெலுங்கில் எழுதப்படும் விஷயங்கள் சான்றோரிடமே தங்கிவிடும் எனும் உண்மையை குருஜாடாவுக்கு உணர்த்தியவர் இந்த வழிகாட்டிதான். குருஜாடாவின் கன்யா சுல்கம் முதலில் இலக்கியத் தெலுங்கில் எழுதப்பட்டு ஸ்ரீநிவாச ஐயங்காரின் உத்தரவால் சாமான்யவர்களின் பாஷைக்கு மாற்றப்பட்டதாகச் சொல்வர். குருஜாடாவை சாமான்யர்கள் மத்தியில் பேசவைத்த பெருமை ஐயங்காருக்குதான் உண்டு என்று சொல்பவரும் உண்டு.

குருஜாடா கடைசி கால கட்டத்தில் உடல் நலக்குறைவினால் மிகவும் கஷ்டப்பட்டதாக சிலர் சொல்கிறார்கள். தன்னைப் போஷித்து வந்த விஜயநகர ராணியும் இறந்த பின்னால் அடுத்த மூன்றாண்டுகள் சிறிது கஷ்டத்தை அனுபவித்தார் என்று சொல்வாரும் உண்டு. ஆனாலும் என்ன, மனுஷன் இறந்து போனால் என்ன, அவன் எழுத்தும், கருத்துகளும் என்றைக்கும் இறந்து போகாதுதானே..

திவாகர்

(பொறுமையாகப் படித்தவர்களுக்கு நன்றி! படங்களுக்கு நன்றி கூகிளார், மேலே உள்ளது விஜயநகரத்து மணிக்கூண்டு அல்லது கண்டஸ்தம்பம், கீழே வருவது முன்னாள் அரண்மனையும் இந்நாள் கோட்டையும்)

Sunday, September 30, 2012

தேசம் என்றால் வெறும் மண்ணல்ல, மனிதம் - 3

குருஜாடாவின் ஒரு சிறுகதை - அப்படியே மொழிமாற்றம் உங்களுக்காக



மாதில்தா

மதராஸ்பட்டினத்தில் தாவர இயல் உயர்படிப்புக்காகக் குடியேறியபோது இது நடந்தது. மதராஸ் என்றால் நான் பொதுவாக நான் மயிலாப்பூரில் உள்ள ஒரு மான்சனில்தான் தங்குவது வழக்கம். அங்கு எங்கள் ஊரைச் சேர்ந்த பத்து பன்னிரெண்டு மாணவர்களும் இருந்ததனால் சொந்த ஊர் வாசத்தின் வாசனையும் மணக்கும், பொழுது போவதும் தெரியாது என்பதும் ஒரு காரணம்.

வந்த மூன்றாம் நாள்தான் நண்பன் ராமாராவ் காதில் கிசுகிசுத்தான். “அடேய்.. மாதில்தாவைப் பார்த்தாயா? அதோ எதிர் வீட்டில்தான்..”

பார்த்தேன்.. பார்த்துக்கொண்டே இருந்தேன்.. “அடேய்  சாதாரணமாகப் பார்ப்பது போல பாரடா. சரி, சரி.. உற்றுப்பார்க்காதே!  போதும் போதும்.. வா”

என்னை இழுத்தது கூட அவ்வளவாக நான் அறியவில்லைதான். எப்படி சடக்கென இப்படிப்பட்ட அழகியைப் பார்த்துவிட்டு உடனடியாக அங்கிருந்து அகலமுடியும்? கடவுள் கொடுத்த கண்ணுக்கான விருந்தை யாராவது ரசிக்காமல் நகரமுடியுமா..கடவுள் அத்தனை அழகையும் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்து ஒருங்கே வைத்துக்கொண்டு அந்த அத்தனையையும் இந்தப் பெண்ணுக்கே கொடுத்துவிட்டார்.. ஆனாலும் மனதில் வக்கிரம் இல்லாதபோது அழகான பெண்ணை ரசிப்பதில் என்ன தவறு?

”அடேய்.. நீ புதுசுன்னுதான் ஒரேயொரு முறை உன்னைப் பாக்கச் சொன்னேன்.. சரி சரி,, இனியொரு முறை அவளைப் பார்க்கும் பிரயத்தனம் கூட செய்யாதே.. நீ இனிமே அந்தப் பக்கம் பார்ப்பதோ இல்லே அவள் வீட்டுக்கு போகணும்னு நினைப்பதோ கூட உனக்கு நல்லது இல்லை” எச்சரிக்கை செய்தான் ராமாராவ்.

“ஏன் இப்படியெல்லாம் பேசறே.. ஒருவேளை அவள் நல்லவள் இல்லையோ”

“அவ நல்லவளானாலும் கெட்டவளானாலும் உனக்கோ எனக்கோ என்ன ஆகப் போகுது.. நீ அவளை இன்னொருதடவை பாக்காதேன்னு சொல்றேன்.. என்னையும் மீறினேன்னா நம்ம சிநேகிதம் பங்கப்பட்டா மாதிரிதான்” ராமாராவி மறுபடியும் எச்சரித்துவிட்டு அகன்றுவிட்டான்.

அவன் போனால் போகட்டும், ஆனால் அவள் நினைவு மட்டும் அகலமாட்டேனென்ன்று பிடிவாதம் பிடித்தது. ராமாராவ் போனபின்னும் எதிர்வீட்டு மேல் முற்றத்தில் நின்று கொண்டிருந்த அந்த தேவதையை மறுபடியும் ஒரு முறை பார்த்தேன்.. குறுகிய தெரு என்பதால் கிட்டத்தில் தெரிந்தாள். அவள் துணி உலர்த்திக் கொண்ட கோலத்தையே ஒரு கவிதையாக வடிக்கலாம். அப்போதுதான் குளித்திருந்ததால் உடல் முழுதும் மஞ்சள் பூசியிருந்ததால் ஏற்பட்டிருந்த மெருகும் அந்தக் காலை சூரிய ஒளியில் பளிச்சிட்டதும் எப்படி வர்ணிக்கமுடியும்.. சட்டென கீழே இறங்கிப் போனாள். அங்கே கீழே இருந்த கிணற்றில் தண்ணீர் எடுக்கும்போதுதான் அவள் பார்வை என் மீதும் பட்டிருக்கவேண்டும், ஆனால் அவள் ஒன்றும் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதை அவள் சாதாரணமாக தண்ணீரை இறைத்துக் குடத்தில் நிரப்பி நிதானமாக எடுத்துச் சென்றதிலேயே தெரிந்தது. அப்படிப் போகும்போது திரும்பி வேண்டுமென்றே என்னை பார்த்தாளே ஒரு பார்வை..

ஆகா.. பெண்ணின் பார்வைக்கு இவ்வளவு சக்தியா.. அந்தக் கண்களில் ஒருவேளை மாயப்பொடி கலந்து செய்த மையைப் பூசிக் கொள்வார்களோ.. என்னால் மறக்கமுடியாது இனிமேல்.. ராமாராவ் கிடக்கிறான்.. பொறாமை பிடித்தவன் மாதிரி பேசுகிறானோ என்னவோ

ஆனாலும் ராமாராவ் இல்லாத சமயங்களில்தான் இந்த பத்து நாட்களாக அவளைப் பார்த்து மகிழ்கிறேன் என்பதையும் சொல்லி விடுகிறேன். கையில் சும்மாவானும் ஏதாவது புத்தகத்தைக் கையில் வைத்துக் கொள்வது, அதை படிப்பது போலே பாவனை செய்வது, அவள் மாடியிலோ தோட்டத்திலோ வரும்போதெல்லாம் ரசித்துக் கவனிப்பதே என் வேலையாகிவிட்டது இப்போதெல்லாம். சில சமயம் அடிக்கடி வருவாள். சிலசமயம் வரவே மாட்டாள். ஆனாலும் நான் விடுவதாயில்லை.

கல்லூரி செல்லும்போது மாடிப்படிகளில் மான்சன் இறங்கும்போதெல்லாம் வேண்டுமென்றே அவள் வீட்டருகே ஏதோ புத்தகத்தைப் புரட்டி தேடுவது போலே பாசாங்கு செய்து எதிர்வீட்டில் அவள் தென்படுகிறாளா என்றெல்லாம் நாடகம் போல செய்து கொண்டிருப்பேன். பல சமயங்கள் அதிர்ஷ்டம் அடிக்கும்.. தேவதை கண்ணில் படும், கண்களால் பார்க்கும், நான் நாள் முழுதும் கற்பனையில் மிதக்கும் உணர்ச்சியைக் கொடுக்கும்.

அவளைப் பற்றி விவரங்கள் யாருக்கும் தெரியாமல் சேகரிக்க ஆரம்பித்தேன்.. முதல் அதிர்ச்சி அவள் கல்யாணமானவள் என்பதும் இரண்டாவது அதிர்ச்சி அவள் கணவனுக்கு ஐம்பத்து ஐந்து வயது என்பதும் மூன்றாவது அதிர்ச்சி அவன் முரடன், மூடன், பெண்டாட்டியை எப்போதும் சந்தேகக் கண்ணோடுப் பார்த்து அவ்வபோது அடித்துத் தொல்லையும் செய்வான் என்பதும் தெரிந்தது. வீட்டுக்குள் உறவுக்காரர் முதற்கொண்டு யாரையும் நெருங்கவிடுவதில்லை என்றும், எல்லோரும் இவனுக்குப் பயந்து இந்த வீட்டுப் பக்கம் தலை வைத்துக் கூடப் படுப்பதில்லை என்றும் சில ஹேஷ்யங்கள் அவன் காதுக்கு எட்டின. அவள் துன்பப்படுவதைப் பார்த்து ரசிக்கும் இந்தக் கணவன் கூட பார்ப்பதற்கு நல்ல ஆண் பிள்ளையாகக் கூட இல்லை.. நரைத்த மீசையும், அவன் மனசைப் போலக் குறுகிய கண்களும்.. மேலும் எங்கள் மான்சன் பையன்கள் யாருமே அவன் வம்புக்கே போவதில்லை என்பதும், இவர்கள் மத்தியில் அவன் ரத்தத்தையும் சதையையும் குடிக்கும் புலியாக தெரிகிறான் என்றும் தெரிந்தது. இப்படிப்பட்டவனுக்கு இப்படி ஒரு அழகான தேவதை மனையாளாக வாய்ப்பதா.. ஒருவேளை கடவுளுக்குக் கண்ணில்லையோ, விதி செய்யும் மாய விளையாட்டோ, இல்லை, ஆகாயத் தேவதையாக இருந்து ஏதோ செய்த தவறினால் பூலோகம் வந்து இவனிடம் தண்டனை பெற்று சாபத்தைக் கழிக்கிறாளோ.. 

நிச்சயம் அப்படித்தான் இருக்கவேண்டும்.. மாதில்தா தேவதைதான்.. அவளுக்கு சாபம் கொடுக்கப்பட்டிருக்கிறது.. இப்போது சாபத்தை அனுபவிக்கிறாள்.. பாவம்.. எப்போது இவளுக்கு இந்தக் கொடுமையிலிருந்தும் இந்த வேட்டைப் புலியிடமிருந்தும் விடிவுகாலமோ..

எனக்கு அவள் வெளியே வரும்போதெல்லாம் அந்த அழகு முகத்தில் உள்ள சோகக் கீற்று அப்படியே அப்பட்டமாகத் தெரிந்தது. நான் என்ன செய்தால் அவள் துன்பத்தைப் போக்கமுடியும், எனக்குப் புரியவில்லை.. ஆனால் மனதுக்குள் ஏதோ ஒன்று அவள் துன்பத்தை என்னால்தான் பரிபூர்ணமாக தீர்க்கமுடியும் என்று சொல்லிக்கொண்டே இருந்தது.

ஒருநாள் குளித்து முடித்து தலையை அழகாக சீவிக்கொண்டு முகத்துக்கும் ரெமி பவுடர் போட்டுக் கொண்டு கொஞ்சம் தடபுடலாக வெளியே வந்தேன். கல்லூரிக்குச் செல்லும் அவசரம்தான் என்றாலும் மாதில்தா’வை ஒருமுறையாவது பார்க்காமல் சென்றால் அந்த நாளும் நல்ல நாளோ.. அவள் வீட்டை தைரியமாகப் பார்த்து அவளுக்காகத் தேடினேன். ஆனால் அவள் வரவில்லை. உள்ளேயிருந்து அவன் வந்தான்.. என்னைப் பார்த்துக் கையை சொடுக்கி அருகில் வருமாறு கூப்பிட்டான்.

என் உடம்பில் திடீரென ஒரு திகில் புகுந்து முதலில் சூட்டைக் கிளப்பி, ஆவியாகிக் குளிர்ந்து போய் அதனால் ஒரு நடுக்கத்தையும் கொடுத்தது. ஓடிவிடலாமா எங்காவது.. இல்லை.. இவன் அவன் வீட்டுக்குள்ளேதான் கூப்பிடுகிறான்.. என்ன நடக்கிறதுதான் பார்ப்போமே.. ஒருவேளை நம் உள்மனது சொல்வதுபோல நம்மால் ஏதாவது ஒரு விடிவுகாலம் அவளுக்குப் பிறக்கலாம். அத்தோடு அவளை அருகில் பார்க்க ஒரு அரிய சந்தர்ப்பம்.. அந்தச் சந்தர்ப்பத்துக்காக இவன் கொடுமையான சொல் ஏதேனும் சொன்னால் கூட நாம் தாங்கித்தான் ஆகவேண்டும்.. நான் மெதுவாக வீதியைக் கடந்து அவன் இல்லம் சென்றேன். உள்ளேயும் சென்று வராண்டா அருகில் நின்றேன்.

குகைக்குள்ளே இருந்து வெளியே வந்த அந்த வன்புலி என்னை அந்தக் குகைக்குள்ளேயே நுழையும்படி கத்தியது.

“வா உள்ளே..”

போனேன்..

“ஏய்.. நீ என் மனைவியை அடிக்கடி நோட்டம் விடுகிறாய்தானே”

உள்ளே நுழைந்தவுடன் அவன் இப்படி கேட்பான் என எதிர்ப்பார்க்கவில்லை. இருந்தாலும் சமாளித்துக் கொண்டேன்.

“அதாவது எங்கள் மாடியிலிருந்து உங்கள் ஜன்னல் வழியே தெரியும் புத்தகங்கள் மீது கொஞ்சம் ஆசை.. அலமாரி நிறைய புத்தகங்கள் வைத்துள்ளீர்களே.. நீங்கள் எப்படிப்பட்டவர்களோ என்று யோசிப்பதால் அடிக்கடி பார்ப்பதுண்டு”

“அப்போ நீ என் மனைவியை பார்ப்பதில்லை.. இல்லையா?”

“உங்கள் மனைவியையும் பார்ப்பதுண்டு.. அந்த ஜன்னல் அருகே என் பார்வை செல்லும்போதெல்லாம் எப்போதாவது தென்படுவது சகஜம்தானே.. அவ்வளவுதான்”

“ஓ.. அவ்வளவுதானா.. வேறு ஒன்றும் இல்லையா” என்று உள்ளே பார்த்துக் கத்தினான். அவள் பக்கத்து அறையில் நின்றிருக்கவேண்டும்.. ஆனால் நாங்கள் இருக்கும் அறைக்கு வரவில்லைதான்.

“ஏய்.. நாடகக்காரி, வெளியே வருகிறாயா.. அங்கேயே நின்று என்ன வேடிக்கை.. இங்கே உன்னைப் பற்றிதானே பேச்சு” என்று மறுபடியும் அவளைப் பார்த்துக் கத்த, அந்த தேவதை துடிதுடித்துப் போய் தலையைக் கவிழ்த்துக் கொண்டு எங்களருகே வந்தது. எனக்கோ கண்ணில் நீர் எட்டிப் பார்க்க விரும்பியது போல கலங்கியது. உள்ளமும் அதிர்ந்தது. இருந்தாலும் அவளைப் பார்க்காமல் அந்த வேட்டைக்கார புலியைத்தான் பார்த்தேன்.

“பாரடா பரதேசி.. இந்த அழகான முகத்தைத்தான் பார்க்கவேண்டும் என்று தினம் தினம் தவிக்கிறாய்.. நன்றாகப் பாரடா.. என்னை ஏன் பார்க்கிறாய்.. அவளை விட என் முகம் அழகாக இப்போது உனக்குப் படுகிறதோ..”

இனியும் நின்றால் எனக்கு அழுகை பீறிட்டு வந்துவிடும் எனத் தோன்றியது. மெல்லத் திரும்பி வெளியே போக எத்தனித்தேன்.

‘நில்லு’ என்றான் அந்தக் கொடுங்கோலன். வேறு வழியில்லாமல் நின்றேன்.. அவன் குரலில் ஏதோ உறுதி தெரிந்தது போல பட்டது.

”ஏய் சின்னப்பயலே! எப்போதாவது யாராவது உனக்கு உண்மையே பேசவேண்டும் என்று போதித்திருக்கிறார்களா?

எனக்கு என் பெற்றோர் நினைவு ஏனோ அப்போது வந்தது. “எனக்கு பிறப்பிலிருந்தே சத்தியம் மட்டுமே பேசவேண்டுமென்றுதான் தெரியும்.. அப்படித்தான் வளர்ந்தேன்..”

“ஓஹோ.. உன் சத்தியம் எத்தனை நேர்மையானது என்றுதான் பார்ப்போமே.. இப்போது சொல்லேன் பார்ப்போம். என் மனைவி அழகானவள்தானா?”

“அவர்கள் அழகானவர் என்றுதான் நான் நினைக்கிறேன்”

“அவள் அழகில் உனக்கு ஏதேனும் சந்தேகமா?”

“நிச்சயமாக இல்லை”

“அப்படியானால் அந்த அழகை ரசிப்பதற்கு மட்டும்தானே தினம் இங்கே வேடிக்கை பார்க்கிறாய்? அதுவும் ஒருமுறையேனும் அவளைக் காணவேண்டுமெனத் துடிக்கிறாய்?”

“நான் உண்மையையே பேசவேண்டும் என நானும் நீங்களும் விரும்புவதால் சொல்கிறேன்..ஆமாம்.. உங்கள் மனைவியின் அழகு தெய்வீகமானதுதான்.. ஆனால் என் மனதில் வேறெந்த தீய எண்ணங்களும் இல்லை என்பதை அந்தத் தெய்வம்தான் அறியும்!!”

“அந்த தீய எண்ணத்தைப் பற்றி விடு.. நான் கேட்பதற்கு உண்டு அல்லது இல்லை என நேரடியாகச் சொல்லு! நீ என் மனைவியைப் பார்க்கும்போதெல்லாம் உன் மனதில் உனக்கு மகிழ்ச்சி உண்டாகிறது.. உண்மையா? சொல்!!

“உண்மைதான்”

“சரி, அப்படியானால் ஒன்று செய்.. இவளை உன்னுடன் அழைத்துக் கொண்டு செல்.. நான் இந்த பாவியை உனக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விடுகிறேன்.. என்னுடைய துரதிருஷ்டமும் என்னை விட்டு விலகும்!”

நான் ஒன்றும் பேசவில்லை.. எனக்குள் அழுகை வந்தது. அவர்களுக்கு அதைக் காண்பிக்காமல் வெளியே சத்தம் போடாமல் வந்தேன். அக்கம்பக்கம் யாரும் பார்க்கவில்லைதான்.. அடச்சே என்ன வாழ்க்கையடா இது.. யாருக்குமே இந்த நிலை வரக்கூடாதுதான்..

வேண்டாம்.. இனியொரு முறை என்னால் இவளுக்கு எந்தவொரு கஷ்டமும் வேண்டாம்.. இவன் வார்த்தைகளுக்கெல்லாம் எப்படியெல்லாம் தலைகுனிந்து கேட்டுக் கொண்டிருந்தாள். எத்தனை அவமானப்பட்டிருப்பாளோ.. இனி இவள் கண்ணில் நாம் படவேண்டாம்.. இந்த வீட்டை விட்டு, வேண்டாம், இந்தப் பகுதியை விட்டே வேறு எங்காவது போய்விடவேண்டும்!!

அவள் குனிந்த தலையும், பூமியில் அப்படியே தாரை போல வழிந்த கண்ணீரும் என் நினைவை அலைக்கழித்தன. எனக்கு நிச்சயம் ஒன்று புரிந்தது.. இத்தகைய நிலையில் உள்ள அந்த அழகு தேவதையின் கதையை எந்தக் கவிஞனாவது உணர்ந்தால் அவனிடமிருந்து உணர்ச்சிக் காவியமே பிறந்திருக்கும். இவள் துன்பத்தை யாரால் துடைக்கமுடியும்.. ஒரு உயர்ந்த பெண்மணிக்கு இப்படிப்பட்ட துன்பமா..

அவள் வீட்டை விட்டு வெளியே வந்திருப்பேன். அவன் வீட்டு வேலைக்காரி ஒரு நாயைக் கூப்பிடுவது போல என்னைக் கூப்பிட்டு ஒரு காகிதத்தை என் கையில் திணித்து விட்டு ஓடிப் போய்விட்டாள். கசங்கிய காகிதமாக இருந்தது.

:”நான் உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் என்ன துரோகம் செய்தேன்? என்னை நிம்மதியாக இந்த மனிதருடன் வாழ விடமாட்டீர்களா.. இதுதான் என் தலைவிதியென்றால் நான் அனுபவித்துவிட்டுப் போகிறேன் - மாதில்தா”

அந்தக் கடிதத்தைப் பார்த்ததும் என்னுள் ஏதோ ஒளி பிறந்திருக்கவேண்டும்.. நான் இந்த இடத்தை விட்டுப் போகத்தான் இருந்தேன்.. ஆனால் இல்லை.. போகக்கூடாது.. ஒரு உயரிய பெண்ணுக்கு ஒரு பெருந்துன்பம் இழைக்கப்பட்டு வருகிறது. அவள் துன்பத்தைத் தாங்கிக் கொள்ளமுடியாமல் தவிக்கிறாள். நானும் இங்கிருந்து போய்விட்டால் அந்தப் பெண்ணின் துயரக் கடலில் ஒரு சிறு அங்கமாகத்தான் இருப்பேனே தவிர வேறு என்ன செய்து அவளை கரையேற்றப்போகிறேன்? இல்லை.. எனக்கு மட்டும் ஒரு ராஜ்ஜியம் இருந்தால் இவளுக்கே பட்டம் கட்டி மகாராணியாக்கி ஒரு ஓரத்தில் நின்றுகொண்டு மகிழ்ந்திருப்பேன் என்றெலலாம் நான் நினைத்தது வெறும் கனவா.. ஆனால் நான் என்ன செய்தால் இவள் துன்பத்தைப் போக்க முடியும்?

ராமாராவ் நல்ல அனுபவசாலி.. அவன் அப்போதே எச்சரித்தான்.. அவனுக்கு எல்லாம் தெரியும் என்பதை மறந்துவிட்டு இப்போது இவள் கவலையில் நாமும் பங்கு பெற்று விட்டோம்.. இருக்கட்டும், என்னை முதன்முதலில் ’அவளைப் பாரடா’ எனப் பார்க்க வைத்தவன் ராமாராவ்.. அவனே இந்தத் தொல்லை தீரப் பதில் சொல்லவேண்டும்.. பார்ப்போம்..

ராமாராவின் அறைக்குப் போனேன்.. என் நல்ல காலம் அவன் தனியாகத்தான் இருந்தான். அவனிடம் அப்படியே அனைத்தையும் கொட்டிவிட்டேன்.. அவள் காப்பாற்றப்படவேண்டும் என்பதில் உள்ள என் ஆர்வத்தை அவனிடம் தெரிவித்தேன்.

“மடையா! அப்படியெல்லாம் இவள் காப்பாற்றப்படவேண்டும் என்ற வழி தெரிந்தால் நானே எப்போதே அதைச் செய்திருப்பேனே.. எல்லா நண்பர்களும் அவளைப் பார்த்திருக்கிறார்கள். அவள் கணவனைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறார்கள். எல்லோருமே எச்சரிக்கையாக இருக்கிறோம்.. ஆனால் நீ புதியவன்.. உனக்கும் இவள் கதை தெரிந்திருந்தால் இவர்கள் வழிக்கு நீ போகமாட்டாய் என்றுதான் அவளை ஒரு பார்வை பார்த்துகொள், அதற்கு மேல் அவள் விஷயத்தில் தலையிடாதே என்று எச்சரிக்கை செய்தேன்.. அதையும் மீறினாய்.. பார் இப்போது தேவையில்லாமல் அவளுக்கு எத்தனை துன்பம் உன்னால்?”

“சரிதான்.. நீ சொல்வது உண்மைதான்.. ஆனால் அந்தப் பெண்ணின் துயரமான முகத்தைப் பார்த்தும் என்னால் தாங்க முடியவில்லையே!”

”அடேய்! நம் பெரியவர்கள் ஒன்றும் முட்டாளில்லை.. அதனால்தான் அடிக்கடி சொல்வார்கள். பிறன் வீட்டு மனை விஷயத்தில் தலையிடாதே என்பார்கள். கணவன்-மனைவி சண்டை, சச்சரவு எல்லாவற்றையும் அவர்களே தீர்த்துக் கொள்ளவேண்டும்.. நம்மால் அந்தச் சண்டை சச்சரவுக்கு தீர்வே காண முடியாது. ஒன்று நன்றாக நினைத்துப் பார்.. நாம்தான் நமக்குள் இவன் புலி, வேட்டைப் புலி என்றெல்லாம் முடிவு செய்து இவன் அவளை அடித்து உதைக்கிறான் என்று ஏதோ நாம் நேரில் பார்த்தது போலப் பேசிக்கொள்கிறோமே தவிர என்றாவது ஒருநாளாவது நாம் அதைக் கண்ணாரக் கண்டோமா? இரண்டாவது, ஒரு கல்யாணமான பெண்ணுக்கு எத்தனைதான் ஆனாலும், பாதுகாப்பும், இருக்க இடமும், கவனிப்பதற்கு ஒரு ஆண் துணையும் கட்டாயம் வேண்டும். இது அவளுக்கு இத்தனை நாள் வரை கிடைத்திருக்கிறது - நீ பார்க்க ஆரம்பிக்கும் வரை சொல்கிறேன்.
அடுத்த மூன்றாவது விஷயம் நன்றாகக் கேட்டுக்கொள்! உன்னுடைய மனது என்னவோ அவள் துயரப்படுகிறாள் என்று நினைத்து நினைத்து அவள் வசம் போய்விட்டது என்பது உண்மைதானே..ஆண் பெண் உறவு அதுவும் மணவாழ்க்கையில் உள்ள பெண்ணின் உறவு என்பது கூரான கத்தியின் மேல் நடப்பது போன்றது..
நீ என்னைக் கேட்கலாம்.. என் மனதில் கள்ளம் கபடம் போன்ற தீய எண்ணங்கள் ஏதுமில்லையே என்று’ ஆனால், ஒன்றை நன்றாக சிந்தித்துக் கொள்! தீய எண்ணமானது மனிதரான நம் மனதில் ஏதோ ஓர் மூலையில் எப்போதுமே ஒளிந்து கொண்டே இருக்கும். அது சந்தர்ப்பத்தை நோக்கிக் காத்திருக்கும்.. ஒரு சின்ன ஊசிமுனை அளவு இடைவெளி கிடைத்தாலும் போதும் அது உடனே நம் மனதை ஆக்கிரமித்து விடும்.. ஒரு விஷயம் தெரியுமா, நாமே இம்மாதிரி சந்தர்ப்பங்களை விரும்பி தீய எண்ணங்களின் வரவுக்கு வழி வகுப்போம்.. சந்தர்ப்பத்தையும் நாமே ஏற்படுத்தித் தருவோம்.. நல்ல சிந்தனையும் புத்தியுமுள்ள மனிதன் எந்த சமயத்திலேயும் இத்தகைய சந்தர்ப்பத்துக்கு வழி வகுக்க சந்தர்ப்பமே கொடுக்கமாட்டான்..”

என் மனதில் ராமாராவின் வார்த்தைகள் நன்றாகவே பதிந்தன.. ஆமாம்.. கள்ளம் என்பது இப்போது இல்லைதான்.. அவள் மீது அன்பும், பாசமும், அவள் நன்றாக இருக்கவேண்டுமே என்ற எண்ணமும் இருக்கின்றனதாம்.. ராமாராவ் சொல்படி நான் ஏன் புத்திசாலித்தனமான மனிதனாக இருக்கக்கூடாது!! என் மனது சற்று எளிதாகிப் போனது போல உணர்ந்தேன்..

அடுத்த நாள் காலை நான் படுக்கையில் படுத்துக் கொண்டிருந்தேன்.. மனம் நிம்மதியாக இருந்ததால் கீழே அடாவடியாகப் போகவேண்டும், மாதில்தா பார்வையில் விழவேண்டும் என்றெல்லாம் ஆசைகள் இப்போது இல்லை.. மெதுவாகச் செல்லலாம்.. கல்லூரியில் நிறைய வேலை இருக்கிறது.. அதைப் பார்ப்போம்.. கொஞ்சம் சோம்பல் முறித்துக் கொண்டேன்.. எனக்கே என் சோம்பல் ஆச்சரியமாக இருந்தது. காலை எழுந்தவுடன் மாதில்தா நினைவிலேயே சுறுசுறுப்பாகவே இருந்திருக்கிறேன்.. கொஞ்சம் தெளிவு கிடைத்ததும் இந்த சோம்பலும் துணைக்கு வந்துவிட்டது.. பெண்ணின் சக்தி பெரியதுதான்.. படபடவென கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. மான்சனின் வேலைக்காரப் பையன்..

“அண்ணா! எதிர்வீட்டுப் புலி உங்களை கல்லூரிக்குச் செல்லும்போது ஒருமுறை வீட்டுக்கு வந்து விட்டுப் போகச் சொன்னது.. என்னவோ பெரிய பலி காத்திருக்கப்போகிறது, ஜாக்கிரதை!”

அய்யோ.. என நினைத்துக் கொண்டு, சாதாரணமாக முகம் கழுவிக்கொண்டு சட்டையைப் போட்டுக் கொண்டு எதிர் வீட்டுக்கு ஓடினேன்.. மனதில் பல நினைவுகள்.. நான் இன்னும் இடத்தை விட்டுப் போகவில்லையென அவள் ஏதேனும் விஷத்தை முழுங்கிவிட்டாளோ.. இருக்காதே.. கல்லூரி செல்லும்போதுதானே புலி நம்மை வரச்சொன்னது..

“வா தம்பி.. இப்படி உட்கார்..” என்றது புலி.. அட என்ன இது, புலி பூனையாயிற்றோ.. உள்ளே குரல் கொடுத்தது.

“மாதில்.. தம்பி வந்திருக்கு.. கொஞ்சம் காபி கொண்டு வருகிறாயா” என்று மிக மிருதுவான குரலில் கேட்டது. பசுத்தோல் போர்த்திய புலியோ.. எதற்கும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

“தம்பி! நீங்களெல்லாம் நினைப்பது போல நானும் என் மனைவியும் எலியும் பூனையும் இல்லை. நாங்கள் அன்னியோன்ய தம்பதிகள். நான் அவளுக்கு தினமும் ஒரு நூலை வாசித்துக் காண்பிப்பதும் அதைப் பற்றி விவாதிப்பதுமாக எங்கள் காலம் கழியும். ஆனால் இந்த ஒருவாரகாலமாக ஒரு சின்ன மாற்றம். நீ அங்கே நிற்பதும் எங்கள் வீட்டையே பார்ப்பதும் கவனித்துக் கொண்டேதான் இருந்தோம். ‘அவன் உன்னைத்தான் கவனிக்கிறான் என்று அவளைக் குற்றம் சொன்னதுக்கு, அவள் ‘அப்படிப் பார்த்தால் பார்க்கட்டுமே’ என்று இளக்கரமாகப் பதில் சொல்வது போல பட்டது. இவளுக்குத் தன் அழகின் மேல் கர்வம் என அவளைத் திட்டி தீர்த்தேன். ஒரு வாரகாலமாக நான் தவித்த தவிப்பும் என்னிடம் என் மனைவி பட்ட பாடும் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்றுதான் உன்னை இங்கே நேற்று தருவித்தேன். அது நல்லதாகப் போய்விட்டது. நீ உண்மையைச் சொன்னதும் அந்த சத்தியத்தை நான் அலட்சியப்படுத்தியதும் எனக்குப் புரிந்தது.. மாதில்தாவை அழைத்துப் போ என்றதும் கண்களில் நீர் தளும்ப நீ திரும்பிப் போனதையும் கவனித்தேன்.. மாதில்தாவும் அழுதாள். நான் அவளிடம் மெய்யாகவே சொன்னேன்.. எனக்கு ஒரு ஆட்சேபணையும் இல்லை.. நீ அவனுடன் போவதால் இருந்து போய்விடு, என்றேன். அவள் அழுதாள். இபபடிப் பேச எப்படி மனசு வந்தது என்று என்னைத் திரும்பக் கேட்டாள். அழகாய் இருப்பது ஒரு குற்றமா என்று திருப்பிக் கேட்டாள். அழுதுகொண்டே ஒன்றைச் சொன்னாள் தம்பி!

’அழகு அழகு என்கிறீர்களே, இந்த உடல் சௌந்தரியம் வயதாக வயதாகத் தேய்ந்து கொண்டே போகும். உள்ளம் எப்போதும் அழகாக இருக்கவேண்டும்.. உள்ளத்தில் அழகு இருந்தால் போதாதா.. பாருங்கள் அந்தத் தம்பி உண்மையையே பேசியது.. அது உள்ளத்தின் அழகு.. தப்பான எண்ணமுள்ளவராக இருந்தால் நீங்கள் சொன்னவுடன் என்னை இழுத்துக் கொண்டு ஓடி  விடாதா.. அழகெல்லாம் போனவுடன் என்னையும் இக்கட்டில் எங்காவது மாட்டிவிட்டு ஓடிவிடாதா.. இனி ஒரு முறை என்னைப் பற்றித் தவறாகப் பேசினீர்கள் என்றால் என் பிணம்தான் இங்கு கிடக்கும். அவ்வளவுதான்’.. 

ஆகா.. அந்தத் தேவதை நேற்றுதான் என அகக் கண்களைத் திறந்து விட்டாள். தம்பி! இனி நீ அடிக்கடி வா.. என் புத்தக அலமாரியில் உனக்குத் தேவையான புத்தகங்களை எடுத்து இங்கேயே படி.. முடிந்தால் நாங்களும் உனக்கு உதவி புரிகிறோம்.. .என் மனைவிக்கு இங்குள்ள அத்தனைப் புத்தகங்களும் அத்துப்படி! என்ன மாதில்..” 

அப்போதுதான் அங்கு காபிக் கிண்ணத்துடன் வந்த மாதில்தா தன்னைப் பற்றிப் பெருமையாகப் பேசிய கணவனைப் பார்த்துக் கொண்டே தலையசைத்துச் சிரித்தாள்.

நான் வியந்து போனேன்.. நேற்று ராமாராவ் கூட என் அகக் கண்களைத் திறந்தானோ.. 

------------------------------------------------------------------------------------------------------------------- -------------------------------------------

ந்தக் கதையில் மாற்றான் மனைவி விஷயத்தை எந்தவித விகல்பமும் எவர் மனதிலும் தோன்றாதவாறு எழுதிய குருஜாடா அப்பாராவை எத்தனை பாராட்டினாலும் தகும்.. அதுவும் கதை எழுதிய காலத்தையும் நாம் நோக்கவேண்டும். 1910 ஆம் ஆண்டில் ‘ஆந்திர பாரதி’ எனும் இதழுக்காக எழுதிய சிறுகதை இது. 

Friday, September 28, 2012

தேசம் என்றால் வெறும் மண்ணல்ல, மனிதம்

2. தெலுங்கு இலக்கிய உலகின் பாரதி - குருஜாடா அப்பாராவ்


1892 இல் குருஜாடா ‘கன்யாசுல்கம்’ எனும் நாடகத்தை எழுதி அரங்கேற்றினார்.
இந்த நாடகம் ஏறத்தாழ 8 மணிநேர அளவுக்கான நாடகம் என்பது
குறிப்பிடத்தக்கது. இந்த நாடகம் விஜயநகர ராஜாவின் முன்னிலையில்
அரங்கேற்றப்பட்டது. நாடகத்தைப் பற்றி அறிந்தோமானால், நம்மால் அக்கால
கட்டத்தில் நமது சமூகங்கள் எப்படியிருந்தன என்பது நன்றாகத் தெரியும்.
சமூகக் கட்டமைப்பு, சாத்திரங்களைக் காட்டி பயமுறுத்துதல், நிலச்சுவான்
தார்களின் காமக் கிழத்திகளும், காம விளையாட்டுகளும், தீண்டாமையும்
எப்படியெல்லாம் நம் சமூகத்தை சீரழித்துக் கொண்டிருந்தன என்பதும்
தெரியும். அரசியல் காரணங்களுக்காக பழிவாங்குதல், ஒருவர் மீதான பகைமையை
தம் சுயநலத்துக்காகத் தூண்டுதல், உழைப்பாளிகளின் வயிற்றெரிச்சலை
சம்பாதித்துக் கொள்வது, தீண்டாமை போன்ற சமூகத்தின் அத்தனை
கெடுதல்களையும் குருஜாடா தைரியமாக எழுதி தவறுகளை வெட்ட வெளிச்சமாகக் காண்பித்தார்.

குருஜாடாவுக்கு பெண் விடுதலை, விதவா விவாகம், பெண்கள் கல்வி கற்று
முன்னேறுதல் போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடு இருந்தது. அதே போல தாசிகளின் வாழ்க்கையும் மேம்படவேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையும் இருந்தது. இவை இவர் மனதில் பசுமரத்தாணி போல பதிந்திருக்கவேண்டும். இந்த வேட்கை அவர் எழுதிய கன்யாசுல்கம் நாடகத்தில் மட்டுமல்ல, பல சிறுகதைகளிலும், கவிதைகளிலும் தென்பட்டது.

கன்யாசுல்கம் நாடகம் சமூக அலங்கோலங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிய ஒரு கோர்வையான உரையாடல் தொகுப்பு என்றுதான் சொல்லவேண்டும். அக்ரஹாரத்தில் அன்றைய காலத்திலிருந்த அவலங்களை வெளிச்சமாக்கிய கதைத் தொகுப்புதான் இது.

அக்னிஹோத்ரவதானிலு எனும் பிராம்மணர் குடும்பத்தை மையமாக வைத்து
சித்தரித்தாலும், ஊரில் உள்ள பிற சமுதாயத் தவறுகளையும், சாஸ்திரங்களைக் காட்டி தன் சொந்தங்களைத் தாமே அழித்துக் கொள்வதையும் விவரமாகக் காட்டும் நாடகம்.

அக்னிஹோத்ரம் தன் இளைய பெண் சுப்பம்மாவை காசு பெற்றுக்கொண்டு ஒரு கிழவருக்குக் கலியாணம் செய்து கொடுக்க முன்வருகிறார். அந்த சிறு பெண் இன்னமும் பூப்படையாத சிறு பெண். ஏற்கனவே இப்படித்தான் தன் முதல் பெண்ணைக் கலியாணம் செய்து கொடுத்து, மருமகனையும் சாவுக்குப் பலிகொடுத்து விதவையாகத் தன் வீட்டிலேயே வைத்துப் போஷித்து வருபவர். இந்த சிறு பெண்ணை இரண்டாம் தாரமாக மணக்க முன்வரும் கிழவர் வீட்டிலும் இதே போல ஒரு சூழ்நிலைதான். அந்தக் கிழவருக்கு ஒரு வளர்ப்பு மகனாக கிரியீசன் என்பவன் இளைஞன், நாலும் தெரிந்தவன், இவன் ஒரு சமயத்தில் மிக நல்லவனாகவும் சில சமயங்களில் கெட்டவனாகவும் சித்தரிக்கப்படுகிறான்.

கிரியீசனுக்கும் ஊரில் உள்ள தாசியான மதுரவாணிக்கும் ’சிநேகிதம்’ உண்டு.
அதனால் சில முறைகள் ஊரில் இகழ்ச்சிகளுக்கும் ஆளாகிறான். இதில் ஆச்சரியம் என்னவென்றால் மதுரவாணி தர்மநியாயம் தெரிந்தவள். அதர்மச் செயலுக்குத் துணை போகமாட்டாள். அப்படி யாராவது போனாலும் அவர்களை தைரியமாகக் கண்டிப்பவள் கூட. மதுரவாணிதான் முதன் முதலாக பூப்ப்டையாத பெண்ணை கிரியீசன் வளர்ப்புத்தந்தை காசு கொடுத்து மணம் செய்வதை எதிர்த்தவள். இந்த எதிர்ப்பில் கிரியீசனும் கலந்து கொள்கிறான். இது சிறிது சிறிதாக இரண்டு வீட்டிலும் இந்த எதிர்ப்பு பரவிப் பெரிதாகி ஊரையே ஒரு கலக்கு கலக்குகிறது.

மாப்பிள்ளைப் பேச்சைக் கேட்டு நீதி செய்கிறேன் பேர்வழி என அந்த அழகான
மதுரவாணியையும் கிரியீசனையும் பிரிக்க முன்வருகிறார் அந்த ஊர் கர்ணம்
ராமப்ப பந்துலு. அதற்கு விலையாக அந்தப் பந்துலு வேறு வழியில்லாமல்
மதுரவாணி வீட்டிலேயே இருக்க நேரிடுவது தனிக்க்கதை (ஏற்கனவே சொன்னேனே, மதுரவாணி தர்மநியாயம் தெரிந்த தாசி என்று!).

நாடகம் முழுவதும் சமூகத்தின் அவலங்களை நையாண்டியாகப் பேசப்படுவதால்நாடகத்தில் எங்குமே அலுப்புத் தட்டாது. குருஜாடாவுக்கு பாமரர்களின் மனநிலையையும், நடுத்தரவர்க்கத்தாரில் மனநிலையும் நன்றாகத் தெரிந்துவைத்துக் கொண்டு அவர்கள் மனதில் தம் கருத்துகள் ஆழமாக மனதில் பதியும் வண்ணம் உரையாடலை எழுதியுள்ளார். அதனாலேயே பல ஆண்டுகள் இந்த நாடகம் ஆந்திராவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அரங்கேறியது, 1909 ஆம் ஆண்டில் குருஜாட உடல்நிலை காரணமாக நீண்டநாள் ஓய்வாக உதகமண்டலத்தில் தங்கியிருந்த காலத்தில் இந்த கன்யாசுல்கம் நாடகத்தை மேலும் பொலிவு பெறச் செய்தார். நகைச்சுவையை மேலும் மெருகுபடுத்தப்பட்டதால் அவரது நாடகம்
நூறாண்டைக் கடந்தும் இன்னமும் பாமர மக்களிடையே பேசப்படுகிறது.

கன்யாசுல்கம் 1955 ஆம் ஆண்டில் தெலுங்கு திரைப்படமாக எடுக்கப்பட்டது.
தாசி மதுரவாணியாக சாவித்திரியும், கிரியீசமாக என்.டி.ராமாரவும்
நடித்தனர் (above still). இந்தப் படம் வெற்றிப் படமாக இருந்ததால் இந்தக் கதையும்
நிரந்தரமாக மக்கள் மனதில் நிலைக்க வழி வகுத்தது.

Pictures courtesy Google Images




குருஜாடா சிறுகதைகள் பற்றிய விவரம் பார்ப்போம்.



Wednesday, September 26, 2012

தேசமென்றால் வெறும் மண்ணல்லடா, அது மனிதம்’


சென்ற ஞாயிறன்று தெலுங்கு இலக்கிய உலகின் பாரதியான குருஜாடா வெங்கட அப்பாராவ் அவர்களின் 150 ஆவது பிறந்த நாள் விழாவில் அவரது சிறுகதை தொகுப்பு ஒன்று குறித்து பேசுவதற்காக அடியேனுக்கு அழைப்பு விடுத்திருந்தார்கள். நல்ல கூட்டம். ஒருநாள் முன்பே கொஞ்சம் ஏற்பாடு செய்துகொண்டும், எதைப் பேசவேண்டும் என திட்டமிட்டுக் கொண்டு சென்றதால் நம் பேச்சுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. தெலுங்கு தினப் பத்திரிகைகளிலெல்லாம் போட்டோவுடன் செய்தி போட்டு தூள் கிளப்பி விட்டார்கள். இந்தச் செய்தியுடன் என் தற்பெருமையையும் நிறுத்திக் கொண்டு பொதுவாக நல்ல சிந்தனையாளர் ஒருவரின் இலக்கியத்தை தமிழர்களும் நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால் இக்கட்டுரையை உங்கள் முன் சமர்க்கின்றேன்.. முதலில் குருஜாடா பற்றி சில விவரங்கள்.

குருஜாடா அப்பாராவ் 1862ஆம் வருடம் இங்குள்ள (ஆந்திராவின் வடகோடி) விஜயநகரத்தின் அருகே ராயவரம் எனும் ஊரில் ஒரு அந்தணக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். இந்தப் பகுதியில் எல்லாம் ஊருக்கு ஊர் ராஜாக்கள் என்றிருந்த காலம் அது. விஜயநகர ராஜாவான பசுபாடி அனந்த கஜபதி ராஜு (இதே பெயரில் இவரது பேரன் இன்று இருக்கிறார்) இவரைப் பிரத்தியேகமாகக் கவனித்து நன்றாகப் படிக்க வைத்தார். F.A. வும் B.A வும் முடித்த இவரை ராஜா தன் பெயரில் உள்ள பள்ளியும் கல்லூரியும் சேர்ந்த கல்விக்கூடத்தில் ஆசிரியராக வேலைக்கு அமர்த்திக் கொண்டதோடு தனது தனிப்பட்ட செயலாளராகவும் பொறுப்பு கொடுத்து ஒரு நல்ல அந்தஸ்த்தினைக் கொடுத்தார். (ராஜா காலமானதும் ராணியின் தனிப்பட்ட செயலாளராக்வும் பொறுப்பேற்றுக் கொண்டார்). குருஜாடா.தனது 30 ஆவது வயதில் அதாவது 1892 ஆம் ஆண்டில் ‘கன்யாசுல்கம்’ என்ற நீண்ட நாடகத்தை எழுதி அதை விஜயநகரத்தில் அந்த வருடமே மேடையேற்றியவர். தெலுங்கு இலக்கிய உலகில் முதல் நாடக இலக்கியத்தைப் படைத்தவர் இவர்தான். கன்யாசுல்கம் என்றால் ’காசு பெற்று கன்னியைக் கொடுப்பது’ என்று பொருள். பெண்கள் விடுதலை என்பதெல்லாம் கனவு என்கிற காலத்தில் எழுதப்பட்ட ஒரு புரட்சிக் கருத்துகள் கொண்ட  இந்த நாடகம், சாதாரண ஆசிரியாராக எம்.ஆர் கல்லூரியில் பணி செய்து கொண்டிருந்த குருஜாடா அப்பாராவ் அவர்களை எங்கேயோ உயரத்தில் தூக்கி வைத்து விட்டது.

இந்த நாடகத்தைத் தொடர்ந்து பல்வேறு கவிதைகள் கதைகள் என எழுதினார் குருஜாடா. ’தேசமண்டே மட்டி காதோயி, தேசமண்டே மனுஷோயி’ - என்ற இவரது கவிதை வரிகள் காலா காலத்துக்கும் தெலுங்கு மக்கள் சொல்லக்கூடிய மந்திரச் சொல்லாக மாறியது.

’தேசம் என்பது வெறும் மண்ணென நினைத்தாயோ,
தேசமென்றால் வெறும் மண்ணல்லடா, அது மனிதம்’


என்ற உன்னதமான வார்த்தையைக் கொடுத்தவர். இவரது நாடகமாகட்டும், கவிதையோ அல்லது கதைகளோ ஆகட்டும் எல்லாமே பேச்சுத் தெலுங்கில் எல்லோருக்கும் புரியக் கூடிய எளிய வகையில் எழுதினார் என்பது முக்கியமான விஷயமாகும். அதுநாள் வரை தெலுங்குப் புத்தகமோ, இலக்கிய எழுத்துக்களோ சாஹித்ய தெலுங்கில் எழுதுவது என்பது கற்றறிந்த தெலுங்கு சான்றோர்களின் பணியாகவே இருந்து வந்தது. அதற்குக் காரணமும் உண்டு..

தெலுங்கு மொழியின் ஆதிகவியாக நன்னய்யா மகாபாரதத்தை தெலுங்கில் பாடியதுதான் தெலுங்கு மொழிக்காக எழுத்துபூர்வ ஆதாரமாக முதல் நூலாகப் பெயரெடுத்துள்ளது. 1052 ஆம் ஆண்டில் வேங்கிராஜபுரத்தில் ராஜராஜ நரேந்திரன் (சோழ சக்கரவர்த்தியான ராஜேந்திர சோழனின் மருமகன், அம்மங்காதேவியின் கணவன்) அரசவையில் இந்த தெலுங்கு நூல் ஆந்திர மாஹாபாரதம் எனும் பெயரால் நன்னய்யாவினால் அரங்கேற்றப்பட்டது.

ராஜராஜநரேந்திரனையும் ஒரு பாட்டின் மூலம் சரித்திரத்தில் நிலையாக இடம் பெற வைத்தவர் நன்னய்யா. அதே போல டிக்கன்னா, யர்ரப்ரகடா, இந்த இருவரும் நன்னய்யா எழுதி ஆரம்பித்த மகாபர்ரத நூலை முழுமையாக தெலுங்கு மொழியில் மாற்றம் செய்தனர். ஏறக்குறைய எல்லா தெலுங்குப் புலவர்களுமே புராண இதிகாசக் கதைகளை தெலுங்கில் எழுதினர். 13ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சுமதிசதகம் (சுமதிநூறு) மட்டும் நம் நாலடியார் போல நீதி சாஸ்திரத்தைப் போதிப்பது. இந்த நூறு பாடலை எழுதியவர் பெத்தன்னா பூபாலுடு என்பவர். ஸ்ரீநாத எனும் பெரும் புலவர் சரித்திரம் மற்றும் புராணங்களைக் கவிதையாகப் படைத்தார். இவர் ஒருவரே தெலுங்கில் கவிச்சக்கரவர்த்தி எனும் பெயர் பெற்றவர். பல்நாட்டி சரித்ரா எனும் சரித்திர நிகழ்வு கூட இவரால் எழுதப்பட்டது என்பர் சிலர். பின்னர் வேமனா (வேமன சதகம்), அன்னமய்யா (வேங்கடவன் கீர்த்தனைகள்) போன்றோர் தெலுங்கு மொழியில் அதிகமான அளவில் கவிதைகள் இயற்றியவர்களாவர்.

ஆனால் தெலுங்கு மொழி மிகப் பிரபலமாக இருந்த காலம் என்பது விஜயநகர சாம்ராஜ்யத்தில் ஸ்ரீகிருஷ்ணதேவராயர் பேரரசராக வீற்றிருந்த காலத்தில்தான். அஷ்டதிக்கஜங்கள் என்று சொல்லப்பட்ட எட்டு மகாகவிகள் (அல்லசானி பெத்தன்னா தலைமைப் புலவர், தெனாலி ராமனும் இவர்களில் ஒருவர்தான்) தெலுங்கு மொழியை மிக உயர்நிலையில் வைத்திருந்தனர். சிருங்காரமும், ஆட்சி இயலும், பக்தியும், புராணங்களும் அதிகம் தெலுங்கில் எழுதப்பட்ட காலமும் இதுதான்.  ஸ்ரீகிருஷ்ணதேவராயர், தான் துளு மொழிக்காரராய் பிறந்தாலும், தன் ஆட்சி மொழி கன்னடமாகவே இருந்தாலும் ‘ஆமுக்த மால்யதா’ எனும் பெயரில் தமிழுக்கான கவிதை மாலையை தானே இயற்றி அரங்கேற்றினார். உண்மையான திராவிடனாக ஸ்ரீ கிருஷ்ணதேவராயர் இருந்தது என்பது இந்த ஒன்றே சாட்சியாகும். கி.பி. 1500 - 1550 ஆண்டுகள் தெலுங்கு மொழியின் பொற்காலம் கூட. குறிப்பாக தூர்ஜதி எழுதிய ஸ்ரீகாளஹஸ்தி சதகம் என்பது நம் திருவாசகத்துக்கிணையாகப் போற்றப்படும் பாடல்கள் ஆகும்.

பின்னர் 1650 இல் எழுதப்பட்ட கோபன்னாவின் ராமதாச கீர்த்தனைகளாகட்டும், திருவையாறு தியாகையா பாடிய ராமநாம கீர்த்தனைகளாகட்டும் போத்தனா எனும் புலவர் நாவுக்கு மிக இனிமையாகவும் பொருள் செறிந்து எழுதிய தெலுங்கு-பாகவதம் ஆகட்டும், தெலுங்குக் கவிதை என்பது சாதாரண மக்கள்: படிக்கும் அளவுக்கு அவ்வளவு எளிதாக இல்லை. மிகவும் கற்றறிந்த சான்றோர் துணை கொண்டே எந்தக் கவிதையும் படித்து பொருள் அறிந்து கொள்ள வேண்டிய நிலை இருந்து வந்தது. திராவிட மொழிக் குடும்பத்தில் இருந்துதான் தெலுங்கு வந்தது என்றாலும் வடமொழி சற்று அளவுக்கதிகமா தெலுங்குக் கவியாக்கத்தில் கலந்து போனது ஒருவிதத்தில் பாலோடு தேன் சேர்ந்ததாக இருந்தாலும், இந்தத் தேனினும் இனிய மொழியை சான்றோர்களால் மட்டுமே மிகவும் ரசித்து சுவைக்கவேண்டியதாயிற்று என்பது உண்மை. அத்துடன் இவையனைத்தும் வடமொழிக் கவிதைக்கான இலக்கண மரபு மாறாமல் எழுதப்பட்டதையும் நோக்கவேண்டும்.

தெலுங்கு மொழி பேசும் நாட்டில் ஆதிகாலத்திலிருந்தே படித்தவர் என்போர் உயர்குலம் என்பதாக சொல்லப்பட்ட நால்வகை வர்ணத்திலேதான் அதிகம் இருந்தது. தெலுங்கு நாடு நல்ல ஆறுகளாலும், மலைவளத்தாலும் சூழப்பட்ட நாடு. வனங்களும், சுரங்கங்களும் அதே சமயத்தில் பாறைகளும் இயற்கையாகவே அதிகம் அமையப்பெற்ற நாடு இது. ஆகையினால் உழைக்கும் வர்க்கத்தினருக்கு எந்நாளும் வேலையும் வேலைக்கேற்ற ஊதியமும், கொண்டாட்டங்களும், திருவிழாக்களும் அதிகம் இருந்ததால் ஏட்டுப்படிப்பறிவு என்பது தேவையான ஒன்று என்பதை அவர்கள் அறியவில்லை என்றே சொல்லலாம். உழைக்கும் வர்க்கத்தினர் அனைவரும் ஆதிக்க வர்க்கத்தினர் பிடியில் இருந்தனர் என இக்கால வழக்கச் சொல்படி ஏற்றுக் கொண்டாலும் இதனால் இவர்கள் துன்பங்களை அனுபவிக்கவில்லை என்பதுதான் உண்மை. இத்தகைய நிலை ஆங்கிலேயர் ஆட்சியைக் கையில் எடுக்கும் வரை நீடித்தது. ஆங்கிலேயர் காலம் முதற்கொண்டுதான் வேலைகளுக்கு வரைமுறை, அடக்குமுறை, அதிக வரி வசூல், சாதிகளுக்கிடையே ஏற்றதாழ்வுகளைப் பயன்படுத்தி அதனால் பயன் அடைவது போன்றவை அதிக அளவில் வெளியே தெரியவந்தன. இந்த ஏற்றதாழ்வுகளும் அதனால் ஏற்படும் துன்பங்களும் ஒரு சிலரை உண்மையாகவே காயப்படுத்தியதால் எவரெவர் துன்பத்துக்கு ஆளானவரோ அவர்களை ஆறுதல்படுத்தும் விதமாக உழைக்க ஆரம்பித்தனர்.

இப்படித்தான் குருஜாடா அப்பாராவின் சமூகப் பணியும் தொடர்ந்தது. இவரது நற்பணிகள் அறியப்பட்டு பிற்காலத்தில் மிகப் பெரிய சமூகசீர்திருத்தவாதி என்றும் அழைக்கப்பட்டார். சமூகத்தில் இழைக்கப்படும் அநியாயங்களை தனக்கே உரிய பாணியில் எகத்தாளமாகவும், சாஸ்திரத்தை சுயநலத்துக்காக பயன்படுத்தி இழைக்கப்படும் அவமானங்களையும், பெண்களுக்கான இழிநிலையையும் எதிர்த்து எழுத ஆரம்பித்தார். இதற்கு அவர் வெளியே உள்ள ஆதிக்க சாதியைச் சாடவில்லை. முதலில் தன் சாதியிலிருந்தே தொடங்கினார்.

(இரண்டாம் பகுதி வரும்)


Tuesday, September 4, 2012

ஐந்தாண்டு கால திட்டம்

அடுத்த வீட்டில் ஒரு அடுத்த நாட்டுக்கார டாக்டர் சந்துரு வந்து போனதைப் பற்றியதுதான் இந்தப் பதிவு.

டாக்டர் சந்துருவைப் பற்றி ஒரு சில வார்த்தைகள். தமிழார்வம் மிக்க இந்த டாக்டர் மலேயாவைச் சேர்ந்தவர். தன் இல்லத்தில் மிக அதிக அளவில் தமிழ்ப் புத்தகங்களை சேகரித்து வைத்துள்ளவர். ஒவ்வொருமுறை இந்தியப் பயணத்தின் முடிவில் இவருடன் ஒரு மூட்டைக் கட்டு தமிழ்ப்புத்தகங்களும் கூடச் செல்லும். இருதய சிகிச்சை நிபுணர் என்ற வகையில் மலேயா மன்னருக்கும், அந்த நாட்டு பிரதமருக்கும் பல்லாண்டுகளாக தனிமருத்துவராக இருந்தவர், தற்போது கேடாவில் உள்ள மருத்துவக் கல்லூரியில் போதகர். சென்னை எழுத்தாள நண்பர் அனுஷா வெங்கடேஷ் இவரை எனக்கு அறிமுகப்படுத்தும்போதே வம்சதாரா பிரியர் என்று அறிமுகப்படுத்திதான் எழுதினார். அதன் பிறகு அவரும் நானும் சில மெயில்கள் பறிமாறிக்கொண்டதோடு சரி. என்னுடைய கட்டுரைகளைப் படித்துவிட்டு தனிமடல் எழுதுவார்.

டாக்டர் சந்துருவிடம் ஒரு விசேஷம் என்னவென்றால் தன் ஒவ்வொரு தமிழகப் பயணத்தின் போதும், சென்னையில் தான் விரும்பும் நபர்களிடம் நேரில் சென்று அவர்களோடு உரையாடி அவர்களது அனுபவங்களைத் தெரிந்துகொள்வது. இப்படி அவர் பல எழுத்தாளர்களை சந்தித்துள்ளார். கர்நாடக சங்கீத ரசிகர் என்பதால் இசைமேதைகளை சந்திப்பதும் இவரது லிஸ்டில் அடங்கும். இரண்டு மாதங்களுக்கு முன்பு எனக்கு போன் செய்து இந்த முறை சென்னைப் பயணத்தின்போது விசாகப்பட்டினம் வந்து அடியேனை சந்திக்க விருப்பம் தெரிவித்தபோது  ஆஹா.. வாருங்கள்.. விசாகப்பட்டினம் விருந்தினர்களுக்கு சொர்க்கம் போலத்தான் (இங்கேயே இருப்பவர்களுக்கு நரகமா எனக் கேட்கவேண்டாம் இருந்து பார்த்தால் தெரியும்) என்று அழைப்பு விடுத்தேன்.

இவர் இங்கு வந்ததுமே சொல்லிவிட்டார். ‘சார்.. எனக்கு உங்களைப் பார்க்கவேண்டும், உங்களோடு பேசவேண்டும் உங்கள் புத்தகத்தைப் பற்றி விவாதிக்கவேண்டும், வம்சதாரா பிறந்து வளர்ந்த கதையை உங்கள் வாயால் கேட்கவேண்டும் அவ்வளவுதான். வேறு ஒன்றும் விசேஷமில்லை’. எத்தனைதான் உயர்ந்த பதவியில் இருந்தாலும் மிக எளிய முறையில் இருந்தது எனக்கு மிகவும் பிடித்தது.


வேடிக்கை என்னவென்றால் நான் வம்சதாராவைப் பற்றிப் பேசியதை விட ஒரு இருதய சிகிச்சை நிபுணரின் மருத்துவ அறிவுரைகளை அவர் வாயால் பெற வைத்ததுதான் விசேஷம். முப்பதாயிரம் நோயாளிகளை (எந்த நோய் இருந்தாலும் நோயாளிதானே) பார்த்த கை, அதுவே நம்மிடம் தேடி வந்துள்ளது என்பதால் சும்மா விட்டுவிட முடியுமா.. தமிழ்ச்சங்கத்தில் அன்று கூடியிருந்தோரிடம் ஒரு சில நிமிஷங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசவைத்தேன். என்னுடன் இருந்த நான்கு நாட்களும் ஒரு மனிதன் தன் உடல்நலத்தை எவ்வாறு பேணிப் பாதுகாக்க வேண்டும் என்ற அவசியத்தை ஒரு மாணவனுக்கு ஆசிரியர் சொல்வது போல பகிர்ந்து கொண்டார். முக்கியமாக இதயம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மிக அழகாக எடுத்துரைத்தார். உங்களுக்காக அவரால் சொல்லப்பட்ட சில விஷயங்களை கீழே தருகிறேன்.

ஐந்தாண்டு கால திட்டம் என்பதைப் போல ஒவ்வொரு மனிதனும் அடுத்த ஐந்தாண்டு காலம் நாம் வாழ்கிறோம் என்பதை மனதில் வைத்துக்கொண்டு அந்த ஐந்து ஆண்டு காலத்துக்கு எப்படியெல்லாம் ஆரோக்கியத்தை பாதுகாப்பது என்பதில் திட்டமிட்டு அதன்படி செய்லபடவேண்டும். அந்த ஐந்தாண்டு கடந்த பிறகு அடுத்த ஐந்தாண்டு திட்டம்..

புற்றுநோய் என்பது திடீரென வருவது அல்ல.. உடம்பில் உள்ள நல்ல செல்களின் பலம் குறைகின்றபோது தீய செல்கள் பலம் பெறுகின்றன. இது முடிவில் மரணத்துக்குக் கொண்டு செல்கிறது. ஆகையினால் நல்ல செல்கள் எப்போதும் பலமாக வைத்திருக்கும் வழியைப் பேண வேண்டும்.

வெளிநாடுகளில் காண்பது போல இந்தியர்கள் யாரும் ஆரோக்கியத்துக்குத் தனிமுக்கியத்துவம் தருவதில்லை. பெரும்பாலானோர் சுகாதாரம் பற்றிய தெளிவும், உடற்பயிற்சியைக் கடைபிடிப்பது பற்றியும் இன்னமும் பழைமையான ஞானத்திலேயே உள்ளனர். அரசாங்கமும் இதைப் பற்றி அதிகமாக கவலைப் படுவதில்லை என்பது வருத்தமானது. மலேசிய டாலர் ஒன்று செலுத்தினால் பெரிய டாக்டர் கன்ஸல்டன்சியிலிருந்து பரிசோதனைகள் முதற்கொண்டு மலேசியாவில் அனைத்தையும் பெறலாம். இந்தியாவில் இப்படி இல்லை.

டாக்டர் கைராசி என்பது எல்லாம் பழையகாலத்துப் போக்குதான். இப்போது எந்த நோயானாலும் அதை தீர்க்கமாக ஆராயவும் என்ன மருந்து கொடுத்தால் அது போகும் என்பதற்கான பொது மருந்து வகைகளும் உலகமெங்கும் வந்துள்ளன. ஆகையினால் எந்த டாக்டருமே ஒரே அளவில்தான், ஒரே மருந்தின் நம்பிக்கையில்தான் கொடுக்கிறார்கள். இங்கே கைராசி எங்கே செல்லும்?

அரிசியைக் குறைத்து உணவை உட்கொள்ளுதல் எப்போதுமே நல்லது. இன்றைய நிலையில் அரிசி ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல.

மூன்று வேளையாக இங்கு நாளும் உணவு உண்கிறோம். மூன்று வேளைக்குத் தேவையான உணவை ஆறு வேளைக்கு மாற்றிக் கொண்டால் ஆரோக்கியத்துக்கு நல்லது.

கொய்யாப்பழம், வாழைப்பழம், பப்பாளிப்பழம் இவைகள் மிக மிக மலிவானதும், எளிதில் எங்கேயும் கிடைக்ககூடியதும் ஆகும். ஆனால் இந்த மூன்று பழங்களில் உள்ள ஊட்டச்சத்தும், வைடமின்களும் வேறு எந்தப் பழங்களிலுமே இல்லை. அதே சமயம் இப்பழங்களை உண்ணும்போது, காயாக இல்லாமலும், பழமாக ஆகாமலும் இருக்கும் நிலையில் எல்லோருமே உண்பது மிக நல்லது. பழுத்த பழமாக உண்பது நீரிழிவு நோயுள்ளோருக்கு (வாழை) நல்லதல்ல. பழங்களை முக்கிய உணவாக தினப்படி வழக்கமாக்கிக் கொள்ளவும்.

இன்றைய சூழ்நிலையில் நோய், (முக்கியமாக ரத்த அழுத்தம், சர்க்கரை, ஆஸ்த்மா) நம்மைத் தாக்குவதைத் தடுக்க முடியாது. ஆனால் இவைகளை நமது முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க நம்மால் நிச்சயமாக முடியும்.

நான் அவர் சொல்லியவைகளில் கொஞ்சம்தான் இங்கே சொல்லியிருக்கிறேன். ஆனால் இவை மிகவும் பொதுவான நிலையில் நாம் தெளிவாகத் தெரிந்து புரிந்து கொள்ள வேண்டும். நம்மில் பலருக்கு இவையெல்லாம் தெரியும்தான். ஆனாலும் கடைபிடிப்பதில்லை எனும்போது நம் டாக்டர் சந்துரு போன்றவர்கள் சொல்வதால் அதன் முக்கியத்துவம் அதிகமாகிக் கடைபிடிக்கத் தொடங்குவோம்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது சரியானதுதான் என்றாலும் இன்று உலகம் உள்ள சூழ்நிலையில், உலக சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் நோய்கள் வந்தாலும் அதை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே புத்திசாலித்தனமாகும்.

இன்றைய விஞ்ஞானம் ஏகப்பட்ட ஆரோக்கிய வசதிகளைக் கொடுக்கும்போது அதை ஏற்றுக்கொண்டு வாழ்வது ஒன்றே நாம் செய்யக்கூடியதாகும் என்கிறார் டாக்டர் சந்துரு. நோய்கள் என்பதெல்லாம் விதி விட்ட வழி, பூர்வஜென்ம பாவங்கள் என நினைப்பதை விட்டு அதற்குப் பரிகாரமாகக் கிடைத்த  இறைத்தன்மைதான் இன்றைய விஞ்ஞானம் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள்வேண்டும் என்று அழகாகச் சொன்னார்.

இந்தப் பதிவை முடிக்குமுன் திருமதி சந்துருவைப் பற்றி எழுதாமல் போனால் பெண்பாவம் என்னை சும்மா விடாது. திருமதி சித்ரா சந்துரு என்னுடைய ‘திருமலைத் திருடன்நாவலை தன் கையோடு இங்கே கொண்டுவந்ததோடு மட்டுமல்லாமல் அதை எடுத்து வைத்துக் கொண்டு, ’நாவலாசிரியர் கண்ணெதிரேயே அவர் நாவலைப் படிக்கிறேன்’ என்ற செய்தியை எஸ் எம் எஸ் மூலமாக தன்னுடைய சிநேகிதிகளுக்கு சொல்லிக் கொண்டிருந்தார். ஒவ்வொரு முறையும் ‘சார்.. இன்னும் 150 பக்கம்தான்.. இதோ 100 பக்கம்தான்என்று ஸ்கோர் சொல்லிக் கொண்டிருந்த அந்த அப்பாவித்தனம் எனக்குப் பிடித்திருந்தது. அதே போல அவருக்கும் இங்கே சிம்ஹாத்ரி சிம்ஹவதித் தாயாரும், கனகமகாலக்ஷ்மியும் மிகவும் பிடித்து விட்டது என்பதையும் சொல்லிக் கொண்டே இருந்தார்.
படங்கள்: 1. விசாகப்பட்டினம் கைலாசகிரியில் சிவ-பார்வதி சமேதர்
         2. வைசாக்-பீமிலி கடலோரப் பாதை
          3. நானும் டாக்டர் ச்ந்துருவும்.

Friday, April 13, 2012

திருப்பதி பிரசாதம் – பங்கு விற்பனை
பிரசாதம் என்றால் தமிழில் ஆண்டவனுக்கு அளிக்கப்படும் நிவேதனம் அல்லது தெய்வத்துக்குப் படைக்கப்படும் சோறு அல்லது பதார்த்தங்கள், அருட்கொடை, அருளாசிகள் போன்ற அர்த்தங்கள் அகராதியில் கொடுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே திருப்பதி பிரசாதங்கள் பற்றி ஒரு கட்டுரைத் தொடர் பதித்து இருந்தேன். இந்த கட்டுரை கூட அதையொட்டியே அல்லது அதன் மேல் விவரமாக அமையும்..

பொதுவாக இக்காலத்தில் நம் கோயில்களில் இப்போதெல்லாம் பிரசாதங்கள் விற்பனை மூலம் விநியோகிக்கப்படுகின்றன. இது முறையா அல்லது முறையற்றதா என்பதைப் பற்றி நாம் பேசப்போவதில்லை. ஆனால் ஆண்டவனுக்கு என படைக்கப்பட்டு அவனுக்கே அர்ப்பணிக்கப்பட்டு, அவனின் அருள் கொடையாக நம்பப்பட்டு, அந்தப் பிரசாதங்கள் பக்தர்களுக்கு விற்பனைக்கு விற்கப்படுகின்றன என்று நினைக்கும்போது சற்று மனம் வருத்தப்படலாம். மந்திராலயம், தர்மஸ்தலா போன்ற ஆலய ஊர்களில் இப்படி பிரசாதங்கள் விற்பனைக்கு அனுமதி இல்லை என்பதோடு அங்கு பிரசாதங்கள் மிகத் தாராளமான வகையில் பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றன என்பது நம்மில் பலருக்குத் தெரியும். இதில் எம்மூர் திருவாலி திருநகரியும் அடங்கும் என்பது ஒரு சிறிய திருப்தி கூட. சரி, இது இருக்கட்டும்.

பிரசாதம் என்றாலே திருப்பதி, திருப்பதி என்றாலே பெருமாள் தரிசனமும் அதற்கு பின் சீட்டு பெறப்பட்டு அதன் மூலம் வரிசையில் நின்று காசு கொடுத்து வாங்கும் லட்டு, அதுவும் எக்ஸ்ட்ரா லட்டுகள் (கொஞ்சம் எக்ஸ்ட்ரா காசு கொடுத்தாவது) கிடைக்குமா என்ற ஆவல் முதலானவை எழத்தான் எழும்.
முதன் முதலில் இந்த பிரசாதமானது விற்பனை என்ற பெயரில் காசு வாங்கிகொண்டு விற்கப்பட்டது கூட திருமலை திருவேங்கடத்தான் திருக்கோயிலில்தான். 15ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தக் கோயிலின் பூசை விவகாரங்களை ராமானுச கூடம் என்னும் தென்கலை மடத்தைச் சேர்ந்தவர்கள் கவனித்துக்கொள்ள அதன் வெளிவிவகாரங்கள் அதாவது நிதி விவகாரங்கள், நிலங்களை குத்தகைக்கு விடுத்து அதன் மூலம் வரும் வருமானங்கள், செலவுகள், திருவிழா ஏற்பாடுகள் இவற்றை ‘ஸ்தானத்தார்’ என்று சொல்லப்படும் அலுவலர் குழுவினர் கவனித்துக் கொண்டனர். அவரவர் வேலையை அவரவர் பார்த்துக் கொண்ட வரையில் எல்லாமே நன்றாகத்தான் நடக்கும். ஆனால் ஆலயத்தில் நின்ற நிலையிலே எந்நாளும் அருளிக்கொண்டிருக்கும் திருவேங்கடவனுக்குச் சார்த்தப்பட்டு வரும் சுவர்ண ஆபரணங்கள், தங்கக் கிண்ணங்கள், வெள்ளி சாமான்கள் பெருமளவில் சேதமடைந்து கிடந்ததால் அவை அனைத்தையும் மராமத்துப் பணி மூலம் அவைகளை சரிசெய்ய பூசைகளைக் கவனித்து வரும் ராமானுஜ கூட மடாதிபதி வற்புறுத்தினாலும் ஸ்தானத்தார் அதைச் செய்யாது போகவே அன்றைக்கு மடத்தின் அதிபதியாக பொறுப்பேற்றிருந்த கந்தாடை ராமாநுச ஐயங்காருக்கு ஒரு நூதன வழி பிறந்தது.

அதாவது, பூசை செய்வோருக்குப் பங்காக அளிக்கப்படும் பிரசாதங்களை ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கு விற்பது எனவும் அப்படி விற்பனை செய்த பணம் மூவாயிரம் சேர்ந்ததும், அந்தப் பணத்தைக் கொண்டு மேற்கண்ட பணிகளைத் தாங்களே செய்துகொள்வதாகவும் ஸ்தானத்தாரிடம் தெரிவித்து விட்டனர்.
இது ஸ்தானத்தாருக்குப் பிடிக்கவில்லை. பிரசாதத்தையாவது விற்பதாவது.. ஆனால் ராமானுஜ ஐயங்கார் அவர்களை ஒரு வார்த்தை ஒப்புதல் கேட்டதோடு சரி, ஒப்புதல் கிடைக்குமா கிடைக்காதா என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் இந்த நூதன வழியை தன் மடத்தைச் சார்ந்த அர்ச்சகர்களுக்குச் சொல்லி அவர்கள் உதவியோடு அன்று முதல் அவர்களின் பங்காக வரும் பிரசாதங்கள் விற்பனைக்குக் கிடைக்கும் என்று பக்தர்களிடமிருந்து தொடங்கி மராமத்துக்காக காசு சேர்க்க ஆரம்பித்து விட்டார். இப்படி ஸ்தானத்தாரை மீறி ராமானுச கூடமும் கந்தாடை ராமானுஜ ஐயங்காரும் தன்னிச்சையாக செயல்படுவது பிடிக்காமல் இந்த விவகாரம் விவாதகளமானது.

அப்போது திருமலை கோயில் சாலுவ நரசிம்மராயரின் ஆளுகையில் இருந்தது. சாலுவ நரசிம்மர் திருமலையின் கீழேயே உள்ள சந்திரகிரி கோட்டையை மையமாகக் கொண்டு தமிழ்நாடு முழுதும் ஆண்டுகொண்டிருந்த கால கட்டம். இந்த மன்னர்தான் திருமலைக் கோயிலில் எல்லா நிகழ்ச்சிகளையும் முறைப்படுத்தியவர். திருமலை வேங்கடவன் புராணம் எழுத வைத்தவர். பலவகை பிரசாதங்கள் பெரிய அளவில் செய்ய கட்டளையிட்டதோடு அதற்கான நிலங்களையும் தானமாக ஒதுக்கி கல்வெட்டு சாஸனமும் செய்தவர். திருமலை திருவேங்கடவன் புகழ்மாலையாக பாடிய அன்னமய்யா கீர்த்தனைகளுக்கும், அன்னமய்யாவுக்கும் ஆதரவளித்தவர். அவரால் ஒரு கீர்த்தனையின் மூலம் பாடப்பட்டவர். இவரிடம் திருமலை ஸ்தானத்தார் சென்று ராமானுச கூடத்து கந்தாடை ராமானுச ஐயங்காரின் செயல்கள் குறித்து முறையிட்டனர்.

நரசிம்ம ராயர் திருமலைக் கோயிலுக்கு இதற்காக விஜயம் செய்தார். கோயிலில் உள்ள ஆபரணங்களையும் பிற வஸ்துக்களையும் பார்த்தார். விவரம் புரிந்தது. ராமானுஜ ஐயங்காரின் உயரிய குறிக்கோளும், தங்கள் பங்குப் பிரசாதங்களை விற்றாவது மராமத்து வேலையைச் செய்தே தீரவேண்டுமென்ற அவர்களின் தீர்மானமும் ராஜாவுக்கு பிடித்துப் போனது. அரசர் நினைத்தால் அதற்கான செலவைக் கொடுத்து கல்வெட்டும் ஒன்று வடித்திருக்கலாம்தான். ஆனால் இங்கு கந்தாடை ராமானுஜ ஐயங்காரின் உயர்ந்த சேவையின் மதிப்பு அவருக்கே செல்லவேண்டுமென, அரசர் அங்கேயே ஒரு சாஸனமும் (தெலுங்கிலும் தமிழிலும்) எழுதி வைத்தார்.

“இந்த ஆக்ஞை பிரகாரம், திருமலை ஸ்ரீனிவாசனுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஸ்வர்ணாபரணங்களோடு, தங்கம், வெள்ளி வஸ்துக்களையும் மராமத்து செய்து பராமரிக்கும் வேலையை கந்தாடை ராமானுச ஐயங்காரிடம் ஒப்புவிக்கப்படுகிறது.அவர்களின் பங்கு மூலம் கிடைத்த பிரசாத விற்பனையில் கிட்டிய பணத்தைக் கொண்டு இந்த மராமத்து வேலைகளைச் செய்தவுடன் மீதப் பணத்தை ஸ்ரீவாரி பண்டாரத்திடம் (பொக்கிஷ அதிகாரி) ஒப்படைக்கவேண்டும்”

இந்த கட்டளைக் கல்வெட்டு நம் இன்றைய கணக்கில் 1495ஆம் ஆண்டில் ஜூலை மாதம் ஒன்றாம் தேதி வடிக்கப்பட்டது. இன்னொரு கல்வெட்டு, பிரதி வருடமும் இப்படி பிரசாதம் விற்ற பணத்தினால் மராமத்து செய்ய கந்தாடை ராமானுச ஐய்யங்காருக்கு அனுமதியும் வழங்கப்பட்டதை உறுதி செய்கிறது.. அத்துடன் கந்தாடை ராமானுஜ ஐயங்காருக்கு சொந்தமான மூன்று மடங்களும் வருடத்துக்கு ஆயிரம் பணம் இந்த பிரசாதம் விற்றதன் மூலம் மூவாயிரம் பணம் கொடுக்கலாம் என்றும் அதிலும் போக மீதி இருந்தால் அதைக் கோவில் பொக்கிஷத்தில் வரவு வைத்து அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு அவைகளை உபயோகப்படுத்திக்கொள்ளலாம் என்றும் சாலுவ நரசிம்ம ராயரின் கல்வெட்டு சொல்கிறது. ஆக பிரசாதம் விற்பது முறைப்படி ராஜகட்டளை மூலம் தார்மீகப்படுத்தப்பட்டுவிட்டது.
பிரசாத விநியோகம் என்பது ஏறத்தாழ ஐந்நூறு ஆண்டுகளாகவே ஒரே சம்பிரதாயத்தில் வந்து சமீபத்தில் அது நீதிமன்றம் மூலம் ஒரு முடிவுக்கும் வரும் நிலையில் உள்ளது. அப்படியே திருப்பதி பிரசாத பங்குதாரர்கள் மிராசுகள் என்றழைக்கப்படும் விதத்தையும் இங்கு குறுப்பிட விரும்புகிறேன்.

கந்தாடை ராமானுஜ ஐயங்கார் தம் காலத்தில் ஆலய அதிகாரிகளிலிருந்து ஆலயத்தைக் காக்கும் காவல்காரன் வரை தம் கையாலேயே கணக்குப் போட்டு சம்பளம் கொடுத்து வந்திருந்தார். இந்த சம்பளம் என்பது இருவகைப் படும். ஒன்று பணமாக வழங்கிவந்தது. வேறு சிலருக்கு பிரசாதத்தில் பங்குகள் கொடுக்கப்பட்டு வந்தன. (தில்லை திருச்சிற்றம்பல ஆலயத்தில் இப்படி பிரசாத பங்குகள் இன்றும் கூட ஆலய தீட்சிதர்களுக்கு உண்டு). யார் யாருக்கு பிரசாதமாக சம்பளம் வழங்கப்படும் என்றும் அவரே நிர்ணயித்தார். ஆலயத்தில் பிரசாதம் செய்வோர், மடைப்பள்ளி வேலையாட்கள், ஆலயத்தைச் சுத்தம் செய்வோர், யானைப்பாகன்கள் என இன்ன பிற வேலைகளைச் செய்வோருக்கு பிரசாதம் வழங்கப்படும் என்றும் அந்தப் பிரசாதத்தை அவர்கள் வெளியே உள்ள பக்தருக்கு விற்று பணமாக்கிக்கொள்ளவும் வகை செய்தார். அதே போல, பெரிய பெரிய ராஜாக்கள், செல்வந்தர்கள் கொடையாக கொடுக்கும் பிரசாதங்கள் ராமானுச மடத்தைச் சேர்ந்த அர்ச்சகர்கள் மேலும் ஆலய ஸ்தானத்தார்களுக்கு ஒரு பெரிய பங்கு பெற்று அவைகளை விற்றுக்கொள்வர், பிரசாதம் விற்பது என்பது இப்படி நடைமுறைக்கு வந்தது.

இந்த அளவு விகிதம் (ratio) வெகு நேர்த்தியாக கணக்கிடப்பட்டு இன்னின்னாருக்கு இன்னின்ன பங்கு என்ற முறையில் சமீபகாலம் வரை செயல்பட்டுக்கொண்டிருந்தது. இப்பங்குகள் அவரவர் வம்ச வாரிசுகள் அனுபவிக்கவும் வகை செய்யப்பட்டது. இந்தப் பங்குதாரர்களே (ஸ்தானத்தார் தவிர்த்து) காலாகாலத்தில் மிராசுகள் என அழைக்கப்பட்டனர்..

திருப்பதியில் 1979-80 இலிருந்துதான் இலவசப்பிரசாதம் எல்லா பக்தருக்கும் வழங்கவேண்டும் என்ற முறை நடைமுறைக்கு வந்தது. ஆனால் இந்த பிரசாத அளவு சட்டப்படியாகவும் சம்பிரதாயம் மீறாமல் இருக்கவேண்டுமே. ஆகையினால் ஸ்தானத்தார் அதாவது திருமலை தேவஸ்தானத்துக்கு உண்டான பங்குகள் அனைத்தும் இலவசமாக பக்தர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்தனர்.

திரு பி.வி.ஆர்.கே. பிரசாத் என்னும் செயல் அதிகாரிதான் இதை செயல்படுத்தினார். முதலில் சின்ன அளவில் (கடலை உருண்டை அளவில்) லட்டுகள் செய்யப்பட்டு அவை பிரசாதமாக இலவசமாக தரிசனம் முடிந்த பக்தர் ஒவ்வொருவருக்கும் தலா ஒன்று என அளிக்கப்பட்டது. ஆனால் இவை போதவில்லை.. எல்லா பக்தர்களுக்கும் லட்டு இலவசமாக அளிப்பது கடினமாக இருந்தது. ஆகையினால் தேவஸ்தான அதிகாரிகள் மற்ற பிரசாத பங்குதாரர்களையும் தங்கள் பங்குகளை வெளியே விற்காமல் தேவஸ்தானத்துக்கே விற்று விட ஆலோசனை சொன்னார்கள். ஆனால் அது செயல்பாட்டில் வருவது பெரும் சிக்கலாகப் போனது. இதன் மத்தியில் ஆட்சிக்கு வந்த நடிகர் என். டி. ராமராவ் 1987 ஆம் ஆண்டு இந்த மிராசு பங்குதாரர் முறையையும், அந்த பிரசாத பங்குகள் விற்பனையையும் முற்றிலும் ஒரு அரசு ஆணை மூலம் தடை போட்டார். ஆனால் இதை எதிர்த்து பிரசாத பங்கு மிராசுதார்கள் நீதிமன்றங்களை அணுகினார்கள்..

காலத்தின் கோலம் பாருங்கள்! ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு அதாவது கி.பி. 1495 ஆம் ஆண்டு பிரசாத விற்பனைக்கு ஆதரவாக அந்த மாநிலத்து ராஜா கல் சாஸனம் மூலமாக உத்தரவு பிறப்பித்திருந்தார். அந்த உத்தரவின் ஐந்நூறாவது ஆண்டு முடிந்தவுடன் இன்னொரு உத்தரவு சரியாக 1996 ஆம் ஆண்டு இன்றைய சுப்ரீம் கோர்ட், (ஜஸ்டிஸ் ராமசாமி) இந்த பிரசாத பங்கு விற்பனையை உடனடியாக நிறுத்தாவிட்டாலும் ஒரு ஒழுங்குமுறையோடு, வாழும் பங்குதாரர்களுக்கு இரு சில உரிமையுடன் விட்டுக்கொடுத்து, அதே சமயம் அவர்கள் வம்சத்தாருக்கு பிரசாதத்தில் இனி எந்த உரிமையும் இல்லையெனவும், சிறிது காலம் கழித்து இந்த பிரசாத பங்கு விற்பனையை முற்றிலுமாக நிறுத்தப்பட வழி வகை செய்யும் சரித்திரப்புகழ்மிக்கதீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பின் மூலம் தற்சமயம் பங்குகள் பெறும் மக்கள் இனி தம் வம்சத்தார் மூலம் அந்தப் பங்குகளை நீட்டிக்கமுடியாது. இதை மிராசுதார்கள் சம்பிரதாயத்தை மீறும் செயல் என்றும் இந்த முடிவான தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி மறுபடியும் சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளார்கள். இந்த வழக்கு இன்னமும் நிலுவையில்தான் உள்ளது என்றாலும் சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே விதித்த தீர்ப்புக்கு எதுவும் தடையில்லாததால் பிரசாத பங்குகள் விற்பனைகள் இனி நிச்சயமான முடிவுக்கு வரும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றே படுகிறது.

அதே சமயத்தில் இப்போதெல்லாம் இந்த இலவச சின்ன லட்டு பிரசாதம் செய்முறை மிகக்கடினமான அளவில் இருந்ததால் இந்த சின்ன லட்டு தவிர்க்கப்பட்டு தயிர்சாதம், எலுமிச்சை சாதம், புளியோதரை, எள்ளுப்பொடி சாதம், சர்க்கரை பொங்கல் போன்றவை தயாரிக்கப்பட்டு தொன்னையில் பிரசாதமாக எல்லோருக்கும் எந்த நேரமானாலும் தரிசனம் செய்து வரும் பக்தர்களுக்கு தற்சமயம் வழங்கப்பட்டு வருகின்றது.


ஏற்கனவே என்னென்ன பிரசாதங்கள் திருப்பதியில் திருவேங்கடவனுக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன என்று வேறொரு பதிவில் எழுதினோம். ஆனாலும் திருவேங்கடவனுக்கு அன்று முதல் இன்று முதற்கொண்டு ஒரே ஒரு பிரசாதம் மட்டுமே அவன் திரு உருவச்சிலை முன்னே காணப்படும் ’குலசேகரப்படி’ தாண்டி செல்லும் உரிமை பெற்றது. அது நாம் மிகவும் பிரியமாக உண்ணும் வெண்பொங்கல்தான். கி.பி. 966 இலிருந்து இவ்வழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருவதாக சொல்கிறார்கள். பொங்கல் அளவு இரண்டு படி (அதாவது நான்கு நாளி அல்லது நாழி) அதை தினமும் புதிய பானையில் வடித்து, அதை இரண்டாக உடைத்து, மேல் பாகத்தைத் தூர எறிந்து, பொங்கலுடன் உள்ள கீழ்ப்பாக ஓடு மட்டும் உள்ளே பிரசாதமாகப் போகும். ஏனைய பிரசாதங்கள் எல்லாம் குலசேகரப்படிக்கு முன்பேயே வைக்கப்பட்டு அவருக்கு நிவேதனம் செய்யப்படும். இப்போது மிகப் பிரமாதமாகப் போற்றப்படும் லட்டு உட்பட அனைத்துப் பிரசாதங்களுக்கும் இதே நிலைதான். ஏறத்தாழ 1050 வருடங்களாக இதே சம்பிரதாயம் கட்டாயமாக்கப்பட்டு இப்போதும் நடைமுறையில் இருக்கிறது.

திருமலைக் கோயிலில் சில சமயம் இப்படிப்பட்ட பொங்கல் நிறைந்த கீழ்ப்பகுதி ஓடுகள் அபூர்வமாக மற்ற பக்தர்களுக்குக் கிடைக்கும் (அர்ச்சகர் தெரிந்தவராக இருக்கும் பட்சத்தில்) 1980 களில் அடியேனே ஒரு அதிகாலை நேரத்தில் இப்படி ஒரு அர்ச்சகர் (எங்கள் பாலு சித்தப்பாவுக்கு மிகவும் தெரிந்தவர்) மூலம் இந்த அரிய பிரசாதத்தை பெற்றுக் கொண்டதும் அதை ருசித்துச் சாப்பிட்டதும் நன்றாகவே நினைவு இருக்கிறது என்றாலும் அந்த அரிய பொங்கல் பிரசாதம் வாங்கியது. காசுக்கா அல்லது இலவசமாகவா என்பது மட்டும் நினைவில் இல்லை.

படங்கள் உதவி: திருமதி சுபாஷிணி ட்ரெம்மல்
இந்தப் பதிவு மரபு விக்கியிலும் பதிக்கப்பட்டுள்ளது இங்கே

Saturday, October 15, 2011

அ’பாக்கியநகரம்’

அடுத்த வீட்டு ஆந்திராவை இப்போது ரணகளமாக்கும் முயற்சிகளை, தெலுங்கானா பிரச்னையை முன்வைத்து, இந்த அரசியல் தலைவர்கள் ஆரம்பித்து விட்டார்கள். ஆண்டவன் அருளால் இவர்கள் முயற்சி வெற்றியடையாமல் போக ஏகப்பட்ட வேண்டுதல்கள் வேண்டிக்கொள்ளும் நிலைக்கு எல்லோரையும் தள்ளிவிட்டார்கள்.

நானூறு ஆண்டுகளுக்கு முன் கோல்கொண்டா நிஜாம் குத்துப் ஷா தன் காதலி பாக்கியவதிக்காக மூசி நதிக்கரையில் இந்த நகரைக் கட்டுவித்தான். அதனால் இந்த நகருக்கு பாக்கிய நகரம் என்ற பெயர் உண்டு. ஆந்திரத் தொலைகாட்சிகளில் சில வேண்டுமென்றே ஹைதராபாதில் என்று சொல்லாமல் ’பாக்கிய நகரத்தில் இன்று’ என்றே கூவும் கூட. அப்படிப்பட்ட பாக்கிய நகரம் இன்று அபாக்கிய நகரமாக ஆகிவிட்ட, ஆக்கிவிட்ட, ஆக்கப்படவிட்ட வேதனையான கதைதான் இது.

கடந்த ஐந்து நாட்களாக இந்த ஹைதராபாத் மகாநகரத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று வர ஒரு சந்தர்ப்பம் கிடைத்தபோது இங்கு ஒரு ஆட்சியே நடக்கவில்லை என்ற உண்மை புரிந்தது. ’சகலஜனலு பந்த்’ என்ற பெயரில் கடந்த ஒரு மாதமாக ஹைதராபாத் நகரத்தின் இயல்பு வாழ்க்கையைப் பாழாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

பொதுமக்கள் ஒத்துழைப்பே இல்லாமல் அரசியல்வாதிகளால் எந்தக் காரியமும் செய்யமுடியாதுதான். அது போராட்டமானாலும் சரி, பொதுத்தொண்டானாலும் சரி. ஆனால் இங்கே அரை மனதுடன் வேண்டா வெறுப்பாக ஒத்துழைக்கும் பொதுமக்களைப் பார்க்கையில் நிச்சயம் பரிதாபமாகத்தான் இருக்கிறது..

ஆளும் மாநில அரசும், மத்திய அரசும் வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டிருப்பது இன்னமும் வேதனைதான். ஒருமாத காலமாக வேலை செய்யாமல் இருக்கும் அரசு அலுவலர்களை (முக்கியமாக தெலுங்கானாவைச் சேர்ந்தவர்கள்) கெஞ்சிக் கொண்டே இருக்கிறது. அவர்கள் இந்த அரசைச் சீண்டவே இல்லை என்பதை என்னவென்று சொல்ல?. தீபாவளிக்கு பணம் அட்வான்ஸ் தருகிறேன்.. வாருங்கள் என்கிறார்கள்.. ’ஊம்ஹூம்.. முதலில் ஏற்கனவே ஸ்ட்ரைக் செய்த நாட்களுக்கு எங்களுக்குப் பணத்தை எண்ணி மேலே வை.. பிறகு பேசலாம்’, என்கிறார்கள். அதாவது இவர்கள் வேண்டிய அளவு வேலையில்லாமல் ஸ்ட்ரைக் செய்தாலும் சம்பளம் மட்டும் சரியாக ஒன்றாம் தேதி வந்துவிடவேண்டும்.. சகல டிபார்மெண்ட்களும் ஸ்ட்ரைக். இதில் ஒரு வேடிக்கை. ஏதோ சில பேர் வேலை செய்கிறார்களே.. அவர்கள் எப்படி வேலை செய்யலாம் என்று தடுத்த சில தெலுங்கானா அரசு அலுவலர்களை கைது செய்து உள்ளே வைத்தார்கள். அவர்களை ஜாமீனில் வெளிவர அனுமதியும் அளித்தது போலீஸ். ஆனால் வெளிவரமுடியவில்லை. காரணம் ஜாமீன் கொடுக்கவேண்டிய முன்சீப் ஜட்ஜ்களும் ஸ்ட்ரைக்கில் இருப்பதால் உள்ளே போனவர்கள் அங்கேயே உட்காரவேண்டிய நிலை.

ஆட்டோ டிரைவர்களைக் கேட்டேன்.. ’அரே பாஸ்.. இவர்கள் (பஸ்கள்) ஸ்ட்ரைக் செய்யட்டும்.. அப்போதான் நமக்கு நாலு காசு எக்ஸ்ட்ரா வரும்’ என்கிறார்கள்.

அளவுக்கு அதிகமான பவர்-கட், ஓடாத பஸ்கள், அதிக குமபலுடன் உள்ள நிலையை காசாக்கும் ஷேர் ஆட்டோக்கள், ஆட்டோக்கள், காசு உள்ளவர்களால் மட்டுமே பயணம் செய்யவேண்டிய நிலையில் கார் கட்டணங்கள், அவ்வப்போது மூடித் திறக்கும் கடைகள், ஆங்காங்கே குவிந்து கிடக்கும் குப்பைகள், அரைகுறைப் பாலங்களால் ஆங்காங்கே அவதிப்படுகின்ற ட்ராஃபிக், தொழில்துறையும் சுற்றுலா துறையும் அதிக அளவில் பாதிக்கப்பட்டதால் அவதிப்படும் சின்ன வியாபாரிகள் என ஒரு அவலமே இந்த நகரத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது என்றே சொல்லலாம்.

மிகப் பணக்கார இடங்களான ஜூப்லி ஹில்ஸ், பஞ்ஜாரா ஹில்ஸ் பகுதிகளில் பல இடங்களில் அடுக்கு மாடிக் காம்ப்ளக்ஸ்’கள் அப்படியே பாதி வேலைகளோடு நின்று கிடக்கின்றன. மருந்துக் கம்பெனிகளின் தலைநகரம் என்ற புகழ்பெற்ற இந்த நகரத்தில் அந்த மருந்துத் தொழிற்சாலைகள் வேறெங்காவது இடம் பெயரலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு மாதாபூர், ஹைடெக் சிடி மட்டும் இன்னமும் பிஸியாகத் தெரிவது போலப் பட்டாலும் இது கூட எத்தனை நாளோ என்ற நிலைமையும் கண்கூடாகத் தெரிகிறது.

இந்தியாவின் அத்தனை நகரங்களும் இன்று மக்கள் தொகையால் திண்டாடிக்கொண்டும், நிலம், வீடு விலைகள் கிடு கிடு ஏற்றத்துடன் இருக்கும்போது, ஒரே ஒரு ஹைதராபாத் மட்டும் ஏற்றம் இல்லாமல் இறங்கிக் கொண்டே போய்க் கொண்டிருப்பது காலத்தின் கோலம்தான்.

ஒரு காலத்தில் அமெரிக்க அதிபரான பில் கிளிண்டன் அழைத்து வரப்பட்டதாலேயே வெகுவாகப் பேசப்பட்ட ஹைதராபாத் இன்று பொலிவிழந்து கிடக்கும் நிலையில் அரசியல்வாதிகள் வைத்துவிட்டார்கள்.

பண்டைய அரசர்கள் காலத்தில் புகழ் பெற்ற நகரங்களாகத் திகழ்ந்தவை காலத்தால் அழிந்தோ, அல்லது வெகு சிறிதான அளவில் தேய்ந்து போவதையோ சரித்திரம் நமக்கு நிறையச் சொல்லியிருக்கிறது. ஆனால் ஒரு நகரம் நம் கண் முன்னேயே அழிக்கப்படுவதைக் காணும்போது யாருக்குதான் கவலை வராது.

ஆனாலும் ஆந்திராவில் உள்ளோர் நினைத்தால் இந்த அழிவுக்கு ஒரு முடிவு உண்டு என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள். எப்படியும் நீளும் இந்தத் தகராறுகளுக்கு ஆந்திரக்காரர்கள் என்றோ ஒரு நாள் வளைந்து கொடுக்கத்தான் வேண்டும், என்கிறார்கள். அதை இப்போதே செய்தால் என்ன என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது. தலைநகரம் என்பதால் ஏகப்பட்ட இடங்களில் ஆந்திரர்களின் சொத்துக்க முடக்கத்தில் உள்ளன. இவைகளுக்கெல்லாம் ஒரு மாற்று வழி சொல்லப்பட்டால் தெலுங்கானாவிலும் நிலை மாறலாம்.. சொல்வார்களா என்பது புரியவில்லை.

ஆனாலும் நிலைமை உடனடியாக சீரடைந்தால் மட்டுமே ஹைதராபாத் இந்தியநாட்டின் பெரிய நகரங்களில் ஒன்று என்ற பெயர் நிலைக்கும். இல்லாவிட்டால் ஹைதராபாதும் ஒரு பெரிய நகராக ஒரு காலத்தில் இருந்தது என்ற பெயர்தான் கிடைக்கும்.