Friday, October 5, 2012

தேசமென்றால் வெறும் மண்ணல்ல, மனிதம்


குருஜாடா - முடிவுப்பகுதி

குருஜாடாவின் இன்னொரு கதையில் நம் தமிழர்களும் பங்கு பெறுவர். ஆனால் நகைச்சுவையாக எழுதப்பட்டதால் சில ஏளனவகைப் படைப்பு கூட நகைச்சுவை உணர்ச்சியோடுதான் பார்க்கவேண்டும். 

‘உன் பெயர் என்ன’ எனும் ஒரு கதையில் சைவ வைணவர்களின்  அந்தக் காலப் போக்கும், அந்தப் பிரிவைச்ச் சார்ந்தவர்கள் மக்களிடையே வேறுபாட்டை ஏற்படுத்தும் நோக்கத்தையும் ஏளனமாகக் கண்டிக்கிறார் குருஜாடா அப்பாராவ், கதையை அப்படியே தமிழாக்கம் செய்யாமல் கதைச் சுருக்கத்தை மட்டுமே இங்கு அளிக்கிறேன்.

விஜயநகரம் அருகே உள்ள ஒரு ஊரில் வைணவ பிராமணக் குடும்பம் ஒன்று ராமர் கோவில் பூஜை செய்விப்பதற்காக தமிழகத்திலிருந்து தருவிக்கப்படுகிறது. ஊருக்கு வந்த வைணவர் பரம சாது. ஆனால் வடமொழி தென்மொழிகளில் பரம ஞானி. வந்தவுடன் தன் வேலையைப் பார்த்துக்கொண்டும் பூசைகளைக் கவனித்துக் கொண்டும், ஊருக்குத் தேவைப்படும்போது வேதத்தில் சொல்லப்பட்ட நல் உபதேசங்களைச் சொல்லிக்கொண்டும்தான் காலம் கழிக்கிறார். இவர் மகனுக்கும் காலா காலத்தில் திருவரங்கத்தில் ஒரு பெண்ணைப் பார்த்து கலியாணம் செய்து வைத்துத் தன்னுடன் இருத்திக் கொள்கிறார். மகனுக்கு தந்தையளவு ஞானம் இல்லையென்றாலும் சாதுவாக இருப்பவர், ஆனால் கொண்டு வந்த மருமகளுக்கு நல்ல ஞானமும் நல்ல கல்யாணகுணங்களும் உண்டு. இந்தக் கலியாணத் தம்பதியருடனே திருவரங்கத்திலிருந்து வந்த மணவாளன் எனும் வைணவர்தான் இனிமேல் இந்தக் கதைக்கு பலம் சேர்க்கப்போகிறார்.

ஊரில் இரு பெரிய குடும்பங்கள். நாயுடு ஜாதியைச் சேர்ந்தவர்கள். பெரிய நாயுடு சொல்தான் ஊரில் அம்பலமேறும். சின்ன நாயுடு கொஞ்சம் முரடன். ஆனால் வயதான காலத்தில் ஊர் நிர்வாகத்தை சின்ன நாயுடு கையில் கொடுத்து விட்டு ஹாயாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். பெரிய நாயுடு. இவர்களுக்கு இதுவரை வைணவம் சைவம் என்றெல்லாம் ஏதும் தெரியாது. ஊரில் உள்ள சிவன் கோயில் ராமர் கோயில் இரண்டுமே நல்லபடியாகத்தான் போய்க்கொண்டிருக்கின்றன.

இந்தச் சமயத்தில்தான் ஒரு வைணவஜீயர் இந்த ஊருக்கு வருகிறார். பெரிய நாயுடுவும் தடபுடலாக வரவேற்பு கொடுக்கிறார். தன்னை உபசரித்த பெரிய நாயுடுவிடம் ’உயிர் போனபின்பு ஆத்மா ஆங்காங்கே அலைந்து பயனென்ன, பெருமாளைச் சரணடைந்தால் வைகுண்டப் பிராப்தி கிடைத்து நிம்மதி அடையுமே’ என்று கூற வயதான பெரிய நாயுடுவும் உடனடியாக வைணவத்தை மேற்கொள்கிறார். அவர் சொல்படி ஊரில் உள்ள மக்கள் பலர் வைணவராகி விடுகின்றனர். அப்போது மணவாளன் நடுவில் புகுந்து ஊர் முன்சீப் சின்ன நாயுடு வைணவனானால் ஊருக்கு நல்லது என்கிறான். இதற்கு முரடனான சின்ன நாயுடி தயக்கம் காட்டுகிறான். எதற்கு தனியாக இப்படி நாமம் போட்டுக் கொண்டு அலையவேண்டும் என்பதே அவன் கேள்வி. மணவாளனுக்கு அவனுடைய பலவீனங்கள் தெரியும். அவனுக்குப் பிடித்த புளியோதரையில் அவன் ரசித்து சுவைத்துக் கொண்டிக்கும்போதே வைணவத்தின் குறிக்கோள் பாதி சொல்லப்பட்டு, மீதி மயக்கத்திலேயே அவன் ஒப்புக் கொள்கிறான். அடிக்கடி புளியோதரை கிடைக்குமா என்ற அவன் கேள்விக்குப் பதிலாக துவாதசி நாளில் மாதத்துக்கு இருமுறை பெருமாளுக்குக் கண்டிப்பாக புளியோதரைதான் நைவேத்தியம் என்று உறுதி அளிக்கப்பட்டவுடன் அவன் தன் நெற்றியில் போடப்பட்ட நாமத்தைப் பெருமையாகப் போற்றுகிறான்.

இப்படி ஏறத்தாழ ஊரில் பாதிக்கும் மேலோர் வைணவத்தில் மாறிப்போனது ஹைதராபாத் அருகே உள்ள  வீரசைவர்களுக்குத் தெரிய வருவதால் அவர்களும் ஒரு கால கட்டத்தில் அந்த ஊரில் டேரா போட்டு நள்ளிரவில் மேள சத்தத்தோடு சிவபூஜை செய்வதாக ஊரையே நடுங்க வைத்தனர். சிவபூஜையின் கடைசி நாளன்று அவர்கள் அனைவரும் அக்னி வளர்த்து அக்னியில் நடப்பதாகவும் ஊருக்குப் பெரியவரான பெரிய நாயுடுவும் முன்சீப் சின்ன நாயுடுவும் அந்த விழாவுக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். இப்படிச் செய்வதால் நாளை பெரிய நாயுடுவும் ஊரும் சைவப் பிரிவுக்கு மாறிவிடும் என்று அஞ்சிய மணவாள்னுக்கு ஒரு திட்டம் தோன்றுகிறது. ஹாயாக தன் நண்பர்களுடம் அளவளாவிக் கொண்டிருந்த சின்ன நாயுடுவிடம் வைணவத்துக்கு வந்து பேராபத்தைச் சொல்கிறார். சைவர்கள் அக்னியில் நடந்தால் ஊரே இனி சைவம்தான் என்றும் துவாதசி புளியோதரையும் கூட இனிக் கிடைக்காது என்கிறார். அவன் கவலை அதிகமாக நண்பர்களிடம் உதவி கேட்கிறான். அவர்கள் இதுபற்றியெல்லாம் ஒன்றும் அறியாதவர்களாதலால் உதட்டைப் பிதுக்க மணவாளனையே ஆலோசனை கொடுக்கும்படி சொல்கிறார். 

“நாமும் இதைப் போல ஒரு அக்னிப் பரிட்சை அடுத்த வாரம் வைத்து விடலாமே.. உங்களுக்கு தெரிந்த சிலருக்குக் கள்ளை நன்றாக ஊற்றி விட்டு, ராமர் கோயில் உற்சவ சிலையையும் தலையில் ஏற்றி அக்னியை மிதிக்கச் செய்தால் வைணவம் இங்கு நிலைக்கும் என்ன சொல்கிறீர்கள்..’

‘ஓ செய்யலாமே..  அடுத்த வாரம் எதற்கு, இதற்கெல்லாம் முகூர்த்தம் பார்க்கவேண்டாம்.. இன்றிரவே செய்து விடலாம். ஏன் நீரே முதலில் அக்னியில் இறங்கும்.. நீரே உற்சவ விக்ரஹத்தையும் தலையில் வைத்துக் கொள்ளும், உம்மைத் தொடர்ந்து என் நண்பர்கள் சிலரை கள்ளைக் குடித்து விட்டு இறங்கச் சொல்கிறேன்”

மணவாளனுக்கு பயம் வந்துவிட்டது. அவர் எதிர்பார்த்தது அந்த முரட்டு நண்பர்கள் கள்ளின் போதையில் வலி தெரியாமல் எளிதாக இறங்குவார்கள் என்றுதான். ஆனால் இது தன் தலைக்கே வினையாகப் போனதால் கவலை வந்து விட்டது. உடனடியாக மணவாளன் சமாளித்தார்.

“ஐய்யய்யோ.. நான் சரிவரமாட்டேன்.. ஒன்று செய்யலாமே.. நம்ம ராமர் கோவில் பந்துலுவே முன் வந்து அக்னி மிதிக்கட்டுமே.. சாஸ்திரம் அறிந்தவர், அவர் செய்தால் மேலும் நமக்கு நன்மைதானே” என்று தனக்கு குருவுக்கு சமமான ராமர் கோவில் ஆச்சாரியரையே பழியில் மாட்டிவிட்டார். ஆனால் தள்ளாடும் வயதில் உள்ள அந்த ஆச்சாரியார் இந்தக் கதையைக் கேட்டு விட்டு சிரித்து விட்டு தான் இதையெல்லாம் நம்பாதவன் என்றும், சாஸ்திரங்களில் இப்படிப்பட்டது இல்லை என்றும் அத்தோடு இங்குள்ள ஜனங்கள் எந்தப் பிரிவைச் சேர்ந்தாலும் ராமர் கோவிலுக்கு வரத்தான் செய்வார்கள் என்றும் சிவன் கோயில்காரர்கள் செய்வதால் நீங்களும் செய்யவேண்டும் என எதிர்பார்க்காதீர்கள்” என்று சொல்லிவிட்டார். ஆனாலும் மணவாளன் விடவில்லை. அவரையே அக்னி மிதிக்கும்படி கூட்டத்தில் கோள் சொல்லி மூட்டிவிட்டுக் கொண்டிருந்தான். பெரியவரோ முடியாது, தனக்குச் சம்மதமில்லை என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.

இந்தச் சமயத்தில்தான் அவர் மருமகள் அங்கு வருகிறாள். சான்றோரான மாமனார் திண்டாடும் நிலையில் இருப்பதைப் பார்த்து கூட்டத்தை அமைதிப்படுத்துகிறாள். வைணவர்கள் அக்னிபரீட்சைக்கு உள்ளாகும்படி முதலில் கருத்துச் சொன்னவர் யார் என்று கூட்டத்தைப் பார்த்துக் கேட்கிறாள். சின்ன நாயுடு மணவாளனைக் காண்பித்து ‘இவர்தான்’ என்கிறார். அவளின் குரலின் தோரணை, கேள்வியில் உள்ள கண்டிப்பு எல்லோரையும் கொஞ்சம் ஸ்தம்பிக்க வைத்ததுதான். அவள் அறிவுள்ள பெண் என ஏற்கனவே தெரிந்திருந்ததால் ஊரார் சற்று மரியாதையுடனே பேசினர். அவள் மணவாளனைப் பார்த்தாள் 

“மணவாளரே.. ஏன் நீங்களே அக்னியில் இறங்கிப் பார்த்து விடவேண்டியதுதானே.. நீங்களும் நல்ல வைணவர்தானே?”

“ஐயய்ய, அப்படி இல்லைம்மா, நான் வைணவனே ஆனாலும் ஜாதியில் தாழ்ந்தவன்.. அதனால்தான் இறங்கக்கூடாது என்று கட்டுப்பாட்டுடன் சொன்னேன்.. என்னை விடுங்களம்மா.. நீங்க ஆணை போட்டால் ஸ்ரீரங்கத்துகே வேணும்னா ஓடி விடுகிறேன்...”

“சரி, உங்களுக்கு பயம் என்று தெரிகிறது.. ஊரை மூட்டி விட்டு நீங்கள் குளிர் காய்ந்தால் எப்படி?”

“வேண்டுமானால் நான் அக்னியில் இரங்கட்டுமா?” என்று கூட்டத்தைப் பார்த்துக் கேட்கிறாள். அதே சமயத்தில் மணவாளரும் கூட்டத்தின் பின்னால் ஒதுங்கி ஓடுகிறார். 

கூட்டம் வேண்டாம் என்கிறது. “அப்போது ஒன்று செய்யலாம். நம் துணிகளைத் தைத்துத் தரும் பீர் சாஹிப்பைக் கூப்பிடுங்கள்.. அவர் கபீர்தாசரின் பக்தர்.. நான் சொன்னால் கேட்பார்..”

அவள் குரல் கேட்டதும் ஊர் தையல்காரரான பீர் சாஹிப் கூட்டத்தின் மத்தியிலேயிருந்து வருகிறார். “நீங்க என்ன சொன்னாலும் செய்யறேன்’மா.. எனக்கு பயம் இல்லே”

”பீர் சாஹிப் இன்றிரவு அக்னியில் நடந்துவிட்டாரானால் நீங்களனைவரும் முஸ்லீம் மதத்துக்கு மாறிவிடவேண்டுமே.. என்ன செய்வது”

இவள் இப்படிச் சொன்னதும் ஊர்க்கூட்டம் திகைக்கிறது.. உடனே அவள் “இதோ பாருங்கள்! அக்னி மிதித்தால்தான் கடவுள் அருள் புரிவார், அப்படி இப்படியெல்லாம் என்பது எந்த மதத்திலும் இல்லை. என்னுடைய அன்பான வார்த்தைக்குக் கட்டுப்பட்டு பீர்சாஹிப் முன் வந்தார் பார்த்தீர்களா.. இதுதான் கடவுள். அன்புதான் கடவுள்.. இந்த அன்பை முன் வைத்து யார் வேண்டுமானாலும் நெருப்பை மிதிக்கலாம்.. அன்பு எனும் பெரு வெள்ளம் நெருப்பை மிக வேகமாக அணைத்துவிடும்” என்கிறாள்.

மருமகளின் வார்த்தை அன்றைக்கு இரவு மெய்யானது.. ஊரில் பலரும் ஒருவரையொருவர் சந்தோஷத்துடன் கைப்பிடித்துக் கொண்டு தீமிதியில் கலந்துகொண்டு அதை சைவ விழாவிலிருந்து பொது விழாவாக ஆக்கிக் கொண்டாடினர். மிதித்தவர்களில் பீர் சாஹிப்பும் சின்ன நாயுடுவும் உண்டு என்பதையும் இங்கு சொல்லி விடுவோம்.
                                                     *********************************

குருஜாடா இந்தக் கதையில் பல்வேறு கருத்துக்களை முன் வைக்கிறார். தெய்வம் ஒன்று என்பதை பல்வேறு கட்டங்களில் சொன்னாலும், சமூக அவலங்கள் எப்படியெல்லாம் இருந்தன என்பதையும் விவரிக்கும்போது கூடவே பெண் கல்வியையும் முன் நிறுத்துகிறார். அறிவாளியான பெண் தன் திறமையினால் எப்படி இக்கட்டுகளை சமாளிக்கிறாள் என்பதை மருமகள் பாத்திரத்திலிருந்து வெளிப்படுத்துவது அருமை.

நம்மில் பலருக்கு பி.டி.ஸ்ரீநிவாச ஐயங்காரைத் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். சரித்திரப் பேராசிரியர், ஆராய்ச்சியாளர், தத்துவ ஞானி, இவை எல்லாவற்றையும் விட மற்றவர்களை எப்போதும் கை தூக்கிவிடுவதில் இவருக்கு நிகர் இவர்தான். இவர் 1928 இல் எழுதிய தமிழர் வரலாறு எனும் ஆங்கிலப் புத்தகம் எனக்கு இன்னமும் பல சேதிகளைச் சொல்லிக்கொண்டே இருக்கிறது. 

பி.டி.எஸ் ஐயங்கார்தான் குருஜாடாவின் வழிகாட்டி என்று சொன்னால் மிகையாகாது. ஐயங்கார் இங்கு விசாகப்பட்டினத்தில் ஏ.வி.என் காலேஜில் சரித்திரப் பேராசிரியராகப் பொறுப்பேற்று பல மாணவர்களை ஊக்குவித்தவர். குருஜாடாவின் எழுத்து ஞானம் இவரைக் கவர்ந்திருக்கிறது. ஆனால் இலக்கியத் தெலுங்கில் எழுதப்படும் விஷயங்கள் சான்றோரிடமே தங்கிவிடும் எனும் உண்மையை குருஜாடாவுக்கு உணர்த்தியவர் இந்த வழிகாட்டிதான். குருஜாடாவின் கன்யா சுல்கம் முதலில் இலக்கியத் தெலுங்கில் எழுதப்பட்டு ஸ்ரீநிவாச ஐயங்காரின் உத்தரவால் சாமான்யவர்களின் பாஷைக்கு மாற்றப்பட்டதாகச் சொல்வர். குருஜாடாவை சாமான்யர்கள் மத்தியில் பேசவைத்த பெருமை ஐயங்காருக்குதான் உண்டு என்று சொல்பவரும் உண்டு.

குருஜாடா கடைசி கால கட்டத்தில் உடல் நலக்குறைவினால் மிகவும் கஷ்டப்பட்டதாக சிலர் சொல்கிறார்கள். தன்னைப் போஷித்து வந்த விஜயநகர ராணியும் இறந்த பின்னால் அடுத்த மூன்றாண்டுகள் சிறிது கஷ்டத்தை அனுபவித்தார் என்று சொல்வாரும் உண்டு. ஆனாலும் என்ன, மனுஷன் இறந்து போனால் என்ன, அவன் எழுத்தும், கருத்துகளும் என்றைக்கும் இறந்து போகாதுதானே..

திவாகர்

(பொறுமையாகப் படித்தவர்களுக்கு நன்றி! படங்களுக்கு நன்றி கூகிளார், மேலே உள்ளது விஜயநகரத்து மணிக்கூண்டு அல்லது கண்டஸ்தம்பம், கீழே வருவது முன்னாள் அரண்மனையும் இந்நாள் கோட்டையும்)

2 comments:

  1. மருமகளின் அறிவுத் தெளிவும், தீர்க்கமும் மிகப் பிடித்தது.
    குருஜாடா அவர்கள் பற்றி அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி.

    (தலைப்பில் சொன்ன வாக்கியம் என்னுடைய favorite).

    ReplyDelete
  2. iyeangar puliodharai eppavume thani taste thaan.
    Good story. thank u

    ReplyDelete