இன்று தெலுங்கானா
என்ற மாநிலம் பிறந்த சுபதினம். மொழி ஒன்றாயினும் கருத்து வேறுபாடு அதிகம் கொண்ட
மக்கள் தம்மை அந்த வேறுபாட்டிலிருந்து பிரித்துக் கொண்ட நல்ல நாள் என்றே
சொல்லவேண்டும்.
தெலுங்கானா போராட்டம்
பற்றி ‘அடுத்த வீட்டில்’ நிறைய எழுதியாகிவிட்ட்து.
இது நன்மையா தீமையா என்ற ஆராய்ச்சிகள் எல்லாம் செய்தாகிவிட்ட்து. ஆனாலும் விளைவு
என்ற ஒன்று உருவானபின், அந்த விளைவின் பயனை அவர்கள் அதாவது தெலுங்கானா மக்கள்
அனுபவித்தே ஆக வேண்டும் இல்லையா.. நல்ல விளைவாக என்றும் அமைய ஆண்டவனை வேண்டுவோம்.
இதுவரை தெலுங்கானா வேண்டாம், அல்லது வேண்டும் என்றே விவாதங்கள், போராட்டங்கள்
அமைந்தன. இனி, தெலுங்கானா
நிரந்தரமாக பிரிக்கப்பட்டு விட்டதால் என்னென்ன நன்மைகளை விளைவிக்கலாம் என்றுதான்
விவாதிக்கவேண்டும். பழைய விவாதங்கள் எல்லாமே இனி ஆறிய கஞ்சி, பழங்கஞ்சிதான்.. யார்
யாரை அதிகமாக அந்தக் கால கட்டத்தில் திட்டினார்கள் என்பதெல்லாம் இனி ‘ரெபரன்ஸ்
கைட்’ ஆக மட்டுமே பயன்படுத்தட்டும். ஆகவே இனி இரு மாநிலங்களும் முன்னேற்றப் பாதையை
நோக்கி மட்டுமே செல்லவேண்டும்.. வேறு வழியே இல்லை.. இன்னமும் ஒருவரை ஒருவர்
திட்டிக்கொண்டு காலம் கழித்தார்களேயானால் இவர்களை விட ஒரு நாட்டுக்கு துரோகம்
செய்தோர் எவரும் இருக்கமாட்டார்கள் என்று கூட சொல்லிவிடலாம்.
உடைக்கப்படாத ஆந்திரமாநிலத்தில் ஹைதராபாத் மகாநகரம் தெலுங்கானா மாநிலத்தின்
உட்பகுதியில் உள்ளதால் தெலுங்கானா மாநிலத்தின் தலைநகராக அமைவதற்கான நியாயம் அதிகம்
உள்ளதுதான். ஆனால் அங்கு ஆந்திரர்கள் அதிகம் உள்ள ஒரே காரணத்தால் தெலுங்கானாவுக்கு
அந்நகரைத் தரமாட்டோம் என்ற ஆந்திரர்களின் பிடிவாதமும் ஆந்திரத்தோடு சேர்த்து
உடைக்கப்பட்டதுதான். அப்படி உடைக்கப்பட்டதால் கிடைத்த நஷ்ட ஈடு ஹைதராபாத் இருமாநிலங்களுக்கும்
பொதுத் தலைநகராக ஒரு பத்து வருடம் இருக்க மத்திய அரசு சம்மதித்திருக்கிறது. ஆனால்
எல்லைப் பகுதியே இல்லாத ஹைதராபாதில் ஆந்திரர்கள் எப்படி தலைநகராக நினைத்து
ஆளமுடியும்.. இது முடியாதுதான்.. அதனால்தான் ஆந்திர முதல்வர் நாயுடு ஏற்கனவே குண்டூர்
மாவட்டம் மங்களகிரி-நம்பூரில் (விஜயவாடா-குண்டூர்நகர மத்தியில்) தலைநகரம்
அமைப்பதற்கு சித்தமானதோடு மட்டுமல்லாமல் வாரம் மூன்று நாட்கள் அங்கே அலுவலகமும்
இப்போதே வைத்துவிட்டார். அரசாங்கத்துக்கான பட்டாபிஷேகம் கூட அங்கேதான். (படத்தில் சந்திரபாபு நாயுடுவின் தற்காலிக நம்பூர் நிவாசம்)
ஆந்திரர்கள் ஹைதராபாதைக் கைவிட்டுவிட மனதளவில் முயன்று வருகிறார்கள். இதனை ஆந்திரர்கள் நல்ல அறிகுறியாகத்தான் கருத வேண்டும்.முக்கியமாக இன்று ஆந்திரா அதாவது சீமாந்திரா அநாதையாகத்தான் நடுத்தெருவில்
நிற்கின்றது என்பதை வெட்கமில்லாமல் சொல்லலாம். தலைநகர் இல்லை.. ஆந்திர அரசாங்கம்
இருந்து செயல்படவேண்டிய இடம் திரிசங்கு சொர்க்கம் போல இந்த மூன்று வருடங்கள்
(புதிய தலைநகரம் கட்டமைப்புகள் முடிவு பெரும் வரை) ஹைதராபாதில் பாதி குண்டூர்
நம்பூரில் பாதி என அலையவேண்டும். இந்தக் கணம். நிதி ஆதாரமோ அதிகம் இல்லை. இப்போது
மிகவும் குறைவான ஆதாரத்தோடு ஆரம்பிப்பதால், ஆதி அடிப்படையிலிருந்து ஆரம்பித்து
செயல்படவேண்டிய நிலையில் உள்ள மாநிலம் இது. தலைநகரமான ஹைதராபாதிலிருந்து வரும்படி
சரிவிகித்த்தில் பிரிக்கப்படும் என்றாலும் ஏறத்தாழ ஆந்திர அரசாங்கத்துக்கு
கையேந்தும் நிலைதான் கண்ணின் முன் தெரிகிறது. மத்திய அரசு ஏற்கனவே வாக்களித்தபடி
பல்லாயிரம் கோடி ரூபாய்கள் ஆந்திரத்துக்காக செலவழிக்குமா என்பதையும் பொறுத்திருந்து பார்க்கவேண்டும். ஆனால் முழுமையாக நல்ல கட்டமைப்போடு தலைநகரம் அமைப்பதற்கு எப்படியும் மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகள் ஏற்படலாம். எப்படியும் ஏராளமாகச் செலவிடவேண்டும். தலைநகரம் அமைவது என்பது சாதாரண விஷயம்
இல்லை. ஆனால் ஆந்திரா பிரிந்தது நம் நன்மைக்கே என்று இங்கே பேச ஆரம்பித்து
விட்டார்கள்.
திருப்பதி, விஜயவாடா, விசாகப்பட்டினம் போன்ற நகரங்கள் ஹைதராபாதுக்கு
இணையாக கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு மகாநகரமாக மாற்றவேண்டிய அவசியத்தினை
எல்லோருமே உணர்ந்திருக்கிறார்கள். மாநிலத்தில் மத்தியிலுள்ள விஜயவாடா நகரத்தருகேயே
தலைநகர் அமைவதால் இயற்கையாகவே அந்த நகரம் பலப்படுத்தப்படும். வடக்கில் உள்ள விசாகப்பட்டினம்
ஏற்கனவே உடையாத ஆந்திரப்பிரதேசத்தில் இரண்டாவது மகாநகரமாகும். ஹைதராபாதுக்கு
சமானமாக அரசாங்கத்தார் இந்த நகரத்தில் ஒன்றையுமே செய்யாவிட்டாலும் நகரவளர்ச்சி
மிகப் பெரிய அளவில் ஏற்கனவே ஏற்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான விஷயமாகும். கொச்சி,
பூனா அளவுக்கு வசதியான விசாகப்பட்டினம் இந்த ஆந்திர உடைப்பினால் மிகப் பெரிய பலன்
பெறப் போகிறது என்றுதான் ஆட்சியாளர் முதற்கொண்டு சொல்கிறார்கள். அதேபோல தெற்கே திருப்பதியும்
மிகவும் விரிவுப்படுத்தப்படக் காத்திருக்கிறது.
நாயுடுகாரு ஹைதராபாத் வளர்ச்சிக்கு வெகுவாக வித்திட்டவர். அதே நாயுடுகாரு
விஜயவாடாவும் விசாகப்பட்டினமும் திருப்பதியும் மிகப் பெரிய மாநகர் ஆகவேண்டுமென
நினைத்து அந்த நினைப்புக்கு திருவேங்கடவனும் தலையசைத்தால் நிச்சயம் விரைவில் மிகப்
பெரிய மூன்று நகரங்கள் சீமாந்திராவில் உருவாகும் என்பதில் சந்தேகம் இல்லைதான்.
மூன்று முத்தான நகரங்கள் வாய்த்தால் ஆந்திரத்துக்கே பெருமைதானே.
எல்லாம் நனமைக்கே.. அதே சமயம் ஹைதராபாதின் கதி இனி எப்படி இருக்கப்போகிறது. ஹைதராபாத்
அடுத்த பத்தாண்டுகளுக்கு அங்குள்ள ஆளுநரால் ஆளப்படும் நகரமாக இருக்கும். ஆனால்
தெலுங்கானாத் தலைவர்களுக்கு எதிரிகளாக அவர்கள் இதுவரை பார்ப்பது ஆந்திரக்காரர்களையும்
ஆந்திர நிலமுதலாளிகளையும்தான். இந்தப் பகை நிலை பல்லாண்டுகாலமாக அவர்களிட்த்தே
இருக்கும் உணர்ச்சி என்பதையும், அந்த உணர்ச்சியை மக்கள் மத்தியிலே கடந்த
ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக தூண்டிவிட்டுப் போராடியவர்கள் என்பதையும் நினைவில்
கொள்ளவேண்டும். உணர்ச்சி வேகத்தில் முன்னூற்றுக்கு அதிகமானவர்கள் உயிர் கொடுத்து அந்த்த்
தியாகத்தில் பெறப்பட்ட்துதான் தெலுங்கானா. மிகச் சரியான அளவில் அந்த உணர்ச்சித் தீயை
அணையாமல் காத்தவர்கள் அந்த அரசியல்வாதிகள். ஆகையினால் எத்தனைதான் ஆளுநர் ஆட்சியில்
பாதுகாப்பாக ஆந்திரமக்கள் ஹைதராபாதில் வசித்தாலும் ஒரு நிச்சயமற்ற தன்மையில்தான்
அங்கு வசிக்க நேரிடும். இந்த நிச்சயமற்ற தன்மையை அவ்வளவு சீக்கிரத்தில்
நம்பிக்கையாக மாற்றும் சாமர்த்தியம் நம் அரசியல் வாதிகளிடையே கிடையாது.
வேண்டுமானால் குழந்தையைக் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டிப் பார்ப்பார்களோ
என்னவோ.. ஆந்திரர்கள் நிம்மதியாக
வாழவேண்டுமானால் விசாகப்பட்டினம் போன்ற பெரு நகரங்கள் உருவாக்குவதுதான் ஒரே வழி. வேலைவாய்ப்பைத்
தேடி அந்தக் காலத்தில் தலைநகரம் சென்றவர்கள். அதே வேலைவாய்ப்பை மாற்று நகரத்தில்
அதுவும் சொந்த மாநிலத்தில் உருவாக்கினால் நிச்சயம் ஹைதராபாத் வாழும் ஆந்திரர்களுக்கு
மகிழ்ச்சியைக் கொடுக்கும்தான். இதனால் ஹைதராபாத் தேய்ந்துபோகும் என்றும் சொல்லமுடியாது.
ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறக்கும் என்பதாக அங்கு காலியான இடங்கள் வெகு
விரைவில் நிரப்பப்படும்.
ஏற்கனவே தலைநகர்மாற்றம் தலைமைச் செயலகம் மாற்றம் எனப்படும்போது ஹைதராபாதில்
தற்சமயம் உள்ள ஏறத்தாழ ஐந்து லட்சம் மக்கள் சீமாந்திராவில் குடியேறித்தான்
ஆகவேண்டும். மிகவும் அதிகமான அளவில் ஹைதராபாதில் இருப்பது மென்பொருள் பொறியாளர்கள்தான்
(ஏறத்தாழ ஆறு லட்சம் ஆந்திர மாநிலத்தவர் மென்பொருள் உத்தியோகத்தில் இருக்கிறார்கள்.
இவர்கள் குடும்பங்களோடு கணக்கிட்டால் ஏழு அல்லது எட்டு லட்சத்தைத் தாண்டும்)). உச்சகட்ட
தெலுங்கானா போராட்ட காலத்தில் கூட இவர்கள் இருக்கும் இடங்களில் தெலுங்கானா வாதமோ
கதவடைப்புகளோ போராட்டமோ என்றும் வெற்றி பெற்றதில்லை. ஆனால் ஆந்திர அரசாங்கம்
இவர்களுக்கு ஆந்திரத்து நகரங்களில் இடவசதிகள் ஏற்பாடு செய்து, அந்த கம்பெனிகளுக்கு
சில சலுகைகளை அளித்துக் கூப்பிட்டால் ‘லேப்-டாப்’ப்போடு ஓடி வரத்தான் செய்வார்கள். மிக எளிமையான
மாற்றம் இவர்களுடையது. அப்படி ஒருவேளை மென்பொறியாளர் இடமாற்றம் செய்யவேண்டி
வந்தால் இதனால் மிகப் பெரிய அளவில் தெலுங்கானாவுக்கு ஏற்படும் நஷ்டம் நினைத்துப்
பார்க்கமுடியாத ஒன்று. இதை எந்த அரசாங்கமும் விரும்பாது. தெலுங்கானா அரசாங்கம்
இந்த நிர்ப்பந்த்த்தை எதிர்பார்த்து அவர்களை பாதுகாப்போடு இருக்கவைக்கப் பாடுபட
நேரிடும். இவர்களால் இப்போதைக்கு அரசாங்கத்துக்கு வரும் ஆதாயம் நின்று போனால்
அரசாங்கத்தை ஏனையோர் எள்ளி நகையாடுவார். தெலுங்கானாவை முன்னேற்றப் பாதையில் கொண்டு
செல்வதற்காக மீட்கப்பட்ட ஒரு பகுதி பின்னேற்றப் பாதையில் அழைத்துச்செல்வதென்றால்
அங்கு ஏளனம் வரத்தானே செய்யும்.
ஆகையினால் மென்பொருள் தொழில் செய்வோரை மிகவும் பெரிதாக தெலுங்கானா அரசாங்கம்
ஆதரித்தே ஆகவேண்டிய கட்டாய நிலையில் உள்ளது. இந்தக் கட்டாய நிலை நிச்சயம் மனதுக்கு
ஆறுதல் அளிக்கும் விஷயம் கூட. ஏனெனில் இவர்களுக்காகவாவது தெலுங்கானா அரசாங்கம்
அனைவரையும் அரவணைத்துச் செல்லவேண்டியதுதான். அடுத்து மருந்துமாத்திரைக்
கம்பெனிகளில் வேலை செய்வோர். இங்கும் ஆந்திர்ர்கள் அதிகப்படியாக இருக்கிறார்கள். இந்தியாவின்
மருந்து மாத்திரைத் தலைநகரம் என்றே அழைக்கப்படும் ஹைதராபாதில் இவர்கள் நிலை எப்படி
இனி இருக்கும் என இனிமேல்தான் பார்க்கவேண்டும். ஏற்கனவே விசாகப்பட்டினத்தில் சிறிய
அளவில் மருந்துமாத்திரை கம்பெனிகள் வரத்தொடங்கிவிட்டன. இவை ஏதேனும் பெரும்
மாற்றத்துக்குக் கொண்டு செல்லுமா என்பதையும் பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
ஆந்திர்ர்கள் ஒருகாலத்தில் ‘மதராஸ் மனதே’ என்று தாமிருக்கும் இடங்களை விட்டுவிட்டு தமிழர்கள்
பூமிக்காக வேண்டிப் போராடியவர்கள். ஆனால் மாநிலம் பிரிந்தவுடன் தலைநகரமாக்க்
கிடைத்த அழகான கர்நூல் நகரத்தைக் கைவிட்டு நிஜாம் ஆண்ட ஹைதராபாதுக்கு
ஆசைப்பட்டவர்கள். ஆனால் ஹைதராபாதும் போகும் என்று கடந்த நாற்பதாண்டுகளாகவே
கண்கூடாகத் தெரிந்தும், தமக்கே உரிதான விஜயவாடா, திருப்பதி, விசாகப்பட்டின
நகரங்களை முன்னேற்றாமல் ஹைதராபாதை ;கன்னாபின்னா’ வென முன்னேற்றிவிட்டு இப்போது அவஸ்தைப்படுகிறார்கள்.
ஆனால் இனியும் காலம் கடக்கவில்லை.. கடந்துபோன வரலாற்றைக் கடந்துவிட்டாயிற்று. இனி
புதிய வரலாறு சொந்த மண்ணிலேயே எழுத ஒரு மாபெரும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. வாய்ப்புகளை
வீணாக்காமல் ஒரு புதிய வரலாறு படைக்கவேண்டும். இதற்கு திருவேங்கடவன் அருள் ஏராளமாகக்
கிடைக்கவேண்டும்..
திருவேங்கடவனை ‘ஆந்திரத்து விஷ்ணு’ என்று திராவிடமன்னர் ஸ்ரீகிருஷ்ணதேவராயர் தன் ‘ஆமுக்தமாலை’யில் வர்ணிக்கிறார். அந்த
ஆந்திரத்து விஷ்ணு அநாதைகளாக இன்று இருக்கும் இந்த ஆந்திரர்களை நல்வழிப்படுத்தி
உலகுக்கே பாடம் சொல்லிக்கொடுக்கும் அளவுக்கு உயர்த்தவேண்டும்.
************
அன்பின் திரு திவாகர்ஜி,
ReplyDeleteஅருமையான அலசல்.. நீங்கள் சொல்வது போல பிரிவினை வாதம் செய்ய வேண்டிய காலம் கடந்துதான் விட்டது.
//இது. தலைநகரமான ஹைதராபாதிலிருந்து வரும்படி சரிவிகித்த்தில் பிரிக்கப்படும் என்றாலும் ஏறத்தாழ ஆந்திர அரசாங்கத்துக்கு கையேந்தும் நிலைதான் கண்ணின் முன் தெரிகிறது. மத்திய அரசு ஏற்கனவே வாக்களித்தபடி பல்லாயிரம் கோடி ரூபாய்கள் ஆனால் முழுமையாக நல்ல கட்டமைப்போடு தலைநகரம் அமைப்பதற்கு எப்படியும் மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகள் ஏற்படலாம். எப்படியும் ஏராளமாகச் செலவிடவேண்டும். தலைநகரம் அமைவது என்பது சாதாரண விஷயம் இல்லை. ஆனால் ஆந்திரா பிரிந்தது நம் நன்மைக்கே என்று இங்கே பேச ஆரம்பித்து விட்டார்கள். //
நீங்கள் சொல்வது ஏற்றுக் கொள்ளக்கூடியது என்றாலும், இந்தப் பிரிவினால் ஏற்படப் போகும் பின் விளைவுகளை பொறுத்திருந்துதான் பார்க்க முடியும். பொருளாதார சீரமைப்பு ஒரு புறம் என்றாலும், சாமான்ய மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் பற்றி நினைத்தால் வருத்தமாகத்தான் இருக்கிறது. குறைந்தது இன்னும் ஒரு பத்தாண்டுகளாவது மக்கள் சிரமப்பட வேண்டியிருக்கும் என்று தோன்றுகிறது. நிலைமை சீராகி, சாமான்ய மக்களும் நிம்மதியாக வாழும் காலம் வரும் வரை இந்தப் பிரிவினை வேண்டா வெறுப்பாகத்தான், சமூக அக்கறை கொண்டவர்களால் பார்க்க முடியும்.
வாழ்த்துகள் . நிலைமை விரைவில் சீராகி மக்கள் நிம்மதியாக வாழ பிரார்த்தனைகள். மக்கள் என்று நான் சொல்வது, பதவியோ அல்லது பணமோ இல்லாத சாமான்ய மக்கள்!
அன்புடன்
பவள சங்கரி
நிலைமை விரைவில் சீரடைய வேண்டும். இறைவனை வேண்டுவோம்!
ReplyDeleteநன்றிங்க அய்யா! வேங்கடவன் அருள் உண்டு!!
ReplyDeleteபெருமாள்தான் காப்பாத்தணும்! ராவ்காரு இன்ஸ்பைரிங்கா இல்லை. எடுத்த எடுப்பிலேயே குடும்பமா வந்துட்டாரு!
ReplyDeleteநன்றி பவளா, பார்வதி, பழமைபேசி அண்ட் டாக்டர் திவா. ராவ்காரு குடும்பமா வந்தாலும் இருக்கற மந்திரிங்களிலேயே மெத்தப் படிச்சவர் அவர் பிள்ளைதானாம்.
ReplyDeleteGood One Sir, it speaks about both advantages & disadvantages. I learned a lot from your Andhra articles which was not known to me!!!
ReplyDeleteThanks
நன்றி சதீஷ்!!
ReplyDelete