அடுத்தவீட்டில் ஒரு அற்புத மனிதர்:
உன்னால் முடியும் தம்பி எனும் ஒரு படம், நல்ல படம், சமுதாய நோக்கோடு எடுக்கப்பட்ட சில படங்களில் ஒன்று. இதன் கதை சினிமாவுக்காக தயாரிக்கப்பட்ட கதை. ஒரு இளைஞன் மக்கள் சேவையே மகேசன் சேவை என்று சொல்ல, இளஞனின் தந்தை மறுக்க, சில பல உணர்ச்சி வசமான வசனங்கள், காட்சிகள், தியாகங்கள் என கதை இளைஞனுக்கு சாதகமாக சுபமாக முடியும். இது தெலுங்கில் முதல்முதலாக சிரஞ்சீவியை வைத்து எடுக்கப்பட்டு வெற்றியைக் கண்ட இயக்குநர் தமிழிலும் கமலஹாசனை வைத்து எடுத்தார். .
சரி, விஷயத்துக்கு வருவோம். இந்தக் கதையில் நடப்பதாகச் சொல்லப்பட்ட விஷயங்கள் யாவும் நடைமுறை வாழ்க்கையில் சாத்தியமானதா என்றால் உண்மையான பதில் இன்றைய சூழலில் இந்த நாட்டில் இப்படியெல்லாம் சாத்தியமில்லை என்றுதான் வரும். ஆனால் திரையில் வரும் இந்த உணர்ச்சிவசப்படும் சம்பவங்கள் மற்றும் வசனங்கள் இவை யாவும் தவிர்த்து உண்மையாகவே சமுதாயத்துக்கு நல்லதொரு சேவை செய்யவேண்டுமென களத்தில் குதித்து பல்வேறு சோதனைகளைக் கடந்து இன்னமும் தம் வாழ்க்கையையே இந்த சமுதாய முன்னேற்றத்துக்காக அர்ப்பணித்த மாமனிதர் ஒருவரை சமீபத்தில் சந்தித்த அனுபவம்தான் இந்தப் பதிவு.
எழுபது வயது நிரம்பிய இளைஞர் திரு பரமேஸ்வர ராவ். பாகவத சாரிட்டி டிரஸ்ட் எனும் பெயரில் மிகப் பெரிய விவசாயப் பண்ணையை உருவாக்கிக்கொடுத்த இவர் கதையையே சற்று சினிமாவுக்காக ஏற்றபடியாக மாற்றி திரைப்படம் எடுத்தார்கள் என்ற விஷயம் எல்லோருக்குமே (இந்த பிராந்தியத்தில்) தெரிந்த விஷயம்தான்.
விசாகப்பட்டினம்-சென்னை மார்க்கத்தில் விசாகப்பட்டினம் நகரத்திலிருந்து சுமார் 60 கி.மீ தூரத்தில் பஞ்சதாரா எனும் ஊரில் அழகான குடிரம் அமைத்துக் கொண்டு, ஒரு உயர்நிலைப்பள்ளியையும் அருகே கட்டிக்கொண்டு, நாளைய நல்ல இளைஞ்ர்களை இங்கே உருவாக்கிக் கொண்டு வரும் இந்த மகாமனிதரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் பள்ளி அருகேயே ஒரு பழைய கோவில் ஒன்று உள்ளது. சுமார் ஆயிரம் வருடகாலம் பழமையானது. சிவனுக்காக ஒரு சில யாதவகுல அரசர்களும், போயகுல வீரர்களும் நிர்மாணித்த கோவிலுக்கு 1967 ஆம் ஆண்டு வனபோஜனம் செய்வதற்காக நண்பர்கள், உறவினர்களோடு வந்தவர் பரமேஸ்வர ராவ். அப்போதே அவர் அமெரிக்கவாசி. வந்தவர் அங்குள்ள கோயிலின் பழமை பாதுகாக்கப்படாமல் பாழடைந்து வரும் நிலை அவருக்கு மிக வருத்தமளிக்க,அரசாங்கங்களின்(மத்திய-மாநில) அதிகாரவர்க்கம் பழைமையின் பவித்ரத்தில் ஒளிந்து கொண்டு யாரும் அந்தக் கோயிலை அண்டவிடாமல் செய்தது - அதாவது எவ்வித மாறுதலும் செய்யக்கூடாது எனும் தடையைப் போட்டது (இன்னமும் அப்படித்தான்). அதன் அருகேயே ஒரு கணப்தி கோயில் நிர்மாணித்தால் நன்மை பயக்கும் என சிலர் கூறிய யோசனையின் படி அந்தக் காலத்திலேயே ரூ 22 லட்சம் செலவில் திவிமுகவிநாயகர் கோவிலை நிர்மாணித்தார்.
(சமீபத்தில் கட்டப்பட்ட புதிய கோயிலும் அதன் பின்னே பழைய கோயிலும்)
அத்தோடு அங்கு சுற்றுச் சூழல் மலையும் வளமான நிலங்களும் உள்ள இடங்களை விளைநிலங்களாக மக்கள் சரியாகப் பயன் படுத்திக் கொள்ளாததும், கல்வி வசதி இல்லாமையும் பரமேஸ்வர ராவை யோசிக்க வைத்தன. இந்த நிலையைப் பார்த்து ஏதும் செய்யமுடியாமல் தமக்குள்ளே வருத்தப்படுவதைக் காட்டிலும் அவரால் முடிந்தவரை தாமாகவே களத்துள் இறங்கி களப் பணி செய்வதன் மூலம்தான் வெளி உலகத்துக்கு சேவையின் பயனை எடுத்துச் செல்லமுடியும் என்பதை உணர்ந்தார். தாம் அதிகம் சம்பாதித்துக் கொண்டிருந்த வெளிநாட்டு வேலையையும் வெளிநாட்டுக் குடிமகன் என்ற கௌரவத்தையும் உதறிவிட்டு தான் பிறந்த மண்ணுக்கு நிரந்தரமாகக் குடிவந்ததோடு மக்களோடு மக்களாக ஒன்றிப்போய் தம் செல்வத்தையும் பகிர்ந்து கொண்டு அவர்கள் முன்னேற்றத்துக்காக பாடுபட ஆரம்பித்தார்.’சுவித்யா’ எனும் பெயரில் தரமான கல்வியை சுற்றுப்புற ஜில்லாக்களில் வாழும் ஏழை மாணவர்களுக்காக கட்டினார். இங்கே இப்போது சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட ஏழை மாணவர்கள் இங்கேயே தங்கியிருந்து கல்வி கற்று வருகின்றனர். கல்வி என்றால் சாதாரணக் கல்வியல்ல. கலையோடு, நம் நாட்டின் தொன்மையையும் சிறப்பையும் பால பருவத்திலிருந்தே அவர்களுக்குப் போதித்து வரும் கல்வி. அந்தக் குழந்தைகளைப் பார்க்கும்போது அவர்கள் முகத்தில் சந்தோஷத்தையும், கவலையில்லா பருவத்தில் நேர்த்தியான கல்வியைப் பயின்று வரும் ஆர்வத்தையும் பார்க்கும்போது நமக்கும் அந்த மகிழ்ச்சி தொற்றிக் கொண்டுவிடுகிறது.
பரவேஸ்வரராவ் பரந்த பார்வையும் ஜாதிமதபேதமில்லா சேவையும் எத்தனையோ நல்லவர்களை அவர் பக்கம் வரவழைத்தது. அவர்களின் சேவைகளின் பலன் யாவும் சாதாரண மக்களுக்கே சென்று சேர்கின்றது. இதையெல்லாம் காணும்போது அரசாங்கங்களின் மக்கள் முன்னேற்ற திட்டங்கள், பட்ஜெட்டில் பல்லாயிரம் கோடி ஒதுக்கீடுகள், கடைசியில் அந்த ஒதுக்கீட்டில் 90 சத்வீதம் அரசியல்வாதிகளின் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் ஜேபிகளுக்கே செல்லும் என்பதையும் பார்க்கும்போது அரசாங்கத்தை நம்பி வாழும் பொதுமக்கள் எத்தனையோ நாட்களாக ஏமாற்றிவருகிறார்களே என்ற கவலையும் சேர்ந்தே வருகிறதுதான். அரசாங்கத்தைக் குறைந்த அளவே நம்பி, மிகுந்த அளவில் தாமாகவே செயல்படும்போது, அதன் பலன்கள் நேரடியாக அதுவும் ஏராளமானவையாக சாதாரண மக்களுக்குச் செல்கின்றன என்பதை தாம் வாழுகின்ற வாழ்க்கை மூலம் நிரூபித்துக் கொண்டிருப்பவர் பரமேஸ்வரராவ்.
(இப்போது ஏதோ சுமாராகக் காணப்படும் பழைய கால சிவன் கோயில்)
பரமேஸ்வரராவின் பூர்வீகம் தமிழகம்தான் என்பதை அவரே நேரடியாக என்னிடம் தெரிவித்தபோது எனக்குள் ஏகப்பட்ட வியப்பு. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்திலிருந்து வேதம் சொல்லப்படுவதற்காக சோழராசனின் கட்டளையால் ஒரு ஐந்து குடும்பம் இங்கு (ஆந்திரத்தில்) வந்ததாம். அந்த குடும்பத்தின் வாரிசுதான் நாங்கள் என்றார். இதைப் பற்றி என்னுடைய வம்சதாரா சரித்திர நாவலில் குறிப்பிட்டுள்ளதையும் நான் அவருடன் பகிர்ந்து கொண்டேன். குலோத்துங்கன் காலத்தில் இன்னும் ஏராளமான அளவில் தமிழ் அந்தணர் குடும்பங்கள் ஆந்திரத்துக்கு குடிபெயர்ந்ததைப் பற்றிய சரித்திர குறிப்புகள் உள்ளதையும், திராவிடர் எனும் குடும்பப்பெயருடன் அழைக்கப்படுவதையும், காஞ்சி பரமாச்சாரியார் குறித்து வைத்த சான்றோடு நான் குறிப்பிட்டபோது அவர் முகத்தில் இன்னும் மகிழ்ச்சி நிறைந்து காணப்படுவது தெரிந்தது.
ஆனாலும் தமிழ் தெலுங்கு எனும் வேற்றுமை எல்லாம் இவரிடத்தில் இல்லை. மானிடர் சேவையே மகேசன் சேவை எனும் குறிக்கோளுடன் வாழும் இவர் எல்லாவகை இனத்துக்கும் பொதுவானவர் அன்றோ..
(அவர் வாழும் குடீரம், அவரே வடிவமைத்துக் கட்டியது)
காலம் இப்போதெல்லாம் மிக மாறிவிட்டது. தற்போதைய சூழ்நிலைகள் மனிதரை சுயநலமிக்கவராக மாற்றிவிட்டது. இப்படி சுயநல வாழ்வை சூழ்நிலையாக கொண்ட நாம் எந்தவித சுயநலமும் இல்லாமல் சக மனிதரின் தேவைகளை உணர்ந்து அவர்களுக்கு உதவி செய்து கொண்டே வாழும் யாராவது ஒரு மனிதரைப் பார்த்தாலும் ஆச்சரியப்படுகிறோம். பரமேஸ்வரராவ் எனும் மாமனிதரைப் பற்றிய ஆச்சரியம் என் மனதை விட்டு அகலவே அகலாது. நான் அவரை போட்டோ எடுக்கவேண்டும் என்று சொன்னவுடன் தம்மருகே இரண்டு மாணவர்களைக் கூட்டிக்கொண்டார். குழந்தைகளுடன் இந்தப் பெரிய குழந்தையும் சேர்த்து காணும்போது கள்ளமில்லா உள்ளங்களின் கருணை மழையில் நனைந்தோம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
மனிதனாய் பிறந்து சக மனிதருக்கு உதவி செய்து வாழ்வது என்பதே இறைவன் விதித்த விதி என்பதை சொல்லாமல் சொல்லும் பரமேஸ்வரராவ் அவர்கள் இன்னமும் ஏராளமான ஆண்டுகள் வாழ்ந்து சேவை செய்யவேண்டுமென இறைவனை வேண்டுகிறோம்.
Saturday, February 5, 2011
Subscribe to:
Post Comments (Atom)
அன்புள்ள நண்பரே
ReplyDeleteதிரு பரமேஸ்வர ராவ் அவர்களின் சுய நலமில்ல தொண்டுள்ளத்தை அறிய தந்தமைக்கு மிக்க நன்றி
ராதாகிருஷ்ணன்
ஒம்
ReplyDeleteஅரும்பெரும் சாதனைகளியற்றிய திரு பரமேஸ்வரராவ் வணக்கத்திற்குரிய பெரியவர். அழுத்தமான சிந்தனையுடையவர்கள் மட்டுமே சாதிக்கமுடிகிறது. வெற்றி பெற முடிகின்றது. சிரம் தாழ்ந்த வணக்கங்கள் உரித்தாகுக.
அன்புடன்
வெ.சுப்பிரமணியன்
ஓம்
ஆச்சர்யம் ஆச்சர்யம் ஆச்சர்யம் இப்படி என்னுள் பிரமிப்பை ஏற்படுத்திய அருமையான பதிவு!
ReplyDeleteஎனக்கும் அவரை நேரில் பார்க்கவேண்டும் என்ற ஆவல் ஏற்படுவதும் ஆச்சர்யமே!
இம்மாதிரி மாமனிதர்கள் சிலர் இன்னும் இருப்பது ஆச்சரியம் தான். வாழ்க அவர் தொண்டு.
ReplyDeleteரீச்சந்திரா, இந்து அறநிலையத்துறை-சான்ட் ப்லாஸ்டிங் குறித்து எழுதியிருந்த கட்டுரையைப் படித்து முடித்தபிறகு இந்தப் பதிவைப் படித்தேன்.
ReplyDeleteதனிமனிதனாக இப்படித்தியாக சீலர்களாக இருக்க முடிகிற அதே மனிதன், சமூகம் கூட்டுப் பொறுப்பு, பொதுநலம் என்று வருகிறபோது வேறு மாதிரியாகிப் போகிறான் என்ற சிந்தனையை இந்தப்பதிவு எனக்குள் கிளறிவிட்டிருக்கிறது.
அடுத்தவீட்டில், சில நல்ல மனிதர்களை அறிமுகம் செய்துகொள்ளக் கிடைத்திருக்கிற வரப்ரசாதம்!
தொண்டர்தம் பெருமை சொன்னீர்கள், தொண்டுள்ளத்தை ஊக்குவித்தீர்கள், தொண்டர் பர்மசுவரர் வாழ்க, எழுதிய திவாகரார் வாழ்க
ReplyDeleteHats off thiru Parameswar Rao...
ReplyDelete//அரசாங்கத்தைக் குறைந்த அளவே நம்பி, மிகுந்த அளவில் தாமாகவே செயல்படும்போது, அதன் பலன்கள் நேரடியாக அதுவும் ஏராளமானவையாக சாதாரண மக்களுக்குச் செல்கின்றன//
I guess, some Governments themselves have admitted this and leave way to Self Help Groups.
A very interesting and insiring article! Thank you!
ReplyDeleteஅன்புள்ள திவாகர் அவர்களுக்கு: வணக்கம் பல. திரு பரமேஸ்வர ராவ் அவர்கள் ஒரு சாதனையாளர் என்று சொன்னால் அது மிக குறைவான மதிப்பீடு ஆகும். அன்னாரது பாகவத சேவை மையம் வெகு காலமாக எல்லமண்சில்லி மண்டலத்தில் ஹரிபுரம் என்னும் கிராமத்தில் கீழ்மட்டத்து மக்களின் உயர்வுக்காக பாடுபட்டு வரும் ஒரு ஸ்தாபனம். இன்று வெகுவாக பேசப்படும் மகளிர் சுய உதவி குழு என்ற கொள்கை திரு பரமேஸ்வர ராவ் அவர்களால் முப்பது ஆண்டுகளுக்கு முன்னேயே அனுஷ்டிக்கப்பட்டது. சுற்றுப்புற கிராமங்களில் அவர் மகளிர் குழுக்களை ஏற்படுத்தியதோடு அவர்களுக்கு கல்வியும் கற்பித்த மாமேதை. கள்ளுண்ணாமை அவர்களால் பிரச்சாரம் செய்யப்பட்டு கிராம மக்களிடையே ஒரு விழிப்புணர்வை உண்டாக்கியது. வழக்கம்போல் அரசாங்கம் அவரை நன்கு பயன்படுத்திக்கொள்ள தவறி விட்டது. நாட்டின் ஒவ்வொரு மாவட்த்திற்கும் ஒரு பரமேஸ்வர ராவ் தேவை.
ReplyDeleteஸம்பத்
'அடுத்த வீட்டை' பார்க்க ஆசைப் படுகிறேன். அவர்களின் பணியில் என் பங்களிப்பை செய்யவும் ஆசைப் படுகிறேன்.
ReplyDeleteIs this functioning still?
ReplyDelete