Monday, April 18, 2011

அடுத்த வீட்டில் ஒரு ஆச்சரியம்!!

அன்போடு கருணையும் சேர்த்துக் கொண்டு சில்கூரில் அருள் பாலிக்கும் பாலாஜிக்கு

வணக்கம், நமஸ்காரம்.

உனக்கு எல்லா மொழிகளும் தெரியும். ஆனால் அதில் இந்த இந்த இரண்டு மொழிகளில்தான் என்னை இப்படி வணங்கச் சொல்லிப் பழக்கப் படுத்தியுள்ளாய் என்பதால் அப்படியே அதை உனக்குத் திருப்பித் தருகிறேன்.

ஹைதராபாத் வரும்போதெல்லாம் சில்கூர் வந்து உன்னைத் தரிசிக்கவேண்டும் எனப் பலமுறை (அதுவும் இந்த இரண்டு வருடங்களில்தான்) நினைப்பதுண்டு. ஆனால் வந்ததில்லை. காரணம் தெரியும். வந்தால் மனைவியுடன் வா என்று நீ சொல்லாமல் சொல்வதாகவும், மனைவிக்குதான் என்னை விட உன் மீது பக்தி அதிகம் என்பது வெளிப்படையாகத் தெரிந்த காரணமாகவும் நான் ஊகித்துக் கொள்கிறேன். ஆனாலும் என்னுடையை தனிப்பட்ட குறையை மன்னித்து எங்களை உன்னருகே உன்னைக் காண தருவித்துக் கொண்டது உன் கருணைக் குணம்தான். உன்னைக் கண்டதும் என்னுள் புகுந்த மகிழ்ச்சியையெல்லாம் இங்கே எழுத்தில் வடிக்க முடியுமா என்ன? அதை மனதுக்குள்ளேயே பூட்டி வைத்துக் கொண்டு மகிழ்வதுதான் சிறப்பு..

முதலில் பாலாஜி என்றதும் திருமலை வேங்கடவன் நினைப்பும் அந்த நெடிய நீள் மலைக்கேற்றபடி எட்டடி நீண்டு நின்ற நெடுமாலும்தான் எல்லோருக்கும் நினைவுக்கு வருவதை நீயே அறிவாய். ஆனால் ஹைதராபாத் சில்கூரில் அந்த அளவு உயரமில்லாமல் பக்தர்கள் கண்குளிர கண்டு ஆனந்திக்கும் வகையில் நின்ற நிலையில் காட்சியளிக்கும் உன்னை சற்று ஆச்சரியத்துடன் பார்த்தேன் என்பதையும் இங்கு சொல்லிவிடுகிறேன். (உன்னிடம் இல்லாத உரிமை எனக்கு யாரிடம் உண்டு?)

உன் கோவில் கதையை உன்னுடைய அன்புக்கும் கருணைக்கும் மிகவும் பாத்திரமான ஸ்ரீமான் சௌந்தரராஜனார் சொன்னதையும் ஆழ்ந்து கேட்டேன். சௌந்தரராஜனார் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக, பதிவாளராகப் பணிபுரிந்தவர். அன்று பார்த்து திருவிழா ஆரம்பித்துள்ள நிலையிலும் அந்தப் பெருந்தகை எங்களை தன்னருகே அமரவைத்துக் கொண்டு. மிகவும் எளிமையைக் காண்பித்துப் பேசியதும் உன்னைப் பார்த்த ஆச்சரியத்தைப் போலவே மேலுமொரு ஆச்சரியத்தைத் தந்ததுதான். அவருடைய தாத்தா ஆற்றிய சமதர்மக் கடமைகளைச் சொல்லியதுவும், அதில் முக்கியமாக ஹைதராபாதை இந்தியாவுடன் சேர்த்தபோது ஏற்பட்ட கலவரத்தில் எப்படி இரு தரப்பு மக்களையும் கோவிலுக்குள்ளும், கோவில் அருகேயும் கலவரங்களிலிருந்து காப்பாற்றினார் என்பதையும் விவரித்தபோது விந்தையுடன் உன்னைத்தான் பார்த்துக் கொண்டேன். மக்களைக் காப்பதற்காகவே வந்த கலியுகக் கடவுள் நீ, உன் பார்வையில் யாரும் யாரையுமே தாக்கமுடியாதே, என்பதும் நினைவுக்கு வந்தது.

இப்போதெல்லாம் உன் கோவிலோ மக்கள் அலைகளால் தழுவப்பட்டு வருகின்றது. வந்த பக்தர் அனைவருமே பதினோறு முறை உன் கோவிலை வலம் வந்து பிறகு வரிசையாக எந்த ஒரு ‘ஜரகண்டி’யும் இல்லாமல் உன்னை நேரடியாக தரிசித்து உன் அருட்பார்வையில் பட்டு பலன் பெறுகிறார்கள். இத்தனைக்கும் இந்தக் கோயிலில் ஒரு உண்டியல் இல்லை, அர்ச்சகர் தட்டில் பணமில்லை, அந்தக் கட்டணம் இந்தக் கட்டணம் என ஏராளமான சேவைக் கட்டணங்கள் வசூலிப்பார்களே, இப்படியெல்லாம் எந்தக் கட்டணமும் இல்லை. அந்த சீட்டு, இந்த சீட்டு என வசூலிக்கவே ஒரு தனி கௌண்டரையே எல்லாக் கோவில்களிலும் பார்த்துப் பழகிப் போனவன் கண்களுக்கு எந்தவிதமான வசூலும் இல்லையென்பதே ஒரு சின்ன ஆச்சரியம். பின் எப்படித்தான் உன் கோவில் திருப்பணிகள் காலநேரம் தவறாமல் நடைபெறுகின்றன.. பெரிய ஆச்சரியம்தான்.
அடியேன் கேட்ட இப்படிப்பட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லி சௌந்தரராஜனார் என் ஆச்சரியத்தை உடைத்தது வாஸ்தவம்தான். ஆனால் அதன் பலன் எனக்குள் ஏற்பட்ட இன்னொரு ஆச்சரியம்.. இப்படியும் சாத்தியமா.. இப்படி எல்லாம் சாத்தியம் என்றால் அதை ஏன் மற்ற கோவில்களுக்கும் பயன்படுத்தக் கூடாது..

தர்மரட்சகனின் புகழ் பரப்பும் ஒரு மாதப் பத்திரிகை ‘வாக்’ எனும் பெயரில், தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி என மும்மொழியில் ஒரே பத்திரிகையாக வெளியிடப்படுகிறது. தற்போது சுமார் 50000க்கும் மேற்பட்ட பிரதிகள் மாதந்தோறும் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் அடக்க செலவுகள் ரூபாய் நான்கு போக ஒரு பிரதிக்கு ஒரு ரூபாய் என மாதம் ஐமபதாயிரம் வருகிறது. உன்னை நேர்ந்து கொண்டு சுவாமிக்கு என தேங்காய் உடைக்க காய் கொண்டுவருவார்கள். அதை வெளியே உள்ள தனிப்பகுதியில் உடைத்து, பாதிப் பகுதியை பிரசாதமாக உள்ளே உனக்குக் காண்பித்து, மீதியை அங்கேயே விட்டுச் செல்வது ஒரு சம்பிரதாய வழக்கமாக மாறிவிட்டதால் அந்தத் தேங்காய் மூலம் கிடைக்கும் வருமானம் மட்டுமே மாதத்திற்கு சுமார் ஐம்பதாயிரம் ரூபாய். ஆக ஒரு லட்ச ரூபாய் மற்றும் பக்தர்கள் உன் கோவில் பெயரில் போடப்பட்டுள்ள சேமிப்புக் கணக்கு உள்ள வங்கிக்கு அனுப்பி வைக்கும் கொடை நிதியிலிருந்து கிடைக்கும் வட்டி, இவை போதுமே ஒரு கோவிலை மிக நல்ல முறையில் நிர்வகிக்க – என்றாரே சௌந்தரராஜனார்.

இப்படியெல்லாம் கோர்வையாக நடக்குமா.. எல்லாக் கோவிலுக்கும் நிதி வரத்தான் செய்கிறது. எல்லாக் கோவில்களிலும் தேங்காய் போன்ற நிவேதன பொருட்கள் ஆயிரக் கணக்கில் கொடுத்துக் கொண்டே இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அத்தகைய கோவிலுக்கும் உன்னுடைய இந்தக் கோவிலுக்கும் எத்தனை பெரிய அகன்ற இடைவெளியைக் காண்பித்துள்ளாய். இந்த ஆச்சரியத்திலும் ஒன்றே ஒன்று புரிந்தது. இதெல்லாம் உன் லீலை. ‘ஆட்டுவிப்பார் ஆட்டுவித்தால் ஆடாதாரோ கண்ணா’ என்பது போல சௌந்தரராஜனார் மூலம் நீ மற்ற கோவில்களுக்கு மிகப் பெரிய செய்தியைச் சொல்லி இருக்கிறாய். ஆனால் சௌந்தரராஜனார் போல மற்ற கோயில்களிலும் தன்னலமற்ற உள்ளங்கள் இருக்கவேண்டுமே. அதற்கும் ஏதாவது வழி செய்வாய் என்ற நம்பிக்கை உண்டு.

ஒரு சில வருடங்களுக்கு முன்னால் நம் சௌந்தரராஜனார் தனியொரு பக்தனாய் உன் கோவிலில் அரசாங்கம் புகுவதற்கு தடை செய்யும் போராட்டத்தைத் துவக்கியதையும், அச்சமயத்தில் முதல்வராக இருந்த ராஜசேகரரெட்டி வேறு வழியில்லாமல், ஆந்திர அரசாங்கம் கோவில் விஷயங்களில் தலையிடாது என அரசாங்க உத்தரவு பிறப்பித்ததும் ஆந்திரமக்கள் அனைவருமே அறிவர். இந்தக் கால கட்டத்தில் இது மிகப் பெரிய சாதனை. அந்தப் போராட்டம் பத்திரிகையுலகத்தால் வெகு பிரபலமாக எடுத்துச் செல்லப்பட்டதும் தெரிந்ததுதான். சுயநலமில்லாத சௌந்தரராஜனார் தம் கோவில் போலவே தென்னிந்தியமெங்கும் உள்ள அத்தனைக் கோவில்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டுமென விரும்புவதில் எனக்கு ஆச்சரியம் துளி கூட இல்லை. ஆனால் சில்கூரில் நடந்தது போல எல்லாக் கோயில்களும் அரசாங்கக் கட்டுப்பாடிலிருந்து விடுபட்டுவிட்டால்.. ஆஹா.. நினைத்துப் பார்க்கவே ஆச்சரியமாக இருக்கிறது.

ஒருவேளை உன் தயவால் அப்படி நடந்துவிட்டால் நாடு விடுதலை அடைந்தது போல கோவில்கள் விடுதலை அடைந்தது என்று மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்தலாம்தான். அவருடைய ‘கோவில் பாதுகாப்புக் குழு’ எல்லா வெற்றியையும் பெற உன் வாழ்த்துகள் ஏராளமாக வேண்டும். உனக்குத் தெரியும் கால நேரம் பார்த்துதான் எதையும் செய்வாய்..

இரணியக சிபு’ வைக் கூட எண்பது ஆண்டுகள் ஆளவிட்டு, அவன் மகன் பிரகலாதன் வந்து அவன் மூலம் ’எங்கே அந்த நாராயணன்’ என இரணியனைக் கூப்பிட வைத்து அழித்ததாக சொல்வார்கள். அரசாங்கம் எனும் இரணியன் கோவில்களைத் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது. நம் சௌந்தரராஜனையே பிரகலாதரூபமாக நினைத்துக் கூடிய சீக்கிரம் வந்து கோவில்களை சிறை மீட்கவும். அதற்காக நீண்ட நாட்கள் காக்க வைக்காதே கண்ணா!

அடடே, உன் புகழ் பாடும் நேரத்தில் நம்ம ரங்கனை மறந்துவிடுவேன் போல இருக்கிறது.. ரங்கராஜனாரும் தந்தைக்கேற்ற தனயன். இல்லாவிட்டால் ஒரு பயோடெக் பொறியாளர், லண்டனில் கிடைக்க இருந்த, உதவித் தொகையோடு கூடிய அதி சொகுசுக் கல்வியை அந்தக் காலகட்டத்திலேயே (1988 தானே) தந்தை சொல் கேட்டு உதறிவிட்டு உன் சேவையில் ஈடுபடுவாரோ.. ‘வாக்’ பத்திரிகையில் அவரது கைவண்ணமும் கண்டேன்.. ரங்கன் சேவையையும், இன்னும் ஆச்சாரியர் சிலர் பார்த்தேனே, அவர்களது சேவையையும் நம்மாழ்வார் பார்த்துக் கொண்டே ‘கண்டோம், கண்ணுக்கினிய கண்டோம், தொண்டீர் எல்லாரும் வாரீர், வைகுந்தன் பூதங்கள் இரியப் புகுந்தன’ எனப் பாடுவதும் நம் காதில் கேட்கிறது. ’வாக்’ பத்திரிகை தமிழகம் முழுவதும் பரவ வேண்டும். ரங்கனார் ’வாக்’ புத்தகத்தில் தமிழுக்கென சில பக்கங்கள் ஒதுக்கவேண்டும்.
போனவாரம்தான் ‘ஹிந்து’ பேப்பரில் பார்த்தேனே.. உன் புகழ் கேள்விப்பட்டு, தேர்தலில் போட்டியிடும் தமிழக அரசியல்வாதிகள் போட்டிப் போட்டுக்கொண்டு சில்கூர் வருவதாகவும், அவர்களிடம் அப்போதும் கூட சௌந்தரராஜனார் தமிழகக் கோவில்களில் பக்தர்களுக்கு எவ்விதக் கட்டணச் சேவையும் இல்லாமல் சௌகரியம் செய்துகொடுக்க வேண்டும் என்பதாகவும் செய்தி போட்டிருந்தார்களே.. நம் தமிழக அரசியல்வாதிகளே அப்படித்தான்.. விஷயம் இருந்தால்தான் வருவார்கள். கெட்டிக் காரர்கள். எப்படியோ வேவு பார்த்து, கண்டுபிடித்து உன்னிடம் தேடி வந்து கோரிக்கை வைக்கிறார்கள். ஆனால் நீதான் யார் கேட்டாலும் உடனே கொடுப்பவன் ஆயிற்றே.. யார் யாருக்கு என்னென்ன கொடுப்பது என்பதை சற்று எச்சரிக்கையுடன் செய்யவும் (ஏதோ ஒரு உரிமையில் சொல்லிவிட்டேன்.. கோபித்துக் கொள்ளாதே).

உன் கோவில் நம்மாழ்வார் பாடியபடி வைகுந்தன் பூதங்கள் சேவை செய்யும் கோவில் - ஏழைகளுக்கும் கோவில், பணக்காரர்களுக்கும் கோவில், அதிகாரிகளுக்கும், வணிகர்களுக்கும், மாணவர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் கோவில்தான் என்பதை அங்கு வந்து பார்த்த பிறகுதான் புரிந்தது, உன் கோவிலில் பேதமே கிடையாது. உன்னை விஸா பாலாஜி என்று செல்லமாக பிள்ளைகள் அழைக்கிறார்கள். அவர்கள் கேட்டவுடனே அந்த விஸாவை எளிய முறையில் நீ பெற்றுத் தருவதால்; பொதுவாக பெற்றவர்கள்தான் தம் பிள்ளைகளைக் கட்டாயப்படுத்திக் கூட்டிக் கொண்டு கோவிலுக்குச் செல்வார்கள். ஆனால் உன் கோவிலில்தான் குழந்தைகள் பெற்றவரைக் கூட்டிக் கொண்டு வரும் ஆச்சரியத்தையும் பார்த்தேன். உன்னைக் காண வரும் பக்தர்கள் உன்னைக் கண்டதுமே அவர்கள் கோரிக்கைகளை உன் காதில் போட்டுவிட்டு ’இனி உன் பாடு’, என கவலையற்றுச் செல்வதையும் அதே ஆச்சரியத்தோடு பார்த்தேனே..

எத்தனையெத்தனை ஆச்சரியங்கள்.. உன்னை இனி அடிக்கடிக் காணவருவேன்.. இந்த முறை கண்டது போலவே அப்போதும் வழி செய்வாய் என்று எனக்குத் தெரியும். கடைசியாக ஒரு சின்ன கோரிக்கை. நாங்கள் சௌந்தரராஜனாரிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே ஒரு அழகான இளம் தம்பதியினர் கேரளாவில் இருந்து வந்தனர். அவர்கள் சௌந்தரராஜனாரிடம் தம் மனக் குறையை தீர்க்க வழி கேட்டனர். வழியை அவர் காட்டினார். அந்தக் குறையையும் தீர்த்து வைப்பாயாக.. (இதுவும் ஒரு உரிமையில்தான்)..

எனக்கெனவும் ஏராளமான கோரிக்கைகள் உள்ளனதான். ஆனால் உன்னைப் பார்த்த மாத்திரத்தில் அவையெல்லாம் மறந்து போய்விடுகின்றன.. என் மனம் நீ அறிவாய்.. சமயம் பார்த்து அவையாவும் நீயே ஞாபகம் வைத்துக் கொண்டு நிறைவேற்றி அருளும்படிக் கேட்டுக் கொள்கிறேன்..

இப்படிக்கு
அடியேன் திவாகர்.

’வாக்’ பத்திரிகையைப் பற்றிய விவரங்களை www.vakchilkur.org எனும் வலைத்தளத்தில் காணலாம். வாக் பத்திரிகை வாங்குவதால் ஒரு சிறுதுளியை கோவில் காணிக்கையாகவும் நாம் அளிக்கிறோம்.

Friday, February 25, 2011

மனோகரமான லட்டு

திருமலையில் அருளப்படும் பிரசாதங்களின் வரலாறு

திருப்பதியில் கல்வெட்டுகள் சுமார் 650 இருக்கின்றன. இவைகளில் சிற்சில தவிர்த்து ஏனைய அனைத்தும் திருமலைக் கோயிலைப் பற்றியவையே. அதிலும் தமிழ் கல்வெட்டுகள் சுமார் 600 இருக்கின்றன. கல்வெட்டுகளின்படி பார்க்கும்போது இன்றைய திருப்பதியும் திருமலையும் பல்வேறு வகையான ஏற்ற தாழ்வுகளை சந்தித்து இன்று உலகின் இந்துக்கள் அனைவராலும் போற்றப்படும் கோயிலாக உருவாகியிருப்பதைப் புரிந்து கொள்ளலாம்.கல்வெட்டுகள்தான் என்ன நடந்தது என்பதை நமக்கு ஆதாரமாகக் காண்பிக்கும் தடயங்கள். ஒவ்வொரு கல்வெட்டும் பல நிகழ்வுகளை சொல்லிக் கொண்டே போகிறது. நமக்குத் தேவையான சில முக்கிய நிகழ்வுகளை மட்டும் இந்தக் கட்டுரையில் தர இருக்கிறேன்.

பிரசாதங்கள் என்பது கோயில்களில் மிக மிக முக்கியமான விஷயமாகக் கருதப்பட்ட காலம் அவைகள். பிரசாதம் மூலமாக திருமலை ஏறி வரும் அடியார் பசி தீர்க்கவே பல வேண்டுதல்கள் நிறைவேற்றப்பட்ட விஷயங்களுக்காக பலர் நிவந்தங்களை விட்டுச் சென்றுள்ளனர். பிறரும் தம்மைப் போல இப்படிச் செய்யவேண்டும் என்பதற்காகவே கல்லிலும் தாங்கள் செய்த செயலை செதுக்கிவிட்டுச் சென்றார்கள்.

அரசர் முதலியோர் விட்டுச்சென்றுள்ள கல்வெட்டுகளிலிருந்து அவர்கள் பிரசாதத்தைப் பெரிதாக மதிக்கவில்லை என்றே தோன்றினாலும் உள்ளர்த்தமாகப் பார்க்கையில்் இந்த உணவுப்பொருட்களுக்கும் சேர்த்தே நிவந்தம் அளித்துள்ளார்கள் என்பது தெரியவரும். சாளுவ நரசிங்கரும், ஸ்ரீகிருஷ்ணதேவராயரும் நிவந்தங்கள் இப்படித்தான் அளித்தனர். தாங்கள் பெரிதாக வழங்கிய நிலங்கள், நகைகள், பொற்காசுகள், ஆபரணங்கள், தங்கப் பேலா (ஸ்ரீகிருஷ்ணதேவராயரின் இரண்டு மனைவியரிடையே போட்டி போலும், ஒரு ராணி ஒரு தங்கப்பேலா கொடுத்தாள் என்பதற்காக அதைவிடப் பெரிய தங்கப்பேலாவை இன்னொரு ராணி ஓரிரு வருடங்கள் இடைவெளியில் கொடுத்துவிட்டு அந்த இருவரும் கன்னட பாஷையில் கல்லில் பதித்து விட்டுச் சென்றுள்ளனர்)இவைகளில் நிலங்களின் விளைச்சல் மூலம் கிடைக்கும் வருவாய் கோயிலின் எல்லா செலவுகளுக்கும் எடுத்துக் கொள்ளப்படவேண்டும். இதில் பிரசாதங்களும் மறைமுகமாக வரும். ஆனால் பொதுமக்களோ, வணிகர்களோ, பெரிய தனவந்தர்களோ அப்படி இல்லை. அவர்கள் வெட்டிய கல்வெட்டுகளின் படி பார்க்கும்போது குறிப்பாகவே பிரசாதங்களுக்காக ஏராளமாக காணிக்கையளித்துள்ளனர் என்பது புலப்படும். வயிற்றுப் பசியின் அருமை தெரிந்தவர்கள் போலும்.

9ஆம் நூற்றாண்டில் சாமவை எனும் பல்லவ இளவரசிதான் முதன்முதலில் தாம் செய்ததை கல்வெட்டில் ஏற்றிய உத்தமபுத்திரி. இவள் கைராசி அடுத்த 700 ஆண்டுகளில் ஏறத்தாழ அறுநூறு கல்வெட்டுகள் திருமலையில் செதுக்கப்பட்டன. அதிர்ஷ்ட வசமாக இவள் வடித்த இரண்டு தமிழ் கல்வெட்டுகளிலும் திருவேங்கடமுடையான் பெயரும், அவனுடைய உற்சவ மூர்த்தியாக வெள்ளியிலே வார்க்கப்பட்ட மணவாளப்பெருமான் பெயரும் சொல்லப்பட்டிருக்கிறது. ஏறத்தாழ இரண்டு முறை நான்காயிரம் குழிகள் தனித்தனியாக நிலங்கள் நிவந்தமாக அளித்து, அந்த நிலங்கள் மூலம் கிடைக்கும் தொகையில் முதன் முதலாக பத்து நாள் உற்சவம் ஏற்பாடு செய்யவும் அவள் கட்டளையாக கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. ஆக திருமலையில் முதல் பிரும்மோற்சவத்தை பல்லவ இளவரசி சாமவைதான் ஏற்பாடு செய்ததாக இதன் மூலம் உறுதியாகிறது. இவள் பெயரால் உற்சவம் ஏற்பாடு செய்யும் சபைக்குக் கூட சாமவை அல்லது சாம்பவை என அழைக்கப்பட்டது. இந்த உற்சவகாலம் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தில் சுக்ல பட்சத்தில் ஆரம்பித்து வைகுண்ட ஏகாதசியோடு பூர்த்தி ஆகுமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த நாளான துவாதசி நாளன்று சுதர்சனருக்கு நீராடல் செய்யப்பட்டு உற்சவம் முடியும். (இந்தக் கல்வெட்டு ஆதாரமாகத்தான் ‘திருமலைத் திருடன்’ நாவலில் கூட மார்கழி மகோற்சவம் சிறப்பாக எடுத்துக் கொள்ளப்பட்டு அந்த அடிப்படையில் கதையின் முக்கிய சாராம்சம் கூட சொல்லப்படும்.)

திருப்பதியில் உள்ள மலைமேல் குடிகொண்டிருக்கும் திருவேங்கடமுடையான் கோயிலின் பொற்காலம் என்றால் அது 1350 ஆம் ஆண்டு முதல் 1600 ஆம் ஆண்டு வரைதான் என்று சொல்லவேண்டும். முக்கியமாக விஜயநகர அரசர்கள் ஆண்ட காலம் இது. திருமலை புகழின் உச்சியில் இருந்தது. சதா சர்வ காலமும் விழாக் காலமாக 1440 இலிருந்து 1560 வரை இருந்ததை ஏராளமான கல்வெட்டுகள் நிரூபிக்கின்றன. ஆண்டொன்றுக்கு பதினோறு மாதங்கள் பிரம்மோத்சவம் நடைபெற்ற காலம் இவை. மார்கழி தவிர அனைத்து மாதங்களும் திருவேங்கடத்தானுக்கு உற்சாக உற்சவங்கள், மேளதாளங்களால் வீதி ஊர்வலங்கள், விழாக்கால வழக்கமான கொண்டாட்டங்கள் (வெடிச் சத்தம் கூட உண்டு) என மலையே அதிரும்படி கலகலவென இருந்த மலை, அடுத்த இருநூறு ஆண்டுகளில் யாருமே தங்கமுடியாத சூழ்நிலைக்குக் கூட சென்றது என்பது கல்வெட்டுகளின் மூலம் பரிபூர்ணமாகத் தெரியும்.

1800 ஆண்டுகளில் பிரிட்டனின் கிழக்கிந்தியக் கம்பெனியின் அதிகாரத்துக்கு வந்தபோது திருமலையில் மலேரிய பரப்பக்கூடிய கொசுக்கள் அதிகம் என மலை மேலே செல்வதற்கே தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலே இருந்த அர்ச்சகக்குடும்பங்கள் (சுமார் 50 பேர்) கூட திருப்பதி அடிவாரத்துக்கு வந்துவிடவேண்டுமென கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் 1600 ஆண்டுகளுக்குப் பிறகு, விஜயநகர சாம்ராஜ்ய வீழ்ச்சிக்குப் பிறகு சில நாயக்க ராஜாக்கள் திருமலையின் விழாக்கால நிலையை சிறிது காலமே போற்றி வந்தனர். மராத்தியர்கள் தமிழ்நாட்டை ஆண்டு வந்த காலத்தில் திருப்பதி பகுதி ஆற்காடு நவாபின் ஆளுகையிலும், மராத்தியர் ஆளுகையிலும் மாறி மாறி வந்ததால் திருமலைக் கோயில் அரசர்கள் ஆதரவின்றி அர்ச்சகர்கள், மடாதிபதிகள் மற்றும் போஷகர்கள் (பெரும்பாலோர் வைசியர்கள்) மட்டுமே கட்டிக் காக்க வேண்டிய நிலையில் தள்ளப்பட்டது. பிரிட்டிஷார் வந்தபோது இந்த நிலை இன்னமும் மோசமானதுதான்.

முதலில் திருப்பதி வேங்கடவன் என நினைத்தாலே நம் கண், நாசி, நாவையும் நிரப்புவது இந்த ஒரு சொல்தான்.. லட்டுதான்.

திருமலை வேங்கடவன் பிரசாதமாக வழங்கும் லட்டு என்றிலிருந்து ஆரம்பித்தது என்பது கல்வெட்டுகள் படி எங்கும் காணப்படவில்லை. பொதுவாக க்டந்த 200 வருடங்களாக கல்யாண உத்சவம் செய்யும்போது இனிப்பு வகையறாக்களோடு ஒன்றாக லட்டும் சேர்ப்பித்திருக்கலாம் என்று ஊகிக்கலாம்தான். விஜயநகர அரசர் காலங்களில்தான் உற்சவமூர்த்தியான ‘மலைகுனிய நின்ற பெருமாள்’ கல்யாண உற்சவம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த கல்யாண உற்சவத்தினைப் பற்றிய முதல் கல்வெட்டு கி.பி. 1546 ஆம் ஆண்டு தாலபாக்கம் திருமலை அய்யங்கார் என்பவரால் முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்டது என்ற விவரம் தெரிய வருகிறது. தாலபாக்கம் என்பது அன்னமய்யா பிறந்த ஊர். இவர் அவருக்கு என்ன உறவு எனக் கல்வெட்டில் சொல்லப்படவில்லை.

இந்தக் கல்யாணோத்சவத்தில் (பெள்ளித் திருநாள் என்று எனத் தெலுங்கிலும், கல்யாணோத்சவம் என தமிழிலும், வைவாகோத்சவம் என சமுஸ்கிருதத்திலும் வடிக்கப்பட்டது) பங்குனி மாதத்தில் ஐந்து நாட்கள் நடந்த இந்தத் திருநாள் உற்சவத்தையும் திருமாமணிமண்டபத்தில் உற்சவமூர்த்தியான மலைகுனிய நின்றபெருமாள் (பின்னால், மலைகுனிய நின்றான், பின் மேலும் மலையப்பனாக சுருக்கப்பட்டது) தம் இரு தேவியருடன், ஐந்து நாட்களும் விழாக்கோலம் எங்கும் காண, கல்யாணம் செய்து கொண்ட காட்சியையும் கொஞ்சம் விவரணையாகவே இந்தக் கல்வெட்டு சொல்கிறது. ஆனால் கல்யாணத்து இனிப்பு வகையறாக்களில் ‘லட்டு’ இல்லை. திருமணத்தில் பிரசாதங்களாக வடைப்பிடி (வடை), மனோகரம் (இது மிகவும் பழைய காலத்திலிருந்தே தொடர்ந்து வருவது) எனும் இனிப்பு, அவல், பொறி இவைகளைத் தந்ததாக இந்தக் கல்வெட்டு சொல்கிறது. மேலும் திருக்கல்யாணத்தில் ஊஞ்சல் உற்சவத்துக்காக ‘பஞ்சவண்ணப்பிடி’ என ஐந்து வர்ணங்களில் செய்யப்பட்ட அன்னமும் தயாரிக்கப்ட்டதாகவும், இந்த ஐந்து நாள் மொத்த செல்வுகளுக்காக திருமலை அய்யங்கார், ஐநூறு கட்டி வராகன் தொகை செலுத்தியதாகவும் கல்வெட்டு சொல்கிறது. அதாவது பொதுமக்களில் முதன் முதலாகக் கோயிலுக்குப் பணம் கட்டி பெருமாளுக்கு இவர்தாம் கல்யாணம் செய்வித்ததாகத் தெரிகிறது.

லட்டு என்பது திருவேங்கடவன் கோயிலில் 20ஆம் நூற்றாண்டில்தான் முறைப்படியாக பிரசாதமாக வந்ததாகவும், கல்யாணம் ஐய்யங்கார் என்பவர்தாம் இப்போதைய ருசிகரமான லட்டுவுக்கு காரணகர்த்தா எனவும் தகவல் உள்ளது. 1932 ஆம் ஆண்டில் சென்னை (மதராஸ்) அரசாங்கத்தாரால் தி.தி.தேவஸ்தானம் உருவாக்கப்பட்டு அவர்களின் நிர்வாகத்தின் கீழ் திருமலைக் கோயில் வந்தாலும் மடைப்பள்ளியும் பிரசாதங்கள் செய்யும் உரிமையை மிராசிகள் பெற்று வந்ததும் எல்லோரும் அறிந்ததுதான். இப்படி ஐந்து மிராசிகளின் பிரதிநிதியாக கல்யாணம் ஐயங்கார் உரிமை பெற்று சமையலறை நிர்வாகத்தினைப் பொறுப்பெடுத்துக் கொண்டதாக தகவல் கூட தி.தி.தே அலுவலத்தில் இன்றும் உள்ளது. ‘கொண்டந்தா லட்டு’ (மலையளவு லட்டு) எனும் ஒரு பிரார்த்தனையை ஒரு தெலுங்கர் செய்ய, அதற்கேற்றவாறு கல்யாணம் ஐயங்காரும் ஏராளமான அளவில் செய்து கொடுக்க, அந்த லட்டு பிறகு பிரசாதமாக ஏராளமானவர்கள் எடுத்துச் செல்ல, லட்டு புகழ் வையம் அறியச்செய்யும் விதமாக இந்த நிகழ்ச்சியும் இருந்ததாக சொல்வர். (ராஜாஜி அவர்களே கல்யாணம் ஐயங்கார் செய்த லட்டுவின் பெருமையைப் போற்றியதாகவும் சொல்வர்). ஆனால் லட்டு நிச்சயமாக ஆதியிலிருந்து திருப்பதியில் பிரசாதமாக இருக்கவில்லை.

லட்டுக்குப் பிறகு எல்லோருக்கும் பிரியமான பிரசாதம், அதுவும் பெருமாள் கோயிலென்றால் அது புளியோதரைதான். இந்தப் பதார்த்தம் எப்போதையிலிருந்து ஆரம்பித்தது என்று ஆராய்ந்துதான் பார்க்கவேண்டும். ஆனால் புளியோதரைக்கு அடிப்படை தேவையான புளி எனும் வார்த்தை திருமலை கல்வெட்டுகளில் இல்லை.

ஆனால் 1250ஆம் ஆண்டில் சுந்தரபாண்டியன் காலத்தில் எடுக்கப்பட்ட சில கல்வெட்டுகளில் பிரசாத விஷயங்கள் வருகின்றன. தயிர்சாதம், எலுமிச்சை சாதம் போன்றவை வருகின்றன. புளியோதரையை விட எலுமிச்சை சாதம் செய்வது மிக எளிது. (அப்படியே புளிப்பு ருசி சற்று குறைந்தாலும் பிழிந்த எலுமிச்சை மீது பழியைப் போட்டு மடைப்பள்ளிக்காரர்கள் தப்பித்துவிட சந்தர்ப்பம் உண்டுதான்)

அடுத்த பதின்மூன்று, பதிநான்காம் நூற்றாண்டுகளில் ஏகப்பட்ட கல்வெட்டுகளில் பொங்கல் வருகிறது. பொங்கல் எனும் பெயர் வரவில்லையென்றாலும், பாசிப்பருப்பும், அரிசியும், உப்பு, மிளகு, நெய் போன்றவை (இவை ஐந்தும் சேர்ந்து சமைக்கப்பட்டால் பொங்கல்தானே!) ஏராளமாக கொடையாக கொடுக்கப்பட்டதற்கான கல்வெட்டுகள் உள்ளன. அடுத்து அதிகம் கல்வெட்டுகளை ஆக்கிரமித்திருப்பது பானகம். மலையில் நடந்து செல்லும் பக்தருக்காக, கோயில் நிர்வாகமே (தனத்தார் செலவில் இருந்து) பானகம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு அரசர் முதற்கொண்டு சாதாரண பொதுமக்கள் வரை தனத்தாருக்கு (temple treasury) பணம் செலுத்தியதற்கு அந்தக் காலத்தில் கல்லிலே உளி கொண்டு எழுதி ரசீதாகக் கொடுத்திருப்பது ஒரு விசேஷம்தான்.

வருடம்: ஆங்கிலம் 1446:

கல் ரசீது பெறுபவர்: எர்ர கம்பய்யத் தேவரின் மகனான பெரியமல்லையத்தேவர்,

தொகை: 1000 பணம்

பானகத்துக்குத் தேவையான பொருள்கள் வாங்குவதற்காக மேற்படியாரால் தனத்தாரிடம் வழங்கப்பட்டது.


வருடம்:1451.

பெயர்: துவாரபதி மலையபெருமாள் மகனான பிள்ளைபொறுத்தார் தன் பிறந்தநாளான உத்திரநட்சத்திரத்து நாளில் திருமலை மலைகுனிய நின்றானுக்கு பானக ஆராதனைக்காக, பானகம் பொருள் வாங்க 5000 பணம் தனத்தாரிடம் செலுத்தப்பட்டது.

பானகம் தவிர அடுத்து அதிகமாகப் பேசப்பட்ட பிரசாதம் மனோகரம் எனும் தின்பண்டம்தான். இப்போதெல்லாம் மனோகரம் கோயில் பிரசாதங்களில் நடைமுறையில் இல்லையென்றாலும் இன்னமும் ஆந்திரக் குக்கிராமங்களில் மனோகரம் செய்வதும், விருந்து உபசாரத்தில் அதை வைப்பதும் உண்டுதான். மனோகரம் என்பது அரிசிமாவும், வெல்லப்பாகும் கலந்த உலர்ந்த கலவையை எண்ணெயில் போட்டு (முறுக்கு போல) வறுத்தெடுப்பதுதான். ஆனால் எண்ணெய் பணியாரமாகப் பார்ப்பதற்குத் தெரியாது. மனோகரம் என்றால் அழகானது என்ற பொருள். கோலம் என்றாலும் அழகு என்றுதான் சொல்வார்கள். கோலமாவில் கோலம் போடுவது போல அழகான நெளிவு சுளிவு கொண்டு, பார்ப்பதற்கு எழிலாக இருக்கும் இந்த தின்பண்டம் வெறும் அரிசி மாவும் வெல்லமும் கொண்டு தயாரிக்கப்படுவதால் இதற்குத் தேவையான பொருட்களாக, அரிசி, வெல்லம், கடலை (எண்ணெய்க்காக) போன்றவை நிவந்தனமாக ஏராளமான கல்வெட்டில் காணப்படுகிறது. மனோகரம் படையல் செய்வதற்காக எனும் பெயரோடும் சில கல்வெட்டுகள் உள்ளன. இந்தக் கால லட்டுவின் இடத்தை இந்த மனோகரம்’தான் ஒருகாலத்தில் திருமலையில் பிடித்திருந்ததாகக் கூட சொல்லலாம். கரகரவென பல்லால் கடித்து உண்ண சுவையான ஒரு தின்பண்டம்தான் இது.

தமிழகத்தில் திருமணங்களில் இந்த மனோகரத் தின்பண்டம், (கொஞ்சம் கரகரவென இல்லாமல், மெத்தனமாக இருக்கும், ஆனால் ருசி ஒன்றுதான்) கூம்பு போல செய்யப்பட்ட கூடுகளில் அடைத்து மணமகள் சார்பில் மணமகன் வீட்டாருக்கு சீர் செய்வது பழையகால வழக்கம். பிராம்மணர் இல்லத்துத் திருமணங்களில் ’பருப்புத் தேங்காய்’ எனும் பெயரிட்டு இன்னமும் முந்திரிப்பருப்பு தேங்காய், வேர்க்கடலைப் பருப்புத் தேங்காய், அல்லது இந்த மனோகர தின்பண்டத் தேங்காய்’ என சீர் செய்து எல்லோர் கண்களிலும் ’காண்பித்துக் கொண்டுதான்’ இருக்கிறார்கள்.

மனோகரமான இந்த குறிப்பிட்ட தின்பண்டம் ஆந்திர மக்களிடையே மிகப்பிரபலம்.

அடுத்து வருவது அப்பம். இதுவும் மேற்கண்ட பொருள்களினைக் கொண்டே செய்யப்படுவது. ஆனால் மனோகரத்துக்கு உலர்ந்த கலவை தேவைப்படும். அப்பம் அப்படி செய்யப்படுவதில்லை. மனோகரம் இன்று திருமலைக்கோயில் பிரசாதங்களில் இருந்து மறைந்தாலும் இந்த அப்பம் இன்னும் மறையவில்லை. இன்றும் திருவேங்கடத்தானுக்கு முக்கியப் பிரசாதங்களில் ஒன்றாக அப்பமும் இருந்து வருகிறது. அப்பமும், மனோகரமும் அதிக நாட்கள் இருக்கக்கூடியவை கூட.. மலையேறி திருவேங்கடவனைத் தரிசித்து செல்லும் பக்தர்களுக்கு அதிக நாள் நீடிக்கக்கூடிய பிரசாதமாக 12ஆம் நூற்றாண்டிலேயே இருந்ததை கல்வெட்டுகள் பேசுகின்றன

சரி, கீழ்க்கண்ட அளவில் ஒரு பட்டியல் ஒரு கல்வெட்டில் இருக்கிறது. இதனைச் சற்று பார்ப்போம். இந்த அளவையில் எப்படிப்பட்ட பிரசாதங்கள் செய்யமுடியும் என்பதினை எளிதாக உணர்ந்தாலும் எத்தனை பேருக்காக சமைக்கப்பட்டிருக்கிறதோ என்பதையும் கவனிக்கவேண்டும். ஏனெனில் இந்த அளவைகள் ஒரு குறிப்பிட்ட தினத்துக்காக மட்டுமே.

> 153 மரக்கால் அரிசி (8 படி = ஒரு மரக்கால்)
> 506 நாழி நெய் (ஒரு நாழி என்பது 1.3 லிட்டர்)
> 12660 பலம் வெல்லம்,
> 14 நாழி மிளகு,
> 24 மரக்கால் பச்சை பருப்பு
> 30 மரக்கால் கடலைப் பருப்பு
> 30 மரக்கால் கோதுமை
> 67 மரக்கால் நெல்
> 100 நாழி: பால்
> 5 நாழி: தேன்

> திருக்கை விளக்கம் (தட்சிணை அல்லது செய்கூலி) 896-1/4 பணம்

இவை அனைத்தும், அதிரசம், வெல்லப்பொங்கல், வெண்பொங்கல் செய்வதற்காக விஜய நகர சாம்ராஜ்யத்தை ஆண்ட அரசர் சாளுவ நரசிங்கராயாரால் 1473 ஆம் ஆண்டு நடந்த ஊஞ்சல் உற்சவத்தின் போது திருவேங்கடமுடையானுக்கு நிவேதனம் செய்ய நிவந்தமாக அருளப்பட்டது. கோதுமை எந்தப் பதார்த்தம் செய்வதற்காக என்பது குறிப்பிடப்படவில்லை.

சாளுவநரசிம்மரின் விருப்பப்படி பண்டிதர்களின் உதவியோடு திருவேங்கடத்தான் புராணமான ’திருவேங்கடமகாத்யம்’ 1491 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. இன்றைய திருவேங்கடத்தான் கோயில் புராணக் கதையான பத்மாவதி கல்யாணம், குபேரனுக்குக் கடன் பட்டது போன்றவையும் இந்த ‘திருவேங்கடமகாத்யத்தில்’ சொல்லப்பட்டதுதான். இந்தப் புராணக் கருத்துக்களையும் மக்களிடையே பரவலாக்க உத்தரவிட்டதற்கான ஒரு கல்வெட்டும் அதற்கு தேவைப்படும் சில நிவந்தங்களும் கீழ்திருப்பதி கோவிந்தராஜனின் கோயிலில் இருக்கிறது. இவருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த இரண்டாம் தேவராயர் (துளுவவம்சம், கிருஷ்ணதேவராயரின் தந்தை) சாளுவ நரசிம்மரின் இந்த ஏற்பாட்டை மிக விரிவாகச் செய்ததற்கும் கல்வெட்டுகள் மலைக் கோவிலிலேயே உள்ளன.

இந்தப் புராணக் கதை வெளியான பிறகுதான் வைகானஸ விதிப்படி முறையான ஆகமவிதிகளை திருமலைக் கோயிலில் பின்பற்ற ஆரம்பித்தார்கள் என்று கூட சொல்லலாம். ஆகம விதிகளின்படி முறையான வழிபாடுகளும் ஆரம்பித்தன. முதலில் ஸ்ரீனிவாஸ ஸகர்ஸநாமம் எழுதப்பட்டு ஓதப்பட்டு அர்ச்சனையை ஆரம்பித்ததும் 1491 ஆம் வருடம்தான் என்றொரு கல்வெட்டு சொல்கிறது. இந்த அர்ச்சனையைப் பற்றிய இன்னொரு கல்வெட்டு ஸ்ரீகிருஷ்ணதேவராயர் காலத்தில் அதாவது 1517 ஆம் ஆண்டும் ஒரு கல்வெட்டு சொல்கிறது.

ஆண்டு: 1517,

காலம்: ஸ்ரீகிருஷ்ணதேவராயரின் 8ஆம் ஆண்டு.

விஷயம்: ஒவ்வொரு நாளும் சகஸ்ரநாம அர்ச்சனைக்குப் பிறகு பிரசாதமாக நான்கு நாழி நெய், தேவைப்படும் அரிசி, பச்சைப் பருப்பு, உப்பு, மிளகு, தயிர் போன்றவை முறையே பயன்படுத்திக் கொள்ள 5000 குழி நிலங்கள் நிவந்தனமாக திருமலையானுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. இந்த விளைநிலங்களில் இருந்து கிடைக்கும் வருவாயை சூரி்யனும் சந்திரனும் உள்ளவரை ஒவ்வொரு நாளும் சகஸ்ரநாமம் பூஜைக்குப் பிறகு பிரசாத செலவுகளுக்காக பயன்படுத்தவேண்டும்.

இன்றும் கூட அதிகாலை தரிசனம் செய்து வருவோருக்கு பொங்கல், தயிர்சாதம் போன்றவை கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது. ஒரு நல்ல அரசனின் கோரிக்கை இத்தனை நாட்களாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. இனியும் நீடிக்கும்.

உலகையே காத்தருளும் திருவேங்கடமுடையானை தரிசிக்க எந்த பக்தருக்குத்தான் இஷ்டம் இருக்காது. ஆனால் அவனோ உயரத்தே மலை மீது கோயில் கொண்டவன். கஷ்டப்பட்டு மலை ஏறி வரும் அடியவர் கூட்டம் வயிறார சாப்பிடுவதற்கு எந்தக் குறையும் இருக்கக்கூடாது என்பதில் பழங்காலத்து அரசர்கள் மிகவும் சிரத்தையுடன் இருந்தார்கள். உற்சவகாலங்களில் அன்னதானம் என்பது மிகப் பெரிய புண்ணிய காரியமாக பழங்காலத்திலிருந்து நம்பப்பட்டு செயல்பட்டு வந்தாலும், இந்த அன்னதானமானது இன்னொரு வகையில் (பொதுவாக பசியால் வாடும் )ஏழைகளின் பசியை சில நாட்களாவது தீர்க்கும் எனப் பார்க்கும்போது அன்னதானத்தின் உயர்வை நம்மால் உணரமுடியும்.

(pictures courtesy: TTD.)

Saturday, February 5, 2011

Aduththa Veettil Oru Arputha Manithar

அடுத்தவீட்டில் ஒரு அற்புத மனிதர்:



உன்னால் முடியும் தம்பி எனும் ஒரு படம், நல்ல படம், சமுதாய நோக்கோடு எடுக்கப்பட்ட சில படங்களில் ஒன்று. இதன் கதை சினிமாவுக்காக தயாரிக்கப்பட்ட கதை. ஒரு இளைஞன் மக்கள் சேவையே மகேசன் சேவை என்று சொல்ல, இளஞனின் தந்தை மறுக்க, சில பல உணர்ச்சி வசமான வசனங்கள், காட்சிகள், தியாகங்கள் என கதை இளைஞனுக்கு சாதகமாக சுபமாக முடியும். இது தெலுங்கில் முதல்முதலாக சிரஞ்சீவியை வைத்து எடுக்கப்பட்டு வெற்றியைக் கண்ட இயக்குநர் தமிழிலும் கமலஹாசனை வைத்து எடுத்தார். .

சரி, விஷயத்துக்கு வருவோம். இந்தக் கதையில் நடப்பதாகச் சொல்லப்பட்ட விஷயங்கள் யாவும் நடைமுறை வாழ்க்கையில் சாத்தியமானதா என்றால் உண்மையான பதில் இன்றைய சூழலில் இந்த நாட்டில் இப்படியெல்லாம் சாத்தியமில்லை என்றுதான் வரும். ஆனால் திரையில் வரும் இந்த உணர்ச்சிவசப்படும் சம்பவங்கள் மற்றும் வசனங்கள் இவை யாவும் தவிர்த்து உண்மையாகவே சமுதாயத்துக்கு நல்லதொரு சேவை செய்யவேண்டுமென களத்தில் குதித்து பல்வேறு சோதனைகளைக் கடந்து இன்னமும் தம் வாழ்க்கையையே இந்த சமுதாய முன்னேற்றத்துக்காக அர்ப்பணித்த மாமனிதர் ஒருவரை சமீபத்தில் சந்தித்த அனுபவம்தான் இந்தப் பதிவு.

எழுபது வயது நிரம்பிய இளைஞர் திரு பரமேஸ்வர ராவ். பாகவத சாரிட்டி டிரஸ்ட் எனும் பெயரில் மிகப் பெரிய விவசாயப் பண்ணையை உருவாக்கிக்கொடுத்த இவர் கதையையே சற்று சினிமாவுக்காக ஏற்றபடியாக மாற்றி திரைப்படம் எடுத்தார்கள் என்ற விஷயம் எல்லோருக்குமே (இந்த பிராந்தியத்தில்) தெரிந்த விஷயம்தான்.

விசாகப்பட்டினம்-சென்னை மார்க்கத்தில் விசாகப்பட்டினம் நகரத்திலிருந்து சுமார் 60 கி.மீ தூரத்தில் பஞ்சதாரா எனும் ஊரில் அழகான குடிரம் அமைத்துக் கொண்டு, ஒரு உயர்நிலைப்பள்ளியையும் அருகே கட்டிக்கொண்டு, நாளைய நல்ல இளைஞ்ர்களை இங்கே உருவாக்கிக் கொண்டு வரும் இந்த மகாமனிதரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் பள்ளி அருகேயே ஒரு பழைய கோவில் ஒன்று உள்ளது. சுமார் ஆயிரம் வருடகாலம் பழமையானது. சிவனுக்காக ஒரு சில யாதவகுல அரசர்களும், போயகுல வீரர்களும் நிர்மாணித்த கோவிலுக்கு 1967 ஆம் ஆண்டு வனபோஜனம் செய்வதற்காக நண்பர்கள், உறவினர்களோடு வந்தவர் பரமேஸ்வர ராவ். அப்போதே அவர் அமெரிக்கவாசி. வந்தவர் அங்குள்ள கோயிலின் பழமை பாதுகாக்கப்படாமல் பாழடைந்து வரும் நிலை அவருக்கு மிக வருத்தமளிக்க,அரசாங்கங்களின்(மத்திய-மாநில) அதிகாரவர்க்கம் பழைமையின் பவித்ரத்தில் ஒளிந்து கொண்டு யாரும் அந்தக் கோயிலை அண்டவிடாமல் செய்தது - அதாவது எவ்வித மாறுதலும் செய்யக்கூடாது எனும் தடையைப் போட்டது (இன்னமும் அப்படித்தான்). அதன் அருகேயே ஒரு கணப்தி கோயில் நிர்மாணித்தால் நன்மை பயக்கும் என சிலர் கூறிய யோசனையின் படி அந்தக் காலத்திலேயே ரூ 22 லட்சம் செலவில் திவிமுகவிநாயகர் கோவிலை நிர்மாணித்தார்.
(சமீபத்தில் கட்டப்பட்ட புதிய கோயிலும் அதன் பின்னே பழைய கோயிலும்)

அத்தோடு அங்கு சுற்றுச் சூழல் மலையும் வளமான நிலங்களும் உள்ள இடங்களை விளைநிலங்களாக மக்கள் சரியாகப் பயன் படுத்திக் கொள்ளாததும், கல்வி வசதி இல்லாமையும் பரமேஸ்வர ராவை யோசிக்க வைத்தன. இந்த நிலையைப் பார்த்து ஏதும் செய்யமுடியாமல் தமக்குள்ளே வருத்தப்படுவதைக் காட்டிலும் அவரால் முடிந்தவரை தாமாகவே களத்துள் இறங்கி களப் பணி செய்வதன் மூலம்தான் வெளி உலகத்துக்கு சேவையின் பயனை எடுத்துச் செல்லமுடியும் என்பதை உணர்ந்தார். தாம் அதிகம் சம்பாதித்துக் கொண்டிருந்த வெளிநாட்டு வேலையையும் வெளிநாட்டுக் குடிமகன் என்ற கௌரவத்தையும் உதறிவிட்டு தான் பிறந்த மண்ணுக்கு நிரந்தரமாகக் குடிவந்ததோடு மக்களோடு மக்களாக ஒன்றிப்போய் தம் செல்வத்தையும் பகிர்ந்து கொண்டு அவர்கள் முன்னேற்றத்துக்காக பாடுபட ஆரம்பித்தார்.’சுவித்யா’ எனும் பெயரில் தரமான கல்வியை சுற்றுப்புற ஜில்லாக்களில் வாழும் ஏழை மாணவர்களுக்காக கட்டினார். இங்கே இப்போது சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட ஏழை மாணவர்கள் இங்கேயே தங்கியிருந்து கல்வி கற்று வருகின்றனர். கல்வி என்றால் சாதாரணக் கல்வியல்ல. கலையோடு, நம் நாட்டின் தொன்மையையும் சிறப்பையும் பால பருவத்திலிருந்தே அவர்களுக்குப் போதித்து வரும் கல்வி. அந்தக் குழந்தைகளைப் பார்க்கும்போது அவர்கள் முகத்தில் சந்தோஷத்தையும், கவலையில்லா பருவத்தில் நேர்த்தியான கல்வியைப் பயின்று வரும் ஆர்வத்தையும் பார்க்கும்போது நமக்கும் அந்த மகிழ்ச்சி தொற்றிக் கொண்டுவிடுகிறது.



பரவேஸ்வரராவ் பரந்த பார்வையும் ஜாதிமதபேதமில்லா சேவையும் எத்தனையோ நல்லவர்களை அவர் பக்கம் வரவழைத்தது. அவர்களின் சேவைகளின் பலன் யாவும் சாதாரண மக்களுக்கே சென்று சேர்கின்றது. இதையெல்லாம் காணும்போது அரசாங்கங்களின் மக்கள் முன்னேற்ற திட்டங்கள், பட்ஜெட்டில் பல்லாயிரம் கோடி ஒதுக்கீடுகள், கடைசியில் அந்த ஒதுக்கீட்டில் 90 சத்வீதம் அரசியல்வாதிகளின் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் ஜேபிகளுக்கே செல்லும் என்பதையும் பார்க்கும்போது அரசாங்கத்தை நம்பி வாழும் பொதுமக்கள் எத்தனையோ நாட்களாக ஏமாற்றிவருகிறார்களே என்ற கவலையும் சேர்ந்தே வருகிறதுதான். அரசாங்கத்தைக் குறைந்த அளவே நம்பி, மிகுந்த அளவில் தாமாகவே செயல்படும்போது, அதன் பலன்கள் நேரடியாக அதுவும் ஏராளமானவையாக சாதாரண மக்களுக்குச் செல்கின்றன என்பதை தாம் வாழுகின்ற வாழ்க்கை மூலம் நிரூபித்துக் கொண்டிருப்பவர் பரமேஸ்வரராவ்.
(இப்போது ஏதோ சுமாராகக் காணப்படும் பழைய கால சிவன் கோயில்)

பரமேஸ்வரராவின் பூர்வீகம் தமிழகம்தான் என்பதை அவரே நேரடியாக என்னிடம் தெரிவித்தபோது எனக்குள் ஏகப்பட்ட வியப்பு. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்திலிருந்து வேதம் சொல்லப்படுவதற்காக சோழராசனின் கட்டளையால் ஒரு ஐந்து குடும்பம் இங்கு (ஆந்திரத்தில்) வந்ததாம். அந்த குடும்பத்தின் வாரிசுதான் நாங்கள் என்றார். இதைப் பற்றி என்னுடைய வம்சதாரா சரித்திர நாவலில் குறிப்பிட்டுள்ளதையும் நான் அவருடன் பகிர்ந்து கொண்டேன். குலோத்துங்கன் காலத்தில் இன்னும் ஏராளமான அளவில் தமிழ் அந்தணர் குடும்பங்கள் ஆந்திரத்துக்கு குடிபெயர்ந்ததைப் பற்றிய சரித்திர குறிப்புகள் உள்ளதையும், திராவிடர் எனும் குடும்பப்பெயருடன் அழைக்கப்படுவதையும், காஞ்சி பரமாச்சாரியார் குறித்து வைத்த சான்றோடு நான் குறிப்பிட்டபோது அவர் முகத்தில் இன்னும் மகிழ்ச்சி நிறைந்து காணப்படுவது தெரிந்தது.

ஆனாலும் தமிழ் தெலுங்கு எனும் வேற்றுமை எல்லாம் இவரிடத்தில் இல்லை. மானிடர் சேவையே மகேசன் சேவை எனும் குறிக்கோளுடன் வாழும் இவர் எல்லாவகை இனத்துக்கும் பொதுவானவர் அன்றோ..

(அவர் வாழும் குடீரம், அவரே வடிவமைத்துக் கட்டியது)

காலம் இப்போதெல்லாம் மிக மாறிவிட்டது. தற்போதைய சூழ்நிலைகள் மனிதரை சுயநலமிக்கவராக மாற்றிவிட்டது. இப்படி சுயநல வாழ்வை சூழ்நிலையாக கொண்ட நாம் எந்தவித சுயநலமும் இல்லாமல் சக மனிதரின் தேவைகளை உணர்ந்து அவர்களுக்கு உதவி செய்து கொண்டே வாழும் யாராவது ஒரு மனிதரைப் பார்த்தாலும் ஆச்சரியப்படுகிறோம். பரமேஸ்வரராவ் எனும் மாமனிதரைப் பற்றிய ஆச்சரியம் என் மனதை விட்டு அகலவே அகலாது. நான் அவரை போட்டோ எடுக்கவேண்டும் என்று சொன்னவுடன் தம்மருகே இரண்டு மாணவர்களைக் கூட்டிக்கொண்டார். குழந்தைகளுடன் இந்தப் பெரிய குழந்தையும் சேர்த்து காணும்போது கள்ளமில்லா உள்ளங்களின் கருணை மழையில் நனைந்தோம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

மனிதனாய் பிறந்து சக மனிதருக்கு உதவி செய்து வாழ்வது என்பதே இறைவன் விதித்த விதி என்பதை சொல்லாமல் சொல்லும் பரமேஸ்வரராவ் அவர்கள் இன்னமும் ஏராளமான ஆண்டுகள் வாழ்ந்து சேவை செய்யவேண்டுமென இறைவனை வேண்டுகிறோம்.

Monday, December 27, 2010

அடுத்தவீடும், தேவாரமும்


தேவலோகத்தில் சொர்க்கவாசல் அருகே மிக நீண்டதொரு வரிசையில் ஒவ்வொருவராக உள்ளே நுழைந்து கொண்டிருக்கிறார்கள். எல்லோருமே மாபெரும் புண்ணியம் செய்து இங்கு வந்தவர்கள். கர்ம பூமியில் அவர்கள் செய்த தான தருமங்கள், நல்ல செயல்கள், தீர்த்தயாத்திரைகள், உத்தமர்களுக்கு செய்த சேவைகள் என தங்கள் புண்ணியக் கணக்கை ஏராளமாகப் பெருக்கிக்கொண்டவர்கள். அன்று பார்த்து இந்திரனே வாசலுக்கு வந்து யாருக்காகவோ காத்திருப்பது போல இருந்ததால், அங்குள்ள வாசல் காக்கும் தேவதைகள் கூட மிகவும் சுறுசுறுப்பாக வரிசையில் நிற்கும் புண்ணியாத்மாக்களின் புண்ணிய செய்லகளை சற்று கத்தியே வாசித்து, மிக மிக மரியாதையுடன் அப்படிப்பட்டவர்களை ஒவ்வொருவராக அழைத்துச் சென்றனர். அப்படி உள்ளே சென்றவர்கள் கூட சற்றுப் பெருமிதமான பார்வையுடன் பின்னால் வரிசையில் நின்றவர்களைப் பார்த்துக்கொண்டே சென்றனர்.

திடீரென ஒரு பரபரப்பு. ஒருவர் மட்டும் வரிசையில் வராமல் ஏதோ இந்த தேவர் உலகுக்கே தாம்தான் தலைவன் என்பதைப் போல, வரிசைகளில் நிறுத்தப்படாமல் இரு தேவதைகள் புடைசூழ சொர்க்கத்தை நோக்கி வந்துகொண்டிந்தார். வாசலில் இதுவரைக் காத்திருந்த தேவேந்திரன் கூட தம் இரு கரங்களைக் கூப்பி அங்கு புதிதாக வந்தவரை தாமே தலை குனிய வரவேற்று உள்ளே அழைத்துச் செல்ல அதுவரை வரிசையில் காத்திருந்த புண்ணியாத்மாக்கள் ஆச்சரியப்பட்டனர். யார் இவரோ, தாங்கள் செய்ததை விட மிகப் பெரிய அளவில் என்ன புண்ணியம் இவர் செய்திருக்கப்போகிறார், அப்படிப்பட்ட புண்ணியம் என்பது ஏதேனும் உண்டோ என்பதாக அவர்கள் பார்வை இருந்தது. ஒரு புண்ணியாத்மா ஆற்றமுடியாமல் அந்த வாசல் தேவதையைப் பார்த்து தன் சந்தேகத்தைக் கேட்டே விட்டது.

“ஓ.. அதுவா.. இப்போது சென்றவர் நீங்கள் செய்த புண்ணியத்தை எல்லாம் தூக்கிச் சாப்பிடும்படியான புண்ணியம் செய்தவர். அதனால்தான் இத்தனை வரவேற்பு” என்றாள் அந்தத் தேவதை... “அப்படி என்ன புண்ணியம் அது” என்று அவர்கள் திருப்பி சற்று சத்தமாகக் கேட்கவே அந்தத் தேவதை அழகாக சிரித்து (தேவதை அல்லவா.. சிரிப்பு கூட அழகாகத்தான் இருக்கவேண்டும்!) விட்டு அவர்களைப் பார்த்துக் கூறியது.

“இவர் பூலோகத்தில் ஒரு அரை மணிநேரம் தேவாரப் பாடல்கள் யாரோ பாட, அப் பாடலில் தம்மை மறந்து, லயித்து, பரவசமாகி, மனமுருகக் கேட்டவர்.. அப்படிக் கேட்டதால் இப்படிப்பட்ட புண்ணியத்தைப் பெற்றிருக்கிறார்” என்று சொல்லிவிட்டு தன் வேலையில் கவனம் செலுத்தினாள் அந்த அழகுத் தேவதை.

இந்தக் கதை நிஜமோ, கற்பனையோ, கதை எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் தேவாரப்பாடல்கள் என வரும்போது அத்துடன் அவைகள் மூலத்துடன் பெற்ற பண்ணோடு இசைந்து பாடும்போது, அந்தப் பாடல்களை மெய்ம்மறந்து கேட்டுக் கொண்டிருக்கும் சுகமே சுகம்.. இதற்கு ஈடு இணை ஏதுமுண்டோ...

இப்படித்தான் கேட்கவைத்தது சிவத்திரு சண்முக சுந்தர தேசிகர் நேற்றைய ஞாயிறன்று விசாகையில் பாடிய தேவாரப் பாடல்கள்.

அவ்வப்போது விசாகைக்கும் இப்படிப்பட்ட அதிருஷ்டங்கள் அடிப்பதுண்டு என்றுதான் நினைத்து மகிழ்ந்தோம். பழனி தண்டாயுதபாணித் தெய்வத் திருக்கொயிலில் ஓதுவாராக இருந்த சண்முக சுந்தர தேசிகரின் கணீர் எனும் குரலில் தேவாரம் ஓதப்பட்டு அதன் மந்திர ஒலிக் கற்றைகள் கேட்டுக் கொண்டிருந்தோர் அனைவரின் இதயங்களையும் ‘பசக்’ என பற்றிக் கொண்டு மனங்களை விட்டு இனியும் அகலமாட்டோம் என அங்கேயே நின்றுவிட்டன.

தேவாரப் பாடல்கள் மட்டுமே தமிழில், தமிழ் என்றல்ல, எந்த மொழியை எடுத்துக் கொண்டாலும் சரி, பண்டைய பாடல்களில் பண்ணோடு நமக்குக் கிடைத்தவை. எத்தனையோ தேவாரப் பாடல்கள் மனிதகுலத்துக்கு மருந்தாக வந்தவை. மாண்டுபோன உயிர்களை மீட்டுக் கொண்டு வந்தவை. சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவருமே இப்படி மானவ தர்மத்தைக் காக்க கூட்டை விட்டுப் பறந்துபோன உயிர்களைத் திரும்பப் பிடித்து கூட்டுக்குள் அடைத்து அற்புதம் செய்தவர்கள். ஒவ்வொரு பாடலுமே ஒரு மந்திரம். செல்வத்தை அளிப்பவை. நோயைத் தீர்க்கும் அருமருந்தாக செயல்பட்டவை. மக்கள் மத்தியிலே எடுத்துச் செல்லப்பட்டு பாடப்பட்டவை. பாடும் மக்கள் ஒவ்வொரிடமும் மனித மேம்பாட்டை வரவழைப்பவை. எந்த எதிர்பார்ப்பும் வேண்டாம்.. தேவாரத்தைப் பாடுங்கள். மனம் கனியப் பாடுங்கள் உங்கள் உள்ளத்தே எழும் மாற்றத்தைக் காணலாம் எனத் தெளிய வைக்கும் உன்னதப் பாடல்கள்.

இப்படிப்பட்ட தேவாரத்தைத் தெலுங்கு மண்ணுக்கு எடுத்து வரவேண்டும் என்று ஆசைப்பட்டவன்.. ஆனால் எனக்கு முன்னமே தேவாரத்தை, தெலுங்குக்கு மட்டுமல்லாமல்,உலகில் பேசும் மொழி அத்தனையிலும் கொண்டுவரவேண்டுமென ஆசைப்பட்டு அதை மிக வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் ஒரு ‘சிவகணம்’ ஒன்று சென்னையில் உள்ளது. அந்த சிவகணத்தின் பெயர் மறவன்புலவு சச்சிதானந்தம். ஈழத்தைச் சேர்ந்த இந்த பெரியாரின் செயல் மிக மௌனமாக ஆனால் கச்சிதமாகவும், சுயநலமற்ற சேவையாகவும் கடந்த இருபது வருடங்களாக தொடர்ந்து நடந்து வருவதை நினைத்துப் பார்க்கும்போது, ஈசன் சச்சிதானந்தனாரின் சேவையை ‘நேரம்’ பார்த்துதான் தொடங்கியுள்ளான் என்று தெரிகிறது, அவர் மேற்பார்வையில் துவக்கப்பட்ட தளம்தான் தேவாரம்.ஆர்க் (www.thevaaram.org) ஒவ்வொரு நாளும் உலகின் ஒவ்வொரு மூலையிலும் ஆயிரக்கணக்கில் இந்தத் தளத்தின் கதவுகள் தட்டப்படுகின்றன. தேவாரம் செவிக்கு இசை மழையாகவும், கண்களுக்கு எழுத்தாக, பொழிப்புரையாக, விளக்கவுரையாகவும் பொழிந்து பக்தர்கள் இதயத்தை ந்னைத்துக் கொண்டே இருக்கிறது, இன்றைய கணக்கெடுப்பின்படி ஒரு நாளில் இருபதினாயிரத்துக்கும் மேற்பட்ட ஹிட்ஸ் கொண்ட தளமாக இந்த தேவாரத் தளம் இருப்பதில் மிகப் பெருமிதம்தான்.
. (சமீபத்தில் டில்லியில் சத்திதானந்தரை கௌரவிக்கிறார் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலம்)

தேவாரம் தெலுங்கில் கொண்டுவரப்படவேண்டும் என்பதில் நாங்கள் இருவரும் இரண்டு வருடங்களாகவே தீவிரமாக உள்ளோம். அதற்கான மொழிபெயர்ப்பு பணிகளையும் எப்போதோ ஆரம்பித்துவிட்டாலும் நிதி விஷயத்தில் திருமலா திருப்பதி தேவஸ்தானத்தினருக்கு விண்ணப்பம் செய்திருந்தோம். முன்னாள் தலைவர் ஆதிகேசவுலு நாயுடு பரிபூரணமாக சம்மதித்து எங்களை இந்து தர்ம பிரசார சபையிடம் பரிந்துரைத்தார். அவர்களுடன் சேர்ந்து திருப்பதியில் கூடும்போது சபைத் தலைவரிடம் ஏறத்தாழ 20 திருமுறைப் புத்தகங்களை கண்காட்சி போல வைத்துக் காண்பித்தார் மறவன்புலவார். இத்தனையும் தெலுங்கிலா என்று ஆச்சரியத்துடன் கேட்டார்கள்.. தமிழில் தேவாரத்துக்கு உள்ள பெருமையை எடுத்துச் சொன்னோம். நமசிவாய என ஓதினால் போதாதா.. இத்தனை பாடல்கள் அவசியமா என்று ஒருவர் கேட்டார். ’காதலாகி கசிந்து’ பாடலை அங்கு பாடினோம்.. அதைத் தெலுங்கு மொழியில் எடுத்துச் சொன்னோம். இத்தனை விதமாகப் பாடி நமசிவாய என இறைவனை அழைக்கும்போது இறைவன் மட்டுமல்ல, பாடும் பக்தரும் உருகுவாரே’ என்றோம். அவர்களுக்குப் புரிந்தது.

சமீபத்தில் திருவேங்கடத்தானும் தன் கருணைமழையைப் பொழிந்துள்ளான். ஆமாம். தேவாரம் தெலுங்கில் மொழி பெயர்க்க எல்லா நிதி உதவிகளையும் திருமலா திருப்பதி தேவஸ்தானம் செய்வதாக ஒப்புக் கொண்டு கட்டளையும் கொடுத்துவிட்டதால் தற்சமயம் பணிகள் மிக மும்முரமாக நடைபெறுகின்றன. சில முக்கிய சான்றோர்கள் தற்சமயம் மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முதல் திருமுறைக்கான 1469 பாடல்களின் மொழிபெயர்ப்பும் முடிவடைந்த நிலையில் உள்ளன. மார்ச் மாதத்துக்குள் நான்காம் திருமுறை, ஏழாம் திருமுறை, எட்டாம் திருமுறை, பத்தாம் திருமுறையின் ஒரு பகுதி முடிவடையும் என எதிர்பார்க்கின்றோம். இரண்டு வருட காலத்தில் மொத்தம் உள்ள 12 திருமுறைகளில் பாடப்பட்ட அரிய மந்திரப் பாடல்களான 18266 பாடல்களும் தெலுங்கில் முற்றுப் பெற வேண்டும். எதற்காக இதைப் பணித்தானோ, அவனே இதை முடித்து வைப்பான் என்று தெரியும்.

ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எனக்கும் இந்த மாபெரும் புனிதப் பணியில் பங்கு கிடைக்கச் செய்த ஈசனை என்ன சொல்லிப் போற்றுவது எனத் தெரியவில்லை. நம்மாழ்வார் பெருமாளைப் போற்றுவார்.. ’எத்தனையோ பரமகவிகள் இருக்க என்னைத் தேர்ந்தெடுத்து உன்னைப் பாடுவித்தாயே’ என்று ஆச்சரியப்படுவார். அப்படித்தான் அடியேனும் ஈசனை நினைத்துப் பார்க்கின்றேன்.. இந்தச் செய்ல் இந்தப் பிறவியில் எனக்குக் கிடைத்தப் பெரும் பேறு.. அதை நிறைவேற்ற அவன் அருள் பெற, அவன் அருளாலே அவன் தாள் வணங்கி...

காதலாகி
கசிந்து
கண்ணீர்மல்கி
ஓதுவார்தமை
நன்னெறிக்குய்ப்பது
வேதம் நான்கிலும்
மெய்ப்பொருளாவது
நாதன்நாமம்
நமசிவாயமே..

Saturday, November 27, 2010

விசாகேஸ்வரா.. மயில்வேலவனே .. முருகா.. சுப்ரமணியா

முருகன் தமிழ்க்கடவுள் என்பதை சங்ககாலம் முதலே நாம் பெருமையுடன் சொல்லிக் கொண்டு வருகிறோம். செந்திலாண்டவனே குமரிக்கண்டத்தின் கண்கண்ட தெய்வம் என சில ஆய்வாளர்களும் சொல்லி வருகின்றனர். கல்தோன்றி மண்தோன்றா காலத்து முன்தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி என்றால் அது முருகன் என்ற முதன்மையிலிருந்துதான் ஆரம்பமானது என்பதாக பெருமையோடு சொல்லும் முருகபக்தர்கள் அநேகர். தமிழன் எங்கெல்லாம் காடு மலை க்டந்தும் கடல்கடந்தும் சென்றாலும் முருகனை தன் நெஞ்சத்துள் மட்டுமல்லாமல் வெளியேயும் அவனுக்கு கோயில் அமைத்து காலம் காலமாக வழிபடுவது புதிய செய்தியுமல்ல. முருகனே முழுமுதற்கடவுள், அவனே தாயாய், தந்தையாய், மாமனாய், வேறு பல ரூப விகற்பதாய், கூறறியதாய் மாறி மாறி உலகெங்கும் ஆட்சி செய்து வருவதாக அருணகிரிநாதரின் திருப்புகழ் விலாவாரியாக நமக்கு விவரிக்கும். முருகன் என்ற ஒரு சொல்லில் உலகில் அசையும் அசையா அத்தனையுமே அடக்கம் என்பதாக திருப்புகழ் பாடும் பாசுரங்களை எத்தனையோ சித்தர்கள் தமிழில் எழுதி வைத்திருக்கின்றனர். முருகா என்று ஓதுவார்முன் வல்வினையும் வருத்தும் கிரகமும் எதிர்தான் நிற்குமோ என்று நாம் நிதமும் முருகனின் நாமத்தைச் சொல்லிக் கொண்டே வருகிறோம். உலகத்தின் ஓங்காரமந்திரமாக ஓம் எனும் பிரவணத்தைக் கொடுத்து தந்தைக்கே குருவாய் உருமாறி அந்த ஓங்காரமந்திரத்துள் உலகத்தையே அருளாட்சி செய்த முருகனை போற்றாத புராணங்களே இல்லை எனச் சொல்லிவிடலாம். காளிதாசனை மிகவும் கவர்ந்தவள் காளி என்றால் அந்தக் காளியின் புத்திரன் முருகனோ அவனை முழுதும் ஆக்கிரமித்துக் கொண்டதால் அல்லவோ குமாரசம்பவம் எனும் அருமையான காவியம் நம்க்குக் கிடைத்தது.

வடநாடுகளில் குமாரசுவாமி எனவும் ஸ்கந்தன் எனவும் ஷண்முகம் எனவும், கார்த்திகேயன் எனவும் மனதார பக்தர்களால் ஓதப்படும் முருகனை நாம் முருகா என்று ஓதும்போது கிடைக்கும் இன்பமே தனிதான். முருகநாமம் நம் தமிழருக்கு என்றுமே ஆனந்தம் தரக்கூடியதுதான். நாம் முருகா என்று சொல்லிவிட்டு மனதில் அவனை ஒரு கணம் நினைத்து அதையும் உள்ளுக்குள் உணரும் தருணம் ஏற்படும்போது கிடைக்கும் திருப்திக்கு ஈடு இணை ஏது,,

அப்படிப்பட்ட முருகனை இந்த ஆந்திரதேசமும் நிச்சயமாக கவர்ந்திருக்கவேண்டும்தான். குன்று இருக்குமிடமெல்லாம் குமரன் இருக்குமிடமாக ஏ.பி.என் திருவிளையாடல் திரைப்படத்தில் அவ்வையார் மூலம் சொல்லுவார். விஜயவாடா இந்திரகிலாத்திரி மலையில்தான் தனிக்கோயில் கொண்ட முருகனை அடியேன் முதன் முதலாக சந்தித்தேன்.. (1978) என் மகிழ்ச்சியில் அவனைத் தமிழ்க்கடலாக பார்த்ததால் அந்தக் கோயில் மலைப்பாறையில் ‘அருள்மிகு வள்ளி தெய்வயானை ஸமேத சுப்பிரமணிய ஸ்வாமி தேவஸ்தானம்’ என வெள்ளைப் பெயிண்டால் தமிழில் எழுதவைத்தது. அதனால் எழுந்த சில பரபரப்புகள் அதன் பிறகு நடந்த கோலத்தையும், தகராறுகளையும் ஏற்கனவே ஒரு பதிவில் (வம்சதாராவில்) எழுதி இருக்கிறேன். முருகன் அவன் திருவுருவைப் பார்க்கும்போதே உள்ளம் சிலிர்சிலிர்க்கும். அவன் அப்படித்தான். அதுவும் உரிமையோடு அவனை சொந்தம் கொண்டாடுவோரை அவன் எப்போதும் கைவிடுவதே இல்லை என்பதை அங்கு நேரிலேயே அனுபவித்தேன்.

ஆனால் முருகனின் ஆந்திரதேசத்து வரலாறு மிக மிகப் பழையானது. ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கும் முன்பே கட்டப்பட்ட பஞ்சாராமம் (வேங்கியில் ஐந்து இடங்களில் சிவனுக்காக எடுக்கப்பட்ட கற்கோயில்) திருக்கோயில்களில் முருகனுக்கு சிறப்பிடம் உண்டு. சாமல்கோட் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள சிவஸ்தலம் குமாரராமம் திருக்கோயில் என்றே இன்னமும் அழைக்கப்படுவது மிகவும் விசேஷன். ஏனைய நான்கு திருக்கோயில்களில் குமரனுக்கு தனி சந்நிதி உண்டு. இவை கட்டி முடிக்கப்பட்டு 250 ஆண்டுகள் கழித்து முதல் கலிங்கப் போரில் கலந்துகொண்ட விக்கிரம சோழன் 1100 ஆம் ஆண்டில் ஆந்திராவின் கீழைக்கோடியில் உள்ள ஸ்ரீமுகலிங்கம் திருக்கோயிலில் ஒரு சந்நிதி புதிதாக சேர்க்கவைத்து அங்கு முருகனை பிரதிஷ்டை செய்வித்ததாக ஒட்டக்கூத்தர் பாடல் மூலம் தெரியவரும். அந்த முருகன் கையில் ஒரு கொம்புடன் ஔவைக்கு தரிசனம் தந்தவிதமான கோலத்துடன் (சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டு தமிழ் மூதாட்டியை ஒரு கலக்கு கலக்கிய அந்த சுட்டிப் பையன் போலவே) இருக்கிறான். மேகங்கள் மேலே மூடிக்கொண்டிருக்கும் ஒரு அழகான பகல் பொழுதில் சின்ன சின்ன மழைத்துளிகள் மேலே பட பட அதை அப்படியே தலைமேல ஆனந்தமாக வாங்கிகொண்டே அந்த அழகனை அப்படியே மனதுக்குள்ளே படம் பிடித்துக்கொண்டதை மறக்கமுடியாதுதான்.

இரண்டாம் கலிங்கப்போர் இந்தப் பிராந்தியத்தில் மிகக் கடுமையாக நிகழ்ந்ததை நம் தீந்தமிழ் கலிங்கத்துப் பரணி ஒன்றே பறை சாட்டினாலும் அந்தப் படையை வெற்றிகரமாக முடித்து விட்டு குலோத்துங்க அரசன் கட்டளையின் பேரில் இன்றைய விசாகப்பட்டினத்துப் பிராந்தியத்தே கடலருகே முருகனுக்கு ஒரு கோயில் எடுப்பித்ததாகவும், விசாகை நட்சிரத்துக்கு உரியவனான முருகனுக்கு விசாகேஸ்வரன் என நாமமிட்டதாகவும் எத்தனையோ செய்திகள் இந்த பிராந்தியத்தில் உள்ளன.

இங்குள்ள கடலோரப்பகுதிகள் சற்று விசித்திரமானவை. கடல் அரிப்புகள் ஒருகாலத்தில் மிக அதிகமான அளவில் நிலத்தை அழித்து ஊருக்குள் நீர் புகுந்துகொண்டிருக்கவேண்டும் என்பதை இங்குள்ள நில அமைப்பைக் கொண்டே எத்தனையோ அறிஞர்கள் கட்டுரை வடித்துள்ளனர். காலவட்டத்தில் 900 ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பப்பட்ட அப்போதைய கடலோரக் கோயில், முருகனுக்காக தமிழரசனால் எழுப்பப்பட்ட கற்கோயில் கடல் கொண்டிருக்க வாய்ப்புகள் அதிகம் என்று திரு நரசய்யா போன்ற கடல்சார்அறிஞர்கள் கூட கூறி வருகிறார்கள். ஆந்திர பல்கலைக்கழகத்தில் இந்தக் கடல்சார் கழகத்தில் ஒரு பேராசிரியர் கங்காதர் என்று பெயர், அவருக்கு நிச்சயமான நம்பிக்கை, இந்த விசாகேஸ்வரர் கோயில் கடல் கொண்ட கோயில்தான், எப்படியும் மீட்டு விடுவோம் என்று அவ்வப்போது சபைகளில் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் பேசிவருபவர். திரு கங்காதரரின் முயற்சியால் இந்திய கடற்படையில் நீரில் மூழ்கி தேடும் பயிற்சி பெற்ற வீரர்களைக் கொண்டு ஒரு சில வாரங்கள் கூட இந்தத் தேடல் முயற்சி செய்யப்பட்டது.

கப்பற்படையைச் சேர்ந்த கமாண்டர் சுரேஷ்குமார் மிகச் சிறந்த ஆழ்கடல் வீரர். தமிழர். அவர் இந்தக் குழுவில் மிக ஆர்வத்துடன் பங்கு கொண்டவர். அதுவும் நம் தமிழ்க்கடவுள் முருகன் அவன் கோயிலுக்காக தேடுகிறோம் என்பதில் அவருக்கு படு உற்சாகமாம். சமீபத்தில் சுரேஷ் குமாரை எதேச்சையாகப் பார்த்துப் பேசியபோதுதான் அவரும் கலந்துகொண்டது எனக்குத் தெரியவந்தது. ஆனால் ’இலக்கு’ இல்லாமல் தேடியதால் முயற்சி வீணானது சார்.. என்றார்.

ஆனாலும் விசாகப்பட்டினம் எனும் தமிழ்ப்பெயரைக் கொண்ட இந்த நகரில் நிச்சயமாக விசாகேஸ்வரனின் கோயில் இருந்ததுதான் காரணப்பெயர் என்கின்றனர் நகரத்துப் பெரிசுகள்.
என்றாலும் ஒருநாள் விசாகேஸ்வரன் நிச்சயம் நம் மீது கருணை காட்டி தன்னை வெளிப்படுத்திக் கொள்வான் என்று நம்புபவர்களும் நிறைய உண்டு.

அந்த விசாகேஸ்வரன் வராவிட்டால் என்ன, இல்லை அவன் இங்கு நகரத்துக்கு வரும் வரை என்னைப் பாருங்கள் என்று இன்னொரு முருகன் இங்கே நகர மக்கள் எல்லோரையும் கவர்ந்து வருகிறான். சங்கரமடம் அமைந்த வளாகத்தில் தனியே தனக்கென ஒரு கோயில் அமைத்துக் கொண்டு மயில் வாகனனாகக் காட்சி தருபவன். ம்யிலோடும் வேலும் சேரும்போது அவனுடைய காட்சி கண்களுக்கும் மனதுக்கும் மிக இனிமையாக இருப்பதால் அவனுக்கு ‘மயில்வேலவன்’ எனப் பெயர் சூட்டி அந்தப் பெயரிலேயே அவனைப் பூசை செய்து வருகிறேன். மயில் வேலவன் இப்போதெல்லாம் படு பிஸி. மக்களிடையே பிரச்னைகள் ஏராளம்.. நாளுக்கு நாள் பெருகிவரும் கஷ்டங்கள் பக்தருக்கு தீராச் சோதனையாக மாறிவரும் காலத்தில் தம் கஷ்டத்தைப் போக்க இவனைத் தவிர வேறு யார் என்ற அளவில் அவனைத் தேடி வரும் பக்தர்கள் மிக அதிகமாகி விட்டார்கள். செவ்வாய் நாயகனான மயில்வேலவனுக்கு செவ்வாய்க் கிழமைதோறும் நடக்கும் அபிஷேகங்கள் முன்னூறைத் தாண்டிவிடுகின்றன. அப்படியும் எனக்கும் அவனுக்கும் உள்ள உறவே தனி.. ’உன்னையன்றி எனக்கு யார் முருகா’ என்று ’சோப்’ போட்டுக் கொண்டே போவதால் ஒருவேளை அவன் மயங்கி விட்டதைப் போல காட்சி தந்தாலும் எனக்கும் அவனுக்கும் உள்ள உள்ளார்ந்த இணைப்பை வர்ணிக்க முடியாதுதான். அவனுக்கு நிகர் அவன் ஒருவனேதான் அல்லவோ.. நாம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்,, அதுவும் அருணையார் சொல்லித் தந்ததுதான். எப்போதும் எந்தச் சமயத்திலும் அவன் நாமம எம் நாவில் உணர்வோடு இருக்க அவன் அருள் புரிய வேண்டும்.

முருகன் குமரன் குகனென்று மொழிந்
துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய்

Thursday, November 4, 2010

November One

நவம்பர் ஒன்று என்பது இது நாள் வரை ஆந்திர தேசத்தில் மிகப் பிரபலமாக இருந்ததுதான். ஆனால் எப்போது தெலுங்கானா கோஷம் வலுப்பெற்றதோ, அந்த நவம்பர் ஒன்று இன்று வலுவிழந்துகொண்டே வருகிறது.

1956 இல் மொழிவாரி மாநிலங்கள் இந்த நவம்பர் ஒன்றாம் நாள்தான் அதிகாரபூர்வமாக செயல்பட ஆரம்பித்தன. தமிழ்நாடு ‘மெட்ராஸ் மாநிலம்’ எனும் பெயரில் மிகப் பெரிய மாநிலமாக உண்மையான திராவிட மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, கொஞ்சம் ஒரியா என ஆறு மொழிகளும் பேசப்படும் திராவிட நிலமாக இருந்து வந்ததைப் பொறுக்காமல், அவரவர்களுக்கு, அவரவர் மொழிகளுக்கு அவரவர் நிலம் தேவை என்று பிரிக்கப்பட்ட நாள்.

1953/56 வரை நம் மாநிலம் உண்மையான திராவிட தேசமாக இருந்து வந்தது எவ்வளவு தூரம் நம் இளைய தலைமுறைக்குத் தெரியும் என்பது கண்டிபிடிப்பது சற்று கஷ்டம்தான். ஒரு கால கட்டத்தில் தெலுங்கும் தமிழும் கோலோச்சி ஒன்றுடன் ஒன்று உராய்ந்து கொண்டு காதல் பாட்டு பாடிக் கொண்டு இன்பமாய் பவனி வந்த நகரம்தான் சென்னை என்பது கூட தெரியுமோ தெரியாதோ.

ஆனாலும் யார் கண் பட்டதோ.. அல்லது தெலுங்கருக்கே தாங்கள் படும் இன்பம் கசந்ததோ என்னவோ, மொழி வாரியாகப் பிரித்துத் தா என்று கோஷம் போட்டு, ஒரு சிலர் உயிர்த்தியாகம் (நம் ஊரில் எல்லாம் உயிர்களின் விலை ரொம்ப சீப்) செய்து, ராஜாஜிக்கு அந்தச் சமயத்தில் எதிராக இருந்த ஸ்ரீமான் நேரு தான் நேராக மூதறிஞருடன் மோதாமல் காமராஜர் மூலமாக மோதி ஒப்புதல் அளித்து, எப்படியோ ஒரு கமிட்டி போட்டு, அந்தக் கமிட்டி மூலம மொழி வாரி மாநிலங்கள் என்று வாங்கியும் விட்டார்கள். ஐம்பத்திநான்கு ஆண்டுகள் ஓடியே விட்டன (கூடவே என் வயதோடு).

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியையோ, விவசாய உற்பத்தி வளர்ச்சியோ இந்த மொழிவாரி மாநிலங்கள் மெட்ராஸ் மாநிலத்திலிருந்து பிரிந்ததனால் எந்த சிறு அளவும் பாதிக்கவில்லை என்பது மிகப் பெரிய உண்மைதான். ஆனால் ஆந்திராவின் நிலைமை அப்படி அல்ல. என்று பிரிந்தார்களோ, அன்றிலிருந்து அவர்களுக்கு சோதனை மேல் சோதனைதான்.

ஆந்திரா நீர்வளமும், நில வளமும், மலை வளமும் கொண்ட பகுதி, இயற்கை அழகு கொஞ்சும் பிரதேசங்கள் இங்கு அதிகம். பொதுவாகவே மக்களில் பலர் அன்புக்கு அடிமை கொள்பவர்கள். இயற்கையை நேசித்து இயற்கையோடு ஒன்றிப் போய் வாழ்பவர்கள்.

ஆந்திராவை மூன்று பகுதிகாளாக எப்போதுமே பார்த்துப் பழகிவிட்டவர்கள் ஆந்திரர்கள். ராயலசீமா என தென் மேற்கு ஆந்திராவையும், கடற்கரையை ஒட்டிய மாவட்டங்களைச் சேர்த்து, கடற்கரை ஆந்திரா எனவும் வடக்குப் பகுதியை தெலுங்கானா என்றும் எப்போதும் பேசி வருபவர்கள், இந்தப் பேச்சு நாளடைவில் இன்னொரு மிகப் பெரிய பிரிவினைக்கு வழி வகுக்கும் எனத் தெரியாமல் காலத்தைக் கழித்து விட்டவர்கள்.

இன்னும் இரண்டு மாதங்கள்தாம். ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி தெலுங்கானாவுக்காக நிச்சயம் சாதகமாகத்தான் பரிந்துரைக்கும்.. எப்போது சிதம்பரனார் சென்ற ஆண்டுக் கடைசியில் தெலுங்கானா வரும், என்று முதலில் அறிவித்து வாபஸ் வாங்கினாரோ, அப்போதே மத்திய அரசு தெலுங்கானாவுக்கு சாதகமாகத்தான் இருக்கிறது என்பதும் தெரிந்த ரகசியம்தான்.

ஆந்திரர்கள் அதாவது கடற்கரை மற்றும் ராயலசீமா மக்கள் மட்டும் எல்லோரும் ஒன்றாய்தான் இருக்கவேண்டும் என்று வெளியே பேசினாலும் பிரிவு உறுதி என்பதில் மட்டும் நிச்சயமாகத்தான் இருக்கிறார்கள். வெளியே அப்படி பிரிவு பற்றிப் பேச வேண்டிய கட்டாயம் நேரும்போது, தெலுங்கானா பிரிந்துபோனால் பிரியட்டும், ஆனால் ஹைதராபாத் நிச்சயமாக எங்களுக்கும் தேவை என்பதிலும் கவனமாக நிர்ப்பந்தித்து வருகிறார்கள்.

மொழிவாரி மாநிலம் என்ற கோஷத்தில் பெறப்பட்ட தேசம் இரண்டாகப் போவது ஏறத்தாழ நிச்சயமாக்கப்பட்டதாகத்தான் எல்லோரும் சொல்கிறார்கள். ஹைதராபாத் விஷயம் கொஞ்சம் சாதகமாக அமையப் பேசித் தீர்த்துக் கொண்டால் இன்னமும் நலம் என்றே இரு தரப்பினரும் நினைக்கிறார்கள். ஆக ஒரே மொழி பேசும் மாநிலம் இரண்டாகப் போகிறது. இது ஒருவிதத்தில் வேதனைக்குரியதுதான். பிரிவு என்ற சொல்லே வேதனைதான்.

பிரிவு என மனதால் முடிவெடுக்கும்போது, வேறு சில பிரச்சினைகளையும் எதிர்கொள்ளவேண்டி இருக்கிறது. இந்த வருடம் நவம்பர் ஒன்றாம் நாளைக் கொண்டாடவே கூடாது என்று தெலுங்கானாக் காரர்கள் நிர்ப்பந்திக்க, ஏனைய ஆந்திரர்கள் இதைப் பற்றி எதிர்த்துப் பேசாமல் இருக்க, அரசாங்கம் மட்டும் ஏனோ தானோ என்று அந்த ஒன்றாம் நாளைக் கொண்டாடியது. ஒரு சில வருடங்களுக்கு முன்னால் நவம்பர் ஒன்று என்றால் இந்த மாநிலமே கலகலக்கும். அரசாங்க விழாவில் ஆளும் தலைவர்கள் ஆடம்பரமாக வார்த்தைகளை அள்ளி வீச ஒரு வாய்ப்பாகக் கருதுவர். இப்போது இவையெல்லாம் மிஸ்ஸிங்.

உத்தமர் காந்தியின் உத்தம சீடர் பொட்டி ஸ்ரீராமுலு. இவர் சொந்த வாழ்க்கை பெரும் சோகக்கதை. குழந்தை பிறந்தவுடனே மனைவி இறந்துவிட்டாள். பிறந்த குழந்தையும் கொஞ்சநாள் வாழ்வை முடித்துக் கொண்டு தாயோடு வானுலகில் சேர்ந்துகொண்டது. ஆனாலும் மனம் தளராதவர் தன் வாழ்க்கையை தேசத்துக்காகவே அர்ப்பணித்து காந்தியுடன் தன்னை சேர்த்துக் கொண்டவர். கொண்ட கொள்கையில் உறுதியானவர். ஒருமுறை காந்தியுடன் 29 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து சாதனை படைத்தவர் இவர். காந்தியே இவரைப் போல பத்து பேர் சேர்ந்தால் சுதந்திரம் எளிதில் கிடைத்துவிடும் என்று புகழ்ந்ததாக ‘டைம்’ பத்திரிகை சொல்கிறது. அப்படிப்பட்டவர் காந்தி இறந்தபின் ஆந்திரம் தனியாகச் செல்லவேண்டும் எனக் கேட்டது ஏன் என்பது புரியாத புதிர். கஷ்டப்பட்டு வாங்கிய சுதந்திரத் திருநாட்டில் இப்படி மொழிவாரி மாநிலங்களாக நாட்டைக் கூறு போட அவர் மறுபடியும் உண்ணாவிரதம் இருந்தது ஏன் என்ற கேள்விக்குப் பதில் இன்றுவரை இல்லைதான். அதுவும் பிடிவாதமாக பிரிந்து போகும் ஆந்திரத்துக்கு சென்னையை தலைநகராக்க வேண்டும் எனக் கேட்டவிதமும் அதற்காக சென்னையில் அவர் ஏறத்தாழ இரண்டு மாதங்கள் உண்ணாவிரதம் இருந்து இன்னுயிரைத் துறந்ததும் சற்று வேதனை தரக்கூடியதுதான்.

பொட்டி ஸ்ரீராமுலு இப்படி தன் உயிரைத் தியாகம் செய்து பெற்ற ஆந்திரத்தில் தற்சமயம் அந்த மகாமனிதருக்கே அவ்வளவு மரியாதைத் தரப்படுவதுமில்லை என்பதும் பெரிய சோகம்தான். ஹைதராபாதில் அவர் சிலைக்கு மாலையிட வேண்டுமென்றால் நிச்சயம் போலிஸ் பெடாலியனோடுதான் போகவேண்டும். மொழிவாரி மாநிலமாகப் பிரிந்திருக்க வேண்டாமோ என்றுதான் சரித்திரம் தெரிந்த பலரும் பேசுகின்றனர்.

இப்போதெல்லாம் இங்கு இருக்கும் பெரிசுகள் கொஞ்சம் வேதாந்தமாக மாறிவிட்டனர். இவர்கள் அந்தக் காலத்திலேயே மெட்ராஸ் மாநிலத்திலேயே எவ்வளவு அந்தஸ்த்தோடு இருந்தனர் என்பதை பட்டியல் போட்டுப் பேச ஆரம்பித்து விட்டனர். மெட்ராஸ் பிரிந்ததால் நஷ்டம் நமக்குத்தான் என்பதையும் அடித்துக் கூற ஆரம்பித்து விட்டனர். தெலுங்கும் தமிழும் கலந்து இருந்தால்தான் என்ன, குடி முழுகியா போய்விடும்.. இப்போதும் சென்னனயிலும் கோவையிலும் தெலுங்குக் காரர்கள் நன்றாக வாழவில்லையா.. அவர்களைப் போல நாமும் இல்லாமல் போய்விட்டோமே.. என்ன பெரிய மொழிவாரி மாநிலம்.. ஹைதராபாதில் இப்போதும் உருதுவுக்குதான் முதல் மரியாதை.. தெலுங்கும் ஹிந்தியும் தெலுங்கானா வட மாவட்டங்களில் கலந்து ஆட்சி செய்யவில்லையா.. எல்லோரும் சேர்ந்து இருக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சியே தனிதான்..

எது எப்படி ஆனாலும் மறுபடியும் தமிழ்நாட்டோடு சேரமுடியாது என்ற நிதர்சமும் இவர்களுக்குத் தெரியும். இருந்தாலும் சில வயது கடந்த பெரிசுகள் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே ‘அந்தக் காலத்திலே..’ என்று ஆரம்பிப்பார்களே, அதைப் போலத்தான் இதுவும் ஒரு அங்கலாய்ப்பாகத்தான் எடுத்துக் கொள்ளவேண்டும்..

தெலுங்கானாப் பிரிவினையாளர்கள் சொல்லித் தந்த பாடத்தால் 60 வருடங்களுக்குப் பிறகுதான் பிரிவினை என்ற ஒன்று எவ்வளவு தவறு என்பதே பலருக்கு உறைக்கிறது. இது பிற்காலத்தவருக்குப் பாடமாக அமையுமா என்பதை காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

அடுத்த வருடம் நவம்பர் ஒன்று என்பதை எப்படி எந்தவிதமாக கொண்டாடப்படும்.. என்பதையும் பொறுத்திருந்து பார்க்கவேண்டும்..

Wednesday, September 1, 2010

ஆந்திர பக்தி உலகின் ஒளிவிளக்கு




திவாகர்,
நான விசாகையில் இருந்த போது எனது வீட்டிலேயே எழுத்தாளர்கள் கூட்டம் ஒன்றை நடத்தினேன். நல்ல எழுத்தாளர்கள் வந்திருந்தனர். எனது நெருங்கிய இலக்கிய நண்பர் வாகாடி பாண்டுரங்கராவ், பராகோ, கோசனா, முதலியோர் வந்திருந்தனர். வாகாடி சாஹித்ய அகாதமிக்குப் பல தமிழ் நூல்களை தெலுங்கில் மொழிபெயர்த்தவர். என்னுடைய கதைகளைக் கூடத் தெலுங்கில் மொழிபெயர்த்தவர்.
இக்கூட்டம் நடந்தது 80களின் ஆரம்பத்தில். அப்போது சினிமாவில் தடம் வைத்திருந்த மிஸ்ரோவும் இருந்தார். (நினைத்தாலே இனிக்கும் படம்) நான் கூட்டம் ஆரம்பிக்கு முன்னர் டி. ஆர். மஹாலிங்கம் பாடிய பாரதி பாடல்களை எல். பி. ரெகார்ட் போட்டுக் காட்டியபோது அக்குரலை எல்லோரும் ரசித்தனர். பின்னர் கூட்டத்தில் கடவுள் பற்றிய சர்ச்சை எழுந்தது. தெலுங்கு எழுத்தாளர்களில் பலர் நாஸ்திகர்கள் என்பது அப்போது தான் தெரிந்தது. ரா வி (ரா. விசுவநாத சாஸ்திரி)யும் (தமிழில் அற்பஜீவி - வாசகர் வட்டம்) அவ்வழி நினைப்பவர்! அதிகமானவர்கள் பிராமணர்கள்! ஆச்சர்யமாக இருந்தது! தெளிவான சிந்தனை!
அவர்கள் சொன்ன அன்றைய கருத்துகளும் கிட்டத்தட்ட உங்கள் நண்பர் பிரம்மாஜி போன்றது தான்!

நரசய்யா
--------------------------------------------------------

இன்றைய தெலுங்கு எழுத்தாளர்களில் பாதிக்கும் மேலோர் நாத்திக சிந்தனை உடையவர்கள் என்ற கண்ணோட்டமாக நான் ‘அடுத்தவீட்டில்’ எழுதிய பதிவுக்கு ஆதரவு தந்து அங்கே பதித்த நரசய்யா அவர்களின் கடிதம் இது. திருமதி டாக்டர் பிரேமா நந்தகுமார் இதைப் பற்றி ஒரு கடிதம் எழுதும்போது நான் தெலுங்கு இலக்கிய உலகை இன்னமும் சரியாக அலசவேண்டும் என்றும் ஸ்ரீ ஸுப்ரஸன்னாச்சார்யா போன்றோர் தம் தெலுங்கு இலக்கியத்துக்காக சிறந்த சேவை செய்வதையும் குறிப்பிட்டிருந்தார். அதற்கேற்றவாறு சமீபத்தில் ஒரு சந்தர்ப்பம் அமைந்தது. ஏறத்தாழ நாத்திகவாதமே அல்லாத பக்தி இலக்கிய எழுத்தாளர்களின் சங்கமமான ஒரு தெலுங்கு இலக்கிய கூட்டம். அதுவும் மிகவும் பிரபலமான மகா பெரிசுகள், இவர்கள் தெலுங்குக்கு செய்த சேவை சாதாரணமானதல்ல. இவர்களில் சித்ரகவி ஆத்ரேயா நமது ஆப்தர். அவரது சுயசரிதை புத்தகம் ஒன்று தெலுங்கில் வெளியிடப்படுவதால், அதைப் பெறுவதற்குதான் அடியேனை அழைத்திருந்தார்கள்.

சித்ரகவி ஆத்ரேயா தெலுங்கு பத்திரிகைகளில் அடிக்கடி எழுதுகிறவர். மார்கழி மாதத்தில் திருப்பாவை உபன்யாஸமும் செய்வார். விசாகையில் பல்லாண்டு காலம் இருந்த இவர் தற்போது வசிப்பது பெங்களூரில். வயது 77. சிறந்த ஆன்மீகவாதி என்று சொல்லவே தேவையில்லை. கடந்த ஒரு வருடமாக ‘ஆந்திரஜோதி’ தினப்பத்திரிகையில் பிரபலமாக வந்து கொண்டிருக்கிற ‘தர்ம சந்தேக’க் கேள்விகளுக்கு பதில் எழுதுபவர்.

இவருடைய குருநாதரான ஸ்ரீபாஷ்யம் அப்பளாச்சார்ய சுவாமி விசாகப்பட்டினத்தில் இருந்துகொண்டு ஆந்திரமக்களுக்கு தெய்வானுக்ரஹத்தை திருப்பாவை மூலமும், ராமாயணம் மூலமும் பெற்றுத் தந்து புகழ்பெற்ற மகான். இன்று ஆந்திராவெங்கும் தமிழ்த் திருப்பாவை மார்கழி மாதத்தில் மிகச் சிறப்பான முறையில் பேசப்பட்டு, பாடப்பட்டு புகழ் பெறுகின்றது. அப்படி உபன்யாஸம் செய்து, தமிழிலே பாட்டு பாடி தெலுங்கில் பொருளோடு கதை சொல்லி ஊரெல்லாம பரப்புவது இந்த மகானுடைய சிஷ்யப் பெருமக்களே.. தமிழ்த் தாயின் செல்ல மகளான கோதை பிராட்டியார் ஸ்ரீபாஷ்யம் சுவாமி மூலமாக ஆந்திரமக்களுக்கு அனுக்ரஹம் செய்வதாகவே கூடச் சொல்லலாம்.

ஸ்ரீபாஷ்யம் சுவாமி நமக்கு கொஞ்சம் நெருக்கமாக தெரியவருவதற்குக் காரணம் நம் ஆப்த நண்பர் பெரியவர் திரு சம்பத் அவர்கள்தான். 1994 ஆம் ஆண்டில் நம் தமிழ்ச்சங்கம் மூலமாக ஒவ்வொரு வருடமும் தமிழ்ப்புத்தாண்டன்று புகழ்பெற்ற தெலுங்கர் ஒருவரை கௌரவப்படுத்துவது என்று முடிவெடுக்கையில் சம்பத் அவர்கள் ஸ்ரீபாஷ்யம் பெயரைத்தான் உடனடியாக அறிவித்தார்கள். அந்தப் பெருமையும் நம் சங்கத்துக்குக் கிடைத்தது. ஆனால் அடியேனுக்கு அவர்களின் நெருங்கிய ஆசிகள் கிடைத்தது அவர் இந்த பூமியில் வாழ்ந்த கடைசி கால கட்டத்தில்தான் எனச் சொல்லலாம். ஆனாலும் அவர் எங்களிடம் பேசிய கருத்துகள் எனக்கு ஏனோ உடையவர் ராமாநுஜர் வரலாற்றைத்தான் நினைவுபடுத்தின. சாந்தமான முகம், அருளை வீசும் கண்கள், எப்போதும் வாயில் ராமநாமம் என்று அவரைப் பார்ப்பவர்கள் யார் வேண்டுமானாலும் பரவசமாகவே சொல்வார்கள்.

’திருமலைத் திருடன்’ புத்தகம் எழுதும்போதுதான் சுவாமி அப்பளாசார்யுலு அவர்களின் நெருங்கிய பரிச்சயம் கிடைத்தது. அந்தப் புதினத்தில் ராமானுஜர் பற்றி வர்ணிக்கையில் தயங்காமல் என் மனக்கண் முன் தோன்றியவர் ஸ்ரீமான அப்பளாச்சார்யலு சுவாமிதான் என்பேன். என் கதையில் வரும் ராமானுஜர் அதிகம் பேசுவதில்லை. நடப்பவை அனைத்தையும் நாராயணனுக்கே என விட்டுவிடும் மகான். அப்படியே என் மனக்கண் பதித்ததை புதினத்திலும் கொடுத்துள்ளேன்.

ஸ்ரீபாஷ்யம் அவர்களின் ராமாயண உபன்யாசம் என்பது சாதாரண விஷயமாக ஒதுக்கவே முடியாதுதான். ஏனெனில் தெலுங்கர்கள் மிகச் சிறந்த பக்திமான்கள். ஸ்ரீராமனின் பாதம் பட்டு புண்ணியபூமியாக மாறிவிட்டதாகத்தான் தங்கள் மாநிலத்தை அவர்கள் நினைக்கிறார்கள். தெலுங்குப் பொது மக்களிடையே ஸ்ரீபாஷ்யம் அவர்களின் ராமகாவியப் பேச்சு பெரும் எழுச்சியை ஏற்படுத்தியதை ஆந்திரர்கள் அனைவருமே ஒப்புக் கொள்வர். ஸ்ரீராமநவமிக்கு முதல் பத்துநாட்களும் ஆந்திரமக்களுக்கு சிறப்புதினங்கள்தான். அவர்தம் ராமாயண சொற்பொழிவு செவிக்கும், மனதுக்கும் இனிய மருந்தாக தித்திக்கும். ஆந்திரத்தின் எல்லா இடங்களுக்கும் சென்று ராமநாமத்தை இவர் வாயால் சொல்ல, அத்தனை மக்களும் பக்திப் பரவசத்தில் மூழ்குவதும் இங்கு பல ஆண்டுகளாக வாடிக்கைதான். அவருக்கு மிகப் பெரிய அளவில் அவருடைய ‘ஸகர்ஸ சந்த்ர தர்ஸன’ விழாவை விசாகப்பட்டினத்தில் நடத்தியபோது நகரமே அங்கு திரண்டு வந்ததைப் பார்த்து அதிசயித்தவன். அதே போல திருப்பாவையின் முப்பது பாடல்களுக்கும் சுமார் 700 பக்க அளவில் உரைகள் எழுதியவர், இந்தப் புத்தகம் சின்ன ஜீயர், பெரிய ஜீயர் என எல்லா ஜீயர் சுவாமிகளாலும் வேதம் எனப் போற்றப்பட்டுள்ளதால் இன்றளவும் பல தெலுங்கர் வீட்டில் அந்தப் புத்தகத்தைப் பார்க்கலாம்.

நம்மாழ்வார் ஸ்டடி ஸர்க்கிள் என ஒரு சிறு அவை அடியேனாலும் திரு சம்பத் அவர்களாலும் 2003 ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி அமைக்கப்பட்டது. திரு சித்ரகவி ஆத்ரேயாவும் அதில் ஒரு அங்கத்தினர். சமயம் கிடைக்கும்போதெல்லாம் ஆழ்வார் பிரபந்தங்களையும் அதற்கான விளக்கங்களையும் பெறுவது என்றுதான் இந்த அவை ஆரம்பிக்கப்பட்டது, இந்த அவையை ஸ்ரீபாஷ்யம் சுவாமி அவர்கள் தன் கடைக் காலத்தில் (அவரால் நடமாடமுடியாத நிலை, வயது அப்போது 82), தன் இல்லத்தில், உடையவர் ராமாநுஜர் உதித்த திருநாளில், தான் பிரத்தியேகமாக பூசை செய்யும் செய்யும் இடத்துக்கு அழைத்துச் சென்று எங்களை சுவாமி ஆசீர்வாதம் செய்ததை வாழ்நாளில் மறக்கவே முடியாது. நம்மாழ்வாரின் தமிழ்ப் பிரபந்தங்களை வாய் நிறையச் சொல்லி விளக்கங்களையும் தெலுங்குமொழியில் அன்று அவரே விவரித்தார். விவரிக்க இயலாத பெருமையும் திருப்தியும் எங்களுக்குக் கிடைத்தது என்றுதான் சொல்லமுடியும்.

இந்த இனிய நிகழ்ச்சிதான் அவருடைய வாழ்நாளின் இறுதி நிகழ்ச்சி கூட.

ராமாநுஜ சரித்திரத்தில், உடையவர் தன் இறுதி உரையாக சீடர்களுக்குச் சொல்வது மிக முக்கியமான கட்டம் ஆகும். வாழ்க்கையில் ஒரு நல்ல வைணவரைக் கண்டாலே போதும், ஒரு மனிதன் பிறந்த பலன் அவனுக்குக் கிடைத்துவிடும் என்பார். எப்போதெல்லாம் ஸ்ரீபாஷ்யம் அவர்கள் என் நினைவில் வருகிறார்களோ, அப்போதெல்லாம் எனக்கு உடையவரின் அந்தக் கடைசி உரைக்கு விளக்கம் கிடைத்ததாகவே எண்ணிக் கொள்வேன்.

ஸ்ரீமான் ஸ்ரீபாஷ்யம் சுவாமியின் சிஷ்யர்கள் என்று சொல்லிக் கொள்வதில் இன்றைக்கு ஆந்திர வைணவ உலகை ஆண்டுகொண்டிருக்கும் ஜீயர்கள் அனைவருக்கும் ஒரு பெருமை. அப்படிப்பட்ட மகான் தன் வாழ்க்கையிலும் தனக்கு ஆன்மீக குருவாக வழிகாட்டியதாக ஸ்ரீமான் சித்ரகவி ஆத்ரேயா புகழாரம் சூட்டியுள்ளார் இந்தப் புத்தகத்தில்.

இந்த விழாவுக்கு சென்றதால் ஸ்ரீபாஷ்யம் எனும் மாபெரும் மகானையும் நினைவுக்குக் கொண்டு வந்துவிட்டார் ஸ்ரீமான் சிதரகவி ஆத்ரேயா அவர்கள். சிஷ்யரைப் பற்றிதான் எழுதவேண்டுமென நினைத்தது வாஸ்தவம். ஏனோ அவர்தம்குரு அவராகவே வந்துவிட்டார். அப்படி நினைக்கவைத்த சித்ரகவி ஆத்ரேயாவுக்கு நம் நன்றிகளை தாராளமாக தெரிவிப்போமாக.



( புகைப்படத்தில் அமர்ந்திருப்பது ஸ்ரீமான் சித்ரகவி ஆத்ரேயா, மேலேயுள்ள முதல் புகைப்படத்தில் ஆத்ரேயா அவர்களின் சுயசரிதை புத்தகம் வெளிடப்படுகின்றது
இடமிருந்து வலம் - ஸ்ரீபாஷ்யம் சுவாமியின் மகனான ஸ்ரீனிவாஸாச்சாரியார், சஹ்ருதய சாஹிதி பிரபாகர், புத்தகம் வெளியிடும் பெரியவர் செல்லா சிவசங்கரம், சிதரகவி ஆத்ரேயா, வேதுல சுப்பிரமணிய சாஸ்திரி, எல்.ஆர்.சுவாமி)


.