Saturday, April 4, 2015

அமராவதி


’அமராவதி - அழகான பெயர்’.. இப்படித்தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ’அம்பிகாபதி’ திரைப்படத்தில் தான் முதன்முதலாகப் பார்த்த கதாநாயகி பானுமதியைப் புகழ்ந்து தன் காதலை வெளிப்படுத்த முன்வருவார்.. இப்படி ஒரு அழகான பெயர் கொண்ட அமராவதி இனி ஆந்திராவின் தலைநகரத்தின் பெயராக மாறப்போகிறது.


எட்டு வருடங்களுக்கு முன்பு என்னுடைய ‘விசித்திரசித்தன்’ கதைக்காக வேண்டி அமராவதிக்கு சென்றபோது அணு அணுவாக நான் ரசித்த ஊர். புதினத்தின் தோற்றமே இந்த அமராவதியில்தான் ஆரம்ப அத்தியாயம்.

ஆந்திரதேசத்தின் ஐந்து புகழ்பெற்ற பாஞ்சாராம சிவத்தலங்களில் ஐந்தாவது சிவத்தலம்தான் அமராவதி எனும் ஊர். ஸ்ரீதான்யகடகம் என வடதேசத்தவர்களால் முன்னர் அழைக்கப்பட்ட பழைய ஊர். ஞானமூர்த்தியான புத்ததேவர் தன் சிஷ்யர்கள், தொண்ணூற்றாறு அரசர்கள் புடை சூழ தன் மலர்ப்பாதங்களை வைத்த ஊர்.. காலச்சக்கரம் எனப் புகழ்பெற்ற வருங்கால கணிப்புகளை இந்த ஊரில்தான் தன் சீடர்களிடம் புத்தபிரான் உபதேசித்தாராம். சமீபத்தில்(2006 ஆம் ஆண்டு) இந்த காலச்சக்கர விழாவினை நினைவுபடுத்த உலகம் முழுதும் உள்ள புத்தபிக்குகளை தலாய்லாமா தலைமையில் ஒன்று கூட்டிய ஊர்.

’இந்த ஊரை தனக்கு மிகவும் பிடித்துவிட்டதாக’ நினைத்துக் கொண்டு மாலையாக தன் மேல் சுற்றிக் கொண்டு கிருஷ்ணவேணி நதி ஆடி ஓடி வளைந்து வரும் ஊர். கிருஷ்ணையில் எப்போதும் எந்நாளும் தண்ணீர் நிரம்பி வழியுமென்று  சொல்லமுடியாவிட்டாலும் வருடத்தில் ஒன்பது மாதங்களாவது தண்ணீர் நிறைந்திருக்கும் என்பதாலும் ஒரு பக்கம் மலைச்சரிவும், ஒருபக்கம் பச்சைப்பசேல் என வயல்களும் இன்னொரு பக்கம் இந்த தண்ணீர் நிறைந்த கிருஷ்ணையின் அழகாலும் கணகளுக்கு விருந்தளிக்கும் இயற்கையழகு மிக்க ஊர்.. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இங்கே நதித்துறைமுகத்தை அமைத்து கிருஷ்ணை நதி வழி மூலமாக உலகம் முழுவதற்குமான வாணிபம் செய்த ஊர்.

ஒரு காலத்தில் புத்தமதம் செழித்த ஊர் என்பதால் இன்னமும் கூட அதன் மிச்சங்களாக தூபிகளும் நினைவுச் சின்னங்களும் ஆங்காங்கே நிறைந்திருக்கும் ஊர். புத்தத்தோடு எப்போதும் கூடவே வந்து குடியேறும் சமணர்கள், வேதமதத்துப் பண்டிதர்கள் நிறைந்த ஊர். எல்லாச் சமயங்களும் புகழ்பெற்ற அந்தப் பழைய காலத்தில் நம் தமிழகத்து ஆறுமுகனும் வணங்கப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்த ஊர். அமராவதி சிற்பங்கள் ஆந்திரத்தினரின் கலை ரசனையை உலகுக்குப் பறைசாற்றியவை.. சிற்பங்கள் நிறைந்த ஒரு அருங்காட்சியகமே இந்த ஊரில் உள்ளது.. எத்தனை பெருமைகள் இந்த ஊருக்குதான் என்று மூக்கில் விரல்வைக்கத் தோன்றுகின்றதல்லவா..

ஆமாம்.. ஊர் ஊர் என்கிறேனே என்று பார்க்கிறீர்களா? ஊர் என்றால் நம் பழந்தமிழ் வழக்கில் மக்கள் புழங்கும் சிறிய நிலப்பகுதியைத்தான் சொல்வார்கள். ஆமாம்.. இன்று வரை இந்த அமராவதி மிகச் சிறிய ஊர்தான். ஆனால் இனியும் அப்படி இல்லை. எப்போது ஆந்திர அரசாங்கம் விஜயவாடவின் மேற்கே, கிருஷ்ணை நதியின் தென்கரையில் இருக்கும் துள்ளூர் கிராமப் பகுதியைத் தம் தலைநகரத்துக்காக தேர்ந்தெடுத்ததோ அப்போதே அருகே இருக்கும் அமராவதி தன் அமைதியான சூழ்நிலையை கொஞ்சம் இழக்க ஆரம்பித்ததுதான். 

ஆந்திர அரசாங்கத்தின் புதிய தலைநகருக்கான திட்டங்களைக் கேட்டால் ‘அடேயப்பா’ என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது. சிங்கப்பூர்க்காரர்களால் கட்டடங்கள் கட்டப்பட மலேஷியாக் காண்ட்ராக்டர்களால் சாலை வசதி செய்யப்படுமாம். ஆறு வழிச்சாலைகள், கிருஷ்ணையைக் கடக்க ஆங்காங்கே ஆறு பாலங்கள், விமானநிலையம் (கன்னாவரம் விமான நிலையம் இங்கிருந்து 40 கி.மீட்டர்கள்), விஜயவாடா ரயில்வே நிலையம் (20 கி.மீ) மச்சிலிப்பட்டணம் துறைமுகத்துக்கு (80 கி.மீ) உடனடி தொடர்பாக விரைவு வழிச் சாலைகள், வானுயர அடுக்குமாடி குடியிருப்புகள், ஆளுநர், அசெம்பிளி, அரசுக் காரியாலயங்களுக்கென தனித்தனியாக மாட மாளிகைகள் என தற்சமயம் கட்டட வரைபடம் வெளியாகியுள்ளது. இத்தனை விஷயத்திலும் வாஸ்து’ முறை பார்த்து அனுசரிக்கப்படுமாம். இதற்கான முதற்கட்ட தவணைப் பணமாக மத்திய அரசு ரூ 1500 கோடியை சமீபத்தில்தான் கொடுத்திருக்கிறது. மொத்தம் 40,000 கோடி ரூபாய் ஆகும் என்கிறார்கள். நாலே வருடம் என்கிறார்கள்.
ஆச்சரியமாக வாயைப் பிளக்க வைக்கிறது.. இந்த திட்டங்கள் எல்லாம் நிறைவேறினால் அமராவதி நிஜமாகவே அந்த இந்திரலோகத்து அமராவதியாகத் தென்படுமா என்ற ஆசையும் கூடவே எழுகிறது. இப்படி ஒரு தலைநகரை உருவாக்க உதவி புரிய தெலுங்கானா பிரிவினையைக் கூட பாராட்டத்தான் தோன்றுகிறது..

அதே சமயத்தில் இன்னொரு கேள்வியும் தொக்கிக் கொண்டே இருக்கிறது. பழைய நினைவாக தமிழகத்திலிருந்து பிரிந்து போன ஆந்திரம் கண் முன்னே வலம் வருகிறது. இத்தனை அழகான தலைநகரமாக அமராவதி திகழக்கூடும் என்கிற எண்ணம் ஏன் அந்தக் கால ஆந்திரப் பிரிவினைவாதிகளிடம் எழவில்லை.. மதராஸ் மனதே என்று கோஷம் போட்டு நல்ல உயிர் ஒன்றையும் தியாகம் செய்து, அந்த தியாகம் வீணாகப் போக, கர்நூல் நகரைத் தலைநகரமாகத் தேர்ந்தெடுத்து அதுவும் சரிவர முடியாமல் போகப் போயும் போயும் ஹைதராபாதின் துணையை ஏன் பெறவேண்டும். அந்தச் சமயத்தில் தங்களுக்குத் துளியும் ஒத்து வராத கலாச்சாரத்தை கொண்ட நகரம் அது என்றாலும் தெரிந்து தெரிந்து ஹைதராபாத்தை ஏன் அத்தனை பெரிதாக உருவாக்கவேண்டும், பேசாமல் அன்றே, அந்த அறுபது வருடங்களுக்கு முன்பே இந்த அமராவதியை உருவாக்கியிருந்தால் இன்று இத்தனைக் கஷ்டப்படாமல் அமராவதி எனும் அழகான மத்திய இடத்தில் இருந்து கொண்டு அமைதியாக ஆட்சி செய்திருக்கலாமே, பிரிவினை வந்திருந்தாலும் கூட..


போகட்டும், பெட்டர் லேட் தன் நெவர்.. இப்போதாவது கடைசியில் இப்படி செய்கிறார்களே என்று மகிழ்வோமாக. புதிய தலைநகரத்தை வாழ்த்துவோமாக.. வருங்கால சந்ததியினர் இவர்களை வாழ்த்தும் வகை செய்வார்களாக.. ஆந்திரா புதிதாக ஒரு சரித்திரம் படைக்கட்டுமே.. 



படங்கள் உதவி: கூகிளாண்டவர்.
1. தலைநகர வரைபடம்
2, அமரேஸ்வரர் கோயில்
3. கிருஷ்ணவேணி நதி
4. பௌத்த பிக்குகள் அமராவதியில் கூடிய போது
5. புத்தர் அமராவதி வந்ததற்கான நினைவுச்சின்னம் - சாதவாகன அரசர்கள் எழுப்பியது.