Thursday, May 27, 2010




வயிறு எரிகிறது..

அப்படித்தான் அனைவருமே சொல்லுகிறார்கள் ஆந்திர அரசாங்கத்தின் அலட்சியப் போக்கை நினைத்து.

காலி (Gali) கோபுரம் என தெலுங்கர்களால் அழைக்கப்பட்டு வந்த 136 அடி உயர காளஹத்தி கோயில் தலைவாசல் கோபுரம் சுக்கு நூறாக இடிந்து விழுந்த காட்சியை என்னவென்று சொல்வது..




கி.பி. 1516 ஆம் ஆண்டு, கங்கர்களை போரில் வென்றவுடன், தன் காணிக்கையாக இந்த ராஜகோபுரத்தை சுவர்ணமுகி நதிக் கரையில் ஸ்ரீகிருஷ்ணதேவராயர் கட்டியபோது, இந்த கோபுரம் ஒரு ஆயிரம் ஆண்டாவது நிலைபெற வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் கட்டிய கோபுரமாகத்தான் அவன் நினைத்திருக்கவேண்டும். அப்படித்தான் இத்தனை காலமாக இருந்தது. அந்தக் கோபுரத்தின் உயரத்திலும், சிவனுக்காக கட்டிய மாபெரும் தெய்வீகத் தொண்டு என்ற பெருமையிலும் அந்த கோபுரத்தின் பக்கத்திலேயே ஒரு சிலையாக நின்று கொண்டு தவம் செய்த அந்த அரசனின் கனவு கூட இந்த கோபுரத்து இடிபாடுடன் இடிந்த போன சோகக் கதையை என்னவென்பது?

அடித்தளம் பாறையுடன் கூடியது மேலே செங்கல்லும், சுண்ணமும், பாறாங்கல்லும் சேர்ந்த கலவையோடு கட்டும்போது, இந்தக் கோபுரத்தை தமக்குப் பின் வருவோர் அவ்வப்போது மராமத்து செய்வார்கள், நிச்சயம் அவர்கள் நன்றாகக் கட்டிக் காப்பார்கள் என்று ஆசையுடன் எதிர்பார்த்து நின்ற அந்த அரசனின் கனவு அப்படியே நொடிந்தபோன நிலையை எப்படி சொல்வது?

வெளிநாடுகளில், அதுவும் நாகரீகம் மிகுந்த மேலை மற்றும் கீழை நாடுகளில் 200 வருடம் பழையது என்றாலே மிகுந்த அக்கறையோடு பொறுப்பெடுத்து அவைகளைப் பாதுகாப்பார்கள். ஆனால் 500 வருடம் பழைமை மிகுந்த இக்கோபுரம் இடியப் போகிறது என்று நன்றாகவே முன்னமேயே தெரிந்தும், அதிகாரிகளின் அலட்சியப் போக்கினால் மட்டுமே இடிந்தபோன இந்த உயர்ந்த கோபுரத்தை இனி மறுபடியும் காண்பதேது? மேலே உள்ள படத்தில் மட்டுமே காணலாம் இனி..

136 அடி உயரத்தில் உள்ள கோபுரம் பழைய கோபுரம்தான். பல ஆண்டுகளாகவே மேலிருந்து கீழாக விரிசல் விட்டு எப்போது இடிந்து விழுவோம் என்று பயமுறுத்திக் கொண்டிருந்த கோபுரம்தான். (படத்தை விரிவாக்கிக் கூர்ந்து பார்த்தால் இந்த விரிசல் தெரியும், இத்தனைக்கும் இது பழைய படம்). ஆனாலும் கோயில் பொறுப்பாளர்களுக்கு பொறுப்பு வரவில்லை. 1960 ஆம் ஆண்டில் ஒருமுறை, மறுபடியும் 1990 ஆண்டு ஒருமுறை இந்த விரிசல்களை செப்பனிட்டார்களாம்.(இந்தப் பணம் கூட திருப்பதி தேவஸ்தானம் கடனாக - ரூ. பத்து லட்சம் கொடுத்ததாம்) இன்னும் ஒரு முப்பது ஆண்டு காலம் அதாவது 2020 ஆன் ஆண்டு வரை காத்திருப்போம் என்று விட்டு விட்டார்களோ என்னவோ.. அல்லது வேறு யாராவது கடன் கொடுக்க முன் வந்தால் அப்போது பார்த்துக் கொள்ளலாமே என்று ‘சும்மா’ இருந்துவிட்டார்களோ என்னவோ..

இத்தனைக்கும் சமீபத்தில் வந்த ‘லைலா’ புயல் காற்று இவர்களுக்கு அந்த விரிசலை அகலப் படுத்தி (சுமார் ஒரு அங்குலம் விரிசல்) ஆட்சியாளருக்குப் பாடம் வேறு புகட்டியது. இப்போதாவது கவனியுங்கள் சாமி, என்பதைப் போல.

ஏதோ கவனித்தார்கள். எச்சரிக்கைப் பலகை ஒன்று போட்டார்கள். ‘இந்தக் கோபுரம் இடிந்து விழும் நிலையில் இங்கு யாரும் வரவேண்டாம்’ என்று. (இப்படிப் போட்டதால் மனித உயிர்கள் காப்பாற்றப்பட்டன் என்றாலும் அந்தக் கோபுரங்களில் வாழும் நூற்றுக்கும் மேலான குரங்குகளும், பறவைகளும் ‘படிப்பறிவு’ இல்லையாதலால் பார்க்கவில்லை) சென்னன ஐ.ஐ.டி யிலிருந்து நிபுணர் ஒருவரை சொகுசுக் காரில் வரவழைக்கப்பட்டு அவர் மூலம் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட கோரிக்கை விடுத்ததாம். அவரும், இந்த அரசாங்கம் போலவே, ஆகா.. இதோ செய்கிறோமே.. என்று இன்னமும் திட்டம் தயாரித்துக் கொண்டிருக்கிறாரோ என்னவோ..

ஆனால் ஆகாச அளவுக்கு உயர்ந்த அந்த கோபுரம் ‘அறிவில்’ மனிதன் அளவு கூட உயரவில்லை அல்லவா.. திட்டம் போட மனிதன் பேப்பர் எடுத்து எழுதுவதற்கு முன்பே இடிந்து விழுந்துவிட்டது. அத்தோடு குரங்குகளும் பறவைகளும் கூட சமாதி ஆகிவிட்டன.. பாவம்.. வாயில்லா ஜன்மங்கள்..

எல்லாம் முடிந்த பின்னே, ‘அடடே.. இது பழைய கட்டடம்,, காற்றுக்கு இடிந்து போவது சகஜம்தான்.. புதியது ஒன்று கட்டிவிடலாமே.. என்ன பத்து கோடி ஆகுமா.. சரி, உடனே கோப்பு ஒன்று எழுதுங்கள்.. உடனடியாக கட்டிவிடலாம்’ என்று ஆந்திர அரசு சாவகாசமாக சொல்கிறது. இந்த பத்து கோடியில் பத்தில் ஒரு பங்கு முன்னமேயே கொடுத்து மராமத்து செய்திருந்தால் ஒரு புராதனக் கோயிலின் புராதனக் கோபுரம் கட்டிக் காக்கப்பட்டிருக்குமே.. அதோ இடிபாடுகளுக்குள்ளும் இடிபடாமல் அப்படியே சோகமாக நிற்கும் ஸ்ரீகிருஷ்ணதேவனை சுகமாக நிற்க வைத்திருக்கலாமே.. ஒரு புராதன நினைவுச் சின்னம் சின்னாபின்னாபடுத்தப் படாமல் முறைப் படுத்தியிருக்கலாமே.. இறந்து போன வாயில்லா ஜீவன்கள் தம் இருப்பிடத்தை செப்பனிட்டதற்காக வாயார அல்லது நெஞ்சாற வாழ்த்தியிருக்குமே..



ஏன் தோன்றவில்லை இவர்களுக்கு,

அப்படி ஒன்றும் கோயில் ஏழைக் கோயிலும் இல்லை. நல்ல வருமானம் ஈட்டித் தரும் பெரிய கோயிலில்களில் ஆந்திரத்து காளஹத்திக் கோயிலும் ஒன்று. காளஹத்தி ஈஸ்வரன் எல்லோருக்கும் எல்லா நன்மையும் உடனடியாக செய்து கொடுப்பதால் கோயிலில் வரும் பக்தர்களில் வருகையும் நாளுக்கு நாள் அதிகம்தான். சிவராத்திரி நாட்களில் ஊரே நெருக்கத்தில் தவியாய் தவிக்கும். பஞ்சபூத சேத்திரங்களுள் ஒன்று. ‘கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்’ என்று திருவாசகத்தால் பாராட்டப்பட்ட ஒப்பற்ற பக்தனான கண்ணப்பன் இருந்து வழிபட்ட தலம் இது. இத்தகைய தலத்தை இப்படி அலட்சியப்படுத்தலாமா.. பல்லவர் காலம் தொட்டுப் புகழ் பெற்ற கோயிலில் இப்படி ஒரு வருத்தமான நிகழ்ச்சியை நடத்த விடலாமா.. ஆன்மீகம் போற்றப்படும் ஆந்திராவிலேயே இப்படிப்பட்ட நிலைமையா?

ஸ்ரீகிருஷ்ணதேவராயன் அரசாட்சி ஏற்று சென்ற வருடத்தோடு ஐந்நூறு ஆண்டுகாலம் நிறைவு பெறும் நேரத்தில், அந்த ஒப்பற்ற அரசனுக்கு நாம் செய்யும் நன்றிக்கடன் இதுதானா.. நம் அலட்சியப் போக்கால் காலத்தால் அழிக்கமுடியாத செல்வங்களை இப்படி அழித்துக் கொண்டே போனால்,.. எதற்கும் சாட்சி தேவைப் படும் இந்த அசாதாரண உலகத்தில் புராதனம் அழிந்த நிலையில் நாளை பாரதம் தன்னை உலகத்தாருக்கு எப்படி வெளிக் காட்டிக் கொள்ளும்..

வயிறு எரிகிறதுதான்.

(Pictures curtesy The New Indian Express and Srikalahasti Temple GurukkaL)